ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه அவர்கள் ,தமது தந்தையின் வபாத்து நாளாகிய உரூஸை வருடம்தோறும் நடத்தி வந்தார்கள் . மவ்லவி அப்துல் ஹக்கீம் ஸாஹிப் இதை கண்டித்து , "உரூஸை பர்ளாக எண்ணி நீங்கள் ஒவ்வொரு வருடமும் செய்து வருகின்றீர்களே ? " என்று எழுதிக் கேட்டார் .
அதற்கு ஷாஹ் ஸாஹிப் கொடுத்த விடை : -
" ' ஜுப்தத்துன் நஸாயிஹு' ,42வது பக்கத்தில் ஆதாரமான ஹதீதுகளைக் குறிப்பிட்டுக் காண்பித்துக் கூறுவதாவது ,
இவ்விதம் குற்றங்குறை கூறுவது அறியாமையை அறிவிக்கின்றது. ஏனெனில் , பர்ளு அல்லாததை எவரும் பர்ளு என்று கூறுவது கிடையாது . கபூரை ஜியாரத்துச் செய்வதும் , உதவி தேடுவதும் ,குர்ஆன் ஓதி சோறு ,சீரணி வழங்கி தவாபை சேர்த்து வைப்பதும் , முஸ்தஹப்பும் , அழகான கருமமுமாகும் .
அநித்தியமான இவ்வுலகிலிருந்து நித்தியமான அவ்வுலகுக்குச் சென்ற ஞாபகார்த்த நாளாகிய உரூஸைக் குறிப்பிட்ட தினத்தில் நடத்துவது கூடுமென்பது உலமாக்களின் ஏகோபித்த அபிப்ராயம் . ரஸூலுல்லாஹி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது சொல்லும் ,செயலும் ,ஸஹாபாக்களின் நடத்தைகளுமே இதற்குப் போதுமான ஆதாரங்களாகும் " என்பதே .
"உரூஸ் காலங்களில் தர்காக்களில் பித்அத்துகள் நடைபெறுகின்றனவே ! அவ்வமயம் அங்கு செல்லலாமா ? " என்ற வினா எழுகின்றது .
அதற்குரிய விடை இதன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது . கண்ணுற்று சந்தேகத்தை போக்கிக் கொள்வார்களாக .
"உரூஸுடைய காலத்தில் பித்அத்துகள் நடந்தால் ஜியாரத்திற்காகப் போவதற்கு அவை தடை ஆக மாட்டாது " என்று 'ரத்துல் முஹ்த்தார்' ,1வது பாகம் ,665வது பக்கத்திலும் , 'பதாவா குப்றா' ,2வது பாகம் , 24வது பக்கத்திலும் சொல்லப்படுகின்றது .
"அற்ப விஷயத்தை முன்னிட்டு பெரிய காரியங்களை விட்டு விட வேண்டியதில்லை " என்று அல்லாமா ஷாஹ் முஹையத்தீன் ஸாஹிப் வேலூரி رضي الله عنه அவர்கள் 'பஸ்லுல் கிதாப்' , 113வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .
"சொற்ப கெடுதலின் காரணமாக மிகுதமான நன்மையை விட்டு விடுதலே அதிக கெடுதலாகும் " என்று அல்லாமா ஷெய்கு இஸ்மாயில் ஹக்கீ பருஸீ رضي الله عنه அவர்கள் 'தப்சீர் ரூஹுல் பயான் ', 1வது பாகம் , 88வது பக்கத்தில் வரைகின்றார்கள் .
"உரூஸ் உடைய காலத்தில் பித்அத்துகள் நடந்த போதிலும் ஜியாரத்திற்குப் போகலாம் " என்று ஷம்ஷுல் உலமா அல்லாமா குலாம் ரஸூல் ஸாஹிப் மதராஸீ رضي الله عنه அவர்கள் பத்வா கொடுத்துள்ளார்கள் . அதைச் சரி கண்டு மதராஸ் முப்தி அல்லாமா அல்ஹாஜ் தமீம் ஸாஹிப் அவர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளார்கள் .
" சகோதரனே ! உரூஸ் உடைய பிரயோஜனங்கள் அதன் கெடுதலைக்கான அதிகம் என்பதை அறிவாயாக : (புகஹாக்களே ) சட்ட நிபுணர்களே ! அதைத் தடுப்பதை விட்டு விட்டு ,தங்களைப் பேணிக் கொண்டு நிம்மதியாகவும் ,சந்தோஷமாகவும் இருப்பீர்களாக !" என்பதாய் அல் குத்பு அப்துல் வஹ்ஹாப் ஷஃரானீ رضي الله عنه அவர்கள் 'அல் பஹ்ருல் மவ்ரூதுல் கபீர் ' என்ற கிரந்தத்தில் கூறுவதாக மவ்லானா அஸ்ஸெய்யித் முஹம்மது இப்னு அஸ்ஸெய்யித் முஹம்மது புஹாரிய்யில் ஹுஸைனியுஷ் ஷாபியீ ,ஷவ்காத்தீ رضي الله عنه அவர்கள் 'தஷவ்வுபல் இஸ்மாவு ' ,18வது பக்கத்தில் சொல்கிறதை அல்லாமா ஷஹாபுத்தீன் அஹ்மது கோயா ஷாலியாத்தீ அவர்கள் சரிக்கண்டு கையொப்பம் இட்டுள்ளார்கள் .
"உரூஸுடைய மகிமையையும் , பிரயோஜனத்தையும் அறிந்த ஷெய்கு ஸஃதீ ஷிராஸீ رضي الله عنه அவர்கள் 'புதுமாப்பிளைப் போல் சயனிப்பீர்களாக ' என்று கபுறுகளில் இருக்கும் நல்லடியார்களை நோக்கி மலக்குகள் சோபனம் கூறும் 'நம் க நவ்மத்தில் அரூஸ் ' என்னும் ஹதீதை ஆதாரமாகக் கொண்டு நீ ஈமானுடன் மவ்த்தாகும் அந்நாள் சந்தோஷமும் மங்களமும் உடைய உரூஸ் ஆகிவிடும் " என்பதாய் 'போஸ்தத்தானில்' கூறியுள்ளார்கள் .
உலகப் பிரசித்தமான குத்பு ஸெய்யித் அஹ்மது பதவீ رضي الله عنه அவர்களது உரூஸை இன்கார் செய்த அக்கால மேதாவிகளுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் பற்றி அல்லாமா ஷெய்கு யூசுபுன் நபஹானீ மிஸ்ரி رضي الله عنه அவர்கள் இயற்றியுள்ள 'ஜாமிஉ கறாமாத்தில் அவ்லியா ' ,1வது பாகம் ,317வது பக்கத்தையும் , அல் குத்பு இமாம் ஷஃரானீ رضي الله عنه அவர்கள் இயற்றிய 'தபகாத்துல் குப்றா' , 1வது பாகம் , 155வது பக்கத்தையும் நோட்டமிடுக .
பெரியோர்களுடைய ஜியாரத்திற்குச் செல்லும் போது கொடி கொண்டு போகலாமா ? கபுருகளை முத்தமிடலாமா ? என்று இமாம் கலீலீ رضي الله عنه அவர்கள் இடத்தில் கேட்கப்பட்டதற்கு , "அவ்லியாக்களுடைய ஜியாரத்திற்குச் செல்லும் போது கொடி கொண்டு போவதும் ,தபர்ருக்குடைய எண்ணத்துடன் கபூரை முத்தமிடுவதும் ஆகும் .இதை இன்கார் செய்கின்றவன் வழிகெட்ட பித்அத்துக்காரனாவான் " என்று பதில் கூறி இருப்பதாய் 'பதாவா கலீலீ ', 2வது பாகம் ,250வது பக்கத்தில் காணப்படுகின்றது .
இவ்விஷயத்தை அல்லாமா அஸ்ஸெய்யித் முஹம்மது புஹாரிய்யில் ஹுஸைனி மலபாரீ தங்கள் அவர்கள் 'தஷவ்வுபல் இஸ்மாவு ' நூலில் குறிப்பிட்டிருப்பதை அங்கீகாரம் செய்து சரி கண்டு அல்லாமா ஷஹாபுத்தீன் அஹ்மது கோயா ஷாலியாத்தீ மலபாரீ அவர்களும் கையொப்பம் இட்டுள்ளார்கள் .
அல்லாமா இமாம் முஹம்மது கலீலீ رضي الله عنه அவர்களது பத்வாவில் பின்வருமாறு வினா ,விடை விளக்கம் தரப்பட்டுள்ளது .
வினா : நபிமார்களை ,அவ்லியாக்களை ஜியாரத்துச் செய்வதற்காக போகும் பொழுது கொடிகளை ஏந்திக் கொண்டும் ,தபல்பாஜ் என்னும் கொட்டடித்துக் கொண்டும் , மிஸ்ஹர் என்னும் வாத்தியம் வாசித்துக் கொண்டும் சில கூட்டத்தினர் செல்கின்றனரே ! இவை ஹறாமாகும் அல்லவா ?
விடை : இவ்விஷயம் எதுவும் விலக்கப்பட்ட கருமமல்ல .
இவ்வாறாக பத்வாவில் விடை அளிக்கப்பட்டுள்ளது . மேற்கண்ட விஷயங்கள் விரிவஞ்சி சுருக்கமான முறையில் கூறப்பட்டுள்ளதாய் அல்லாமா ஷஹாபுத்தீன் அஹ்மது கோயா ஷாலியாத்தீ மலபாரீ அவர்கள் தங்களது பத்வாவில் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள் .
ஆகவே ஆதி காலம் தொட்டு மாக்களை மக்களாக்கி முக்தி பெறத்தக்க மெய்ஞான உபதேசம் செய்து , வழிபிசகித் தடுமாறி போகாவண்ணம் பாதுகாத்து மீட்டு , நேரான பாதையில் கரை சேரும் உபாயம் சொல்லித் தந்த மெய் ஞானிகளுக்கு உரூஸ் நடத்துவதும் ,உரூஸுக்காக பிராயணம் மேற்கொண்டு , ஜியாரத்தை நாடி பயணம் மேற்கொள்வதும் ஆகும் என்பது நன்கு தெரிய வருகின்றது .
மேலும் ,அந்த மகான்களுடைய ஞாபகார்த்தமாக ,அவர்கள் அடக்கமல்லாத இதர இடங்களிலும் அவர்கள் பேரால் உரூஸ் நடத்தலாமென்பதும் அறியக் கிடைக்கின்றது .
No comments:
Post a Comment