Tuesday 12 December 2017

கறாமத்து உண்டா - 2


மஸ்னவீ ஷரீபின் ஆசிரிய மேதை , ஹழ்ரத் மவ்லானா முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி رضي الله عنه அவர்கள் குறிப்பிடும் அற்புத சம்பவமொன்றையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் . அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :- 

"காரீ ஒருவர் மதரஸாவில் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறார் . 'மந்திக் 'என்னும் தத்துவ சாத்திரத்தைக் கற்ற அப்போது அந்தப் பக்கம் செல்கிறார் . அப்போது அந்தக் காரீ 

               قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ مَّعِيْنٍ 

'உங்களுடைய (குடி )  தண்ணீர் பூமிக்குள் சென்று வற்றி வரண்டு போய் விட்டால் ஓடும் ஜலத்தை உங்களுக்கு கொண்டு வருபவர் யார் ?'   என்னும் திருக்குரான் வசனத்தை (67:30)  ஓதிக் கொண்டிருப்பதை அவர் காதில் கேட்டார் .

உடனே , அந்த தத்துவ அறிஞர் ,' ஏன் ,கடற்பாறை மண்வெட்டி கொண்டு பூமியைத் தோண்டி தண்ணீரை நான் வெளியே கொண்டு வருவேன் ' என்று துடுக்காக உரைத்தான் .

அன்றிரவு அவன் கனவொன்று காண்கிறான் . அதில் ஒரு பெரியார் தோன்றி ,'நீ தண்ணீர் கொண்டுவருவது இருக்கட்டும் . முதலில் உன் கண்ணொளியைக் கொண்டு வா ,பார்ப்போம் ' என்று கூறி அவனது முகத்தில் ஓங்கி அறைந்தார் .

உடனே , அவன் திடுக்கிட்டு பதறி விழித்தெழுந்து அமருகின்றான் . உண்மையிலேயே தனது கண்ணொளி மறைந்து தான் அந்தகனாகி விட்டதை எண்ணி கைசேதமுற்றான் ."
மஸ்னவீ  ஷரீபின் மூலப் பிரதி   

இவ்விபரம் ,மஸ்னவி ஷரீபின் ,இரண்டாவது பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது . தப்சீர் ஜாஹிதியிலும் இது போன்றதோர் நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கின்றது .

"கராமாத்தைக் கொண்டு அவ்லியாக்களை ஜியாரத் செய்ய கஃபதுல்லாஹ் போகுமா ? என்று இமாம் நஸவீ      رضي الله عنه அவர்களிடம் வினவப்பட்டது . அப்போது இமாம் அவர்கள் ,'கராமாத்தால் அது போகக் கூடும் .அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் கொள்கைப் படி அவ்வாறு போவது ஆகும் . ' என்பதாய் விடையளித்தார்கள் என்ற விபரத்தை ஹனஃபி மத்ஹப் கிரந்தமாகிய துர்ருல் முக்த்தாரில்   குறிப்பிடப்பட்டிருக்கிறது . இதை அந்நூலின் ஹாஷியா ரத்துல் முக்த்தார் , 2வது பாகம் ,684வது பக்கத்தில் உறுதி படுத்தப்பட்டிருப்பதோடு , 'அவ்லியாக்களிடம் கஃபத்துல்லாஹ் ஜியாரத்திற்குப் போவது அவர்களது கராமத்தில் உள்ளதாகும் . இத்தகைய கராமத்தை இன்கார் செய்கின்றவன் வழிகெட்ட முஃதஸிலா கூட்டத்தைச் சேர்ந்தவனாவான் ' என்பதாகவும் கூறப்படுள்ளது .
ஹாஷியா ரத்துல் முக்தார் 


'அன்னை ராபியத்துள் பதவிய்யா  رضي الله عنه அவர்களை கஃபத்துல்லாஹ் ஜியாரத் செய்ய சென்றது ' என்ற விபரம் தப்சீர் ரூஹுல் பயான் ,9வது பாகம் , 112வது பக்கத்திலும் , இஹ்யா உலூமுத்தீன் , 1வது பாகம் ,242வது பக்கத்திலும் காணப்படுகின்றது .
ரூஹுல் பயான் 

"ஹஜருல் அஸ்வத்தை விட ,இன்ஸான் காமில் (பரிபூரணத்துவம் அடைந்த வலி ) உடைய கை மேன்மையானது ' என்றும் ,'கஃபத்துல்லாஹ்வை பார்க்கினும் இன்ஸான் காமில் மெலாம்பரமானவர் '  என்றும் ரூஹுல் பயான் , 9வது பாகம் ,23வது பக்கத்தில் கூறப்படுள்ளன .

ஹழ்ரத் அபூயஸீதல் புஸ்த்தாமி       رضي الله عنه அவர்கள் வழியில் ஷைகைத் தேடியவர்களாக ஹஜ்ஜு உம்ராவுக்கு புறப்பட்டார்கள் .இறுதியில் ஒரு குத்பை அடைந்தார்கள் .

'நீர் செல்வதெங்கே ?பிரயாணத்திற்காக வைத்திருப்பதென்ன ?' என்று குத்பு அவர்கள் வினவியதற்கு , அபூயஸீதல் புஸ்த்தாமி       رضي الله عنه அவர்கள் ,'நான் ஹஜ்ஜுக்கு செல்கின்றேன் . பிராயணத்திற்காக 200 திர்ஹங்கள் வைத்துள்ளேன் ' என்று விடை அளித்தார்கள் .

அப்படியானால் ,திர்ஹமை எனக்கு காணிக்கையாக வைத்து என்னை தவாபு செய்யும் . ஹஜ்ஜும் ,உம்ராவும் உமக்கு நிறைவேறிவிடும் . ஸபா ,மர்வாவில் ஸயீ செய்வதும் நிறைவேறிவிடும் . ஆண்டவன் மீது சத்தியமாக ,அவன் கஃபாவை விட எனக்கு சங்கை அளித்துள்ளான் .

கஃபா வணக்கத்திற்குரிய ஒரு வீடு .எனது உள்ளமையோ அவனது அகமியத்தின் இல்லம் . கஃபாவும் அவனது தஜல்லலியாத்தின் தோற்றம் தான் . ஆனால் இன்ஸான் காமில்    மீது உண்டாகும் தஜல்லியாத் கஃபாவில் உண்டாவதில்லை . நீர் என்னை தரிசித்தது இறைவனைக் கண்டது போலாம் . உண்மை கஃபாவை நீர் தவாபு செய்து விட்டீர் . நீர் எனக்கு செய்த ஊழியம் இறைவனைப் புகழ்ந்து அவனை வழிபட்டதாகும் .

உஷார் ! ஆண்டவனை விட்டும் நான் வேறானவனல்ல . ஆண்டவனுடைய நூர் உம்மீது உண்டாவதாக . கண்ணை திறந்து என்னை நோக்கிப் பாரும் . கஃபாவை என்னுடைய வீடு என்று ஆண்டவன் ஒரு முறை தான் சொன்னான் . 'என் அடியானே !' என்று என்னை எழுபது விடுத்தம் கூப்பிட்டுள்ளான் .

அபாயஸீதே ! உமக்கு கஃபா கிடைத்தது ,ஆண்டவனிடத்தில் உமக்கு நூர் பிரகாசமும் ,சங்கையும் , மகத்துவமும் உண்டாகி விட்டது  என்பதாக அந்த குத்பு கூறினார்கள் .

இவ்விபரத்தை மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி    رضي الله عنه அவர்கள் மஸ்னவி ஷரீப் ,2வது பாகத்தில் , பீர் -முரீது ஹிகாயத்தில் கூறியுள்ளார்கள் .

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர்   رضي الله عنه அவர்கள் கஃபாவை நோக்கி, "சந்தேகமின்றி இறைவன் உனக்கு சிறப்பைக் கொடுத்துள்ளான் . ஆனால் ,இறைவனிடத்தில் முஃமீன் உன்னை விட அதிகச் சிறப்பை உடையவன் " என்று கூறினார்கள் என்பதாக ,மிப்தாஹுல் உலூம் ஷரஹு மஸ்னவி ஷரீப் ,7வது பாகம் , 142வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது .

ஒருநாள் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர்   رضي الله عنه அவர்கள் கஃபாவை நோக்கி "உனக்கு பெருமையும் சங்கையும் உண்டு . அல்லாஹ்விடத்தில் முஃமீன் உன்னைவிட அதிக சங்கை உடையவன் " என்று கூறினார்கள் என்பதாக இப்னு உமர்   رضي الله عنه அவர்களைக் திர்மிதி ஷரீபில் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளது . 

'கியாமத்து நாளில் கஃபா என்னுடைய கபுருக்கு வந்து 'அஸ்ஸலாமு அலைக்க ' என்று ஸலாம் சொல்லும் . 'வஅலைக்கும் ஸலாம் ' என்று பதில் கூறி ,பைதுல்லாஹ்வே எனக்குப் பிறகு என்னுடைய உம்மத்து உன்னளவில் வந்து எவ்வாறு நடந்து கொண்டார்கள் ? 'என்று கேட்பேன் .

அவ்வமயம் அது சொல்லும் : ' என்னிடத்தில் வந்தவர்களுக்கு நான் போதுமானவன் . அவர்களுக்காக நான் மன்றாடுவேன் . என்னிடம் வராதவர்களுக்கு தாங்கள் போதுமானவர்கள் . அவர்களுக்காகத் தாங்கள் மன்றாடுவீர்கள் ' என்பாய் நாயகம்  அருள் செய்திருப்பதை ஜாபிர்    رضي الله عنه அவர்கள் ரிவாயத்துச் செய்வதாக , ஷெய்கு இஸ்பஹானீ رضي الله عنه அவர்கள் 'கிதாபுத் தர்கீபில் ' அறிவித்துள்ளதாக , அல்லாமா காழி உபைதுல்லாஹ் ஸாஹிப் மத்ராஸி رضي الله عنه அவர்கள் 'துஹபதுஸ் ஸாயிரீனில் ' வரைந்துள்ளார்கள் .



'ஒவ்வொரு குத்புமார்களும் கஃபாவிலுள்ள இல்லத்தை ஏழு முறை தவாபு செய்வார்கள் .  அந்த கஃபாவின் இல்லமானது என்னுடைய கூடாரத்தைச் சுற்றி தவாபு செய்கின்றது ' என்று ஸெய்யிதினா குத்புல் அக்தாப் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்களது முபாரக்கான  'துப் - பி ஹானீ ' பைத்தில் கூறியுள்ளார்கள் .

ஆகவே ,மேலே குறிப்பிட்டுள்ள அத்தாட்சியிலிருந்து இன்ஸான் காமில் கஃபத்துல்லாவை விட மேலாம்பரமானவர்     .எனவே அத்தகைய தகுதியுள்ள அவ்லியாக்களை கஃபத்துல்லாஹ் தேடி சென்று தரிசிக்கின்றது என்பதில் வியப்பில்லை அல்லவா ?

அன்பியா,அவ்லியாக்களுக்கு ஆண்டவன் பக்கமிருந்து எல்லாவிதமான தத்துவங்களும் உண்டாயிருக்கின்றன . அவர்கள் உயிரோடு இருந்து வந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கிருந்த திரேக பலமும்  , பார்வையின் கூர்மையும் , கேள்வியின் வலிமையும் , ஆன்மசக்தியும் வபாத்திற்கு அப்பால் மேலும் வலுவடைகின்றன .

ஹயாத்தில் ,சரீரம் என்னும் கூண்டில் அடைபெற்றிருந்த ஆன்மாக்கள் ,வபாத்திற்குப் பிறகு விடுதலை பெற்றுச் சுதந்திரம் அடைகின்றன . அப்போது அவர்கள் ஈருலகையும் கைக்கடுகு போல் பார்க்கிறார்கள் . நாடிய இடங்களுக்கெல்லாம் நொடிப் பொழுதில் செல்கிறார்கள் . அவர்கள் ஜீவனோடிருந்த காலங்களில் எங்கனம் மனிதர்களுடைய நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வந்தார்களோ ,அங்ஙனமே மரணத்திற்குப் பிறகும் செய்யக் கூடிய ஆற்றலை ஆண்டவன் அவர்களுக்கு அளித்துள்ளான் . அவர்கள் எங்கிருந்த போதும் , ஆபத்து காலத்தில் அவர்களது திருநாமத்தை விளித்துக் கூப்பிட்டவர்களுக்கு உடனே கைகொடுத்து காப்பாற்றி இரட்சிக்கும் தத்துவத்தையும் ஆண்டவன் அவர்களுக்கு கொடுத்துள்ளான் .

'அவ்லியாக்களுக்கு ஆண்டவன் பக்கமிருந்து குத்ரத்து உடைய கரம் உண்டாயிருக்கிறது . எதிர் நோக்கி பாய்ந்து வரும் அம்பையும் கூட வேறு வழியில் திருப்பி அகற்றக் கூடிய வல்லமை உடையவர்கள் அவர்கள் ' என்று மஸ்னவி ஷரீப் முழங்குகின்றது .

"நான் அஸ்தகிரியிலும் ,என்னுடைய முரீது உதயகிரியிலும் இருந்த போதிலும் சரியே . அவனை ஓநாய் கடிக்க வந்தாலும் எனக்குத் தெரியும் . உடனே அதிலிருந்து அவனைக் காப்பாற்றுவேன் . அத்தகைய கரமும் ஆண்டவனால் எனக்கு அளிக்கப் பெற்றதேயாகும் ." என்று தாஜுல் அவ்லியா ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் அருளியுள்ளார்கள் .

பூலோக ஜனத்தொகையில் ஐந்திலொரு பாகத்தினரான , கோடானு கோடி முஸ்லிம்களில் , ஆண்களும் ,பெண்களும் ,இவ்விரு பாலரும் , தத்தமக்கு ஆபத்து ,இடர்கள் சம்பவிக்கும் சந்தர்ப்பங்களிலும் , ஆனந்த சமயங்களிலும் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களது திருநாமத்தை தாராளமாக உச்சரிப்பதை பிரத்தியட்சமாகப் பார்க்கலாம் . கடல் போல் விரிவான இவர்களது அற்புத காரணங்கள் ,கராமாத்துகள் 'மனாகிபு கெளதிய்யா ' , 'பஹ்ஜத்துல் அஸ்ரார் ' , 'தப்ரீஜூல் காத்திர் ' போன்ற கிரந்தங்களில் நிறைந்துள்ளன .


Bahjatul Asrar
பஹ்ஜத்துல் அஸ்ரார்
  
 

 'கவ்துல் அஃலம்   رضي الله عنه அவர்களது அற்புத காரணங்கள் ஏராளம் ,ஏராளமான ஏடுகளையும் கிரந்தங்களையும் நிரப்பிப் பொங்கி வழிகின்றன  (மல அத் முதவ்வனத்தன் ,குதுபன் முஅல்லபதன் ...)   ' 
என்று மாதிஹுர் ரஸூல் ,சதக்கத்துல்லா காதிரி காஹிரி رضي الله عنه அவர்கள் 'யா குத்பா ' மாலையில் சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளார்கள் .

ஒரு பாடலிலேயே ,கவ்துல் அஃலம் رضي الله عنه அவர்களது காரணச் சிறப்பை வெகுவாக அமைத்துத் தந்து விட்டார்கள் மகான் குணங்குடி மஸ்தான் رضي الله عنه அவர்கள்  , இதோ பாருங்கள் !

' கடலிற் கவிழ்த்ததோர் கப்பலா லாத்துடன் 
                  கடுகிவரவே யழைத்தீர் !
கம்பமுட னோடியே வந்ததோர் கப்பலை 
                   கடிபூனை யாக்கி வைத்தீர் !
குடிகொண்டு கர்ப்பவறை யுள்ளிருக்கையிலுமைக் 
                   கொலைசெய்ய வந்த முனியைக் 
குதிகொண்டு வெளி சென்றுமிருதுண்டுகண்டுபின் 
                   கூர்கர்ப்ப  வரை புகுந்தீர் !
பிடியிற் பிடித்துண்ட  பிள்ளை சந்நியாசி குடற் 
                    பீறி வரவே யழைத்தீர் !
பிரியம் வைத்தெனையாள  வென்னிடத்திந்த   விரு 
                     பேரையுந்  தூதுவிட்டீர் !
நடனமிடு பாதார விந்ததென் சென்னியுற 
                      நாட்செல்லுமோ சொல்லுமே !
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு 
                      நாதன் முஹையத்தீனே !     '


இவ்வாறாக , அற்புதக் காரணங்கள் அன்பியாக்களைக் கொண்டு நிகழ்ந்தால் அது முஃஜிஸாத்து என்றும் அவ்லியாக்களைக் கொண்டு நிகழ்ந்தால் அது 'கராமாத்து' என்றும் வழங்கப்பட்டு வருகின்றன . இவ்விரு பதங்களும் இயற்கைக்கு மாற்றமான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவனவாகும் . ஆகவே தான் அன்னார்களை 'கவாரிக்குள் ஆதாத் ' -இயற்கையின் வழமைக்கு மாற்றமாக அற்புத நிகழ்ச்சிகளை நடத்தக் கூடியவர்கள் ' என்ற பெயர் உண்டு .

இவ்விதமான கராமாத்துகள் இறுதித் தீர்ப்பு நாள் வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும் . அறுபட்டு நின்று விடாது . ஆகவே அத்தகைய ஆற்றல் பெற்ற வலிமார்கள் பால் நேராக நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தர கேட்பது 'ஜாயிஸும்' , 'முஸ்தஹப்பும் ' ஆகும் . இவ்வாறாக பத்வாக்களும் உள்ளன . 

" கராமாத்துகளை இன்கார்(நிராகரிப்பு)  செய்தால் ,ஸுன்னத் வல்   ஜமாஅத் கூட்டத்தை விட்டு நீங்கி வழிகெட்ட முஃதஸிலா கூட்டத்தில் ஆகிவிடுவான் "  என்று ' பதாவா கலீலீ ' ,இரண்டாவது பாகம் , 249வது பக்கத்திலும் , 'தம்ஹீது'   81வது பக்கத்திலும் , ஷரஹு பிக்ஹுல் அக்பர் 69வது பக்கத்திலும் , 'அல் யாவாக்கீது வல் ஜவாஹிர் பீ பயானி அகாயிதில் அகாபீர் ,2வது பாகம் , 90வது பக்கத்திலும் வந்துள்ளன .

இன்னும் இவ்வாறாகவே ஷரஹு தரீக்கத்துல் முஹம்மதியா ,நபஹாத்துல் குர்பு வல் இத்திசால் முதலிய கிரந்தங்களிலும் காணப்படுகின்றன .

உண்மை இவ்வாறிருக்க ,பிள்ளை பாக்கியம் ,அவ்லாது உண்டாக அவ்லியாக்களிடம் கேட்கக் கூடாதெனவும் , அது பற்றி இழிவாகவும் பலர் கூறியும் ,எழுதியும் வருவதோடு ,தகாத ,அடாத சொற்பதங்களையும் பிரயோகிப்பது வருந்தத் தக்கதாகும் . அத்தகையவர்கள் அறிவு ,உணர்ச்சி பெறும் பொருட்டு மேலும் சில ஆதாரங்களைத் தருகிறோம் .

"தனக்கு குழந்தை உண்டாக வேண்டுமென்று விரும்புகின்றவன் ,ஹழ்ரத் உஸ்தாது அபுல் அப்பாஸ் ஸப்தீ வலியுல்லாஹ்   رضي الله عنه அவர்களது  கபூரை ஜியாரத்துச் செய்வதை பற்றி பிடித்துக் கொள்வானாக .ஏனெனில் அவன் நாடித்தேடுகின்ற நாட்டம் அவனுக்கு நிறைவேறி அவனது மனைவியும் அல்லாஹ்வின் ஏற்பாட்டைக் கொண்டு துரிதமாக கர்ப்பமாகி விடுவாள் என்பதற்கேயாம் . இது அனுபவத்தில் சோதிக்கப் பெற்று நேரில் கண்டு அனுபவித்த அதி ஆச்சரியமான  அதிசயமாகும் "  என்று அல்லாமா இமாம் அபூ அப்துல்லாஹ் ஷெய்கு ஸநூஸீ  رضي الله عنه அவர்கள் 'முஜர்ரபாத்திலும்' , அல்லாமா இமாம் தைபீ رضي الله عنه அவர்கள் ஹாமிஷா 52வது பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .

உலகம் போற்றும் உத்தமப் பெரியார் ஒருவருடைய பிறப்பை பற்றியும் இங்கு உதாரணப் படுத்தி கூறுவது மிகமிகப் பொருத்தமெனக் கருதுகின்றோம் .

வாரி வழங்கி கொடுத்த வள்ளலும் , பரோபகாரம் புரிவதே தனது தொழிலாகக் கொண்டிருந்தவருமான 'ஹாத்திம் தாயீ ' குடும்பத்தைச் சார்ந்தவரும் , ஐரோப்பாவிலே ஸ்பெயின் தேசத்தில் 'முர்ஸியா' என்னும் ஊரிலே , ஹிஜ்ரி 560  ரமலான் 17 ,திங்கட்கிழமை இரவில் பிறந்து ,இப்னு சுராக்கா என்னும் பெயருடன் ஸ்பெயினில் 38 ஆண்டு காலம் வாழ்ந்து , ஹிஜ்ரி 598ல் ஸ்பெயினை விட்டு புறப்பட்டு ஆப்பிரிக்கா ,அரேபியா ,இராக்  ,ஆசியா மைனர்  முதலிய பிரதேசங்களில் சுற்றுப் பயணம் செய்து பெரியார்களது கபுருகளை ஜியாரத் செய்து ,பல ஹஜ்ஜுகளும் புரிந்து சிறிதும் பெரிதுமாய் 289 நூற்களுக்கு குறைவின்றி இயற்றி புகழ்பெற்று , 78 வருடம் , 7 மாதம் ,9 நாட்கள் குடும்பத்துடன் மாலிக்கி மத்ஹபில் வாழ்ந்து , ஒரே புத்திரனை ஹிஜ்ரி 638, ரபீயுல் ஆகிர் 28,வெள்ளிக்கிழமை இரவில் வபாத்தாகி சிரியாவில் திமிஷ்க் நகரில் ,காஸீயூன் குன்றின் மேல் அடக்கமாகி இருப்பவருமான அற்புத அவதாரப் புருஷரின் பிறப்புச் சிறப்பு விபரம் வருமாறு :-

" பிரபல்ய வியாபாரியும் ,செல்வந்தருமான ஸ்பெயின் வாசி ஒருவருக்கு எல்லாவிதமான ஐசுவரிய சம்பத்துகளிருந்தும் ஒரே ஒரு பெருங்குறை ,அது தான் புத்திர சம்பந்தமில்லாத குறை .

தான் கேள்வியுற்ற பெரியார்கள் யாவரிடத்திலும் தேடிச் சென்று தனது மனக்குறையை அவர் தெரிவித்தார் . யாவரும் அவருக்கு விதியிலேயே பிள்ளைப் பாக்கியம் பெறும் இடமில்லை என்ற பதிலையே கூறினர் . அவரும் மிகவும் வியாகூலமடைந்து கவலையோடிருந்து வந்தார் .

இறுதியாக ஹழ்ரத் கவ்துல் அஃலம் ஸெய்யிதினா முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களது கீர்த்திப் பிரஸ்தாபத்தை கேள்வியுற்று ,அவர் பகுதாது மாநகருக்கு சென்று தனது முறைப்பாட்டை கவ்துல்    அஃலம்  அவர்களிடம் சென்று கூறினார் .

    
கவ்துல் அஃலம் ஸெய்யிதினா முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ' லவ்ஹை நோக்கினேன் .அதில் உமக்கு பிள்ளைகுட்டி பாக்கியம் இல்லை என்றே தெரிய வருகிறது ' என்று கூறினார்கள் .

உடனே அம்மனிதர் கலங்கி பரிதவித்து ,'நாயகமே ! இந்த துர்பாக்கியனுக்கு பிள்ளை இல்லை என்று எல்லோருமே கூறிவிட்டார்கள் . இரப்பார்க்கு  இல்லை என்று சொல்லாமல் கேட்டதை ஈந்து வழங்கும் வள்ளலாகிய தங்கள் வாயிலைத் தேடி தமியேன் இந்த கோரிக்கையுடன் வந்திருக்கிறேன் . பாவியின் மீது தயை கூர்ந்து கிருபை செய்தருளி இவனது அபேட்சையைப் பூர்த்தி செய்து அருள வேண்டுகின்றேன் '  என்று மன்றாடினார் .

அவரது மனோநிலையறிந்து இரங்கி      ஹழ்ரத் கவ்துல் அஃலம் ஸெய்யிதினா முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் , 'அலியே ! என்னில் நின்றும் உமக்கு ஓர் பிள்ளையைத் தருகின்றேன் . உமது முதுகை எமது முதுகுடன் சேரும் . எனது முதுகு தண்டிலிருப்பது ஆண் குழந்தை . அது உமது இல்லத்தில் பிறக்கும் . எமது எல்லாவித இல்லமுகளுக்கும் அந்த பிள்ளையே வாரிசாவார் . அவர் எமது நாவாகவே இருப்பார் . எவரும் வெளிப்படுத்தாத அகமிய இரகசியங்களை எல்லாம் அவர் பகிரங்கப் படுத்துவார் . புகழோடும் கீர்த்தியோடும் விளங்குவார் . அவருடைய பெயர் முஹம்மது . ஆனால் முஹையத்தீன் என்ற காரணப் பெயரோடு விளங்குவார் ' என்று ஆசி கூறி அனுப்பினார்கள் .
ஷெய்குல் அக்பர் இப்னு அரபி அவர்களின் ஜியாரத் 

அவரும் சந்தோஷத்துடன் வீடு திரும்பினார் . அன்று அவர் மனைவி கர்ப்பவதியாகி அப்பால் ஜனனமானவர்கள் தான் , ஹழ்ரத் ஷெய்குல் அக்பர் ஸெய்யிதினா முஹம்மது முஹையித்தீன் இப்னு அரபி رضي الله عنه அவர்கள் .
கலாயிதுல் ஜவாஹிர்

இவ்வரலாறு 'மனாகிபு கவ்திய்யா ' 76 வது பக்கத்திலும் ,  'கலாயிதுல் ஜவாஹிர் ' கிரந்தத்திலும் காணலாம் .


" கராமத்தைக் கொண்டு  தகப்பனின்றி பிள்ளையை வெளிப்படுத்த அவ்லியாக்களுக்கு சக்தியுண்டா ?  " என்று ஆரிபுபில்லாஹ் ஷெய்கு முஹம்மது கலீலீ ஷாபியீ رضي الله عنه அவர்களிடம்  வினவப்பட்டதற்கு ,'அங்கனம் செய்ய அவர்களுக்கு சக்தியுண்டு ' என்பதாகப் பகர்ந்தார்கள் .

இவ்விபரம் பதாவா கலீலீ , 1வது பாகம் , 79வது பக்கத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது .

தகப்பனின்றி ஹழ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் பிறந்த வரலாறு குர்ஆன் ஷரீபில் கூறப்படுகின்றது .  

அவ்லியாக்களின் கராமத்தில் மற்றோன்றையும் தருகின்றோம் பாருங்கள் !

ஹழ்ரத் ஷாஹ் ஹசன் அலீ அஜீமாபாதீ رضي الله عنه அவர்கள் வலுப்பமான வலியுல்லாஹ்வாகவும் , பிர்தவ்ஸியா தரீக்காவின் ஷெய்காகவும் இருந்தார்கள் . அவர்களின் முரீதுகளில் ஒருவருக்கு வெகு காலமாக குழந்தையில்லை . அவரது மனைவி மலடியாக இருந்தாள் . அவர் தமது இக்குறையை ஷெய்கவர்களிடம் முறையிட்டார் . ஷெய்கவர்கள் அவரது மனைவியை கல்வதிலிருக்கச் செய்து ,கன்னிப் பெண் யாரும் அப்பக்கத்தில் போகக் கூடாதென தடை விதித்திருந்தார்கள் .

கல்வதிலிருந்த அப்பெண்மணியை வெளியிலிருந்து கொண்டு ஷெய்கவர்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்கள் . தற்செயலாய் ஒன்பது வயதுள்ள ஒரு சிறுமி ,கதவு துவாரத்தின் வழியாக நோக்கிப் பார்த்தாள் . ஷெய்கவர்களின் கூர்மையான நோக்கு அச்சிறுமியின் மீதும் விழுந்தது . அந்தப் பெண்ணும் கர்ப்பவாதியானாள் ,அந்தக் சிறுமியும் கர்ப்பமானாள் . இவ்வற்புத வரலாறு  'மிர்ஆத்துல் கவ்னைன் ' என்ற நூலில் 443வது பக்கத்தில் சொல்லப்படுகின்றது .

ஆகவே ,எக்காலமும் அவ்லியாக்களுக்கு கறாமத் செய்ய சக்தியுண்டு . மவ்த்தானவர்களை ஹயாத்தாக்கவும் தத்துவமுண்டு . தகப்பனின்றி பிள்ளை வெளியாக்கவும் வல்லமையுண்டு . அவ்லாது பிள்ளை குட்டி பாக்கியம் வேண்டுமென்று அவர்களிடம் கேட்பதும் ஆகும் .

இவை எல்லாம் குர்ஆன் ,ஹதீது , பெரியார்களின் சரித்திரங்களைக் கொண்டு ஸ்திரமாகின்றன . இவற்றை மறுப்பவன் சத்தியத்தை மறுப்பவனாவான் .       
           
                       
  

  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...