Friday 19 August 2022

நபிமார்களின் மறைவான ஞானம்

🌹நபிமார்களின் மறைவான ஞானம் 🌹

 நபிமார்களின் மறைவான ஞானம் குறித்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையை விளக்கும் விதமாக மாபெரும் ஹதீஸ் கலைவல்லுநர், ஷெய்குல் இஸ்லாம் அல் ஹாஃபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி அஷ்அரீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் ,

" நிச்சயமாக நுபுவ்வத் என்ற பிரயோகம் நபிக்கு மட்டும் பிரத்யேகமானதும்,நபியை பிறரிடம் இருந்து பிரித்து காட்டுவதுமாகும்.நுபுவ்வத் ஏராளமான தனித்தன்மைகளால் தனித்துவம் பெற்றதாகும்.அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களின் எதார்த்தத்தை நபி அறிகிறார்கள்.அல்லாஹ்வுடைய ஸிஃபத் ( குணங்கள்) சம்பந்தப்பட்ட விஷயங்களின் எதார்த்தத்தையும் ( ஹகீகத்தை)  நபி அறிகின்றார்கள். மலக்குகள் மற்றும் மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தையும் நபிமார்கள் அறிவார்கள்.

இந்த அறிவு மனிதர்களின் அறிவைப் போன்றதல்ல.நபிமார்களிடம் இவை குறித்த அதிகளவிலான அறிவு உண்டு.சாதாரணமானவர்களுக்கு இல்லாத உறுதி அவர்களுக்கு உண்டு.சாதாரணமானவர்களுக்கு அவர்களுடைய விஷயங்களை கையாளுவதற்கான தன்மை உள்ளது போல,அசாதாரணமான விஷயங்களை கையாளும் தன்மை நபிமார்களுக்கு உண்டு.

இந்த விசேஷ தன்மையால் மலக்குகளைக் காண்பதற்கும்,மலக்கூத்தியான உலகை நேரில் பார்ப்பதற்கும் நபிமார்களுக்கு இயலும்.இந்த தனித்தன்மை பார்வையற்றவனையும்,பார்வையுள்ளவரையும் வேறுபடுத்துவது போன்றதாகும்.

மறைவான காரியங்களை அறிவதற்கும்,லவ்ஹுல் மஹ்ஃபூழில் பதிவு செய்யப்பட்ட விஷயங்களை பார்வையிடுவதற்கும் இத்தன்மை மூலம் நபிமார்களுக்கு சாத்தியமாகும்.இது அறிவுள்ளவரையும்,அறிவற்றவனையும் வேறுபடுத்துவது போன்ற தன்மையாகும்.இவை அனைத்தும் நபிமார்களின் பூரணத்துவத்தை ( கமாலியத்தை) உறுதிபடுத்தும் தன்மைகளாகும்.

📚 பத்ஹுல் பாரி ஷரஹ் புஹாரி 

அல்குர்ஆன் ஷரீபை மனனம் செய்தவர்களை ஹாஃபிழுல் குர்ஆன் என்றழைப்பது போன்று , ஹதீதுக் கலை வல்லுநர்களில் ஒரு இலட்சம் ஹதீதுகளை அதன் சொற்றொடர் ( மத்ன்) மற்றும் அறிவிப்பாளர் தொடர் ( இஸ்னத்) ஆகியவற்றை மனனம் செய்தவர்களையே ஹாஃபிழ் என்று அழைக்கப்படும்.அத்தகைய மார்க்க அறிஞர் அறிவிப்பாளர் குறித்த விமர்சனம் மற்றும் சரிபார்த்தல் துறையில் ( ஜர்ஹ் வ தஃதீல்) வல்லுநராக இருக்க வேண்டும்.இன்னும் அறிவிப்பாளர்கள் மறைந்த ஆண்டையும் அறிந்து வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

பிந்தைய கால மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டு எழுதாமல் ,ஹாஃபிழ் என பொதுப்படையாக தமது நூற்களில் மேற்கோள் இட்டவர்கள் ஷெய்குல் இஸ்லாம் ஹாஃபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தாம்.அல்லாஹ்  سبحانه و تعالى அன்னவர்களின் அந்தஸ்தை மேன்மேலும் உயர்த்துவானாக !   
Related Posts Plugin for WordPress, Blogger...