Tuesday 23 February 2021

புனித மிஅராஜ்

சங்கை நிறைந்த மிஅராஜ் இரவு:

ரஜபு மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த இரவில் தொழுது வணங்கி அடுத்த பகலில் நோன்பிருந்தவருக்கு அல்லாஹ் ஒரு நூறாண்டு காலம் இரவெல்லாம் விழித்திருந்து வணங்கி பகலெல்லாம் நோன்பிருந்தற்குண்டான

நன்மைகளுக்கொப்ப அருள்புரிவான்.

அந்த இரவுக்குப் பின் அம்மாதத்தில் (28, 29, 30 ஆகிய) மூன்று இரவுகளே மிஞ்சியிருக்கும் என நபிபெருமான்صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் கூறியதாக
ஹழ்லரத் அபூ ஸலமா, ஸல்மான் ஃபார்ஸி, அபூ ஹுரைரா
رضي الله عنهم  ஆகிய நாயகத் தோழர்கள் அறிவித்துள்ளார்கள்.

ரஜபு மாதத்தின் இருபத்து ஏழாம் இரவாக அண்ணல் எம்பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள இரவே மிஅராஜுடைய இரவாகும்; இறைவனின் அழைப்பை எத்திவைத்து அண்ணல் எம்பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை விண்ணுலகப் பயணம் செய்ய ஹழ்ரத் ஜிப்ரஈல் عليه السلام  அவர்கள் அழைத்துச் சென்ற சங்கையான இரவாகும்.

மாநபி பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம்-புனிதப் பள்ளியிலிருந்து புறப்பட்டுச் சென்று ' பைத்துல் முகத்தஸ்'ஸிலுள்ள' மஸ்ஜிதுல் அக்ஸா'வில் காத்திருந்த முந்திய நபிமார்களுக்கெல்லாம் முன்னிலை வகித்து தொழுகை நடாத்தி, ஏழு வானங்களையும் கடந்து, ' ஸித்ரத்துல் முனத்தஹா வெனப்படும் சஞ்சார எல்லைக்கப்பால் தங்களின் இறைவனோடு,

فَكَانَ قَابَ قَوْسَيْنِ اَوْ اَدْنٰى‌ۚ‏

' (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல் அல்லது அதனினும் நெருக்கமாக '' 

(திருக்குர்ஆன் 53: 09) இருந்து உரையாடிப் பிரிந்து ஒப்பற்ற இரவாகும்.

எந்தக் கண்களும் கண்டிராத, எந்தச் செவிகளும் கேட்டிராத ,எந்த உணர்வுக்குமே மட்டுப்படாத இறைவனின் அநேக அத்தாட்சிகளை அண்ணலெம் பெருமான்صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் காணப் பெற்ற அந்த இரவை,

لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌
'' நம்முடைய திருஷ்டாந்தங்களை அவருக்குக் காட்டவே '' என சங்கைப்படுத்துகிறது மாமறை-(17:01).

அண்ணல் எம்பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّمஅவர்கள், தாங்கள் படுத்திருந்த விரிப்பின் சூடு ஆறுமுன்னதாக விண்ணெல்லாம் தங்களைப் பயணம் செய்ய வைத்து வீடு சேர்த்த தங்களின் இறைவனின் மகத்தான ஆற்றலை அந்த இரவில் கண்டார்கள்.

விண்ணுலகில் அவர்கள் சுவனத்தைக் கண்டார்கள்;நரகத்தையும் கண்டார்கள்; நல்லோர் பெற்றுள்ள பேறுகளையும் கண்டார்கள்; தீயோர் படும் வேதனைகளையும் கண்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் இறை
வனின் ' லிக்கா' வென்னும் திருக்காட்சியையே கண்ட அண்ணலார் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள், " என் இறைவனே! எனக்கு மட்டும்தானா இந்தப் பேறு, என்' உம்மத் ' துகளுக்கில்லையா?' ' என கனிந்து நின்றார்கள்." உண்டு. என்னைக் காணும் ' மிஅராஜ்' எனப்படும் இந்தப் பேற்றினை உம்முடைய உம்மத்துகள் தங்களின் தொழுகையின்போது பெறுவார்கள்-என அல்லாஹ் அருளக் கேட்டு அண்ணலார் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் மகிழ்ந்தார்கள்.

இறைவனின் அன்புப் பெருக்காக, தொழுகை- ' முஉமின்களுக்கு மிஅராஜ்'- அருளப்பட்டது அந்தப் புனித இரவில். நாளொன்றுக்கு ஐம்பது வேளை என நிர்ணயிக்கப்பட்ட தொழுகை பெருமானார் صَلّى اللهُ عليهِ وسلّمஅவர்கள் வேண்டிக்கொண்டபடி படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஐந்து வேளையாக்கப்பட்டது. நன்மைகளோ ஐம்பது வேளைகளுக்குண்டானதே; குறைக்கப்படமாட்டாது என அருளப்பட்டது.

தீமைகள் செயல் வடிவம் பெறாதவரை எண்ண ஊசாட்டங்கள் மட்டுமே குற்றம் பிடிக்கப்படமாட்டா, செயல்வடிவம் பெற்றாலோ செய்த பாவத்துக்கு மேல் அணுவளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. நன்மையான காரியங்களை நினைத்தாலே போதும் செய்து முடித்தற்கான நன்மை எழுதப்படும். எண்ணியபடி செயல்படுத்தி முடித்தாலோ அதற்குரிய பலன் பதின்மடங்காகப் பெருக்கித் தரப்படும்- என்றெல்லாம் இறைவனின் கருணாமாரி பெருக்கெடுத்த அந்த இரவை தங்களின் வணக்க வழிபாடுகளால் வளம்பெறச் செய்வதை வாலாயமாக்கி வந்தனர் சான்றோர்.

தீனென்னும் இஸ்லாமிய மணிமண்டபத்தைத் தாங்கும் தூணாக அண்ணல் எம்பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் தொழுகையைக் காட்டினார்கள். அதனை நிலைப்படுத்தியவர் தீனை நிலைப்படுத்தினார். அதனை விட்டவன் தன் மார்க்கத்தையே தகர்த்தெறிந்தான் என்பது அண்ணலார் صَلّى اللهُ عليهِ وسلّم
அவர்களின் அருளெச்சரிக்கை.

இது கடமையாக்கப்பட்ட தொழுகைகளுக்கே என வாதித்து நஃபிலான தொழுகைகளின்பால் அக்கறை காட்டாதிருப்பது விவேகமல்ல.

கடமையாக்கப்பட்ட ஐங்காலத் தொழுகைகளையும் மறந்து
பொடுபோக்காகத் திரிந்தலையும் பரிதாபத்துக்குரியவர்களுக்கு அவர்களைச் சந்திக்கக் காத்திருக்கும் முடிவை நினைவூட்டவும் இந்த வாலாயத்தை விடாதிருந்தனர் ஆன்றோர்.

உலமாக்களின் நல்லுரைகளை தப்பித் தவறிச் செவியேற்று ஏதோ ஓர் அச்சவயப்பட்டு இத்தகைய ஒரு குறிப்பிட்ட நாளிலேயே பள்ளிகளில் நுழைந்துவிடும் பாமரர்களும் கூட கடமையைத் தவறவிடாது ஐங்காலமும் தொழும் கனவான்கள் கூட்டத்தை அங்கே கண்டால் தங்களின் பொடுபோக்குத் தனத்தை நினைந்து வெட்கமுற மாட்டார்களா? வேதனைப்பட்டு அவர்கள் வழி திருந்த உள்ள ஒரு வாய்ப்பை எகத்தாளமான கருத்துகளை வெளிப்படுத்தி தகர்த்தெறிய முற்படுவதும் அறிவுடமையாகுமா?

எனவே அல்லாஹ்வின் அருளிறங்கும் இத்தகைய புனிதமான இரவுகளில் பள்ளிகளை விளக்குகளால் ஒளி பெற செய்வதோடன்றி, ஐங்காலமும் தவறாது ' ஓலு' செய்து ஒளி பெற்ற முகங்களாலும் பொலிவு பெறச் செய்ய வேண்டும்.

அந்த இரவில் விழித்திருந்து வணக்கம் புரிபவர் ஒரு நூறாண்டு காலம் வணக்கம் புரிந்த பலனைப் பெறுவார் என அண்ணல் எம்பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் அருளியுள்ளதாக அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி رضي الله عنه  அவர்கள் தங்கள் ' இஹ்யா' வில் குறிப்பிடுகிறார்கள்.

அந்த இரவில் புரிய வேண்டிய ஒரு வணக்க முறையையும் இமாமவர்கள் தங்களின் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.


இரண்டிரண்டு ரக்அத்துகளாக பனிரெண்டு ரக்அத்துகள்
தொழுது முடித்து,

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

' ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ
இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என ஒரு நூறு
முறையும்,

أسْتَغْفِرُ اللهَ رَبي مِنْ كُلِ ذَنبٍ وَأتُوبُ إلَيهِ
' அஸ்த G ஃபிருல்லாஹி ரப்பீ மின் குல்லி தம்பின்
வஅத் தூபு இலைஹி' என ஒரு நூறு முறையும் ஓதும் படியாக இமாமவர்கள் கற்றுத் தந்த வழிமுறை பாமரர்களும் பின்பற்ற மிக எளிதான வழிமுறையாகும் . 

உலமாக்களும் ,மஷாயிகுமார்களும் பொது மக்களுடையவும் , தங்களது முரீதுகளுடையவும் அவ்வப்போதைய மனப்பகுதிற்கேற்படி எத்தனையோ வெவ்வேறான முறைகளில் நஃபிலாகத் தொழ கற்பித்துள்ளார்கள் என்றாலும், நெருக்கடி மிக்க இன்றைய உலகில் கடமையான தொழுகையை தெரிந்தோ , தெரியாமலோ தவறவிட்டிருப்பவர்கள் 'களா' வாகவேனும் அவற்றை நிறைவேற்றிமுடிக்கக் கிடைத்துள்ள அறிய வாய்ப்பாக இந்த இரவுகளைப் பயன்படுத்தி கொள்ள முடியும்.  தொழுகைகள் கணக்கும் நம்மிடம் இருக்க முடியாது. எந்த அளவுக்கு முடிகின்றதோ அந்த அளவுக்கு ஐங்காலத் தொழுகைகளையும் மீட்டுத் தொழலாம்.

தொழுகை முடிந்து ,இறைவனை புகழ்ந்து துதித்து தங்களின் பிழை பொறுக்கப்பட வழுத்தியபின் அண்ணலெம்பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّم  மீது ஸலவாத்தைப் பொழிய தவறக் கூடாது.இவ்வுலகமும் , உலக பாக்கியங்களும் மறுமைப் பெரு வாழ்வும் அதனை ஈட்டத் தேவையான மார்க்கமும் நமக்கு அருளப்பட்ட முழுமுதற்காரணமான அம்முத்தொளியை மறந்த நன்றியற்றவர்களாக  நாம் ஆக வேண்டாம்.எனவே அண்ணல் எம்பெருமான் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் மீது விடியும் வரை ஸலவாத்தையும் ,ஸலாமையும் ஓதி முடிக்கலாம்.

மறுநாளைய பகலும் சிறப்புக்குரியதே என்பதை உணர்த்த ஒரு சம்பவத்தை  ஷெய்குல் மஷாயிக் இமாம் ஹஸன் பஸரி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ரஜபு மாதம் 27ஆம் நாளில் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் பள்ளியில் இஃதிகாப் -இருந்து மவுனத் தவம் புரிவதை தம் வழக்கமாக்கி கொண்டார்கள். அன்று உச்சிப் பகல் (ளுஹர்) தொழுகைக்கு பின்னர் அவர்கள் மேலதிகமாக தொழத் துவங்கி (நஃபில் ) விடுவார்கள். அச்சமயம் அவர்கள் ஒவ்வொரு ரகஅத்திலும் அல்ஹம்து சூராவை அடுத்து கத்ருடைய சூராவை 3 முறையும் , குல்ஹுவல்லாஹு அஹது சூராவை 50 முறையும் ஓதி நான்கு ரக்அத் தொழுவார்கள்.பின்னர் அஸர் தொழுகை வரை இறைஞ்சுதலில் இருப்பார்கள்.அண்ணல் எம்பெருமானின் வழக்கம் இதுவே என்று அவர்கள் கூறுவார்கள் என்று இமாம் ஹசன் பஸரி رضي الله عنه அவர்கள் அறிவித்துள்ளார்கள்.     

 அல்குர்அனில் புனித மிஃராஜ் இரவு :

அல்லாஹ்  سبحانه و تعالى அல் ளுஹா அத்தியாத்தில் இரவின் மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.

وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏

மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!

[ அல் குர்ஆன் 93:2]

அந்த இரவைப் பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. முபஸ்லிருல் குர்ஆன் அல்லாமா இஸ்மாயில் ஹக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது தப்ஸீரில் அந்த இரவைப் பற்றிய விளக்கத்தை பல்வேறு கருத்துக்களுடன் கூறியுள்ளார்கள்.

" இமாம் ஜாபர் ஸாதிக் رضي الله عنه அவர்களைக் கொண்டு அறிவிக்கபடுகின்றது , இதன் அர்த்தமாகிறது அல்லாஹ்  سبحانه و تعالى  ஸெய்யிதினா மூஸா  عليه السلام அவர்களுடன் உரையாடிய தருணம் என்றும் , அந்த இரவு என்பது ரஜப் மாதத்தின் 27 ஆம் பிறையாகும் ( புனித மிஃராஜின் இரவு)  என்பதாம்.

[ தப்ஸீர் ருஹுல் பயன்,ஸுரா ளுஹா,வசனம் 2.]

இந்த மேற்கோளை ஸிராஜுல் ஹிந்த் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி ஸூஃபி காதிரி قدس الله سره العزيز அவர்களும் தமது தப்ஸீர் பத்ஹுல் அஜீஸில் குறிப்பிடுகின்றனர்.மேலும் கூறுகின்றர்,

 "முபஸ்ஸரீன்கள் சிலரின் கருத்தாகிறது ளுஹா என்பது கண்மணி நாயகம்  ﷺ அவர்களின் பிறந்த நேரம் என்றும் , இரவு என்பது ரஜப் மாதம் பிறை 27 ஆம் நாள் என்பதாகும். "

[ தப்ஸீர் பத்ஹுல் அஜீஸ்,ஸுரா ளுஹா- வசனம் 2,பக்கம் 281.]

முபஸ்லிருல் குர்ஆன் அல்லாமா இஸ்மாயில் ஹக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் சூரா பஜ்ர் ,வசனம் 4 த்தின் பல்வேறு விளக்கங்களை எழுதுகிறார் ; 

"..இந்த அர்த்தம் பொதுவானதாக என்று  எடுத்துக் கொள்ளப்பட்டால், அது எந்த இரவையும், இரவில் பயணிக்கும் எவரையும் குறிக்கும்.இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இது பொதுவான இரவை குறிக்காது, ஆனால் ஒரு சிறப்பு இரவு என்று பொருள்  கொள்ளலாம் மற்றும் அது ரஜப் மாதத்தின் 27 ஆம் நாள் . பொதுவாக பயணம் செய்பவரைக் குறிக்காமல் , பல ஆன்மீக படித்தரங்களைக் கடந்து அல்லாஹ் வை நெருங்கி , திருக்காட்சி காண பயணம் செய்த எம்மான் கோமான் நாயகம் அவர்களைக் குறிப்பாக குறிக்கும் . எனவே இதன் அடிப்படையில் இந்த ஆயத்தின் பொருள் ; ' ரஜப் மாதத்தின் 27 இரவுக்குள்  ! நாயகம் அவர்கள் பல ஆன்மீக படித்தரங்களைக் கடந்து பயணம் செய்தனர் 'என்பதாம் .

இன்னும் எழுதுகின்றார்கள் , " ரஜபின் 27 ஆவது இரவின் மீது  சத்தியம் செய்வதற்குப் பின்னால் உள்ள அகமியம் என்னவென்றால், அல்லாஹ் سبحانه وتعالىٰ தனது வழிபடுபவர்களில் மிகச் சிறந்தவர்களான கண்மணி நாயகம் அவர்களை பயணத்திற்கு அழைத்துச் சென்றான்,இதன் மூலம் இந்த இரவானது மற்ற இரவுகளை விட மிகவும் தனித்துவமானது.இது ஒரு மதிப்புமிக்க இரவு, சிறப்புகள் நிறைந்த இரவு  இரவு, ஜமாலான அல்லாஹ் سبحانه وتعالىٰ வின் நெருக்கம்,தரிசனம் மற்றும் சங்கமம் நிறைந்த இரவு ."  

 [ தப்ஸீர் ரூஹுல் பயான் , ஸுரா பஜ்ர் , வசனம் 4 ] 

அல்லாஹ் ஓர் இரவைக் குறிப்பிடுகின்றான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை . எனவே அது அந்த இரவின் மேன்மையையும் சிறப்பையும் காட்டுகிறது. ஆகவே, அந்த இரவின் சிறப்பு அருளைப் பெறுவதற்கும், அந்த இரவில் இறங்கும் கருணையால் ஒருவரின் பொக்கிஷங்களை நிரப்புவதற்கும் இரவு வழிபாட்டிலும் பிரார்த்தனையிலும் செலவிடப்படுகிறது.

 ஹதீஸ்களில்  ரஜப் 27 ஆம் நாள் :

லைலத்துல் கத்ர் மற்றும் பராஅத் இரவுகளை குறிப்பிட்டு  ஹதீஸ்கள் உள்ளது போல் ,மிஃராஜ் இரவினை குறிக்கும் ஹதீதுகளும் உண்டு.ரஜப் 27ஆம் நாளின் சிறப்புகள்,அந்த இரவில் வழிபடுவதால் கிடைக்கும் வெகுமதிகள் மற்றும் நன்மைகள் பற்றியும் ஹதீதுகளில் உள்ளது . இந்த உம்மத்தின் வழிகாட்டும் நட்சத்திரங்களான ஸஹாபாக்கள் ரஜப் 27ஆம்  நாளில் அமல்கள் புரியவில்லை என்பது ஹதீஸ்களை அறியாத அறிவீனர்களின் சொல் . 

பெருமானார் அவர்களின் அடிச்சுவற்றை உள்ளது உள்ளபடியே பின்பற்றி , இறையச்சமிக்க உயர்வாழ்வு வாழ்ந்த அந்த சீலர்களைப் பற்றி அல்லாஹ் سبحانه وتعالىٰ தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் ;

அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.

[ அல்  குரான் 32 :16 ] 

இத்தகைய பேணுதல் மிக்கவர்கள் புனிதமிகு மிஃராஜ் இரவில் அமல்களைச் செய்யாமல் விலகி இருந்தார்கள் என்பது அவர்கள் மீதான அபாண்டமே !

ரஜப் 27 ஆம் இரவு அன்று 12 ரக்அத் நபில் தொழுதல் : 

ஹழ்ரத் ஸெய்யிதினா  அனஸ் رضي الله عنه   அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " ரஜப் மாதத்தில் ஓர் இரவு உள்ளது . இதில் 100 ஆண்டுகள் மதிப்புள்ள நல்லொழுக்கங்கள் அமல் புரிபவர்களுக்காக எழுதப்படுகின்றன, அது ரஜபின் 27 வது இரவு.இந்த இரவில் எவரொருவர் 12 ரக்அத் ஸலாத்தினை சூரா பாத்திஹா ஓதிய பின்னர் , ஏதேனும் ஓர் சூரா ஓதி 2 ரக்அத் தொழுகையாக தொழுது ஸலாம் கொடுத்த பின்பு  , '' ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என ஒரு 100 முறையும்,  இஸ்திக்பார் 100 முறையும் ஓதி பின்னர் , ஸலவாத் 100 முறை ஓதி , இவ்வுலக மறுமை தேவைகளை துஆ கேட்டு , மறுநாள் நோன்பு நோற்கிறாரோ அல்லாஹ் அவருடைய எல்லா துஆக்களையும் அங்கீகரிப்பான் ,கீழ்ப்படியாமல் இருக்க வேண்டி கேட்கப்படும் துஆவைத்  தவிர்த்து . 

[ பழாயில் அல் அவ்காத் லில் பைஹகீ - ஹதீஸ் எண் : 12 , ஷுஅப் அல் ஈமான் - ஹதீஸ் எண் : 3651 ,ஜாமிஉல் ஹதீத் - ஹதீஸ் எண் : 41812 , ஜாமிஉல் கபீர் - ஹதீஸ் எண் :171 , கன்சூல் உம்மால் - ஹதீஸ் எண் : 35170,மா ஸபத மினஸ் ஸுன்னா - பக்கம் 70,அல் குன்யா லி தாலிபி தரீக்கில் ஹக் -பாகம் 1,பக்கம் 182/183,தப்ஸீர் துர்ரே மன்துர் -சூரா தவ்பா -36 ]

கவ்துல் அஃலம் قدس الله سره العزيز  அவர்கள் பின்வரும் ஹதீதினை ரிவாயத்துச் செய்கிறார்கள் :

ஹழ்ரத் ஸெய்யிதினா  அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , நாயகம் அவர்கள் நவின்றார்கள் "எவரொருவர் 27 ரஜப் அன்று நோன்பு நோற்கிறாரோ , அவருக்கு 60 மாதங்கள் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் ."  

[ அல் குன்யா லி தாலிபி தரீக்கில் ஹக் ,பாகம் 1,பக்கம் 182 ]

இதே நூலில் மற்றுமொரு ஹதீஸ் காணக்கிடைக்கிறது 

ஹழ்ரத் ஸெய்யிதினா  ஹஸன் பஸரி رضي الله عنه  அவர்களைக் கொண்டு அறிவிக்கிப்படுகின்றது ,   "ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் ரஜப் 27 அன்று பள்ளியில் இஃதிகாப் இருப்பார்கள் . லுஹருடைய நேரம் வரை தொழுது கொண்டே இருப்பார்கள் . லுஹர் தொழுது முடித்த பின்னர் , தனியே 4 ரக்அத் தொழுவார்கள் . ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா ஓதிய பின் ,சூரா பலக் ,சூரா நாஸ் ஒருமுறை ஓதி  ,சூரா கத்ர் 3 முறையும் ,சூரா இக்லாஸ் 50முறையும் ஓதுவார்கள் .பின்னர் அஸர் வரை துஆ செய்தவண்ணம் இருப்பார்கள் . அதன் பின்னர் 'இந்நாளில் நாயகம்  صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்களின் நடைமுறை இங்கனமே இருந்தது என்பார்கள் ."

[ அல் குன்யா லி தாலிபி தரீக்கில் ஹக் ,பாகம் 1,பக்கம் 182 ]

இமாம் பைஹகி , இமாம் ஸுயூத்தி ,அல்லாமா முத்தகி அல் ஹிந்தி , இமாம் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி ஆகியோர் தமது நூற்களில் பின்வரும்  ஹதீதினை அறிவிக்கின்றார்கள் :

ஹழ்ரத் ஸெய்யிதினா  ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் நவின்றார்கள் " ரஜப் மாதத்தில் ஓர் பகலும்  இரவும்  உள்ளது , எவரொருவர்  இதில் பகலில் நோன்பு நோற்று இரவில் விழித்திருந்து வணக்கம் புரிவாரோ அவருக்கு 100 ஆண்டுகள் நோன்பு நோற்ற நன்மையும் , 100 ஆண்டுகள் வணக்கம் புரிந்த நன்மையும் கிட்டும் .அது ரஜப் மாதத்தின் 27ஆம் இரவு . "

[ பழாயில் அல் அவ்காத் லில் பைஹகீ - ஹதீஸ் எண் : 11 , ஷுஅப் அல் ஈமான் - ஹதீஸ் எண் : 3650 ,ஜாமிஉல் ஹதீத் - ஹதீஸ் எண் : 41813 , ஜாமிஉல் கபீர் - ஹதீஸ் எண் :172 , கன்சூல் உம்மால் - ஹதீஸ் எண் : 35169, மா ஸபத மினஸ் ஸுன்னா - பக்கம் 70, அல் குன்யா லி தாலிபி தரீக்கில் ஹக் -பாகம் 1,பக்கம் 182/183, தப்ஸீர் துர்ரே மன்துர் -சூரா தவ்பா -36 ] 

மேற்குறிப்பிட்ட ஹதீதுகளின் மூலம் ரஜப் மாதம் 27 ஆம் நாளில்  இபாதத்துக்களில் ஈடுபடுவது கண்மணி நாயகம்  صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்களது ஸுன்னத்தும் ,ஸஹாபாக்களின் ஸுன்னத்துமாகும் என்று தெளிவுற தெரிகின்றது . அன்று நோன்பு நோற்பது அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் செயலாகும். முஸ்லிம்களை இதனை விட்டும் தடுப்பதும் , இதனை பித்அத் என்று அழைப்பதும் ஷரீஅத் அனுமதிக்காத ஒன்று.  

ளயீபான ஹதீதுகளைக் கொண்டு அமல் புரிவது :

 பழாயில் என்று வரும் பொழுது , ளயீபான ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்யலாம் என்பது அனைத்து  ஹதீதுக் கலை வல்லுநர்களின்  ஒருமித்த கருத்தாகும் .

இமாம் நவவி رضي الله عنه அவர்கள் தமது நூற்களில் பல்வேறு இடங்களில் இதனை தெளிவுபடுத்தி உள்ளனர் .

" இந்த உம்மத்தின் எல்லா உலமாக்களின் ஏகோபித்த கருத்தானது,பழாயில்களில்   ளயீபான ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது அனுமதிக்கப்பட்ட ஒன்று "

[அர்பயீன் அந் நவவிய்யா , முகத்திமா , அல் மஜ்மு ஷரஹுல் முஹத்தப் ] 

இந்த உம்மத்தின் மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநர்கள் ளயீபான ஹதீதைக் கொண்டு அமல் செய்வது கூடும் என்று சொல்லியிருக்க , ரஜப் 27 ஆம் நாளான மிஃராஜ் நாளின் சிறப்புகளை கூறும் ஹதீதுகளை ளயீபானவை என்று புறம் தள்ளுவது ஏற்றமிகு செயல் அல்ல . நேர்மையும், சார்பற்றதன்மையும் ரஜபின் 27 ஆம்  இரவைப் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் கூட ஹதீஸ் நிபுணர்களின் தெளிவுபடுத்தலின் படி செயல்பட வேண்டும் என்று விளக்குகின்றன .

ரஜப் 27ஆம் நாளில் அமல் செய்வது : 

புனித மிஃராஜுடைய நாளான ரஜப் 27 ஆம் நாள் அன்று கண்மணி நாயகம் அவர்கள் அல்லாஹ் سبحانه و تعالى வின் திருக்காட்சியைக் கண்டு ,இன்னும் பல நற்பேறுகளை அருள்பெற்றார்கள் .இந்த இரவின் சிறப்பை உணர்ந்து, அதை வணக்கத்திலும் ,வல்லோன் அல்லாஹ்வின் திக்ரிலும் செலவிடுவது இந்த உம்மாவின் பேணுதல்மிக்க முன்னோடிகளின் வழக்கம். 

குவலயம் போற்றும் கவ்துல் அஃலம் قدس الله سره العزيز  அவர்கள் கூறுகின்றார்கள் , 

" சில அறிஞர்கள் இரவு வணக்கம் புரிவதற்கு முஸ்தஹபானது என்று சில நாட்களை சேகரித்துள்ளனர். இன்னும் அவை ஒரு வருடத்திற்கு 14 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர் . அவை.... ரஜப் முதல் நாள் ,15 ஆம் நாள் , 27 ஆம்  நாள் "

[ அல் குன்யா லி தாலிபி தரீக்கில் ஹக் , பாகம் 1,பக்கம் 177 ]

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி قدس الله سره العزيز அவர்கள் எழுதுகின்றார்கள் : 

" ஞானப்பாட்டையில் நடக்கும் ஓர் அடியாருக்கு , வணக்கத்தில் விழித்திருக்க விரும்புவது தெளிவாக நிறுவப்பட்ட அந்த இரவுகளைப் பற்றி , கவனக்குறைவாக இருப்பது மிகவும் பொருத்தமற்றது . ஏனெனில் இந்த இரவுகள் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் சமயமாகும் ,இன்னும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகவும் இருப்பவையாகும் . வர்த்தகர் வர்த்தக பருவத்தை கவனிக்காமல் இருக்கும்போது, அவர் வெற்றிபெற முடியாது.அவ்வாறான இரவுகளில் ரஜப் 1,15 மற்றும் மிஃராஜுடைய நாளான  27 ஆம் நாட்களும் உண்டு.இதில் தொழுகை நிறைவேற்றுவது பற்றி ஹதீதுகளும் உண்டு .

[ இஹ்யா உலூமித்தீன் , பாகம் 1,பக்கம் 373 ] 

இந்த உம்மத்தின் ஹதீதுக் கலை வல்லுனர்களும் , இறைநேசர்களும் கூறிய ஹதீதுகளும் , விளக்கங்களும்  மிஃராஜுடைய இரவில் விழித்திருந்து வணக்கம் புரிவது ஆகுமான செயலென்று காட்டுகின்றது . இந்த இரவில் தொழுகை புரிவது , வணக்கத்தில் ஈடுபடுவது என்பது தடைசெய்யப்படவில்லை, ஆனால் பாராட்டத்தக்கது மற்றும் விரும்பத்தக்கது மற்றும் இறை வெகுமதிக்கு வழிவகுக்கிறது. 






      

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...