"எவருடைய கால்நடைப் பிராணியாவது காணாமற் போய்விட்டால் , அல்லாஹ்வின் நல்லடியார்களே ,அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக ,தாங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூப்பிட்டுக் கேளுங்கள் " என்ற ஹதீதை இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறது என்ற ஹதீத் ஹிஸ்னுள் ஹஸீனில் அறிவிக்கப்பட்டுள்ளது .
" எவருடைய கால்நடைப் பிராணியாவது காட்டின் பக்கம் விரண்டோடி விட்டால் , அல்லாஹ்வின் நல்லடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் - , அல்லாஹ்வின் நல்லடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் - , அல்லாஹ்வின் நல்லடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் " என்று கூவி அழைக்கட்டும் என்ற ஹதீது இப்னு மஸூத் رضي الله عنه அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறதாகவும் மேற்படி ஹிஸ்னுள் ஹஸீன் கிரந்தத்தில் வரையப்பட்டுள்ளது .
"எவருக்காவது உதவி தேவைப்படுமானால் ,அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவி புரியுங்கள் ! அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவி புரியுங்கள் ! அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவி புரியுங்கள் ! என்று கூறட்டும் " என்று கண்மணி நாயகம் ﷺ அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கும் ஹதீத் தப்ரானீ , ஹிஸ்னுள் ஹஸீன் , ஸஹீஹ் இப்னு அவானா முதலிய கிரந்தங்களில் வந்துள்ளன .
இது பற்றி ஆதாரம் வஸீலா ஜலீலா பக்கம் 108லும் , துரருஸ்ஸனிய்யா -பீ -றத்தி அலல் வஹாபியா பக்கம் 33லும் , பஸ்லுல் கித்தாபு பக்கம் 132லும் ,பத்ஹுல் ஹக் பக்கம் 71லும் வரையப்பட்டுள்ளது .
மேற்குறப்பட்ட ஹதீதுகளில் காணப்படும் 'இபாதுல்லாஹ்' அல்லாஹ்வுடைய அடியார்கள் என்பதற்குக் கருத்து முஸ்லிமான அடியார்கள் , -முஸ்லிமான ஜின்கள் - மலக்குகள் - ரிஜாலுள் கைபு (மறைந்து வாழும் மனிதர்கள் ) - அப்தாதுகள் - அவ்தாதுகள் - குத்புமார்கள் முதலியவர்களே . இவர்கள் உயிரோடிருப்பினும் சரியே , மரணித்திருப்பினும் சரியே இவர்களைத் தேடி உதவி பெறுதல் ஆகும் என்பதற்கு மேலே சொன்னப்பட்ட ஹதீதுகளே போதிய ஆதாரங்களாகும் என்று 'இஹ்காக்குல் ஹகாயிக் ' என்ற நூலில் வரையப்பட்டிருப்பதாக , சென்னை பிரதம முப்தி மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிபு கவர்மெண்டு சீப்காஜி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் , அவர்களது பத்வா தர்- பயானே - ஜவாஸ் இஸ்திம்தாது - அன்பியா -வ - அவ்லியா உல்லாஹி எனும் பத்வாச் சான்றும் , வஸீலா ஜலீலா ,பத்ஹுல் ஹக் முதலிய நூற்களும் கூறுகின்றன .
மேலும் இவ்வாறான அத்தாட்சி 'பரகாத்துல் இம்தாது - லி - அஹ்லில் - இஸ்திம்தாது ' என்ற நூலிலும் காணப்படுகின்றது .
"காபிர்கள் விக்கிரகங்களை இறைவனுக்கு இணையாக்கி தங்களது தேவைகளை அவைகளே சுயமாக நிறைவேற்றுகின்றன என்று கருதி அவற்றின்பால் உதவி தேடுகின்றார்கள் . முஸ்லிம்கள் அன்பியா ,அவ்லியாக்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்காமல் ,ஆண்டவனது அஸ்மா,ஸிபாத்து வெளியாகும் மழ்ஹராகக் கருதி அவர்களிடம் உதவி தேடுகிறார்கள் .
விக்கிரகங்களைக் கூப்பிட்டவர்கள் நஷ்டவாளியாயினர் . அன்பியா ,அவ்லியாக்களை கூப்பிட்டவர்கள் ஜெயம் பெற்றவர்களாயினர் " என்று குத்வத்துஸ் ஸாலிகீன் , மவ்லானா ,அல்ஹாஜ் ஸெய்யிது ஷாஹ் உமர் ஸாஹிபு காதிரி ஹைதராபாதி رضي الله عنه அவர்கள் தப்ஸீர் கஷ்புல் குலூபில் வரைந்துள்ளார்கள் .
ஷாபிஈ மத்ஹபின் இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه அவர்கள், ஸெய்யிதினா மூஸல் காழிம் رضي الله عنه அவர்களுடைய கபுரு ஷரீஃபுக்கு சென்று ஜியாரத் செய்யும் போது அந்த சங்கையான கப்ரை நோக்கி "நிச்சயமாக இது பிரார்த்தனைகளை ஏற்று ஒப்புக்கொள்ளப்படும் என்று அனுபவத்தில் பரிட்சிக்கப்பட்ட ஓளடதமாகும் " உரைத்தார்கள் .
இவ்விபரத்தை அல்லாமா ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه அவர்கள் 'ஸப்வத்துல் ஸப்வா ' விலும் , ஷைகு முஹம்மது மள்ஹர் நக்ஷபந்தி திஹ்லவி அவர்கள் 'துர்ருள் முனள்ளம் ' மிலும் கூறுவதாக முப்தி அல்லாமா மஹ்மூத் ஸாஹிப் மத்ராஸி அவர்கள் ஸில்குள் முஅள்ளம் ,38வது பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்கள் .
" இமாமுல் அஃலம் ஸெய்யிதினா அபூஹனீபா رضي الله عنه அவர்களுடைய கபுரு ஷரீஃப் திட்டமாக நமது முறைப்பாட்டைக் கேட்டு தேவைகளை நிறைவேற்றித் தரவல்லதாயிருக்கிறது" என்பதாக ,கல்லுடைந்தாலும் சொல்லுடையாத அல்லாமா இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه அவர்கள் 'கைராத்துல் ஹிஸானில் ' கூறுவதாக ,அல்லாமா முப்தி மஹ்மூத் சாஹிபு மதராஸி அவர்கள் பத்ஹுல் ஹக் 78வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .
"இமாம் ஷைகு மஃரூபுல் கர்கி رضي الله عنه அவர்கள் பரக்கத்துச் செய்யப்பட்ட மனிதர்களுள் மேலானவர்கள் . அவர்களது கபூர் ஷரீஃப் நிச்சயமாக பரீட்சித்து சோதித்து பார்க்கப்பட்ட அவிழ்தமாகும் . எவரொருருவர் ,அந்த கபூர் ஷரீபிலிருந்து (தமது துன்பம் ,துயரம் விலக வேண்டுமென்ற எண்ணத்துடன் ) யாதொரு வஸ்துவை எடுப்பாரேல் அவரது பலாய் முஸீபத்துகள் நிவர்த்தியாக்கப்படும் " என்பதாக ஷைகுல் இஸ்லாம் ஜக்கரிய்யில் அன்சாரி அவர்கرضي الله عنهள் 'ஷரஹு ரிசாலத்தில் குஷைரிய்யாவில் ' குறிப்பிட்டுள்ளதாக ,ஆரிபுபில்லாஹ் ஷாஹ் முஹ்யித்தீன் ஸாஹிபு வேலூரி رضي الله عنه அவர்கள் 'பஸ்லுல் கிதாப் ' 115வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .
" ஹழ்ரத் ஷைகு மஃரூபுல் கர்கி رضي الله عنه அவர்களது வபாத்து ஹிஜ்ரி 201ஆம் ஆண்டு . அவர்களது அடக்கஸ்தலம் பகுதாதில் உள்ளது . அவர்கள் வேண்டுகோளுக்கு பதில் அளிக்கக் கூடியவர்கள் . அவர்களது கபூரு ஷரீபைக் கொண்டு பகுதாதுவாசிகள் பிணி நோய் நீங்கி ஷிபாவை தேடிப் பெறுகின்றனர் . அந்த கபூர் ஷரீப் அனுபவப்பூர்வமாக பரீட்சிக்கப்பட்ட சஞ்சீவியாகும் " என்று இமாம் அபுல் காஸிம் குஷைரி رضي الله عنه அவர்கள் ,ஷைகுல் இஸ்லாம் ஜக்கரிய்யில் அன்சாரி رضي الله عنه அவர்கள் ஆகியோர் தமது ரிஸாலாவக்களில் வரைந்துள்ளதாய் , அல்லாமா முப்தி மஹ்மூது ஸாஹிபு மதராஸீ அவர்கள் 'பத்ஹுல் ஹக் ' 80வது பக்கத்தில் எடுத்து அறிவிக்கின்றார்கள் .
இவ்வாறாக இமாம் யாபியீ யமனீ رضي الله عنه அவர்களும் சொல்வதாக அல்லாமா ஷைகு யூசுபுன் நபஹானீ رضي الله عنه அவர்கள் 'ஜாமி உல் கராமாத்தில் அவ்லியா ' 2வது பாகம் 2657வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
குத்புல் அக்பர் ,ஷைகு அபுல் ஹசன் அலிய்யுஷ் ஷாதுலி رضي الله عنه அவர்களது 5வது கலீபா , அல் குத்பு ஸெய்யிது ஷம்சுத்தீன் ஹனஃபிய்யில் ஹமவிய்யிஷ் ஷாதுலி رضي الله عنه அவர்கள் தங்களது வபாத்தின் வேளையில் , " தேவையுள்ள எவரும் என்னுடைய கபூருக்கு வந்து நாட்டங்களைக் கேட்பரேல் அவற்றை நான் நிறைவேற்றி தருவேன்.ஏனெனில் எனக்கும்
அவருக்கும்(தேவையைக் கோரும் ) இடையில் ஒரு முழம் மண்ணே தூரம் . தன்னைச் சார்ந்தவர்களை ஒரு முழம் மண் தடுக்குமேயெனில் அவன் ஆண் பிள்ளையன்று . " என்று சொன்னதாக அல் குத்பு இமாம் அப்துல் வஹ்ஹாபுஷ் ஷஃரானீ رضي الله عنه அவர்கள் 'தபாகத்துள் குப்றா ' 2வது பாகம் 86வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .
அல் குத்பு ஷைகு அஹ்மது முஹம்மது இப்னு பர்கல் رضي الله عنه அவர்கள் , "நான் கபூரிலிருந்து வெளிவந்து உதவக் கூடிய தஸர்ரபாத்தென்னும் சக்தி உடையவன் . எவருக்கேனும் ஹாஜத்து ,நாட்ட தேட்டம் இருக்குமானால் , என் முகத்திற்கெதிரே வந்து , என்னிடத்தில் தேவைகளைக் கேட்பாராயின் ,நான் நிறைவேற்றித் தருவேன் " எனக் கூறியிருக்கிறார்கள் என்பதாக அல் குத்பு இமாம் அப்துல் வஹ்ஹாபுஷ் ஷஃரானீ رضي الله عنه அவர்கள் 'தபாகத்துள் குப்றா ' 2வது பாகம் 93வது பக்கத்தில் அறிவித்துள்ளார்கள் .
"எவரொருவருக்கு தமது தேவைகள் , நாட்ட தேட்டங்கள் ,நிறைவேற வேண்டுமென்றிருக்குமேயானால் ,அவன் சூரத்துல் பாத்திஹா , ஆயத்துல் குர்ஸீ ,அலம் நஷ்ரஹ்சூரா இவைகளை ஓதி , இவற்றின் தவாபுகளை குத்புல் அக்தாப் ,ஹழ்ரத் அஷ்ஷைகு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு அளிக்க வேண்டும் . பிறகு பகுதாது திசையை முன்னோக்கி பதினோரு எட்டெடுத்து வைத்து , 'யா ஸெய்யிதீ அப்துல் காதிர் ' என்று பத்து விடுத்தும் அழைத்து வேண்டி ,தமது நாட்ட தேட்டங்களைக் கேட்க வேண்டும் " என்பதாக இமாம் ஷைகு ஜலாலுதீன் ஸுயூத்தி رضي الله عنه அவர்கள் 'கித்தாபுர்- ரஹ்மா- பித்திப்பி-வல்-ஹிக்மா' என்ற நூலின் 284வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .
மேலே கண்ட விஷயங்களை நாம் இங்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம் . இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைத் தொகுத்துக் கொடுத்து மத்ஹபை ஏற்படுத்திக் கொடுத்த இமாம் ஷாஃபியீ முஹம்மது இப்னு இத்ரீஸ் رضي الله عنه அவர்கள்,சட்ட நிபுணர்களான இமாம் இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه அவர்கள், இமாம் குஷைரி رضي الله عنه அவர்கள்,இமாம் ஜக்கரிய்யில் அன்சாரி رضي الله عنه அவர்கள், அல் குத்பு ஷம்சுத்தீன் ஹமவியில் மிஸ்ரி رضي الله عنه அவர்கள், அல் குத்பு முஹம்மது இப்னு அஹ்மது பர்கல் رضي الله عنه அவர்கள் ஆகிய குத்புமார்களும் கபுறுகளைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறியுள்ளார்களென்றால் நோய் நீங்கவும் ,வறுமை விலகவும் , வியாபாரம் விருத்தியாகவும் நாடு செழிக்கவும் , நிக்காஹ் முதலான நல்ல காரியங்கள் மங்களகரமாக நடைபெறவும் ,தேவைகளையும் தாராளமாக வஸீலா மூலம் கேட்டுப் பெறலாம் . ஏன் வஸீலாவாக கேட்டுப் பெறக் கூடாது என்பதே ???
இவையனைத்திற்கும் மேம்பட்டு , அவ்லியாக்கெல்லாம் அரசரான , அல் குத்புர் றப்பானீ , வல் கவ்துஸ் சமதானி , செய்யிதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் 'ஐய்னிய்யா' வில் கூறியுள்ளதை புத்திசாலிகள் படித்துப் பயன் பெறுவார்களாக .
அவர்கள் உபதேசித்துக் கூறுவது யாதெனில் :-
'நீ ஓதிப் படித்த புத்தகங்களை விட்டுவிடு . ஏனெனில் அந்த அவ்லியாக்களுடைய நடப்புகள் அநேகக் கிதாபுகளில் நின்றுதான் ஏற்பட்டுள்ளன . எங்களுடைய வழிக்கும் அந்த அவ்லியாக்கள் தான் வழிகாட்டிகள் .நாம் ஆதரவு வைப்பதற்கு அன்னவர்களே போதுமான புதையல்கள் .
அந்த அவ்லியாக்களைப் பின்பற்றியவன் நேர்வழி பெறுவான் . எவன் பின்பற்றவில்லையோ அவன் வழிகெட்டான் .
ஆபிதீன்கள் எல்லோரும் அந்த அவ்லியாக்களையே பற்றிப் பிடித்துக் கொண்டார்கள் . அந்த அவ்லியாக்கள் தான் மனிதரென மதிக்கப்படுபவர்கள் . அவர்களின் திருச் சமூகத்தை நீ பற்றி பிடித்துக் கொள் .
உலகத்தார்கள் பிரதி பிரயோஜனங்கள் பெறுவதற்கு அந்த அவ்லியாக்களே ஒதுங்கும் தலங்களாகும் ' என்பதே .
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி رضي الله عنه அவர்கள் ,இமாம் பக்ருத்தீன் றாஜி رضي الله عنه அவர்களுக்கு உபதேசமாக எழுதியது யாதெனில் .
' எம்மனிதன் உண்மை என்று சாதிக்க ,தர்க்கவாதம் புரிவதை விட்டு வெளிப்படவில்லையோ , அம்மனிதன் அவ்லியாக்களிடம் ஒரு போதும் பூரண ஈமான் உடையவனாக மாட்டான் . ஏனெனில் , அந்த மனிதன் தான் கற்ற சொற்ப கல்வியை எல்லையில்லாததாகக் கண்டு , அந்த அற்பத்தையே துருவி ஆராய்வதில் தனது மேலான வயதைப் போக்கடிக்கிறான் . அசல் நோக்கத்தை அடைந்தவனாக மாட்டான் ' என்பதே .
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்கள் , ஷைகு இஸ்ஸுத்தீன் رضي الله عنه அவர்கள் ஆகிய இருவரும் தகுதி வாய்ந்த சிறந்த இரு முஹத்திதுகள் . இன்காருக்குப் பிறகே அவ்லியாக்களின் அந்தரங்கப் பேறுகளைப் பெற்றார்கள் .
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்கள் , ஹழ்ரத் ஷெய்கு அபூஹம்ஜா பகுதாதி رضي الله عنه அவர்களுடைய மஜ்லிஸில் உட்கார்ந்த பிறகுதான் இமாம் அவர்களுக்கு அகக்கண்கள் திறந்தன .
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்கள் தமது குமாருக்கு செய்த உபதேசத்தில் , " மகனே ! அவ்லியாக்கள் பால் ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே ! அவர்களுடைய சகவாசத்தை ஒரு போதும் மறந்திருக்காதே ! அவர்கள் அகமியத்தின் பொக்கிஷங்களை அறிந்தவர்கள் . நாமோ அவ்வாறு அறிந்திராத துரதிருஷ்டசாலிகள் " என்று குறிப்பிட்டுள்ளார்கள் .
ஷைகு இஸ்ஸுத்தீன் رضي الله عنه அவர்கள் குத்புல் அக்பர் ஷெய்கு அபுல் ஹசன் அலிய்யுஷ் ஷாதுலி رضي الله عنه அவர்களுடைய சகவாசத்தால் பெரும் பேறுகளை பெற்றார்கள் .
"அவ்லியாக்கள் தான் ஹகீகத்தை உடையவர்கள் . அவர்களுடைய நேர்மைக்கு இதுவே போதுமான அத்தாட்சியாகும் . மற்றவர்கள் வெறும் பழக்க வழக்கங்களில் அகப்பட்டுக் கொண்டு கிடக்கின்றனர் " என்று ஷைகு இஸ்ஸுத்தீன் رضي الله عنه அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள் .
No comments:
Post a Comment