Saturday 22 September 2018

கபுறுகளில் போர்வை போர்த்தலாமா ?


கபுறுகளில் போர்வை போர்த்தலாமா ?
சந்தனம் பூசலாமா ? புஷ்பம் போடலாமா ?
வாசனைத் திரவியங்கள் ,சாம்பிராணி புகை போடலாமா ?




கபுறுகளின் பேரில் போர்வைகள் போர்த்தப்படுகின்றன . உரூஸ் காலங்களில் சந்தனம் பூசப்படுகின்றது . மற்ற நாட்களில் அத்தர் , பன்னீர் தெளிக்கப்படுகின்றது .  சாம்பிராணி ,ஊதுபத்தி , சந்தனக் கட்டை , அகில் கட்டை முதலிய வாசனை திரவியங்கள் புகைக்கப்படுகின்றன .இவையெல்லாம் கூடுமா ? என்ற ஐயம் எழுகின்றது . கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை நன்கு படித்தறிந்து அத்தகைய சநதேகத்தைப் போக்கிக் கொள்வீர்களாக !

நபி பெருமானார் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் வபாத்தாகி அடக்கமானதும் அந்த முபாரக்கான கபூர் ஷரீப் மீது போர்வை போர்த்தும் வழக்கம் ஸஹாபாக்கள் காலத்தில் இருந்தே ஆரம்பம் ஆகி இன்று வரை நடைபெற்று வருகின்றது .


ஹழ்ரத் காஸிம் இப்னு முஹம்மது இப்னு  அபூபக்கர்
 رضي الله عنه  அவர்கள்  உம்முல் மூஃமினீன் ஹழ்ரத் ஆயிஷா ஸித்திக்கா
رضي الله عنها  அவர்களிடம் சென்று , " அன்னையே , ரஸுலுல்லாஹ் உடையவும் இரு ஸஹாபாக்கள் (ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் 
 رضي الله عنه  ,ஹழ்ரத் உமர் பாரூக்  رضي الله عنه  ) உடையவும் கபுறுகளை எனக்கு திறந்து காட்டுங்கள் " என்று கேட்டேன் . அவர்கள் கபுருகளை திறந்து காண்பித்தார்கள் என்ற ஹதீத் அபூதாவூதைக் கொண்டு முஹக்கிக் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி  رضي الله عنه   அவர்கள் தமது நூல் ,'அஷிஃஅத்துல் லம்ஆத் ',பாகம் 1, பக்கம் 616ல் ரிவாயத்துச் செய்கின்றார்கள் .     


"ரஸூலுல்லாஹி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களது முபாரக்கான கபூர் ஷரீபை திறந்து காண்பிக்கும்படி ஒரு பெண்மணி அன்னை ஆயிஷா ஸித்திக்கா  رضي الله عنها  அவர்களிடம் கேட்டுக் கொண்டார் . அவர்கள் திறந்து காட்டினார்கள் . அப்பெண்மணி தரிசனம் செய்து உயிர் போகின்ற மட்டில் அழுதழுது அவ்விடத்திலேயே உயிர் துறந்தார்  "  என்னும் ரிவாயத்து 'கிதாபுஷ் ஷிபா ' , பக்கம் 199ல் சொல்லப்படுகின்றது .

Naseemur Riyad

நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களது முபாரக்கான கபூர் ஷரீப் ஜனங்களின் பார்வையை விட்டும் மறைந்து வீட்டினுள் இருப்பதால் திறந்து காண்பிக்கும்படி ஆயிஷா நாயகியிடம் அப்பெண்மணி கேட்க ,அவர்கள் கபூர் ஷரீப் மீதுள்ள போர்வையை அகற்றிக் காண்பித்தார்கள் என்பதாக மேலே கண்ட ஹதீதுக்கு 'நஸீமுர் ரியாள் -ஷரஹு ஷிபா காழி இயாலில் ' வியாக்கியானம் செய்யப்படுகின்றது .

கபூர் ஷரீப் மீதிருந்த போர்வையை எடுத்துவிட்டுக் காண்பிக்கும்படி அன்னை ஆயிஷா நாயகி رضي الله عنها  அவர்களிடம்  அப்பெண்மணி விண்ணப்பித்துக் கொண்டார் . அவர்கள் கபூர் ஷரீபின் மீதிருந்த போர்வையை அகற்றிவிட்டுக் காண்பித்தார்கள் என்பதாக 'கிதாபுல் மததுல் பையாள் பி நூரிஷ்ஷிபா காழீ இயால் ' ,பாகம் 2,பக்கம் 21ல் கூறப்படுகின்றது . 

இவற்றைக் கொண்டு நபி பெருமானார்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களது கபூர் ஷரீபின் மீது போர்வை போர்த்தப்பட்டிருந்தது என்பது ஆதாரப் பூர்வமாக நன்கு விளங்குகின்றது .

போர்வைகள் , தலைப் பாகைகள் , துணி வகையறாக்கள் அவ்லியாக்கள் ,ஸாலிஹீன்கள் உடைய கபுறுகள் மீது வைப்பது மக்ரூஹ் என்று சில புகஹாக்கள் சொல்லுகின்றார்கள் .அனால் சாமான்ய ஜனங்களின் பார்வையில் கபுராளிகள் கேவலமாகக் காணப்படாமல் வலுப்பமானவர்களாகவும் , மறதியாளருக்கும் ,தரிசனம் புரிவோருக்கும் மரியாதையும் ,பக்தியும் உண்டாக வேண்டுமென்ற எண்ணத்துடனும் , அவ்விதம் செய்வது ஜாயிஸ் (ஆகுமானது ) என்று நாம் கூறுகின்றோம் .


ஏனெனில் , (இன்னமல் அஃமாலு   பின்னிய்யாத் ) செயல்களெல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே உள்ளன என்பதாய் 'ரத்துல் முக்தார் ' ,5வது பாகம் , 256ஆம் பக்கத்தில் வரையப்பட்டுள்ளது . இவ்வாறே உஸ்தாது அப்துல் கனீ நாபிலிஸி رضي الله عنه   அவர்களும் 'கிதாபு   கஷ்புன் நூர் அன் அஸ்ஹாபில் குபூர் '    என்ற கிரந்தத்தில் கூறியுள்ளார்கள் .

மேலும் திரை ,போர்வை முதலானவைகளை வலிமார்கள் ,ஸாலிஹீன்கள் உடைய கபூர் ஷரீபிகளில் போடுவது ஆகும் . அதை விலக்கக் கூடாது . அவ்வாறு போடுவது அவர்களை சங்கை செய்வது ,மரியாதை படுத்துவதில் உள்ளதாய் இருக்கும் . அமல்கள் நிறைவேறுவது அவரது நிய்யத்து பிரகாரமாய் இருக்கும் என்று அல்லாமா இப்னு ஆபிதீன் رضي الله عنه அவர்கள் 'தன்கீ ஹுல் பதாவா ஹாமிதிய்யா ' ,பாகம் 1,பக்கம் 357 மற்றும் 'ரத்துல் முஹ்த்தார்' , பாகம் 5,பக்கம் 256ல் குறிப்பிட்டிருப்பதுடன் 'தப்சீர் ரூஹுல் பயான் ' ,' கஷ்புன் நூர் ' , ' தஹ்ரீகுல் முஹ்தார் ' முதலிய கிரந்தங்களிலும் நக்லு செய்யப்பட்டிருக்கின்றது .

Tuhfatul Muhtaj

நபி பெருமானார்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களுக்கு உகப்பானவற்றுள் வாசனையும் ஒன்று என்பதாய் நாயக வாக்கியம் கூறுகின்றது . மலாயிகத்துகள் மணமான வாடையின் பேரில் பிரியமுள்ளவர்களாய் இருப்பதால் கபூர் ஷரீபுக்கு ஆஜர் ஆவதை நாடி கொஞ்சம் சந்தனம் வகையறாக்களை பூசுவது மக்ரூஹ் இன்றியே ஆகுமானது - முஸ்தஹப்பானது என்று இமாம் ஸுபுகீ
    رضي الله عنه   அவர்கள் சொல்வதாக 'துஹ்பத்துள் முஹ்தாஜ் ' என்னும் கிரந்தத்திலும் , "இதுபோல மணமான வாசனை பூசுவது ஸுன்னத் '" என்று 'துஹ்பாவுடைய ஹாஷியா ஷர்வானியிலும் '  , இவ்விதம் செய்வது ஸுன்னத் என்று  'ஹாஷியத்துள் பாஜூரி ' ,பாகம் 1,பக்கம் 321ல் கூறப்படுகின்றன .

கபூர் ஷரீப் மீது புஷ்பங்கள் ,ஈரமான பசுமையான வஸ்துக்கள் போடுவது முஸ்தஹப்பு . ஏனெனில் நபிகள் நாயகம்   
 صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் திருவுளமானதாக ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்  رضي الله عنه அவர்களைக் கொண்டு  இப்னு ஆபிதீன் 
 رضي الله عنه அவர்கள் ரிவாயத்துச் செய்வதாவது ," ஒரு முஸ்லிமுடைய கப்ரின் மீது பூ போடுவதால் அந்த மலரின் தஸ்பீஹைக் கொண்டு கப்ராளிக்கு அதாபு லேசாகின்றது . மேலும் பூ போட்டவருக்கு நன்மை எழுதப்படுகின்றது "   என்பதாக அல்லாமா அபூஸைது ஸல்மீ ஹனபீ      رضي الله عنه   அவர்கள் 'ஷரஹு பர்ஜகில் ' நக்லு    செய்கின்றார்கள் .

"கப்ரின் மேல் பூ போடுவதும் , பச்சைக் கொப்புகளை நடுவதும்  முஸ்தஹப்பும் ,அழகான கருமமும் ஆகும் . அந்த பூ எதுவரை காயாது இருக்கின்றதோ அதுவரை அல்லாஹுதஆலாவை தஸ்பீஹ் செய்கின்றது " என்று இமாம் ஸதருஷ் ஷஹீத்   رضي الله عنه   அவர்களைக் கொண்டு 'ஷரஹு மஜ்முஉ'வில் நகல் செய்யப் பெற்றிருக்கின்றது .


"பன்னீர் ,புஷ்பம் ,ரைஹான் முதலானவற்றைக் கப்ருகள் மீது போடுதல் அழகான கருமமாகும் " என்று      'பதாவா ஆலம்கீரீயில் ' சொல்லப்படுகின்றது . 

HashiyatAlBAjuriAlaFathulQaribAlMujib

"  கப்ருகளில் பூக்கள் போடுவது முஸ்தஹப்பு ,அதனால் கப்ராளிகளுக்கு றாஹத் உண்டாகின்றது "    என்று 'ஹாஷியத்துல் பாஜூரி ' , 1வது பாகம் ,318வது பக்கத்திலும் , 'இஆனா ' , 2வது பாகம் ,140வது பக்கத்திலும் காணப்படுகின்றது .

"ஸுன்னத் வல் ஜமாத்தைச்   சேர்ந்தவர்கள் , ஹதீதின் ரிவாயத்தைக் கொண்டு அமல் செய்யும் பொருட்டு சந்தூக் பேரிலும் , கப்ரு மீதும் போர்வை, பூ  போடுகின்றார்கள் " என்பதாய் மவ்லானா ஷாஹ் அஹ்மது ஸயீத் முஜத்திது திஹ்லவி   رضي الله عنه   அவர்கள் 'தஹகீகுல் ஹக்குல் முபீன் ',34வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .

"கப்ரின் பேரில் சந்தனம் பூசுவதும் , பூ போடுவதும் ஆகும் "  என்று மதராஸ் பிரதம கவர்மெண்டு காஜி மவ்லானா ,மவ்லவி அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாஹிப்   رضي الله عنه   அவர்கள் ,ஹிஜ்ரி 1341ல் மத்பஉ மக்துமிய்யாவில் அச்சாகி இருக்கும் 'கிபாயத்துல்லபீப் ' என்ற பத்வாவில் கூறுகின்றார்கள் .

மதராஸிலுள்ள மேன்மை தாங்கிய உலமாக்கள் அனைவரும் அதை சரிக்கண்டு கையெழுத்து வைத்திருக்கின்றார்கள் . 

* அல்லாமா முப்தி மஹ்மூது  ஸாஹிப் 
*ஷம்ஷுல் உலமா அல்ஹாஜ் உபைதுல்லாஹ் ஸாஹிப் (கவர்மெண்டு காஜி )
*அல்லாமா முப்தி அல்ஹாஜ் முஹம்மது தமீம்         ஸாஹிப் 
*அல்லாமத்துல் பாழில் ஹக்கீம் அல்ஹாஜ் முஹம்மது தமீம் ஸாஹிப் 
*அல்லாமத்துல் பாழில் ஹக்கீம் அல்ஹாஜ் ஷாஹ் முஹம்மது பத்ருத்தீன் ஹுசைன் ஸாஹிப் ஸித்திக்கீ  காதிரி 

ஆகியவர்கள் அதில் பிரபல்யமானவர்கள் .

இரு கப்ருகளில் அதாபு நடப்பதைக் கண்டு பசுமையான பேரீத்தங் குச்சியை இரு கப்ருகளிலும் நாயகம் ﷺ அவர்கள்
நாட்டி அவை காய்ந்து போகும் வரையில் வேதனை இலேசாகும் என்றும்,அதன் தஸ்பீஹைக் கொண்டு கப்ராளிகளுக்கு றாஹத் உண்டாகிறதென்றும் கூறினார்கள் என்ற நாயக வாக்கியங்கள் காணப்படுகின்றன.

" மையித்தை தபன் செய்தபின் தலைமாட்டிலும் கால் மாட்டிலும் இரு பசுமையான கோப்புகளை நட்டுவது முஸ்தஹப்பாகும். ஏனெனில் நாயகம் ﷺ அவர்கள் பசுமையான கொப்பை  எடுத்து அதைக்கீறி இரண்டாகப் பிளந்து கப்ரில் வைத்தார்கள்  " என்று ஸஹீஹ் புகாரி ,ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரு ஹதீஸ் கிரந்தங்களிலும் சொல்லப்படுகின்றது.

" ஸஹாபி புரைதா رضي الله عنه அவர்கள் தன்னுடைய கப்ரில் இரு பசுமையான கொப்புகள் வேண்டுமென வஸிய்யத் செய்திருந்தார்கள் . அவர்களுக்கு அவ்வாறே செய்யப் பெற்றது " என்று ஸஹீஹ் புஹாரி ஷரீபில் கூறப்படுகிறது.

மேற்சொன்ன ஹதீஸ் மிஷ்காத் ஷரீபிலும் காணப்படுவதாய் அதனுடைய தர்ஜூமா 'அஷிஃஅத்துல் லம்ஆத்',1வது பாகம்,183 ம் பக்கத்தில் குறிப்பிட்டு ,' இந்த ஹதீஸைக் கொண்டு உலமாக்களில் ஒரு கூட்டத்தார் கப்றாளிகளின் பேரில் றைஹான் பூக்களும், பச்சைகளும் போடுவது ஆகும் எனக்  கூறுகின்றார்கள் " என்பதாய் முஹக்கிக் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه அவர்கள் வரைந்துள்ளார்கள்.


மேலும் " என்னுடைய பிந்திய தோழர்களில் நின்றும் சில இமாம்கள் மேற்சொன்ன ஹதீஸைக் கொண்டு கப்றாளிகளின் பேரில் பூ போடுவதும்,பசுமையான குச்சி நாட்டுவதும் முஸ்தஹப்பென்று பத்வா கொடுத்திருக்கின்றார்கள் " என்பதாக அல்லாமா முல்லா அலி காரீ رضي الله عنه அவர்கள் 'மிர்காத் ஷரஹூ மிஷ்காத்',1வது பாகம் ,286வது பக்கத்தில் நகல் செய்திருக்கிறார்கள்.

பாத்திஹா ஓதும் போது ஊதுபத்தி,சாம்புராணி போன்றவை புகைப்பது ஆகுமென ஹனபீ கிரந்தங்களைக் கொண்டு ஸ்தாபிக்கப் பெற்றிருக்கின்றது  .'உம்தத்துல் பதாவாவில்' நின்று 'வஸீலத்துன் நஜாத்' என்ற கிரந்தத்தில் சொல்லப்படுவதாய் 'தஸ் ரீ ஹூல் அவ்தக் தர்ஜூமா ஷரஹூ பர்ஜக்' கில் பக்கம் 340 ல் வரையப்படுவதாவது : 

" பாத்திஹா ஓதுகின்ற நேரத்தில் ஊதுபத்தி அம்பர் புகைப்பதும் மணமான வஸ்துக்களை வைப்பதும் தாபியீன்களைக் கொண்டு ஸ்திரமாக்கப் பெற்றிருக்கின்றது. ஹழ்ரத் ஸூல்தான் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் மனைவியும் ஹழ்ரத் உம்முஹானீ رضي الله عنه அவர்களும் ஸஹாபாக்கள் முன்பாக இவ்வாறு செய்திருக்கிறார்கள் . ஒருவரும் ஆட்சேபனை செய்யவில்லை . இவ்வழக்கம் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை நடைபெற்றுவருகின்றது " என்று இவ்விஷயத்தை 'மப்ரூக் ' எனும் கிரந்தத்தில் இமாம் பஜ்தவீ     
رضي الله عنه அவர்கள் எழுதியுள்ளார்கள் . மேலும் முப்தி மஹ்மூது ஸாஹிப் மதராஸி رضي الله عنه அவர்களும் 'பத்ஹுல் ஹக் ' ,33வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .



"வலிமார்களது கபூர் ஷரீப் உள்ள இடங்களில் குளோபு ,லைட் ,விளக்கு  , வகையறாக்கள்  மெழுகுவர்த்திகள் முதலியவை ஏற்றுவது அவர்களை சங்கை செய்து கண்ணியப்படுத்தி வைப்பதாகும்  . இவ்விதம் செய்வது  அழகான நாட்டத்தின் உயர்ந்த இலட்சியமாகும் . அவற்றை விலக்கக் கூடாது "  என்று  ' தப்சீர் ரூஹுல் பயான் ,3வது பாகம் ,400 வது பக்கத்திலும் , ' தஹ்ரீ ருல்  முக்த்தார் ' ,  1வது பாகம் , 123வது பக்கத்திலும் ,'கஷ்புன் நூரிலும் '   விரிவாக வரையப் பெற்றிருக்கின்றது .

ஆகவே இத்தகைய காரணங்களால்  சாதாரமாணவர்களின் கபுருகளுக்குக் கூட செய்வது கூடும் என்றிருக்க , அவ்லியாக்களுடைய கபூர் ஷரீபுகளுக்கு வலுப்பதையும் ,ஒழுக்கத்தையும் ,மரியாதையும் , நன்மையையும் நாடிச் செய்தல் ஆகுமானதுதான் என்பது ஹதீது , பிக்ஹு கிரந்தங்களைக் கொண்டு வெட்ட வெளிச்சமாகத் தெரிய வருகின்றது .         



 




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...