Tuesday 28 November 2017

வஸீலா - 2


ஸஹீஹுல் புஹாரிக்கு ஷரஹ் எழுதியிருக்கும் இமாம் ஷஹாபுத்தீன் கஸ்த்தலானீ  رضي الله عنها அவர்களது உஸ்தாது ,ஞானாசிரியர் ,இமாம் ஷெய்கு அஹ்மது அபுல் அப்பாஸில் முர்சி ஜர்ரூக் மக்ரீபி  رضي الله عنها வர்கள் கூறுகின்றார்கள் :

"என்னுடைய முரீதுக்கு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டு அவன் தட்டழிந்து திகைத்து இருக்கும் சமயம் அவனை பாதுகாத்து ஆறுதல் அளிப்பேன் ."

"இன்னும் இயலாமை ,கஷ்டம் , பயங்கரம் உண்டான போது எனது முரீது 'யா  ஜர்ரூக் !' என்று என் பெயரைச் சொல்லி அழைப்பானேயானால் நான் விரைந்து வந்து பாதுகாப்பேன் "


இமாம்  ஜர்ரூக் அவர்களின் சங்கைமிகு ஜியாரத்
  
இவ்விபரம் ஷெய்கு ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி
 رضي الله عنها அவர்களது 'புஸ்த்தானுள் முஹத்திதீனில்' குறிப்பிட்டுள்ளார்கள் என 'அன்வாருல் இன்திபாஹ் பீ ஹல்லி நிதாயியா ரஸூல்லல்லாஹ்' என்ற நூலின் 29வது பக்கத்தில் இமாம்  முப்தி  அஹ்மது ரிழா கான் காதிரி பரேலி   
رضي الله عنها அவர்கள் வரைத்துள்ளார்கள் .

அன்வாருல் இன்திபாஹ்
மகத்துமிக்க நாதாக்களான அவ்லியாக்கள் தவ்ஹீதின் காவலர்களான முத்தகீன்கள் ,வரபயீன்கள் எல்லாம்  வஸீலாவை எவ்வண்ணம் பற்றிப் பிடித்துள்ளார்கள் என்பதைப் பின் வரும் விஷயத்தைப் படித்து உணர்ச்சி பெறுவோமாக .


எம்பெருமானார் ,ஷபீயுல் முத்னிபீன் , ரஹ்மத்துல் ஆலமீன் , நபிகள் திலகம் ,ஸெய்யிதினா , முஹம்மது ரஸூலுல்லாஹி   அவர்களை     ஹழ்ரத் கவ்துல் அஃலம்        
 رضي الله عنها அவர்கள்   அழைத்துக் கூப்பிட்டு 

"ஆண்டவனுடைய தோழரான ஹபீபுல்லா அவர்களே ! 
எனது கையை பிடித்து காப்பாற்றி அருள்வீராக !
எனது இயலாத் தன்மைக்கு தங்களை அன்றி கார்மானம் யாரும் இல்லையே ! " 

என்று கூறி பெருமானார்    அவர்களிடம் வஸீலா தேடியுள்ளார்கள் .


"சிருஷ்டிகளிள் எல்லாம் மாபெரும் சிரேஷ்டமானவர்களே !
பேராபத்து , இடர்கள் வந்துற்றபோது அபயந் தேடி ஒதுங்குவதற்கு 
தங்களையன்றி வேறு யாரும் எனக்கு இல்லையே ! "

என்று ஆஷிக்கே ரஸூல் இமாம் முஹம்மது  பூஸரி    رضي الله عنها அவர்கள்  'கஸீதத்துல் பூர்தாவில் ' உதவி தேடியுள்ளார்கள் .


"என்னை இரட்சித்து காப்பாற்றக் கூடிய நாயகமே ! என்னுடைய நாவிலுண்டான முடிச்சின் வருத்தங்களை என்னை விட்டும் அவிழ்த்து விடுங்கள் ! 

பறுலான   அமல்களில்     என்னுடைய கழுத்தில் ஏறிக் கொண்டிருக்கும் கடன்களை என் கழுத்தை விட்டும் நீக்குங்கள் !

மேலும் துன்பங்கள் துயரங்கள் என்னை வந்து மோதும் போது அவற்றைத் தட்டி விலக்க தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் !

எனக்காக மன்றாடி கரை சேர்க்கும் கருணை வள்ளலே ! நான் பற்றிப் பிடிக்கும் ஆதரவுப் பொருளே ! தங்களை தரிசிப்பது தான் எனது நாட்டமும் , தேட்டமும் . இது மட்டுமா ? இறுதி தீர்ப்பு நாளன்று ,மஹ்ஷர் மைதானத்தில் தங்களிடம் கேட்க ஹாஜத்துகள் எத்துணை எத்துணையோ உண்டு !"

என்பதாக மாதிஹூர் ரஸூல் ஷெய்கு சதகதுல்லாஹில் காதிரி காஹிரிய்யி  رضي الله عنها அவர்கள்   நாயகம்   அவர்களிடம் இரட்சிப்பு வஸீலா தேடிய சான்று 'வித்ரிய்யா கஸீதாவில் ' காணப்படுகின்றது . 


" சிருஷ்டிகளிலெல்லாம்  சிரேஷ்டமானவர்களே !
  ஆதரவு வைப்பதற்கு  மேலாம்பரமானவர்களே !
அல்லாஹுத்தஆலா தங்கள் மீது கிருபை செய்வானாக !
மேலாம்பரமான கொடை அளிக்கும் கொடை வள்ளலே !
கஷ்டங்களை எல்லாம் விலக்கி வைத்து உதவி செய்வதற்கு உத்தமமானவர்களே ! 
மழை பொழியும் கார்முகிலை விட தங்களது உயர் கொடை தான் 
மேலாம்பரமாகி மிகைத்துவிட்டது ! "

Atyab Al Nagam Fi Sayad Al Arab-wal- Aajam
அத்யாப்  அல் நகம் -ஷாஹ் வலியுல்லாஹ்  

என்று கண்ணியமிக்க இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி  رضي الله عنها அவர்கள் தங்களது 'அத்யப் அல் நகம் ' கஸீதாவில்  எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா   அவர்களிடம் அபயம் தேடி உள்ளார்கள் .

"அல்லாஹ்வுடைய திருத்தூதரான ரசூலவர்களே ! தங்களின் திருமுகத்தை விட்டும் திரையை சற்று நீக்கி தங்களின் தரிசனத்தை எனக்கருளுங்கள் !

தங்களுடைய திருமுகத்தை ஜோதி கொண்டு என்னுடைய நேத்திரங்களுக்கு பிரகாசத்தை அளியுங்கள் ! வேற்றுமையின் இருளை விட்டும்என்னைக் காப்பாற்றுங்கள் !

நான் நல்லவனோ ,கெட்டவனோ எப்படியிருப்பினும் தங்களுடையவன் ஆகிவிட்டேனே  ! அதுவே போதும் ! இப்போது வேண்டுமானால் ஆதரியுங்கள் அல்லது வெருட்டுங்கள் ! (நான் தங்களை விட்டும் அசைய மாட்டேன் )

கப்பலோட்டி நடுக்கடலில் வழிதவறித் திகைத்தாற் போல் நான் வாழ்க்கை புயலில் நிலை தவறி தத்தளிக்கின்றேன் ! என்னைக் கரை சேருங்கள் !

நான் தகுதியற்றவனாயினும் தங்களின் கிருபையின் பேரில் எனக்கு ஆதரவு உண்டு ! என்னை மதீனாவுக்கு அழைத்துக் கொள்ளுங்கள் !

இயலாமையுள்ள இந்த இம்தாத் என்பவனைத் தங்களுடைய காதல் வலையில் அகப்படச் செய்யுங்கள் ! இத்தருணம்  ஈருலகிலும்  இவனை விடுதலை பெற்று ஈடேற்றம் அடையச் செய்யுங்கள் ! " 

மேற்சொன்ன விதமாக , தேவ்பந்திகள் அனைவருடைய பீரே முர்ஷித் ஆரிபுபில்லாஹ் ஹாஜி ஹாபிஸ் ஷாஹ் முஹம்மது இம்தாதுல்லாஹ் ஸாஹிப் , முஹாஜிர் மக்கி அவர்கள் முறையீடு செய்கிறார்கள் .இவ்விதம் நாயகம்   அவர்களிடம்  உதவி தேடி இயற்றிய கஸீதாக்களை இம்தாத் உல் முஸ்தாக் , நாலா ஏ இம்தாத் போன்ற நூற்களில் காணலாம் .

Ahmadullah Baith
அஹ்மதுல்லாஹல் வலீ பைத் அரபி 

குத்புஸ்ஸமான் தைக்கா ஸாஹிபு  காஹிரி காதிரி رضي الله عنها அவர்கள் , தங்களது 'அஹ்மதுல்லாஹல் வலீ ' என்ற பைத்தில்   நாயகம்   அவர்களை 
'யா கைரன் நபீ  - யா கைரன் நபீ ' (நபிமார்களில் எல்லாம் சிரேஷ்டமான நன்னபியே ) என்று அழைத்து , இவ்வுலக சம்பந்தமான ,மறு உலக சம்பந்தமான அத்தனை கோரிக்கைகளையும் நாயகம்   அவர்களிடமே நேருக்கு நேர் வேண்டுதல் செய்து இறைஞ்சுகின்றார்கள் .

வலிகள் திலகம் ,கவ்துல் அஃலம், ஸெய்யிதினா முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி   رضي الله عنها அவர்களை ,ஷரஹுப் புலி , இமாம் சதக்கத்துல்லாஹ் காதிரி காஹிரி رضي الله عنها அவர்கள் நேருக்கு நேர் அழைத்து ,


                 யா ஸையதீ சனதீ கவ்தீ வ யா மததீ !
 
" எனது தலைவரவர்களே ! எனது ஆதாரமே !
  எனது இரட்சகரே ! எனது உதவியாளரே !
பகைவர்களின் தீங்கு ஏதும் என்னை வந்தணுகாமல் என்னை காப்பாற்றி ,பாவத்தில் நான் சிக்கி மோசம் போய் விடாமல் என்னைக் கைப்பிடித்து பாதுகாத்து உதவி புரிவீர்களாக !
அல்லாஹ்வுடைய கலீபாவெனும் பிரதிநிதியாக எங்கள் பால் வந்துதித்த முஹையத்தீன் ஆண்டகையவர்களே ! "

என்று முனாஜாத்து செய்துள்ளார்கள் .

ஞானக்களஞ்சியம் , குணங்குடி மஸ்தான் சாஹிபு வலி  رضي الله عنها அவர்கள் ,இரட்சிப்புத் தேடி இருப்பதை பாருங்கள்

" மன்னிய தவத்தினர்க் கருள் தந்த குருவும் நீ
                      மாதா பிதாவும் நீயே !
மட்டறு பவக்கடல்தொலைக்கு மொரு  கவிழா
                    மரக்கலமும் நீயல்லவோ !
அன்னியமாதான பிரபஞ்சமாம் பெருநெருப்
                படக்குமட பெரும்    பாலமாய்
 அன்புடன் எனைப் பெற்ற அப்பனே அருள் தந்த
              ஆண்டவனும் நீயல்லவோ !
என்னை உனையன்றி இனி யாள்வரெவ  ரையனே
               எந்தையே எம்பிரானே !
இகபர மிரண்டிலுஞ் சுக துக்க மற்றுயான்
                  ஈடேற அருள் புரிவையே !
நன்னிலையமாக வென் முன்னிலையில் வந்து  எந்
                     நாளும் ரட்சித் தருள்வையே !
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
                     நாதன் முஹையத்தீனே ! "

குத்புல் அக்தாப் , பர்துல் அஹ்பாபு , ஸையிது அப்துல் காதிர் மீரான் ஸாஹிபு ,ஷாஹுல் ஹமீது  நாகூரி  رضي الله عنها அவர்களை அழைத்து ,

                             யா ஸாஹிபன் னாகூரி குன்லீ  நாஸிரீ      

 "நாகூர் வாழ் எஜமானே ! எனது கேள்விப் புலனும் , பார்வைக்குப் புலனும் உறுப்புகளும் ஸலாமத்தாக  இருக்க எனக்கு நல்லருள் செய்வீர்களாக !
இன்னும் நான் குறைந்த அற்பாயுள் வயதுடைவானாக இல்லாமல் நீடித்த வாணாள் உடையவனாக இருக்க நீங்கள் நல்லுதவி செய்வீர்களாக !
எல்லாவித நன்மைகளும் ஒருங்கே சேகரமாய் பொதிந்து அமைந்த அப்துல் காதிர் வொலி அவர்களே ! "

என்று காயல்பதியில் பிறந்து கீழக்கரையில் அடங்கி ஜோதி கொண்டியங்கும் , கல்விக் கடல் ஷைகு சதக்கத்துல்லாஹ் காதிரி رضي الله عنها அவர்கள் உதவி தேடியுள்ளார்கள் .

நாகூர் பாதுஷா நாயகம் رضي الله عنها அவர்களை நோக்கி குணங்குடி மஸ்தான் ஸாஹிப் رضي الله عنها அவர்கள் ,

"  திக்குத் திகந்தமுங் கொண்டாடியே வந்து         
                    தீன் கூறி நிற்பர் கோடி !
சிங்காசனாதிபர்கள் நாதரேந்தியே வந்து
               ஜெய ஜெயா வென்பர் கோடி !
ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
                அணி அணியாக நிற்பர் கோடி !
அஞ்ஞான வேரறுத்திட்ட மெஞ்ஞானிகள்
             அணைந்தருகு நிற்பர் கோடி !
மக்க நகராளு     முஹம்மதுர் ரஸூல் தந்த
              மன்னரே என்பர் கோடி !
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும்
                 மகிமைசொல    வாயுமுண்டோ !
தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
              தவராஜ செம்மேருவே !
தயை வந்தெனையாள் சற்குணங் குடிகொண்ட
              ஷாஹுல் ஹமீத் அரசரே ! "

என்று வேண்டுதல் செய்கின்றார்கள் .

ஹழ்ரத் அபுல் ஹசன் அலி  ஷாதுலி رضي الله عنها அவர்களை அழைத்து நோக்கி , அல்லாமா ஷெய்கு நூஹ் ஸாஹிப் காஹிரி رضي الله عنها அவர்கள் 'யா ஸெய்யிதீ செய்யிதஸ் ஸாதாத்தீ யா சனதீ ' என்று கூறியிருக்கும் முனாஜாத்தில் ,

"எங்கள் தலைவரவர்களே ! தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அனவர்களே ! எனது ஆதாரப் பொருளே ! எனக்கும் எனது சகோதரருக்கும் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தந்திட நீங்கள் உதவியாக இருங்கள் .

என்னை கைவிட்டு விடாதீர்கள் ! எனது நாட்ட தேட்டம் நிறைவேறு மட்டும் ,எனது உதவியாளரே ! என்னைக் கைப்பிடித்து உதவவேண்டும் அபுல் ஹசன் (ஷாதுலி ) அவர்களே ! "

என்பதாகக் கூறியுள்ளார்கள் .

அஹ்லு பைத்தினர்களாகிய நாயகம்    அவர்களின் குடும்பத்தார்களின் மீது ஆதரவு வைத்தவர்களாக , ஷைகு ஸஃதீ ஷீராஸி    رضي الله عنها அவர்கள் ,

" இறைவா ! பாத்திமா நாயகி رضي الله عنها அவர்களின் பிச்சளங்களின் பொருட்டால் எனது முடிவை ஈமான் ஸலாமத்துடன்  ஆக்கி வைப்பாயாக ! 

நீ எனது பிரார்த்தனையை ஏற்றாலும் சரி,நிராகரித்தலும் சரி நான் நாயகம்           அவர்களின் குடும்பத்தார்களின் முந்தானையை பற்றிப் பிடித்தவனாக இருக்கின்றேன் " 

என்று உரைத்தார்கள் .


சுருதி, யுக்தி ஆதாரங்களைக் கொண்டு ஓரளவு மேலே காண்பித்துள்ளோம் . இவ்வாறு மாபெரும் மகாத்மாக்களும் ,மகான்களும் , ஷரஹைப் பேணி நடந்த நாதாக்களும் , தவ்ஹீதைப் பற்றிப் பிடித்த முவஹ்ஹிதீன்களும் , கவ்துல் அஃலம்  رضي الله عنها அவர்களையும் , நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம்  رضي الله عنها அவர்களையும் .மற்றும் குத்புமார்கள் ,வலிமார்களையும் அழைத்து ,கூப்பிட்டு அன்னவர்களிடம் இரட்சிப்பு- உதவி வஸீலா  தேடி  இருக்கின்றார்கள் . மேற்சொன்ன மாகானுபவர்களை விட ,வஸீலா தேடலாகாது , உதவி ,இரட்சிப்பு கேட்கலாகாது - யா ரஸூலல்லாஹ் ,யா முஹையத்தீன் ,யா கவ்து என்றெல்லாம் சொல்லக்கூடாது என்று  கூறி அலையும் கூட்டத்தினர் எந்த வகையில் விஷேசமானவர்கள் என்று தான் விளங்கவில்லை .

எனவே , நிச்சயமாக அன்பியாக்கள் ,அவ்லியாக்கள் பால் இரட்சிப்பு , உதவி ,உபகாரம் ,வஸீலா எக்காலமும் தேடலாம் என்பதே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்களின் ஏகோபித்த தீர்ப்பாகும் . இதை மறுப்பவன் வஹாபி ,முஃதஸிலா , காதியானி கூட்டத்தைச் சார்ந்தவன் என்பதில் ஐயமில்லை . மேலும் இவன் சத்தியத்திற்கு மாறுபாடாக நடந்தவனுமாவான் . 

          
                






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...