Thursday, 4 February 2021

தன்னிகரில்லா தனிச்சிறப்புகள் கொண்ட பூமான் நபி ﷺ

ஆதார நூற்கள் : அல்லாமா ,ஷெய்கு முஹம்மது அபீஹழீருத்திம்யாதீ رضي الله عنه , நிஹாயத்துல் அமல்,பக்கம் 59 ; அல்லாமா ஷெய்கு முஹம்மது நூவீ ஜாவீ ஷாபிஈ رضي الله عنه , நூருல் ழலாம் ,பக்கம் 28 , ஹுஜ்ஜத் பத்திரிக்கை . 

 


 மறைபோற்றும் இறைத்தூதரின் மாண்புறு சிறப்புகள் :

மானிலம் தனக்கோர் மணி விளக்கெனலாய் மாநிலத்தில் வந்துதித்த பேரருள் பெருமான் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் எல்லா நபிமார்களையும் விட சிறப்புக்குரியவர்களாக விளங்கினார்கள். அவர்களது உம்மத்துகள் அனைத்து சமுதாயத்தினரைவிடவும் உயர்வானவர்களாக இருந்தார்கள் .அவற்றையெல்லாம் ஏதோ சில பதிவுகளில்  எழுதிவிடுவதால் முடிந்துவிடுவன அல்ல.எனினும் சிலதை இங்கே எடுத்தெழுதுகின்றோம் ,வாசகர்கள் படித்துப் பயனடைவார்களாக ! 

பெருமானார் அவர்களது பிறப்பு : 

" குபிரின் குலமறுத்த நெறி விளக்க 

மறுவிலா   தெழுந்த முழுமதி போல "

புனிதமிக்க ரபீயுல் அவ்வல் மாதம் 12-ஆம் நாள் ,திங்கட்கிழமை வைகறை வேலையில் அன்னை ஆமினாவின் மணிவயிற்றில் ,அப்துல்லாஹ்வின் திருமைந்தராகப் பிறந்தார்கள் .

ரஸூலுல்லாஹ் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் விருத்த சேதனம் செய்யப்ட்ட நிலையில் ,தொப்புள் சுத்திகரிக்கப்பட்டவர்களாக ,எத்தகைய அசுத்தமுமின்றி பரிசுத்தமிக்கவர்களாக - பூமியின் மீது சாஷ்டாங்கம் செய்தவர்களாக பிறந்தனர் .

தம் ஆட்காட்டி விரலை நீட்டியவர்களாகவும் ,விண்ணளவில் தம் விழிகளை உயர்த்தியவர்களாகவும் ,புன்முறுவல் பூத்த முகத்தினராகவும் ,தலைக்கு எண்ணெய் பூசப்பட்டும் ,கண்களுக்கு சுர்மா இடப்பட்டும் உலகில் காலடி எடுத்து வைத்தனர் .

பிறப்பில் புதுமை :

உலக மாந்தர்கள் அனைவரும் தாயின் மர்மஸ்தானத்தின் வழியாகத்தான் பிறந்திருக்கின்றனர்.ஆனால் குவலயத்தின் குணக்குன்றான நாயகமவர்கள் இதற்கு மாற்றமாக பாரோர் வியக்கும் வகையினில்  பிறந்தனர். 

நாயகத்தைத் தவிர உள்ள ஏனைய நபிமார்களெல்லாம் தத்தம் தாய்மார்களின் மர்மஸ்தானத்திற்கும் , தொப்புளுக்குமிடையில் தோன்றும் வலி மூலமாகப் பிறந்தார்கள் . நபிகள் கோமான் அவர்கள் இடது புறத்தின் விலா எலும்பிற்குக் கீழ் தோன்றிய ஓர் வழியாகப் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த கனமே அப்பாதை அன்னை ஆமினா உணரா வண்ணம் மூடப்பட்டது . இது பெருமானாருக்கு மட்டும் சொந்தமான ஒன்று ! எனவேதான் மாலிக் மத்ஹபின் இமாம்கள் "நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் தாயின் மர்மஸ்தானத்திலிருந்து பிறந்தவர்கள் என்று ஒருவன் கூறினால் அவனை கொலை செய்ய வேண்டும் "எனக் கூறியுள்ளனர் .

பெருமானார் பிறந்த அன்று விக்ரகங்கள் தலைகீழாக உருண்டு ஓடின , பார்சீகளால் பூஜிக்கப்பட்டு வந்த நெருப்பு அணைந்து தண்ணீர் அருவியாக ஓடியது . ஸாவா நகர ஏரியில் தண்ணீர் வறண்டு நெருப்பை கக்கியது , பாரசீக மன்னன் கிஸ்ராவின் கொட்டைகள் இடிந்து தரைமட்டமாயின ! 

ஜின்கள் ,ஷைத்தான்கள் எல்லாம் கூச்சலிட்டு வெருண்டோடின .உலகமே ஜோதி மயமாய் ஒளிவீசி இலங்கிற்று .

தன்னேரில்லாத தனிச் சிறப்புகள் : 

சாதாரண மனிதர்களுக்கு இரத்தம் ,மலம் ,ஜலம் அனைத்தும் அசுத்தமானவைகளாகக் கணிக்கப்பட்டது. ஆனால் பெருமானாரின் இரத்தம் ,மலம்,ஜலம் எல்லாம் பரிசுத்தமானவைகள்.

பெருமானாரின் உமிழ்நீர் மிக்க இன்பம் பயக்கும் மது நீராக இருந்தது. அவர்களது விழிகளிரண்டும் தூங்கும் போது மூடி   இருக்கும்  ஆனால் ;இதயம் விழித்துக்கொண்டேயிருக்கும் .கொட்டாவி அவர்களுக்கு வந்ததில்லை !உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டதில்லை !

நாயகத்தின் வியர்வை கஸ்தூரியை விட மிக்க  நறுமணம் உடையதாக இருந்தது. அவர்கள் ,உயரமான ஒருவரோடு நடந்து சென்றால் பெருமானாரே உயரமாகக் காணப்படுவர். மஜ்லிஸ்களில் அமர்ந்திருக்கும் பொழுது பெருமானரது புஜமே உயரமாகத் தோன்றும் . இறைவனது நூரினால் - ஒளியினால் படைக்கப்பட்டிருப்பதால் அவர்களது நிழல் பூமியில் விழுவதில்லை. அவர்களது  ஆடையில் ஈ உட்கார்ந்ததே இல்லை .

நோவினை செய்யும் ஜந்துக்கள் அவர்கள் பொன்னுடலை தீண்டியதில்லை. பெருமானார் பிராணிகளின் மீது பிரயாணம் செய்யும் பொழுது அவ்விலங்கினங்கள் மலம்,ஜலம் கழிப்பதில்லை. அவர்கள் பொன்னார் பாதச்சுவடுகள் நடந்து செல்லும் பொழுது பூமியில் விழுவதில்லை !பூமி மீது அண்ணலார் صَلّى اللهُ عليهِ وسلّم நடக்கும் போது பூமியை அவர்களுக்கு சுருக்கிக் கொடுக்கப்பட்டிருந்தது ! ஒரு பிடி உணவே போதுமாக இருந்தது எம் ஏந்தலருக்கு  !

விண்ணில் நீந்தும் வெண்மதியை தம் சைகை மூலம் தன்னருகே அழைத்தனர். அவர்களிடமிருந்து வெளிவரும் மலம் ,ஜலம்  முதலியவற்றை பூமி அப்படியே விழுங்கிவிடும் . அவர்கள் அமருமிடம் நறுமணம் வீசிக் கொண்டிருக்கும் . அசாத்தியமான சக்தியை கொடுக்கப்பட்டிருந்தார்கள்.

நபி ஆதம் عليه السلام அவர்கள் முதல் நபி பெருமானார் صَلّى اللهُ عليهِ وسلّم வரை வந்த அவ்ர்கள் வம்சப் பரம்பரையில் எந்த தவறும் ஏற்பட்டதில்லை ! கோபத்திலும் ,சாந்தத்திலும் ,நகைச்சுவையிலும் கூட சத்தியத்தையே உரைத்தனர் . அவர்களது கனவும் வஹியாகவே அமைந்திருந்தது. 

எழில் மிகுந்த ஏந்தல் நபி صَلّى اللهُ عليهِ وسلّم 

பேரெழிலும் , பெருங்குணத்திலும் தன்னிகரற்று விளங்கினர் ஏந்தல் நபியுல்லாஹ் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் ! ஹழ்ரத் அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் : ' ரஸுலுல்லாஹ்வை விட எழில் மிகுந்த ஒருவரை நான் கண்டதில்லை , விண்ணின் கோளங்களாம் சூரியன் ,சந்திரனைப் போன்று ஒளி வீசிக் கொண்டிருந்தார்கள் . '

இமாம் பூஸரி رضي الله عنه அவர்கள்  " அழகிய நற்குணங்களில் அவர்கள் தலைசிறந்து   விளங்கினார்கள் .அவர்களது பேரழகு விலைமதிக்க வொண்ணாதது "என்று கூறுகின்றனர் .

" நாயகத்தின் பூரண அழகும் பூமியில் வெளியாகவில்லை . ஏனெனில் அப்படி பூரணப் பொலிவுடன் பூமியில் வெளியாகுமானால் அதைக் காண நம் கண்கள் சக்தி பெறாது "என நெஞ்சம் நிறைய   கூறுகின்றனர் இமாம் குர்துபீ رضي الله عنه அவர்கள் .

அப்பழுக்கற்ற நேத்திரங்களைப் பெற்றிருந்தனர் , பெருமானார் நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் .இருள் கவிந்த இரவிலும் கூட கூரிய பார்வையினைப் பெற்றிருந்தார்கள். ஜமாஅத் தொழுகையின் அணியினை முன்னால் பார்ப்பவர்களாக இருந்தார்கள்.எனவேதான் பெருமானார் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் ; 

"மனிதர்களே ! நான் உங்களுக்குத் தொழுகையில் இமாமாக இருக்கிறேன்.ருகூவிலும் ,ஸுஜூதிலும் என்னை முந்திவிடாதீர்கள். நான் உங்களை முன்னும் ,பின்னும் பார்க்கின்றேன் " என்று உரைத்தார்கள்.

சாதாரண மனிதர்கள் கேட்க முடியாதவற்றையெல்லாம் அவர்கள் செவியேற்றனர். விண்ணை சூழ்ந்திருக்கும் அமரர்களின் உரையாடல்களைக் கூட தெளிவாகக் கேட்டனர்.

அண்ணல் நபியின் அற்புதங்கள் :

பெருமானார் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் ஒரு மனிதனின் வழுக்கைத் தலையில் கைவைத்தால் உடனேயே அத்தலையில் ரோமம் முளைத்துவிடும் . பேரீத்தமரக்குச்சியினை நட்டால் அவ்வாண்டிலேயே  மரமாகத் தளிர்த்து வளர்ந்து கனிகளைத் தருபவைகளாக ஆகிவிடும் .

இரவு நேரங்களில் புன்முறுவல் செய்தால் அவ்விடம் முழுவதும் ஒளியால் இலங்கும். அவர்களது திருநாமம் அர்ஷின் வாசலில் எழுதப்பட்டிருந்தது .அவர்களது முதல் பெயரான அஹ்மது என்ற நாமத்தை அவர்களுக்கு முன் எவருக்கும் வைக்கப்படவில்லை .

அழகே உருவாய் காட்சி வழங்கிய ஸெய்யிதினா யூசுப் நபி عليه السلام அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே அழகுமிகக் கொண்டிருந்தனர் அண்ணல் நபி صَلّى اللهُ عليهِ وسلّم !

விண்ணுலக யாத்திரையின் போது தமது இருவிழிகளாலும் அல்லாஹ்வைக் கண்டு  களித்து வசனித்து வரும் பேறு பெற்றவர்கள் ! வேறு நபிமார்கள் யாருக்கும் இப்பாக்கியம் கிடைக்கவில்லை ! 

" பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ;சூரத்துல் பாத்திஹா ;ஆயத்துல் குர்ஸி என்னும் மகத்துவமிக்க திருவசனம் , ஸுரா பகராவின் இறுதிவசனம் முதலியன நபி பெருமானாருக்கு மட்டுமே சொந்தமாக கொடுக்கப்பட்டிருக்கிறது .

திருமறையில் நபிகள் நாதரின் பெயரை இறைவன் தகுந்த பெயருடனே இணைத்துக் கூறியுள்ளான் ,மேலும் அவர்கள்து பெயரைக் கூறி அழைக்காமல் மரியாதையோடும் கண்ணியத்தோடும் 

"  யா அய்யுஹன்னபிய்யு | ஓ நபியே!"
"யா  அய்யுஹர்ரசூல் " ஓ திருத்தூதரே ! " யா அய்யுஹல்  முஸம்மில் " போர்வை போர்த்தியவரே !" என்றெல்லாம் அல்லாஹ் அழைத்துச் சிறப்புமிகச் செய்துள்ளான் .

அவர்களது இதயத்தின் நேரே பின்பக்கம் முதுகில் நுபுவத்தின் பேரொளி பொருந்திய முத்திரை இருந்தது. மற்ற நபிமார்களுக்கு அவர்கள் வலது
பக்கத்தில் நுபுவ்வத்தின் முத்திரை இருந்தது , ஏனைய நபிமார்கள் போலல்லாது இனிமை நிறைய அல்லாஹ், அண்ணலர் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களிடம் உரையாடினான். வானம் பூமி அனைத்திலுமுள்ள அகமியஇரகசியங்களை அறிந்திருந்தார்கள். ஆத்மாக்களின் நிலைகளை அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்

கணக்கற்ற அற்புதங்கள் அண்ணலாரின் வாழ்வில் நிகழ்ந்தன. முன்மாதிரியான அவர்களது வாழ்க்கையே ஒரு அற்புதமாக அமைந்திருந்தது!


மாநபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் மரணத்தின் பின்:

பேரருள் பெருமானார் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களது மறைவையொட்டி இப்பூவுலகம் முழுவதும் இருள் கவிந்து விட்டது. ஆனாலும் மண்ணறையில் இருந்து கொண்டு அந்தமாண்புறு நபிகள் உலகின் அனைத்து
நடப்புகளையும் அறிந்துத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்
பாங்கு இகாமத்துடன் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.இப்படியே ஏனைய எல்லா நபிமார்களும் தொழுதுகொண்டிருக்கின்றனர் . 

ரசூலேகரீம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது  ஜனாஸாத்  தொழுகை இமாமின்றி தனிமையாகத் தொழவைக்கப்பட்டது.மேலும் வாழ்விலும், இறப்பிலுமெல்லாம் அவர்களே உங்களுக்கு இமாமாக இருக்கிறார்கள் என ஸஹாபாப் பெருமக்கள் சொல்பவர்களாக  இருந்தார்கள் ' . 


தடுக்கப்பட்டவைகள் :- 


நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை திரைமறைவிலிருந்து மரியாதையின்றி அழைப்பதும் தூரத்திலிருந்து அவர்கள் பெயர் கூறி அழைப்பதும் ஹராம் ,தடுக்கப்பட்டவைகளாகும்.

அவர்களை ஏசியவனைக் கொலைசெய்யவேண்டும். அவர்களை ஏளனமாக எண்ணியவன் காபிராவான். அவர்களது செருப்புகளை " இது செருப்புதானே” என்றோ ரோமத்தை ரோமம்தானே '' என தரங்குறைத்து
கருதியவன் காபிராகுவான்!

எனவே  ரசூலுல்லாஹ்வைச் சிறுமைப்படுத்தும் எந்த வார்த்தையும் கூறக் கூடாது. அப்படிப்பட்ட எண்ணங்கூட மனத்தில் எழவே கூடாது.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற திருநாமத்தை தங்களது மோதிரத்தில் சித்தரித்துக் கொண்டது போல வேறு எவரும் அந்நாமத்தை சித்தரித்துக்கொள்ளக் கூடாது.

இறைவனால் இத்தனை உயர்வு அவர்களுக்குத் தரப்பட்டிருந்தது. எனவே அப்பொன்னார் மேனியராம் பூமான் நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களையும்: அவர்கள் தம் உற்றார் உறவினர், அன்புத் தோழர்கள் அனைவர்கணயும் நமது
ஊனை ' உயிரைவிட அதிகமதிகம் நேசிக்கவேண்டும்!

அவர்களை நேசித்து வாழ்வதில்தான் ஈருலக  நற்பாக்கியங்களும் அடங்கி இருக்கிறது ! 

உயர்சமுதாயம் உம்மத்தே முஹம்மது صَلّى اللهُ عليهِ وسلّم:

உலகில் உண்டான அனைத்து  சமுதாயங்களிலும் நமது இஸ்லாமிய சமுதாயம் உயர்வும்,மதிப்பும்  மிக்கதாக இருக்கிறது. கண்ணியத்தையும்,பெருமதிப்பையும் அல்லாஹ் கொடுத்து சிறப்பித்துள்ளான் . 

 நபி ஆதம் عليه السلامஅவர்கள், " பெருமானார் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களின்
உம்மத்துகளுக்கு எனக்குக் கொடுக்கப்படாத நான்கு காரியங்கள்
அல்லாஹ் அருட்கொடைகளாக் கொடுத்திருந்தான்.

1. என்னுடைய பாவமன்னிப்பு மக்கா நகரில் கடமையாக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எந்த இடத்திலும் பாவமன்னிப்புக் கேட்கலாம்.

2. இறைவனது ஆணைக்கு நான் ஒரேயொரு மாற்றம் செய்தபோது என் ஆடை நீக்கப்பட்டு நிர்வாணகோலத்தில் ஆனேன். ஆனால் அவர்கள் எத்தனையோ
பாவங்கள் செய்தும் அவர்கள் அவ்வாறு நிர்வாணமாக்கப்படவில்லை.

3.எனது பாவத்தின் காரணமாக நானும்
எனது மனைவியும் பிரிக்கப்பட்டோம். 

4. சுவர்க்கத்தை விட்டு பூமிக்கு இறக்கப்பட்டேன்' ' என்று கூறுகிறார்கள்.

பனூ இஸ்ராயீல்கள் காலத்தில், அவர்கள் பாவம் செய்தால் அவர்களுக்கு சுவையான ஆகாரம் ஹராம- விதிக்கப்பட்டிருந்தது- பாவம் செய்த மனிதனின் வீட்டு வாசலில் அவன் பாவம் செய்தவன்  என்று எழுதப்பட்டிருக்கும், நபி பெருமானாரின் உம்மத்துக்கு அவ்வாறில்லை. 

 கஃபத்துல்லாஹ்வை தொழுகையில் முன்னோக்குவது ;  அமரர்களது அணிவகுப்பைப் போன்று  தொழுகையில் அணிவகுத்து நிற்பது , வெள்ளிக் கிழமை உம்மத்தவர்களில் ஏழைகளுக்கு பெருநாளாக அமைந்திருப்பது, ஐவேளைத் தொழுகைகளில் ஜமாஅத் கூட்டுத் தொழுகை நடத்துவது ;இரு பெருநாட்தினங்களின் சிறப்புத் தொழுகை ; ரமலான்,துல்ஹஜ்  9 வது தினமான  அரபாத் தினத்தன்று நோன்பு வைத்தல் போன்றவை இச்சமுதாயத்தவர்களின் தனிப்பெரும்  உயர்வுகளாகும்.

முஹர்ரம் மாதம் 10 வது தினத்தன்று நோன்பு வைப்பது ஒரு வருடத்தின் சிறிய  பாவங்களுக்கு மன்னிப்பாக-பாவ பரிகாரமாக உம்மத்தே முஹம்மதிய்யாவுக்கு அமைக்கப்பட்டுள்ளது !

 முந்தைய சமூகத்தார்கள் அவரவர் வேதங்களில் அல்லாஹ்  "யா அய்யுஹ் மஸாகீன்- ஏழைகளே " என அழைத்தான். ஆனால் திருக் குர்ஆனில் முஸ்லிம்களை  " யாஅய்யுஹல்லதீன ஆமனூ"  விசுவாசங் கொண்டவர்களே! என கண்ணியமாக அழைத்துள்ளான்.

நபி மூலாعليه السلام  அவர்களுக்கு இறக்கப்பட்ட தௌராத்தில் பெருமானார் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது உம்மத்தின் சிறப்புகளைக் கண்டபோதும்;

லௌ ஹுல் மஃபூள் எனும் மூலப் பலகையில் இச்சமுதாயத்தவரின் மகோன்னதத்தைப் பார்வையிட்ட போதும்;

நபி மூஸா عليه السلام அவர்கள்" இறைவா! அவர்களை
எனது சமுதாயத்தில் சேர்த்தருள் " என வினவினார்கள்! அதற்கு அல்லாஹ் " அஹ்மத் நபியின் உம்மத் அவர்கள் " என பதிலிறுத்தான். அதற்கு நபியவர்கள் “ என்னையும் அவ் உம்மத்தில் ஒருவராகச் சேர்த்து அருள்
புரிவாயா" என வேண்டி நிற்க, அல்லாஹ் " மூஸாவே ! உம்மை நான் நபியாகவும் என்னோடு உரையாடுபவராகவும் ஆக்கிவிட்டேன் . எனவே அதை  நீர் ஏற்று நன்றியுடன்  மகிழ்ந்திருப்பீராக" என பதில் கொடுத்தான்

இத்தனை சிறப்பும் உயர்வும் நபிபிரான் அவர்களுக்கும் அவர்களது உம்மத்துகளுக்கும் இருக்கிறது .

எனவேதான் இப்பெருமகனாரின் வாழ்க்கையை கூறும்  முகத்தான் அல்லாஹ் தனது அருள்மறையிலே :

" நிச்சயமாக  உங்களுக்கு ரஸுலுல்லாஹ்வின்  வாழ்க்கை வரலாற்றில் சிறப்புக்குரிய ,நல்லொழுக்கமிக்க,நற்குண ,நற்பண்புகள் அமைந்திருக்கின்றன "என்று கூறுகின்றான் .

 ஆகவே நாம் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ அவர்களது வாழ்க்கை தத்துவங்களை வாழ்வின் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வேனேன்று அண்ணல் நபியவர்களை உள்ளத்தாலும் , உறுப்புகளாலும் பரிபூரணமாக பின்பற்றி நாளெல்லாம் அவர்களுடைய பேரன்பையும் ,பேரருளையும் நல்லாசியையும் ஈருலகிலும் பெற்று உய்வடைவோமாக ! ஆமீன் .


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...