Thursday 26 May 2022

அண்ணல் நபி ﷺ ‏ அவர்களை அன்பு ‎கொள்ளாவிட்டால் ‎? ‏- 1

தாஹா நபியின் முன்னிலையில் சப்தத்தை உயர்த்தியோர் நிலை : - 


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ وَلَا

تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ‏

" இறைநம்பிக்கை கொண்டவர்களே ! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் பேசாதீர்கள் நீங்கள் செய்த செயல்கள் எல்லாம் நீங்களே உணராத வகையில் வீணாகிவிட கூடும்." 

[ அல் குர்ஆன் 49:2 ]

மேற்கூறிய இறை வசனத்தில் அல்லாஹு தஆலா தன் ஹபீப்  முஸ்தபா முஹம்மது நபி  ﷺ அவர்கள் முன்னிலையில் அவர்களின் சத்தத்தை விட உயர்த்திப் பேசிய கூடியவர்களுக்கு அனைத்து அமல்களையும் அழித்து விடுவதாக எச்சரிக்கின்றான்.

 இந்த ஆயத்து யாருடைய விஷயத்தில் இறங்கியது என்பது பற்றி ஹழ்ரத் இப்னு அபீ முலைகா رَحِمَهُ ٱللَّٰهُ கூறுகிறார்கள் ,ஒருமுறை பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் அண்ணல் நபி  ﷺ அவர்களிடம் வந்து தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரிய போது, நபி  ﷺ அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் ,ஹழ்ரத் உமர் பாராக் ஆகிய இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள் .ஹழ்ரத் உமர்  رضي الله عنه பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை தலைவராக நியமிக்கும்படி சைக்கினை செய்தார்கள்.ஹழ்ரத் அபூபக்கர் رضي الله عنه அவர்கள் கஅகாஉ பின் மஅபத் அவர்களை நோக்கி அவரை தலைவராக நியமிக்கும்படி சைகை செய்தார்கள்.

ஹழ்ரத் உமர் رضي الله عنه  அவர்களிடம் ஹழ்ரத் அபூபக்கர் رضي الله عنه அவர்கள் ," எனக்கு மாறு செய்வதை நீங்கள் விரும்புகிறீர்கள்" என்று கூறினார்கள். ஹழ்ரத் உமர்  رضي الله عنه அவர்கள் "தாங்களுக்கு மாறு செய்வது என் விருப்பமன்று "  என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன .அப்போது,"  இறை நம்பிக்கை கொண்டவர்களே ! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் " எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

இப்னு ஜுபைர் رضي الله عنه  அவர்கள் கூறுகிறார்கள், "  இந்த வசனம் அருளப் பெற்ற பின் ஹழ்ரத் உமர் பாரூக் رضي الله عنه அவர்கள் நபி  ﷺ அவர்களிடம் மிகவும் மெதுவாகப் பேசுவார்கள். அவர் என்ன கூறினார் என்பதை நபி  ﷺ அவர்கள் அவரிடம் திரும்ப விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.

ஹழ்ரத் அபூபக்கர் رضي الله عنه அவர்களும் ஹழ்ரத்  உமர் رضي الله عنه அவர்களும் அண்ணல் நபி  ﷺ அவர்களின் பள்ளி வாசலுக்கு வந்தால்,பூமான் நபி  ﷺ அவர்களின் முன்னிலையில் நாயகத்தை ஏறிட்டு பார்ப்பதற்கு கூட இயலாமல் குனிந்து கொண்டே பேசுவார்கள். நாயகத்தின் மீது இத்தகைய கண்ணியம் வைத்திருந்த இப்பெருமக்கள், அவர்களையும் அறியாமல் அண்ணல்  நபி  ﷺ அவர்களை விட சத்தத்தை உயர்த்தி பேசியதற்காக உங்கள் அமல்களை எல்லாம் நீங்கள் அறியாத முறையில் இறைவன் அழித்துவிடுவான் என்று எச்சரிக்கை செய்கின்றான் என்றால் சராசரியான அவர்கள் நபி அவர்கள் விஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அதன் பின்விளைவு எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ

என்ற வசனம் அருளப் பெற்ற நாளிலிருந்து ஹழ்ரத் ஸாபித் பின் கைஸ் رضي الله عنه அவர்களை காணவில்லை என்று நபியவர்கள் தேடினார்கள் .அப்போது ஹழ்ரத் ஸஃதிப்னு முஆத் رضي الله عنه அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே ! அவரைக் குறித்த செய்தியை தங்களுக்கு நான் அறிந்து வருகிறேன் " என்று கூறினார்கள். அவரிடம் அந்த ஸஹாபி  என்றார். அப்போது அவர் தமது தலையை கவிழ்ந்தபடி கவலையோடு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் .

அவர்கள் ஹழ்ரத் ஸாபித் பின் கைஸ் رضي الله عنه  அவர்களிடம் " உங்களுக்கு என்ன ஆயிற்று ? " என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ,"  எனது நிலைமை மோசம்தான் .நான் நபி  ﷺ  அவர்களது குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்திப் பேசி வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவர் தான் "  என்று கூறினார்கள். செய்தி அறிந்த  ஹழ்ரத் ஸஃதிப்னு முஆத் رضي الله عنه  அவர்கள் நபி  ﷺ அவர்களிடம் வந்து ஹழ்ரத் ஸாபித் பின் கைஸ்  رضي الله عنه இப்படிச் சொன்னார் என்று தெரிவித்தார்கள் .

அதைக் கேட்ட ஏந்தல் நபி   ﷺ அவர்கள், "  நிச்சயமாக ஸாபித் நரகவாசிகளில் ஒருவர் அல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவர்  என்று சொல் "  என்று சொல்லி அனுப்பினார்கள்.

மீண்டும் ஒரு சமயம் நேரடியாக ஹழ்ரத் ஸாபித் رضي الله عنه  அவர்களை ஏத்தல் நபி  ﷺ  அவர்கள் சந்தித்த போது அவரைப் பார்த்து , " நீர் புகழோடு வாழ்வீர். வீரமரணம் அடைவீர் "  என்று நற்செய்தி கூறினார்கள். காரணம் ஹழ்ரத் ஸாபித் رضي الله عنه அவர்கள் அண்ணல் நபி  ﷺ அவருடைய சப்தத்தை விட உயர்த்திப் பேசினாலும், அவர்களுடைய சப்தம் இயற்கையாகவே கனமாகவே இருந்தது, மேலும் அவர்கள் ரசூலுல்லாஹ்வின் பேச்சாளர் ஆகும்.

மன்னர் ஹாரூன் ரஷீத் இமாம் மாலிக் رضي الله عنه  அவர்களிடம் "முஅத்தா" ஹதீஸ்களை கேட்கும் போது சில சந்தேகங்களை சப்தத்தை உயர்த்தி கேட்பார்கள் .அப்போது இமாமவர்கள் மேலுள்ள குர்ஆன் ஆயத்தை ஓதிக்காட்டி நபி  ﷺ அவர்கள் முன்னிலையில் சப்தத்தை உயர்த்தினால் எவ்வாறு அமல்கள் அழிந்துவிடுமோ அவ்வாறுதான் நபி அவர்களின் பள்ளியில் சப்தத்தை உயர்த்திப் பேசினாலும் அமல்கள் அழிந்துவிடும் என்று சொல்லி கேள்விகளை மெதுவாக கேட்கச் சொல்வார்கள்.

[ மிஷ்காத் ,பைஹகீ ] 

அண்ணல் நபியின் பேச்சைக் கேட்காத அவரின் நிலை :

ஒரு பயணத்தில் அண்ணல் நபி  ﷺ அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து இன்ஷா அல்லாஹ் இன்று இரவு நாம் ஊரில் நுழைய இருக்கிறோம் .நம்முடன் வாகனிப்பவர்கள் கஷ்டப் படுத்தக் கூடிய பலகீனம் உண்டாகும் வாகனத்தில் அழைத்து வராதீர்கள் என்று கட்டளையிட்டார்கள் . ஒரு மனிதர் கஷ்டப்படுத்தும் அவருடைய ஒட்டகத்தில் சவாரி செய்து வந்தார். அதிலிருந்து அவர் தவறி விழுந்து அவரின் தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். உடனே மாநபியவர்கள், ஹழ்ரத் ஸெய்யிதினா  பிலால் رضي الله عنه அவர்களைப் பார்த்து,"  நிச்சயமாக சொர்க்கம் எனக்கு மாறு செய்பவனுக்கு ஹலால் ஆகாது "  என்று கூறினார்கள். இதனை மூன்று தடவை மக்களுக்கு மக்களுக்கு சொல்ல உத்தரவிட்டார்கள்.

[ பைஹகீ 283/6 ]

பெருமானார் முன்பு பெருமை அடுத்தவர் நிலை :

ஒரு முறை அண்ணல் நபி  ﷺ அவர்கள் முன்பு பிஷ்ர் இப்னு ராயில்ஈ என்பவர் இடது கையினால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதை கவனித்த அண்ணலார்   ﷺ அவரிடம் வலது கையினால் சாப்பிடுங்கள் எனக் கூறினார்கள். அதற்கு அவர் என்னால் முடியாது, எனக்கு சக்தி இல்லை என்றார். இதைக்கேட்டு நபியவர்கள்,  இனிமேல் உனக்கு வலது கையினால் சாப்பிட சக்தியே இருக்காது என்றார்கள் .அதன்பின் அவர் அந்த கையை தன் வாய்க்கு கொண்டு வந்ததில்லை. தனக்கு வலது கையினால் சாப்பிட சக்தி இருந்தும் நபி அவர்கள் உத்தரவிட்டதும் செய்யவிடாமல் அவரிடம் இருந்த பெருமை தடுத்துவிட்டது. அவர்கள் சொன்ன உடன் கேட்க வேண்டுமா ? என்ற ஆணவமும் அகந்தையும் அவருக்கு பேரழிவை ஏற்படுத்தியது.

[ ஸஹீஹ் முஸ்லிம், பைஹகீ 238/6 ]

ஹழ்ரத் யஜீத் இப்னு அபி ஹபீப் رضي الله عنه அவர்கள் கூறுகிறார்கள், அண்ணல்  நபி  ﷺ அவர்கள் ஒரு தடவை சுபைஆ பின்து அஸ்லமிய்யா என்ற பெண்ணை பார்த்தார்கள். அந்தப் பெண் இடது கையினால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் .உடனே நபியுடைய வாயிலிருந்து, "  அவளுக்கு என்ன கேடு நடந்தது ?  இடது கையினால் சாப்பிடுகிறாள். அஸ்ஸா என்ற இடத்தில் உள்ள வியாதி அவனுக்கு ஏற்படட்டுமாக ! "  என்று கூறிவிட்டார்கள் .

இதைக் கேட்ட அவ்வம்மையார் , " அல்லாஹ்வுடைய தூதரே !  என் வலது கையில் கட்டி வந்துள்ளது. அதனால்தான் இடது கையினால் சாப்பிட்டேன் " என்றார்கள். இருப்பினும் அது வந்து தான் தீரும் என்று நபிகள்  நாயகம்  ﷺ அவர்கள் கூறிவிட்டார்கள்.

அண்ணல்  நபி  ﷺ அவர்கள் முன்பு தனக்கு இருக்கும் தங்கத்தை ஆரம்பத்திலேயே முறையிட்டு அவ்வாறு சாப்பிட அனுமதி வாங்கி இருந்தால் அது நல்லொழுக்கம் ஆகும். அதை தெரியப்படுத்தாமல் அவர்கள் முன்பு இவ்வாறு சாப்பிட்டதால் அவர்களின் கோபத்திற்கு ஆளானார்கள் .

ஒரு சமயம் அஸ்ஸா என்ற இடத்தை அந்த பெண் கடந்து சென்றபோது அந்த ஊருக்குள் பரவி இந்த காலரா நோய் அதை கடந்து சென்ற அந்தப் பெண்ணையும் தொற்றிக்கொண்டது.

[ பைஹகீ, 239/6 ]

நபி அவர்கள் முன் அழுக்கு ஆடையை அணிந்து வந்தவர் நிலை: 

ஹழ்ரத் ஸெய்யிதினா ஜாபிர் رضي الله عنه அவர்கள் கூறுகிறார்கள்,  " நாங்கள் பனூ அம்மார் போரில் அண்ணல் நபி  ﷺ அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். அப்போது பழைய அழுக்கடைந்த இரு ஆடைகளை உடுத்திக்கொண்டு ஒருவர் ஏந்தல் நபி  ﷺ அவர்கள் முன்பு வந்தார் .அவருடைய பெட்டியில் வேறு நல்ல ஆடை இருந்தது. அவரிடம் ஏந்தல் நபி  ﷺ அவர்கள்  அந்த ஆடைகளை எடுத்து அணியச் சொன்னார்கள் .அவர் பழைய ஆடைகளை அணிந்து கொண்டு திரும்பிய சென்றபோது, مَاَلهُ ضَرَبَ اَللَّهُ عُنَقَهُ ' அவருக்கு என்ன கேடு ? அல்லாஹ் அவரின் கழுத்தை அடிக்கட்டுமாக !  இந்த ஆடை சிறந்ததாக அவருக்கு தெரியவில்லையா ? '  என்று கூறினார்கள். இது அவரின் காதில் விழுந்துவிட்டது. உடனே அவர் நாயகத்திடம் வந்து, " நாயகமே !  கழுத்து வெட்டப்படும் என்றீர்கள். அல்லாஹ்வின் பாதையிலா வெட்டுப்பட துஆ செய்தீர்கள் '  என்றார்கள். அண்ணல் நபி  ﷺ அவர்கள், ' ஆம்'  என்று கூறினார்கள் .அதன்படி போரில் வெட்டப்பட்டார். அந்த சஹாபி தம்மிடமிருந்த புத்தாடையை உடுத்தி கொண்டு நபிகளாரின்  முன்பு வந்திருந்தால் இதைவிட சிறந்த துவாவை நபிகளார் செய்திருக்கக்கூடும். நபியின் முன் தம்மிடம் நல்லாடை இருந்தும் ,அழுக்காடையை அணிந்து வருவது கண்ணியக் குறைவான செயல் ஆகும்.

[ பைஹகீ 244/6 ]

நபியின் தொழுகையில் குறுக்கே நடந்தவரின் நிலை:-

ஹழ்ரத் ஸெய்யிதினா ஸயீதிப்னு கஸ்வான் رضي الله عنه அவர்கள் தன் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள், நான் ஹஜ்ஜுக்குச் சென்ற போது தபூக்கில் தங்கி இருந்தேன். அப்போது நடக்கமுடியாத ஊனமுற்ற ஒருவரைப் பார்த்தேன். அவரிடம் எதனால் உங்களுக்கு நடக்க முடியாமல் போனது ? என விசாரித்தேன். உடனே அவர் நான் உங்களுக்கு ஒரு ஹதீஸை கூறுகிறேன். அதை நான் உயிருள்ளவரை யாரிடமும் கூறக்கூடாது என கூறினார். நானும் அதற்குச் சம்மதித்தேன். 

அவர் கூறினார் அண்ணல் நபி  ﷺ அவர்கள் தபூக்கில் தங்கியிருந்த போது ஒரு பேரீத்த மரத்தை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள். நான் சிறுவனாக இருந்தேன். விளையாட்டாக நாயகத்திற்கு மரத்திற்கும் இடையே அவர்களது கவனத்தை கெடுக்கும் முகமாக ஓடியாடி கொண்டிருந்தேன். உடனே மாநபியவர்கள்  , "துண்டித்தவனின் காலை இறைவன் துண்டிப்பானாக ! "  எனக் கூறினார்கள். இதன் பிறகு இந்த கால்கள் இரண்டும் வேலை செய்வதில்லை. இதைக்கொண்டு இந்நாள் வரை நான் நின்றதில்லை." என்று கூறினார். மற்றொரு அறிவிப்பில் கழுதையில் நபியின் குறுக்கே நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

[ பைஹகீ 244/5 ]

மாநபியை மதிக்காத மணப்பெண்ணின் நிலை :-

அண்ணல் நபி  ﷺ அவர்கள் கிலாபிய்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார்கள். அந்தப் பெண்ணருகே வந்தபோது, அவள் நாயகத்தைப் பார்த்து உங்களை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் என கூறினாள். அவ்வாறு அவர் சொல்லக் காரணம் அந்தப் பெண்ணுடைய சில தோழிகள் விளையாட்டாக அவளிடம் நாயகத்தை பார்த்து இப்படிக் கூறினால் நபியின் பிரியத்தை பெறுவாய் என தவறாகக் கூறி இருந்தார்கள். இதனால் இப்படி கூறினாள். உடனே நபியும் அவளைப் பார்த்து ' மிக உயர்வான ஒருவனைக் கொண்டு காவல் தேடி விட்டாய், இனிமேல் எனக்கு நீ வேண்டாம் ' எனக்கூறி கொடுக்க வேண்டியதை கொடுத்து தலாக் சொன்னார்கள். 

இதனால் மாநபியின் மனைவியாகும் பாக்கியத்தை இழந்து துர்பாக்கியம் உள்ள பெண்ணாக அவள் ஆனதோடு ,இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்ததினால்,  இதனால் பின்னால் மனநலம் பாதிக்கப்பட்டவராக ஆகிவிட்டாள். நபியுடைய மனைவிமார்கள் வீட்டிற்கு வந்து உள்ளே வர அனுமதி கோரும்போது 'நான் ஒரு மூதேவி வந்து இருக்கேன்'  என்று கூறுவாள். 

சில அறிவிப்பில் வேறொரு காரணம் கூறப்பட்டுள்ளது அதாவது ஏந்தல் நபி  ﷺ அவர்கள் ஒரு மாதம் தனது மனைவிமார் அனைவரையும் விட்டு பிரிந்து வாழ்ந்தார்கள். அது சமயம் இறைவன் ஒரு வசனத்தை இறக்கி வைத்து மறுமை வேண்டுமானால் நபியுடன் வாழ்வை தேர்ந்தெடுங்கள். உலக சுக போக வாழ்வு வேண்டுமானால் நபியுடன் விவகாரத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினான். அந்த சமயம் எல்லா மனைவிகளும் மாநபியுடன் வாழ்வதை தேர்ந்தெடுத்தார்கள். இந்தப் பெண் மட்டும் உலக வாழ்வின் உல்லாசத்தை விரும்பி விவாகரத்து கேட்டு நபியை பிரிந்தால். இந்த ஒழுங்கீனமான செயலினால் இந்தப் பெண்ணுக்கு புத்தி பேதலித்து வீதிகளில் கிடக்கும் கால்நடைகளின் சாணங்களை பொறுக்கி எடுப்பவளாக , ' நான் மூதேவி ' என்று சொல்லிக்கொண்டு பைத்தியமாக தெரியும்படி அவளது நிலைமை மாறியது.

பெருமானாரிடம் விளையாட்டாக நடந்துகொண்டவரின் நிலை: 

லைலா பின்து கஃதீம் என்ற பெண்மணி ஒரு சமயம் நாயகத்திடம் வருகை புரிந்தார். அப்போது சூரியன் உதயமாகி வெயில் கடுமையாக அடித்துக்கொண்டிருந்தது .நபியவர்கள் மேனியில் மேலங்கிகளின்றி ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண் தமாஷாக நபியின் தோள் புஜத்தின் ஓங்கி அடித்து விட்டாள். மேனியில் துணி எதுவும் இல்லாததால் அந்த அடி கடும் வேதனையை கொடுத்தது. நபியவர்கள் ,' இது யார் ? இவரை சிங்கம் சாப்பிடட்டுமாக ! '  என்று கூறினார்கள்.ஏந்தல் நபியை துன்புறுத்தும் நோக்கத்தில் மேற்கொண்ட செயலை செய்ய வில்லை என்றாலும் நாயகத்திடம் ஒழுங்கீனமான முறையில் நடந்ததால் அவர்களின் வாயிலிருந்து வந்த வார்த்தை கண்டிப்பாக பலித்து விடும்.

 ஒரு சமயம் அந்தப் பெண் தனது தோப்பில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு சிங்கம் அந்த தோட்டத்தில் நுழைந்து அவளை அரைகுறையாகக் அடித்து விட்டதென்று சென்றது. இதுபோல உள்ள நிகழ்வுகள் உணர்த்தும் உண்மை என்னவெனில் சில சஹாபிகள் அவர்களையும் அறியாமல் அண்ணல் நபி  ﷺ அவர்களிடம் நடந்து கொண்ட சில கவனக்குறைவான செயல்களால் அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்றால் ; நாமெல்லாம் உயிரினும் மேலான எம்பெருமான் நபி  ﷺ அவர்களின் விஷயத்தில் எந்தளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

[ இப்னு ஸஃது ,150/8 ] 

பெருமானாருக்கு பெண் கொடுக்க விரும்பாதவரின் நிலை: 

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் ஹாரிஸ் இப்னு  அபீ ஹாரிஸா என்பவரின் மகள் ஹம்சாவை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். ஆனால் அதற்கு அவர் விரும்பவில்லை. அதனால் சமாளிப்பதற்கு என் மகளுக்கு வெண்குஷ்டம் உண்டு எனக் கூறினார். பின்னர் வீட்டிற்கு வந்து மகளை பார்த்த போது மகளுக்கு வெண்குஷ்டம் பிடித்திருந்தது. நபிகளாரை புறக்கணிப்பதாக பொய் சொன்ன இந்த சொல்லை இறைவன் உண்மையாக்கி சரியான பாடம் கற்பித்தான்.

[ கஸாயிஸுல் குப்ரா 133/2 ]

பெருமானாரின் பேச்சைக் கேட்காதவரின் நிலை: 

ஹழ்ரத் ஸெய்யிதினா முஸய்யப் இப்னு ஹஸ்ன் رضي الله عنه அவர்கள் கூறுகிறார்கள் , " என் தந்தை ஹஸ்ன் இப்னு வஹ்ப் அவர்கள் நபியவர்களிடம் வந்தார்கள் அப்போது நபியவர்கள் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார்கள் அதற்கு என் தந்தை ஹஸ்ன் ( முரடு)  என்று கூறினார்கள் அதற்கு நபியவர்கள் இந்தப் பெயர் வேண்டாம் - ஸஹ்ல் ( மென்மை)  என்று மாற்றிக் கொள்ளுங்கள் "  எனக் கூறினார்கள்.

எனது தகப்பனார் ஏந்தல் நபியிடம் , " என்னுடைய தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் "  என்றார். கண்மணி நாயகம்  ﷺ  அவர்களின் சொல்லை அலட்சியம் செய்ததினால் பேரிழப்பை சந்தித்தார். ஹழ்ரத் ஸயீதிப்னு முஸய்யப் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள், " என்னுடைய பாட்டனாரான இவர் ஹஸ்ன்- முரடு என்று அர்த்தம் உள்ள பெயரை மாற்ற மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணியதால், இதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே அவர்களின் குணநலனில் அவர்களின் முரட்டுத்தனம் நீடித்தது.

பெருமானாரை கிண்டல் செய்தவரின் நிலை: 

அண்ணல் நபி  ﷺ அவர்கள் ஒரு சமயம் ஸஹாபாக்களுக்கு மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு பின்னிருந்து கொண்டு ஒருவன் நாயகம்  ﷺ அவர்கள் உரையின்போது செய்து காட்டியது போல் கேலி செய்யும் நோக்கத்துடன் தனது உறுப்புகளால் விகாரமாக ஜாடை காட்டி நடித்துக்கொண்டிருந்தான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நபியவர்கள்,  இவனைப் பார்த்து "  நீ இப்படியே இருப்பாயாக ! " என்று சபித்தார்கள்.

 அவன் தன் குடும்பத்தினரிடம் சென்றான். அப்போது அவனுக்கு ஒரு வகையான வலிப்பு ஏற்பட்டு தரையில் விழுந்தான். இரண்டு மாதம் கழித்து தான் அந்த வலிப்பு நின்று சுயநினைவு வந்தது. அப்போது நாயகத்தை கேலி செய்யும் போது எப்படி தன் உறுப்பை விகாரமாக காட்டினானோ, அது போலவே இயற்கையாகவே ஆகிவிட்டது அவனைப் பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது.

[ கஸாயிஸுல் குப்ரா 132/2 ] 

ஹகமிப்னுல் அபில் ஆஸ் என்பவன் ஒரு முறை அண்ணல் நபி  ﷺ அவர்கள் அவனைக் கடந்து சென்றபோது, நபியை கண் ஜாடையால் கேலி செய்யும் நோக்கில் அடுத்தவர்களிடம் நபியை கேலி செய்தான். அதனை மாநபி  ﷺ அவர்கள் கண்டுவிட்டார்கள். உடனே அவனைப்பார்த்து , " இறைவா இவனுக்கு நரம்புத்தளர்ச்சி வியாதியை ஏற்படுத்து"  என சபித்தார்கள். உடனே அவன் அந்த இடத்திலேயே மூர்ச்சித்து விழுந்தான். உணர்வு வந்தபோது அவரை உறுப்புகள் நரம்புத்தளர்ச்சிகாரனைப் போல் ஆடிக் கொண்டே இருந்தது.தன் ஹபீப்  முஹம்மது முஸ்தபா  ﷺ அவர்களை ஒழுங்கீனமாக கேலி செய்தவனை அவன் மரணிக்கும் வரை அவனைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்ய வைத்தான் அல்லாஹுத்தஆலா.

[ கஸாயிஸுல் குப்ரா - 132/2] 

நபிக்கு எழுந்து நிற்க மறந்த மலக்கின் நிலை: -

ஒரு சமயம் வானவர் கோமான் ஜிப்ரீல் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் பூமான் நபி  ﷺ அவர்களிடம் வந்து, "  அல்லாஹ்வின் தூதரே!  நான் வானலோகத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஒரு வானவரைப் பார்த்தேன். அவரைச் சுற்றி எழுபதாயிரம் மலக்குகள் நின்றுகொண்டு பணிவிடை செய்துகொண்டு இருக்கிறார்கள். அந்த மலக்கு விடும் ஒவ்வொரு மூச்சிலிருந்து இறைவன் ஒரு வானவரை படைக்கிறான். இத்தகைய உயர்ந்த பாக்கியத்திலிருந்த  அந்த வானவரை தற்போது காஃப் என்ற மலையில் அவருடைய இறக்கைகள் உடைந்து அழுது கொண்டிருந்த காட்சியை கண்டேன். அவர் என்னைக் கண்டதும் ,எனக்காக இறைவனிடம் சிபாரிசு செய்வீர்களா ? என வேண்டினார். நான் அவரிடம் தாங்கள் என்ன தவறு செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் நான் மிஃராஜ்  இரவில் பூமான் நபி  ﷺ அவர்கள் என்னை கடந்து சென்றபோது சிம்மாசனத்திலிருந்து எழாமல் அமர்ந்து கொண்டிருந்தேன். அதனால் அல்லாஹுத்தஆலா என்னைக் கண்டித்து இந்த இடத்தில் இந்த கோலத்தில் ஆக்கி விட்டான் எனக் கூறினார்கள். நான் இறைவனிடம் மன்றாடி சிபாரிசு செய்தேன். உடனே அல்லாஹுத்தஆலா ஜிப்ரீலே அந்த மாணவரிடம் நாயகத்தின் மீது ஸலவாத்து கூறுங்கள் என உத்தரவிட்டான். அதன்படி அவர்கள் ஸலவாத்து கூறியதும் அவர்களை மன்னித்து அவர்களின் இறக்கையை முளைத்த வைத்தான்.

[ முகாஷஃபதுல் குலூப்,பக்கம் 97 ]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...