"மைய்யித்தானது தன்னைக் குளிப்பாட்டுபவர்களையும் ,சுமந்து செல்பவர்களையும் .கபுருக்கு முடுகி நிற்பவர்களையும் அறிவார்கள் ,பேச்சுகளையும் கேட்பார்கள் " என்று பதாவா குப்ராவில் தலீல் அத்தாட்சிகளுடன் நகல் செய்யப்படுகிறது .மேலும் இவ்வாறே ஷரஹுஸ் ஸூதூரிலும் ,ஷரஹு பர்ஜகிலும் விரிவாக நகல் செய்யப்பட்டுள்ளது .
ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி رضي الله عنه அவர்கள் வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள் . தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் ,நிலைமைகளையும் விசாரித்தார்கள் .எல்லா விஷயங்ககளையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள் . அவர்கள் அவளிடமிருந்து விஷ்யங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிகம் உடைய ஷரஹில் இமாம் ஷைகு ஜுந்தி رضي الله عنه அவர்கள் கூறுவதாக ஸ ஆதத்துத் தாரைன் 402வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது .
"அவ்லியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்திற்கு பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு " என்பதாகக் இமாம் ஜலாலுதீன் ஸூயூத்தி رضي الله عنه அவர்கள் 'அல் கபருத்தால்லு அலா வுஜூதில் குதப்பி வல் அப்தால்' என்ற நூலிலும் ,இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுசைனி ஹமவீ ஹனபி رضي الله عنه அவர்கள் 'நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால் ' என்ற நூலிலும் கூறுகின்றார்கள் .
"அவ்லியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள் .திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை " என்பதாக அல் குத்பு இமாம் ஷஃறானி رضي الله عنه அவர்கள் 'லத்தாயிபுல் மினன்' பாகம் 1,பக்கம் 144ல் வரைந்துள்ளார்கள் .
"நபி கரீம் ﷺ அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன ஸஹாபாக்களின் அர்வாஹூஹள் சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவ்லியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள் " என்பதாக ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் ஆதாரத்துடன் கூறுவதை , தப்சீர் ரூஹூல் பயான் பாகம் 10,பக்கம் 99ல் காணலாம் .
இதற்கு ஆதாரமாக வபாத்திற்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க .
இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி رضي الله عنه அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இப்னு பாரிலு رضي الله عنه அவர்களுடைய கப்ரு ஷரீபுக்கு சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள் .பிறகு உமர் இப்னு رضي الله عنه அவர்கள் இமாம் ஷஃரானி رضي الله عنه அவர்கள் இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்பு கோரியதாக இமாம் ஷஃரானி رضي الله عنه அவர்களே தங்களுடைய 'லதாயிபுல் மினான் ' 1வது பாகம் 144வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .
ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ رضي الله عنه அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும் ,ஸெய்யிது இப்ராஹீமுல் அஃரஜ் رضي الله عنه அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்னும் ,ஸெய்யிது யக்கூத்துர் அர்ஷீ رضي الله عنه அவர்களை செவ்வாய்கிழமை லுஹருக்குப் பின்னும் அவர்களுடைய கபூருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் ,அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபூரில் ஆஜாராயிருப்பார்களென்றும் , இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்ற எவரும் அறியமாட்டார்களாகையால் , கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்ய வேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி رضي الله عنه அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன லதாயிபுல் மினான் அதே பக்கத்தில் வரையப்பட்டுள்ளது .
ஆகவே ,இறப்பு என்பது அழிவுக்குரியதன்று . சில படித்தரங்களைக் கொண்ட ஜடத்துவ மாறுதலாகும் .ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு முன்னேறிச் செல்வதாகும் .ஏனெனில் ஆத்மா அழிவில்லாதது ,இறப்பும் பிறப்புமற்ற நிலையிலுள்ளது .
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் கீமியாயே ஸஆதத் பீடிகையில் குறிப்பிடும் 'மனுஷ்னன் அனாதியல்லனாயினும் முடிவற்ற நித்தியன் ' எனும் பொன் மொழியில் இருந்து ,மரணத்தோடு மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை என்ற உண்மை வெளியாகின்றது . நிர்யாணத்தினின்று ஒரு புதிய வாழ்க்கை உதயமாகி அது என்றும் அழியா நித்தியமாய் நின்று நிலவத் தொடங்குகின்றது . ஜடவுலகத்தைப் பற்றி நிற்கும் பூததேகத்தின் சுகபோக இன்பங்களின் வாசல் அடைபட ,சகல நுகர்ச்சிகளையும் அந்தரங்கத்திலிருந்து அனுபவித்து வந்த அந்த மனுஷ்யன் என்ற சுயம்பொருள் சூட்சமமாய் கிரியை புரிய சக்தி பெறுகின்றது . பிணி , மூப்பு ,தளர்ச்சி ,இயலாமை முதலிய தங்கட .சங்கடமின்றி மறதியற்ற முழுமனிதப் பண்பும் அவனில் அமைந்து காணப்படுகின்றது .
இவ்வுலகில் சஞ்சரித்து வந்தது போலவே எல்லாவிதமான புலன்களும் வதியத்தக்க யோக்கியதையுடையவனாய் ஆகும் போது தேகமும் அவற்றைத் தொடர்ந்தே நிற்கும் . இம்மையில் பூத குணத்தின் மிகைப்பால் ரூஹு உடலுக்குள் மறைந்து காணப்படுவது போல ,மறுமையில் ரூஹானியத்தின் மிகைப்பால் தேகம் ரூஹுக்குள் மறைந்து காணப்படும் .ஹிஸாபு என்ற கேள்விகணக்கிற்கும் ,பாவ புண்ணித்திற்கேற்ற பலா பழங்களுக்கும் இத்தேகமே பொறுப்பாக விளங்கும் .
"அல்லாஹ்வின் சிருஷ்டிகளுள் எனது ஜோதியே முதன்மையானது " என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அருளியுள்ளார்கள் .
[நூற்கள் - முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் ,பக்கம் 99,ஹதீத் எண் 18,
மவாஹிபுல் லதுன்னியா, பாகம் 1,பக்கம் 71,
ஷரஹ் மவாஹிபுல் லதுன்னியா ,பாகம் 1,பக்கம் 89-91 ,
கஷ்ப் அல் கபா ,பாகம் 1, பக்கம் 311,ஹதீத் எண் 827 ]
எனவே , ஒளியாகிய நூர் என்னும் ஒரே அஸ்திவாரத்திலான உயிர் -உடல் என்ற இவ்விரு வஸ்துக்களும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டு மாறுவதும் ,வெளிப்படுவதும் ஆன்ம சக்திமிக்க பெரியாரிடத்து அதிசயிக்கத்தக்க கருமமன்று .
அவ்லியாக்களிடத்தில் ஸ்தூலத்திற்கும் ,சூட்சமத்திற்கும் மத்தியில் பிரமாதமான வித்தியாசம் ஒன்றும் இல்லை . சூட்சமத்திற்குள் ஸ்தூலம் அடங்குவதும் அன்னாரிடத்தில் பெரிய கருமமன்று .
அல்லாஹ்வின் மெய்யடியாரான அவ்லியாக்கள் , தாங்கள் சிருஷ்டிகளின் பார்வையிலிருந்து மறைய நாடும் பொழுது , மரணம் என்னும் போர்வைக்குள் புகுந்து கொள்வதும் , அடக்கம் செய்யப்பட்ட பின் ஸ்தூலத்தை சூட்சமத்திற்குள்ளடக்கி கபூரிலிருந்து வெளியே புறப்படுவதும் அன்னாருக்கு எளிதான கருமமாகும் . ஆண்டவன் அவர்களுக்கு அத்தகைய தத்துவத்தை கொடுத்துள்ளான் . இத்தியாதி காரணங்களைக் கொண்டு மரணத்திற்குப் பின்னும் அவ்லியாக்கள் ஜீவனுள்ளவர்கள் .அழியாத தேகத்தை உடையவர்கள் ,கிரியைகள் புரியும் சக்தி உடையவர்கள் எனத் தெரிய வருகின்றது .
பின்வரும் வரலாற்றில் பதிவுபெற்ற நிகழ்வுகளே அதற்கு சான்றாகும் .
ஹழ்ரத் கிழுறு عَلَيْهِ السَّلَام ,இமாமுல் அஃலம் அபூஹனீஃபா رضي الله عنه அவர்களது வஃளு மஜ்லிஸுக்கு தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி இல்முகளை கற்று வந்தார்கள் . இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிஸ் நடைபெறவில்லை . ஹழ்ரத் கிழுறு عَلَيْهِ السَّلَام அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று ,ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்திற்குப் பின்பும் மாமுல் அஃலம் அபூஹனீஃபா رضي الله عنه அவர்களது கபூர் ஷரீப்பிற்கு ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று ஷரிய்யத்துடைய இல்முகளை கேட்டு வந்ததாக இமாம் இப்னு ஜவ்ஸீ رضي الله عنه அவர்களைக் கொண்டு 'பதாயிஉ ' என்னும் பிக்ஹ் நூலில் வருவதாக ஷைகு ஹஸனுல் அதவி மிஸ் ரீ رضي الله عنه அவர்கள் 'மஷாரிகுல் அன்வர் ' பக்கம் 69ல் வரைந்துள்ளார்கள் .
நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களுள் ஒருவரான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்களது ஜியாரத்திற்கு சென்ற குத்புர் ரப்பானி ,கவ்துஸ் ஸமதானி முஹ்யித்தீன் ஸெய்யிது அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் அன்னாருடைய கப்ரு ஷரீபிற்கு எதிரே அதபுடன் நின்று ," அஸ்ஸலாமு அலைக்கும் யா இமாமல் கிராம் " (சங்கைக்குரிய இமாம் அவர்களே ) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள் . உடனே ,கப்ரு ஷரீப் இரண்டாகப் பிளந்து ,இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கவ்துல் அஃலம் رضي الله عنه அவர்களை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்தார்கள் . நூரானியத்தான பரிவட்டத்தை போர்த்தி ,"ஸெய்யிது அப்துல் காதிரே ! ஷரீயத்துடைய இல்முகளும் ,ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள் பால் ஹாஜாத்தாகின்றன " என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள் . இச்சம்பவம் 'பஹ்ஜத்துல் அஸ்றார் ' கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய் 'தப்ரீஜூல் காத்திர்' 40வது பக்கத்திலும் , 'பஸ்லுல் கிதாப்' 129வது பக்கத்திலும் , ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه அவர்களின் 'ஜுப்ததுல் அஸ்றார் ' நூலிலும் காணப்படுகின்றது.
குத்புஸ் ஸமான் ஷைகு அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் ,
"நான் எனது உஸ்தாது ஷைகு ஸெய்யிது முஹம்மது ஷனாவி رضي الله عنه அவர்களுடன் , அல் குத்புஷ்ஷஹீர் ஸெய்யிது அஹ்மது பதவி رضي الله عنه அவர்களது தர்காவிற்கு ஜியாரத்திற்காகச் சென்றேன் . அச்சமயம் எனது உஸ்தாதவர்கள் கப்ரு ஷரீபை முன்னோக்கி 'நாயகமே ! இன்ன காரியத்தை முன்னோக்கி மிஸ்ருக்கு போகப் பிரயாணமாயிருக்கிறேன் . விடை கொடுத்து அனுப்புங்கள் ' என்று விண்ணப்பித்து நின்றார்கள் .
'அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராக போய் வாருங்கள் ' என்ற நல்வாக்கு கப்ருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டு நன்கு கேட்டேன் ' என்பதாக
இவ்வரலாற்றை இமாம் ஷஃரானி رضي الله عنه அவர்கள் 'லதாயிபுல் மினான் ' பாகம் 1,பக்கம் 180ல் குறிப்பிட்டுள்ளார்கள்
அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்கள் வபாத்தாகும் போது , ' என்னுடைய ஜனாஸாவை கண்மணி நாயகம் ﷺ அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள் . கதவு திறக்கப்பட்டு அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலியே அடக்கம் செய்யுங்கள் . இல்லையேல் பொதுக் கபரஸ்தானில் அடக்கம் செய்யுங்கள் ' என்று வஸிய்யத்துச் செய்தார்கள் . அவ்வாறே செய்யப்பட்டது .பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்ட பொழுது ,வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது .
'தோழரை தோழரிடம் அனுப்பி வையுங்கள் ' என்ற உத்தரவு புனிதர் நாயகம் ﷺ அவர்களுடைய சங்கை மிகு ரவ்லா ஷரீபிலிருந்து வெளிவந்தது . அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள் . இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் ராஜி رضي الله عنه அவர்கள் 'தப்சீர் கபீர்' ,5வது பாகம் ,685ல் பக்கத்தில் கூறுவதாய் 'தப்ரீ ஹுல் அத்கியா பீ அஹ்வாலில் அன்பியா ' ,பாகம் 2,பக்கம் 376ல் வரையப்பட்டுள்ளது .
இத்தகைய நிகழ்ச்சிகள் , ஆதாரங்கள் இன்னும் எவ்வளவோ காண்பிக்கலாம் . உலகத்தார் யாவரும் ஏற்றிருக்கும் இமாம்கள் சம்பந்தப்பட்டவற்றையும் , அவை பற்றிய அங்கீகரிக்கப்பட்ட
(முஃத்தபரான ) ஆதாரப்பூர்வமான கிரந்தங்களையே ஆதாரங்களாக காட்டியுள்ளோம் . அன்பியாக்கள் ,அவ்லியாக்கள் ஆகியோர் மவுத்திற்குப் பின்பும் ஹயாத்துள்ளவர்கள் என்பதற்கு மேற்கூறிய உதாரணங்களோடு இன்னும் இரண்டு தருகின்றோம் .
உதயகிரி முதல் அஸ்தகிரி வரை பிரபல்யம் அடைந்து , உலகம் ஒப்புக் கொண்டு ஓதிவரும் 'தலாயிலுள் கைறாத் ' இயற்றிய அல்லாமத்துல் பகீஹ், ஆரிபுல் காமில் முஹம்மது இப்னு சுலைமானுல் ஜூஸுலிஷ் ஷாதுலி رضي الله عنه அவர்களது எண்ணிக்கையற்ற கராமத்துகளில் நின்றும் ஒன்று 'ஜாமியுல் கறாமத் ' 1வது பாகம் ,165வது பக்கத்தில் காணப்படுகின்றது .அடியில் அதைக் குறிப்பிடுகின்றோம் .
குத்புஷ் ஷஹீர் ,ஷைகு முஹம்மது இப்னு சுலைமானுல் ஜூஸுலிஷ் ஷாதுலி رضي الله عنه அவர்கள் ஹிஜ்ரி 870வது வருஷத்தில் வபாத்தாகி , சூயஸ்பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள் . 77 வருடங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947வது வருடம் அவர்களது கபூரை தோண்டப்பட்டது . அவ்வமயம் அவர்களது திரேகம் அடக்கம் செய்யப்பட்ட பொழுது எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும் ,மாறுபாடும் இன்றி கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது . அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற எண்ணற்ற மக்கள் பேராச்சியாரிப்பட்டு மயங்கி நின்றனர் . ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர் . அவர்கள் ஜீவனுள்ளவர்கள் ,அவர்களுடைய உடலை மண் தின்னாது ,புழுபூச்சி ,மிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும் அவனது ரஸூலும் கூறிய வாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள் .
மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பொழுது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே , வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக் கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலை வைத்து அழுத்திப் பார்த்தனர் . விரல் பட்ட இடத்தை சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது
. விரலை எடுத்ததும் அந்த உதிரக் கட்டு உடலில் பரவி மறைந்தது .
பிறகு அவர்களது பரிசுத்த திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது . அவர்களது கபூர் ஷரீபில் இன்றுவரை ஸலவாத்தின் பரக்கத்தை கொண்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது . நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் ஜியாரத்திற்காகச் சென்று ,தலாயிலுள் கைராத் ஓதி நற்பேறுகளை பெற்று வருகின்றனர் .
நபி பெருமானார் ﷺ அவர்களது ஸஹாபாத் தோழர்களான ஹழ்ரத் ஹுதைபதுல் யமனீ رضي الله عنه ,ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜாபிருள் அன்சாரி رضي الله عنه ஆகிய இருவரும் ஷஹீதாகி இராக்கில் பகுதாது நகருக்குச் சமீபமாக ஆற்றோரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள் . பிற்காலத்தில் வெள்ளப்பெருக்கால் இரு கப்ருகளுக்கும் சேதம் ஏற்பட்டது . அவை ஆற்றில் மூழ்கிப் போய்விடுமோ என்ற பீதியும் ஏற்பட்டது . அதுசமயம் இராக்கில் ஆட்சிபுரிந்த அமீர் பைஸல் (மக்கா ஷரீஃப் ஹுஸைனுடைய மகன் ) உலமாக்களிடம் பத்வா வாங்கி அவ்விரு கப்ருகளையும் தோண்டி எடுத்து ,அவற்றை வேறு இடத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு செய்தார் . இவ்விஷயம் விளம்பரபடுத்தப்பட்டது . உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட தேதியில் அங்கு ஆஜராயினர் . அவ்விரு கப்ருகளும் 1300 ஆண்டுகளுக்கு தோண்டப்பட்டு அவ்விரு சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டு உயர்ந்த மேஜை மீது வைக்கப்பட்டன . திரேகத்தில் எவ்வித பேதமும் ,மாறுபாடும் காணப்படவில்லை . வியர்வை சொட்ட அவ்விரு முகங்களும் ஒளிப்பிரகாசத்துடன் இலக்கின .
அனைவரும் அக்கட்சியைக் கண்டு பேராச்சரியத்தில் மூழ்கிப் போயினர் . காரீ ஒருவர்
'وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ '
அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள். [ அல் குர்ஆன் - 2:154 ]
என்ற குர்ஆனின் வேத வாக்கை ஓத ஆரம்பித்தார் .
அதற்கு அத்தாட்சியாக கண்முன் பிரத்தியட்சமாக அவ்விரு நாதாக்களின் பரிசுத்த திருமேனிகள் இருக்கும் காட்சியை நோக்கும் போது இந்த ஆயத் அவ்வமயந்தான் அருளப்பட்டது போல காணப்பட்டதாம் .
பிறகு அங்கு கூடியிருந்த ஜனசமுத்திரம், அலைகள்போல் அடுத்து நின்று தொழுது பகுதாதுக்கு 20 மைல் தூரத்தில் பாழடைந்து இருபிளவாகப் பிளந்து கிடக்கும் கிஸ்ரா கோட்டைக்குச் சமீபமாக , சஹாபி ஸல்மான் பார்ஸீ رضي الله عنه அவர்களது கபூர் ஷரீபுக்கு அடுத்தன்மையாக மற்றோரு கட்டிடத்தினுள் இரு ஸஹாபிகளும் நல்லடக்கம் செய்யப்பட்டனர் . இந்நிகழ்ச்சி ஆங்கில வருடம் 1932ஆம் ஆண்டு நடைபெற்றது .பத்திரிகைகள் பலவற்றிலும் இச்சேதி வெளியிடப்பட்டது . மதராஸில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கை ஸைபுல் இஸ்லாமிலும், வட நாட்டின் உருது பத்திரிக்கைகளிலும் இவ்விபரம் வெளிவந்துள்ளது .
பத்திரிகையில் வெளிவந்த செய்தி !
"வாடாமலர் " என்ற பகுதியில் "இஸ்லாத்தின் அதிசய நிகழ்ச்சி " என்னும் தலைப்பில் வந்துள்ளதையும் நோட்டமிட்டு பாருங்கள் .
" இதர தேசங்களின் இராஜாங்க பிரதிநிதிகளும் இராக் அரசாங்கத்தின் சர்வ அதிகாரிகளும் திரண்டிருக்க ஷாஹ் பைஸல் அரசருக்கெதிரே முதன் முதலாக ஹழ்ரத் ஹுதைபா رضي الله عنه அவர்களின் பரிசுத்த பிரேதம் க்ரேன் மூலமாக அதிஜாக்கிரதையாக பூமியிலிருந்து அப்படியே தூக்கப்பட்டது . அந்த ஜனாஸா ஸ்டெரெச்சர் மீது அழகாய் அமைந்துஹ் விட்டது . பின்னர் ,க்ரேனிலிருந்து ஸ்டெரெச்சரை தனியாக பிரித்து ,அதை மாட்சிமை தாங்கிய ஷாஹ் பைஸல் ,முப்தியே அஃலம் இராக் ,துருக்கி ஜனநாயகப் பொது அமைச்சர்,மிஸ்ரு இளவரசராயிருந்த பாரூக் முதலானோர் தோல் மீது தூக்கிச் சென்று அழகிய கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்தனர் . இதற்குப் பின் ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லா رضي الله عنه அவர்களின் பரிசுத்த மேனியும் அடக்கஸ்தலத்திலிருந்து இதே வகையில் அழகிய முறையில் வெளியே எடுக்கப்பட்டது .
பரிசுத்த மேனியின் கபன் துணியும் , அவர்களது முகத்திலிருந்த முடியும் அப்படியே அப்பழுக்கின்றி இருந்தன . இப்பெரியோர்களின் பிரேதங்களைக் கண்டவர்கள் , ' இவை 1300ஆண்டுகளுக்கு முன்னுண்டான பிரேதங்கள் தாமா ? ' என்று நம்பமுடியவில்லை . ஆனால் , பிரஸ்தாபமேண்மை மிக்க திரேகங்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு முன்னே இறந்துபட்டவர்களின் தேகங்களைப் போன்று புத்தம் புதியனவாய் தென்பட்டன .இது மட்டிலுமல்ல . பிரஸ்தாப இரு பெரியார்களான ஸஹாபா பெருமக்களின் நேத்திரங்கள் இரண்டும் திறந்திருந்தன . அவை நல்ல பளிங்கு போல் பளபளப்புடன் தென்பட்டன . இதைக் கண்ட அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவர்களின் கண்களை முத்தமிட துடித்தன . ஆனால் எவருக்கும் அனுமதி கிடைக்கவில்லை .
மாபெரும் டாக்டர்களான வைத்தியர்கள் பலர் இந்நிகழ்ச்சியைக் கண்டு திடுக்கிட்டனர் . ஒன்றும் புரியாமல் திகைத்தனர் . பிரஸ்தாப நிகழ்ச்சியின் போது பிரபலமான ஜெர்மன் கண் டாக்டர் ஒருவர் இருந்தார் . இவர் இந்நிகழ்ச்சியின் போது ஆர்வமாக பங்கு கொண்டார் . அவர் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும் ,பிரஸ்தாப பெரியார்களான ஸஹாபாக்களின் பிரேதங்கள் , கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஒன்றும் புரியாமல் ,இராக் பிரதம முப்தி அவர்களின் கரங்களைப் பிடித்துக் கொண்டு , 'தங்களின் மார்க்கமான இஸ்லாம் சாத்தியமானது தான் ' என்பதற்கு இந்த ஸஹாபாக்களின் பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியை விட வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது ? இதோ யானும் முஸ்லிமாகி விட்டேன் . 'லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ' என்று கூறி முஸ்லிமாகி விட்டார் .
இத்தகைய சந்தர்ப்பத்தில் திரைப்படம் பிடிக்கும் ஒரு ஜெர்மன் கம்பெனி , அதிக தொலை தூரத்திலிருந்தெல்லாம் இந்நிகழ்ச்சியைக் காண வந்திருந்தவர்களை பெரிய உபகாரம் செய்தது . பிரஸ்தாபப் படம் எடுக்கும் கம்பெனியார் ,இராக் அரசின் அனுமதி பெற்று தங்கள் செலவிலேயே ஒரு காரியம் செய்தனர் .
அடக்கஸ்தலத்தின் மேலே இருநூறு அடி உயரமுள்ள நான்கு கம்பாஸ்களின் மீது ஏறக்குறைய முப்பது அடி நீளமும் , இருபது அடி அகலமும் உள்ள டெலிவிஷன் திரைகளைப் பொருத்தினர் . இதனால் அங்கு குழுமியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நின்றவண்ணமாகவும் , அமர்ந்தவண்ணமாகவும் பிரஸ்தாப அடக்கஸ்தலங்களிலிருந்து கவ்ரவமிக்க இரு ஸஹாபா பெருமக்களின் பிரேதங்களைத் திறப்பதையும் , வெளியே எடுப்பதையும் தங்கள் கண்களால் நிதர்சனமாக நல்ல முறையில் காணும் சந்தர்ப்பம் கிட்டியது .
மறுநாள் பக்தாது நகரிலுள்ள சினிமா காட்சி சாலைகளில் எல்லாம் இந்நிகழ்ச்சி திரையிடப்பட்டு மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . இவ்விஷய நிகழ்ச்சிக்குப் பின் பக்தாது நகரிலேயே ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . அளவற்ற வகைகளில் யூதர்களும் ,கிருஸ்தவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் எவ்விதக் கட்டாயமுமின்றி பள்ளிவாயில்களுக்கு வந்து மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் . நிதர்சனமான இந்நிகழ்ச்சி பண்டைய கால வரலாற்று ஏடு அல்ல .
இது நமது காலத்திலேயே நமது கண்களால் நிதர்சனமாக கண்ட ஒரு நிகழ்ச்சியாகும் .இத்தகைய அதிசயம் கி.பி.1932ஆம் ஆண்டில் நடந்த ஒரு விஷயமாகும் . இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு மதத்தினரும் ,அந்நிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் கண்ணாரக் கண்டனர் . அகிலத்திலுள்ள பல பத்திரிகைகள் விஷேசமாய்ப் பிரசுரம் செய்தனர் . அன்றியும் ,இவ்வடக்கஸ்தலங்கள் பெயர் தெரியாத ஒரு சிலரைச் சார்ந்ததல்ல . இறுதி நபியாம் முஹம்மது ﷺ அவர்களது அந்தியத்த நண்பர்களான இரு ஸஹாபாக்களின் பிரேத நிகழ்ச்சியாகும் . அவர்கள் யாரென்பதை முஸ்லீம் உலகம் முன்னரே அறியும் .அவர்கள் எத்தகையோர் என்பதை முஸ்லீம் உலகம் ஏற்றுக் கொண்டே இருக்கின்றது .தற்சமயமோ ஆயிரக்கணக்கான மக்கள் பிரஸ்தாப அடக்கஸ்தலத்திற்கு சென்று தரிசித்து வருகின்றனர் . "
இவை போன்ற இன்னும் பல அற்புதங்களை அறிய ஆவலுள்ளவர்கள் அல்லாமா ஷைகு யூசுபுந் நபஹானி رضي الله عنه அவர்களது 'ஜாமியுல் கராமாத் ' என்னும் நூலை நோட்டமிடுக .
எதோ சொற்ப நபர்கள் மட்டும் இத்தகைய பதவியடைந்துள்ளார்கள் என்றெண்ண வேண்டாம் .
' ஏகரப்பில் ஆலமீனருட்களான வேழை பங்காளர் கோடி...
தேகமழியாத நற்பாகம் படைத்த மசித்தர்களனந்தங்கோடி '
என்பதாய் குணங்குடி மஸ்தான் சாஹிப் அப்பா رضي الله عنه அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள் . எனவே மேற்சொன்ன பல சான்றுகளைக் கொண்டு அன்பியா , அவ்லியாக்களது சடலங்கள் மவுத்திற்குப் பின்னும் அழியாது . அவர்கள் ஹயாத்துள்ளவர்கள் என்பது தெளிவாக அறியமுடிகின்றது .
குர்ஆன் ,ஹதீஸ் , இஜ்மா ,கியாஸ் ஆகியனவற்றுக்கு முற்றிலும் மாற்றாக அன்பியா ,அவ்லியாக்களுக்கு மவ்த்த்திற்குப் பிறகு எந்த சக்தியுமில்லை என்றும் கபூருக்குள் எலும்புக்கூடாகிலும் கிடைக்குமா என்பதே சந்தேகம் தானென்றும் , அவர்களது ரோமம்
உட்பட மடிந்து உக்கியிறந்து மண்ணோடு மண்ணாகி விட்டதென்று கூறி விதண்டாவாதம் செய்பவர்கள் இனியேனும் அறிவு பெறுவார்களாக ! அறிஞர்களையடுத்து அறியாமையைப் போக்கிக் கொள்வார்களாக !
No comments:
Post a Comment