உண்மை இவ்வாறிருக்க ,வஸீலாவை நிராகரிக்கக் கூடிய வரம்பு மீறிய கூட்டத்தார்கள் , அன்பியாக்களை ,அவ்லியாக்களை யா ரஸூலல்லாஹ் ! யா வலியுல்லாஹ் ! என்பான் போன்ற சொற்களைக் கொண்டு அழைக்கக் கூடாது என்று பலமாக விவாதம் புரிகின்றார்கள் . தங்களது குருட்டுத்தனமான இத்தகைய விதண்டாவாதத்திற்குச் சாதகமாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்தைத் தவறான முறையிலாக்கி தங்களுக்குச் சாதகமான ஆதாரங்கள் என்று மனப்பால் குடிக்கின்றனர் .
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ
என்ற குர்ஆன் (72:18) ஆயத்திற்கு , "எனவே ,அல்லாஹ்வுடன் எவரையும் வணங்காதீர்கள் " எனவும் ,
என்ற குர்ஆன் (28:88) வசனத்திற்கு "அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை நீர் வணங்காதீர் .அவனைத் தவிர்த்து (வணக்கத்திற்குரிய ) நாயன் (வேறு) இல்லை " எனவும் , அஹ்லுஸ் சுன்னத் ஸுன்னத் வல் ஜமாஅத் முபஸ்ஸிரீன்கள் கருத்து தெரிவித்திருக்க வஸீலாவை நிராகரிக்கக் கூடிய மேற்சொன்ன,அகீதா பிசகிய கூட்டத்தார்கள் ,மேற்சொன்ன இரு ஆயத்துகளுக்கும் , "நீங்கள் அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்க வேண்டாம் " எனவும் , "நீர் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க வேண்டாம் . அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய ) நாயன் (வேறு) இல்லை " எனவும் அர்த்தம் கற்பித்து தங்கள் விதண்டாவாதத்திற்கு ஆதாரங்காட்ட முற்படுகின்றனர் . இவை போன்றே "லாதத்உ" என்று வரக்கூடிய மற்ற ஆயத்துக்களைக் கொண்டும் இவர்கள் இவ்வாறே மேற்கோள் காட்டுகின்றனர் .
அழைத்தல் ,கூப்பிடுதல் ,விளித்தல் என்ற வார்த்தைகளுக்குரிய கருத்துடன் திருமறையில் 'துஆ' எனும் பதம் சில இடங்களில் பிரயோகப்படுத்தப்பட்டிருக்கிறது . 'வணங்குதல்' என்ற கருத்துடனும் திருமறையில் 'துஆ' எனும் பதம் பிரயோகப்படுத்தப்பட்டிருக்கிறது .
'துஆ' என்ற சொல்லிற்கு இருவகையான பொருட்கள் உள்ளன . வணக்கத்தைப் பொதிந்தல்லாத சாதாரண அழைப்பு,கூப்பிடுதல் , விளிப்பு என்ற பொருள் .
இபாதத்து எனும் வணக்கத்தை தன்னுள் அடக்கிக் கொண்ட பிரார்த்தனையான அர்த்தத்துடன் கூடிய பொருள் மற்றொன்று .
முந்திய வகை பற்றி இறைவன் தன் பரிசுத்த திருமறையில் ,
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
"(நபியே) நீர் உமது இரட்சகனுடைய பாதையின் பால் ஹிக்மத்தை(விவேகம் ) கொண்டும் ,அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக " என்று கூறுகின்றான் . [16:125]
இவ்வசனத்தில் 'உத்உ' என்ற துஆ பதம் , வணக்கத்தைப் பொதிந்ததாய் இல்லாத அர்த்தத்தில் 'அழைப்பீராக' என்று வழங்கப்பட்டுள்ளது .
பிந்தியது பற்றி ,வஸீலாவை ஆட்சேபிக்கும் பொருட்டு நிராகரிப்போர் அத்தாட்சியாக எடுத்துக்காட்டும் ஆயத்துகளில் வணக்கத்தைப் பொதிந்துள்ள கருத்தில் பிரயோகிக்கப் பெற்றிருக்கும் துஆக்ககளைப் போல , அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தை வணங்க வேண்டாம் என்பதே ,இப்பொருளையே வேறு ஆயத்துகளுக்கும் விளக்கிக் காண்பிக்கின்றன .
وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِؕ
"நீங்கள் அல்லாஹ்வையன்றி தங்களுக்கு பிரயோஜனத்தையாவது தங்கடத்தையாவது செய்ய இயலாதவற்றை (இபாதத்துச் செய்து ) வணங்குகின்றார்கள் ...." [10:18 ]
என்றும் ,இவை போன்ற இதர ஆயத்துகள் கூறுவதை சிந்தித்து சீர் தூக்கி ஆராய்ந்துணர்க !
எனவே அன்பியா ,அவ்லியாக்களை அழைத்துக் கூப்பிடுதல் கூடாது என்பதற்கு ஆதாரமாக எதிரிகள்கூறும் ஆயத்திலுள்ள 'துஆ' வானது ,அல்லாஹ்வை தவிர உள்ளவை தெய்வத்தன்மைக்கு உரித்தானவை , வணக்கத்திற்கு பாத்திரமானவை என்று கருதியுள்ள அவிசுவாசிகள் விஷயத்தில் தான் பொருந்துமேயல்லாது , ஹகீகத்தில் எல்லாம் அல்லாஹ் ஒருவனைக் கொண்டே நடைபெறுகின்றன . தெய்வத்தன்மைக்கு தகுதியுடையான் வணக்கத்திற்கு பாத்திரவான் அவனையன்றி வேறு எவருமில்லை என்று விசுவாசம் (ஈமான் ) கொண்டுள்ள முஸ்லிம்கள் அன்பியா ,அவ்லியாக்களை விளித்து அழைக்கும் விஷயத்திற்கு முற்றிலும் பொருந்தாது என்பது யாருக்கும் தெரிந்த வெளிப்படையான விஷயமாகும் .
لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا
"உங்களில் சிலர் சிலரை அழைப்பது போல உங்களுக்கிடையில் ரஸூலை அழைப்பதை நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்... "
என்ற குறிப்புடன் [24:63] கூடிய திருமறை வசனமுண்டு .
தப்ஸீர் காஜின் - தப்ஸீர் ரூஹுல் பயான் - ஸாவி முதலியவற்றில் அறிவிக்கப்பட்டுள்ளபடி ,இதன் தாத்பரியம் யாதெனில் உங்களுள் சிலர் சிலரை கண்ணியக் குறைவாகவும் , சாதாரணமாகவும் அழைப்பதைப் போல நபி பெருமானார் ரஸுலே கரீம் ﷺ அவர்களை அழைக்காமல் கண்ணியத்துடனும் ,மரியாதையுடனும் யா ரஸூலல்லாஹ் ! யா ஹபீபல்லாஹ் ! யா நபியல்லாஹ் ! போன்ற அழகிய கண்ணியமான வார்த்தைகளைக் கொண்டு அழைக்க வேண்டும் என்பதே .
சில சந்தர்ப்பங்களில் கண்மணி நாயகம் ﷺ அவர்களை அழைத்தல் இபாதத்திற்கு அவசியமானதாகவும் ஆகி விடுகின்றது.
السلام عليك أيها النبي
(அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு )
"அருமை நபியவர்களே ! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக " என்று அவர்களை அழைத்தல் அத்தஹயாத்தில் அவசியமான காரியமாகும் . அத்தஹயாத்து இவ்வழைப்பின்றி பூரணமாகாது . அத்தஹயாத்தின்றி தொழுகை பூரணமாகாது . இதை கவனித்து நோட்டமிட வேண்டும் .
ஆகவே முஸ்லிம்கள் கூப்பிட்டழைக்கும் விளிப்பு ,அழைத்தல் சிலவேளை ஆகுமான காரியமாகவும் ,சிலவேளை கட்டாயமான காரியமாகவும் அமைந்துள்ளது என்பது மேற்சொன்ன ஆதாரங்களைக் கொண்டு நன்கு தெரிய வருகின்றது.
" அல்லாஹ்வை அழைப்பதற்கு 'துஆ' என்றும் ,மற்றவர்களை அழைப்பதை 'நிதா' என்றும் சொல்லப்படும் . இந்த தாரதம்மியத்தை அறியாதபடி 'யா றஸூலல்லாஹ் -யா வலியல்லாஹ் -யா முஹையத்தீன் - யா ஷைகு ' போன்ற பதங்களால் அழைத்தல் ஆகாது என்பதாகத் தெரியாத தன்மை கொண்டு வஹாபிகளாக சிலர் கூறுகின்றனர் " என்பதாக ஹழ்ரத் ஷாஹ் முஹையத்தீன் ஸாஹிபு வேலூரி رضي الله عنها அவர்கள் பஸ்லுல் கிதாபில் இமாம்களைக் கொண்டு குறிப்பிடுகின்றனர் .
மேலும் இத்தகைய விபரத்தை முப்தி அல்லாமா மஹ்மூது ஸாஹிபு மதராஸி அவர்களும் பஸ்லுல் ஹக்கில் கூறியுள்ளார்கள் . எனவே வஸீலாவை முன்னிட்டு ,அன்பியா ,அவ்லியா ,காமிலீன்களை அழைத்துக் கூப்பிடுதல் ஒருக்காலும் இறைவணக்கமாக மாறாது . ஷிர்க்கும் அல்ல .
அஸ்ஹாபுஸ் ஸுப்பாவில் உள்ள நாயகத் தோழர் ஹழ்ரத் றபீஆ இப்னு கபுல் அன்சாரி رضي الله عنه அவர்கள் ரிவாயத்துச் செய்கின்றார்கள் :-
" நபி பெருமானார் ﷺ அவர்களோடு நானிருந்தேன் . உலூச் செய்வதற்காக தண்ணீர் ,மிஸ்வாக் ,சீப்பு வகையறாக்களை எடுத்துச் சென்று கொடுத்தேன் . அச்சமயத்தில் நாயகம் ﷺ அவர்கள் என்னை நோக்கி இம்மை ,மறுமைக்குரிய நலவான காரியங்களில் உனக்குத் தேவையானதை என்னிடத்தில் கேள் ? " என்று சொன்னார்கள் .
"தங்களுடன் சொர்க்கத்திலாகி இருப்பதை ஆசிக்கின்றேன் " என்று கூறினேன் .
"இத்தோடு இன்னும் வேறென்ன தேவை ? " என்று மீண்டும் நாயகம் ﷺ அவர்கள் வினவினார்கள் .
"இதேயல்லாது வேறொன்றும் தேவை இல்லை " என்று உரைத்தேன் .
மேலே குறிப்பிட்ட ஹதீது ஸஹீஹ் முஸ்லிம் - இப்னு மாஜா -முஃஜம் கபீர் - அஷிஅத்துல் லம்ஆத் ஆகிய கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது .
இந்த ஹதீதில் நாயகம் ﷺ அவர்கள் உனக்கு தேவையானதை என்னிடம் கேள் ,ஸுவாள் செய் என்று கூறியது இம்மை ,மறுமை பேறுகளைக் குறிக்கின்றது என்று ஹதீது விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர் .
இமாமுல் ஹிந்த் ஷைகு அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி رضي الله عنه அவர்கள் இந்த ஹதீதின் ஷரஹில் ," இம்மையும் ,மறுமையும் உங்களால் கிடைத்த சன்மானத்தில் நின்றுமுள்ளவையே . மேலும் லவ்ஹு கலம் உடைய கல்வி அறிவும் உண்டானவை .
வமின் உலூமிக இல்மல் லவ்ஹி வல் கலமி )
என்று கஸீதத்துள் புர்தாவில் இமாம் பூஸரி رضي الله عنه அவர்கள் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள் .
"ஆண்டவனுடைய உத்திரவு கொண்டு ஸர்வரே ஆலம் ﷺ அவர்கள் இம்மை ,மறுமையின் அருட்கொடை நிஃமத்துகளை அளிக்கின்றார்கள் . அவ்வாறாக அளிக்க வல்லமையுடையவர்கள் " என்பதே ஸுன்னத் வல் ஜமாத்தினரின் விசுவாசமாகும் .
(அன காஸிமுன் வல்லாஹு யுஃத்தீ )
' கொடுக்கின்றவன் அல்லாஹ் , நான் பங்கு வைப்பவன் '
என்ற ஸஹீஹ் புஹாரியில் காணப்படும் ஹதீதை ,இமாம் இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه அவர்கள் ,ஷரஹு ஹம்ஸிய்யா 192வது பக்கத்தில் எடுத்துரைத்து "ஆண்டவன் தனக்கு சொந்தமாகவுள்ள உணவளித்தல் உள்பட அறிவு ,ஞானம் ,வழிப்பாடு முதலிய எல்லாவிதமான பொக்கிஷங்களின் சாவியையும் , தனக்குப் பிரதிநிதியும் ,தோழருமான (ஹபீப் ) நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வசம் கொடுத்திருக்கின்றான் . அவர்கள் பங்கு வைத்துக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் . அவர்கள் மூலமாகவே சகலமும் அளிக்கப்படுகின்றன. " என்பதாகக் கூறுகின்றார்கள் .
மேலும் ,புதுஹாத்துல் அஹ்மதியா- பீ- மனஹில் முஹம்மதிய்யா ,89வது பக்கத்தில் அல்லாமா ஷைகு சுலைமான் ஜமல் رضي الله عنه அவர்களும் இப்படியே கூறுகின்றார்கள் .
"அல்லாஹ் ஒருவனைத் தவிர்த்து வேறு யாரிடமும் எவ்வித உதவியும் தேட கூடாது " என்ற வாதத்திற்கு சிலர்
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம். [அல் குர்ஆன் 1:5] என்ற ஆயத்தை மேற்கோளாகக் காட்டுவதுடன் நபியோ ,ரசூலோ , குத்போ , வலியோ யாருக்காயினும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டென்று நம்புவதும் , அவர்களிடம் உதவி தேடுவதும் மாபெரும் குற்றமென்றும் விரிவுரையும் கூறுகின்றனர் . இது அவர்களது அறியாமையையே காட்டுகின்றது .
ஏனெனில் " சூரத்துல் பாத்திஹா ,அம்ரூ-நஹீ ,ஏவல் -விலக்கல் மஸாயில்களை விட்டும் நீங்கியது , அதில் கட்டுப்பட்டதல்ல" என்று தப்ஸீர் அஹ்மதியா கூறுகின்றது .
"ஏவல் -விலக்கல் ( அம்ரூ-நஹீ) உடைய ஆபத்துகள் திருக்குரானில் ஐந்நூறும் ,ஹதீதுகளில் மூவாயிரமும் காணப்படுகின்றன .
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ என்ற ஆயத்து அதில் சேர்ந்தது அல்ல " என்று வஸீலா -ஜலீலா ,46வது பக்கத்தில் சொல்லப்படுகின்றது .
மேலும் அதே பக்கத்திலேயே , "உன்னை ஒருவனென்று உறுதி கொண்டு உனது வணக்கத்திற்கு உன்னிடமே உதவி தேடுகின்றோம் " என்பதே 1:5 ஆயத்திற்குப் பொருளாகும் என்பதாக செய்யிதினா இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களைக் கொண்டு செய்யிதினா இக்ரிமா رضي الله عنه அவர்கள் ரிவாயத்துச் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
இவ்வாறான விளக்க விபரத்தை சிராஜுல் ஹிதாயா 77வது பக்கத்திலும் , ஸாயிக்கத்துல் மவுத்து வ ஐனுல் ஹயாத்திலும்,தப்ஸீர் மதாரிக்கிலும் காண்க .
ஆகவே ஏவல் -விலக்களில் சேராத ஒன்றைச் செய்தல் ஆகுமென விளங்கக்கிடக்கின்றது . இந்த ஆயத்து ஏவல் விலக்கலுடையது அல்லவாகையால் , அன்பியா ,அவ்லியாக்கள் பால் உதவி ஒத்தாசைத் தேடக் கூடாதென்பதற்கு ஆதாரம் ஆகாது . உதவி தேடக் கூடாது என்றிருக்குமேயானால் (வஸ்த்தயீனு பிஸ்ஸபுரி வஸ்ஸலாத்தி ) - 'பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் ' என்ற வேதவாக்கும் , (வப்த்தகூ இலைஹில் வஸீலத்த )- 'அவனளவில் வஸீலாவைத் தேடிக்கொள்ளுங்கள் ' என்ற வேதவாக்கும் (5:35) வந்திருக்காது .
(உத்லுபல் கவாயிஜ இலாதவிர் ரஹ்மத்திமின் உம்மத்தீ ) - 'என்னுடைய ரஹ்மத்துடைய கூட்டத்தார்களிடத்தில் உங்களுடைய தேவைகளைத் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் ' என்ற ஹதீதும் ,
(இதா தஹய்யர்த்தும் பில் உமூரி பஸ்த்தயீனு மின் அஹ்லில் குபூர் ) - 'கருமங்களில் நீங்கள் திகைப்படைந்து விடுவீர்களேயானால் கபுறுகளை உடையவர்களைக் கொண்டு உதவி தேடுங்கள் ' என்ற ஹதீதும் ,
" எவருடைய கால்நடைப் பிராணியாவது காணாமல் போய் விட்டால் ,அல்லாஹ்வின் அடியார்களே , அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக ,தாங்கள் எனக்கு உதவு செய்யுங்கள் என்று கூப்பிட்டுக் கேளுங்கள் " என்ற ஹதீதும் ,
"எவருக்காவது உதவி தேவைப்படுமானால் ,அல்லாஹ்வுடைய அடியார்களே !எனக்கு உதவி புரியுங்கள் ! அல்லாஹ்வுடைய அடியார்களே !எனக்கு உதவி புரியுங்கள் ! அல்லாஹ்வுடைய அடியார்களே !எனக்கு உதவி புரியுங்கள் ! என்று அவர் கூறட்டும் " என்ற ஹதீதும் ,
மற்றும் இவை போன்ற ஹதீதுகளும் வந்திருக்கத் தேவையில்லை .
முஹக்கிக்குல் ஹனஃபிய்யி , அஷ்ஷைகு அப்துல் கனி நாபிலிஸீ رضي الله عنه அவர்கள் ,திமிஷ்க் நகரில் சலீமா என்ற இடத்தில் குர்ஆன் ஷரீபுக்கு வியாக்கியானம் விளக்கம் செய்து கொண்டிருக்கையில் , " (யா அய்யுஹல்லதீனு ஆமநூ இஸ்த்தயீனு பிஸ்ஸபுரி வஸ்ஸலாத்தி ) - 'ஓ ஈமான் கொண்டவர்களே ! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் ' என்ற (25:153) ஆயத்தைச் சுட்டிக்காட்டி , "ஆண்டவனைத் தவிர்த்து பிறரிடம் உதவி தேடக் கூடாது என்று சொல்கிறவனுக்கு இது ரத்தாகும் . அப்படிச் சொல்கிறவன் காஃபிராகி விட்டான் . ஏனெனில் குரானுடைய நஸ்ஸுக்கு (தெளிவாகவும் ,வெளிப்படையாகவும் வந்துள்ள ஏவலுக்கு ) மாற்றமாக இருக்கும் காரணத்தால் ,தேவைகள் நிறைவேற அவ்லியாக்களைக் கொண்டு உதவி தேடுவதே சிறந்த வழி ஆகும் " என்று கூறினார்கள் .
இவ்விபரத்தை அல்லாமா ஷைகு யூசுபுன் நபஹானி மிஸ்ரி رضي الله عنه அவர்கள் ,ஷவாஹிதுல் ஹக் 251வது பக்கத்தில் வரைத்துள்ளார்கள் .
"ஜீவிய காலத்தில் உதவி தேடுவதற்கு எவர்கள் தகுதியானவர்களோ , அவர்களிடம் வபாத்திற்குப் பிறகும் உதவி தேடலாம் " என்பதாக ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்களைக் கொண்டு , அல்லாமா ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه அவர்கள் 'அஷிஅத்துல் லம்ஆத் - தர்ஜுமா மிஷ்காத் ' முதல் பாகத்தில் வரைத்துள்ளார்கள் .
'கஷ்ட காலத்தில் அவ்லியாக்களிடம் இரட்சிக்கும் படி உதவி தேடுதல் கூடும் . மவுத்துக்குப் பிறகும் அவர்கள் இரட்சிப்புத் தரக்கூடியவர்கள் . அன்பியாக்களுடைய முஃஜிஸாத்தும் ,அவ்லியாக்களுடைய கறாமாத்தும் மவுத்துக்குப் பிறகும் விடுபட்டு போக மாட்டா . அவர்கள் ஹயாத்துள்ளவர்கள் . பர்ஜக்குடைய ஆலத்தில் தொழவும் செய்கின்றார்கள் , ஹஜ்ஜும் செய்கின்றார்கள் .இவ்வாறு ஆதாரமான ஹதீதுகள் வந்துள்ளன . '
மேற்சொன்ன விபரம் , அல் புதுஹாத்துல் அஹ்மதிய்யா ,90வது பக்கத்தில் ,அல்லாமா ஷைகு சுலைமானுல் ஜமல் رضي الله عنهارضي الله عنه அவர்கள் மற்றும் ஷவாஹிதுல் ஹக் 69வது பக்கத்தில் அல்லாமா ஷைகு யூசுபுன் நபஹானி மிஸ்ரி رضي الله عنه அவர்களும் எடுத்துரைத்துள்ளார்கள் .
'அவ்லியாக்களிடம் உதவி தேடும் விஷய சம்பதமாய் கஷ்புடைய (கல்புக் கண் ) மஷாயிக்குகளைக் கொண்டுள்ள ரிவாயத்துகள் அநேகமுண்டு . இது பற்றி கிதாபுகளிலும் , ரிசாலாக்களிலும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன .
வாதத்திற்கு மருந்துண்டு ,பிடிவாதத்திற்கு மருந்தில்லை . ஆதலால் பிடிவாதமாக மறுப்போருக்கு அவை பிரயோஜனம் கொடுக்க மாட்டா . ஆகையால் இது பற்றி இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை . இத்தகைய பிடிவாதத் தன்மையை விட்டும் ஆண்டவன் நம்மை கைப்பற்றிக் கொள்வானாக ' என்பதாக ஷைகுல் ஹிந்த் ,அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி رضي الله عنه அவர்கள்
'அஷிஅத்துல் லம்ஆத் - தர்ஜுமா மிஷ்காத் ' ,பாகம் 3,பக்கம் 375ல் கூறுகின்றார்கள் .
மக்ரிபு தேசத்தில் (மொராக்கோ ) வலுப்பமான பகீஹாயும் , பிரபல்யமான ஆரிபாயுமிருந்த ஸெய்யிது அஹ்மது இப்னு ஜர்ரூக் ஷாதுலி رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் ,
" அவ்லியாக்கள் ஹயாத்தில் செய்யும் உதவி வலுப்பமானதா ? மவுத்திற்கு அப்பால் செய்யும் உதவி வலுப்பமானதா ? என்று ஷைகு அபுல் அப்பாஸ் ஹள்ரமி அவர்கள் என்னிடம் வினவியதற்கு , மவுத்திற்கு பிறகு செய்யும் உதவிதான் மிகவும் வலுப்பமானது என்று கூறினேன் . எனது இந்த விடையை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் " என்ற விபரம் 'அஷிஅத்துல் லம்ஆத் - தர்ஜுமா மிஷ்காத் ' , 1வது பாகம் , 633வது பக்கத்தில் காணப்படுகின்றது .
'மவுத்திற்குப் பிறகு அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பது மிகுதமான மஷாயிகுமார்களின் தீர்மானமாகும் . ஆரிபீன்களில் ,உலமாக்களில் மிகுதமான பேர்களின் அகீதா இதுவேதான் ' என்று இமாம் ஷைகு அபூஸயீது சலமீ ஹனபி رضي الله عنه அவர்கள் தமது ஷரஹு பர்ஜக்கில் கூறுகின்றார்கள் .
மேலும் அவர்கள் அதில் மவுத்தை இரு வகையாக விபரிக்கின்றார்கள் .
" மவுத்திற்குப் பிறகு ரூஹு நித்தியமானது . அழிவற்றது .ஆனால் இந்த வெளிரங்கமான திரேகம் அழிந்துவிடும் . இவர்கள் சாமான்யர்களான அவாம்கள் . இவர்கள் பிறருக்கு உதவி செய்ய சக்தி பெற்றவர்கள் . இது ஒரு வகை . மவுத்திற்குப் பிறகு ரூஹும் அழியாது . உடலும் அழியாது . உள்ரங்கமான உயிருடலுடன் , ஹயாத்துடனே என்றும் இருப்பர் . இவர்கள் அன்பியாக்கள் , அவ்லியாக்கள் . உயிரோடு இருப்பவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவர்கள் . இது மற்றோரு வகை .
ஸஹீஹான ஹதீதுகளில் இதற்குப் பலமான ஆதாரங்களுண்டு . இதை எவரும் மறுக்க சக்தி பெற மாட்டார்கள் " என்று அவர்கள் கூறியுள்ளார்கள் .
வஸீலா - சிபாரிசு - இஸ்த்திம்தாது - இஸ்திகாதா -இஸ்த்திஷ்பா - இஸ்த்தி ஆனா முதலிய பதங்கள் பலவிதமாக இருப்பினும் இவை கருத்தில் ஒன்றே .
ஒத்தாசை தேடல் ,சிபாரிசு தேடல் , உதவி தேடல் ,இரட்சிப்புத் தேடல் , நோய் நிவாரணம் பெற தேடல் , உபகாரம் தேடல் முதலியன முறையே அவற்றின் பதப் பொருளாகும் .
No comments:
Post a Comment