கம்பத்தில் பறக்கும் கொடிக்கு அலம் - நிஷான் - ஜண்டா என்றெல்லாம் கூறப்படுகின்றது . நபிகள் பெருமான் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் போர்முனைகளுக்கு கொடியுடன் சென்றதாகவும் , ஸஹாபாக்கள் யுத்தங்களுக்கு செல்கையில் கண்மணி நாயகம்
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் கொடிகள் கொடுத்தனுப்பியதாகவும் ,வெற்றிகளுக்குப் பிறகு கம்பங்களில் அந்த கொடிகளை பறக்க விட்டதாகவும் ,மக்கா நகரை பத்ஹு செய்து பிடித்ததும் நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் ஸஹாபாக்கள் சகிதம் வெள்ளைக் கொடியுடன் பிரவேசித்ததாகவும் 'இப்னு மாஜா' வில் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்பட்டிருப்பதுடன் மிஷ்காத் ஷரீபிலும் காணப் படுகின்றது .
ஹரமைன் ஷரீபைனில் குலபாயே ராஷிதீன்களின் உரூஸ் நாட்களில் கொடிகள் ஏற்றப்படுவதாக, பிரபல்ய உலமாக்கள் கையெழுத்திட்ட 'பத்வா - நூர் - தஹகீக்காத் ' திலும் , 'துல்பஹார் ஹைதரிய்யாவிலும் ' காணப்படுகின்றது .
"வலியுடைய கப்ரு என்று அறிந்து யாவரும் ஜியாரத்துச் செய்வார்கள் என்ற எண்ணத்துடன் கொடி மரம் நட்டுவது ஆகும் . அதற்காகச் செலவு செய்வது வீணில்லை " என்று இமாம் தாஜுத்தீன் இப்னு ஜக்கரிய்யா நக்ஷ்பந்தி رضي الله عنه அவர்கள் இயற்றிய ' கஷ்புல் உலமா பீ பயானி பிர்கா ஹாதிஹில் உம்மா ' எனும் நூலில் வருகின்றது என்று காயல் பதியில் பிறந்து கீழக்கரையில் அடங்கி இருக்கும் மகானுபாவர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்ற அல்லாமாதுல் பாழில் , ஷெய்கு ஸெய்யிது முஹம்மது காதிரி رضي الله عنه அவர்கள் , 'கனீமதுஸ் ஸாலிகீன்' என்ற நூலில்
வரைந்துள்ளார்கள் .
குத்புல் அக்பர் ஸெய்யிதினா அபுல் ஹசன் ஷாதுலி رضي الله عنه அவர்கள் வாகனத்தில் அமர்ந்து செல்லுங்கால் , அருள் தங்கிய பெரியார்களும் ,ஐசுவரியம் படைத்த அதிபர்களும் அவர்களை சூழ்ந்து செல்வார்கள் . கொடிகள் அவர்களது தலைக்கு மேல் பிடிக்கப்படும் . " குத்பை பார்க்க நாடுகிறவர் ஷாதுலி நாயகம் رضي الله عنه அவர்களை பற்றிப் பிடித்துக் கொள்வீராக " என்று கூறும்படி கட்டியங் கூறுகிறவர்களுக்கு உத்தரவு செய்வார்கள் என்று ,'ஜாமிஉல் உஸுல் ' கிரந்தத்தில் 83வது பக்கத்தில்
வரையப்படுள்ளது .
"ஜனங்கள் வழக்கமாக செய்து வரும் கருமத்தை குறிப்பாகத் தடுப்பது கூடாது "
"விலக்கல் இல்லாத கருமத்தை செய்வது ஆகும் "
என்று இமாம் ஜர்க்கஷீ رضي الله عنه அவர்கள் மப்ஸுத்தில் வரைகின்றார்கள் .
"குரானைக் கொண்டோ,ஹதீதைக் கொண்டோ , சஹாபாக்களின் சொற்களைக் கொண்டோ , இமாம்களின் வசனத்தைக் கொண்டோ விலக்கல் வராத ஒரு கருமத்தை செய்வது ஆகுமானதே " என்று அல்லாமா இமாம் இப்னு ஹுமாம் ஹனபீ رضي الله عنه அவர்கள் 'பத்ஹுல் கதீர்' ,1வது பாகம் ,384வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .
குரான் ,ஹதீத் ,இஜ்மா வுக்கு மாற்றமில்லாது ஜனங்கள் வழக்கமாக செய்து வருகின்ற கருமங்கள் ஆகுமானது என்பது அறியக் கிடக்கின்றது .
"முஸ்லீம்கள் எதுஎதை அழகாகக் கண்டார்களோ அது அல்லாஹ் விடத்திலும் அழகானது " என்ற ஸஹீஹான ஹதீத் முஅத்தாவில் இப்னு மஸ்ஊது رضي الله عنه அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப் பட்டுள்ளது .
இவ்வையகத்தில் மண்ணாசை பிடித்த உலக மன்னர்கள் போரிட்டு கோடிக்கணக்கான பொருள்களை விரயம் செய்து இலட்சக்கணக்கான உயிர்களைப் போக்கி , வெற்றி அடைந்ததற்கு அறிகுறியாக கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருவதையும் , சுதந்திரம் அடைந்த சுபச் சேதிக்காக கொடியேற்று வைபவங்கள் நடைபெற்று வருவதையும் கண் கூடாக காண்கின்றோம் .
இவற்றில் முற்றிலும் மாற்றமாக நப்ஸுடன் போர் புரிந்து ,முவ்வாசைத் தொடர்பும் , மும்மலப் பற்றும் விட்டு முற்றுத் துறந்து ,இப்லீஸு துனியாவின் அடிமைத் தலைகளையெல்லாம் நீங்கி ஆத்மார்த்த சுதந்திரம் அடைந்த ஜெயவெற்றி வீரர்களாகிய மாதவப் புரடர்களான அவ்லியாக்களுடைய உரூஸ் தினங்களில் கொடியேற்றுவது ஜாயிஸ் ஆகுமானதே என்று தெளிவாகத் தெரிய வருகின்றது . இது ஆகும் என்பதற்கு அதிக விரிவான பல ஆதாரங்களுடன் முற்காலத்திய பிரதம முப்தி , மவ்லானா அல்லாமா ஸெய்யிது ஹைதர் ஷாஹ் காதிரி பெங்களூரி رضي الله عنه அவர்கள் ' துல்பஹார் ஹைதரியாவில்' வரைந்துள்ளார்கள் .
எனவே அழிந்து போகக் கூடிய உலகத்தின் அரசர்களும் ,அரசியல் தலைவர்களுக்கும் மனமுவந்து கொடியேற்ற இசைபவர்கள் , அழிவற்ற அல்லாஹ்வின் நேசர்களாகிய அவ்லியாக்களுக்கு மகிமை கொடுத்து கொடியேற்ற பின்னடைவது பேதமையாகும் .
No comments:
Post a Comment