Thursday, 30 October 2025

அக்கிரக்காரனும்,அவனது உதவியாளர்களும்

📝அக்கிரமக்காரனும் ,அவனது உதவியாளர்களும் 

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்களது மாணவர் ஹழ்ரத்  அபூ பக்ர் அல்-மரூதீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள்:

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் رضي الله عنه  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறைக்காவலர் வந்து அவரிடம் :  
“ஓ அபூ அப்துல்லாஹ், அக்கிரமக்காரர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் பற்றிய ஹதீஸ் உண்மையா?” என்று வினவினார்.

இமாம் அவர்கள்  கூறினார்கள்:  
“ஆம். அது உண்மை தான்”

சிறைக்காவலர் கூறினார்:  
“நான் அக்கிரமக்காரர்களின் உதவியாளர்களில் ஒருவனா?”

இமாம் அஹ்மத் கூறினார்கள் :  
“அக்கிரமக்காரர்களின் உதவியாளர்கள் என்போர் உனக்காக முடி வெட்டுபவர்கள், உடைகளைத் துவைப்பவர்கள், உணவு தயாரிப்பவர்கள், உன்னிடமிருந்து வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆவர், நீயோ அக்கிரமக்காரர்களில் ஒருவனே.”

[ஆதார நூல் 📕 மனாகிப் அபீ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹம்பல் - பக்கம் 431 ]

Tuesday, 28 October 2025

முஸாபிர்களின் அமல்



“அஃயூனூனி யா இபாதல்லாஹ்” இந்த ஹதீஸ் முஸாஃபிர்களுக்கு மிகவும் அவசியமானது. மேலும் இது அனுபவத்தில் பரீட்சிக்கப்பட்ட அமலாகும்.

இமாம் முல்லா அலீ காரீ رَحِمَهُ ٱللَّٰهُ (வஃபாத் 1014 ஹி.) எழுதுகிறார்கள்:

" அல்-ஹிஸ்னுல் ஹஸீனில் நூலில் இமாம் முஹத்தித் அல் ஜசரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : “ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் அவர் கூறட்டும்: “அஃயூனூனி யா இபாதல்லாஹ்” (அல்லாஹ்வின் அடியார்களே, உதவி செய்யுங்கள்) (3 முறை). 

இதை இமாம் தபரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் , நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உத்பா பின் ஃகஸ்வான் رضي الله عنه  அவர்களிடமிருந்து ரிவாயத் செய்துள்ளார்கள். 

சில  உலமாக்கள் கூறினார்கள்: “இந்த ஹதீஸ் ஹஸன் ஆகும் மற்றும் முஸாஃபிர்களுக்கு மிகவும் அவசியமானது. மேலும் மஷாயிக்களிடமிருந்தும் ரிவாயத் உள்ளது இது அனுபவம் வாய்ந்த அமல் ஆகும், இது மகிழ்ச்சியுடன் செய்யப்படுகிறது.

(ஆதார நூல் 📕 மிர்காத் அல்-மஃபாதீஹ்: ஷர்ஹ் மிஷ்காத் அல்-மஸாபீஹ்” பக்கம் 295)

Saturday, 25 October 2025

பெருமானாரின் முஃஜிஸாத்


இமாம் இஸ்பஹானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்:

"யாராகிலும்  : 'ஹஸ்ரத்  ஸெய்யிதினா ஈஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் அனுமதியுடன் மரித்தவர்களை உயிர்ப்பித்தார்கள்,' என்று கூறினால் 

அதற்கு நாம் கூறுவோம்: இதைவிட மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ் தஆலா நமது நபி கரீம் முஹம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தரஜாவை உயர்த்தினான். அண்ணல் நபி  ﷺ அவர்களுக்கு  ஒரு தெளிவான அடையாளத்தை வழங்கினான், இதைப் பலரும் கண்டனர். 

நாயகத் தோழர் ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இறந்துபோன ஆட்டை உயிர்ப்பித்து வைத்தான். மேலும், ஒரு அன்ஸாரி பெண்ணின் மகனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அல்லாஹ் தஆலா உயிர்ப்பித்தான். இவை இரண்டுமே மிகவும் ஆச்சரியமான அற்புதங்களாகும், இவை நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நபித்துவத்தின் மற்றும் உண்மையின் அடையாளங்களாகும்."

📔(நூல்: தலாயிலுந்நுபுவ்வா, பக்கம் 616)

Wednesday, 22 October 2025

ஈஸால் ஸவாப்

  🌹ஈஸால் ஸவாப் 🌹

இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , " நீங்கள் கப்ரஸ்தானில் நுழைந்தால், பாத்திஹா ஸுரா,மூன்று குல் ஆகியவற்றை ஓதி அதன் வெகுமதியை மண்ணறையில் அடங்கியுள்ளவர்களுக்கு  சமர்பிக்கவும்.அது அவர்களை சென்றடையும் "

📕 தபகாத்துல் ஹனாபிலா,காழீ அபூ யஃலா رَحِمَهُ ٱللَّٰهُ 



Tuesday, 7 October 2025

வலிமார்களிடம் வஸீலா

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ,ஸனதுல் முஹத்திஸீன்,ஜைனுல் புகஹா ,குத்புல் இர்ஷாத் இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்களது மகனார்  13ஆம் நூற்றாண்டின் முஜத்தித் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹாதித் தெஹல்வி رضي الله عنه நவீன வழிகெட்ட கொள்கைவாதிகளுக்கு மறுப்புரையாக தமது தப்ஸீரில் பின்வருமாறு  எழுதுகின்றார்கள்

கேள்வி : 

அவ்லியாக்களின்  கப்ர் (மஸார்) அருகே உதவி கேட்க ஏன் செல்கிறார்கள், அவர்கள் தான்  இறந்துவிட்டார்களே?

 பதில்:

ஜிஸ்முக்கும் (உடலுக்கும்) ரூஹுக்கும் (ஆன்மாவுக்கும்) தொடர்பு உள்ளது. 
அவ்லியாக்களை  அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியின்றி சுயமான தனிப்பட்ட அதிகாரம் உள்ளதாக நம்புவது ஷிர்க் ஆகும்.
அதாவது, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரின்  மஸார்களுக்கு செல்வது இத்தகைய கொள்கைகளில்  விடுபட்டது.

Sunday, 5 October 2025

வரலாற்றின் வெளிச்சத்தில் மீலாதுந்நபி

தொகுப்பு: இப்ஹாம் நவாஸ்,ஊடைவியளாலர்,இலங்கை வானோலி 

வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புனித  மக்கா மற்றும் மதீனாவில் நடைபெற்ற  மீலாத்துந் நபிதின கொண்டாட்டங்கள் : 

1. அல்லாமா முல்லா அலி காரீ( இறப்பு : கி.பி. 1605) அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தின் போது மதீனா மக்களின் வழக்கத்தை இவ்வாறு கூறுகின்றார்கள் ,

" மதீனாவாசிகள் (அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிவானாக) அத்தினத்தில் மவ்லித் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் உற்சாகத்துடனும் நேர்மையான முறையிலும் கலந்துகொள்கின்றனர். "

[ 📕 நூல் : மவ்ரித் அர்-ராவி பி மவ்லித் அந் நபவி, பக்கம் 29] 

2. இப்னு அல்-ஜவ்ஸி (இறப்பு : கி.பி.1256) பின்வருமாறு கூறுகின்றார்கள் ,

" மக்கா முகர்ரமா மற்றும் மதீனா முனவ்வரா, எகிப்து, யெமன், சிரியா மேலும் அரேபியாவின் கிழக்கு மற்றும் மேற்கு நகரங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.ரபிய்யுல் அவ்வல் பிறை தென்பட்டதும் அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். அவர்கள் குளித்து தம்மிடமுள்ள சிறந்த உடைகளை அணிந்து, நறுமணங்களை பூசிக்கொள்கின்றனர். அத்தினத்தில் ஏழைகளுக்கு மிக சந்தோஷத்துடன் உதவி செய்கின்றனர், மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லித்களை ( புகழ்மாலைகளை) கேட்பதில் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவதன் மூலம் வருடம் முழுவதும் நலவுகள் நடக்கின்றது எனவும்,பாதுகாப்பும் கிடைக்கின்றது எனவும்,பிள்ளைகள் மற்றும் செல்வம் அதிகரிக்கின்றது எனவும், நகரங்களில் மற்றும் வீடுகளில் சமாதானம் நிலவுகின்றது எனவும் அவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. "

[ நூல்கள் : 
* அல்-மீலாத்துன் நபவி, பக்கம் 58
* தப்ஸீர் ரூஹுல் பயான் - அல்லாமா இஸ்மாயில் ஹக்கி  பாகம் 9: பக்கம் 56
* அத்- துர்ரல் முனஸ்ஸம், பக்கம் 100,101]

3.இமாம் யூசுப் பின் இஸ்மாயில் அந்-நப்ஹானி قدس الله سره العزيز (1849-1932) கூறுகின்றார்கள்.

" மக்காவாசிகள் ஒவ்வொரு வருடமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தன்று பெரும் மவ்லித் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர்"

📕 [ நூல்  : ஜவாஹிர் அல்-பிஹார், பக்கம் 122 ] 

4.இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز  (கி.பி. 1703-1762) கூறுகின்றார்கள்,

" ஒவ்வொரு வருடமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினம் மக்காவாசிகளால் கொண்டாடப்பட்டதுடன், அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். "

📕 [ நூல்  : புயூத் அல்-ஹரமைன் ] 

5.மக்கா முக்கர்ரமாவின் அல்-கிப்லா பத்திரிகையில் வெளியாகிய செய்தி இதனை சான்று பகிர்கின்றது.

" நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டங்களை புனித மக்கா நகரில் அவதானிக்கலாம். மக்காவாசிகள் இத்தினத்தை யவ்ம் அல்-ஈத் மவ்லித் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என அழைக்கின்றனர். இத்தினத்தில் மக்கள் சுவையான உணவுகளை தயாரிக்கின்றனர். மேலும், மக்காவின் ஆளுநரும் மற்றும் ஹிஜாஸின் இராணுவத் தளபதி உட்பட அவர்களது படையினர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரிசிப்பதற்கு, கஸீதாக்களை பாடியவர்களாக அணிவகுத்து செல்கின்றனர். புனித ஹரம் அல்-மக்கிக்கும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்திற்கும் இடையில் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். மேலும், அப்பாதையில் இருக்கும் கடைகளும், வீடுகளும் சோடிக்கப்பட்டிருக்கும்.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தில்,முழுநாளும் மக்கள் கஸீதாக்களை ( புகழ்மாலைகளை) பாடிக் கொண்டிருப்பர். ரபீய்யுல் அவ்வல் பிறை 11இல் இஷாவிற்கு பின்னர் மவ்லித் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் "

நூற்கள் : 
* அல்-கிப்லா பத்திரிகை - மக்கா முகர்ரமா
* தரீக்கத் சஞ்சிகை - லாகூர், ஜனவரி 1917, பக்கம் 2-3

6. ஹிஜ்ரி 7ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர்களான செய்க் அபூ அல்-அப்பாஸ் மற்றும் அவரது மகன் அபூ அல்-காஸிம் கூறுகின்றார்கள்,

" பக்தியுள்ள யாத்திரீகர்கள் மற்றும் நாடுகாண் பயணிகள் சாட்சியமளித்துள்ளார்கள். அதாவது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தன்று மக்காவில் கொடுக்கல், வாங்கல், வியாபாரங்கள் கூட நடைபெற மாட்டாது. மக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரிசிப்பதில் வேலையாக இருப்பார்கள்,  அங்கு சன நெருக்கமாக இருக்கும். மேலும் அந்நாளில் புனித கஃபதுல்லாஹ்வை தரிசிப்பதற்காக திறக்கப்பட்டு இருக்கும்."

நூல் : கித்தாப் அல்-துர் அல்-முனஸ்ஸம்

7. ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆசிரியரும், நாடுகாண் பயணியுமான இப்னு பத்துதா, அவரது புத்தாகமான "ரிஹ்லாவில்"  இவ்வாறு கூறுகின்றார்.

" ஒவ்வொரு ஜூம்ஆ தொழுகையின் பின்பும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தன்றும்  பனூ ஷைபா கோத்திரத்தின் தலைவரால் புனித கஃபாஹ் திறக்கப்படுகின்றது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில், மக்கா முகர்ரமாவின் ஷாபி மத்ஹப்பின் தலமை நீதிபதி நஜ்ஜுமுத்தீன் இப்ன் அல்-இமாம் முஹியித்தீன் அல்-தபரி அவர்களால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாருக்கும், மக்காவாசிகளுக்கும் உணவு பரிமாறப்படுகின்றது. "

8.வரலாற்று ஆசிரியர் ஷெய்கு இப்ன் ஸாஹிரா அல்-ஹனபி அவரது 'ஜாமி அல்-லத்தீப் பி பாதில் மக்கதா வ-அகிலா'(பக்கம்-326) என்ற புத்தகத்திலும், இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி அவரது 'கிதாப் அல்-மவ்லித் அல்-ஷரீப் அல்- முஅஸ்ஸம்' என்ற புத்தகத்திலும், வரலாற்று ஆசிரியர் செய்க் அல்-நஹ்வலி அவரது 'அல்ஈலம் பிஆலம் பைத் அல்லாஹ் அல்-ஹரம்' (பக்கம்-205) என்ற புத்தகத்திலும் பின்வருமாறு கூறுகின்றனர்.

" ஒவ்வவொரு வருடமும் ரபீய்யுல் அவ்வல் பிறை 12இல், மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர், மக்கா முக்கர்ரமாவின் நான்கு காதிகளும் (நான்கு மத்ஹபை பிரிநிதித்துவம் செய்யும் நான்கு காதிகள்) மற்றும் மக்கா முக்கராவின் நீதிபதிகள், முக்கியஸ்தர்கள்,செய்குமார்கள், ஸாவியா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அறிஞர்கள் அடங்கிய பெரிய குழுவினர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் இருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தை தரசிப்பதற்காக திக்ர் மற்றும் தஹ்லில் மொழிந்தவர்களாக செல்கின்றனர்.அவர்கள் செல்லும் பாதை விளக்குகளாலும், மெழுகுவர்த்திகளாலும் ஒளியூட்டப்பட்டிருக்கும். அங்குள்ள மக்கள் விசேட உடைகளை அணிந்தவர்களாக பாதை வழியே இருப்பார்கள். அவர்கள் தமது பிள்ளைகளையும் கூட்டிவருவார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ளே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின உரை இடம்பெறும். அதன் பின்னர், உஸ்மானிய சுல்தான்,மக்கா முகர்ராமாவின் அமீர் ஆகியோருக்கு துஆ செய்யப்படும். அதனை ஷாபி மத்ஹபின் காதி நிறைவேற்றுவார். இஷாத் தொழுகைக்கு சற்று முன்னர் அவர்கள் அனைவரும் புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலுக்கு திரும்புவர்.அங்கு மக்காமு இப்ராஹீம் அலைஹிஸ்லாம் அருகில் வரிசையாக உட்காருவர். "

பிற்குறிப்பு :
புனித மக்காவின் ஹரம் ஷரீப் மற்றும் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் மீலாத்துன் நபி தின நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. 1924 ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பிரித்தானியாவின் உதவியுடன் ஹிஜாஸ் பிரதேசம் ஒன்றிணைக்கப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. 1925ஆம் ஆண்டு ஜன்னத்துல் பக்கி உட்பட பல இடங்களில் இஸ்லாமிய வரலாற்று சின்னங்கள் உடைக்கப்பட்டன. மேலும், புனித ஹரம் ஷரீப் மற்றும் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் மீலாத்துன் நபி  தின நிகழ்வுகள் முற்றாக நிறுத்தப்பட்டன.

படம்-1 : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த வீடு (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

படம்- 2 : புனித மக்கா ஹரம் ஷரீபில் நடைபெறும் மீலாத்துன் நபி தின கொண்டாட்டம் - அரிய புகைப்படம் (கி.பி. 1900இன் ஆரம்பப் பகுதி)




Related Posts Plugin for WordPress, Blogger...