Wednesday 29 November 2017

கறாமத்து உண்டா ? - 1


அவ்லியாக்கள் ஹயாத்திலும் ,மரணத்திற்கப்பாலும் காண்பித்து வரும் கறாமத் என்னும் அற்புதங்களை  நாம் கண்ணாரக் கண்டும் , காதாரக் கேட்டும் வருகின்ற இக்காலத்தில் ஒரு சிலர் அதை இன்கார் (நிராகரிப்பு) செய்கின்றனர் .

நான்கு மத்ஹபுகளில் யாதாவதொன்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டியது மார்க்கக் கடமையாகும் . முஸ்லிம்கள் எல்லாருமே மதுஹபைப் பின்பற்றி நடப்பதாகவே ஒப்புக் கொள்கின்றனர் .

 எப்போது மத்ஹபை ஏற்றாரோ அப்போது அந்த மத்ஹபுக்குரிய அகீதாக் (கொள்கை) களை அங்கீகரித்தாக  வேண்டும் .   அன்பியாக்களுடைய முஃஜிஸாத்துகள் , அவ்லியாக்களுடைய கராமாத்துகள் உண்மை என்பதும் அகீதாக்களுள் ஒன்று . முஃஜிஸாத்தையோ ,கராமாத்தையோ ஒப்புக்கொள்ளவில்லையென்றால்  அவனுக்கு மதுஹபு இல்லை . மதுஹபு இல்லையென்றால் அவன் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜாமத்தைச் சேர்ந்தவனல்லன் . ஆகவேதான் இத்தகையவன் முஃதஸிலாப் போன்ற கூட்டத்தைச் சேர்ந்தவனென்று நான்கு மதுஹபுடைய உலமாக்கள் எல்லோரும் கருத்தொருமித்துக் கூறியுள்ளார்கள் .

"அகீதாவில்  மோசமான கொள்கையுடையவனே அல்லாமல் வேறு எவரும் (அவ்லியாக்கள் ) மரணத்திற்கப்பால் கராமாத்து நிகழ்த்துவத்தைப் பற்றி நிராகரிப்புச் செய்யமாட்டார்கள் "  என்பதாக ஷரஹு புகாரியில் ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் رضي الله عنه‎  அவர்கள் வரைந்துள்ளார்கள் .

'அவ்லியாக்களுக்கு கறாமத் உண்டென்று சொல் - அதை இல்லை என்று இன்கார் செய்பவனுடைய சொல்லை தள்ளிவிடு ' என்று 'ஜவ்ஹரா' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது .


"மனிதர்களுடைய நாட்ட திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அல்லாஹுத்தஆலா வலிமார்களுடைய கபூரில் ஒரு மலக்கைச் சாட்டுவான் . மற்றோருவிதமாக வலிமார்களை கபுருகளை விட்டும் வெளிப்படுத்தி மனிதர்களது நாட்ட தேட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கவும் செய்வான் " என்று குத்பே ரப்பானி  ஷெய்கு அப்துல் வஹாப் ஷஃரானி      رضي الله عنه‎ அவர்கள் 'யவாக்கீத்துள் ஜவாஹிரில் '  குறிப்பிட்டுள்ளார்கள் .

ஜவாஹீர் -இமாம் ஷஃரானி   

நபிமார்களில் அநேகரின் முஃஜிஸாத்துக்களைப் பெற்றி குரான் ஷரீபிலும் , ஹதீது ஷரீபிலும் நாயகம்   அவர்களது முஃஜிஸாத்துகள் அநேகம் பற்றியும் ,சஹாபாக்கள் அநேகம் பேர்களுடைய கராமாத்துகள் பற்றி ஹதீது ஷரீபிலும் வந்துள்ளன . 

அவ்லியாக்களுடைய கராமத்துகள் பற்றி சரித்திரங்களில் எண்ணிலடங்காவண்ணம் உள்ளன . அவை அனைத்தையும் இங்கு எடுத்து எழுதுவதென்றால் சாத்தியமில்லை . எனினும் ,அவற்றிலிருந்து ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம் .

"ஹயாத்திலும் ,மவுத்திற்கப்பாலும் அவ்லியாக்கள் கராமாத்துச் செய்ய சக்தி பெற்றிருக்கிறார்களா ? மவுத்தாகிப் போனவைகளை அவர்களால் ஹயாத்தாக்க முடியுமா ? " என்று இமாம் ஷெய்கு முஹம்மதுرضي الله عنه‎  கலீலீ   அவர்களிடம் வினவப் பட்டதற்கு , "அவர்கள் கராமத்துச் செய்ய சக்தி பெற்றிருக்கின்றார்கள் . மவுத்தாகிப் போனவைகளை ஹயாத்தாக்கவும் அவர்களால் முடியும் " என்று அவர்கள் பதில் கூறி இருக்கின்றார்கள் . இவ்விபரம் 'பதாவா கலீலீ ' ,பாகம் 1 ,பக்கம் 79ல் காணப்படுகின்றது . 

உவமைக்குச் சில நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றோம் .

பாரூக்கே அஃலம் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப்  رضي الله عنه‎  அவர்களுடைய கிலாபத்தின் காலத்தில் , ஸஹாபிகளில் ஒருவராகிய ஹழ்ரத் ஸாரியா رضي الله عنه‎  அவர்களது தலைமையில் நஹாவந்து என்னும் ஊருக்கு ஒரு பட்டாளம் அனுப்பப் பட்டது . குப்பார்களை எதிர்த்துக் கடுமையாக போர் செய்து கொண்டே முஸ்லிம்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள் . இந்தச் சந்தர்ப்பத்தில் மலையின்  கணவாய் வழியே பின்பக்கமாப் பதுங்கி சென்று இஸ்லாமியப் படையைச் சூழ்ந்து திடீர்த் தாக்குதல் நடத்த குப்பார்கள் இரகசிய திட்டமிட்டுக் கொண்டிருந்தனர் .

அன்று வெள்ளிக்கிழமை , அந்நேரத்தில் அமீருல் முஃமினீன் கலீஃபா உமர் பாரூக் رضي الله عنه‎ அவர்கள் மதீனாவின் மஸ்ஜிதுன்னபவியின் மிம்பர் மீது நின்று குத்பா ஓதிக் கொண்டிருந்தார்கள் . அவ்வமயம் அங்கிருந்து கொண்டே ,வெகுதொலை தூரத்திலுள்ள நஹாவந்து யுத்தக்களத்தை கஷ்பு (அகக்கண் ) கொண்டு நோக்கினார்கள் .

எதிரிகளின் சதித்திட்டத்தை கஷ்பு (அகக்கண் ) மூலம் அறிந்த அவர்கள் , " ஸாரியாவே ! மலைக் கணவாயைப் பாதுகாப்பீர் " (யா ஸாரியா அல் -ஜபல்) என்று சப்தங் கொடுத்தார்கள் .

கலீபாவின் எச்சரிக்கை யுத்த காலத்தில் இருந்த ஹழ்ரத் ஸாரியா  رضي الله عنه‎  அவர்களது காதிற்கு எட்டியது . உடனே அவர்கள் மலைக் கணவாயில் முன்னேறி பாதுகாப்பு செய்து  கொண்டார்கள் . எதிரிகளின் ரகசிய சதித் திட்டம் முறியடிக்கப் பட்டது . முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர் . இவ்வற்புத சம்பவம் அவர்களுடைய மனாகிபு (சரித்திர ) நூற்களில் வரையப்பட்டுள்ளது .இவ்விபரம் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி رضي الله عنه‎  அவர்களது நூல் 'இஸாபா பீ தமீஸ் அஸ் ஸஹாபா' ,பாகம் 3,பக்கம் 4 ழும் , ஹாபிழ் இப்னு கதீர் رضي الله عنه‎  அவர்களது 'அல் பிதாயா வன் நிஹாயா ,பாகம் 7 ,பக்கம் 131 ழும் வரையப்பட்டுள்ளது .


Al-Isaba fi Tamyiz al-Sahaba
இஸாபா பீ தமீஸ் அஸ் ஸஹாபா
"ஹழ்ரத் நாயகம்   அவர்களது  சமூகத்திற்கு ,அஸீதுப்னு ஹுலைர் رضي الله عنه‎  அவர்களும் , உப்பாதுப்னு பஷர்  رضي الله عنه‎ அவர்களும் இருள் சூழ்ந்த ஓர் இரவில் சென்றிருந்தார்கள் . பிறகு அவ்விருவரும் ஒன்றாக திரும்பி வரும்போது அவர்களுக்கு முன்பதாக இரு ஜோதிபிரகாசங்கள் போய்க் கொண்டிருந்தன . அவர்கள் பிரிந்து போது அவை தனித்தனியே பிரிந்து அவரவருடன் போய் கொண்டிருந்தன " என்பதாக ஹழ்ரத் அனஸ் رضي الله عنه‎ அவர்கள் ரிவாய்த்துச் செய்கின்றார்கள் . இந்த ஹதீது ஸஹீஹ் புஹாரியில் கூறப்பட்டு உள்ளது . 

நாயகம்   அவர்களுக்கு விருந்தளிக்க ஹழ்ரத் ஜாபிர் رضي الله عنه‎ அவர்கள் தனது வீட்டில் ஒரு ஆட்டுக் குட்டியை அறுத்து சமையலுக்கு ஏற்பாடு செய்தார்கள் . ஆட்டுக்குட்டியை தந்தை அறுப்பதைக் கண்ட அவர்களது மூத்த புதல்வன் தன்னுடைய தம்பியை பிடித்து அவ்வாறே அறுத்து விட்டான் . இதைக் கண்ட அவனது தாய் விரட்டிப் பிடிக்க ஓடவே மூத்த மகனாகிய அவன் மாடியிலேறி கால் தவறி கீழே விழுந்து இறந்தான் . 

நாயகம்    அவர்கள் விருந்துண்ண வந்த சமயம் மூத்த மகனுடையவும் ,இளைய மகனுடையவும் இறந்த செய்தி கேட்டு துஆச் செய்தார்கள் . இறைவன் அருளால் அவ்விருவரும் உயிர் பெற்று எழுந்தார்கள் .
இவ்விபரம் ஷவாகதுன் நுபுவ்வத்தில் வருவதாக அன்வாரே - ஆப்த்தாபே - ஸதகாத் ,பாகம் 2,பக்கம் 207ல் கூறப்படுகின்றது . மேலும் இஹ்யா உல் குலூப் பீ மவ்லிதில் மஹபூப் 94வது பக்கத்திலும் சொல்லப்பட்டுள்ளது . 

Anware Aftab E Sadaqat
அன்வாரே - ஆப்த்தாபே - ஸதகாத்
      
ஒரு நாளைய தினத்தில் ஹழ்ரத் கவ்துல் அஃலம்   رضي الله عنه‎  அவர்கள் பகுதாது நகரத்து கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்த போது ஒரு கிறிஸ்தவரும் , முஸ்லிமும் தர்க்கம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவ்விடம் நின்று கவனித்தார்கள் .

கிறிஸ்த்தவர் ,நபி ஈஸா عليه السلام அவர்களது முஃஜிஸாத்துகள் பலவற்றைக் கூறி அவர்களே மேலானவர்கள் என்று கூறினார் . முஸ்லிம் , நாயகம்   அவர்களது முஃஜிஸாத்துகள் பலவற்றைக் கூறி அவர்களே மிகவும் மேலானவர்கள் என்று கூறினார் . கடைசியாக ,கிறிஸ்தவர் எங்கள் நபி ஈஸா عليه السلام  மரித்தவர்களை உயிர்பித்தார்கள் ,உங்கள் நபி அவ்விதம் செய்திருக்கின்றார்களா ? என்று வினவினார் . இதற்குப் பதில் சொல்ல தெரியாமல் முஸ்லீம் சிறிது தயங்கினார் . உடனே தாம் ஜெயித்து விட்டதாக கிறிஸ்தவர் ஆரவாரம் செய்தார் .

இவ்விருவருடைய விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்த கவ்துல் அஃலம்   رضي الله عنه‎  அவர்கள் முன் வந்து அந்த கிறிஸ்தவரை நோக்கி , '  நீர் கூறிய அத்தனை விஷயமும் உண்மை தான் . அவற்றை நாங்களும் ஒப்புக் கொள்ளவே செய்கின்றோம் . நான் ஒரு முஸ்லீம் . முஹம்மது நபி   அவர்களது உம்மத்துகளில் நானும் ஒருவன் . இறந்து போன மைய்யித்து எதையாவது நீ காண்பி .அதை நான் உயிர் பெறச் செய்கின்றேன் என்றார்கள் .

அந்த கிறிஸ்தவர் தமது முன்னோர்களை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒரு மைய்யித்துக் கொல்லை ,கல்லறைக்கு அழைத்துச் சென்று பல்லாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு புராதன குழியைக் காண்பித்து .' இதில் அடக்கம் பெற்றிருப்பவர் ஒரு பாடகர் . இவர் உயிர் பெற்று எழுந்து என்னுடன் பேசுவாரகில் நான் உங்களுடைய மார்க்கத்தை தழுவுகின்றேன் . இல்லாவிடில் ,நீங்கள் என்னுடைய மார்க்கத்தை தழுவு வேண்டும் .என்ன சம்மதமா ? என்பதாய் சபதம் கூறினார் .

"அப்படியே ,சம்மதம் " என்பதாக ஹழ்ரத்  கவ்துல் அஃலம்   رضي الله عنه‎  அவர்கள் உடன்பட்டு , 'உங்கள் நபி மரித்தோரை எவ்வாறு உயிர்பித்தார்கள் ?' என்று வினவினார்கள் .

'ஆண்டவனுடைய உத்தரவு கொண்டு எழுந்திரு என்பார்கள் .உடனே எழுந்திருக்கும் ' என்று அவர் விடை அளித்தார் .

'அப்படியா ! நான் இப்போது என்னுடைய உத்தரவு கொண்டு எழுந்திருக்கச் செய்கின்றேன் ! பார் ' என்று கூறி ,' எனது உத்தரவு கொண்டு எழுந்திரு ' ( கும்பி இதுனீ ) என்று மொழிந்தார்கள் .

அந்த உடனே , மடிந்து மண்ணோடு மண்ணாகிக் கிடந்த அந்த பாடகர் ,வாத்தியத்தை இசைத்தவராய் பாடிக் கொண்டே சவக்குழியிலிருந்து வெளியே புறப்பட்டார் . அந்த சங்கீத வித்வான் அந்த கிறிஸ்தவரை நோக்கி ,திருக்கலிமாவை கூறி இஸ்லாத்தை தழுவ இன்னும் தாமதம் ஏன்  ? என்றும் வினவினார் .

அந்தக் கிறிஸ்தவர் பேராச்சரியம் உற்றவராய் ,அக்கணமே கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றார் .

சரித்திர பூர்வமான இவ் வரலாற்றை தப்ரீஜூல் காத்திர் 16வது பக்கத்திலும் , மனாகிபு கவ்திய்யா 66வது பக்கத்திலும் பார்வையிடலாம் . 

"வலிமார்களுடைய கராமாத்துகள் அற்புதங்கள் ஜீவியத்தில் இருப்பது போல் , அவர்களுடைய மரணத்திற்கு அப்பாலும் நடைபெறுமா ? "  என்று ஷெய்குல் இஸ்லாம் ,அல்லாமா ,அல் பஃகீஹ் , ஷெய்கு முஹம்மது ஷவ்பரீ    رضي الله عنه‎  அவர்களிடம் வினவப் பெற்றது . 

அதற்கு அவர்கள் , " மரணத்திற்கு அப்பாலும் , அவ்லியாக்களுடைய கராமாத்துகள் அற்புதங்கள் நடைபெற்றே வரும்  ,அவை எடுபட்டுப் போகா . அன்பியாக்களுடைய முஃஜிஸாத்துகள் அவ்லியாக்களுடைய கராமாத்தாயிருக்கும் . இதை மறுத்தால் குப்ரை கொண்டு பயப்பட வேண்டும் : என்று விடை அளித்தார்கள் .

இவ்விபரம் ,மிஸ்ரில் முப்தியாக இருந்த அல்லாமா ஷெய்கு முஹம்மது பக்ரீ رضي الله عنه‎  அவர்களது 'ஷிபா உஸ் ஸிகாம் '      என்ற நூலுடன் இணைந்த வெளியிடப் பெற்றிருக்கும் 'ஷவ்பரி பத்வாவில் ' ,238வது பக்கத்தில் காணப்படுகின்றது .

உவமைக்கு மற்றோரு சம்பவத்தையும் கவனியுங்கள் .

"ஒருவன் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் செய்யிதினா அலி இப்னு அபீதாலிப்  رضي الله عنه‎  அவர்களை நிந்தித்து அவதூறாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான் . அவன் ஓரிரவு நித்திரை செய்கையில் ,ஹழ்ரத்  செய்யிதினா அலி இப்னு அபீதாலிப் رضي الله عنه‎ அவர்கள் அவனது கனவில் தோன்றி அவனது முகத்தில்  ஓங்கி அறைந்தார்கள் . அவன் பயந்து திடுக்கிட்டு விழித்துப் பார்க்கும் போது ,தன்னுடைய ஸுரத் (கோலம் )  மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு கைசேதப்பட்டான் " என்பதாக கிதாபுர் ரூஹ் என்ற நூலில் சொல்லப்படுள்ளது .
KITAAB AR-ROOH
கிதாபுர் ரூஹ்

அவ்லியாக்களையும் , கராமாத்துகளையும் நம்புவதற்கில்லாமல் இன்கார் செய்யும் கூட்டத்தார் பெரும்பாலும் இப்னு தைமிய்யாவையும் , அவரைச் சேர்ந்தவர்களையும் விஷேஷமாகக் கருதி அவர்களது நூற்களையே மேற்கோளாக காட்டுவர் .

வஹாபிய சித்தாந்தங்களுக்கு மூல குருவான இப்னு தைமிய்யாவின் பிரதான சீடர் இப்னு கைய்யூம் என்பவரே . அவர் இயற்றிய நூல் தான் மேலே குறிப்பிட்ட 'கிதாபுர் ரூஹ் ' . அவர் இயற்றிய 'அல் கபாயிரு - பிஸ் -ஸுன்னதி -வல் பித்அத்தி ' என்ற நூலிலும் மேலே சொல்லப்பட்டுள்ளது போன்ற கராமாத்து அற்புதங்களை சிலவற்றையும் அவர் வரைந்துள்ளார் .     


             




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...