Thursday 22 April 2021

உம்முல் முஃமினீன் ஸெய்யிதா கதீஜத்துல் குப்ரா ‎رضی الله عنها

 உம்முல் முஃமினீன் அன்னை கதீஜத்துல் குப்ரா "رضي الله عنها : 


கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் நவின்றார்கள் ; 

حسبك من نساء العالمين أربع مريم بنت عمران و آسية امرأة فرعون و خديجة بنت خويلد و فاطمة بنت محمد

' இவ்வுலகில் தலை சிறந்த பெண்மணிகள் நால்வர் : இம்ரானுடைய மகளார் அன்னை மர்யம் ,பிர்அவ்னுடைய துணைவியார் அன்னை ஆசியா ,உம்முல் முஃமினீன் அன்னை கதீஜா நாயகியார் மற்றும் முஹம்மது  ﷺ அவர்களது மகளார் ஸெய்யிதா பாத்திமா '.

[ 📖 முஸ்தத்ரக் அல் ஹாக்கீம்,பாகம் 4,பக்கம் 262,ஹதீஸ் எண்: 4745]

ஸெய்யிதா கதீஜத்துல் குப்ரா رضی الله عنها அவர்களது வமிசாவழி : ஸெய்யிதா கதீஜா رضی الله عنها பின்த் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸை பின் கிலாப் பின் முர்ராஹ் பின் கஃப் பின் லுவை.அன்னை அவர்களது வமிசாவழி எம்பெருமானார்  ﷺ அவர்களது வமிசாவழியை ஹழ்ரத் குஸை அவர்கள் மூலம் அடைகின்றது.அவர்களது குன்யா ' உம்மு ஹிந்த்' .அவர்களது தாயாரது பெயர் பாத்திமா பின்த் ஜைதா பின் அல் அஸம் ,பனூ ஆமிர பின் லுவை கோத்திரத்தைச் சாரந்தவர்கள்.

[ மதாரிஜுந் நுபுவ்வா,பாகம் 2,பகுதி 5,அத்தியாயம் 2,பக்கம் 1]


ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்களுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு.அவற்றுள் மிகவும் பிரபலமானது ' அல் குப்ரா' என்பதாம்.இச்சிறப்பு பெயர் அவர்களது பெயரோடு எத்துணை முறை இணைத்து அழைக்கப்பட்டதென்றால் அவர்களது இயற்பெயரின் ஒரு பகுதியாகவே கருதப்படும் அளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டது.அவர்களது மற்றொரு சிறப்புப் பெயர் 'தாஹிரா' என்பதாம்.இஸ்லாத்திற்கு முந்தைய காலத்திலும் ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضي الله عنه அவர்களை இச்சிறப்புப் பெயர் கொண்டு மக்கள் அழைத்தனர்.இன்னும் அவர்களை 'ஸெய்யிதத்து குரைஷ்' என்றும் அழைக்கப்படும்.

[ ஸீரத்து ஹலபிய்யா,பாகம் 1,பக்கம் 199]

'ஸித்தீகா' என்பதும் அவர்களது மற்றொரு சிறப்புப் பெயர்.எம்பெருமான்  ﷺ அவர்கள் கூறினார்கள் , " கதீஜா நாயகியார் எனது உம்மதினரில் ஸித்தீகா வாகும் " . 
[ தாரீக் திமிஷ்க்,பாகம் 70,பக்கம் 118 ]

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் நுபுவத்தை வெளிப்படுத்துவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஸெய்யிதா கதீஜா رضی الله عنها அவர்களுடன் திருமணம் நடைபெற்றது.அப்போது முறையே  நாயகம்  ﷺ 25 வயதும்,ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்களுக்கு 40 வயதும் எட்டியிருந்தது.
[ தபகாத்துல் குப்ரா,பாகம் 8,பக்கம் 18 ] 

திருமணத்திற்கு முன்னர் ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்கள் கணவனை இழந்த கைம்பெண்ணாகவும்,செல்வச் செழிப்புடன் தனியே வர்த்தகமும் செய்து வந்தனர்.தமது வர்த்தக பயணத்திற்கு பொறுப்பெற்ற சென்ற கண்மணி நாயகம்  ﷺ அவர்களின் நற்குணத்தால் ஈர்க்கப்பட்டனர்.வியாபாரத்திற்கு சென்ற பயணக் குழு மக்கா திரும்பிய வேளையில் இரு வானவர்கள் நாயகம்  ﷺ அவர்களை சூழ்ந்து வருவதைக் கண்டனர்.பயணத்தில் நடைபற்ற முஃஜிஸாத்துகளை கேள்விப்பட்டும் எம்பெருமான்  ﷺ அவர்கள்பால் ஈர்க்கப்பட்டனர்.

[ மதாரிஜுந் நுபுவ்வா,பாகம் 1,பகுதி 2,பக்கம் 2]

தாஹா ரஸூல்  ﷺ அவர்களை திருமணம் செய்துகொள்ள தமது விருப்பத்தை முதலில் கூறியவர்கள் ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்களே.நாயகம்  ﷺ அவர்கள் ஸெய்யிதா கதீஜா رضی الله عنها அவர்களது வீட்டிற்கு ஹழ்ரத் அபூதாலிப் நாயகம்,ஹழ்ரத் ஹம்ஜா رضي الله عنه,ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه  மற்றும் பிற குரைஷித் தலைவர்களுடன் சென்று சந்தித்தனர்.ஒரு அறிவிப்பின் படி அரபுலக வழக்கப்படி திருமணத்திற்கு மஹராக பன்னிரெண்டரை அவ்காப் தங்கம் வழங்கப்பட்டது.

[ மதாரிஜுந் நுபுவ்வா,பாகம் 1,பகுதி 2,பக்கம் 2]

 திருமணம் நடைபெற்ற நாள் முதல் மரணிக்கும் தருவாய்வரை 20 க்கும் மேலான ஆண்டுகள் நாயகம்  ﷺ அவர்களுக்கு உற்றதுணையாக எல்லா சந்தர்பங்களிலும் இருந்து, அவர்களின் மீது அளவற்ற அன்பும்,நேசமும் கொண்டிருந்தார்கள்.
ஹிரா மலைக்குகையில் எம்பெருமானார்  ﷺ அவர்கள் கல்வத்தில் இருக்கையில் காட்சியளித்த வானவர் கோமான் ஹழ்ரத் ஜிப்ரீல் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் 'ஓதுவீராக' என்று இரண்டு முறை கூற ,பின்னர் மூன்றாவதாக  ' இக்ரஹு பிஸ்மி' வசனம் ஓதி கொடுத்தனர்.அது போது வேகவேகமாக வீட்டிற்கு வந்த நாயகம்  ﷺ அவர்களை போர்வையால் போர்த்தி ,குளிரந்த நீரை முகத்தில் தெளித்த அன்னை கதீஜா رضی الله عنها அவர்களிடம் நாயகம்  ﷺ நடந்த சம்பவங்களைக் கூறினர்.அன்னை கதீஜா رضی الله عنها நாயகம்  ﷺ அவர்களுக்கு ஆறுதலும்,ஊக்கமும் அளித்தனர்.

[ ஸஹீஹ் புஹாரி,வஹீ பற்றி பாடம், பக்கம் 65,ஹதீஸ் எண்:3]

பெண்மணிகளில் முதலாவது இஸ்லாத்தை தழுவியது அன்னை ஸெய்யிதா கதீஜத்துல் குப்ரா رضی الله عنها அவர்களே.

[ ஸுனன் குப்ரா ,இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ  , பாகம் 4,பக்கம் 597,ஹதீஸ் எண்: 13081]

தொழுகை முதன்முதலில் கடமையாக்கப்பட்ட பொழுது எம்பெருமான்  ﷺ  அவர்கள் முதல் தொழுகையை திங்கட்கிழமை தொழுதனர்.ஸெய்யிதா கதீஜா رضی الله عنها திங்கட்கிழமை பின்னேரத்தில் தொழதனர்.ஹழ்ரத் ஸெய்யிதினா அலி இப்னு அபிதாலிப்  كرم الله وجهه அவர்கள் செவ்வாய்கிழமை தொழுதனர்.

[ அல் முஜம் அல் கபீர்,பாகம் 1,பக்கம் 251,ஹதீஸ் எண்: 945]

கண்மணி நாயகம்  ﷺ அவர்களும் ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்களின் மீது அன்பும்,நேசமும் கொண்டிருந்தனர்.ஒரு முறை அன்னை ஆயிஷா ஸித்தீகா رضی الله عنها அவர்கள் நாயகம்  ﷺ அவர்களது நேசத்திற்குரியவர் ஸெய்யிதா கதீஜா رضی الله عنها அவர்கள் மட்டும்தானா என்று வினவினர்.உணர்ச்சி பொங்க ஏந்தல்  நபி  ﷺ அவர்கள் கூறினார்கள் " மக்கள் யாருமே என்னை நம்பாத போது என்னை நம்பியவர் கதீஜா. மக்கள் யாரும் ஏற்காத போது இஸ்லாத்தை ஏற்றவர் அவர்.எனக்கு உதவியாக மக்கள் யாரும் இல்லாத போது எனக்கு நேசக்கரம் நீட்டி உதவி புரிந்தவர் அவர் " என்றார்கள்.

[ முஸ்னத் இமாம் அஹமத் பின் ஹன்பல் رضي الله عنه, பாகம் 9,பக்கம் 429,ஹதீஸ் எண்: 24918 ]

நபி  ﷺ இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்கள் குறித்து நேசம் அவர்களது உள்ளத்தில் சுடர் விட்டுக் கொண்டே இருந்தது.நாயகம்  ﷺ அவர்கள் தமது 50 வரை ஸெய்யிதா கதீஜா நாயகியார் رضی الله عنها அவர்களுடன் மட்டுமே திருமண பந்தம் கொண்டிருந்தனர்.

[ ஸஹீஹ் முஸ்லிம்,பக்கம் 949,ஹதீஸ் எண்: 2434 ] 

அரபுகளில் அன்று பலதார மணம் பரவியிருந்த சூழ்நிலையிலும் ஏந்தல் நபி  ﷺ வேறு திருமணம் புரியவில்லை. நுபுவ்வத்தை வெளிப்படுத்துவதற்கு 17 ஆண்டுகள் வரையிலும்,அதன்பின்னர் 11 ஆண்டுகளும் ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها்அவர்களுடன் மட்டுமே திருமண பந்தம் கொண்டிருந்தனர் தாஹா ரஸூல்  ﷺ அவர்கள்.அவர்களது சுற்றத்தாரிடமும் அன்புடன் இருப்பர்,அவர்களுக்கு அவ்வப்பொது பரிசுப் பொருட்களும் கொடுத்தனுப்புவர்.

அன்னை ஆயிஷா ஸித்தீகா رضی الله عنهاஅவர்கள் அறிவிக்கின்றார்கள் ," நாயகம்  ﷺ ஏனைய மனைவிமார்கள் எவரின் மீதும் எனக்கு பொறாமையில்லை,எனினும் கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்களை நான் கண்டதில்லை. அவர்களது பசுமையான நினைவு ஏந்தல் நபி  ﷺ அவர்களது இதயத்தை விட்டும் விலகியதே இல்லை.ஒருமுறை நாயகம்  ﷺ அவர்களிடம் இதுபற்றி நான் குறைபட்டு கொண்டேன்,அப்போது அவர்கள் கடுமையாக என்னிடம் , ' அல்லாஹ்  سبحانه و تعالى கதீஜா மீதான நேசத்தைக் கொண்டு எனக்கு அருள் புரிந்தான் ' என்றார்கள்." 

ஸெய்யிதா கதீஜா அம்மையார் رضی الله عنها அவர்கள் ,கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்கு ஆறு பிள்ளைகளை பெற்றார்கள்.முதல் குழந்தை ஹழ்ரத் ஸெய்யிதினா காஸிம் رضي الله عنه ,அவர்களைக் கொண்டே அரபுகளின் வழக்கப்படி நாயகம்  ﷺ அவர்களது 'குன்யா' ' அபுல் காஸிம்' என்றழைக்கும் வழக்கம் தொடங்கியது.அதன் பின்னர் ஸெய்யிதினா அப்துல்லாஹ்  رضي الله عنه  ஆகியோர் பிறந்தனர்.இந்த இரண்டு ஆண் மக்களும் பால்யத்திலேயே மரணத்தை தழுவினர்.பெண் பிள்ளைகளில் ஸெய்யிதா ருகையா رضی الله عنها அவர்கள் தான் மூத்தவர்கள்,அதன்பின்னர் ஸெய்யிதா ஜைனப் رضی الله عنها அவர்கள்,மற்றும் ஸெய்யிதா உம்மு குல்தூம் رضی الله عنها,அவர்களில் இறுதியாக வந்தவர்கள் பிரபலமானவர்களான 'காத்தூனே ஜன்னத்' ஸெய்யிதா பாத்திமா رضی الله عنها அவர்கள்.

[ ஸீரத் இப்னு ஹிப்பான்,பக்கம் 77 ]

ஹழ்ரத் ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு ஜாபர் رضي الله عنه அவர்கள் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலி இப்னு அபிதாலிப்  كرم الله وجهه அவர்கள் குபாவில் இருக்கும் சமயம் கூற தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள் ,நாயகம்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " தம் காலத்தில் சிறந்த பெண்மணி இம்ரானுடைய மகளார் ஸெய்யிதா மர்யம் رضی الله عنها்அவர்கள்,மற்றும் குவைலிதின் மகளார் ஸெய்யிதா கதீஜா رضی الله عنهاஅவர்கள்.அபூ குரைப் கூறினார் வகீ விண்ணையும்,மண்ணையும் நோக்கி சைகை செய்தார்.அதன் அர்த்தம் என்னவென்றால் ஸெய்யிதா மர்யம் رضی الله عنهاமற்றும் ஸெய்யிதா கதீஜாرضی الله عنها தமது காலத்தில் பூமியில் மட்டுமல்ல,வானுலகிலும் சிறந்தவர்கள் " .

[ ஸஹீஹ் புஹாரி,பாகம் 4,பக்கம் 164,ஹதீஸ் எண்:3432 ]

ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ ஹுரைரா رضي الله عنهஅவர்கள் அறிவிக்கின்றார்கள் ஹழ்ரத் ஸெய்யிதினா ஜிப்ரீல் அவர்கள் நாயகம்  ﷺ அவர்களிடம் வருகை புரிந்து கூறினர், " அல்லாஹ்வின் தூதரே ! கதீஜா நாயகியார் நன்கு சமைக்கப்பட்ட உணவினைக் கொண்டு வருகின்றார்கள்.அவர்களிடம் அல்லாஹ்வின் ஸலாமைக் கூறுங்கள்,எனது ஸலாமையும் கூறுங்கள் , சுவனத்தில் சிறிதும் சத்தமோ,உழைப்பின் தேவையும் இல்லாத  நகைகளாலான மாளிகை அவர்களுகாக இருக்கின்றது என்பது பற்றிய நன்மாராயத்தை எடுத்துப் கூறுங்கள் ." 

[ ஸஹீஹ் முஸ்லிம்,பக்கம் 1322,ஹதீஸ் எண்:2632 ]

இந்த ஹதீத் மற்றொரு அறிவிப்பில் வேறு அறிவிப்பாளர் தொடரில் வார்த்தைகளில் சிறிய வேறுபாடுடன் வந்துள்ளது.

ஸெய்யிதா ஆயிஷா ஸித்தீகா رضی الله عنهاஅவர்கள் அறிவிக்கின்றார்கள் ,நாயகம்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " ஸெய்யிதா கதீஜா رضی الله عنها அவர்களுக்கு சுவனத்தில் ஓர் மாளிகையை வழங்கவதாக அல்லாஹ் நன்மாராயம் அளித்துள்ளான் " . பின்னர் அன்னை ஆயிஷா ஸித்தீகா رضی الله عنهاஅவர்கள் கூறுகின்றனர் , " நான்  ஸெய்யிதா கதீஜா நாயகி அவர்களை கண்டு பொறாமை கொண்டது போல் வேறு  எந்த பெண்ணையும் பார்த்து பொறாமை கொண்டதில்லை. அவர்கள் நான் நாயகம்  ﷺ அவர்களை திருமணம் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் முன்பு மரணித்தனர்.நான் நாயகம்  ﷺ அவர்களைப் பற்றி அதிகம் புகழக் கேட்டுள்ளேன்.அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தில் அணிகலன்களின் மாளிகையை நன்மாராயமாக வழங்கியுள்ளான்.நாயகம்  ﷺ எப்போதெல்லாம் ஆட்டினை குர்பானி கொடுப்பார்களோ,அதன் கறியை ஸெய்யிதா கதீஜா رضی الله عنهاஅவர்களின் தோழியருக்கு வழங்கினர்." 

[ ஸஹீஹ் முஸ்லிம்,பக்கம் 1323,ஹதீஸ் எண்: 2435 ]

ஹழ்ரத் ஸெய்யிதா ஆயிஷா ஸித்தீகாرضی الله عنها அவர்கள் அறிவிக்கின்றார்கள், " ஒரு முறை நாயகம்  ﷺ அவர்களிடம் உங்களது சிந்தனையில் எப்பொழுதும் ஸெய்யிதா கதீஜா رضی الله عنهاஅவர்கள் தான் இருக்கின்றார்களா ? என்று கேட்டேன்.நாயகம்  ﷺ அவர்கள் கூறினார்கள் ,அல்லாஹ்  سبحانه و تعالى கதீஜாவின் நேசத்தை என்னுள் வளர்த்தெடுத்துள்ளான்" என்றார்கள்.

ஏந்தல் நபி  ﷺ அவர்கள் அன்னை ஸெய்யிதா கதீஜா رضی الله عنها அவர்கள் உயிரோடிருக்கும் வரை வேறு திருமணங்கள் செய்யவில்லை.ஸெய்யிதா கதீஜா رضی الله عنها அவர்கள் ரமழான் பிறை 10 ல் இப்பூவுலகை விட்டும் பிரிந்தனர் .அவர்களது நல்லடக்கம் ஜன்னதுல் முஅல்லாவில் செய்யப்பட்டது.அவர்களது மறைவையொட்டி அகிலத்தின் அருட்கொடை நாயகம்  ﷺ.  அவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

[ மதாரிஜுந் நுபுவ்வா,பாகம் 2,பகுதி 5,பக்கம் 495 ]

உம்முல் முஃமினீன் அன்னை ஸெய்யிதா கதீஜா رضی الله عنها அவர்களது தனித்தன்மை வாய்ந்த சிறப்பு என்னவென்றால் அவர்கள் கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் மீது நுபுவ்வத் வெளிப்படுவதற்கு முன்பும் பின்பும்,எல்லா காலத்திலும் பெருமதிப்பும்,பேரன்பும் கொண்டு,எம்பெருமான்  ﷺ அவர்கள் கூறியதை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு  நடந்தனர் என்பதாம்.

[ அல் இஸாபா,கிதாபந் நிஸா,பாகம் 8,பக்கம் 110,ஹதீஸ் எண்: 11092 ] 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...