Monday 23 May 2022

ஏந்தல் நபி ﷺ அவர்களின் தனிப்பெரும் அந்தஸ்து

 அல் முஸன்னப் , அப்துர் ரஸ்ஸாக் : 

இமாம் அப்துர் ரஸ்ஸாக் رَحِمَهُ الله  அவர்கள் முஅமர் அவர்களிடமிருந்தும் ,அவர் இப்னு அல் மன்கத்ர் அவர்களிடமிருந்தும் ,அவர் ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் رضي الله عنه அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள் , ' ஹழ்ரத் ஜாபிர் رضي الله عنه அவர்கள் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களிடம் கேட்டார்கள் , 'யா ரஸூலல்லாஹ் صَلّى اللهُ عليهِ وسلّم ,என் தாயும் , தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் . எல்லா படைப்புகளையும் படைக்கும் முன்னர் ,அல்லாஹ் سبحانه وتعالىٰ எதை படைத்தான் . நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் நவின்றார்கள் , 'ஓ  ஜாபிரே ! அல்லாஹ் سبحانه وتعالىٰ முதன் முதலில் தனது ஜோதியில் இருந்து ,உமது ரஸூலின் நூரைப் படைத்தான். அந்த நூர் அல்லாஹ்வின் குத்ரத்தில் அவன் நாடிய வரை இருந்தது. அப்போது லவ்ஹு ,கலம் ,சொர்க்கம் ,நரகம் ,மலக்குகள், வானம் ,பூமி என எதுவுமே படைக்கப்படவில்லை . அதன் பின்னர் அல்லாஹ் سبحانه وتعالىٰ படைப்புகளை படைக்க நாடினான் .அவன் அந்த ஜோதியை நான்கு பகுதிகளாக பிரித்தான் . முதல் பகுதியில் இருந்து கலமும் , இரண்டாவது பகுதியில் இருந்து லவ்ஹும் , மூன்றாவது பகுதியில் இருந்து அர்ஷு குர்ஸியும் , இன்னும் நான்காவது பகுதியில் இருந்து மற்ற அனைத்து படைப்புகளையும் " 

[ முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் , பக்கம் 99,ஹதீஸ் எண் : 18 ]


இந்த ஹதீத் பின்வரும் கிரந்தங்களிலும் காணப்படுகின்றது : 

*  இமாம் கஸ்த்தலானி رَحِمَهُ الله, அல் மவாஹிபுல்லதுன்னியா, பாகம் 1, பக்கம் 71.

* இமாம் ஸுர்கானி رَحِمَهُ الله, ஷரஹ்   மவாஹிபுல்லதுன்னியா , பாகம் 1,பக்கம் 89-91.

*  அஜ்லுனி , கஷ்ப் அல் கபா (وقال : رواه عبد الرزاق بسنده عن جابر بن عبد اﷲ رضي اﷲ عنهما) ,  பாகம் 1,பக்கம் 311,ஹதீஸ் எண் : 827

* ஹலபி , சீரத் ஹலபி , பாகம் 1,பக்கம் 50

* தேவ்பந்தி பிர்காவின் அஷ்ரப் அலி தான்வி , நஷருத்தீப் , பாகம் 1,பக்கம் 13  .




அல் மத்கல், இமாம் அபூ அப்துல்லாஹ் இப்னு அல்-ஹாஜ் அல்-மாலிக்கி :

இமாம் அபூ அப்துல்லாஹ் இப்னு அல்-ஹாஜ் அல்-மாலிக்கி (மறைவு 736) رَحِمَهُ الله  எழுதுகிறார்கள் , " அல்லாஹ் سبحانه وتعالىٰ முதன்முதலில் நபிகள் நாயகம்  صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களது நூரைப் படைத்தான், அந்த நூரே முஹம்மதி முன் வந்து ,அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்தது.அல்லாஹ் سبحانه وتعالىٰ அதனை நான்கு பாகங்களாக பிரித்து , முதல் பாகத்தில் இருந்து அர்ஷினை படைத்தான், இரண்டாவது பாகத்திலிருந்து கலமையும் , மூன்றாவது பாகத்திலிருந்து லவ்ஹையும், அதைப் போன்றே நான்காவது பாகத்தை ,இன்னும் பிரிவுகளாக பிரித்து ,அதில் இருந்து ஏனைய படைப்புகளையும் படைத்தான். எனவே அர்ஷினுடைய நூர் என்பது நூரே முஹம்மதியாவிலிருந்து வந்தது  , கலமினுடைய நூர் என்பது நூரே முஹம்மதியாவிலிருந்து வந்தது , லவ்ஹினுடைய நூர் என்பது நூரே முஹம்மதியாவிலிருந்து வந்தது , பகலினுடைய நூர் , இல்மினுடைய நூர், சூரியன் மற்றும் சந்திரனுடைய நூர், பார்வையினுடைய நூர் ஆகிய எல்லாமும் நூரே முஹம்மதியாவிலிருந்து வந்தது .

[ அல் மத்கல்,பாகம் 2,பக்கம் 32-33 ]




தலாயிலுந் நுபுவ்வா :

ஹழ்ரத் அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்கள் நவின்றார்கள் , " அல்லாஹ் ஆதம் நபி عليه السلام அவர்களைப் படைத்தபொழுது , அன்னாரது சந்ததிகளைப் பற்றி அவர்களுக்கு அறிவித்துக்கொடுத்தான். அதில் ஆதம் நபி عليه السلام அவர்கள் சிலர் சிலரைக் காட்டிலும் மேன்மையடையவர்களாக கண்டார்கள் , அதில் இறுதியாக  சுடரொளி வீசும் நூராக என்னைக் கண்டார்கள் .ஹழ்ரத் ஆதம் நபி عليه السلام அவர்கள் கேட்டார்கள் , ' எனது நாயனே ! இவர்  யார் ? '. அல்லாஹ் பகர்ந்தான் ,' இவர் முதலாவதும் ,இறுதியானதுமான உம்முடைய மகனார் அஹ்மது ; (கியாமத் தீர்ப்பு நாளில் ) முதன் முதலாக பரிந்துரை செய்பவர் இவர் தான் ." 

[ இமாம் பைஹகீ رَحِمَهُ الله , தலாயிலுந் நுபுவ்வா,பாகம் 5,பக்கம் 483]


ஹழ்ரத் அர்பாஸ் பின் ஸாரியா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் அவர்களது யதார்த்தத்தை கேட்டனர் .  கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்கள் நவின்றார்கள் , "  நான் இப்ராஹீம் நபி عليه السلام  அவர்களின் பிரார்த்தனை ஆவேன் ; ஈஸா நபி عليه السلام தனது உம்மத்திடம் எனது வருகைப்  பற்றிய சுபச்செய்தியை அறிவித்தார்கள் ;எனது தாயார் தனது உடலிலிருந்து வந்த நூரினால்  ஷாம் நாட்டின் கோட்டை கொத்தளங்கள் மிளிர்வதைக் கண்டார்கள் ."

[ இமாம் பைஹகீ رَحِمَهُ الله , தலாயிலுந் நுபுவ்வா,பாகம் 1,பக்கம் 83]





பாழாயிலுஸ் ஸஹாபா, இமாம் அஹ்மத் :

ஹழ்ரத் ஸல்மான் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்  கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்கள் நவின்றார்கள் , " நான் ஆதம் நபி பிறப்பதற்கு 1400 ஆண்டுகள் முன்பே நூராக இருந்தேன் ".

[பாழாயிலுஸ் ஸஹாபா, இமாம் அஹ்மத்  , பாகம் 2,பக்கம் 726,ஹதீஸ் எண் : 1130]

Fadha’il al-Sahabah, Imam Ahmad

Fadha’il al-Sahabah, Volume 002, Page No. 726, Hadith Number 1130

ஸுனன் தாரிமீ : 

ஸெய்யிதினா இப்னு அப்பாஸ் رضي الله عنه  அவர்கள் கூறினார்கள் , " அல்லாஹ் ஸுப்ஹானஹுத்தாலா கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை எல்லா நபிமார்களைக் காட்டிலும்  ,எல்லா சுவனவாசிகளைக் காட்டிலும் விரும்பித் தேர்வு செய்துள்ளான் ". அன்னாரிடம் கேட்டனர் , " ஓ ! இப்னு அப்பாஸ் ,அல்லாஹ் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை எல்லா சுவனவாசிகளைக் காட்டிலும் எவ்வாறு தேர்வு செய்தான் ? " .ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه  அவர்கள் , " அல்லாஹ் கூறினான் : " அவர்களில் எவரேனும் "அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் ஒரு வணக்கத்திற்குரிய இறைவன்தான்" என்று (அந்த மலக்குகள்) கூறினால், அவர்களுக்கும் நரகத்தையே நாம் கூலியாக்குவோம்.[21:29] .ஆனால் நாயகம்  صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களைக் குறித்து , " (நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்.(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்து வீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான். [48:1-2]  " என்று பதில் அளித்தார்கள் .  அவர்கள் கேட்டனர் , " அல்லாஹ் ! நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை எல்லா நபிமார்களைக் காட்டிலும் எவ்வாறு தேர்வு செய்தான் ? " . ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் , " அல்லாஹ் பிற நபிமார்களைக் குறித்து கூறுகின்றான் : (நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம். [14:1] , ஆனால் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களைக் குறித்து , " (நபியே!) நாம் உங்களை (இவ்வுலகத்தில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம்.[34:28] " என்று பதில் அளித்தார்கள் . 

[ ஸுனன் தாரிமி , பாகம் 1,பக்கம் 193-194,ஹதீஸ் எண் 87 ]

இந்த அறிவிப்பை  இஷ்ஹாக்  பின் இப்ராஹீம் அவர்களைக் கொண்டு இமாம் ஹாக்கிம்  رَحِمَهُ الله அவர்களும் அறிவிக்கினறார்கள்.இமாம் ஹாக்கிம் رَحِمَهُ الله  அவர்கள் , " இந்த அறிவிப்பு நல்ல அறிவிப்பாளர் தொடரைக் கொண்டுள்ளது " என்றார்கள் . 
[ முஸ்தத்ரக் ஹாக்கிம் ,பாகம் 2,பக்கம் 350]

இந்த அறிவிப்பை குறித்து ஹாபிழ் நூருத்தீன் ஹைத்தமி رَحِمَهُ الله அவர்கள் கூறுகின்றார்கள் , " ரிஜாலஹு ரிஜால் அல் ஸஹீஹ் - இந்த அறிவிப்பு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டுள்ளது .
[ மஜ்மஅஸ் சவாயித் ,பாகம் 8,பக்கம் 253-254 ]





இமாம் கஸ்த்தலானி,மவாஹிபுலதுனிய்யா :

இமாம் தாஜுத்தீன் ஸுப்கி رَحِمَهُ الله அவர்கள் கூறினார்கள் , " அல்லாஹ் உடல்களை படைக்கும் முன்னர் ஆன்மாக்களை படைத்தான் என்று சொல்லப்படுகின்றது .கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் கூறியுள்ள , " நான் ஆதம் மண்ணுக்கும் ,ஆன்மாவுக்கும் இடையில் இருந்த போது நபியாக இருந்தேன் " என்ற முன்னறிவிப்பு பூமான் நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது புனித ஆன்மா குறித்தும் ,யதார்த்தங்களின் யதார்த்தம்  ( ஹகீகத் அல் ஹகாயிக் )  குறித்தும் இருக்கலாம் . நமது சிற்றறிவு இத்தகைய யதார்த்தம் குறித்து அறிந்து கொள்வதில் பின்தங்கியுள்ளது , எனினும் எல்லாம் வல்ல நாயனான அல்லாஹுத்தஆலா அதனை அறிவான் ,தன்னுடைய நூரிலிருந்து யாருக்கு அவன் உதவிபுரிகின்றானோ அவர்களும் அறிவார்கள் ( மன் அமத்தஹு பி நூரின் இல்லாஹ் ) .அல்லாஹுத்தஆலா தான் விரும்பும் நேரத்தில் ,இத்தகைய யதார்த்தங்களின் இருத்தலை வெளிக்கொண்டு வருவான்.கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களின் யதார்த்தத்தைப் பொறுத்த வரையில் ,பெரும்பாலும்  ஸெய்யிதினா ஆதம் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னர் இருக்கலாம் .மேலும் அல்லாஹ் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களின் யதார்த்தத்தை வெளிக்கொண்டு வந்த பின்னர் அதற்கு நுபுவ்வத்தின் பண்புகளை அருளினான். எனவே ஏற்கனவே அந்நேரத்திலேயே  ,எம்மான் நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் இறைவனின் திருத்தூராக இருந்தார்கள்."

[ இமாம் கஸ்த்தலானி,மவாஹிபுலதுனிய்யா ,பாகம் 1,பக்கம் 31-32 ]

ஏந்தல் நபி அவர்களது ஞானத்தை ,பின்னிரவில் ஒளி வழங்கும் நட்சத்திரங்களுக்கு ஒப்பீடும் ஹதீஸ்கள் நபிகளாரின் நூருக்கும் மற்ற படைப்புகளுக்கும் உள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.ஸெய்யிதினா அனஸ்  رضي الله عنه   அவர்கள் பெருமானார் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் நவின்றதாக அறிவிக்கின்றார்கள் , " உலகில் மார்க்க கல்வி கற்ற உலமாக்களுக்கு உதாரணமாகிறது , நிலம் மற்றும் கடலின் இருளில் ஒருவருக்கு  வழிகாட்டும் , வானில் உள்ள நட்சத்திரங்களுக்கு ஒப்பாகும் . நட்சத்திரங்கள் மேகமூட்டமாக இருக்கும்போது, வழிகாட்டிகள் இழக்கப்படுவர்." இமாம் அஹ்மத் رَحِمَهُ الله   அவர்கள் தமது முஸ்னத் [ பாகம் 3,பக்கம் 157,ஹதீஸ் எண் 12606 ] ல் பலவீனமான ரிஷ்தின் இப்னு ஸாத் என்பாரைக் கொண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கின்றார்கள் . 

எனினும் இமாம் முஸ்லிம் رَحِمَهُ الله   மற்றும் இமாம் அஹ்மது رَحِمَهُ الله ஆகியோர் ஸெய்யிதினா அபூ மூஸா அஷ்அரி رضي الله عنه  அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படும் ஹதீதைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர் .எம்மான் நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் நவின்றார்கள் , " நட்சத்திரங்கள் வானின் நம்பிக்கைக் காவலர்கள், நட்சத்திரங்கள் மறையும் போது, வாக்களிக்கப்பட்டதை சுவனம்  கொண்டு வரும். (உலகெங்கும் ஊழல் பரவுவதும் ,இறுதித் தீர்ப்பு நாள் வருவதும் ) ; நான் எனது தோழர்களின் நம்பிக்கைக் காவலன் ,நான் இப்பூவுலகை விட்டும் சென்ற பின்னர் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வருகை தரும்  ( பித்னா மற்றும் கருத்து வேறுபாடு ) ; எனது தோழர்கள் எனது உம்மத்தின் நம்பிக்கை காவலர்கள் ,அவர்களது மறைவிற்குப்'பின்னர் எனது உம்மத்திற்கு வாக்களிக்கப்பட்டது வருகை தரும்  ( உலகத்தின் மீதான ஹவா மற்றும் போட்டியிடுவது ) .




ஸஹீஹ் இப்னு ஹிப்பான் :

ஹழ்ரத் அல் இர்பாத் இப்னு ஸாரியா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் நவின்றார்கள் , " இறைவேதத்தில் குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் அடியான் நான் , ஸெய்யிதினா ஆதம் عَلَيْهِ ٱلسَّلَامُ களிமண்ணில் பிசையப்படும் போது நான் நபிமார்களின் முத்திரையாக இருந்தேன் .இதன் அர்த்தத்தை உங்களுக்கு நான் விளக்குகின்றேன் .நான் எனது தந்தை ஸெய்யிதினா இப்ராஹீமின் عَلَيْهِ ٱلسَّلَامُ பிரார்த்தனையின் பலன் ,ஸெய்யிதினா ஈஸா عَلَيْهِ ٱلسَّلَامُ தன் மக்களுக்கு கூறிய சுபச் செய்தி நான் ,தன்னிலிருந்து வெளியாகி சிரியாவின் மாளிகைகளை பிரகாசிக்கச் செய்த எனது அன்னை மற்றும் எல்லா நபிமார்களின் அன்னையரின் தோற்றம் நான் ."

[ஸஹீஹ் இப்னு ஹிப்பான் , பாகம் 14,பக்கம் 312-313,ஹதீஸ் எண் : 6404 ]

இமாம் ஹாக்கிம் رَحِمَهُ الله அவர்கள் இதே ஹதீதை தமது முஸ்தத்ரக் [2:418] குறிப்பிட்டு , இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என்று எழுதியுள்ளனர் .இதனை இமாம் தஹபி رَحِمَهُ الله அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் . இமாம் ஹைத்தமி رَحِمَهُ الله அவர்களும் தமது மஜ்மஅஸ் ஸவாயித் [8:223] நூலில் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் கொண்டு எழுதியுள்ளார்கள் . இன்னும் ஸெய்யிதினா அபூ உமாமா رضي الله عنه மற்றும் பிற ஸஹாபா பெருமக்களின் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் கொண்ட இதே ஹதீதை இமாம் ஹாபிழ் இப்னு கதீர் رَحِمَهُ الله அவர்கள் தமது பிதாயா வந் நிஹாயா [2:275] நூலிலும் எழுதியுள்ளார்கள் . 






இப்னு அஸாகிர் ,தாரீக் மதீனா -திமிஷ்க் :

ஹழ்ரத் ஸெய்யிதினா கஃப் இப்னு அஹ்பார் رضي الله عنه  அவர்கள் கூறினார்கள் , " ஸெய்யிதினா அபுல் பஷர் ஆதம் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ  அவர்கள் நவின்றார்கள் ,மகனே ! நீர் அல்லாஹ்வை திக்ர் செய்யும் போதெல்லம் அண்ணல் நபி  صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களையும்  நினைவில் கொள்வாயாக .சந்தேகமில்லாமல் நான் ஆன்மாவிற்கும் ,மண்ணிற்கும் இடையில் இருக்கும் வேளையில் ,நபி  صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது திருப்பெயரை வானில் எழுதியிருக்கக் கண்டேன்,எனவே நான் எல்லா வானங்களையும் தவாப் செய்தேன் ,அதில் அண்ணல் நபி  صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது திருப்பெயர் எழுதியிராத ஒரு வானத்தையோ , ஹுருல் ஈன்களின் கன்னங்களையோ , சுவனத்து கோட்டைகளின் மரத்தின் இலைகளையோ , துபா மரத்தின் இலைகளையோ ,ஸித்ரத்துல் முன்தகா மரத்தின் இலையையோ ,சுவனத்து வாயிற்காப்பாளரின் கண்களையோ  ,மலக்குமார்களின் கண்களையோ  நான் காணாது இருக்கவில்லை. எனவே அண்ணல் நபி அவர்களது நினைவை நீ மிகுதமாகவும் ,கவனத்துடனும் செய்திட வேண்டும். சந்தேகமில்லாமல் அல்லாஹ்வின் மலக்குகள் அண்ணல் நபி  صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ." 

[ இப்னு அஸாகிர்  رَحِمَهُ الله  , தாரீக் மதீனா - திமிஷ்க் ,பாகம் 23,பக்கம் 281,தாருல் பிக்ர்,லெபனான் ] 

ஹழ்ரத் ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் رضي الله عنه  அவர்கள் கூறினார்கள் , " யா ரஸுலல்லாஹ் ! என் தாயும் ,தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் . ஸெய்யிதினா ஆதம் நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் சுவனத்தில் இருக்கும் போது தாங்கள் எங்கு இருந்தீர்கள் ? என்று வினவினேன் . அண்ணல் நபி  صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் தமது பற்கள் தெரியுமளவிற்கு சிரித்தவாறு கூறினார்கள் , " நான் ஸெய்யிதினா ஆதம் عَلَيْهِ ٱلسَّلَا مُ அவர்களது விலா எலும்பில் இருந்தேன் ,பின்னர் எனது தந்தை ஸெய்யிதினா நூஹ் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ  அவர்களது விலா எலும்பில் இருந்தேன் .அங்கிருந்து கப்பலில் பயணித்தேன் .பின்னர் எனது நூர் ஸெய்யிதினா இப்ராஹீம் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ  அவர்களது விலா எலும்பில் சேர்க்கப்பட்டது .எனது பெற்றோர்கள்  நிக்காஹ் செய்தவர்களைக் கொண்டே அல்லாது எனக்கு கொடுக்கப்படவில்லை .என்னை பரிசுத்தமானவர்களது வழிமுறைகளிலேயே  அல்லாஹ் மாற்றினான். தவ்ராத்திலும் ,இன்ஜீலிலும் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . எல்லா நபிமார்களும் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர் . எனது ஜோதியைக் கொண்டே பகல் வெளிச்சம் பெறுகின்றது ,மக்களுக்கு என்னைக் கொண்டே மேகங்களின் நிழல் கிடைத்தது , அல்லாஹ் அவனது திருப்பெயர்களில் ஒன்றை எனக்கு அளித்தான் , அர்ஷில் எனது பெயர் மஹமூத் ,பூமியில் எனது பெயர் முஹம்மது , அல்லாஹ் எனக்கு கவ்லுல் கவ்தரை வாக்களித்துள்ளான் , என்னை முதலாக ஷபாஅத் செய்திட அனுமதி அளித்துள்ளான் , எனது ஷபாஅத் தான் முதன் முதலாக ஏற்றுக் கொள்ளப்படும் , மனிதகுலத்தின் சிறப்பான நேரத்தில் என்னை அல்லாஹ் பிறக்கச் செய்தான் , எனது உம்மத்தினர் அல்லாஹ்வை புகழ்பவர்களாக இருக்கின்றார்கள் , அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பார்கள்  . "

[ இப்னு அஸாகிர்  رَحِمَهُ الله ,தாரீக் மதீனா -திமிஷ்க் ,பாகம் 3,பக்கம் 408,தாருல் பிக்ர் ,லெபனான் ] 




இமாம் அலூஸி ,தப்ஸீர் ரூஹுல் மஆனி :

இமாம் ஸெய்யித் முஹம்மது அலூஸி  رَحِمَهُ الله  அவர்கள் தமது குர்ஆனுடைய தப்ஸீரில் எழுதுகின்றார்கள் , " கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّ م அவர்கள் அனைவருக்கும் ரஹ்மத்துல் ஆலமீனாக இருப்பதன் தொடர்பு என்பது அன்னார் அனைத்து நிகழ்வுகளின் ,தெய்வீகப் பொழிவின் வஸீலாவாக இருக்கின்றார்கள் (அதாவது விதிவிலக்கில்லாமல் எல்லா படைப்புக்கும் ) , அதன் துவக்கத்திலிருந்தே (வஸீதத் அல் பைழ் அல் இலாஹி அலா அல் மும்கினாத் அலா ஹஸப் அல் கவாபில் ) ,எனவே தான் ஹதீதுகளில் குறிப்பிட்டது போல் , " ஜாபிரே ! அல்லாஹ் முதன் முதலில் உமது நபியினுடைய நூரினை படைத்தான் " மற்றும்  " அல்லாஹ் கொடுக்கின்றான் ;நான் பங்கிடுகின்றேன் "  , அண்ணல் நபி  صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது நூர் தான் படைப்புகளில் முதன் முதலாக படைக்கப்பட்டது .ஸூஃ பியாக்கள் இது குறித்து அதிகமாக கூறுகின்றார்கள்  ." 

[  இமாம் அலூஸி  رَحِمَهُ الله  ,தப்ஸீர் ரூஹுல் மஆனி ,பாகம் 17,பக்கம் 105 ]

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரிடத்தில் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களை நூர் மற்றும் கிதாப்  ,இரண்டிற்கும் பொருள் சாட்டுவதற்கு குறிப்பிடத்தக்க விளக்கம் உள்ளது .இமாம் அலூஸி    رَحِمَهُ الله அவர்கள் தமது தப்ஸீரில் எழுதுகின்றார்கள் , " கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை நூர் மற்றும் குர்ஆன் என்று குறிப்பிடுவது சாத்தியமற்ற ஒன்று என்றுநான் கருதவில்லை , இவ்வாறு இணைந்திருப்பது அல் -ஜுப்பாயி கூறியது போன்று தான் (அதாவது கிதாப் மற்றும் நூர் ஆகிய இரண்டும் குர்ஆன் தான் ) .அனைத்தும் அண்ணல் நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களையே குறிக்கும் என்பதில் சந்தேகமில்லை.வெளிப்படையான அர்த்தத்தில் (இபாரா ) நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ள தயக்கம் கொள்ளலாம் ; அவ்வாறெனில் அது நுட்பமான குறிப்பின் பார்வையில் (இஷாரா ) இருக்கட்டும் . " 

[ இமாம் அலூஸி  رَحِمَهُ الله ,தப்ஸீர் ரூஹுல் மஆனி ,பாகம் 6,பக்கம் 97-98 ]






அல்பானி , ஸில்ஸிலதல் ஹதீத் அல் ஸஹீஹா :

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் ,அண்ணல் நபி அவர்களது நூர் தான் முதல் படைப்பு என்று ஆதாரங்களை எடுத்துக் கூறும்போதெல்லாம் அதனை மறுக்கும் நவீன கால வஹாபிகள் , தங்களது பெரும் ஹதீதுக் கலை அறிஞராக கொண்டாடும் நஸீருத்தீன் அல்பானி தொகுத்த ஸில்ஸிலதல் ஹதீத் அல் ஸஹீஹா நூலில் எழுதுகின்றார் ; 

ஹழ்ரத் மயிஸரா அல் பஜ்ர் அவர்கள் கண்மணி நாயகம் அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள் , " யா ரஸூலல்லாஹ் ! தாங்கள் எப்போதிருந்து நபி ? . அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள் , " ஆதம் மண்ணுக்கும் ,ஆன்மாவுக்கும் இடையில் இருந்த போதே நான் நபியாக இருந்தேன் ". 

[ நஸீருத்தீன் அல்பானி , ஸில்ஸிலதல் ஹதீத் அல் ஸஹீஹா,பாகம் 4,பக்கம் 471,ஹதீஸ் எண் :1856,அல் மவாரிப் லின் நஷர் பதிப்பகம் ,ரியாத் ,சவூதி அரேபியா ] 






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...