முகப்பு

எல்லாப்  புகழும் அல்லாஹ்வுக்குரியது. ஸலவாத் என்னும் கருணையும் ஸலாம் என்னும் ஈடேற்றமும் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா صلى الله عليه وآله وصحبه وسلم அவர்கள் மீதிலும் அவர்களது கிளையினர் ,தோழர்கள் அனைவர்கள் மீதிலும் உண்டாவதாக .

இக்காலத்தில் கற்றோர் சிலர் உண்மைக்கு மாறாக விஷமப் பிரசாரஞ் செய்வது வருந்தத்தக்கது .கல்வியின் முன்னேற்றத்தால் நன்மைகள் பல உண்டாகியிருப்பினும் இக்கலியுகத்தில் உண்மைக்கும் ,சத்தியத்திற்கும் பஞ்சமாகவே இருக்கின்றது . அத்தகைய விஷமப் பிரச்சாரங்களுள் அவ்லியாக்களை ,குத்புமார்களை நிந்திப்பதும் , கப்ரு ஜியாரத்தை 'கப்ரு வணக்கம் ,அவ்லியா பூஜை ' என்று இழித்துக் கூறுவதும் ,கராமத்துக்களைக் கேலி செய்து பழிப்பதும் ஒன்றாகும் .

உண்மையை அறியாதவர்கள் தான் அவ்வாறு பிதற்றித் திரிகிறார்களென்றால்,மார்க்கம் அறிந்த ஸுன்னத் ஜமாத் உலமாக்கள் பலர் கூட உண்மையைக் கூறாது வாய்மூடி இருப்பது தான் விந்தையாக இருக்கின்றது. பஸாது குழப்பதிற்கு அஞ்சி மௌனமாக இருப்பவர்கள் சுயமாகத் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறாவிட்டாலும் அக்கூற்றை மறுத்து முன்னோர்கள் கொடுத்திருக்கும் ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்பையாகிலும் எடுத்துக் காண்பிக்கலாமே. 

அதன் காரணமாக அவர்கள் உண்மையை உணர்ந்து நேரான பாதையில் நடக்க அனுகூலமாயிருக்கும். அவர்களது விஷமப் பிரச்சாரத்தில் கற்றோர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தாது கண்மூடித்தனமாயிருப்பது நேர்மையன்று.பேயன் எறியும் கல்லும் அபாயத்தை விளைவிக்குமாகையால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறே விஷமத்தனமான பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி மெய் இன்னதென மக்களுக்கு எடுத்துரைத்துக் காட்ட வேண்டியது மார்க்கம் அறிந்த ஸுன்னத் ஜமாத் உலமாக்களின் கடமையாகும். 



  • வலி என்பவர் யார் ? 
  • அன்னாரது மகத்துவம் என்ன ? 
  • வலியின் ஆரம்பம் என்ன ? 
  • மவுத்துக்குப் பின்னும் அவர்களுக்கு ஹயாத்துண்டா ? 
  • கறாமத் என்னும் அற்புதங்கள் காட்ட அவர்களுக்கு வல்லமையுண்டா ?
  • அவர்கள் பால் வஸீலா எனும் உதவி தேடலாமா ?
  •  நாட்ட தேட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க அவர்களுக்கு தத்துவமுண்டா ?
  • கபூருக்கு எதிரே கைகட்டி ஜியாரத் செய்யலாமமா ? 
  • கொடி ஏற்றலாமா ?
  • உரூஸ் ,கந்தூரி நடத்தலாமா ?
  • கபுறுகளையோ அவற்றின் வாசற்படியையோ முத்தமிடலாமா ?
  • போர்வை ,பூ ,புஷ்பம் போடலாமா ?


 என்பன தற்போது விவாதத்திற்கு உரியவையாயிருக்கின்றன.இவை போன்ற ஐயவினாக்களை தெளிந்து தெரிய குரான் ,ஹதீத் ,இஜ்மா ,கியாஸ் கொண்டும் ,சரித்திர ஆதாரங் கொண்டும் அத்தாட்சிகள் தருகின்றோம் .அறிவுடையோர் அறிந்துணர்க !

விளங்க சக்தியற்றோர் ளாஹிர் ,பாத்தின் இவ்விரண்டும் ஒருங்கேயமைந்த அறிஞர் பெருமக்களான உண்மை உலமாக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்க .



                 فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ


நீங்கள் அறியாதவர்களாய் இருந்தால் (முஷாஹதாவுடைய ) அறிவு வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்   (16:43)              

 என்பது திருமறை போதனையாகும் .


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...