Monday 3 April 2017

வலி என்பவர் யார் ?


அல்லாஹ்வின் கட்டளைகளையும் எம்பெருமானார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் போதனைகளையும் சிரமேற்கொண்டு "தீன் " எனும் சன்மார்க்க நெறியில் நடந்து ,ஷரீயத் - தரீக்கத் -ஹகீகத்  என்னும் மன்ஸில்களை படிப்படியாகக் கடந்து ,மஃரிபத் எனும் சாசுவத பேரின்ப பெருவீட்டையடைந்து நித்திய ஜீவனைப் பெற்றவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள் ஆவர் . 

எம்பெருமானார் ரஸூலே கரீம்  அவர்கள் ,"நான் கல்வியின் பட்டணம் ,அலி அதன் வாயில் " என்பதாக தமது  வாரிசாக அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ رضي الله عنه‎  அவர்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள் .

"அறிஞர்களே  நபிமார்களின் வாரிசுகள் " என்பது மற்றோரு நாயக வாக்கியம் .

அவ்வாறு மெய்யறிவின் முதிர்ச்சியால் நபிகள் நாயகம்  அவர்களது வாரிசாகக்கூடியவர்களைப் பற்றி "என்னுடைய சமூகத்திலுள்ள அறிஞர்கள் பனீ இஸ்ராயீலிலுள்ள நபிமார்களைப் போன்றாவார்கள் " என்பதாக  நபிகள் நாயகம்  அவர்கள் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள் .

"எனது சஹாபா தோழர்கள் நட்சத்திரங்களைப் போண்றுள்ளார்கள் .அவர்களுள் எவரைக் கொண்டு பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி பெற்றவர்களாவீர்கள் " என்பதாகவும் நபிகள் திலகம்   அவர்கள் உரைத்துள்ளார்கள் . [ மிஷ்காத்  ]

நபிகள் நாயகம்  அவர்களது வாரிசாகவும் ,அறிவின் வாயிலாகவும் திகழக் கூடிய அமீருல் மூஃமினீன் செய்யிதினா அலி رضي الله عنه அவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் இன்னும் வேறு பெரியார்களில் நின்றும் ஆரம்பமான ஆன்ம சந்ததியாகிய 'ஸில்ஸிலாவின்  '  தொடர்பு கொண்டு ,அனுபவ வழிகளைப் பற்றிய மார்க்கங்களைத் தெரிந்தொழுகிய காரணத்தால் , 'இல்முலதுன்னி' என்னும் இறைசார்பில் இருந்து அருளப்படும் மெய்ஞான பாக்கியம் பெற்றார்கள் .

 சென்ற காலத்தில் நபிமார்கள் முஃஜிஸாத்து  என்னும் அற்புதங்களை காண்பித்தது போல இவர்கள் கறாமத்து என்னும் அற்புதங்களை காட்டினார்கள் .நபிகள் நாயகம் ﷺ அவர்களது உத்தரவைப் பெறும் திருஷ்டி வாய்ந்தவர்களாக வாழ்ந்தார்கள் .அவர்களது ஏவல் பிரகாரம் உலகின் பல பாகங்ககளுக்கும் சென்று தீன் சுடர் ஏற்றிய மகான்களுக்கே இக்காலை அவ்லியா என்னும் பெயர் வழங்கி வருகின்றது .இவர்களே நபிகள் நாயகம்  அவர்களின் பிரதிநிதிகள் ,உண்மை வாரிசுகள் .

اَلَمْ تَرَ اِلٰى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ‌ ۚ وَلَوْ شَآءَ لَجَـعَلَهٗ سَاكِنًا‌ ۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيْلًا
'உமது இறைவன் புவியின் நிழலை எவ்வாறு பரப்பி இருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா ' (25:45) எனவும் ,

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏ 
وَّالْجِبَالَ اَوْتَادًا ۙ‏ 

'பூமியை நாம்  விரிப்பாக்கி (அதில் ) மலைகளை முளைகளாய் ஆக்கவில்லையா ?' (78:6,7)


எனவும் இறைவன் தனது பரிசுத்த திருமறையில் கூறியுள்ளான் .இவை அவ்லியாக்களை பற்றிய குறிப்பேயாகும் . இத்தகைய மெய்யடியார்களை இறைவன்  'நிழல்' (ளில்லு  ) என்றும் ;மலை' (ஜிபால் ) என்றும் வருணித்துள்ளான் .
[தப்சீர் ரூஹுல் பயான் , மொத்தம் 10 பாகங்கள் . அதில் 4வது பாகம் 199ம் பக்கமும் ,10வது பாகம் 293வது பக்கமும் நோட்டமிடுக ] 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 

" إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا، فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ، كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ عَبْدِي الْمُؤْمِنِ، يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ" 


'எனது அடியான் நபிலான வணக்கங்களை விருப்புடன் பேணிச் செய்பவனாக நீங்கா வண்ணமாகி எனது முடுக்குதலைப் பெறும் வண்ணம் நெருங்கி நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகின்றான் .நான் அவனை நேசித்துவிட்டேனேயானால் அவன் கேட்கும் காதாகவும் - பார்க்கும் கண்ணாகவும்  - பிடிக்கும் காரமாகவும் - நடக்கும் பாதமாகவும் நான் ஆகிவிடுகிறேன் ' என்று அல்லாஹுத்தஆலா கூறுவதாக ஹதீத் குத்ஸியில் வந்துள்ளது .
[ஸஹீஹ் புஹாரி ]

பர்ளான வணக்கங்களை செய்வதுடன் ,நபிலான வணக்கங்களைக் கொண்டும் ஆண்டவன் பிரியம் வைக்கும் வரையில் கலப்பற்ற விதமாக வணக்கம் செய்து அவனளவில் பனாவாகி இரண்டற்ற நிலைமையிலாகிவிட்டால் அவருடைய ,செவி,கண் ,மூக்கு ,நாவு,காய்,கால் இன்னும் இதர உறுப்புகள் அனைத்தும் ஆண்டவனது சொல் ,செயல் வெளியாகும் தானங்களாகின்றன . அவை,அவனது செயல்களைச் செய்கின்றன . ஆண்டவனுடைய நாட்டத்திலுள்ளவை அனைத்தும் அன்னார் மூலம் நிகழுகின்றன .

ஆண்டவனுடைய சக்தியானது அசலாகும் .அடியானுடைய சக்தி ஆண்டவனால் அருட்கொடையாக ,இரவலாகக் கொடுக்கப்பட்டதாகும் . அவ்லியாக்கள் அல்லாஹ்வின் அன்பில் (முஹப்பத்தில் ) மையலான காரணத்தால் இந்தச் சக்தி அவர்களுக்கு பாக்கியமானது .எனவே இறைவனது கட்டளைப்படி அஞ்சி பயந்து தக்வாச் செய்து ஜெயம் பெற்றவர்களானபடியால் அவர்கள்தான் நபிமார்களுடைய வாரிசு பாத்தியத்திற்குரிய அவ்லியாக்களாக விளங்குகிறார்கள் .

பலதரப்பட்ட அந்தஸ்துகளை உடையவர்களாக வலிமார்களை அல்லாஹ் ஆக்கி வைத்து மானிடர்களை நேரான பாதையை விட்டும் வழிதவறி நாசமடையாதிருக்கும் பொருட்டு வழிகாட்டிகளாகவும் இரட்சகர்களாகவும் அவர்களை அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...