Wednesday, 9 September 2026

அஹ்லே மக்காவும் மவ்லிதுந்நபியும்

🌹மக்கா மக்களின் இஜ்மா : 12 ரபீஉல் அவ்வல் 🌹

மவ்லித் மறுப்பாளர்கள் தமது ஆதாரங்களில்  மேற்கோள்களில் திரித்துக் கூறுகின்றனர். பாதி அல்லது முழுமையற்ற கருத்தையே கூறுகின்றனர்; முழுமையாகக் கூறுவதில்லை.

ஹழ்ரத் இமாம் முல்லா அலி காரி அல்-ஹனஃபி رحمه الله அவர்கள், 1014 ஹிஜ்ரியில் மறைந்தவர், இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்:

சில அறிஞர்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பிறப்பு ஸஃபர் மாதத்தில் என்றும், ரபீஉல் ஆகிர் மாதத்தில் என்றும், ரஜப் மாதத்தில் என்றும் கூறியுள்ளனர். இவை சரியான கருத்துகள் அல்ல.

மேலும், சிலர் ரமழான் மாதம் என்று கூறி, ஹழ்ரத் இப்னு உமர் رضي الله عنه அவர்களின் ஒரு அறிவிப்பை ஆதாரமாக முன்வைத்துள்ளனர். ஆனால் அதன் ஸனத் (அறிவிப்பாளர் தொடர்) ஸஹீஹானது அல்ல.

மிகவும் வியப்பிற்குரியதும் விசித்திரமானதுமான ஒரு கருத்தாக, நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பிறப்பு ஆஷூரா நாளில் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இமாம்கள் கூறுகின்றார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் புனிதப் பிறப்பு முஹர்ரம் மாதத்திலும் நடைபெறவில்லை; ரஜப் மாதத்திலும் நடைபெறவில்லை; ரமழான் மாதத்திலும் நடைபெறவில்லை.”

இதன் நோக்கம், யூகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பவர்கள், அண்ணல் நபி  ﷺ அவர்களை வேறு காலத்தையும் இடத்தையும் கொண்டு சிறப்பித்துக் காட்டுவதாக எண்ணிவிடக் கூடாது என்பதாகும். ஏனெனில் காலமும் இடமும் ஏந்தல் நபி  ﷺ அவர்களின் புனிதத் திருமேனியால் தாமே சிறப்புப் பெற்றன.

மேலும்,

அல்லாஹ்வின் ஹபீப்  ﷺ அவர்களின் புனிதப் பிறப்பு 12 ரபீஉல் அவ்வல் அன்று நிகழ்ந்தது என்பதே மக்கா மக்களின் இஜ்மாவாகும். ஏனெனில், அவர்கள் இதே தேதியில் பூமான் நபி  ﷺ அவர்களின் புனிதப் பிறப்பிடமான “மகாம்-எ-மவ்லித் ஷரீஃப்” இடத்தை ஸியாரத் செய்வதற்காக அங்கு வந்து கூடுவார்கள்.

பிரபலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து என்னவெனில், அண்ணல் நபி  ﷺ அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தின் 12ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று பிறந்தார்கள் என்பதாகும். இதுவே இமாம் இப்னு இஸ்ஹாக் رحمه الله (151 ஹிஜ்ரி) மற்றும் பிற அறிஞர்களின் கருத்துமாகும்.

 ஆதார நூல் 📕 அல் மவ்ரித் அல் ராவி பீ அல் மவ்லித் அந் நபவி , பாகம் 1, பக்கங்கள் 435, 436, 438

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...