Thursday 6 September 2018

கபூரை முத்தமிடலாமா ? - 2




" அவ்லியாக்களின் தர்காக்களுக்குச் சென்று ஜியாரத்துச் செய்ய போகின்றவர் , அந்த அவ்லியாக்களின் வபாத்திற்கு முன்பு எவ்வளவு நெருங்கி நிற்கக் கூடுமோ அவ்வளவுக்கு அவர்களுடைய ரவ்லா ஷரீபுக்குச் சமீபமாகி ஜியாரத்துச் செய்வது ஸுன்னத்தாகும் .
அவர்களுடைய வாசற்படிகளை தபர்ருக்குடைய நாட்டத்தோடு முத்தமிடலாம் .

Hashiyat al Imam Bajuri

செய்யிது அஹ்மத் பதவீ رضي الله عنه   அவர்கள் தர்காவில் நடைபெற்று வருவதைப் போல ஆணும் பெண்ணும் கலந்த சந்தடியாய் வாசற்படியை முத்தமிட இயலாவிட்டால் , கூட்டம் கலைக்கின்ற வரையில் தனக்கு ஓதத் தெரிந்த   மட்டில் யாதாவது ஓதிக் கொண்டே காத்து நின்று அப்பால் முத்தமிடலாம் . கூட்டம் கலைவதாக இல்லையென்றால் தனது கையைக் கொண்டோ , கையிலுள்ள அஸா கம்பைக் கொண்டோ முத்தமிடுவது போல் சமிக்கை செய்வதும் ஆகும் "  என்பதாக 'ஹாஷியத்துல் பாஜூரி' ,1வது பாகம் ,318வது பக்கத்தில் விரிவாக காணப்படுகின்றது . 'நிஹாயாவின் ஹாஷியத்து  ஷெய்கு அலீ ஷிப்ராமல்ஸீ  ', 2வது பாகம் , 218வது பக்கத்திலும் சொல்லப் பெற்றிருக்கின்றது .

" அவ்லியாக்களின் கப்ருகளை பரக்கத்தை நாடி முத்தமிடுவது மக்ரூஹ் அல்ல ,ஆகுமானதே " என்று இமாம் றமலீ  ஷாபிஈ رضي الله عنه   அவர்கள் ,இமாம் ஷெய்கு முஹம்மது ஷவ்பரீ  ஷாபிஈ  رضي الله عنه   அவர்களும் பத்வா கொடுத்துள்ளார்கள் .

இவ்வாறே துஹ்பாவின் ஹாஷியா ஷர்வானீ , பிக்யா , பதாவா சுலைமானுல் குர்தீ ஆகியவைகளும் கூறுகின்றன . 

"அவ்லியாக்கள் ,உஸ்தாதுமார்கள் அகியோர்களுடை கபுறுகளை பரக்கத்தை நாடி தொட்டு முத்தமிடுவது மக்ரூஹ் அல்ல , அவை ஆகுமான காரியங்களே " என்பதாய் 'ஹாஷியத்துல் இஜ்னாஉ' வில் வருகின்றது என்பதாய் மேன்மைக்குரிய இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்று பெயர் பெற்று விளங்கும் அல்லாமா ஸெய்யிது முஹம்மது சாஹிபு رضي الله عنه   அவர்கள்   'பத்ஹுத் தையான்'  183வது பக்கத்திலும் , 'மகானீ' 188வது பக்கத்திலும் அறிவித்துள்ளார்கள் .

"வலிமார்களுடைய கபுருகளை பரக்கத்தை நாடி முத்தமிடுவது  'முஃத்தமது' சொற்படி மக்ரூஹ் கிடையாது ,அது ஆகுமானதே " என்று அல்லாமா ஷெய்கு சுலைமான் رضي الله عنه   அவர்கள்  'ஹாஷியத்துல் புஜைரமீ  அலா ஷரஹில் மின்ஹாஜ்' ,1வது பாகம் ,548வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .

"கப்ருகளை முத்தமிடுவது 'மக்ரூஹ்' என்று இப்னு ஹஜர் رضي الله عنه   அவர்கள்   சொல்லியிருப்பினும் ,வலிமார்களுடைய கப்ருகளை பரக்கத்தை நாடி முத்தமிடுவது  மக்ரூஹ் இன்றி   கூடும்   என்பதே  
முஃத்தமது  எனும் உறுதியான சொல்லாகும் " என்று பாஸில் பர்மாவீ   رضي الله عنه   அவர்கள்   கூறுகின்றார்கள் என்பதாக  'குஹ்லுல் -உயூன்-பீ- தபயிஷ்-ஷிப்ஹி-வள்ளுநூன்'   ,55வது பக்கத்தில் வரையப்படுள்ளது .

குரான் ஷரீபை தவிர்த்து , அன்பியாக்களுடைய கப்ருகளையும் ,எவர்களைக் கொண்டு  பரக்கத்து தேடப்படுமோ அவர்களுடைய கபுருகளையும் முத்தமிடும் விஷயத்தில் சிலர் ஆகுமென்றும் ,சிலர் மக்ரூஹ் யென்றும்   சொல்கின்றார்கள் . ஆனால் மேன்மைக்குரிய இமாம் முஹம்மது இத்ரீஸ் ஷாஃபிஈ  رضي الله عنه   அவர்கள் ,தபர்ருக்குடைய நாட்டத்தோடு கபூரை முத்தமிடுதல் ஆகும் என்று கூறி இருக்கின்றார்கள் .

இமாம் ஐனீ ஹனபி رضي الله عنه   அவர்கள்   ,  இமாம் ஜம்ஹூத்தி ஷாஃபிஈ رضي الله عنه   அவர்கள்   ,இமாம்  முகிர்ரீ மாலிகி رضي الله عنه   அவர்கள்   ஆகியோரும் , இன்னும் உலமாக்களில் ஒரு கூட்ட்டத்தாரும் இமாம் ஷாஃபிஈ رضي الله عنه   அவர்களுடைய இச்சொல்லை உறுதிப்படுத்தி அங்கீகாரம் அளித்துள்ளனர்  .

"தபர்ருக்குடைய நிய்யத்தைக் கொண்டு கட்டுப்படுத்தப் பெற்றிருப்பதால் மக்ரூஹ் ஹுக்கு  இடமில்லை .அமல்களெல்லாம் எண்ணத்தை பொறுத்தேயுள்ளன " என்னும் விபரம்  ' தவாவிஉல் -அன்வார் -ஷரஹு துர்ருல் முக்தார் ' ல் வருவதாக 'துல்பகார் ஹைதரிய்யா '  136,137வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது .

 " இமாமுல் அஃலம் ஹழ்ரத் அபூஹனீபா رضي الله عنه   அவர்களது சீடரும் , ஹனபி மத்ஹபின் முஜ்த்தஹிதுமாகிய  இமாம் முஹம்மது رضي الله عنه   அவர்களைக் கொண்டு ,வலிமார்களுடைய கபுருகளை முத்தமிடுதல் கூடும் என்பது ஸ்திரமாக்கப் பெற்றிருப்பதால் , ஹனபியாக்களுக்கு இது பலமான அத்தாட்சியாகும் .இது விஷயத்தில் எவரும் இன்கார் செய்ய இடமில்லை " என்று  முப்தி செய்யித் ஷாஹ் காதிரி பெங்களூரீ  அவர்கள்  'துல்பகார் ஹைதரிய்யா ' வில் வரைகின்றார்கள் .

"உகப்புடையவர்களின் கிருபையை நான் பெற்றுக்  கொள்வதற்காக  நபி பெருமானார்     صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் உடைய    வாசற்படியை நான் முத்தமிடுகின்றேன் " என்று இமாம் கஸ்ஸாலி رضي الله عنه   அவர்கள் இயற்றிதாகச் சொல்லப்படும்  'ஸுப்ஹான மவ்லித் ஷரீபில்'  காணப்படுகின்றது .



لا طِيْبَ يَعْــدِلُ تُرْبـًا ضَمَّ أعْظُمَهُ
طُوْبٰى لِمُنْتَشِـقٍ مِّنْـــهُ وَمُـلْتَثِـمِ

"எம் பெருமானார் முஹம்மது முஸ்தபா   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது 
திருமேனியைப் பொதிந்துள்ள மண்ணின் நறுமணத்திற்கு எந்த மனமும் நிகராக மாட்டாது . அந்தப் புனித தேகத்தைப் பொதிந்துள்ள  மண்ணை முத்தி முகர்ந்தவருடைய பாக்கியமே பாக்கியம் " என்பதாக இமாம் முஹம்மது ஷரபுத்தீன் பூஸரி   
 رضي الله عنه   அவர்கள் புர்தா ஷரீபில் கூறியுள்ளார்கள் .

மேலும் ஷரஹுப் புலி ,மாதிஹுர் ரஸூல் இமாம் ஸதக்கதுல்லாஹ் காதிரி காஹிரி  رضي الله عنه   அவர்கள்  தங்களது வித்ரிய்யாவில் ,'ஸாத்' உடைய பகுதியில் ( ஹாஜத் - லி - தக்பீலி - கப்ரிஹீ - வ -கப்ரி - அபீபக்கரின் - வ -கப்றீ -அபீ ஹப்ஸின் ) , "தமீயேனுடைய     ஆசையானது  அருமை நபி    صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் உடைய  கபுரையும் , ஹழ்ரத் அபூபக்கர்    رضي الله عنه   அவர்களது கபுரையும் , அபூஹப்ஸ் என்ற பெயருடைய ஹழ்ரத் உமர் رضي الله عنه   அவர்களது கபுரையும் முத்தமிடவேண்டுமென்று அலைமோதி துடிக்கின்றது "  என்பதாக உரைத்துள்ளார்கள் .

"ஆதி முதல் அந்தம் வரை எவ்வித திரையும் மறைவுமின்றி காணவேண்டுமென்றால் அவ்லியாக்களுடைய மண்ணை சுர்மாவாக கண்ணில் தீட்டி நேத்திர ஜோதியைப் பெற்றுக் கொள்வீராக "  என்று மவ்லானா முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி 
رضي الله عنه   அவர்கள்  'மஸ்னவி ஷரீபில்' பகர்ந்துள்ளார்கள் .

 "அவ்லியாக்களுடைய கபுறுகளை உண்மையான நல்லெண்ணத்துடனும் , கலப்பற்ற நிர்ணயத்துடனும் , தூய்மையான மனதுடனும்  நீ முத்தமிடுவாயானால் ,அந்த வலியின் மீது சத்தியமாக உனக்கு பாத்தின் உடைய நூர் உண்டாகும் " என்று இமாம் இப்னு ஜவ்ஸி முஹத்தித் رضي الله عنه   அவர்களது சீடர் ஷெய்கு ஸஃதீ ஷிராஸி  رضي الله عنه   அவர்கள்  'போஸ்த்தான்' னில் உரைத்துள்ளார்கள் .

இவை நிற்க , " இமாம்களின் இஜ்மா ஏகோபித்த அபிப்ராயமில்லாத ,கருத்து வேற்றுமை (கிலாப் ) உள்ள மஸ்அலாக்களின் பேரில் இன்கார் செய்து , குற்றங்குறை கூறுவதும் , விலக்குவதும் , மார்க்கச் சட்ட மேதைகளான 'புகஹாக்களின்'  உஸுல் என்னும் மார்க்க அடிப்படை வழிமுறைப்படி சட்டமன்று , என்பதாகக் குறிப்பிட்டு , ' ஸாயுன்க்கரு - இல்லா - மா -   உஜ்மிஅ  - அலா - மன்யிஹீ ' எனும் கோட்பாட்டை மேற்கோளாக காட்டி அல்லாமா முப்தி மஹ்முது ஸாஹிப் மதராஸீ  அவர்கள்  'பத்ஹுல் ஹக் ' ,89வது பக்கத்தில் அத்தாட்சியாக கூறியுள்ளார்கள் .

anwar e aftab e sadaqat

இதுபற்றியும் ,இது போன்ற சிக்கலான பல மஸ்அலாக்கள் பற்றியும் விரிவாக , பஞ்சாப், லூதியானாவிலுள்ள   காஜீ  பஜ்லு அஹ்மது ஹனபீ நக்ஷபந்தி அவர்கள் இரு பாகங்களாக  'அன்வாரே -ஆப்த்தாபெ - ஸதாகத் '  என்னும் நூலில் எழுதியுள்ளார்கள் . இந்த கிதாபை சரி கண்டு பல ஊர்களிலுள்ள 66 பிரபல்யமான உலமாக்கள் கையொப்பம் செய்துள்ளனர் . அவர்களுள் சங்கைக்குரிய மீரட் மவ்லானா அப்துல் அலீம் சித்திக்கீ    رضي الله عنه   அவர்களும் ஒருவர் .

கபுருகளை முத்தமிடும் விஷயத்தில் சில உலமாக்கள் அபிப்ராய பேதம் கொண்டுள்ளனர் . ஹயாத்தோடு உள்ள மகான்களிடத்தில் ஒழுக்கம்  மரியாதையைப் பேணியும் , பயப்பகுதியைக் கொண்டும் அவர்களுக்கு மிகவும் சமீபத்தில் நெருங்கி இருப்பதில்லை . அவர்களைத்   தொட்டு பேசுவதுமில்லை . சற்று அகன்று நின்று சம்பாஷிப்பது தான் ஒழுக்கமும் ,மரியாதையும் ஆகும் .

அவ்விதமின்றி மற்ற சாமானியர்களுடன் பழகுவது போல் வலிமார்களிடம் நடந்து கொள்வது வெறுக்கத்தக்கதாகும் . அந்த இறைநேசர்கள் வபாத்திற்குப் பின்பும் ஹயாத்துள்ளவர்கள் . அவர்கள் ஜியாரத்துச் செய்ய வருகின்றவர்களை அறிகின்றார்கள் . சலாம் சொல்கின்றவர்களுக்கு பதில் ஸலாமும் சொல்கின்றார்கள் . கபுருகளில் அவர்கள் தொழுது கொண்டும் .ஹஜ்ஜு செய்து கொண்டும் இருக்கின்றார்கள் . ஆகவே ஜீவியத்தில் நடந்து கொண்டது போலவே மரணத்திற்கப்பாலும் நடந்து கொள்வது தான் ஒழுக்கமும் ,மரியாதையும் ஆகும் .

கபுருகளுக்கு சற்று அகன்று நின்று தூரத்தில் இருந்தே பயபக்தியோடும் ,அதபு -ஒழுக்கத்தோடும் ஜியாரத்துச் செய்வது தான் ஒழுக்க முறையாகும் என்பதே அந்த உலமாக்களின் அந்தரங்க நோக்கமாகும் . இந்நோக்கத்துடனே வாயாலோ ,கரத்தாலோ தொட்டு முத்தமிடுதல் 'மக்ரூஹ்' வெறுக்கத்தக்கது என்பது தான் சில உலமாக்களின் அபிப்ராயமே அல்லாது , பரக்கத்தை நாடி முத்தமிடுதல் ஆகாது என்பதல்ல .

ஜீவிய காலத்தில் வலிமார்களை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படும் போது பரக்கத்தை நாடி அவர்களின் பாதங்களைத் தொட்டு முத்திக் கொள்கின்றோம் . கரங்களைப் பிடித்து கண்களில் ஒத்தி வாயால்    முத்தமிடுகின்றோம் . அம்மகான்களின் வபாத்திற்குப் பிறகும் அதே எண்ணத்துடன் பரக்கத்தை நாடி அவர்களது கபூர் ஷரீபையும் , அவற்றின் வாசற்படிகளையும் கரத்தால் தொட்டோ , தொடுவது போல் சமிக்கை செய்து முத்தமிடல் ,நல்லொழுக்க மரியாதையைச் சார்ந்ததே என்பது பெரும்பாலான உலமாக்களின் அபிப்ராயமாகும் .


எனவே ,மேலே கண்ட ஆதாரங்களைக் கொண்டு பரக்கத்தை நாடி கபுருகளை மட்டுமல்ல ,அவற்றைச் சார்ந்த வாசற்படிகளையும் ,வலிமார்களின் காலடிபட்ட இடங்களையும் முத்தமிடலாம் என்பது குன்றின் மேலிட்ட தீபம் போல் விளங்கக் கிடைக்கின்றது . இத்தன்மையை அவ்வாறு செய்வது கூடாது எனக் கூறுபவர்கள் உண்மைகளை மூடி மறைத்தோர் ஆவார்கள் .            

         


     

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...