Friday, 31 July 2026

கல்லும்,மரமும் உரைக்கும் ஸலாம்

🌹 அகிலங்களின் அருட்கொடை ! 🌹

நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா ஜாபிர் இப்னு ஸபூரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள், பூமான் நபி  ﷺ அவர்கள் நவின்றார்கள், 

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، حَدَّثَنِي سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنِّي لأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَىَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لأَعْرِفُهُ الآنَ ‏"‏ ‏.

" நான் மக்காவில் உள்ள ஓர் கல்லை அறிவேன். அந்த கல்லாகிறது நுபுவ்வத்திற்கு முன்பிருந்தே எனக்கு ஸலாம் உரைத்தது. நான் இன்றும் அதனை அடையாளம் காண இயலும் " 

ஆதார நூல் 📕 ஸஹீஹ் முஸ்லிம் ,ஹதீஸ் எண்:2277

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள், 

حَدَّثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ، عَنِ السُّدِّيِّ، عَنْ عَبَّادِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَكَّةَ فَخَرَجْنَا فِي بَعْضِ نَوَاحِيهَا فَمَا اسْتَقْبَلَهُ جَبَلٌ وَلاَ شَجَرٌ إِلاَّ وَهُوَ يَقُولُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ ‏.

" நான் அண்ணல் நபி  ﷺ அவர்களுடன் மக்கா முகர்ரமாவில் இருந்தேன். நாங்கள் சில பகுதிகளுக்குச் சென்றோம்; அப்போது நபிகள் நாயகம்  ﷺ அவர்களைச் சந்தித்த ஒவ்வொரு மலையும்,மரமும், "அஸ்ஸலாமு அலைக்கும் ,யா ரஸூல்லல்லாஹ் ! - அல்லாஹ்வின் தூதரே, உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறின.

ஆதார நூல் 📕 ஜாமியுத் திர்மிதி, ஹதீஸ் எண் : 3626

உயிரற்ற கல்லும் ,மரங்களும் ,மலைகளும் அல்லாஹ்வின் ரஸூல்  ﷺ மீது அளவற்ற நேசம் கொண்டிருந்தன என்பது ஹதீஸ்களில் இருந்து தெரிய வருகின்றது .

Monday, 27 July 2026

ஷீஆ என்ற சொல்லின் பழையபயன்பாடு

ஷீஆ என்ற சொல்லின் பழைய பயன்பாடு : 

இமாம் அஹ்மத் ரிழா கான் ஹனபி காதிரி பரேலி  (1272–1340 ஹி. / 1856–1921 கி.பி.) رحمه الله அவர்கள் கூறுகின்றார்கள்:

"ஸலஃபுஸ் ஸாலிஹீன்களது காலத்தில், நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்களையும் அல்லாஹ் تعالى பொருந்திக் கொள்வானாக — அவர்கள் அனைவரிடமும் உரிய மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொண்டு, அவர்களுள் அமீருல் முஃமினீன் மெளலானா அலீ رضي الله عنه அவர்களை மிகச் சிறந்தவராகக் கருதியவர் ‘ஷீஆ’ என்று அழைக்கப்பட்டார்.

மேலும், அமீருல் முஃமினீன் உஸ்மான் அல்-கனீ رضي الله عنه அவர்களை விட, அமீருல் முஃமினீன் அலீ رضي الله عنه அவர்களுக்கு முன்னுரிமை அளித்தவரும் ‘ஷீஆ’ என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு கூறிய கருத்து, அஹ்லுஸ் ஸுன்னாவின் சில அறிஞர்களின் கொள்கையாக இருந்த போதிலும், அவர்களுக்கும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது.

இதனால்தான் கூஃபா நகரின் பல இமாம்கள் ‘ஷீஆ’ என்று குறிப்பிடப்பட்டனர்.

சில நேரங்களில், ‘ஷீஆ’ என்ற சொல், அஹ்லுல் பைத் (நபியவர்களின் புனிதக் குடும்பத்தினர்) رضوان الله عليهم أجمعين அவர்கள்மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. உண்மையில், இது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையேயாகும்.

இமாம் அல்-தஹபீ رحمه الله அவர்களும், தத்கிரதுல் ஹுஃப்பாஸ் என்னும் நூலில் முஹம்மது இப்னு ஃபுதைல் رحمه الله அவர்களைப் பற்றி இதையே தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள். அவருடைய ‘ஷீஆத்’ என்பது, அஹ்லுல் பைத்தின்மீது கொண்டிருந்த விசேஷமான அன்பும் விசுவாசமுமேயன்றி வேறொன்றுமல்ல என்று கூறுகின்றார்கள். அவர் எழுதுகின்றார்கள்:

‘முஹம்மது இப்னு ஃபுதைல் இப்னு கஸ்வான் — முஹத்திஸ் மற்றும் ஹாஃபிழ் — இத்துறையின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர். யஹ்யா இப்னு மஅீன் رحمه الله அவர்கள், “அவர் நம்பகமானவர்” என்று கூறினார். இமாம் அஹ்மத் رحمه الله அவர்கள், “அவருடைய ஹதீஸ்கள் உறுதியானவை; அவர் ஒரு ஷீஆ” என்று கூறினார். நான் (இமாம் அல்-தஹபீ) கூறுகிறேன்: “அவர் அஹ்லுல் பைத்தின்மீது விசேஷமான அன்பும் விசுவாசமும் (முவாலாத்) கொண்டவரே தவிர, அதற்கு அப்பாற்பட்ட எந்த ஷீஆக் கொள்கையையும் கொண்டவரல்ல.”’

ஆதாரம்: பதாவா ரழவிய்யா, தொகுதி 5, பக்கம் 175.



Tuesday, 21 July 2026

படைப்புகளில் தலைசிறந்தவர்கள்

🌹 படைப்புகளில் மிகச்சிறந்தவர்கள் 🌹

ஸுல்தானுல் புகஹா இமாம் இப்னு ஆபிதீன் ஹனபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகின்றார்கள், 

நபிமார்கள் தான் படைப்புகளில் சிறந்தவர்கள் என்று முழு உம்மத்தும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.அந்த  நபிமார்களுள் ஏந்தல்  நபி  ﷺ அவர்களே தலைசிறந்தவர்கள்.

ஆதார நூல் 📕 ரத்துல் முக்தார் ,  பாகம் 2,பக்கம் 242

Friday, 17 July 2026

பொக்கிஷங்களின் திறவுகோல்

🌹  பொக்கிஷங்களின் திறவுகோல் 🌹

இமாம் முல்லா அலீ காரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகிறார்கள்:

"அண்ணல் நபி ﷺ அவர்களிடம் கேட்க வேண்டும் என்ற கட்டளை எந்தக் கட்டுப்பாடும் இன்றி (பொதுவானதாக) உள்ளது. மேலும், அல்லாஹ் ﷻ அண்ணல் நபி  ﷺ அவர்கள்  விரும்பியதை, உண்மையான அரசனான அல்லாஹ்வின் பொக்கிஷங்களிலிருந்து வழங்கும் பொதுவான அதிகாரத்தை அவர்களுக்கு அருளியுள்ளான்."

ஆதார நூல் 📕 மிர்காத் அல் மஃபாதிஹ் ஷரஹ் மிஷ்காத் , பாகம் 2,பக்கம் 567

Thursday, 16 July 2026

மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதுவது

தமிழாக்கம்✒️ முனாஸிரே அஹ்லே ஸுன்னத் மவ்லானா ஜவ்வாது ஹுசைன் ரப்பானி ,சென்னை 

அஃலா ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் முதன்மை மாணவரும் கலீஃபாவுமாகிய ஸத்ருஷ்ஷரீஆ முப்தி அம்ஜத் அலி ஆஸ்மி رَحِمَهُ ٱللَّٰهُ தன்னுடைய பிரபல்யமான நூலான பஹாரே ஷரீஅத்தில் இவ்வாறு எழுதுகிறார்கள்; 

"அடக்கம் முடிந்த பின் மய்யித்திற்கு தல்கீன் (تلقين) செய்வது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களின் கருத்துப்படி மஷ்ரூ' (சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது) ஆகும்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

«إِذَا مَاتَ أَحَدُ إِخْوَانِكُمْ فَسَوَّيْتُمْ عَلَيْهِ التُّرَابَ، فَلْيَقُمْ أَحَدُكُمْ عَلَى رَأْسِ قَبْرِهِ، ثُمَّ لْيَقُلْ: يَا فُلَانَ ابْنَ فُلَانَةَ...»

"உங்களில் ஒருவரின் முஸ்லிம் சகோதரர் இறந்து, அவரை அடக்கம் செய்து மண்ணைச் சமப்படுத்திய பின், ஒருவர் அவரது கப்ரின் தலைமாட்டில் நின்று:
'யா ஃபுலான் இப்ன ஃபுலானா' (மய்யித்தின் பெயரையும், அவரது தாயின் பெயரையும் கூறி) என்று அழைக்க வேண்டும்."

பின்னர் கூற வேண்டும்:
«اذْكُرْ مَا خَرَجْتَ عَلَيْهِ مِنَ الدُّنْيَا: شَهَادَةَ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَنَّكَ رَضِيتَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَبِالْقُرْآنِ إِمَامًا.»

"நீ இவ்வுலகைவிட்டு சென்றபோது இருந்த ஈமானை நினைவுகூரு:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை என்று சாட்சி கூறினாய்.
முஹம்மது ﷺ அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறினாய்.
அல்லாஹ்வை உன் இறைவனாகவும்,
இஸ்லாத்தை உன் மார்க்கமாகவும்,
முஹம்மது ﷺ அவர்களை உன் நபியாகவும்,
குர்ஆனை உன் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டாய்."
பின்னர் முன்கர், நகீர் மலக்குகள்:
"இவருக்கு மக்கள் ஆதாரத்தை (பதிலை) கற்றுக் கொடுத்துவிட்டார்கள்; நாம் இவரிடம் என்ன கேட்பது?" என்று கூறுவார்கள்.
யாராவது, "அவருடைய தாயின் பெயர் தெரியாவிட்டால்?" என்று கேட்டபோது நபிகள் நாயகம் ﷺ அவர்கள்:
«يُنْسَبُ إِلَى حَوَّاءَ»
"ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களின் பெயருடன் இணைத்து அழைக்கட்டும்." என்று கூறினார்கள்.
சில தாபிஈன்களின் தல்கீன்
«يَا فُلَانَ بْنَ فُلَانٍ، قُلْ: لَا إِلٰهَ إِلَّا اللَّهُ» (3 முறை)
பின்னர்:
«قُلْ: رَبِّيَ اللَّهُ، وَدِينِيَ الْإِسْلَامُ، وَنَبِيِّي مُحَمَّدٌ ﷺ»
தமிழ்:
"ஓ! இன்னாரின் மகனே! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்."
மூன்று முறை கூறிய பின்:
"என் இறைவன் அல்லாஹ்; என் மார்க்கம் இஸ்லாம்; என் நபி முஹம்மது ﷺ" என்று கூறு.

அஃலா ஹழ்ரத் (இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி رَحِمَهُ ٱللَّٰهُ) அவர்கள் சேர்த்த துஆ, 

«وَاعْلَمْ أَنَّ هٰذَيْنِ الَّذَيْنِ أَتَيَاكَ أَوْ يَأْتِيَانِكَ، إِنَّمَا هُمَا عَبْدَانِ لِلَّهِ، لَا يَضُرَّانِ وَلَا يَنْفَعَانِ إِلَّا بِإِذْنِ اللَّهِ، فَلَا تَخَفْ وَلَا تَحْزَنْ، وَاشْهَدْ أَنَّ رَبَّكَ اللَّهُ، وَدِينُكَ الْإِسْلَامُ، وَنَبِيُّكَ مُحَمَّدٌ ﷺ، ثَبَّتَنَا اللَّهُ وَإِيَّاكَ بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ، إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.»

தமிழ்:
"உன்னிடம் வந்திருக்கும் (அல்லது வரவிருக்கும்) இந்த இரு மலக்குகளும் அல்லாஹ்வின் அடியார்கள் என்பதை அறிந்துகொள். அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்கள் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது. ஆகவே பயப்படாதே; கவலைப்படாதே. உன் இறைவன் அல்லாஹ், உன் மார்க்கம் இஸ்லாம், உன் நபி முஹம்மது ﷺ என்று உறுதியாகச் சாட்சி கூறு. அல்லாஹ் நம்மையும் உன்னையும் இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையின் மீது நிலைநிறுத்துவானாக. நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் அருளாளனும் ஆவான்."

அல்-பினாயா ஷர்ஹுல் ஹிதாயாவில் வந்த தல்கீன்

«يَا عَبْدَ اللَّهِ أَوْ يَا أَمَةَ اللَّهِ، اذْكُرْ مَا خَرَجْتَ عَلَيْهِ مِنَ الدُّنْيَا مِنْ شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَنَّ الْجَنَّةَ حَقٌّ، وَالنَّارَ حَقٌّ، وَالْبَعْثَ حَقٌّ، وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا، وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ، وَأَنَّكَ رَضِيتَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا وَرَسُولًا، وَبِالْقُرْآنِ إِمَامًا، وَبِالْكَعْبَةِ قِبْلَةً، وَبِالْمُؤْمِنِينَ إِخْوَانًا.»

தமிழ்:
"அல்லாஹ்வின் அடியாரே! (அல்லது அல்லாஹ்வின் அடியாரே - பெண்) நீ இவ்வுலகைவிட்டு சென்றபோது இருந்த ஈமானை நினைவுகூரு. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை; முஹம்மது ﷺ அல்லாஹ்வின் தூதர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; உயிர்த்தெழுதல் உண்மை; மறுமை நாள் நிச்சயம் வரும்; அல்லாஹ் கப்ரிலுள்ளவர்களை உயிர்த்தெழுப்புவான்; அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது ﷺ அவர்களை நபி மற்றும் தூதராகவும், குர்ஆனை வழிகாட்டியாகவும், கஅபாவை கிப்லாவாகவும், முஃமின்களை சகோதரர்களாகவும் நீ ஏற்றுக்கொண்டாய் என்பதை நினைவுகூரு."

[ ஆதாரங்கள்] : பஹாரே ஷரீஅத் (பாகம் 1, பக். 850–851), அல்-பினாயா ஷர்ஹுல் ஹிதாயா (பாகம் 3, பக். 208).

Tuesday, 14 July 2026

அவ்லியாக்களின் கப்ருகளை முத்தமிடுதல்

🌹அவ்லியாக்களின் கப்ருகளை முத்தமிடுதல் 🌹

மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த அஸ்மா உர் ரிஜால் அறிஞரும், முஹத்திஸுமான ஷெய்குல் இஸ்லாம்  இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி رحمة الله عليه (வஃபாத்: ஹிஜ்ரி 852) அவர்கள் எழுதியுள்ளார்கள் ✍🏻

மக்கா முபாரக்கின் ஃபகீஹ் ஹழ்ரத் இமாம் அபூ அப்துல்லாஹ் பின் அபி அஸ்-ஸைஃப் அல்-யமனி அஷ்-ஷாஃபிஈ رحمة الله عليه (வஃபாத்: ஹிஜ்ரி 609) அவர்கள் கூறுகின்றார்கள்:

"திருக்குர்ஆனின் பக்கங்களையும், ஹதீஸ் ஷரீஃபின் ஏடுகளையும், நல்லடியார்களான அவ்லியாக்களின் கப்ருகளையும் முத்தமிடுவது  அனுமதிக்கப்பட்டதாகும் (ஜாயிஸ்)."

ஆதார நூல் 📚 ஃபத்ஹுல் பாரி ஃபீ ஷர்ஹ் ஸஹீஹில் புகாரி
பாகம்: 4 | பக்கம்: 213

Monday, 13 July 2026

ஸஹாபாக்கள் செய்திடாத நல்லமல் பித்அத்தா ?

🌹  ஸஹாபாக்கள் செய்திடாத நல்லமல் பித்அத்தா ?🌹

இமாம் அபூ ஹாமித் அல்-கஸாலி (رَحِمَهُ ٱللَّٰهُ) (வஃபாத்: ஹிஜ்ரி 505) அவர்கள் எழுதுகின்றார்கள்:

"ஒரு செயலை, 'ஸஹாபாக்கள் அதைச் செய்யவில்லை; ஆகவே அது பித்அத்' என்று கூறுவது சரியல்ல என்பதை அறிந்துகொள். ஏனெனில், ஒவ்வொரு அனுமதிக்கப்பட்ட (ஜாயிஸ்) செயலும் ஸஹாபாக்களிடமிருந்து நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

உண்மையான தீய பித்அத் என்பது சுன்னத்தை அழிக்கும் அல்லது அதற்கு முரணாக இருக்கும் செயலாகும்.

எனவே, நன்மை (ஸவாப்) தரக்கூடிய, முஸ்தஹப் அல்லது ஜாயிஸ் ஆன, மேலும் எந்த சுன்னத்திற்கும் முரணாக இல்லாத செயல்களை 'பித்அத்' என்று கூறி தடை செய்வது அறியாமையைத் தவிர வேறொன்றுமல்ல."

ஆதார நூல் 📕 : ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رَحِمَهُ ٱللَّٰهُ,  இஹ்யாஉ உலூமித்தீன், தொகுதி 2, பக்கம் 374.

"ஸஹாபாக்கள் இதைச் செய்தார்களா? ஸஹாபாக்கள் அதைச் செய்தார்களா? இந்த அமல் ஸஹாபாக்களிடமிருந்து நிரூபிக்கப்படவில்லை" என்று நவீன கால வஹாபிகள்,ஸலபிகள்,அஹ்லே ஹதீஸ்,தேவ்பந்தியாக்கள்,ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தவர்களது கூற்று  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கருத்து அல்ல.

Saturday, 11 July 2026

பூமான் நபி  ‎ﷺ ‏அவர்களிடம் ‎உதவி ‎கோருவது

🌹 முஹத்திஸீன்கள் முன்னிலையில், ஒரு மனிதர் ரவ்ழா ஷரீப்  அருகில் சென்று: "எங்கள் முறையீட்டைக் கேட்பவர்களே (உதவியாளர்களே)!" என்று கூறிய சம்பவம் 🌹

இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு 458 ஹி.) அவர்கள் ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்:

> ٤١٧٧ - أخبرنا أبو عبد الله الحافظ أخبرني أبو محمد بن زياد نا محمد بن إسحاق الثقفي قال : سمعت أبا إسحاق القرشي يقول : كان عندنا رجل بالمدينة إذا رأى منكراً لا يمكنه أن يغيره أتى القبر فقال : أيا قبر النبي وصاحبيه ألا يا غوثنا لو تعلمونا .

எங்களுக்கு இமாம் ஹாக்கீம் நிஷாபூரி  (458 ஹி.) அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு அபூ முஹம்மத் பின் ஸியாத் (324 ஹி.) அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு முஹம்மத் பின் இஸ்ஹாக் அல்-ஸகஃபீ (313 ஹி.) அவர்கள் அறிவித்தார்கள். அவர் கூறினார்:

"நான் அபூ இஸ்ஹாக் அல்-குரைஷீ (300 ஹி.) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்:

'எங்களிடம் மதீனாவில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தம்மால் தடுக்க முடியாத ஒரு தீமையை  கண்டால், நபியவர்களின் கப்ர் (அதாவது ரௌழா முபாரக் ﷺ) அருகில் வந்து இவ்வாறு கூறுவார்:

 'அல்லாஹ்வின் நபி ﷺ அவர்களின் கப்ரே! மேலும், அவர்களின் இரு தோழர்களான (ஸெய்யிதினா அபூபக்ர், ஸெய்யிதினா உமர் رضي الله عنهما) அவர்களின் கப்ர்களே! எங்களின் முறையீட்டைக் கேட்டு உதவுபவர்களே! நீங்கள் எங்களை அறிந்திருந்தால் (எங்களுக்கு உதவியிருப்பீர்கள்).'"

ஆதாரம் 📕 : ஷுஅபுல் ஈமான், பக்கம் 495, ஹதீஸ் எண் 4177.

---

இந்த நிகழ்வை அறிவித்த பிறகு, அந்த மனிதர் மீது எந்த அறிவிப்பாளரும் (ராவியும்) ஷிர்க் என்று தீர்ப்பு வழங்கவில்லை. மேலும், இதை பதிவு செய்த இமாம் அபூபக்ர் அஹ்மத் இப்னு ஹுசைன் அல்-பைஹகீ رحمه الله அவர்களும் அவரை ஷிர்க் செய்தவர் என்று கூறவில்லை.

ஆகையால், "ஷிர்க்" என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை இன்றைய தங்களை "ஸலபி /அஹ்லுல் ஹதீஸ்/ முஜாஹித் " என்று அழைப்பவர்களான வஹாபிகள் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள் போல் தெரிகிறது; அவர்களுக்கு முன் வாழ்ந்த இமாம்களுக்கு அத்தகைய விளக்கம் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

வலிமார்களின் கராமத்

🌹   வலிமார்களின் கராமத்துகள் 🌹

எவ்வாறு நாத்திகர்கள் (முல்ஹித்கள்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் முஃஜிஸாக்களை (இறைத்தூதருக்குரிய அற்புதங்களை) மறுக்கின்றார்களோ, அதுபோலவே நவீன கால ஸலபி, வஹாபி, அஹ்லே ஹதீஸ்,  என விமர்சிக்கப்படுபவர்கள்,இறைநேசர்களது கராமத்துகளை ,  குறிப்பாக வலிகள் கோமான்  கௌஸுல் அஃழம் ஹழ்ரத் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் கராமத்துகளையும் மறுக்கின்றனர்.

வஹாபிகள் ஏற்றுக் கொள்ளும்  இமாம் தஹபி رحمه الله அவர்கள் எழுதுகின்றார்கள்:

 "நான் கூறுகின்றேன்: மாபெரும் மஷாயிக்களில் (இறைநேசர்களில்) கூட, ஹழ்ரத் இமாம் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி, 'கௌஸுல் அஃழம்' رضي الله عنه அவர்களை விட அதிகமான கராமத்துகள் பெற்றவர் யாரும் இல்லை."

ஆதாரம்: 📗 இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ , ஸியர் அஃலா மிந்நுபலா ,பாகம்  15, பக்கம் 185

Sunday, 5 July 2026

இமாம் ஜைனுல் ‎ஆபிதீன்رضي الله عنه

🌹 ஸெய்யதுல் ஆரிபீன் இமாம் ஸெய்யிதினா ஜைனுல் ஆபிதீன் رَحِمَهُ ٱللَّٰهُ 
🌹
ஈருலக இரட்சகர் அண்ணல் நபி  ﷺ அவர்களது திருப்பேரர் ஸெய்யிதுஷ் ஷுஹதா இமாம் ஹுஸைன் رضي الله عنه , அவர்களது அருமைப் பேரர் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه தமது காலத்தின் மாபெரும் ஆபிதீன்களில் ஒருவர். 

ஸெய்யிதுல் ஸஜ்ஜாத் இமாம் அபுல் ஹஸன் அலீ ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் ஸில்ஸிலதுல் தரீகத்துல் அலீயத்துல் காதிரிய்யாவின் நான்காவது ஞானாசிரியரும் , ஷெய்கு நாயகமும் ஆவார்கள்.

இமாம் ஜுஹ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள், இக்காலத்தில் குரைஷிகளில் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه  அவர்களை விட சிறந்த யாரையும் தாம் கண்டதில்லை என்கிறார்கள்.

பிறப்பு:

ஹிஜ்ரி 38ஆம் ஆண்டின் ஷஅபான் மாதம் 5ஆம் தேதி, வியாழக்கிழமை, மதீனத்துல் முனவ்வராவில் அவர்கள் பிறந்தார்கள்.

ஆதார நூல் 📕 [மஸாலிகுஸ் ஸாலிகீன், தொகுதி 1, பக்கம் 207]

திருப்பெயர்:

ஹழ்ரத் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்கள், தமது தந்தை ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்களின் மீதான பேரன்பின் காரணமாக, தமது பெரும்பாலான புதல்வர்களின் பெயர்களில் "அலீ" என்ற பெயரை இணைத்தார்கள். அதனால் இவருக்கும் "அலீ" என்று பெயரிடப்பட்டது.

மேலும், அபூ முஹம்மது, அபுல் ஹஸன், அபுல் காஸிம், அபூ பக்ர் ஆகிய குன்யாக்களாலும் அறியப்பட்டார்கள்.

அவர்களின் சிறப்புப் பட்டங்களில் ஸஜ்ஜாத், ஸைனுல் ஆபிதீன், ஸய்யிதுல் ஆபிதீன், ஸக்கிய் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கல்வி:

அவர்கள் தமது பாட்டனார் ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்களுடன் இரண்டு ஆண்டுகள், தமது பெரிய தந்தை (சிறிய தந்தை/சித்தப்பா) ஸெய்யிதினா இமாம் ஹஸன் رضي الله عنه அவர்களுடன் பத்து ஆண்டுகள், மேலும் தமது தந்தை ஹழ்ரத் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களுடன் பதினொரு ஆண்டுகள் கழித்து, அவர்களிடமிருந்து இஸ்லாமிய அறிவு, நற்பண்புகள் மற்றும் ஆன்மிகப் பயிற்சிகளைப் பெற்றார்கள்.

அன்னையார்:

அவர்களின் அன்னையார் உம்மு வலத் என்று அறியப்பட்டார்கள். மேலும் ஷஹ்ர் பானு رضي الله عنها என்ற பெயராலும் புகழ்பெற்றிருந்தார்கள். அவர்கள் மிகுந்த இறையச்சமுடைய, பரிசுத்தமான, அல்லாஹ்வை அஞ்சும் சிறந்த பெண்மணியாக விளங்கினார்கள்.

அவர்களின் தோற்றம்:

அவர்கள் தமது பாட்டனார் ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்களை மிகவும் ஒத்திருப்பார்கள். மாநிறத் தோற்றமுடையவராகவும், அதிக உயரமில்லாதவராகவும் இருந்தார்கள். அடர்த்தியான தாடியைக் கொண்டிருந்த அவர்கள், அதில் மருதாணி  பூசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் பிறப்பைப் பற்றிய நபிமொழி:

ஹழ்ரத் ஜாபிர் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் புனித சபையில் இருந்தேன். அப்போது இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்கள், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அருள்மிகு மடியில் இருந்தார்கள்.

அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

 'ஜாபிரே! இவருக்கு ஒரு மகன் பிறப்பான். அவனுக்கு "அலீ" என்று பெயரிடப்படும். பின்னர் அவனுக்கு ஒரு மகன் பிறப்பான்; அவருக்கு  "முஹம்மது" (இமாம் பாகிர்) என்று பெயரிடப்படும். ஜாபிரே! நீர் அவரைச் சந்தித்தால், என்னுடைய ஸலாமை அவரிடம் தெரிவிப்பீராக.'

அவர்களின் நற்குணங்கள்:

ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள், தமது மகத்தான மூதாதையரிடமிருந்து பரம்பரையாகப் பெற்ற உன்னத நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். மிகுந்த சொல்வன்மை கொண்டவராகவும், அனைவரிடமும் உயர்ந்த மரியாதையுடன் நடந்து கொள்பவராகவும் இருந்தார்கள். தேவையுடையோருக்கு உதவ எப்போதும் முன்வந்தார்கள்.

உமர் அபூ நஸ்ர் அவர்கள் கூறுவதாவது: இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் பல அடிமைகளை வாங்கி, பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள். தமக்குப் பகைமை கொண்டவர்களிடமும் கருணையுடனும் அன்புடனும் நடந்துகொண்டார்கள்.

ஒருமுறை, ஒருவர் தம்மைப் பற்றி எப்போதும் அவதூறாகப் பேசுவதாக அவர்கள் அறிந்தார்கள். உடனே அவரை நேரில் சந்தித்து, மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொண்டார்கள். அவர்களின் உயர்ந்த பண்பால் மனம் நெகிழ்ந்த அந்த நபர், தமது தவறை உணர்ந்து மனமாற்றம் அடைந்து, அந்த மகத்தான இமாமின் அன்பர்களில் ஒருவரானார்.

அவர்களின் கருணை, கொடைத் தன்மை மற்றும் உயர்ந்த பண்புகளைப் புகழ்ந்து ஏராளமான கவிஞர்கள் பல கஸீதா (புகழ் பாடல்கள்) இயற்றியுள்ளனர்.
[மஸாலிகுஸ் ஸாலிகீன், தொகுதி 1, பக்கம் 208]

அவர்களின் சிறப்புகள்:

அபூ ஹாஸிம் رحمه الله கூறுகிறார்கள்:

"அவர்களை விடச் சிறந்த ஃபிக்ஹ் அறிஞரை நான் கண்டதில்லை."

இமாம் தஹபி رحمه الله மற்றும் அய்னிய்யா رحمه الله கூறுகிறார்கள்:

"குரைஷியர்களில் அவர்களை விடச் சிறந்தவரை நாங்கள் கண்டதில்லை."

ஹழ்ரத் இமாம் மாலிக் رضي الله عنه அவர்கள் கூறுகிறார்கள்:

"அவர்கள் சிறப்புமிக்க மகான்களில் ஒருவர்."

இப்னு அபீ ஷைபா رحمه الله கூறுகிறார்கள்:

"ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர்களில் மிக உயர்ந்த அறிவிப்புத் தொடர், இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள், தமது தந்தை இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களிடமிருந்து அறிவிக்கும் தொடராகும்."

 ஆதார நூல் 📕 [மஸாலிகுஸ் ஸாலிகீன்]

ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள், இஸ்லாத்திற்காக தம்மிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். தமது முழுச் செல்வத்தையும் இரண்டு முறை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட்டார்கள்.

அவர்கள் மிகுந்த கொடை வள்ளலாக இருந்தார்கள். மதீனா ஷரீஃபில் வாழ்ந்த ஏழை எளிய மக்களுக்கு யாருக்கும் தெரியாமல் இரகசியமாக பண உதவி செய்து வந்தார்கள். அந்த உதவிகள் அவர்களிடமிருந்தே வந்தன என்பதை மக்கள் அறிந்தது, அவர்களின் விஸால் (இறைபதவி) பிறகே ஆகும்.

ஆதார நூல் 📕 [தாரீகுல் குலஃபா]

அவர்களின் பொறுமை:

ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் அளவற்ற பொறுமை கொண்டவர்களாக இருந்தார்கள். கர்பலா யுத்தத்திற்குப் பிறகு, அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் தமஸ்கஸ் (ஷாம்) நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பின்னர், அப்துல் மாலிக் இப்னு மர்வான் ஆட்சிக் காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார்கள். அதன் பிறகு, மதீனாவிலிருந்து ஷாம் வரை சங்கிலிகளுடன் நடந்து செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

இவ்வளவு கடுமையான சோதனைகளையும் அனுபவித்தபோதிலும், அல்லாஹ்வின் திருச்சந்நிதியில் தமது நிலையைப் பற்றி ஒரு முறைகூட முறையிடவில்லை. மாறாக, ஒவ்வொரு அடியிலும் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வுக்கு நன்றி (ஷுக்ர்) செலுத்திக்கொண்டே இருந்தார்கள்.

இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களின் தலைசிறந்த சீடரான ஸெய்யிதினா இமாம் ஸுஹ்ரி رحمه الله, தமது ஆசானை இவ்விதமான நிலையில் காண சகிக்க முடியாமல், அப்துல் மாலிக் இப்னு மர்வானைச் சந்தித்து, அந்த மகத்தான இமாமை விடுதலை செய்யச் செய்தார்கள். பின்னர், மிகுந்த மரியாதையுடன் அவர்களை மீண்டும் மதீனா ஷரீஃபிற்கு அழைத்து வந்தார்கள்.
ஆதார நூல் 📕 [கஸீனதுல் அஸ்ஃபியா, தொகுதி 1, பக்கங்கள் 31–32]

ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் மிகவும் மென்மையான இதயமுடையவர்களாக இருந்தார்கள். கர்பலா மைதானத்தில் தமது தந்தை இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களும், ஏனைய ஷஹீத்களும் செய்த மகத்தான தியாகத்தை எப்போதும் நினைவுகூர்ந்துகொண்டே இருப்பார்கள்.

ஒருநாள், மதீனத்துல் முனவ்வராவின் புனித வீதிகளில் அவர்கள் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் ஒரு ஆட்டை அறுப்பதற்காக தரையில் படுக்கவைத்து, அதன் முன்னிலையிலேயே கத்தியைத் தீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

அதைக் கண்டவுடன், தமது தந்தையின் ஷஹாதத்தை நினைத்து மிகுந்த துயரமடைந்து, கண்ணீர் மல்க அழுதார்கள்.

பின்னர் அந்த மனிதரிடம் கேட்டார்கள்:

"அன்புச் சகோதரரே! இந்த ஆட்டிற்கு உணவும் தண்ணீரும் கொடுத்தீர்களா?"

அதற்கு அவர் பதிலளித்தார்:

"ஆம். கடந்த மூன்று நாட்களாக இதற்கு உணவும் தண்ணீரும் கொடுத்து வந்தேன். அறுப்பதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வைத்தேன்."

இதைக் கேட்ட ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுவிட்டு கூறினார்கள்:

"ஆஹ்! கூஃபா மக்கள், இந்த ஆட்டுக்குக் காட்டிய அளவு இரக்கத்தைக்கூட என் தந்தைக்கு காட்டவில்லை. மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் மறுத்துவிட்டு, அந்த நிலையிலேயே அவர்களை ஷஹீதாக்கினார்கள்."

ஆதார நூல் 📕 [மஸாலிகுஸ் ஸாலிகீன்]

அவர்கள் ஒவ்வொரு இரவும் ஆயிரம் ரக்அத்துகள் நஃபில் தொழுகை நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஒரு இரவு, அவர்கள் நஃபில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களது வீடு தீப்பற்றியது. மக்கள் அனைவரும் பதற்றத்துடன் தீயை அணைக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் எந்தவித கலக்கமும் இன்றி, முழு மனஒருமையுடனும் இறையச்சத்துடனும் தமது தொழுகையைத் தொடர்ந்தார்கள்.

தொழுகையை முடித்த பிறகு, மக்கள் அவர்களிடம்,

"உங்கள் வீடு தீப்பற்றியிருந்தபோதும், நீங்கள் சிறிதும் பதற்றமடையாமல் தொழுகையைத் தொடர்ந்தீர்களே!"

என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:

"நீங்கள் இந்த உலகின் தீயை அணைக்க முயன்றுகொண்டிருந்தீர்கள்; நான் மறுமையின் நெருப்பை அணைக்க முயன்றுகொண்டிருந்தேன்."

ஆதார நூல் 📕 [கஸீனதுல் அஸ்ஃபியா, தொகுதி 1, பக்கம் 31]


ஒருமுறை, ஒருவர் ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களை திட்டி, அவர்களின் மீது பொய்யான பழிச் சொற்களைச் சுமத்தினார்.

அதற்கு இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் மிகுந்த அமைதியுடன் கூறினார்கள்:

"நீங்கள் என்னைப் பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையாக என்னிடம் இருந்தால், அதற்காக நான் அல்லாஹ் عزوجل இடம் தவ்பா செய்து மன்னிப்புக் கோருகிறேன். அவை என்னிடம் இல்லையெனில், உங்களுக்காக அல்லாஹ் عزوجل இடம் மன்னிப்பையும் தவ்பாவையும் வேண்டுகிறேன்."

அவர்களின் அபாரமான பொறுமையையும் உயர்ந்த நற்குணத்தையும் கண்ட அந்த மனிதர் மனம் நெகிழ்ந்தார். உடனே எழுந்து, இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு,

"என் உயிர் உங்களுக்காக அர்ப்பணமாகட்டும்! நான் உங்கள் மீது கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. என்னை மன்னித்தருளுங்கள். மேலும், அல்லாஹ் عزوجل என் தவ்பாவை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்காக துஆ செய்யுங்கள்."

என்று வேண்டிக்கொண்டார்.

அப்போது ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள், அவருக்காக அல்லாஹ் عزوجل இடம் துஆ செய்வதற்கு சம்மதித்தார்கள்.

அவர்களின் இபாதத் (வணக்க வழிபாடு):

தமது அருமைத் தந்தை ஹழ்ரத் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்கள் ஷஹீதான பிறகு, ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் இவ்வுலகின் ஆடம்பரங்களிலிருந்தும், பொருளாசையிலிருந்தும் முற்றிலும் விலகிவிட்டார்கள். தமது முழு நேரத்தையும் அல்லாஹ்வின் திக்ரிலும் (நினைவிலும்), இபாதத்திலும் கழித்தார்கள்.

கர்பலாவின் பேரவலத்தை நினைத்து, பகலும் இரவும் அழுதுகொண்டே இருப்பார்கள்.

அவர்கள் உளூ செய்வதற்காக அமரும்போது, அல்லாஹ்வின் மகத்துவத்தை எண்ணி அவர்களின் முகம் வெளிறிவிடும். தொழுகைக்காக நின்றவுடன், அவர்களின் நிறமே மாறிவிடும் அளவுக்கு இறையச்சம் அவர்களை ஆட்கொள்ளும். அந்த நேரத்தில் அவர்களை அடையாளம் காண்பதே கடினமாக இருக்கும்.

இதைக் கண்ட மக்கள்,

"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் அன்பிற்குரியவரே! உங்களுக்கு என்ன ஆயிற்று?"

என்று கேட்டார்கள்.

அதற்கு ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

"மக்களே! தொழுகை என்பது அல்லாஹ்வின் திருச்சந்நிதியில் நிற்கும் நேரமாகும். தம்மைப் படைத்த இறைவனின் முன்னிலையில் நிற்கும்போது, புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு யார் துணிவார்?"

ஆதார நூல் 📕 [அவாரிஃபுல் மஆரிஃப், பக்கம் 475]

அவர்கள் ஒவ்வொரு இரவும் ஆயிரம் ரக்அத்துகள் நஃபில் தொழுகை நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஒரு இரவு, அவர்கள் நஃபில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களது வீடு தீப்பற்றியது. மக்கள் அனைவரும் பதற்றத்துடன் தீயை அணைக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் எந்தவித கலக்கமும் இன்றி, முழு மனஒருமையுடனும் இறையச்சத்துடனும் தமது தொழுகையைத் தொடர்ந்தார்கள்.

தொழுகையை முடித்த பிறகு, மக்கள் அவர்களிடம்,

"உங்கள் வீடு தீப்பற்றியிருந்தபோதும், நீங்கள் சிறிதும் பதற்றமடையாமல் தொழுகையைத் தொடர்ந்தீர்களே!"

என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:

"நீங்கள் இந்த உலகின் தீயை அணைக்க முயன்றுகொண்டிருந்தீர்கள்; நான் மறுமையின் நெருப்பை அணைக்க முயன்றுகொண்டிருந்தேன்."

ஆதார நூல் 📕 [கஸீனதுல் அஸ்ஃபியா, தொகுதி 1, பக்கம் 31]


இமாம் தல்ஹா ஷாஃபிஈ رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை, ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் தொழுகையில் நின்றுகொண்டிருந்தபோது, ஷைத்தான் பாம்பின் உருவில் தோன்றியது. அது இமாமவர்களின் கால்விரலைத் தனது வாயால் கவ்விக் கொண்டது. இருப்பினும், அவர்கள் சிறிதும் அசையவில்லை; எந்தவித அசௌகரியத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் முழு மனஒருமையுடன் தொழுகையைத் தொடர்ந்தார்கள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஷைத்தான் விரக்தியடைந்து, இமாமவர்களிடமிருந்து விலகி நின்றது.

அப்போது, மூன்று முறை ஒரு மறைவான குரல் ஒலித்தது:

"நீங்கள் வணக்கமாளர்களின் ஆபரணமாக இருக்கிறீர்கள்!"
"நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்பவர்களின் தலைவராக இருக்கிறீர்கள்!"
"நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்பவர்களின் தலைவராக இருக்கிறீர்கள்!"

அவர்களின் தக்வா :

ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள், அல்லாஹ்வைப் பற்றிய ஆழ்ந்த அச்சமும் இறையச்சமும் கொண்ட மகத்தானவர்களாக இருந்தார்கள். அவர்களின் இதயம் எப்போதும் அல்லாஹ்வின் பயத்தால் நிரம்பியிருந்தது.

ஒருமுறை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். ஆனால், "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்" என்று தல்பியாவைச் சொல்லவில்லை.

அப்போது மக்கள்,

"ஏன் லப்பைக் சொல்லவில்லை?"

என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்:

"நான் 'லப்பைக்' என்று கூறும்போது, அல்லாஹ், 'உன்னுடைய வருகையை (ஹஜ்ஜை) நான் ஏற்றுக்கொள்ளவில்லை' என்று கூறிவிடுவானோ என்று நான் அஞ்சுகிறேன்."

அப்போது மக்கள்,

"நீங்கள் லப்பைக் சொல்லாவிட்டால், உங்கள் இஹ்ராம் முழுமையடையாது."

என்று கூறினார்கள்.

அதன்பின் அவர்கள் "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்" என்று கூறினார்கள். ஆனால், அவ்வாறு கூறிய உடனேயே அல்லாஹ்வின் பயத்தால் அவர்களின் உடல் நடுங்கத் தொடங்கியது. இறுதியில் ஒட்டகத்தின் மீது இருந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார்கள்.

ஹஜ் முழுவதும், ஒவ்வொரு முறையும் தல்பியா கூறும்போதெல்லாம் இதே நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
ஆதார நூல் 📕 [கஸீனதுல் அஸ்ஃபியா]

திருக்குர்ஆன் ஓதுதல்:

ஹழ்ரத் இமாம் ஜஃபர் ஸாதிக் رضي الله عنه அவர்கள் கூறுகிறார்கள்:

"என் பாட்டனார் ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் திருக்குர்ஆனை ஓதும்போது, அவர்களின் ஓதுதலின் இனிமையும் அழகும் மக்களை அவர்களிடம் ஈர்த்துவிடும். அவர்களின் ஓதுதலைக் கேட்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பயத்தில் ஆழ்ந்து விடுவார்கள். ஒவ்வொருவரும் அந்த அளவுக்கு இறையச்சத்தில் மூழ்கியிருப்பதால், அருகிலிருந்த மற்றவர்களின் நிலை என்னவென்பதைக் கூட உணர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்."

கர்பலாவிலிருந்து திரும்பியபோது:

கர்பலா நிகழ்விற்குப் பிறகு, ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் மதீனத்துல் முனவ்வராவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஆழ்ந்த வேதனையுடன் சில கவிதை வரிகளைப் பாடினார்கள். அவற்றில் சில வரிகள்:

"தூய மதீனாவின் புனித மண்ணை நோக்கி எப்போதாவது தென்றல் காற்றே நீ சென்றால்,
அல்லாஹ்வின் மகத்தான நபி ﷺ அவர்கள் இளைப்பாறும் ரவ்ழா-ஏ-அக்தஸின் முன்னிலையில் எனது ஸலாமைச் சேர்த்துவிடு.

மதீனாவைப் பிரிந்த துயரம், என் ஈரலில் ஆழமாகப் பாய்ந்த வாளைப் போன்ற வேதனையை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ்வின் அன்பிற்குரிய உயர்ந்த நபி ﷺ அவர்கள் வாழ்ந்த அந்த நகரில் வசிக்கும் மக்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்!

யா ரஹ்மதன் லில் ஆலமீன் ﷺ! கொடுங்கோலர்களின் நடுவில் தனிமையிலும் துயரத்திலும் நிற்கும் ஸைனுல் ஆபிதீனுக்கு உதவி புரிவீராக!"

ஒருமுறை ஒருவர் ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களிடம்,

"மறுமை நாளில் யார் உண்மையான நல்லோராகவும் இறையச்சமுடையவராகவும் கருதப்படுவார்கள்?"

என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:

"மகிழ்ச்சியடைந்தபோது, அந்த மகிழ்ச்சி அவரைத் தவறான செயல்களுக்குத் தள்ளாதவரும், கோபமடைந்தபோது, அந்தக் கோபம் அவரை நீதியிலிருந்தும் உண்மையிலிருந்தும் விலக்காதவருமே உண்மையான நல்லடியார் ஆவார்."

அதாவது, ஒருவர் மகிழ்ச்சியில் இருக்கும்போதும் அந்த மகிழ்ச்சி அவரை பாவங்களிலும் தீய செயல்களிலும் இட்டுச் செல்லக்கூடாது. அதேபோல், ஒருவர் கோபமடையும்போதும், அந்தக் கோபம் அவரது நீதியுணர்வையும் உண்மையையும் மறைக்க அனுமதிக்கக் கூடாது.

ஆதார நூல் 📕 [மஸாலிகுஸ் ஸாலிகீன்]

குலஃபாஉர் ராஷிதீன்களுக்குக் காட்டிய மரியாதை:

ஒருமுறை, ஈராக்கிலிருந்து சிலர் ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களைச் சந்திக்க வந்தார்கள். உரையாடலின் போது அவர்கள், ஹழ்ரத் அமீருல் முஃமினீன் அபூபக்ர் ஸித்தீக் رضي الله عنه, ஹழ்ரத் அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் رضي الله عنه மற்றும் ஹழ்ரத் அமீருல் முஃமினீன் உஸ்மான் ஃகனீ رضي الله عنه ஆகிய மகத்தான கலீஃபாக்களைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசத் தொடங்கினார்கள்.

அவர்கள் பேசித் தீர்ந்த பிறகு, ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் கேட்டார்கள்:

"என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில் புகழ்ந்து கூறும் முதல் முஹாஜிரீன்களில் நீங்கள் ஒருவரா?"

"தமது வீடுகளையும் சொத்துகளையும் விட்டு வெளியேற்றப்பட்டு, அல்லாஹ்வின் அருளையும் திருப்தியையும் நாடி, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவி செய்தவர்கள் — அவர்களே உண்மையாளர்கள்."
(ஸூரத்துல் ஹஷ்ர்: 8)

அதற்கு அவர்கள்,

"இல்லை."

என்று பதிலளித்தார்கள்.

பின்னர் இமாமவர்கள் மீண்டும் கேட்டார்கள்:

"அப்படியானால், அல்லாஹ் தஆலா புகழ்ந்து கூறும் அன்ஸார்களில் நீங்கள் ஒருவரா?"

"அவர்களுக்கு முன்பாக மதீனாவில் தங்கி, ஈமானில் நிலைத்திருந்தவர்கள்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை நேசிக்கிறார்கள்; அவர்களுக்கு வழங்கப்பட்டவற்றைப் பற்றி தங்கள் உள்ளங்களில் எந்தப் பொறாமையையும் காண்பதில்லை; தாங்களே தேவையுடையவர்களாக இருந்தாலும், அவர்களையே தங்களுக்கு மேலாக முன்னுரிமை அளிக்கிறார்கள்."
(ஸூரத்துல் ஹஷ்ர்: 9)

மீண்டும் அவர்கள்,

"இல்லை."

என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் கூறுகிறேன்! நீங்கள் இந்த வசனத்திற்குக் கூட தகுதியானவர்கள் அல்ல."

பின்னர் இந்த திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

"அவர்களுக்குப் பின்வந்தவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: 'எங்கள் இறைவா! எங்களையும், எங்களுக்கு முன் ஈமான் கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக. ஈமான் கொண்டவர்கள்மீது எங்கள் இதயங்களில் எந்தவித வெறுப்பையும் ஏற்படுத்தாதிருப்பாயாக. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மிகுந்த இரக்கமுள்ளவனும், பேரருளாளனுமாக இருக்கிறாய்.'"
(ஸூரத்துல் ஹஷ்ர்: 10)

இதைச் சொன்ன பிறகு, அவர்கள் தமது சபையைவிட்டு வெளியேறும்படி அவர்களிடம் கூறினார்கள்.

அதாவது, அவர்கள் முஹாஜிரீன்களிலும் இல்லை, அன்ஸார்களிலும் இல்லை; மேலும், உண்மையான ஈமான் கொண்டவர்களின் பண்புகளையும் கொண்டவர்கள் அல்ல என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்கள். குலஃபாஉர் ராஷிதீன்களான முதல் மூன்று கலீஃபாக்களை அவமரியாதை செய்ததன் காரணமாக, அவர்களிடமிருந்து விலகி அவர்களை நிராகரித்தார்கள்.

கராமத்துகள்:

ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களிடமிருந்து வெளிப்பட்ட கராமத்துகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் பரக்கத் பெறும் நோக்கில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

ஹஜ்ஜின்போது நிகழ்ந்த கராமத்

ஒருமுறை, இருவர் கஅபத்துல்லாஹ்வை தவாஃப் செய்து கொண்டிருந்தபோது ஹஜ்ருல் அஸ்வத் அருகே வந்தார்கள். அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டவுடன், அவர்களின் கைகள் அதனுடன் ஒட்டிக்கொண்டன.

அங்கிருந்த மக்கள் அவர்களின் கைகளைப் பிரிக்க பலமுறை முயற்சி செய்தார்கள். ஆனால், எவ்வளவு முயன்றும் அவர்களால் அவற்றைப் பிரிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில், ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமிற்குள் நுழைந்தார்கள்.

அவர்கள்,

"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்"

என்று ஓதிவிட்டு, தமது திருக்கரங்களை ஹஜ்ருல் அஸ்வத் மீது வைத்தார்கள்.

உடனே, அந்த இருவரின் கைகளும் ஹஜ்ருல் அஸ்வத்திலிருந்து விடுபட்டன.

ஆதார நூல் 📕 [கஸீனதுல் அஸ்ஃபியா, தொகுதி 1, பக்கம் 34]

மானுடன் நிகழ்ந்த சம்பவம்

ஒருமுறை, ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் தமது தோழர்களுடன் காட்டிற்குச் சென்றிருந்தார்கள். அவர்கள் உணவருந்த அமர்ந்திருந்தபோது, ஒரு மான் அந்த வழியாக வந்தது.

இமாமவர்கள் அந்த மானை அழைத்து,

"எங்களுடன் சேர்ந்து உணவருந்து."

என்று கூறினார்கள்.

உடனே அந்த மான் இமாமவர்களிடம் வந்து, அவர்கள் வழங்கிய உணவை உண்டது.
ஆதார நூல்  📕[மஸாலிகுஸ் ஸாலிகீன், தொகுதி 1, பக்கம் 11]

மானின் முறையீடு

ஒருமுறை, ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் காட்டில் இருந்தபோது, ஒரு மான் அவர்களிடம் வந்து தரையில் விழுந்து, ஏதோ கூறத் தொடங்கியது.

இமாமவர்களுடன் இருந்தவர்கள்,

"இந்த மானுக்கு என்ன ஆயிற்று?"

என்று கேட்டார்கள்.

அதற்கு இமாமவர்கள் கூறினார்கள்:

"ஒருவன் தனது குட்டியைப் பிடித்துச் சென்றதாக இந்த மான் முறையிடுகிறது."

உடனே, அந்த மனிதரை இமாமவர்கள் அழைத்துவரச் செய்தார்கள். அவனும், மானின் குட்டியைத் தன்னுடன் கொண்டு வந்தான்.

இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள், அந்தக் குட்டியை விடுவிக்கும்படி அவனுக்குக் கட்டளையிட்டார்கள். அவனும் மகிழ்ச்சியுடன் அதை விடுதலை செய்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த மான் தனது குட்டியை அழைத்துக்கொண்டு செல்லும்போது ஏதோ கூறிவிட்டு சென்றது.

அங்கிருந்தவர்கள் அதிசயமடைந்து,

"இமாமவர்களே! அந்த மான் செல்லும்போது என்ன கூறியது?"

என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்:

"அது, 'ஜஸாகல்லாஹு ஃபித்தாரைனி கைரன்' (அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை வழங்குவானாக!) என்று துஆ செய்தது."

ஆதார நூல் 📕 [மஸாலிகுஸ் ஸாலிகீன்]

அவர்களின் திருப் பிள்ளைகள் : 

அல்லாஹ் தஆலா, ஹழ்ரத் இமாம் ஜைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களுக்கு பதினைந்து பிள்ளைகளை அருளினான். அவர்களின் திருப்பெயர்கள் பின்வருமாறு:

ஆண் பிள்ளைகள்:

  1. ஹழ்ரத் முஹம்மது (இமாம் பாகிர்) رضي الله عنه
  2. ஹழ்ரத் ஸைத் رضي الله عنه
  3. ஹழ்ரத் இம்ரான் رضي الله عنه
  4. ஹழ்ரத் அப்துல்லாஹ் رضي الله عنه
  5. ஹழ்ரத் ஹஸன் رضي الله عنه
  6. ஹழ்ரத் ஹுஸைன் رضي الله عنه
  7. ஹழ்ரத் ஹுஸைன் அஸ்கர் رضي الله عنه
  8. ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் رضي الله عنه
  9. ஹழ்ரத் சுலைமான் رضي الله عنه
  10. ஹழ்ரத் அலீ رضي الله عنه
  11. பெயர் அறியப்படாத மற்றொரு மகன்.

பெண் பிள்ளைகள்:

  1. ஹழ்ரத் கதீஜா رضي الله عنها
  2. ஹழ்ரத் ஃபாத்திமா رضي الله عنها
  3. ஹழ்ரத் ஆலியா رضي الله عنها
  4. ஹழ்ரத் உம்மு குல்தூம் رضي الله عنها

ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களின் சந்ததியினர், ஹழ்ரத் இமாம் பாகிர் رضي الله عنه, ஹழ்ரத் ஸைத் رضي الله عنه, ஹழ்ரத் அப்துல்லாஹ் رضي الله عنه, ஹழ்ரத் ஹுஸைன் அஸ்கர் رضي الله عنه, ஹழ்ரத் இம்ரான் رضي الله عنه மற்றும் ஹழ்ரத் அலீ رضي الله عنه ஆகியோரின் வழியாகத் தொடர்ந்தது.

இவர்களில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் தஆலா ஏராளமான பிள்ளைகளை அருளினான்.

ஆதார நூல் 📕 [மஸாலிகுஸ் ஸாலிகீன்]

விஸால் ஷரீஃப்

ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களுக்கு வலீத் இப்னு அப்துல் மாலிக் என்பவனால் விஷம் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக அவர்கள் ஷஹீதானார்கள்.

அவர்களின் விஸால், ஹிஜ்ரி முஹர்ரம் மாதம் 18ஆம் தேதி நிகழ்ந்ததாகப் பெரும்பாலான அறிவிப்புகள் கூறுகின்றன. சில அறிவிப்புகளின்படி 12ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போது அவர்களின் வயது 57 அல்லது 58 ஆக இருந்தது.

அவர்கள் மதீனத்துல் முனவ்வராவில் விஸால் அடைந்தார்கள். அவர்களின் மஸார் ஷரீஃப் ஜன்னத்துல் பகீஃவில் அமைந்துள்ளது.

சிலர், அவர்களின் மஸார் ஷரீஃப் எகிப்தின் கெய்ரோ நகரில் இருப்பதாகவும், அங்கு ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களின் பெயரில் பள்ளிவாசலும் தர்காவும் இருப்பதாகவும் கூறுகின்றனர். எனினும், பெரும்பாலான உலமாக்கள் அவர்களின் மஸார் ஷரீஃப் மதீனத்துல் முனவ்வராவின் பகீஉல் கர்கத் (ஜன்னத்துல் பகீஃ) இல் இருப்பதையே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உண்மையை அல்லாஹ் தஆலாவே நன்கு அறிவான்.


அவர்கள் விஸால் அடைந்த பிறகு, அவர்களின் ஒட்டகம் வந்து, தன் தலையை அவர்களின் மஸார் ஷரீஃப்பின் மீது வைத்து அழுதது.

ஹழ்ரத் இமாம் பாகிர் رضي الله عنه அவர்கள் அந்த ஒட்டகத்தை அங்கிருந்து அகற்ற முயன்றார்கள். ஆனால் அது அங்கிருந்து நகர மறுத்தது.

இறுதியில், இமாம் பாகிர் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

"இது இதே இடத்திலேயே இறந்துவிடும்."

அவ்வாறே, அந்த ஒட்டகம் இறுதியில் ஹழ்ரத் இமாம் ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்களின் மஸார் ஷரீஃப்பின் அருகிலேயே உயிர் நீத்தது.

ஆதார நூல் 📕 [மஸாலிகுஸ் ஸாலிகீன், தொகுதி 1, பக்கம் 207]


மதீனாவில் இமாம் அலீ ஜைனுல் ஆபிதீன் رحمه الله அவர்களின் இல்லம்


கர்பலா பேரவலத்திற்குப் பிறகு, இமாம் அலீ ஜைனுல் ஆபிதீன் (அலீ இப்னு அல்-ஹுஸைன்) رضي الله عنه  அவர்கள் மீண்டும் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அவர்கள், பழைய மதீனா நகருக்கும் குஃபா பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில், நாயகத் தோழர்  ஸெய்யிதினா ஸல்மான் அல்-ஃபார்ஸி رضي الله عنه அவர்களின் தோட்டத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு இல்லத்தில் வசித்து வந்தார்கள்.

அந்தப் பகுதியில் பனூ அகீல் இப்னு அபீ தாலிப், பனூ அல்-அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் மற்றும் அல்-மகாம்ஸி கோத்திரத்தைச் சேர்ந்த பல கண்ணியமிக்க குடும்பங்களும் வசித்து வந்தனர்.

இந்த பாக்கியமிக்க இல்லத்திலிருந்தே, இமாம் அலீ ஜைனுல் ஆபிதீன் رحمه الله அவர்கள் வணக்க வழிபாடு, மார்க்கக் கல்வி போதித்தல் மற்றும் தமது பாட்டனாரான அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீ தாலிப் كرم الله وجهه அவர்களின் மகத்தான பாரம்பரியத்தைப் பாதுகாத்து பரப்பும் பணிகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்கள்.

 அவர்களின் இல்லம் அறிவு, இறையச்சம், பொறுமை மற்றும் நற்குணங்களின் மையமாக விளங்கி, மதீனாவின் ஆன்மிக மற்றும் அறிவுசார் வாழ்வில் அவர்களின் நிலைத்த தாக்கத்தைப் பிரதிபலித்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...