வஸீலா என்பதற்கு அரபியில் இஸ்திம்தாது, இஸ்திகாதா, இஸ்திஷ்ஃபா, இஸ்திஆனா என்று பல சொற்களைக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் கருத்திலும் அர்த்தத்திலும் ஒன்றுதான்.
மார்க்கச் சட்டவிதிப்படி பதவி உயர்ந்த ஒன்றின் பொருட்டினால் அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு வஸீலா எனக் கூறலாம்.
அல்லாஹ்விடத்தில் நல்லமல்களும், நல்லடியார்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்பிற்குரித்தான பொருட்களாகும். இதனால்தான் இரண்டைக் கொண்டும் வஸீலா தேடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்ப்போமானால் நற்கருமங்களோ, துஆவோ வஸீலாவாக மாட்டாது. காரணம் துஆவும், நற்கருமங்களும் ஒரு நபரைக் கொண்டு நிகழ்த்தப்படுபவை.
எனவே துஆவும், நற்கருமங்களும் நிகழ்ச்சியாகும். இனி நிகழ்ச்சியை நிகழ்த்தும் மனிதனை விட நிகழ்த்தப்பட்ட அந்நிகழ்ச்சிகள் உயர்வானதெனக் கருதப்படுமாயின், இறைவனது செயல்கள் உயர்வானதாகக் கருதப்பட்டு இறைவன் அச்செயலை விட தாழ்ந்தவனாக கருதப்பட்டுப் போய்விடுவான்.
இவ்வாறே நபிமார்கள், வலிமார்கள் எந்தச் சிறப்பையுமுடையவர்கள் அல்ல. அவர்கள் வஸீலாவாக மாட்டார்கள். அவர்கள் வெறும் பிரார்த்தனை மட்டும்தான் செய்ய முடியும்.
ஆதலால், அவர்களின் அந்த 'துஆ' தான் வஸீலா என்று வாதாட தலைப்படுவது மாபெரும் அறிவீனமாகும். ஏனெனில், நபிமார், வலிமார் இன்றி அவர்களின் துஆ எப்படி செயல் வடிவம் பெற முடியும்?
எனவே துஆவை விட துஆ செய்யும் நபிமார்கள், வலிமார்கள்தான் உயர்ந்தவர்களும், வஸீலாவுமாகும். இது போன்றுதான் நற்கருமங்கள் உயர்வானதல்ல. அதனை நிகழ்த்துபவர் தான் உயர்ந்தவராவார்.
ஆதலால் வஸீலா என்பது நற்கருமங்களோ, துஆவோ அல்ல. அவைகளைத் தம்மிலிருந்து வெளிப்படுத்துபவர்கள்தான் உண்மையான வஸீலா என்று கூறப்படும்.
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம் பற்றி , திருக்குர்ஆனில் அல்லாஹ்…
واستعينوا بالصبر والصلاة
பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி (வஸீலா) தேடுங்கள். (அல்குர்ஆன்)
பொறுமை, நோன்பு, ஸகாத், சதகா, ஹஜ் பிறருக்கு உதவி செய்தல் போன்ற நற்கிரிகைகளைக் கொண்டு உதவி தேடலாம் என்பது குர்ஆனின் கூற்றுப் பிரகாரம் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் சக்தி பெற்றதாகும்.
இந்த நல்லமல்களும், நல்லடியார்களும் அல்லாஹ்வின் படைப்புக்கள்தான். அல்லாஹ்வின் படைப்புக்களில் ஆக அதியுயர்ந்த படைப்பு எதுவெனக் கேட்டால் மனிதன் என்றே கூறப்படும்.
பொறுமைக்குப் பகரமாக பொறுமையாளியையும், நோன்புக்குப் பகரமாக நோன்பாளியையும், ஹஜ்ஜுக்குப் பதிலாக ஹாஜியையுமே கூறப்படும். உலகில் படைக்கப்பட்ட யாவும் மனிதனுக்கும் ; மனிதன் படைத்தவனை அறியவும் தான்.
அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது அவன் ஏவியதை புரிந்து தாழ்வுயர்வன்றி இருப்பவர்கள் அமரர்கள். ஆனால் மனிதன் வணக்கங்கள் புரிந்து படைத்தவனை நெருங்கும் பட்சத்தில் அமரர்களை விடவும் பல மடங்கு உயர்ந்த பதவிக்கும், அவனது காதலனாக அல்லாஹ் மாறுகின்ற படித்தரத்தை கொண்டவன் மனிதன்.
அல்லாஹ்வின் சன்னிதானத்தில் எமது தேவைகள் நிறைவேற படித்தரம், தாழ்வு உயர்வற்ற நல்லமல்களை வஸீலாக்குவது மேன்மையா? அல்லது அவனிடத்தில் நெருங்கிய, அவன் தன் திருமறையில் புகழ்ந்துரையாடிய நல்லடியார்களை வஸீலாவாக ஆக்குவது மேன்மையா?
அல்லாஹ் தன் திருமறையில் மற்றுமோரிடத்தில் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புதல்வரைப் பற்றிக் கூறுகையில் என்ன சொல்லை உபயோகித்துள்ளான் என்பதை பாருங்கள்:
انه عمل غير صالح
நபியவர்களின் புதல்வர் தன் தகப்பனார் கொண்டு வந்த ஏகத்துவத்தை ஏற்காததால் அந்தப் புதல்வர் அமலுன் கைறு ஸாலிஹ் – நல்லமலில்லை என்றான்.
ஏகத்துவக் கொள்கையை ஏற்காது கைரியத்தில், ஷிர்க்கில் மூழ்கியிருந்த ஓர் அடியானை அல்லாஹ் அவர் நல்லமல்ல எனக் கூறியுள்ளான் என்றால் என்ன பொருள்? அவனை ஏற்ற நல்லடியார்கள் நபிமார்கள் அனைவரும் 'அமலுன் ஸாலிஹ்' நல்லமல்கள் என்பது தானே.
ஆம். நிச்சயமாக அவர்கள் யாவரும் நல்லமல்கள் என்ற பெயரில் அடங்குவோர்கள் தான். நபிமார்கள், வலிமார்கள், ஸாலிஹீன்கள், மஷாயிகீன்கள், இமாம்கள் யாவரும் அல்லாஹ்விடம் அமலுன் ஸாலிஹ் – நல்லமல்கள் எனப் பெயர் சூட்டப்பட்டவர்கள்தான்.
ஆனால் நாம் தான் தவறாக தொழுகை, பொறுமை, நோன்பு போன்ற கிரிகைகளைத்தான் நல்லமல்கள் என்று அர்த்தம் கொண்டிருக்கிறோம்;ஆகவே வஸீலா என்பது நல்லடியார்களைக் கொண்டு கேட்பதுதான் என்பது உறுதியாகிறது.
நீங்கள் கேட்கலாம் அல்லாஹ் அல்குர்ஆனில்,
نحن اقرب اليه من حبل الوريد
'நாம் அவனின் பிடரி நரம்பை விட நெருக்கமானவன்' என்று கூறுவதால் நமக்கு வலியின் வஸீலா எதற்கு என்று? அல்லாஹ்வே நம்மை நெருங்கியிருக்கும் பட்சத்தில் நமக்கு இறைநேசர்கள் எதற்கு? உங்கள் மனதில் ஏற்படும் நியாயமான கேள்விதான் இது.
இந்த வசனம் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாகவே சொல்லப்பட்டது. அவ்வாறிருக்க, காபிர்கள், முஷ்ரிகீன்கள், முனாபிக்குகள் போன்றவர்களின் பிடரி நரம்பை விடவும் அல்லாஹ் நெருங்கியிருந்தானா? இல்லை என்று கூற முடியுமா? முடியாது.
ஆனால் இதில் அவர்கள் அல்லாஹ்வை நெருங்கியிருந்தார்களா? என்பதே கேள்வி. அவர்களால் அல்லாஹ்வை நெருங்க முடியவில்லை என்பதை வரலாறுகள் மூலம் தெரிந்திருப்பீர்கள். ஏன் அவர்களுக்கு ஈமான் என்பது இல்லை. ஆனால், அல்லாஹ் திருக்குர்ஆனில்,
ياايها النبيّ اناارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعياالى الله باذنه
நபியே! நாம் உங்களை சாட்சி சொல்வோராகவும், சுபச் செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்வதற்காகவும், அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவன்பால் அழைப்பதற்காகவும் அனுப்பினோம்.
(அல்குர்ஆன் அஹ்ஸாப் 45,46)
இந்த வசனத்தை சற்று உற்று நோக்குங்கள். நபி صلى الله عليه و سلم அவர்கள் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு மக்களை அவன் பக்கம் அழைப்பார்களேயானால், அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைப்பார்களா? மாட்டார்களா?
எனவே இந்த இடத்தில் மேற்கூறிய அவனின் பிடரி நரம்பை விட நெருக்கமானவன் என்ற வசனம் உங்கள் சிந்தனையை விட்டும் எங்கே போனது? அல்லாஹ்தான் யாவற்றையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறானே. அவன் தன் அடியார்களை தன் பக்கம் முன்னோக்கச் செய்யலாம்தானே?
அவ்வாறில்லாமல், 'வதாயின் இலல்லாஹி பிஇத்னிஹி' அவன் உத்திரவு கொண்டு அவன்பால் அழைக்க மற்றொருவரின் வருகை எதற்கு? இதில்தான் வஸீலா தெரிகிறது.
முஷ்ரிகீன்கள் சொன்னார்கள், நாம் இந்த (பொய்யான) கடவுள்களான லாத், உஸ்ஸா, மனாத், ஹுபல் போன்றவைகளை வணங்குவது இவைகள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமுடையவர்களாக ஆக்கும் என்பதற்காகத்தான் என்று. ஆனால் அந்த சிலைகளுக்கு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமடையச் செய்யும் சக்தி இருந்ததா? என்பதே கேள்வி.
அவைகள் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமடையச் செய்யும் சக்தி பெற்றதுமல்ல. வணங்கப்படுவதற்கு தகுதியானதுமல்ல. வணங்கப்படுபவன் அல்லாஹ் ஒருவனேதான். நாம் அவனைத்தான் வணங்குகிறோம்.
அவ்லியாக்களை வணங்கவில்லை. ஆனால் அவ்லியாக்களை அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கு வஸீலாவாக கருதுகிறோமென்றால், உண்மையில் இவர்கள் அதற்கு தகுதியானவர்கள்தான்.
ஒரு படைப்பு எவ்விதம் வஸீலாவாக ஆக முடியும்? என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும்.
அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்கு நமக்கு எவரினதும் உதவி தேவை என்பதற்கான காரணம் அவன் மறைந்திருக்கும் ஒன்றை அறிந்தவன், யாவற்றையும் பார்ப்பவன், சகலதையும் தெரிந்தவன்.
அவனுக்கு செய்ய முடியாத ஒன்றுமே இல்லை என்பதற்காகவோ அல்லது அவன் நம் பிடரி நரம்பை விட நெருக்கமானவன் என்பதற்காகவோ அல்ல. அப்படியானால் அவனை அறிவதற்கு மற்றொரு சிருஷ்டியை வஸீலாவாக ஆக்க வேண்டிய அவசியம் என்ன?
'அமலுன் ஸாலிஹுன்' என்று திருக் குர்ஆனில் ஒரு இடத்தில் வஸீலாவை மறைமுகமாக வலியுறுத்திய இறைவன் மற்றுமொரு இடத்தில்,
ياايها الذين آمنوا اتقو الله وابتغوا اليه الوسيله
எனதடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வளவில் ஓர் வஸீலாவை (உதவியாளரைத்) தேடிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் மாயிதா 6:35)
என்று நேரடியாகவே நீங்கள் வஸீலா தேடிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வே சொன்னபிறகு, அதை ஷிர்க் என்று சொல்வது திருக்குர்ஆனை மடத்தனமும், திருக்குர்ஆனை மறுப்பதும் ஆகுமல்லவா?
والله خلقكم وما تعبدون
உங்களையும் நீங்கள் புரியும் ஒன்றையும் படைத்தவன் அல்லாஹ்தான்'
(அல்குர்ஆன் ஸாப்பாத் 23:96)
நீங்கள் ஈமான் கொண்டவர்களாயிருப்பின், நல்லமல்கள் அல்லாஹ்வின் படைக்கப்பட்ட சிருஷ்டிதான் என்பதை தெரிந்திருப்பீர்கள்.
நல்லமல்களை வஸீலாவாக அமைக்க முடியுமென்றால், அச்செயலை புரிபவனை ஏன் வஸீலாவாக அமைக்க முடியாது? அவ்லியாக்களை வஸீலாவாக ஆக்குவது உண்மையில் அமல்களின் வஸீலாவை ஏற்றுக் கொள்வதாகும்.
நன்றாக சிந்தித்துப் பார்த்தீர்களேயானால், எந்தவொரு நல்லமல்களும் எதுவரை அதை ஒரு நபரேனும் புரிந்து கொண்டு செயல்படவில்லையோ அதுவரையிலும் அவைகள் வஸீலாவாக அமைய முடியாதென்பது தெரியவரும்.
'அஃமால் ஸாலிஹா' நல்லமல்களை நாம் அல்லாஹ்வின் கூற்றின் பிரகாரம் வஸீலாவாக அமைக்கின்றோம். ஆனால் நல்லமல்கள் என்பது ஒரு புதிய பொருள் அல்ல என்பதை சிந்தனையில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
'அஃமால் ஸாலிஹா' நல்லமல்களை நாம் அல்லாஹ்வின் கூற்றின் பிரகாரம் வஸீலாவாக அமைக்கின்றோம். ஆனால் நல்லமல்கள் என்பது ஒரு புதிய பொருள் அல்ல என்பதை சிந்தனையில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவைகள் நல்லமல்கள்தான். ஆனால் இதை உலகில் எவராலும் நிலைநாட்டப் படாவிடில் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
ஆகவே நல்லமல்களை புரிவோர்கள் இல்லாது அதைப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கையில் எப்படி அதை வஸீலாவாக அமைக்க முடியும்.?
நபிமார்கள், அவ்லியாக்களை வஸீலாவாக்குவது ஷிர்க்கான விசயம் எனக் கூறும் அறிவீனர்கள், தாங்கள் தொழும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற அமல்கள் இவர்களுக்கு நல்லமல்களாக காட்சி தந்து அதைக் கொண்டு வஸீலா தேடி பயன்பெற்றிருக்கிறார்களா? இல்லையே!
ஏனெனில், முனாபிக்குள் தொழுகிறார்கள்தான். எவர்களது வணக்கங்கள் அவர்களின் உள்ளங்கள் அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்களின் பெருந்தன்மைக்கு சிறிதளவேனும் தரக்குறைவை ஏற்படுத்துமோ அவர்களின் அந்தச் செயலுக்கும் எவ்வித சக்தியும் கிடையாது.
இவர்களின் செயல்கள் அஃமால் சாலிஹா என்று முடிவு செய்யப்படவில்லை. இப்படிப்பட்டவர்களின் வணக்கங்களை நாம் இத்திபாஃ ரஸூல் எனக் கூற முடியாது. ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள், இமாம்கள், இறைநேசர்களின் வணக்கங்கள்தான் இத்திபாஉ ரஸூல் என்று போற்றத்தக்கதாகும்.
எனவேதான் இந்த அஃமால் ஸாலிஹா உடைய நல்லடியார்களைக் கொண்டு நாம் வஸீலா தேடுகிறோம். இந்த வஸீலா மூன்று வகைப்படும்.
1. இறைவா! முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பொருட்டால் எனது பிணியை நீயே நீக்கியருள் புரிவாயாக!
2. யா முஹிய்யத்தீன்! எனது பிணி நீங்க இறைவனிடம் பிரார்த்தனை புரிவீர்களாக!
3. யா முஹிய்யத்தீன் தாங்கள் இறைவனது பிரதிநிதியாகவும் அவனில் நின்றும் தத்துவத்தை அடையப் பெற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே தங்களையன்றி எனக்கு வேறு கதியில்லையாதலால் எனது பிணியைத் தாங்களே நீக்கியருள் புரிய வேண்டும்.
இந்த மூன்று வகை உதவி தேடுதலும் ஆகுமானதே.
படைப்புக்களில் சிறந்த படைப்பாகிய கருணை நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் இருக்க, வலிமார்களை ஏன் வஸீலாவாக கொண்டு வருகிறீர்கள்? என்பது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கேள்வி.
வலிமார்கள் என்போர் எமக்கும் கருணை நபிகளாருக்கும், கருணை நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் நமக்கும் படைத்த நாயனுக்கும் இடையே வஸீலாவாக அமைகிறார்கள். எனவே வலிமார்கள் பின்னே சென்று திருநபியை சென்றடைந்து அல்லாஹ்வைப் புரியலாம்.
இதற்கு ஆதாரங்கள் மார்க்கத்தில் உள்ளனவா? என்று பார்க்கும் போது நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், நல்லறிஞர்கள் அனைவர்களும் வஸீலா தேடியிருப்பது நமக்கு ஆதாரமாக மார்க்கத்தில் நிறைந்து காணக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து சில….
நபிகளாரின் வஸீலா:
நபிகளாரின் வஸீலா:
அப்தால்கள் ஷாம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நாற்பது பேர்களாகும். அவர்களில் ஒருவர் மரணிப்பார்களேயானால் மற்றொருவர் அவர் இடத்தில் நியமனம் செய்யப்படுகிறார். அவர்களின் பொருட்டினாலேயே மழை பொழிகிறது என்றும், அவர்களின் வஸீலாவைக் கொண்டே விரோதிகளிடமிருந்து வெற்றி கிடைக்கிறது என்றும் அவர்களினால்தான் ஷாம் தேசத்திற்கு வேதனை இறங்காமலிருக்கிறது என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அலி رضي الله عنه
(மிஷ்காத் 582-3)
நீங்கள் உங்கள் பலகீனமானோரில் என் பொருத்தத்தைத் தேடிக் கொள்ளுங்கள். அல்லது அவர்களில் என்னைத் தேடிக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் பொருட்டாலேயே உணவும் வெற்றியும் கிடைக்கின்றது.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபுத்தர்தா رضي الله عنه
நூல்: மிஷ்காத் பாபு பஸ்ஸில்புகராஃ 447ம் பக்கம்.
நபிகளின் பொருட்டால் வஸீலா:
நபிகளின் பொருட்டால் வஸீலா:
لمّا اقترف آدم الخطيئة قال يارب اسالك بحق محمد لمّا غفرت لى فقال الله ياآدم وكيف عرفت محمداولم أخلقه؟ قال يارب لمّاخلقتنى بيدك ونفخت فيّ من روحك رفعت رأسى فرأيت على قوائم العرش مكتوبا لااله الاالله محمد رسول الله فعلمت انك لم تضف الى اسمك الاأحب الخلق اليك فقال الله صدقت ياآدم انه لاحبّ الخلق الّي ادعني بحقه وقدغفرت لك ولولا محمد ماخلقتك.
நபி ஆதம் عليه السلام அவர்கள் தான் செய்த ஒன்றை ஏற்றுக்கொண்ட பின் யா அல்லாஹ்! முஹம்மத் நபி صلى الله عليه و سلم அவர்கள் பொருட்டால் என்னை மன்னித்திடுவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் நபியவர்களை நோக்கி, ஆதமே! நீ எப்படி நபி முஹம்மத் صلى الله عليه و سلم அவர்களை அறிந்தாய்? இன்னும் நான் அவர்களை படைக்கவும் இல்லை எனக் கூற, நபியவர்கள், எனது இரட்சகா! நீ உனது கரத்தால் என்னைப் படைத்து எனக்குள் ரூஹை அனுப்பிய சமயத்தில் நான் என் சிரசை உயர்த்தி அர்ஷைப் பார்த்தேன்.
அங்கே லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ் என உன் பெயருடன் மற்றுமோர் பெயரையும் இணைத்திருந்தாயல்லவா? இதனால் நான், நீயே உன் பெயருடன் மற்றொருவரின் பெயரைச் சேர்த்திருக்கிறாய் என்றால், நிச்சயமாக அவர் உன்னிடத்தில் சகல சிருஷ்டிகளையும் விட மிகப் பிரியத்திற்குரியவராக இருக்கும் என்று நினைத்தேன் என்றார்கள்.
அதற்கு அல்லாஹ் ஆதமே! நீர் கூறியது உண்மைதான். அவர் சகல படைப்புகளை விடவும் என்னிடத்தில் மிக மிக நெருக்கமானவரே! எனவே அவரின் பொருட்டால் நீர் என்னிடம் பிழை பொறுக்கக் கேட்டதால் நான் உம்மை மன்னித்து விட்டேன் எனக் கூறிய அல்லாஹ் அவாரை நான் படைத்திடாவிட்டால் உம்மையும் படைத்திருக்க மாட்டேன் என்றான். இதன் சனத் ஸஹீஹானதாகும்.
(அல் முஸ்தத்ரக், கிதாபுத் தாரீக் 2:615)
ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் கூறியதாக இமாம் தப்ரானீ அவர்கள் முஃஜிம் கபிரீலும் முஃஜிம் அவ்சத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹஜ்ரத் அலி رضي الله عنه அவர்களின் அருமைத் தாயார் ஹஜ்ரத் பாத்திமா பின்த் அசத் رضي الله عنه அவர்கள் மறைந்ததும், ரஸூல் صلى الله عليه و سلم அவர்கள் ஹழ்ரத் அபு அய்யூபில் அன்ஸாரி, ஹழ்ரத் உசாமா பின்த் ஜைத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரையும் ஒரு ஹபஷி அடிமையையும் கபுர் தோண்டுமாறு ஏவினார்கள்.
கப்ர் வெட்டுதல் முடிவடையும் சமயத்தில் அண்ணல் صلى الله عليه و سلم அவர்களும் அங்கே சமூகம் கொடுத்து கப்ரில் இறங்கி தங்களின் திருக்கரத்தாலும் மண்ணை வெளிப்படுத்தினார்கள். கப்ர் தோண்டி முடிந்ததும் நபிகளார் صلى الله عليه و سلم அவர்கள் அக்கபுரில் சாய்ந்து கொண்டவர்களாக பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.
'மரணிக்கச் செய்வதும், உயிர்ப்பிப்பதும் அல்லாஹ்தான் அவன் என்றும் உயிருள்ளவன். அவனுக்கு மரணம் என்பதே கிடையாது. என் பொருட்டாலும், என் முன் சென்ற நபிமார்கள் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அசத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் நுழையும் இத்தலத்தை விசாலமாக்குவாயாக! நிச்சயமாக நீ மிகவும் இரக்கமுள்ளவன் எனப் பிரார்த்தனை செய்தார்கள்.
(வஃபாஉல் வஃபா 3:899)
ஸஹாபாக்களின் வஸீலா:
عن انس بن مالك ان عمربن الخطاب رضى الله عنه كان اذاقحطوا استسقى بالعباس بن عبد المطلب رضى الله عنه فقال اللهم اناكنانتوسل اليك بنبينا صلى الله عليه وسلم فتسقينا وانا نتوسل اليك بعم نبينا فاسقنا قال فيسقون
(மதினாவில்) மழைப் பஞ்சம் ஏற்பட்டால் உமருப்னுல் கத்தாப் رضي الله عنه அவர்கள் அப்பாஸ் رضي الله عنه அவர்களின் பொருட்டைக் கொண்டு மழை இறக்கித் தர இறைவனிடம் வேண்டுவார்கள்.
அவர்கள் சொல்வார்கள், இறைவா! நாங்கள் நபிகள் கோமான் صلى الله عليه و سلم அவர்களை வஸீலாவாக்கி-பொருட்டாக்கி மழையைத் தேடினோம். மழை இறக்கினாய். இப்பொழுது அண்ணலின் பெரிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பொருட்டாக்கி மழை கேட்கிறோம். மழை அருள்வாய் எனக் கூறுவார்கள். இப்படி துஆக் கேட்டால் உடனே மழை பொழியும்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் رضي الله عنه
நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 138.
நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 138.
ஹஜ்ரத் சுலைம் பின் ஆமிர் சுபாயீரிرضي الله عنه அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள், மக்கள் நீரில்லாப் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களும், திமிஷ்க் நாட்டு மக்களும் மழை தேடிப் பிரார்த்திப்பதற்காக வெளியானார்கள்.
ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்கள் மிம்பரில் உட்கார்ந்த போது ஹழ்ரத் யஜீத் பின் அஸ்வத் அல் ஜரஷிய்யூ رضي الله عنه அவர்களை எங்கே? எனக் கேட்டார்கள். இவர்களைத் தேடி சென்றனர் சிலர். தன்னை தேடப்படும் செய்தி எட்டிய ஹழ்ரத் யஜீத் அவர்கள் ஓடோடி சபைக்கு வந்ததும், ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களின் ஏவல் பிரகாரம் மிம்பரில் ஏறி அவர்களின் பாதத்தடியில் உட்கார்ந்து கொண்டார்கள்.
யா அல்லாஹ்! நாம் இன்று சிறந்த ஒரு மனிதரின் சிபாரிசை முன்வைக்கின்றோம். யா அல்லாஹ்! உன்னிடம் யஜீத் பின் அல் அஸ்வத் பின் அல் ஜீர்ஷிய்யின் பொருட்டால் மழையைத் தருமாறு கேட்கின்றோம் என்றார். ஹழ்ரத் முஆவியா அவர்கள் யஜீத் அவர்களை நோக்கி கையை உயர்த்திக் கேளுங்கள் எனக் கூற ஹழ்ரத் யஜீத் அவர்கள் கையை உயர்த்தினார்கள்.
வீற்றிருந்தோர்கள் எல்லோரும் கரங்களை உயர்த்தி துஆக் கேட்டார்கள். திடீரென மேற்கு பக்கமாக முகில் கூட்டம் தென்பட்டு பெரும் இடி முழக்கத்துடன் மழை பொழிந்தது. கடைசியில் கூடியிருந்தோர் வீடுகளைச் சென்றடைவதே கஷ்டமாகிவிட்டது.
நூல்: அத்தபகாத் 7: 444
நூல்: அத்தபகாத் 7: 444
நான்கு இமாம்களின் வஸீலா:
இமாமுல் அஃளம் ஹழ்ரத் அபூஹனீபா رضي الله عنه அவர்கள்,
يا مالكى كن شافعى فى فافقتى انى فقير فى الورى لغناك
يااكرم الثقلين ياكتر الورى جدلى بجودك وارضنىبرضاك
اناطاحع بالجودمنك ولم يكن لابي حنيفة فى الانام سواك
يااكرم الثقلين ياكتر الورى جدلى بجودك وارضنىبرضاك
اناطاحع بالجودمنك ولم يكن لابي حنيفة فى الانام سواك
என் எஜமானே! என் கஷ்ட நிலையில் எனக்குச் சிபாரிசாளனாயிரு. உலக படைப்புகளில் உன் தயாளத் தன்மையின் பக்கம் நான் தேவையானவன். மனு ஜின்களில் தலை சிறந்தவரே! உலக பொக்கிஷமே! உங்கள் கொடையால் என்னைப் பாருங்கள். உங்களை ஏற்றவனாக என்னைப் பொருந்துங்கள். நான் உங்கள் அருளின் பக்கம் தேவையானவன். உங்களைத் தவிர இந்த ஹனீபாவுக்கு எவருமே இல்லை என பிரார்த்தித்திருக்கின்றார்கள்.
(கஸீதா நுஃமானிய்யா 199-200)
ஹஜ்ரத் இமாம் மாலிக்கி ரرضي الله عنه அவர்கள் ஒரு சமயம் மஸ்ஜித் நபவியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அப்பாஸியர்களின் இரண்டாவது கலீபா மன்சூர் என்பவர் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரௌழா ஷரீபுக்கு வருகை தந்தார்.
அவர் ஹஜ்ரத் இமாம் அவர்களிடம், நான் கிப்லாவை (கஃபாவை) முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? அல்லது நபிகளார் அவர்களை முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? என விசாரித்தார். அதற்கு இமாம் அவர்கள்,
ولم تصرف وجهك عنه وهووسيلتك ووسيلة ابيك آدم الى الله تعالى بل استقبله واستشفع به فيشفّعه الله فيك
உனக்கும் உன் தகப்பனார் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் வஸீலாவான கருணைக் கடல் صلى الله عليه و سلم அவர்களை விட்டும் ஏன் உன் முகத்தைத் திருப்பப் போகின்றாய்? வேண்டாம். நீ அவர்கள் பக்கமே திரும்பிக் கேள். அவர்கள் பொருட்டால் அல்லாஹ் உன்னை மன்னித்திடுவான் என்றனர்.
நூல்: அஷ்ஷிஃபா 2:33
நூல்: அஷ்ஷிஃபா 2:33
ஹழ்ரத் இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள்,
آل النبى ذريعتى وهم اليه وسيلتى
ارجوابهم اعطى غدا بيدى اليمين صحيفتى
ارجوابهم اعطى غدا بيدى اليمين صحيفتى
அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்களின் குடும்பத்தினர் எனக்கு உபகாரமளிப்போர், அவர்கள் அல்லாஹ் பக்கம், எனது வஸீலா. அவர்கள் பொருட்டாலேயே நாளை மறுமை நாளில் என் பட்டோலை எனது வலது கரத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன் என்கின்றனர்.
நூல்: அஸ்ஸவாயிகுல் முஹ்ரிகா பக்கம் 180.
ஹழ்ரத் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள்,
இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் பொருட்டால் துஆ கேட்டார்கள். இதை செவியுற்ற அவர் புதல்வர் ஹழ்ரத் அப்துல்லாஹ் அவர்கள் ஆச்சரியமுற்று,
இன்னஷ்ஷாபியிய்ய கஷ்ஷம்சி லின்னாசி, வகல் ஆஃபியதி லில்பதனி
இன்னஷ்ஷாபியிய்ய கஷ்ஷம்சி லின்னாசி, வகல் ஆஃபியதி லில்பதனி
இமாம் அஹ்மத் அவர்கள், இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் மக்களுக்கு சூரியனையும், சரீரத்திற்கு சுகத்தையும் போன்றவர் என பதிலளித்தார்கள்.
நூல்: ஷவாஹிதுல் ஹக் பக்கம் 166.
இமாம்கள், ஷெய்குமார்கள் பார்வையில் வஸீலா:
இமாம் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் 'இஹ்யா உலூமுத்தீன்' நூலில் பாகம் 2 பக்கம் 247ல் பிரயாணத்தின் நடைமுறைகளைப் பற்றிக் கூறுகையில்,
ويدخل فى جملته زيارة قبر الا نبياء عليهم السلام وزيارة قبور الصحابة والتابعين وسائر العلماء والا ولياء وكل من يتبرّك بمشاهدته فى حياته يتبرّك بزيارته بعد وفاته ويجوز شد الرحال هذا الغرض
பிரயாணத்தின் இரண்டாவது பிரிவு நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்கள், அவ்லியாக்கள், நல்லடியார்களின் அடக்கஸ்தலங்களுக்குச் செல்வதாகும். உலக வாழ்க்கையில் எவர்களைச் சென்று தரிசிப்பதால் பிரயோஜனம் கிடைக்குமோ அவர்களை மரணித்த பின்பும் சென்று தரிசிப்பதில் பிரயோசனம் கிடைக்கின்றது. இச்செயலுக்காக பிரயாணம் செய்வதும் ஆகுமானதுதான்.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி رضي الله عنه அவர்கள் 'அல் மஜ்மூஃ அன்நப்ஹானிய்யா' பாகம் 2 பக்கம் 391 ல் கூறுகிறார்கள்,
يا سيدى يارسول الله قدشرفت قصائدى بمديح قدرصفا
مدحتك اليوم ارجوالفضل منك غدا من الشفاعةفالحظى بهاطرفا
بكم توسل يرجو العفو عنزلل من خوفه جفنه الهامى لقدذرفا
مدحتك اليوم ارجوالفضل منك غدا من الشفاعةفالحظى بهاطرفا
بكم توسل يرجو العفو عنزلل من خوفه جفنه الهامى لقدذرفا
நபியே நாயகமே! அல்லாஹ்வின் தூதரே! உங்களைப் புகழ்ந்து பாடியதால் என் கஸீதாக்கள் சிறப்புடையதாகிவிட்டன. இன்று நான் உங்களைப் புகழ்ந்தேன். நாளை மறுமையில் உங்கள் சிபாரிசை ஆதரவு வைக்கின்றேன். உங்கள் கருணையை என் மீதும் காட்டுங்கள். உங்களை வஸீலாவாக்கி என் பிழைகளை மன்னிக்க கோருகிறேன் என்று.
ஷெய்குல் இஸ்லாம் ஷிஹாபுத்தீன் ரமலீ رضي الله عنه அவர்களிடம் இக்கால பொதுமக்கள் கஷ்ட நஷ்ட நேரங்களில் யாஷெய்க் கவாஜா முயீனுத்தீன் இப்படியாக அவர்களை அழைத்தும் உதவி தேடுகின்றனரே! இம் மக்களால் அழைக்கப்படுவோர் மரணமான பின்னரும் அழைப்போருக்கு உதவி புரிய, அழைப்புக்கு பதிலளிக்க முடியுமா? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு ஷெய்குல் இஸ்லாம் அவர்கள் நபிமார்களைக் கொண்டும், வலிமார்களைக் கொண்டும் உதவி தேடலாம். ஏனெனில் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் எவ்விதம் உதவிகள் செய்தனரோ அவ்விதமே மறைவுக்குப் பின்பும் அவர்களால் உதவி செய்ய முடியும். அது நபிமார்களுக்கு அளிக்கப்பட்ட முஃஜிஸாத்தும், வலிமார்களுக்கு அளிக்கப்பட்ட கராமத்தும் ஆகும் என்றனர்.
நூல்: மஷாரிகுல் அன்வார் பக்கம் 59 .
காயல்பட்டணம் தந்த மாமேதை அல் குத்புல் உஜூது ஷெய்குனா ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வஸீலா-இஸ்திஙாதா என்னும் குத்பிய்யா பற்றி தமது முரீதிற்கு எழுதிய கடிதத்தில்,
'….. பொதுவாக அவுலியாக்களை கொண்டு வஸீலா தேடுவது என்ன, எல்லா பொருளைக் கொண்டு கூட வசீலா தேடுவதும் ஆகுமானது. குர்ஆனிலும் ஹதீதுகளிலும் நிறைய வந்துள்ளது. வசீலாயில்லாமல் ஒரு காரியமும் நடக்காது. அல்லாஹ் எல்லாத்தையும் ஸபபுகளை வைத்து ஸபபுகளைக் கொண்டேதான் நடத்துகிறான்.
வஸீலா… ஸபபுகளை அல்லாஹ்வின் செயல் வெளியாகும்தானம் -வகை என்று நம்பிக் கொண்டு கேள்பதுக்குத்தான் சொல்லப்படும். ஒருகால் செயலை ஸபபு பக்கம் சேர்த்து உதாரணமாக அவுலியாக்களிடத்தில் நீங்கள் உதவி செய்யுங்கள் என்று நேரடியாகவே கேட்டால் இதற்கு அவர்களிடத்தில் உதவி தேடுதல் ; இஸ்திஙாதா என்று பொருள். எத்தனை பேர்கள் சொன்ன போதிலும் இதுவும் வசீலாதான்.
அதாவது அவுலியாக்களை அல்லாஹ்வின் உதவி வருகிற வழி என்று நம்பி கொள்கிறது. இதுதான் முஸ்லிம்களுடைய கருத்து. ஏன் அவர்கள் சகல செயல்களும் அல்லாஹ்வுடையது. அவனிலின்றும் சகலமும் உண்டாகிறது என்று நம்பினார்கள். அவர்கள் வாயிலிருந்து செயலை அவுலியா பக்கம் சேர்த்து வைத்தால் இது செயலை வலி பக்கம் சேர்த்தாகும். அதாவது நிஸ்பத்து மஜாஸியாகும்.
நிஸ்பத்து மஜாஸிதான் என்பதற்கு அவர்கள் முஸ்லிமாக இருப்பது போதியதாக இருக்கும். அவர்கள் பேரில் அவர்கள் நிஸ்பத்து ஹகீகிய்யாகத்தான் சேர்ந்திருக்கிறார்கள். அதாவது அவுலியாக்களை அவர்களே சுயமாக செய்கிறார்கள் என்று நம்பி செயலை அவர்கள் பக்கம் சேர்த்து சொல்கிறார்கள் என்று அவர்கள் பேரில் கெட்ட எண்ணம் வைப்பது கூடாது. கெட்ட எண்ணம் வைப்பது ஹறாமாகும்.
வஹ்ஹாபிகள் முஸ்லிம்கள் பேரில் கெட்ட எண்ணம் வைத்துக் கொண்டே அல்லது அவர்களுக்கு வசீலா என்றால் என்ன ஷிர்க்கு என்றால் என்ன வென்றும் தெரியாமலே கண்டதையெல்லாம் ஷிர்க்கு என்று இதுபோலவே பித்அத்து என்றால் என்ன வென்றும் தெரியாமல் உளறுகிறார்கள்.
செயலை நேரடியாக மற்றவர்கள் பக்கம் சேர்த்து வைக்கிற குர்ஆன், ஹதீது மற்றும் பெரியார்களுடைய வார்த்தை, என்ன சகலர்களுடைய பேச்சிலும் கலந்திருக்கிறது…..' என்கிறார்கள்.
ஆக வஸீலா தேடுவது இஸ்லாமிய மார்க்கத்தின் ஏகோபித்த முடிவு படி ஆகுமான செயலே. அது நல்லமல்களைக் கொண்டாயினும் (இதுவும் நல்லடியார்களைக் கொண்ட வஸீலாதான்), நல்லடியார்களைக் கொண்டாயினும் சரி என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.
அல்லாஹ் நம் அனைவர்களையும் ஹபீப் முஸ்தபா صلى الله عليه و سلم அவர்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்கள் பொருட்டால் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இறுதிவரை நிலைக்கச் செய்து மரணிக்கச் செய்வானாக! ஆமீன்.
நன்றி : www.sufimanzil.org
No comments:
Post a Comment