Tuesday, 20 January 2026

மிஃராஜ்

பெருமானார்  ﷺ அவர்களது மிஃராஜ் பயணத்தின் பொழுது ஸெய்யிதுல் அன்பியாவாக  நபிமார்களுக்கு இமாமத் செய்து தொழ வைத்தல் .

இமாம் குர்துபி (மறைவு  671 ஹிஜ்ரி) எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ்வின் ஹபீப் நபி கரீம் ﷺ அவர்களின் பின்னால் அனைத்து நபிமார்களும்  عليه السلام அவர்களும் ஏழு  வரிசைகளில்  நின்றிருந்தார்கள். 3 வரிசைகள் ரசூல்களுடையது, 4 வரிசைகள் நபிமார்களுடையது.

நபி கரீம் ﷺ அவர்களின் முதுகுக்கு நேராக  ஸெய்யிதினா இப்ராஹீம் நபி عليه السلام அவர்கள் இருந்தார்கள். வலது பக்கத்தில் ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلام அவர்களும், இடது பக்கத்தில் ஸெய்யிதினா இஸ்ஹாக் عليه السلام அவர்களும் இருந்தார்கள். பின்னர் ஸெய்யிதினா மூஸா عليه السلام அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் மற்ற ரசூல்கள் இருந்தார்கள்.

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் இரண்டு ரக்அத்  தொழுதார்கள். தொழுகை முடிந்த பிறகு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்: என் ரப் எனக்கு வஹீ அருளினான் – “நபிமார்களிடம்   நான் கேட்க வேண்டும்: உங்களில் யாராவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையாவது இபாதத் செய்யும்படி அழைத்த ரசூல் அனுப்பப்பட்டார்களா?” என்று.

அப்போது இறைத்தூதர்கள்  கூறினார்கள்: யா ரசூலல்லாஹ் ﷺ! நாங்கள் சாட்சியம் கூறுகிறோம் – நாங்கள் அனைவரும் ஒரே தாவத்துடன் (அழைப்புடன்) அனுப்பப்பட்டோம். அது لا إله إلا الله (லா இலாஹ இல்லல்லாஹ்) ஆகும்.

அல்லாஹ் ﷻ இன் தாத்தை தவிர வேறு யாரையும் இபாதத் செய்வது அனைத்தும் பொய்யானது. நீங்கள் ﷺ காத்தமுல்-நபிய்யீன் (நபிமார்களின் முத்திரை) ஆவீர்கள், ஸெய்யிதுல்-முர்சலீன் (ரசூல்களின் தலைவர்) ஆவீர்கள். நீங்கள் ﷺ எங்களுக்கு இமாமத் செய்தீர்கள் – இதன் மூலம் எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது, உங்களுக்குப்  பிறகு கியாமத் வரை வேறு எந்த நபியும் இல்லை.

மேலும் ஸெய்யிதினா ஈஸா عليه السلام அவர்களுக்கு உத்தரவு செய்யப்பட்டது: அவர்கள் உலகிற்கு மீண்டும் வரும் பொழுது  , நபி கரீம் ﷺ அவர்களின் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

முடிவுரை 
இதிலிருந்து தெரிய வருகிறது: அனைத்து நபிமார்களும், ரசூல்களும்  ஜீவனுடன் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் உள்ள மஸ்ஜிதுல்-அக்ஸாவில் அனைத்து நபிமார்களும் மிஃராஜ் தினத்தன்று  ஒன்று கூடினார்கள், அனைவரும் பேசினார்கள், அல்லாஹ்வின் ஹபீப் ﷺ அவர்களின் பின்னால்  தொழுதார்கள்.

ஆதார  நூல்  📕 அல்-ஜாமி லி அஹ்காமில் குர்ஆன் லில் குர்துபி,  பாகம்  19, பக்கம் 70


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...