Monday 28 August 2017

வஸீலா தேடலாமா ? - 2


"எவருடைய கால்நடைப் பிராணியாவது காணாமற் போய்விட்டால் , அல்லாஹ்வின் நல்லடியார்களே ,அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக ,தாங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூப்பிட்டுக் கேளுங்கள் " என்ற ஹதீதை இப்னு அப்பாஸ் رضي الله عنه‎ அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறது என்ற ஹதீத் ஹிஸ்னுள் ஹஸீனில் அறிவிக்கப்பட்டுள்ளது .  

" எவருடைய கால்நடைப் பிராணியாவது காட்டின் பக்கம் விரண்டோடி விட்டால் , அல்லாஹ்வின் நல்லடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் - , அல்லாஹ்வின் நல்லடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் - , அல்லாஹ்வின் நல்லடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் " என்று கூவி அழைக்கட்டும் என்ற ஹதீது இப்னு மஸூத்  رضي الله عنه‎ அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறதாகவும் மேற்படி ஹிஸ்னுள் ஹஸீன் கிரந்தத்தில் வரையப்பட்டுள்ளது . 


"எவருக்காவது உதவி தேவைப்படுமானால் ,அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவி புரியுங்கள் ! அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவி புரியுங்கள் ! அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவி புரியுங்கள் ! என்று கூறட்டும் " என்று கண்மணி நாயகம்  அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கும் ஹதீத் தப்ரானீ , ஹிஸ்னுள் ஹஸீன் , ஸஹீஹ் இப்னு அவானா முதலிய கிரந்தங்களில் வந்துள்ளன .  

இது பற்றி ஆதாரம் வஸீலா ஜலீலா பக்கம் 108லும் , துரருஸ்ஸனிய்யா -பீ -றத்தி அலல் வஹாபியா பக்கம் 33லும் , பஸ்லுல் கித்தாபு பக்கம் 132லும் ,பத்ஹுல் ஹக் பக்கம் 71லும் வரையப்பட்டுள்ளது . 

மேற்குறப்பட்ட ஹதீதுகளில் காணப்படும் 'இபாதுல்லாஹ்'  அல்லாஹ்வுடைய அடியார்கள் என்பதற்குக் கருத்து முஸ்லிமான அடியார்கள் , -முஸ்லிமான ஜின்கள் - மலக்குகள் - ரிஜாலுள் கைபு (மறைந்து வாழும் மனிதர்கள் ) - அப்தாதுகள் - அவ்தாதுகள் - குத்புமார்கள் முதலியவர்களே  . இவர்கள் உயிரோடிருப்பினும் சரியே ,  மரணித்திருப்பினும் சரியே இவர்களைத் தேடி உதவி பெறுதல் ஆகும்  என்பதற்கு மேலே சொன்னப்பட்ட ஹதீதுகளே போதிய ஆதாரங்களாகும் என்று 'இஹ்காக்குல் ஹகாயிக் ' என்ற நூலில்   வரையப்பட்டிருப்பதாக , சென்னை பிரதம முப்தி மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிபு கவர்மெண்டு சீப்காஜி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் , அவர்களது பத்வா தர்- பயானே - ஜவாஸ் இஸ்திம்தாது - அன்பியா -வ - அவ்லியா உல்லாஹி எனும் பத்வாச் சான்றும் , வஸீலா ஜலீலா ,பத்ஹுல் ஹக் முதலிய நூற்களும் கூறுகின்றன .  

மேலும் இவ்வாறான அத்தாட்சி 'பரகாத்துல் இம்தாது - லி - அஹ்லில் - இஸ்திம்தாது ' என்ற நூலிலும் காணப்படுகின்றது . 

"காபிர்கள் விக்கிரகங்களை இறைவனுக்கு இணையாக்கி தங்களது தேவைகளை அவைகளே சுயமாக நிறைவேற்றுகின்றன என்று கருதி அவற்றின்பால் உதவி தேடுகின்றார்கள் . முஸ்லிம்கள் அன்பியா ,அவ்லியாக்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்காமல் ,ஆண்டவனது அஸ்மா,ஸிபாத்து வெளியாகும் மழ்ஹராகக்  கருதி   அவர்களிடம் உதவி தேடுகிறார்கள் .

விக்கிரகங்களைக் கூப்பிட்டவர்கள் நஷ்டவாளியாயினர் . அன்பியா ,அவ்லியாக்களை கூப்பிட்டவர்கள் ஜெயம் பெற்றவர்களாயினர் "  என்று குத்வத்துஸ் ஸாலிகீன்  , மவ்லானா ,அல்ஹாஜ் ஸெய்யிது ஷாஹ் உமர் ஸாஹிபு காதிரி ஹைதராபாதி رضي الله عنه அவர்கள் தப்ஸீர் கஷ்புல் குலூபில் வரைந்துள்ளார்கள் .  

ஷாபிஈ மத்ஹபின் இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ் ஷாபிஈ  رضي الله عنه‎ அவர்கள்,  ஸெய்யிதினா மூஸல் காழிம் رضي الله عنه அவர்களுடைய கபுரு ஷரீஃபுக்கு சென்று ஜியாரத் செய்யும் போது    அந்த சங்கையான கப்ரை நோக்கி "நிச்சயமாக இது பிரார்த்தனைகளை ஏற்று ஒப்புக்கொள்ளப்படும் என்று அனுபவத்தில் பரிட்சிக்கப்பட்ட ஓளடதமாகும் " உரைத்தார்கள் .

இவ்விபரத்தை அல்லாமா ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி   رضي الله عنه‎ அவர்கள்  'ஸப்வத்துல் ஸப்வா ' விலும் , ஷைகு முஹம்மது மள்ஹர் நக்ஷபந்தி திஹ்லவி அவர்கள் 'துர்ருள் முனள்ளம் ' மிலும் கூறுவதாக முப்தி அல்லாமா மஹ்மூத் ஸாஹிப் மத்ராஸி அவர்கள் ஸில்குள் முஅள்ளம் ,38வது  பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்கள் .

" இமாமுல் அஃலம் ஸெய்யிதினா அபூஹனீபா  رضي الله عنه அவர்களுடைய கபுரு ஷரீஃப் திட்டமாக நமது முறைப்பாட்டைக் கேட்டு தேவைகளை நிறைவேற்றித் தரவல்லதாயிருக்கிறது"     என்பதாக ,கல்லுடைந்தாலும் சொல்லுடையாத  அல்லாமா இப்னு ஹஜர் மக்கீ  رضي الله عنه அவர்கள்  'கைராத்துல் ஹிஸானில் ' கூறுவதாக ,அல்லாமா முப்தி மஹ்மூத் சாஹிபு மதராஸி அவர்கள் பத்ஹுல் ஹக் 78வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .

"இமாம் ஷைகு மஃரூபுல் கர்கி    رضي الله عنه‎ அவர்கள் பரக்கத்துச் செய்யப்பட்ட மனிதர்களுள் மேலானவர்கள் . அவர்களது கபூர் ஷரீஃப் நிச்சயமாக பரீட்சித்து சோதித்து பார்க்கப்பட்ட அவிழ்தமாகும் . எவரொருருவர் ,அந்த கபூர் ஷரீபிலிருந்து (தமது துன்பம் ,துயரம் விலக வேண்டுமென்ற எண்ணத்துடன் ) யாதொரு வஸ்துவை எடுப்பாரேல் அவரது பலாய் முஸீபத்துகள் நிவர்த்தியாக்கப்படும் "  என்பதாக ஷைகுல் இஸ்லாம் ஜக்கரிய்யில்  அன்சாரி  அவர்கرضي الله عنهள்  'ஷரஹு ரிசாலத்தில் குஷைரிய்யாவில் ' குறிப்பிட்டுள்ளதாக ,ஆரிபுபில்லாஹ் ஷாஹ் முஹ்யித்தீன் ஸாஹிபு வேலூரி رضي الله عنه அவர்கள் 'பஸ்லுல் கிதாப் ' 115வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் . 



Muqtada-e-Ahl al-Tariqat, Rahhuma-e-Raahe Haqiqat, Hadrat Shaykh Maroof Karkhi radi Allahu anhu


" ஹழ்ரத் ஷைகு மஃரூபுல் கர்கி   رضي الله عنه‎  அவர்களது வபாத்து ஹிஜ்ரி 201ஆம்  ஆண்டு . அவர்களது அடக்கஸ்தலம் பகுதாதில் உள்ளது . அவர்கள் வேண்டுகோளுக்கு பதில் அளிக்கக் கூடியவர்கள் . அவர்களது கபூரு ஷரீபைக் கொண்டு பகுதாதுவாசிகள் பிணி நோய் நீங்கி ஷிபாவை தேடிப் பெறுகின்றனர் . அந்த கபூர் ஷரீப் அனுபவப்பூர்வமாக பரீட்சிக்கப்பட்ட சஞ்சீவியாகும் "  என்று இமாம் அபுல் காஸிம் குஷைரி  رضي الله عنه‎  அவர்கள்  ,ஷைகுல் இஸ்லாம் ஜக்கரிய்யில்  அன்சாரி رضي الله عنه‎  அவர்கள் ஆகியோர் தமது ரிஸாலாவக்களில் வரைந்துள்ளதாய் , அல்லாமா முப்தி மஹ்மூது ஸாஹிபு மதராஸீ அவர்கள் 'பத்ஹுல் ஹக் ' 80வது பக்கத்தில் எடுத்து அறிவிக்கின்றார்கள் . 


இவ்வாறாக இமாம் யாபியீ யமனீ 
رضي الله عنه‎  அவர்களும் சொல்வதாக அல்லாமா ஷைகு யூசுபுன் நபஹானீ رضي الله عنه‎  அவர்கள் 'ஜாமி உல் கராமாத்தில் அவ்லியா ' 2வது பாகம் 2657வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .

குத்புல் அக்பர் ,ஷைகு அபுல் ஹசன் அலிய்யுஷ் ஷாதுலி رضي الله عنه‎  அவர்களது 5வது கலீபா , அல் குத்பு ஸெய்யிது ஷம்சுத்தீன் ஹனஃபிய்யில் ஹமவிய்யிஷ் ஷாதுலி رضي الله عنه‎  அவர்கள் தங்களது வபாத்தின் வேளையில் , " தேவையுள்ள எவரும் என்னுடைய கபூருக்கு வந்து நாட்டங்களைக் கேட்பரேல் அவற்றை நான் நிறைவேற்றி தருவேன்.ஏனெனில் எனக்கும் 
அவருக்கும்(தேவையைக் கோரும் )   இடையில் ஒரு முழம் மண்ணே தூரம் . தன்னைச் சார்ந்தவர்களை ஒரு முழம் மண் தடுக்குமேயெனில் அவன் ஆண் பிள்ளையன்று . " என்று சொன்னதாக அல் குத்பு இமாம்  அப்துல் வஹ்ஹாபுஷ் ஷஃரானீ  رضي الله عنه‎  அவர்கள் 'தபாகத்துள் குப்றா ' 2வது பாகம் 86வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் . 

அல் குத்பு ஷைகு அஹ்மது   முஹம்மது இப்னு பர்கல் رضي الله عنه‎  அவர்கள் , "நான் கபூரிலிருந்து வெளிவந்து உதவக் கூடிய தஸர்ரபாத்தென்னும் சக்தி உடையவன் . எவருக்கேனும் ஹாஜத்து ,நாட்ட தேட்டம் இருக்குமானால் , என் முகத்திற்கெதிரே வந்து , என்னிடத்தில் தேவைகளைக் கேட்பாராயின் ,நான் நிறைவேற்றித் தருவேன் " எனக் கூறியிருக்கிறார்கள் என்பதாக  அல் குத்பு இமாம்  அப்துல் வஹ்ஹாபுஷ் ஷஃரானீ  رضي الله عنه‎  அவர்கள்     'தபாகத்துள் குப்றா ' 2வது பாகம் 93வது பக்கத்தில் அறிவித்துள்ளார்கள் . 

"எவரொருவருக்கு தமது தேவைகள் , நாட்ட தேட்டங்கள் ,நிறைவேற வேண்டுமென்றிருக்குமேயானால் ,அவன் சூரத்துல் பாத்திஹா , ஆயத்துல் குர்ஸீ ,அலம் நஷ்ரஹ்சூரா    இவைகளை ஓதி , இவற்றின் தவாபுகளை குத்புல் அக்தாப் ,ஹழ்ரத் அஷ்ஷைகு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه‎  அவர்களுக்கு அளிக்க வேண்டும் . பிறகு பகுதாது திசையை முன்னோக்கி பதினோரு எட்டெடுத்து வைத்து , 'யா ஸெய்யிதீ அப்துல் காதிர் ' என்று பத்து விடுத்தும் அழைத்து வேண்டி ,தமது நாட்ட தேட்டங்களைக் கேட்க வேண்டும் " என்பதாக இமாம் ஷைகு ஜலாலுதீன் ஸுயூத்தி رضي الله عنه‎  அவர்கள்  'கித்தாபுர்- ரஹ்மா- பித்திப்பி-வல்-ஹிக்மா' என்ற நூலின் 284வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .     

மேலே கண்ட விஷயங்களை நாம் இங்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம் . இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைத்  தொகுத்துக் கொடுத்து மத்ஹபை ஏற்படுத்திக் கொடுத்த இமாம் ஷாஃபியீ முஹம்மது இப்னு இத்ரீஸ் رضي الله عنه‎  அவர்கள்,சட்ட நிபுணர்களான இமாம் இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه‎  அவர்கள், இமாம் குஷைரி رضي الله عنه‎  அவர்கள்,இமாம் ஜக்கரிய்யில் அன்சாரி رضي الله عنه‎  அவர்கள், அல் குத்பு ஷம்சுத்தீன் ஹமவியில்   மிஸ்ரி  رضي الله عنه‎  அவர்கள், அல்  குத்பு முஹம்மது இப்னு அஹ்மது பர்கல் رضي الله عنه‎  அவர்கள் ஆகிய குத்புமார்களும் கபுறுகளைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறியுள்ளார்களென்றால் நோய் நீங்கவும் ,வறுமை விலகவும் , வியாபாரம் விருத்தியாகவும் நாடு செழிக்கவும் , நிக்காஹ் முதலான நல்ல காரியங்கள் மங்களகரமாக நடைபெறவும் ,தேவைகளையும் தாராளமாக வஸீலா மூலம் கேட்டுப் பெறலாம் . ஏன் வஸீலாவாக கேட்டுப் பெறக் கூடாது என்பதே ???

இவையனைத்திற்கும் மேம்பட்டு , அவ்லியாக்கெல்லாம் அரசரான , அல் குத்புர் றப்பானீ , வல் கவ்துஸ் சமதானி , செய்யிதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி   رضي الله عنه‎   அவர்கள் 'ஐய்னிய்யா' வில் கூறியுள்ளதை புத்திசாலிகள் படித்துப் பயன் பெறுவார்களாக .

அவர்கள் உபதேசித்துக் கூறுவது யாதெனில் :- 

'நீ ஓதிப் படித்த புத்தகங்களை விட்டுவிடு . ஏனெனில் அந்த அவ்லியாக்களுடைய நடப்புகள் அநேகக் கிதாபுகளில் நின்றுதான் ஏற்பட்டுள்ளன . எங்களுடைய வழிக்கும் அந்த அவ்லியாக்கள் தான் வழிகாட்டிகள் .நாம் ஆதரவு வைப்பதற்கு அன்னவர்களே போதுமான புதையல்கள் . 

அந்த அவ்லியாக்களைப் பின்பற்றியவன் நேர்வழி பெறுவான் . எவன் பின்பற்றவில்லையோ அவன் வழிகெட்டான் . 


ஆபிதீன்கள் எல்லோரும் அந்த அவ்லியாக்களையே பற்றிப் பிடித்துக் கொண்டார்கள் . அந்த அவ்லியாக்கள் தான்  மனிதரென மதிக்கப்படுபவர்கள் . அவர்களின் திருச் சமூகத்தை நீ  பற்றி பிடித்துக் கொள் .


உலகத்தார்கள் பிரதி பிரயோஜனங்கள் பெறுவதற்கு அந்த அவ்லியாக்களே ஒதுங்கும் தலங்களாகும் ' என்பதே .

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி رضي الله عنه‎  அவர்கள் ,இமாம் பக்ருத்தீன் றாஜி  رضي الله عنه‎  அவர்களுக்கு உபதேசமாக எழுதியது யாதெனில் . 

' எம்மனிதன் உண்மை என்று சாதிக்க ,தர்க்கவாதம் புரிவதை விட்டு வெளிப்படவில்லையோ , அம்மனிதன் அவ்லியாக்களிடம் ஒரு போதும் பூரண   ஈமான் உடையவனாக மாட்டான் . ஏனெனில் , அந்த மனிதன் தான் கற்ற சொற்ப கல்வியை எல்லையில்லாததாகக் கண்டு , அந்த அற்பத்தையே துருவி ஆராய்வதில் தனது மேலான வயதைப் போக்கடிக்கிறான் . அசல் நோக்கத்தை அடைந்தவனாக மாட்டான் ' என்பதே .

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه‎  அவர்கள் , ஷைகு இஸ்ஸுத்தீன் رضي الله عنه‎  அவர்கள் ஆகிய இருவரும் தகுதி வாய்ந்த சிறந்த இரு முஹத்திதுகள் . இன்காருக்குப் பிறகே அவ்லியாக்களின் அந்தரங்கப் பேறுகளைப் பெற்றார்கள் . 

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه‎  அவர்கள் , ஹழ்ரத் ஷெய்கு அபூஹம்ஜா பகுதாதி رضي الله عنه‎  அவர்களுடைய மஜ்லிஸில் உட்கார்ந்த பிறகுதான் இமாம் அவர்களுக்கு அகக்கண்கள் திறந்தன . 

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்  رضي الله عنه‎  அவர்கள் தமது குமாருக்கு செய்த உபதேசத்தில் , " மகனே ! அவ்லியாக்கள் பால் ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே ! அவர்களுடைய சகவாசத்தை ஒரு போதும் மறந்திருக்காதே ! அவர்கள் அகமியத்தின் பொக்கிஷங்களை அறிந்தவர்கள் . நாமோ  அவ்வாறு அறிந்திராத துரதிருஷ்டசாலிகள் " என்று குறிப்பிட்டுள்ளார்கள் .

 ஷைகு இஸ்ஸுத்தீன் رضي الله عنه‎  அவர்கள்  குத்புல் அக்பர் ஷெய்கு அபுல் ஹசன் அலிய்யுஷ் ஷாதுலி رضي الله عنه‎  அவர்களுடைய சகவாசத்தால் பெரும் பேறுகளை பெற்றார்கள் . 

"அவ்லியாக்கள் தான் ஹகீகத்தை உடையவர்கள் . அவர்களுடைய நேர்மைக்கு இதுவே போதுமான அத்தாட்சியாகும் . மற்றவர்கள் வெறும் பழக்க வழக்கங்களில் அகப்பட்டுக் கொண்டு கிடக்கின்றனர் " என்று ஷைகு இஸ்ஸுத்தீன் رضي الله عنه‎  அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள் .


                       
    


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...