Monday, 22 June 2026

ஸெய்யிதுஷ் ஷுஹதா இமாம் ஹுசைன் ‎رضي الله عنه

இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹீதாக்கப்படுதல் பற்றிய நபிமொழி முன்னறிவிப்பு

இஸ்லாமிய வரலாற்றில் பல ஷஹாதத்துகள் (தியாக மரணங்கள்) நிகழ்ந்துள்ளன. ஆனால் அவற்றில் மிகவும் அதிகமாக நினைவுகூரப்படுவது ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் இப்னு அலீ رضي الله عنه அவர்களின் ஷஹாதத்தாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அண்ணல் நபி ﷺ அவர்கள், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்கள் சிறுவராக இருந்த காலத்திலேயே, தமது பேரனான ஹுஸைன் رضي الله عنه அவர்கள் கர்பலாவில் ஷஹீதாக்கப்படுவார்கள் என்று முன்னறிவித்திருந்தார்கள். இந்த விஷயம் பல ஸஹாபாக்களுக்கும் தெரிந்திருந்தது. மேலும், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களும் இதைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள்.

இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹாதத் உலக வரலாற்றில் தனித்துவமான ஒன்றாகும். அது மனிதகுலத்திற்கு உண்மையையும் பொய்யையும் பிரித்தறியும் சிந்தனையை வழங்கியது. ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றியை அடைய முடியும் என்பதை அது எடுத்துக்காட்டியது.

இன்று முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிமல்லாதவர்களும் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களைப் புகழ்ந்து பேசுகின்றனர். உலகில் அமைதியின் முன்னோடியாகக் கருதப்படும் மகாத்மா காந்தி கூட, சுதந்திரப் போராட்டத்தில் உறுதியையும் ஊக்கத்தையும் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் தியாக வரலாற்றிலிருந்து பெற்றதாகக் கூறப்படுகின்றது. அதுபோல, தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத் தலைவரான நெல்சன் மண்டேலாவும் சிறைவாசத்தின் போது இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் வாழ்க்கையிலிருந்து மன உறுதியைப் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதனால்தான் ஒரு கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார்:

“உலகம் விழித்தெழட்டும்;
ஒவ்வொரு சமூகமும் ‘ஹுஸைன் எங்களுடையவர்’ என்று முழங்கும்.”

ஆனால் சிலர், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹாதத்தின் மகத்துவத்தைச் சிறுமைப்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள், யஸீதின் செயல்களை நியாயப்படுத்தவும், இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் நினைவு நிகழ்வுகளை விமர்சிக்கவும் முயன்றனர். சிலர், “யஸீதைப் பற்றி தீயதாகப் பேச வேண்டாம்; அவர் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றும், இன்னும் சிலர் “ஹுஸைன் رضي الله عنه ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்” என்றும் கூறினர். இத்தகைய கருத்துக்கள் மிகவும் தவறானவை.

இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நபி ﷺ அவர்கள் இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் ஷஹாதத்தை முன்கூட்டியே பல இடங்களில் குறிப்பிட்டதாக வரும் ஹதீஸ்களில் ஒன்றை இங்கு காணலாம்.

ஹதீஸ் 1 – ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்களின் அறிவிப்பு


அப்துல்லாஹ் இப்னு நஜீ அவர்கள் தமது தந்தையாரிடமிருந்து அறிவிக்கின்றார்கள்:

ஸெய்யிதினா அலீ இப்னு அபீ தாலிப் رضي الله عنه அவர்களுடன் ஸிஃப்பீன் நோக்கிச் சென்ற பயணத்தில் அவர் உடன் இருந்தேன். அவர்கள் நைனவா (கர்பலா அருகிலுள்ள பகுதி) என்ற இடத்தை அடைந்தபோது உரக்கக் கூறினார்கள்:

“அபூ அப்தில்லாஹ்வே! (ஹுஸைனே!) ஃபுராத் நதிக்கரையில் பொறுமையாக இருங்கள்.
அபூ அப்தில்லாஹ்வே! ஃபுராத் நதிக்கரையில் பொறுமையாக இருங்கள்.”

அப்போது நான் கேட்டேன்:

“அமீருல் முஃமினீனே! இது என்ன விஷயம்?”

அதற்கு ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

“ஒருநாள் நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. நான் கேட்டேன்:

‘அல்லாஹ்வின் தூதரே! யாராவது உங்களை வருத்தினார்களா? ஏன் உங்கள் கண்களில் கண்ணீர் வழிகிறது?’

அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

‘இல்லை. இப்போதுதான் ஜிப்ரீல் عليه السلام என்னிடம் வந்துச் சென்றார். அவர், ஹுஸைன் ஃபுராத் நதிக்கரையில் கொல்லப்படுவார் என்று எனக்குத் தெரிவித்தார்.’

பின்னர் ஜிப்ரீல் عليه السلام என்னிடம்:

‘ஹுஸைன் ஷஹீதாக்கப்படவுள்ள இடத்தின் மண்ணை உங்களுக்கு நுகரச் செய்யவா?’ என்று கேட்டார்.

நான் ‘ஆம்’ என்றேன்.

உடனே அவர் ஒரு கைப்பிடி மண்ணைக் கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். அதை பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் பெருகுவதை என்னால் தடுக்க முடியவில்லை.”

ஆதார நூற்கள் 📕 முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் ,இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رضي الله عنه, கிதாப் அலீ இப்னு அபீதாலிப், பாகம் 01,பக்கம் 255,ஹதீஸ் # 255

* இமாம் இப்னு அபீஷைபா رضي الله عنه , முஸன்னப் அபீ  ஷைபா, பாகம் 08,பக்கம் 378,ஹதீஸ் # 37367

* இமாம் மிஸ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ, தஹ்தீப் அல் கமால்,பாகம் 01,பக்கம் 407

* இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி رَحِمَهُ ٱللَّٰهُ,தஹ்தீப் அத்தஹ்தீப்,பாகம் 02,பக்கம் 300

* இமாம் முனாவி رَحِمَهُ ٱللَّٰهُ, பத்ஹுல் கதீர் ,பாகம் 01,பக்கம்  204-205

* இமாம் ஜியாவுத்தீன் மக்திஸி,அல் முக்தரா,பாகம் 02,பக்கம் 375,ஹதீஸ் எண் # 758

மேற்கண்ட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு:

ஹதீஸ் எண் 02:

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப்  رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்:

இமாம் அபூ நுஐம் அவர்கள் ஹழ்ரத்  அஸ்பக் பின் நபாதா (رحمه الله) அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:

"நாங்கள் அமீருல் முஃமினீன்  ஸெய்யிதினா மௌலா அலி رضي الله عنه அவர்களுடன் ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் கப்ர் அமைந்துள்ள இடத்தை அடைந்தோம். அப்போது ஸெய்யிதினா அலி رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

'இங்கேதான் அந்த ஷஹீதுகளின் குதிரைகள் கட்டப்படும்.
இங்கேதான் அவர்களின் ஒட்டகங்கள் நிறுத்தப்படும்.
இங்கேதான் அவர்களின் இரத்தங்கள் சிந்தப்படும்.
முஹம்மது ﷺ அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த மைதானத்தில் ஷஹீத்களாகுவார்கள்.
அவர்களுக்காக வானமும் பூமியும் அழும்.'


ஆதாரம்:

  • இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ,  கஸாயிஸுல் குப்ரா ,பாகம் 2, பக்கம் 214
  • இமாம் அபூநுஐம் رَحِمَهُ ٱللَّٰهُ,  தலாயிலிந் நுபுவ்வா, பாகம் 2, பக்கம் 147


ஹதீஸ் எண் : 3

حدثنا مؤمل حدثنا عمارة بن زادان حدثنا ثابت عن أنس بن مالك أن ملك القطر استأذن ربه أن يأتي النبي فأذن له، فقال لأم سلمة املكي علينا الباب لا يدخل علينا أحد، قال وجاء الحسين ليدخل فمنعته، فوثب فدخل فجعل يقعد على ظهر النبي صلى الله عليه وسلم وعلى منكبه وعلى عاتقه، قال: فقال الملك للنبي أتحبه؟. قال نعم. قال: أما إن أمتك ستقتله، وإن شئت أريتك المكان الذي يقتل فيه. فضرب بيده فجاء بطينة حمراء، فأخذتها أم سلمة فصرتها في خمارها. قال قال ثابت: بلغنا أنها كربلاء


ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக்  رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:


ஒருமுறை மழைக்குப் பொறுப்பான வானவர் (மலக்கு) அண்ணல் நபி ﷺ அவர்களின் திருச்சந்நிதிக்கு வந்தார். அப்போது ஸெய்யிதினா இமாம் ஹுசைன் رضي الله عنه அவர்கள் வந்து அண்ணல் நபி ﷺ அவர்களின் மடியில் அமர்ந்தார்கள். உடனே அண்ணல் நபி ﷺ அவர்கள் அவர்களை முத்தமிட்டு, அன்புடன் அரவணைக்கத் தொடங்கினார்கள்.


அந்த வானவர் கேட்டார்: “யா ரசூலல்லாஹ் ﷺ! தாங்கள் இவரை மிகவும் நேசிக்கிறீர்களா?”


அண்ணல் நபி ﷺ அவர்கள்: “ஆம்” என்று பதிலளித்தார்கள்.


அப்போது அந்த வானவர் கூறினார்: “தங்களுடைய உம்மத்தில் சிலர் இவரைக் கொலை செய்து விடுவார்கள். தாங்கள் விரும்பினால், அவர் ஷஹீதாக்கப்படவிருக்கும் இடத்தின் மண்ணை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்.”


பின்னர் அந்த வானவர் சிவப்பு (செந்நிற) மண்ணை கொண்டு வந்து கொடுத்தார்.


அந்த மண்ணை உம்முல் முஃமினீன் ஸெய்யிதத்துனா உம்மு ஸலமா رضي الله عنها அவர்கள் தமது ஆடையில் பாதுகாத்து வைத்துக் கொண்டார்கள்.


ஸெய்யிதினா ஸாபித் அல்-புனானி رحمه الله அவர்கள் கூறுகின்றார்கள்:


“எங்களுக்கு வந்த செய்திப்படி, அந்த இடம் கர்பலா ஆகும்.”


ஆதார நூற்கள் 📕 முஸ்னத் அபூ யஃலா,பாகம் 6,பக்கம் 129,ஹதீஸ் எண்: 3402

தமிழாக்கம்:

இந்த ஹதீஸ் பின்வரும் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது:

  • இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رحمه الله — அல்-முஸ்னத், உம்மு ஸலமா رضي الله عنها அவர்களின் ஹதீஸ், பாகம் 10, பக்கம் 180, ஹதீஸ் எண்: 26586.
  • இமாம் அல்-பஸ்ஸார் رحمه الله — அல்-முஸ்னத், ஹதீஸ் எண்: 2642.
  • இமாம் அல்-ஹைஸமி رحمه الله — மஜ்மஅுஸ் ஸவாயித், பாகம் 9, பக்கம் 217, ஹதீஸ் எண்: 15111.
  • நவீன கால ஸலபி வஹாபிய அறிஞர் நாசிருத்தீன் அல்-அல்பானி -  ஸில்சிலத்துல் அஹாதீஸ் அஸ்-ஸஹீஹா, பாகம் 2, பக்கங்கள் 465–466.

அல்பானி   அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி:

“இந்த ஹதீஸ், இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஸஹீஹானது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த ஹதீஸ் பின்வரும் நூல்களிலும் இடம்பெற்றுள்ளது:

  • இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رحمه الله — ஃபதாயிலுஸ் ஸஹாபா, பாகம் 2, பக்கங்கள் 965–966, ஹதீஸ் எண்: 1357.
  • இமாம் தபரானி رحمه الله — அல்-முஅ்ஜமுல் கபீர், பாகம் 3, பக்கம் 107, ஹதீஸ் எண்: 6814 (அல்லது 2814).
  • இமாம் இப்னு ஹிப்பான் رحمه الله — ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பாகம் 15, பக்கம் 142, ஹதீஸ் எண்: 6742.

இந்த ஹதீஸ் ஹஸன் (நல்ல தரமுடையது) எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல்:

  • இமாம் அபூ நுஐம் رحمه الله — தலாயிலுன் நுபுவ்வா, பாகம் 1, பக்கம் 553, ஹதீஸ் எண்: 492.
  • இமாம் பய்ஹகீ رحمه الله — தலாயிலுன் நுபுவ்வா, பாகம் 6, பக்கம் 469.
  • இமாம் தஹபி رحمه الله — ஸியரு அஅ்லாமின் நுபலா, பாகம் 3, பக்கங்கள் 288–289.
  • இமாம் அல்-மிஸ்ஸி رحمه الله — தஹ்தீபுல் கமால், பாகம் 6, பக்கம் 408.
  • இமாம் ஹுஸாமுத்தீன் அல்-ஹிந்தி رحمه الله — கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண்: 37672.
  • இமாம் ஸுயூதி رحمه الله — அல்-கஸாயிஸுல் குப்ரா, பாகம் 2, பக்கம் 450.

இந்நூல்கள் அனைத்தும் இமாம் ஹுசைன் رضي الله عنه அவர்களின் கர்பலா ஷஹாதத் குறித்து முன்னறிவிப்பு இடம்பெற்ற இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளன.

Wednesday, 17 June 2026

நாயகத் தோழர் ஹழ்ரத் முஆவியா ‎رضي الله عنه

ஆரம்பகால ஷாதிலி ஸூபி  மகான்கள் நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா முஆவியா رضي الله عنه  அவர்கள் குறித்து வழங்கிய உரைக்குறிப்புகள்.


இமாம் அபுல் ஹசன் அல்-ஷாதிலி (மறைவு : கி.பி. 1258) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஷாதுலிய்யா   தரீக்காவின் ஆரம்பகால மகான்கள், அண்ணல் நபி  ﷺ அவர்களது  தோழர்களுக்கு (ஸஹாபாக்கள்) இடையே ஏற்பட்ட வரலாற்று ரீதியான கருத்து வேறுபாடுகளை, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் முறையான இறையியல் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அணுகினர். 'கஃபுல் லிஸான்' (குறை கூறுவதிலிருந்து நாவைக் காப்பது) மற்றும் 'இம்ஸாக்' (அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه  மற்றும் ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه  ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட விவகாரங்களில் மௌனம் காப்பது) ஆகிய கொள்கைகளில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه  அவர்களே நேர்வழி நின்ற கலீஃபா (இமாமுல் ஹக்) மற்றும் சத்தியத்திற்கு மிக நெருக்கமானவர் என்றும்; அதே நேரத்தில், ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  உதுமான் துன்னூரைன் رضي الله عنه அவர்களின் கொலைக்கான பழிவாங்கும் விவகாரத்தில் தனது சுய சட்ட ஆய்வின் (இஜ்திஹாத்) அடிப்படையில் தவறான ஒரு முடிவை எடுத்தாரே தவிர, அது அவரை ஒரு ஸஹாபி என்ற தகுதியிலிருந்தோ, வஹி எழுதக்கூடிய எழுத்தாளர் என்ற சிறப்பிலிருந்தோ அல்லது முஃமின் (இறையம்பிக்கையாளர்) என்ற நிலையிலிருந்தோ தரம் தாழ்த்திவிடாது என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டனர் .


ஆரம்பகால ஷாதுலியா தரீக்கத்  மகான்களின் நூல்களிலிருந்து பெறப்பட்ட முக்கிய உரைக்குறிப்புகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. இமாம் இப்னு அதாஇல்லாஹ் அல்-இஸ்கந்தரி ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ (மறைவு : கி.பி. 1309)

தனது 'ஹிகம்'  நூலின் மூலம் உலகப் புகழ்பெற்றவரான, ஷாதுலியா தரீக்காவின் மூன்றாவது தலைமை சற்குருவான இமாம் இப்னு அதாஇல்லாஹ் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் , தனது 📕  " மிஃப்தாஹ் அல்-ஃபலாஹ் வ மிஸ்பாஹ் அல்-அர்வாஹ்"  (வெற்றியின் திறவுகோலும் ஆன்மாக்களின் விளக்கும்) என்ற அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின்  கொள்கை விளக்க நூலில் ஸஹாபாக்கள் குறித்த கோட்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

மூல உரை:
'மிஃப்தாஹ் அல்-ஃபலாஹ்' நூலின் கொள்கை விளக்கப் பிரிவில், ஸஹாபாக்கள் குறித்து அஷ்அரீ/ஸூபி மரபின் அடிப்படை நம்பிக்கையை இமாம் இப்னு அதாஇல்லாஹ் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் :

"அல்லாஹ்வின் தூதருடைய ( ﷺ ) தோழர்களுக்கு இடையே நடந்த விவகாரங்களைப் பற்றி பேசுவதிலிருந்து நாம் நம் நாவுகளைக் காத்துக் கொள்கிறோம். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர்களுக்குப் பிறகு சிருஷ்டிகளிலேயே மிகச் சிறந்தவர்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் தன் அடியார்களின் இருதயங்களை நோக்கினான்; அவற்றில் எம்பெருமானார்  முஹம்மது ( ﷺ ) அவர்களின் இருதயத்தையே மிகச் சிறந்த இருதயமாகக் கண்டு, அவரைத் தனக்காகத் தேர்ந்தெடுத்து, தனது தூதை வழங்கி அனுப்பினான்.

 அவருக்குப் பிறகு, மற்ற அடியார்களின் இருதயங்களை அல்லாஹ் நோக்கினான்; அவற்றில் அவருடைய தோழர்களின் இருதயங்களையே மனிதர்களில் மிகச் சிறந்த இருதயங்களாகக் கண்டு, அவர்களைத் தன் தூதரின் உதவியாளர்களாக ஆக்கினான்...
 
அவர்களுக்கு இடையே ஏற்பட்ட போர்கள் அனைத்தும் 'இஜ்திஹாத்' (மார்க்க சட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சுய ஆய்வு முடிவு) என்பதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. அவர்களில் சரியான முடிவை அடைந்தவருக்கு இரு நன்மைகளும், தவறான முடிவை அடைந்தவருக்கு ஒரு நன்மையும்கூட உண்டு; மேலும் அவர்களின் தவறு மன்னிக்கப்பட்ட ஒன்றாகும்."


2. இமாம் அஹ்மத் ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு : கி.பி. 1493)

இமாம் அஹ்மது ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள்   காலத்தால் பிற்பட்டவராக இருந்தாலும், ஷாதுலி தரீக்காவின் ஒழுங்குமுறை நெறியாளராக (முஹ்தஸிப் அத்-தரீக்கா) என்ற மேன்மைமிகு சிறப்பினால் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுடைய விளக்கவுரைகளே ஆரம்பகால ஷாதுலியா தரீக்காவின் ஒழுக்க நெறிகளுக்கு இலக்கணமாகத் திகழ்கின்றன. தனது புகழ்பெற்ற நூலான 📕 கவாயித் அத்-தஸவ்வுஃப் (தஸவ்வுஃபின் கோட்பாடுகள்) என்பதில், ஆன்மீகத் தூய்மை என்பது ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள் மற்றும் இதர ஸஹாபாக்கள் மீது காட்டும் மரியாதையோடு நேரடியாகத் தொடர்புடையது என்று விளக்குகிறார்.
மூல உரை:
'கவாயித் அத்-தஸவ்வுஃப்' நூலின் விதி 43 மற்றும் விதி 96 ஆகியவற்றில் இமாம் அஹ்மது ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள்  எழுதுகிறார்கள்:

 "தஸவ்வுஃப் என்பது மார்க்கச் சட்டங்களை (ஷரீஅத்) பேணுவதிலும், எந்தவொரு முஃமினுக்கு எதிராகவும், குறிப்பாக இறைத்தூதரின் தோழர்களுக்கு எதிராகவும் உள்ள குரோதங்களிலிருந்து இதயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள் அல்லது எந்தவொரு ஸஹாபாவையும் இழிவுபடுத்துபவர் ஆன்மீக எதார்த்தத்தின் (தஹ்கீக்) உயர் நிலையிலிருந்து வீழ்ந்துவிடுகிறார். 

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه  மற்றும் ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள்  இடையே நடந்த விவகாரங்களுக்கான தீர்ப்பு, உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களின் இந்த கூற்றே ஆகும்: 'அந்த இரத்தங்களிலிருந்து அல்லாஹ் நம் கைகளைத் தூய்மையாக வைத்திருந்தான், எனவே நாமும் நம் நாவுகளை அதிலிருந்து தூய்மையாக வைத்திருப்போம்.'"

📕  'ஷரஹ் அல்-அகீதா அத்-தஹாவிய்யா' நூலில்:
இமாம் தஹாவி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் உன்னதமான கொள்கை விளக்க நூலுக்கு ( அகீதா தஹவியா) இமாம் ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஒரு விரிவுரை எழுதியுள்ளார்கள்; இது ஷாதுலிய்யா  ஜாவியாக்களில்  ஒரு முக்கிய பாடப்புத்தகமாகும். 

அதில் ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه அவர்கள்  பற்றி இமாம் ஸர்ரூக் ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகிறார்கள்:

"ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه இறைவஹியை எழுதியவர்களில் ஒருவராக (காதிப் அல்-வஹி) இருந்தார்கள். அண்ணல் நபி ( ﷺ ) அவர்கள் அவருக்காக, 'யா அல்லாஹ்! இவரை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக; மேலும் இவரின் மூலம் பிறருக்கும் நேர்வழி காட்டுவாயாக' என்று பிரார்த்தித்தார்கள். எனவே, அவரை நேசிப்பது நபி ( ﷺ) அவர்களை நேசிப்பதன் ஒரு பகுதியாகும்; அவருடைய தூய எண்ணங்களை விமர்சிப்பது ஆன்மீக நோயின் அறிகுறியாகும்."
3. இமாம் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி ஷாதுலி رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு : கி.பி. 1287)

இமாம் அபுல் ஹசன் அல்-ஷாதிலியின் நேரடி வாரிசான இவர்கள் , தனக்கெனப் புத்தகங்கள் எதையும் எழுதவில்லை. இவருடைய போதனைகள் வாய்மொழியாகப் பரவி, இவருடைய மாணவரான இப்னு அதா - அல்லாஹ்வின் லதாயிஃப் அல்-மினன் (நுட்பமான அருட்கொடைகள்) என்ற நூலின் மூலம் பதிவு செய்யப்பட்டன.

 அவரிடமிருந்து வந்த கருத்து:
'லதாயிஃப் அல்-மினன்' நூலில், அல்-முர்ஸி அவர்கள் பிரபஞ்சத்தின் ஆன்மீகப் படிநிலைகளை விவரிக்கும்போது, உள்நாட்டுப் போர்கள் (ஃபித்னா) எதுவாக இருந்தாலும், ஸஹாபாக்களின் நிலையை அதற்குப் பின் வந்த அனைத்து  இறைநேசர்களை விடவும் மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறார்:
"அல்லாஹ்வின் தூதருடன் ( ﷺ) இணைந்து பயணித்த ஸெய்யிதினா அமீர்  முஆவியா رضي الله عنه  அவர்களின் குதிரையின் நாசியில் நுழைந்த தூசியானது, உமர் இப்னு அப்துல் அஜீஸ் போன்ற ஆயிரம் மனிதர்களை விடச் சிறந்தது."

*குறிப்பு: அமீருல் முஃமினீன் பில் ஹதீத் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் ஷெய்கனா  மஃரூஃப் அல்-கர்கி رَحِمَهُ ٱللَّٰهُ  போன்ற ஆரம்பகால அறிஞர்களுக்குரிய இந்தக் கூற்றை, அல்-முர்ஸி மற்றும் ஆரம்பகால ஷாதிலி அறிஞர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டினர். ஃபித்னாவின் போது ஏற்பட்ட அரசியல் பிழைகள் எத்தகையதாக இருந்தாலும், 'ஸுஹ்பத்' (நபித்தோழமை) என்ற ஆன்மீக அந்தஸ்தை எதுவும் மிஞ்ச முடியாது என்பதை விளக்கவே இக்கூற்று பயன்படுத்தப்பட்டது).


Wednesday, 10 June 2026

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் பின் அப்ஃபான் ‎

🌹அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه 🌹

பெருமானார்  ﷺ அவர்களது இரு புதல்வியரை மணமுடித்தவர்கள் என்ற சிறப்புப் பெயர் பெற்ற அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது ஷஹாதத்,

ஜுபைர் இப்னு பக்கர் அவர்கள் நவின்றார்கள் , " ஸெய்யிதினா உஸ்மான் பின் அப்ஃபான் رضي الله عنه அவர்கள் ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு, துல்ஹஜ் பிறை 18 அன்று லுஹர் தொழுகைக்குப் பின்னர் ஜும்மாவுடைய நாளில் ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்கள் 82 வயதை எட்டி இருந்தார்கள்.அன்றைய தினம் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.

ஆதார நூல் 📕 இமாம் தபரானீ رَحِمَهُ ٱللَّٰهُ, மஜ்ம உஸ்ஸவாயித்,பக்கம் 192

Thursday, 4 June 2026

கதீர் கும் ஹதீதின் விளக்கம்

கதீர் கும் ஹதீதில் உள்ள மவ்லா என்னும் சொல்லின் விளக்கம் ,

முஹக்கிக் இமாம் ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது லம்ஆத் அல் தன்கீஹ் ( மிஷ்காத் ஷரீபின் ஷரஹ் ) ல் எழுதுகின்றார்கள் , ஹதீதில் வரும் ' மவ்லா' என்ற சொல்லின் பொருள் உதவியாளர் அல்லது நேசர் என்பதாகும் .

ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மேலும்  ,ஸுரா மாய்தாவின் 55 ஆயத்தின் மவ்லா அலீ  كرم الله وجهه அவர்கள் குறித்து இறங்கியது என்றும் கூறுகின்றார்கள்.

சிராஜுல் ஹிந்து ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி ஸூபி காதிரி قدس الله سره العزيز   அவர்கள் ஹதீதில் வந்துள்ள மௌலா என்றால் நேசர் என்று தமது தப்ஸீர் அஜீஜியாவில்  என்று விவரிக்கின்றார்கள்.
சைபே சிஷ்தியா நூலின் மூலம் காதியானிகளை விரட்டி அடித்த கண்மணி நாயகத்தின் திருப்பேரர் ஸெய்யது பீர் மெஹர் அலீ ஷாஹ் சிஷ்தீ கோல்ராவீ قدس الله سره العزيز தமது தப்ஸீர் மா பயன
 ஸுன்னி வஷியா வில் மவ்லா என்றால் நேசர் அல்லது உதவியாளர் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். நிச்சயமாக தலைவர் அல்லது ஸர்தார் அல்ல
இமாமே அஹ்லே ஸுன்னத் அஃலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் காதிரி قدس الله سره العزيز ,அவர்கள் முஹத்திஸ் இமாம் பத்ருத்தீன் அய்னீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களை மேற்கோள் காட்டி மவ்லா என்றால் உதவியாளர் என்று பொருள் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்னும் இந்தாளை " ஈதே  கதீர் " என்றழைக்கும் வழக்கம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்களான ஷியா ராபிழியாக்களது வழிமுறையாகும்.

இமாம் முஹம்மது பின் யஹ்யா மாலிக் ( மறைவு ஹிஜ்ரி 741) அவர்கள் எழுதுகின்றனர்,

 " ஷியாக்கள் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது ஷஹாதத் நாளை ஈத் நாளாக கடைபிடித்து அதற்கு " ஈதே  கதீர் " என்றழைத்தனர்.

ஈதே  கதீர் என்று கொண்டாடும் பழக்கம் ஸஹாபிகளை தூற்றும் ஷியாக்களது வழிமுறை .பித்அத் வாதிகளது வழிமுறைக்கு மாற்றமாக நடப்பது தான் சத்திய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாத்தின் வழிமுறை.

ஆதார நூல் 📕 தம்ஹீத் அல் பயான் 
பீ மகாலத் ஷஹீத் அல் உஸ்மான் ,பாகம் 1, பக்கம் 186

Thursday, 21 May 2026

இல்மின் சிறப்பு

🌹  இல்மின்( கல்வியின்)  சிறப்பு 🌹

ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " இல்மாகிறது செல்வத்தை விட சிறந்தது. கல்வி உங்களை பாதுகாக்கின்றது ,மாறாக நீங்கள்தான் செல்வத்தை பாதுகாக்கின்றீர்கள். இல்மாகிறது செயல்படுத்துவதன் மூலம் அதிகரிக்கின்றது, ஆனால் செல்வமோ செலவு செய்தால் குறையும் " 

ஆதார நூல் 📕 கன்ஸுல் உம்மால்,பாகம் 10,பக்கம் 263

Related Posts Plugin for WordPress, Blogger...