வணக்கவாளியுடைய எல்லா வணக்கங்களையும் விட அவ்லியாக்களின் பேரில் உகப்பு (முஹப்பத் ) வைப்பதானது மிகப் பெரிய வணக்கமாக இருக்கும் .
ஆகவே ,அல்லாஹ் உடைய அவ்லியாக்களை எவர்கள் உகப்பு வைக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையே உகப்பு வைத்தவர்கள் . எவர்கள் அல்லாஹ்வை உகப்பு வைப்பார்களோ அவர்களை அல்லாஹ்வும் உகப்பு வைப்பான் .
அதாவது ,அல்லாஹ்வின் நேசர்களான அவ்லியாக்களை நேசிப்பதானது அமல்களிலெல்லாம் பெரிய தவ வணக்கமாகும் .இந்த அடிப்படையிலே தான் மஹான்களெல்லாம் அல்லாஹ்வின் அவ்லியாக்களை உகப்பு வைத்து நேசித்து தாங்களும் அவ்லியாக்கள் ஆனார்கள் என்பதாம் . இவ்வாறாக , குத்பு ஷஃறானீ رضي الله عنه அவர்கள் 'தபகாத்துல் குப்றா' , 1வது பாகம் ,77வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
ஒரு நாட்டு அரபி , நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் சமூகம் வந்து யா ரஸூலல்லாஹ் ! கியாமத்து நாள் எப்போது ? என்று கேட்ட போது ,கண்மணி நாயகம் அவர்கள் அவரை நோக்கி அதற்காக நீ என்ன சேகரித்து வைத்திருக்கிறாய் ? என்று வினவினார்கள் .
அப்போது அவர் , "அல்லாஹ்வையும் , அல்லாஹ் உடைய ரஸூலையும் உகப்பு வைத்திருக்கிறேன் .மற்றபடி நான் தொழுகை நோன்பு இவற்றில் அதிகம் சேகரம் செய்ய்யவில்லை " என்றார் .
அப்போது நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் (அல் மர்உ - மஅமன் அஹப்ப ) "மனிதன் யார் யாரை உகந்தானோ அவர்களோடேயே ஆகியிருப்பான் " என்று கூறினார்கள் .
"எனது அவ்லியாக்கள் என்னுடைய பரிவட்டத்திற்குள் இருக்கிறார்கள் . என்னையன்றி வேறு யாரும் அறிய மாட்டார்கள் " என்று இறைவன் கூறுவதாக ஹதீது குத்ஸியில் வருகின்றது .
அவ்லியாக்கள் .குத்புமார்கள் உலகத்திற்கு முளைகளாவர் .
அல்லாஹ்வின் பாதையில் ஆவிகளை தத்தம் செய்திருக்கக் கூடிய நாதாக்களான அவ்லியாக்கள் வபாத்திற்குப் பிறகும் ஹயாத்துள்ளவர்கள் எனத் திருமறை சான்று பகருகின்றது . அன்னார்களே ஹகீகத்தில் உலகத்தை கண்காணிப்பவர்கள் என்று நாயக வாக்கியம் போதிக்கின்றது .
உலகின் எந்த கோலத்திலிருந்தும் மானிடர் எந்த காலத்திலும் இகபரத்திற்காக நற்கருமங்களைக் குறித்து அவர்கள் பால் உதவி தேடல் கூடும் . அவற்றை நிறைவேற்றி வைக்கும் சக்தியை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்துள்ளான் . இம்மாபெரும் தத்துவம் யுகமுடிவு வரை அவர்களிடத்தில் இருக்கவே செய்யும் . அவர்களது திருநாமங்கள் ஆபத்து காலத்தில் அருமருந்தாயும் , ஆனந்த சமயத்தில் அமிர்தமாயும் இருக்கின்றன .
"சிறிது நேரம் அவ்லியாக்களுடைய சகவாசத்தில் இருப்பது , முகஸ்துதியற்ற நூறு வருட வணக்கத்தை விட மேலானது " என்று இமாம் ஜலாலுத்தீன் ரூமி رضي الله عنه அவர்கள் 'மஸ்னவி ஷரீபில் ' மொழிந்துள்ளார்கள் .
" வலியுல்லாஹவை நேசிக்கின்றவன் , அவர்களது திருச்சன்னிதானத்தில் இருக்கையில் அவர்களை மறந்து ஒரு வினாடியேனும் இருக்காதே ! ஜாக்கிரதை ! " என்று ஷெய்கு ஸஃதீ ஷீறாஸி رضي الله عنه அவர்கள் 'போஸ்தானில்' எச்சரித்துள்ளார்கள் .
"உயிரோடு இருக்கையிலோ ! உலகத்தை விட்டு மறைந்த பின்னரோ அல்லாஹ்வின் வலி இடத்தில் சொற்ப நேரமாயினும் இருப்பது அமல்களில் மேலானது " என்று ஸாலிஹீன்களில் சிலருக்கு நபி பெருமானார் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் கனவில் காட்சி அளித்து கூறியுள்ளார்கள் என்பதாக அல்லாமா ஷஹாபுத்தீன் இப்னு ஷுஜாயி رضي الله عنه அவர்கள் 'ரிஸாலா - இதுபாத்து -கராமாத்தில் - அவ்லியா ' நூலில் ,232வது பக்கத்தில் சொல்லியுள்ளார்கள் .
மேலும் இதை 'ஹதீகத்துன் -னதிய்யா - பீ ஷரஹில் தரீக்கில் முஹம்மதிய்யா ' என்ற நூலின் 2ஆம் பாகம் , 81வது பக்கத்தில் அல் இமாம் ஷெய்கு அப்துல் கனி நாபிலிஸி رضي الله عنه அவர்கள் அறிவித்துள்ளார்கள் .
ஆகவேதான் ,உலகோம்பும் உத்தமர்கள் எல்லோரும் குத்புமார்கள் உடைய இல்லங்களின் வாயில்களைக் காத்துக் கிடந்தனர் . மேலும் .காத்துக் கிடக்கின்றனர் .
இத்தகைய புனிதமான மஹாத்மாக்களைத் தான் ஆத்ம ஞானமற்ற அறிவிலிகள் சிலர் தூற்றுகின்றனர் .
ஸஹீஹ் புஹாரியில் ,ஹழ்ரத் அபூஹுரைரா
رضي الله عنه அவர்களைத் தொட்டும் ரிவாயத்து வந்துள்ளது : -
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَىَّ عَبْدِي بِشَىْءٍ أَحَبَّ إِلَىَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَىَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطُشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَىْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ، يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ ".
"எவன் ஒருவன் எனது வலிமார்களுடன் பகைமைச் செய்வானோ அவன் என்னுடன் போர் செய்வதற்கு தயார் செய்து கொள்ளட்டும் " என்று அல்லாஹ் கூறியதாக நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் திருவுளமானார்கள் .
புத்தியுடைய ஒவ்வொரு மூஃமின் மக்கள் அறியக் கூடிய விஷயமாவது :
" அவ்லியாக்களை இன்கார் செய்வதைக் கொண்டு ஹலாக்கு (நாசம் ) உடைய பள்ளத்தில் விழ வேண்டாம் . ஏனென்றால் அந்த இன்கார் ஆளைக் கொல்லக் கூடிய விஷம் . அது உங்களை கொன்று விடும் . இதை எங்களுக்கு முன்னோர்கள் காலத்திலும்,எங்களின் காலத்திலும் பிரத்தியட்சமாக கண்டிருக்கிறோம் " என்று இமாம் இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه அவர்கள் தங்களுடைய பத்வாவில் தீர்ப்புச் செய்துள்ளார்கள் .
" எவனொருவன் கெட்ட எண்ணத்தைக் கொண்டு அவ்லியாக்களை நோவினை செய்வானேயானால் திட்டமாக அவன் ஷரீயத்தின் (தாயிரா ) எல்கையை விட்டும் வெளியே புறத்தில் ஆகிவிட்டான் " என்று ஷெய்குல் அக்பர் ஹழ்ரத் முஹையத்தீன் இப்னு அரபி رضي الله عنه அவர்கள் சொல்லியுள்ளார்கள் .
அவ்லியாக்களையும் , ஆலிமீன்களான உலமாக்களையும் பகைமை கொள்வதாகிறது சின்ன விஷயம் அல்ல , மிகுதம் பேர்களிடத்தில் அது குப்ரு என்பதாகவும் பயப்படப்படுகிறது .
அவ்லியாக்களை நாவைக் கொண்டோ ,கல்பைக் கொண்டோ , அந்த அவ்லியாக்கள் ஹயாத்தானவர்களோ அல்லது வபாத்தானவர்களாகவோ இருந்தாலும் சரியே ,எப்படி ஆனாலும் அவர்களை இன்கார் செய்வதாகிறது ,சந்தேகமின்றி குப்றாக இருக்கும் . மத்ஹபுகளின் தேட்டரவுப்படி முஸ்லீம்களின் இஜ்மாவைக் கொண்டு காபிராக இருக்கும் . ஏனென்றால் அவன் ,தீனுல் இஸ்லாத்தையும் ,ஷரீயத்தே முஹம்மதியாவையுமே இன்கார் செய்து விட்டான் என்பதே ! .இவ்விதம் ஷெய்கு அப்துல் கனி நாபிலிசி رضي الله عنه அவர்கள் 'ஹதீகத்துன்னதிய்யா ' ,1வது பாகம் ,165வது பக்கத்தில் விரிவாகக் கூறியுள்ளார்கள் .
இதுபோலவே 'ஷரஹு ஜவாஹிரின் நுஸுல் ' , 2வது பாகம் ,59வது பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .
எனவே அவ்லியாக்களோடு மோதத் துணிகின்றவர்கள் இத்தகைய பயங்கர எச்சரிக்கைகளை கவனித்து நன்மையைநாடி உண்மையை உணர்ந்து கொள்ளட்டும் .
ஏகவல்ல இறைவனே ! உனது நேசத்திற்கு உகந்த நல்லடியார்களை நெஞ்ச மஞ்சாது நிந்திக்கும் இந்த நயவஞ்சகர்களுக்கு நீயே நல்ல புத்தி கொடுக்க வேண்டும் .
அன்பர்களே ! இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள் செய்த கடும் தவங்களென்ன ! இபாதத்துகளென்ன ! அவர்களைக் கொண்டு இவ்வையகம் அடைந்திருக்கும் அதிர்ஷ்டங்களென்ன ! நல்ல நஸீபுகலென்ன ! இத்தகைய பெறுவதற்கரிய பாக்கியங்களை அடைந்ததற்கு நாம் யாது கைமாறு அளிக்க வல்லோம் ! என்பதை நினைத்து , நெஞ்சுருகி மனமார இறைவனுக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டி இருக்க தூற்றுவதென்ன நியாயம் ! அது மிகப் பெரிய அநீதம் ! இத்தகைய அநியாயக்கார சிற்றறிவு உடையவர்களை மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி رضي الله عنه அவர்கள்
'மஸ்னவி ஷரீபில் ' குறிப்பிடுகின்ற வழுக்கை தலையுடைய கிளிக்கு ஒப்பாகத் தான் சொல்ல வேண்டும் . எவ்வாறெனில் :-
பலசரக்கு கடையொன்று வைத்திருந்த வியாபாரி கிளியொன்று வளர்த்தான் . அது ,இனிய குரலோசையும் , பஞ்சு வர்ண நிறமும் பெற்றிருந்தது . பேசும் தன்மையுள்ளஅந்த கிளி அவனது கடைக்கு காவலாகவும் இருக்கும் . வாடிக்கை காரர்களிடம் விகடமாகவும் பேசும் . ஒருநாள் கடைக்காரன் வீட்டிற்கு போயிருந்த சமயம் கடைக்குக் காவலாய் இருந்தது கிளி .
பூனையொன்று எலியைப் பிடிப்பதற்கு திடீரென கடைக்குள் குதித்தது . அதைக் கண்டதும் உயிர்க்கஞ்சி கிளி பறந்து ஓடியது . அதனால் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாதாம் எண்ணெய் சீசாக்கள் கீழே விழுந்து உடைந்தன .
கடைக்காரன் திரும்பி வந்தான் . சீசாக்கள் உடைந்து எண்ணெய் கீழே கொட்டியிருப்பதைக் கண்டவன் ,ஆத்திரம் கொண்டு கிளியின் தலையில் அடிகள் பல கொடுத்தான் . அதனால் அதன் தலை வழுக்கையாயிற்று . பேச்சையும் அது மறந்து போய் விட்டது . இந்நிலையைக் கண்ட கடைக்காரன் கைசேதப்பட்டு தன் நிலையை தானே நொந்து கொண்டான் . அது மீளவும் மதுர மொழி பேசாதா என்று ஏங்கி நின்றான் .
நாட்கள் சில கடந்தன . கம்பளி ஆடை அணிந்த பரதேசியொருவர் ,வழுக்கைத் தலையுடன் அவ்வழியே சென்றார் . அவரைக் கண்டதும் கிளி உரக்கக் கத்தி , " ஓ வழுக்கைத்தலையாரே ! யாது காரணத்தால் நீரும் வழுக்கை இனத்தைச் சேர்ந்தீர் . என்னைப் போலவே சீசாவை உடைத்து எண்ணெய்யை கொட்டி அதன் மூலம் இந்த கதி அடைந்தீரோ ? " என்று பேச ஆரம்பித்தது .
கிளியின் இத்தகைய ஊகத்தைக் கண்டு அங்கிருந்த யாவரும் நகைத்துச் சிரித்தனர் . ஏனெனில் கம்பளித்துணி அணிந்துவரை அது தன்னைப் போலவே பாவித்ததால் .
மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி رضي الله عنه அவர்கள் மேலும் அறிவுறுத்துகின்றார்கள் . அது வருமாறு : -
" பரிசுத்த மஹான்களின் செயல்களை உனது சிற்றறிவு கொண்டு முடிவு செய்து விடாதே ! 'ஷேர்' ,'ஷீர் ' என்று வரைவதில் எழுத்துக்கள் (ஷீன் , ஏ , ரே ) ஒத்து இருந்த போதிலும் அர்த்தத்தில் வித்தியாசம் உண்டு . மனிதனை அடித்துக் கொண்டு புசிக்கும் புலிக்கும் ஷேர் எனப்படுகின்றது . அவன் குடித்துப் பருகும் பாலுக்கு ஷீர் என்று சொல்லப்படுகின்றது . மேற்சொன்ன இந்த கிளியைப் போல புத்தியைக் கொண்ட குறைமதியாளர்கள் தப்பிப்பிராயம் கொண்ட காரணத்தாலேயே உலகத்தினர் வழி பிசகிப் போய் விட்டனர் .
அவ்லியாஉள்ளாக்களின் செயல்களை நல்லறிவு கொண்ட சிலரே விளங்கிக் கொண்டார்கள் . துற்பாக்கியவான்களான மற்றவர்களுக்கு அது பற்றிய உண்மை அறிவுகள் உண்டாகி இருக்கவில்லை . ஆதலின் அவர்களின் பார்வைக்கு நல்லதும் .கெட்டதும் ஒன்று போலவே தோன்றின . தங்களின் தவறான எண்ணத்தின் காரணத்தால் அன்பியாக்களை தங்களுக்கு இணையாக்கினார்கள் . அவ்லியாக்களை தங்களைப் போலவே சமமாக எண்ணிக் கொண்டார்கள் .
நாமும் மனிதர்கள் தாம் ,அவர்களும் மனிதர்கள் தாம் எனவும் ,நாமும் உண்ணுகின்றோம் , உறங்குகின்றோம் . அவர்களும் உண்ணுகிறார்கள் ,உறங்குகிறார்கள் எனவும் சமப்படுத்தி தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள் . அவர்களுக்கும் ,தங்களுக்கும் மலை போல வித்தியாசங்கள் உண்டாகி இருந்ததை அவர்கள் குருட்டுத் தன்மையால் அறிந்திருக்கவில்லை .
பாருங்கள் ! குளவி ,தேனீ இந்த இரு ஜந்துக்களும் ஒரே இடத்திலிருந்தே - அதாவது மலர்களிலிருந்தே மதுவை அருந்துகின்றன . ஆனால் குளவியிலிருந்து விஷ எச்சிலும் ,தேனீயிலிருந்து மதுரமான தேனும் உற்பத்தியாகின்றன .
இருவகை மான்கள் புல்லையும் ,தண்ணீரையும் தான் அருந்துகின்றன . ஒரு வகையிலிருந்து வெறும் புழுக்கையும் ,விட்டையும் மற்ற வகையிலிருந்து கஸ்தூரியும் உண்டாக்கவில்லையா ?
இருவித நாணல்கள் ஆற்றங்கரையிலிருந்து ஒரே வித தண்ணீரை தான் அருந்துகின்றன . அவற்றுள் ஒன்று மூங்கிலாகின்றது . மற்றது இன்பரசத்துடன் கரும்பாகின்றது .இவ்விதம் எத்தனையோ உதாரணங்கள் கூறலாம் .
இன்னும் பாருங்கள் ! ஒருவன் உண்ணுகின்றான் . அவனில் நின்று வெறும் அசுத்தமே உருவாகின்றது . மற்றோருவரும் உண்ணுகிறார் . அது முற்றிலும் இறைவனின் ஜோதியாக (நூர்) மாறுகின்றது . தீயவன் உண்ணுகின்றான் . அதிலிருந்து கோபம் , பொறாமை முதலியன உண்டாகின்றது . நல்லவர் உண்ணுகிறார் . அதன் மூலம் இறை ஜோதிப் பிரகாசமும் , ஞானமும் ,தெய்வீகக் காதலும் உண்டாகின்றன .
நற்கருமங்கள் புரியும் நல்லவர் சுத்தமான ,வளமான நிலமாக இருக்கிறார் . தீய காரியங்களில் தலையிடும் கெட்டவர் உபயோகமற்ற உவர் நிலமாக இருக்கிறார் . முந்தியவர் பரிசுத்தவானாக இருக்கிறார் .பிந்தியவர் துஷ்டராக ,அசுரராக இருக்கின்றார் . தோற்றத்தில் அவ்விருவருடைய உருவமும் ஒன்று போலவே ஓத்திருந்த போதிலும் என்ன ?
மேலும் பாருங்கள் ! மதுரமான நல்ல தண்ணீரும் , கரிப்பான உப்புத் தண்ணீரும் பார்வைக்கு ஒன்று போலவே இருக்கின்றன . ஆனால் ,நாவில் வைத்து ருசி பார்த்தற்கப்பால் தான் இரண்டிற்கும் வித்தியாசம் தெரிய வருகின்றது . அனுபவித்து அறிபவனைத் தவிர வேறு எவரும் அந்த நீரின் தன்மையை அறிய மாட்டான் . அப்படிப்பட்ட அனுபவசாலிகளையே நீ தேடி அடைதல் வேண்டும் . ஏனெனில் , அவர்களே கசப்பு நீரையும் , மதுர நீரையும் பிரித்தறிவார்கள் . பதார்த்தங்களின் சுவையை ருசித்தறிபவரைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் . தேனையும் ,மெழுகையும் எப்படி வேறுபடுத்தி அறிய முடியும் ? " .
இவ்வாறு மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி رضي الله عنه அவர்கள் கதை ரூபமாய் போதனை செய்துள்ளார்கள் .
யாவரும் நன்கு விளங்கி அறியும் பொருட்டு ஓர் உதாரணம் கூறுகின்றோம் .சாதாரண இரும்பை யாரும் கையால் தொடலாம் . அதனால் எத்தகைய தீங்கும் இல்லை . ஆனால் அதை நெருப்பில் போட்டாலோ அதற்குச் சூடுண்டாகி சிவந்து அதுவும் நெருப்பாகவே காணப்படுகின்றது . தனது சுய நிறமாகிய கருமையை போக்கி நெருப்பின் நிறமாகி செம்மையைப் பெறுகின்றது . அது சமயம் எவரும் அதை தொட முடியாது . தொட்டாலோ கரித்துப் போடும் .
இவ்வாறே அல்லாஹ்வின் ஜலாலியத் என்னும் நெருப்புத் தன்மையைப் பெற்ற அவ்லியாக்கள் முதலில் சாதாரண மனிதர்களாய் இருந்த போதிலும் அவனின் குணத்தைக் கொண்ட பிறகு தனிப்பட்ட மகத்துவமும் ,மாண்பும் , சக்தியும் பெற்ற மேதாவிகளாகி விடுகின்றனர் .
எனவே குரான் ,ஹதீஸ் ,இஜ்மா ,கியாஸ் ஆகியவற்றைக் கொண்டு மேலே ஒருவாறு கூறியுள்ளோம் . அவற்றுக்கு ஆதாரமாக முஃதபரான கிரந்தங்களில் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளோம் .
குரான் ,ஹதீஸ் ,இஜ்மா ,கியாஸ் இவற்றுள் சிலதை ஒப்புக் கொண்டு சிலதை தள்ளுவானேயானால் அவன் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டும் நீங்கியவனாவான் .
"நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் காலத்தில் ஒரு விடுத்தம் நடந்த ஸுன்னத்தாக்கவிருந்தாலும் சரி , பல விடுத்தம் நடந்த
ஸுன்னத்தாக்கவிருந்தாலும் சரி ,அவற்றுள் ஒன்றை லேசாகக் கண்டாலும் ,இன்கார் செய்தாலும் , குப்ரு உண்டாகி விடுமென்று மார்க்கத்தில் ஏற்பட்டிருக்க , ஓர் விடுத்தம் நடந்த ஸுன்னத் தானே என்று சொல்வதுமின்றி , அந்த ஸுன்னத்தை தொடராமல் இன்காரும் செய்கின்றனர் . இது மிக மிக ஆச்சரியம் ! " என்று மவ்லானா ஷாஹ் முஹையத்தீன் ஸாஹிப் வேலூரி
رضي الله عنه அவர்கள் 'பஸ்லுல் கிதாப் ' ,82வது பக்கத்தில் தெளிவாக கூறியுள்ளார்கள் .
"எனது உம்மத்துகள் பிற்காலத்தில் எழுபத்தி மூன்று கூட்டங்களாகப் பிரிவார்கள் . அதில் எழுபத்திரண்டு கூட்டங்கள் நரகவாதிகள் . ஒரு கூட்டத்தார் மாத்திரம் ஈடேற்றமடைவார்கள் " என்று நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் கூறிய பொழுது ," அந்த ஒரு கூட்டத்தார் யார் ? " என்று வினவப்பட்டது .
"நானும் எனது அஸ்ஹாபிகளும் எந்த ஒன்றின் பேரில் தரிக்கப்பட்டிருக்கின்றோமோ அந்த ஒன்றின் பேரில் தரிப்பட்டவர்களாக இருக்கும் " என்று பெருமானார் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் விளக்கப்படுத்தினார்கள் . (திர்மிதி - இப்னுமாஜா - அபூதாவூத் )
மேற்குறிப்பிட்டபடி , நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களும் ,அவர்களின் ஸஹாபா பெருமக்களும் எந்தவொன்றின் மேல் தரிப்படிருக்கிறார்களோ ,அந்த ஒன்றின் மேல் தரிப்பட்டவர்கள் தான் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்தாராக இருக்கும் . இவர்கள் தான் அந்த 73 கூட்டத்தினரில் ஈடேற்றம் பெற்ற கூட்டத்தாராக இருக்கும் .
மேலும் ,சன்மார்க்க தேர்ச்சி பெறாத சில அவாமிகளான ஜனங்கள் தப்ஸீர் ஞானமோ , ஹதீதின் தாத்பரியமோ விளங்காமல் தமது மனத்திற்குத் தோன்றிய பிரகாரமெல்லாம் குரான் ஷரீபின் ஆயத்துகளுக்கு ஸபபு ,நுஸுல் தெரியாமல் தப்பும் தவறுமாக பொருள் கூறி மேற்கோள் காட்ட முற்பட்டிருக்கின்றனர் .
"குர் ஆனுக்கு தனது சொந்த யோசனையைக் கொண்டு வியாக்கியானம் செய்வானேயானால் அவன் காஃபிராகி விட்டான் " எனவும்
" எவன் தன்னுடைய சுய அறிவைக் கொண்டு (தனது நோக்கத்தின்படி ) குர்ஆனுக்கு வியாக்கியானம் செய்கிறானோ அவன் தன்னுடைய இடத்தை நரகத்தில் தேர்ந்து எடுத்துக் கொள்வான் " என்று திருத்தூதர் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள் .
மார்க்கம் இன்னதெனத் தெரியாதவர்கள் நாங்களும் இஸ்லாத்திற்காக சேவை செய்கின்றோம் , இஷாஅத்துச் செய்கின்றோம் எனப் பறைசாற்றிக் கொண்டு ,குரான் ஆயத்துகளுக்கு தாறுமாறாக மனதில் தோன்றியபடியெல்லாம் அர்த்தம் கூறி , அனர்த்தம் செய்து ,உண்மையான உலமாக்களையும் , ஆரிபீன்களையும் தூஷணிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர் .அவர்களுடைய வேஷம் வெளுத்து ,அவர்களின் துவேஷச் செயலை உலகுக்கு உணர்த்த இவ்வெளியீடு (ஹிதாயத்துல் அனாம் நூல் ) உதயமாகி இருக்கின்றது .
குரானுக்கு ளாஹிர் ,பாத்தின் (உள்ளரங்கம் ,வெளிரங்கம் ) இருவிதப் பொருளுண்டு . இவ்விரண்டையும் கடைபிடித்து ஒழுகி நடப்பவர்களே உண்மை உலமாக்கள் ஆவர் . மேலே ,இருவித அபிப்பிராயங்களையும் காண்பித்திருப்பதால் விளங்கிக் கொள்ள சக்தியற்றவர்கள் குதர்க்கம் செய்யாது , ளாஹிர் -பாத்தின் இரண்டையும் அறிந்த உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .
கிருபையுள்ள அல்லாஹு த்தஆலா நம்மனைவரையும் அந்த வழிகெட்ட எழுபத்திரெண்டு கூட்டங்களில் நின்றும் விலக்கி , ஈமானை இழக்காமழும் ,குப்ரை நெருங்காமலும் காப்பாற்றி வெற்றி பெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்திலியே நிலைபெறச் செய்து ,ஹுஸ்னுல் காத்திமாவான நல்ல முடிவைத் தந்தருள்வானாக .ஆமீன் !
மேலும் அல்லாமா ,ஆரிபுபில்லாஹ் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ பரூஸீ رضي الله عنه அவர்கள் ,'தப்சீர் ரூஹுல் பயான்' ,4வது பாகம் , 137வது பக்கத்தில் ஆண்டவன் பால் பிரார்த்திக்கும் துஆவுடன் நாம் பூர்த்தியுறச் செய்கின்றோம் .
" அவ்லியாக்களையும் , அவர்களது கபுறுகளையும் ஜியாரத்துப் புரிவதையும் ,அவர்கள் பால் உதவி தேடுவதையும் இன்கார் செய்கின்றவன் எடுத்தெறியப்பட்ட ஷைத்தானைப் போலாவான் . ஆகையால் ,இத்தகைய இன்கார்களில் நாங்கள் மோசம் போவதை விட்டும் பாதுகாத்துக் கொள்ளும்படி ,யா அல்லாஹ் ,அடியார்களாகிய நாங்கள் உன்னிடம் கார்மானம் தேடுகின்றோம் " .
ஆமீன் ! ஆமீன் ! யா றப்பல் ஆலமீன் !
No comments:
Post a Comment