📌 அல்லாஹ்வின் வேதத்திலோ, அண்ணல் நபி ﷺ அவர்களின் ஸுன்னத்திலோ ஒரு சட்டப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கவில்லையெனில், ஸாலிஹீன்களின் தீர்ப்பின்படி செயல்படுங்கள்!
இமாம் அபூ அப்துர் ரஹ்மான் அந்நஸாயீ رحمه الله (மறைவு: ஹிஜ்ரி 303) அவர்கள், இந்த ஹதீஸைத் தமது நூலில் “அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின்படி தீர்ப்பளித்தல்” என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ளார்கள்.
📖 ஹதீஸ்
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الشَّيَانِيِّ، عَنِ الشَّعْبِي، عَنْ شُرَيْحٍ ، أَنَّهُ كَتَبَ إِلَى عُمَرَ يَسْأَلُهُ ، فَكَتَبَ إِلَيْهِ أَنِ اقْضِ بِمَا فِي كِتَابِ اللَّهِ ، فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللهِ ، فَبِسُنَّةِ رَسُولِ اللهِ ، فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ، وَلَا فِي سُنَّةِ رَسُولِ اللهِ ﷺ فَاقْضِ بِمَا قَضَى بِهِ الصَّالِحُونَ ، فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللهِ، وَلَا فِي سُنَّةِ رَسُولِ اللهِ ، وَلَمْ يَقْضِ بِهِ الصَّالِحُونَ، فَإِنْ شِئْتَ فَتَقَدَّمْ، وَإِنْ شِئْتَ فَتَأَخَّرْ، وَلَا أَرَى التَّأْخُرُ إِلَّا خَيْرًا لَكَ، وَالسَّلامُ عَلَيْكُمْ .
ஹழ்ரத் ஷுரைஹ் رحمه الله அவர்கள், ஒரு சட்டப் பிரச்சினை தொடர்பாக அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களுக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள். அதற்குக் கலீஃபா உமர் رضي الله عنه அவர்கள் பின்வருமாறு பதில் எழுதினார்கள்:
“அல்லாஹ்வின் வேதத்தில் என்ன தீர்ப்பு இருக்கிறதோ, அதன்படி தீர்ப்பளியுங்கள். அல்லாஹ்வின் வேதத்தில் அதற்கான தீர்ப்பு கிடைக்கவில்லையெனில், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் ஸுன்னத்தின்படி தீர்ப்பளியுங்கள்.
அல்லாஹ்வின் வேதத்திலும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் ஸுன்னத்திலும் அதற்கான தீர்ப்பு கிடைக்கவில்லையெனில், ஸாலிஹீன்கள் (நல்லோர்கள்) எதன்படி தீர்ப்பளித்தார்களோ, அதன்படி தீர்ப்பளியுங்கள்.
அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லை, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் ஸுன்னத்திலும் இல்லை, ஸாலிஹீன்களும் அதற்கான தீர்ப்பை வழங்கவில்லை என்றால், நீங்கள் விரும்பினால் முன்னேறித் தீர்ப்பளியுங்கள்; விரும்பினால் தீர்ப்பளிப்பதைத் தவிர்த்து நில்லுங்கள். தீர்ப்பளிப்பதைத் தவிர்த்து நிற்பதே உங்களுக்கு நன்மையானது என்றே நான் கருதுகிறேன்.
உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்!”
📚 ஆதாரம்: ஸுனன் அந்நஸாயீ, ஹதீஸ் எண்: 5399.
---
📚 இமாம் ஜலாலுத்தீன் அஸ்-ஸுயூத்தி رحمه الله அவர்களின் விளக்கம்
இமாம் ஜலாலுத்தீன் அஸ்-ஸுயூத்தி رحمه الله (மறைவு: ஹிஜ்ரி 911) அவர்கள், இந்த ஹதீஸுக்கான விளக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
فاعله (فليجتهد رأيه) أي إن كان له أهلاً وهذا الحديث دليل على جواز الاجتهاد، نعم إنه موقوف لكنه في حكم الرفع على مقتضى القواعد بقي أنه يدل على تقديم التقليد بالسلف الصالحين كالخلفاء الأربعة على الرأي والقياس فليتأمل وكأنه لهذا حمل الحديث المصنف على صورة الاتفاق ليكون إجماعاً والله تعالى أعلم .
🌿 விளக்கவுரையின் தமிழாக்கம்
“فليجتهد رأيه”
இதன் பொருள்: “அவர் தனது கருத்தின்படி இஜ்திஹாத் செய்யட்டும்” என்பதாகும். அதாவது, ஒருவருக்கு இஜ்திஹாத் செய்வதற்கான தகுதியும் அறிவாற்றலும் இருந்தால், அவர் தனது அறிவுக்கும் புரிதலுக்கும் ஏற்ப இஜ்திஹாத் செய்யலாம்.
இந்த ஹதீஸ், இஜ்திஹாத் செய்வது அனுமதிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமாகும்.
ஆம், இந்த அறிவிப்பு மவ்கூஃப் (நபி ﷺ அவர்களிடம் நேரடியாக முடிவுறாமல், ஒரு ஸஹாபியின் கூற்றில் முடிவடையும் அறிவிப்பு) ஆகும். இருப்பினும், ஹதீஸ் விதிமுறைகளின் அடிப்படையில் இது மர்பூ (நபி ﷺ அவர்களிடம் தொடர்புபடுத்தப்படும் அறிவிப்பு) என்பதன் சட்டநிலையைப் பெற்றுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பு மற்றொரு கருத்தையும் உணர்த்துகிறது. அதாவது, நான்கு கலீஃபாக்கள் போன்ற ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைகளையும் தீர்ப்புகளையும், ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்கும் கியாஸுக்கும் (ஒப்பீட்டு அடிப்படையிலான சட்டத் தீர்மானத்திற்கும்) முன்னுரிமை அளித்துப் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.
இந்த விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும், இதன் காரணமாகவே நூலாசிரியர் இந்த ஹதீஸை அறிஞர்களின் ஏகோபித்த உடன்பாட்டைக் குறிக்கும் வகையில் விளக்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதன் மூலம் அது இஜ்மாஃ் (அறிஞர்களின் ஒருமித்த கருத்து) என்ற வகைக்குள் அமையும்.அல்லாஹ் தஆலாவே நன்கறிந்தவன்.
📚 ஆதாரம்: ஷர்ஹு ஸுனன் அந்நஸாயீ (அஸ்-ஸுயூத்தி மற்றும் அஸ்-ஸிந்தி), பக்கம்: 169.
No comments:
Post a Comment