Tuesday 18 September 2018

நேர்ச்சை செய்யலாமா ?






நேர்ச்சைக்கு  'துஹ்பா'  என்றும்    'நதர்'  என்றும்    ' நியாஸ்' என்றும்   சொல்வதுண்டு . நேர்ச்சை இரு வகைப்படும் . அல்லாஹ் سبحانه وتعالىٰ  பெயரால் வைக்கப்படும்  நேர்ச்சைக்கு  பிக்ஹி  என்றும் ,வலிமார்கள்  பெயரால் வைக்கும் நேர்ச்சைக்கு உருபி என்றும் சொல்லப்படும் . இவ்விதம் சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه   அவர்களது சகோதரர் ஷாஹ் ரபீயுத்தீன்   முஹத்திஸ் திஹ்லவி  
رضي الله عنه   அவர்கள் 'ரிஸாலத்துன் நூரிலும் ' , ஷாஹ் முஹையத்தீன் வேலூரி   رضي الله عنه   அவர்கள்  'பஸ்லுல் கிதாபிலும் ' எடுத்துத்துரைத்துள்ளார்கள் . 

MirkathSharahuMishkath

ஒரு பெண் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது  திருச் சமூகத்திற்கு வந்து , "யா ரஸூலல்லாஹ் ! தங்கள் முன் தப் அடிப்பதற்கு நேர்ச்சை செய்து கொண்டுள்ளேன் "  என்றாள் . 
அதற்கு  நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  " உனது நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் "  என்பதாய் கூறினார்கள் விபரம் 'மிர்க்காத்   ஷரஹு மிஷ்காத் ' ,3வது பாகம் ,568வது பக்கத்தில் காணப்ப்படுகின்றது .

"உமக்கு ஏதாவது தேவை இருந்து அது நிறைவேற  வேண்டும் என நீர் நாடுவீராயின் , செய்யிதா நபீஸா தாஹிரா மிஸ்ரியா رضي الله عنها  வுக்கு
ஒரு பைசா  (பல்ஸ் ) காசாகிலும் நேர்ச்சை செய்து கொள்வீர் . உமது நாட்டம் நிறைவேறும் என்று கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் எனக்கு பிரசன்னமாகிப் பகர்ந்துள்ளார்கள் "  என்று குத்பு ஷெய்கு முஹம்மது அபுல் மவாஹிபுஷ் ஷாதுலி رضي الله عنه அவர்கள் கூறி இருக்கிறார்கள் என்ற விஷயம் 'தபகாத்துல் குப்றா' ,பாகம் 2,பக்கம் 66ல்  வருகின்றது .

"அவ்லியாக்களுடைய நேர்ச்சை ,தேவைகளை நிறைவேற்றி வைப்பது பெரியோர்களால் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் , வழக்கத்தில் உள்ளதாகவும் இருக்கின்றது " என்று சிராஜுல் ஹிந்த் அல்லாமா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி 
رضي الله عنه அவர்கள் சோல்லுவதாய்  'பஸ்லுல் கிதாப் ' ,52வது பக்கத்தில் கூறப்படுகின்றது .
Ashiaat-al-Lamaat

"எவரொருவர் எந்த வஸ்துவை எந்த இடத்திற்கு நேர்ச்சை செய்கின்றாரோ அதை அவர் அந்த இடத்திற்கே நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது வாஜிப் " என்று முல்லா அலி காரீ  رضي الله عنه அவர்கள் 'மிர்காத் -ஷரஹு மிஷ்காத் ' ,3வது பாகம் , 567வது பக்கத்திலும் , 'அஷிஃஅத்துல் லம்ஆத்' , 3வது பாகம் , 203வது பக்கத்திலும் சொல்லப்படுகின்றது .

  ஸஹாபி ஒருவர் பவானா என்ற இடத்தில் ஒட்டகம் ஒன்றை அறுப்பதற்கு நேர்ச்சை செய்து இருந்தார்கள் .     அந்த ஸஹாபி , நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  இடத்தில் வந்து இவ்விஷயத்தை கூறினார்கள் . அவ்விடத்தில் முஷ்ரிக்குகள் உடைய விக்கிரகம் ஏதாவது இருக்கின்றதா ? என்று நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் கேட்க ,அங்கு அப்படி கிடையாது என்றார்கள் .

காபிர்களுடைய திருவிழா ஏதேனும் நடைபெறுவது உண்டா ? என்று வினவியதற்கு அவ்விதம் இல்லை என்றார்கள் .

அப்படியானால் உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் என்று உத்தரவிட்டார்கள் என்ற ஹதீது அபூ தாவூதில் வருவதாக மிஷ்காத் ஷரீப் கூறுகின்றது .

இவ்விதமாக இன்னும் சில ஹதீது உண்டு . இதைக் கொண்டு நேர்ச்சை செய்யலாம்  என்றும் ,வலிமார்களின் தர்ஹாக்களில்   நேர்ச்சை செய்யப்பட்ட ஆடு ,மாடு கோழி வகையறாக்களை அறுக்கலாம் என்றும் தெரிந்து கொள்கின்றோம் . ஏனெனில் தர்ஹாக்களில் எவ்விதமான விக்கிரகமோ , காபிர்களின் திருவிழாவோ நடைபெறுவதில்லை . 


சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி 
رضي الله عنه அவர்கள் கீழ் வருமாறு கூறியுள்ளது இதற்கு விளக்கமாக இருக்கின்றது  :- 

மஹபூபே ஸுப்ஹானி ஹழ்ரத் கவ்துல் அஃ லம்  رضي الله عنه அவர்கள் பேரால் ஆடு வளர்ப்பது  ஆகும் . அவற்றை அறுத்து  சமைத்து நேர்ச்சையின் பாத்திஹா ஓதி ஜனங்களுக்கு விருந்தளிப்பதும் ஆகும் . இதில் யாதொரு தடையுமில்லை . இத்தகைய நேர்ச்சை ஹயாத்தோடு உள்ள பெரியாருக்குச் செய்யும் காணிக்கை ஆகும் " என்று 'ஜிப்ததுன் நஸாயிஹு ' , 105வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது .

மேலும்  " வலிமார்கள் மீது முஹப்பத்தை முன்னிட்டு சங்கையை நாடி எண்ணெய் ,ஊதுபத்தி போன்றவைகளை அவர்களது கபுருகளில் கொளுத்த நேர்ச்சை செய்வதும் ஆகும் . அதை விலக்கலாகாது .  " என்பதாக அல்லாமா குத்வதுல் முபஸ்ஸிரீன் ஷெய்கு இஸ்மாயில் ஹக்கீ பருஸீ ரூமி رضي الله عنه அவர்கள் 'தப்சீர் ரூஹுல் பயான் ' , 3வது பாகம் ,400வது பக்கத்திலும் ,அல்லாமத்துல்  முஹக்கிக்  இமாம் அப்துல் கனி நாபிலி திமிஷ்கீ 
رضي الله عنه அவர்கள் 'கஷ்புன் நூரிலும் '  , முற்காலத்தில் மிஸ்ரில் முப்தியாக இருந்த அல்லாமா ஷெய்கு அப்துல் காதிறு றாபியீ பாரூக்கி ஹனஃபி رضي الله عنه அவர்கள் 'தஹ்ரீக்குள் முக்தார் ' ,1வது பாகம் , 123வது பக்கத்திலும் விரிவாக  எடுத்துரைத்துள்ளார்கள் .

பக்தாத் ஷரீபில்  (முசல்லல் ஈது ) பெருநாள் தொழுகை தொழுமிடத்தில் ஒரு கபுறு இருக்கின்றது . அதை கபுருன்னுதூர் - நேர்ச்சைகளின் கபூர் என்று அழைக்கப் படுகின்றது . நாட்டங்களை நிறைவேற்றி வைக்கக் கூடிய கபூர் என்று அதை ஜனங்கள் கருதுகின்றனர் .

சுல்தானுஷ் ஷுஹதா , ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் ஷஹீதே கர்பலா رضي الله عنه அவர்களது மூன்றாம் குமாரர் ஹழ்ரத் ஸெய்யித் அப்துல்லா رضي الله عنه அவர்களுடைய கபூர் என்று கூறப்படுகின்றது . எவர் எந்த தேவையை நாடினாலும் அது அவருக்கு நிறைவேறுவதை முன்னிட்டு   கபுருன்னுதூர் என்ற பெயர் வழங்கப்படுகின்றது . 


TareekhEBaghdad

அல்லாமத்துல் பாழில் அபூபக்கர் கத்தீப்    رضي الله عنه அவர்கள் பக்தாத் உடைய சரித்திரத்தில் (தாரீக் ஏ பக்தாத் )மேலே கண்டனவற்றை வரைந்து ,"அநேக தடவை அந்த கபூரை நாடி நேர்ச்சை செய்து என் நாட்டம் நிறைவேறப் பெற்றிருக்கின்றேன் " என்றும் கூறியுள்ளார்கள் .

இவ்வரலாறு காதிமில் நக்லு செய்யப் பெற்றிருப்பதாய் 'பதாவா தன்பதா ' சொல்லுகின்றது . இவ்விஷயத்தை மதராஸ் முப்தி அல்லாமா மஹ்முது சாஹிப்  رضي الله عنه அவர்கள் 'பத்ஹுல் ஹக் ' 77வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .
  
           
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்து நியாஸ் வைக்கலாம் . அப்படி நதர்  வைப்பது ஆகும் ,அதை நிறைவேற்றுவது கடமை  என்பதற்குப் போதுமான கிரந்தங்கள் பல உள்ளன . அவற்றுள் சில : -

* பதாவா  அபில் லைது        -     பகீஹ் அபில் லைது  ஸமர்கந்தீ 
 رضي الله عنه

* பதாவா குப்றா       -  ஷெய்கு இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه

* பதாவா  அஜீஸியா   - சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ்     முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه

* பதாவா ரிஜ்விய்யா  - இமாமே அஹ்லுஸ் ஸுன்னா  ஷெய்கு         அஹ்மத் ரிழா கான் பரேல்வி رضي الله عنه

* தப்ஸீர்  அஹ்மதிய்யா  -   ஹழ்ரத் முஹம்மது முல்லாஜியூன்
 رضي الله عنه

* தப்ஸீர் ரூஹுல் பயான்  - ஷெய்கு இஸ்மாயில்  ஹக்கீ பரூஸி 
   رضي الله عنه

* ஜாமியுல் பரகாத் , கஷ்புன் நூர்  - ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ்     திஹ்லவி رضي الله عنه

* ஹக்கீக்கத்துன் நதிய்யா  -  ஷெய்கு அப்துல் கனீ நாபிலிஸி
 رضي الله عنه

*தஹ்ரீருல் முக்தார்  -  ஷெய்கு அப்துல் காதர் மிஸ்ரி  رضي الله عنه

* ரிஸாலத்துன் நூர்  - ஷாஹ் ரபீயுத்தீன் திஹ்லவி رضي الله عنه

* பஸ்லுல் கிதாப் , ஸைபுல் ஜப்பார்  - ஷாஹ் முஹையத்தீன் வேலூரி  رضي الله عنه 

* பவாரீக் முஹம்மதிய்யா  - ஷெய்கு பஜ்லே ரஸூல் பதாயூனி  காதிரி رضي الله عنه

* வஸீலா ஜலீலா - ஹழ்ரத் வகீல் அஹ்மத்  சிக்கந்தர்பூரி رضي الله عنه

* பத்ஹுல் ஹக்  -     ஹழ்ரத் முப்தி மஹ்மூது  ஸாஹிப் மதராஸி 
رضي الله عنه

* இர்ஷாதுல் ஹக்  - ஹழ்ரத் ஸெய்யித் அமீர் அலவீ رضي الله عنه

*ஹதிய்யா மக்கிய்யா - வஹாபிகளுக்கு றத்தாக மக்காவிலுள்ள உலமாக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹிஜ்ரி 1221ல் எழுதியது .



"வலிமார்கள் பேரால் நேர்ச்சை வைப்பது ஆகும் "   என்றும் "நேர்ச்சையாக வைக்கப்பட்ட காணிக்கைகளை நிறைவேற்றுவது வாஜிப் "  என்றும் மேலே கண்ட கிரந்தக் கர்த்தாக்கள் கூறியுள்ளனர் . நதர் ,நியாஸ் பற்றி அதிகம்  அறிய ஆவல் உள்ளவர்கள் ,'இர்ஷாதுல் ஹக்கை '  பார்வையிடுக .

                           

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...