Friday, 23 December 2022

பெரும்விரலை முத்தி கண்ணில் வைப்பது


" அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று பாங்கில் கேட்டதும் இரு பெரும் விரல்களை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹபு - விரும்பத்தக்கதாகும்.இம்மை ,மறுமை பயன்களை அளிக்கவல்லது.


முதல் "அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று கேட்கும் பொழுது - " ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூல்லல்லாஹ் " என்றும் இரண்டாவது " அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று கேட்கும் போது - " குற்றத்த ஐனிபிக யாரஸூல்லல்லாஹ் !" - உங்களைக் கொண்டே என் கண்களுக்கு குளிர்ச்சி என்று சொல்லி இருபெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும். பின்னர் , " அல்லாஹும்ம மத்தியினி பிஸ்ஸம்யி வல்பஸரி - கேள்வி,பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக ! " என்று சொல்ல வேண்டும். ஏனெனில் கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் அப்படி செய்தவனை சுவனத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.


📖 துர்ருல் முக்தார்,கன்ஜுல் இபாத்,பதாவா ஸூபிய்யா,கஹ்ஸதானி,பஹ்ருர்ரகாயிக்,ஷரஹு விகாயா


" பாங்கில் பூமான் நபி  ﷺ அவர்களது பெயர் கேட்கும் பொழுது இருபெரும் விரலை முத்துவதும்,இருகண்களில் வைப்பதும் ஆகும்.நமது ஷெய்குமார்கள் முஸ்தஹபு என்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள் ." 


📖 பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கீ


முஅத்தின் - பாங்கு சொல்பவர் " அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று சொல்வதை கேட்கும் போது - மர்ஹபன் பிஹபீபி வகுர்ரதுஐனி - சோபனம்,எனது நேசரைக் கொண்டு கண்குளிர்ச்சி - முஹம்மதிப்னு அப்துல்லாஹ்  ﷺ - என்று சொல்லி இருப்பெரும் விரலை முத்தி கண்ணில் வைப்பவானாகில் குருடாக மாட்டான்.கண்வலி எக்காலமும் வராது.


📖இஆனா,பாகம் 1,பக்கம் 243.


இருபெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான்,ஒருக்காலமும் கண்வலி வராது.


📖கியாதுத்தாலிப் ,மாலிக்கி மத்ஹபின் கிதாப்


📚 - திப்யானுல் ஹக் ,பாகம் 2

| அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர்ரஸூல்,அஷ் ஷெய்குல் காமில்,அஷ்ஷாஹ் முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பதில் பாகவி ஸூபி காதிரி காஹிரி قدس الله سره العزيز


கைநகம் கண்தொட்டு கனிகின்ற ஸலவாத்தில் கஸ்தூரி மணங்கமழும் எம்மான்  ! அவரைக் காணத் துடிக்கின்றேன் இந்நாள் ! صلى الله عليه وآله وصحبه وسلم

Friday, 16 December 2022

ஏந்தல் நபி ‎ﷺ ‏அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றுவது ‎

பூமான் நபி  ﷺ அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதில் நீங்கள் அலட்சியம் காட்டாதவரை நீங்கள் புறக்கணிக்கப்பட மாட்டீர்கள்; அண்ணல் நபி  ﷺஅவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீங்கள் அல்லாஹ்வின் பார்வையில் உயர்த்தப்படுவீர்கள். நபி  ﷺ அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றுவது வெளிரங்கத்திலும் உள்ரங்கத்திலும் உள்ளது.

 நபி  ﷺ அவர்களது  முன்மாதிரியை வெளிரங்கத்தில்  பின்பற்றுவது என்பது, தொழுகை, நோன்பு,ஹஜ், ஜிஹாத் போன்றவற்றில் ஈடுபடுவதாகும். அண்ணல் நபி  ﷺ அவர்களது முன்மாதிரியை உள்ரங்கத்தில் பின்பற்றுவது என்பது , உங்கள் வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வுடனான உங்கள் தொடர்பை உறுதிசெய்து, ஓதும்போது பிரதிபலித்தல் ஆகும்.

நீங்கள் வணக்கவழிபாடுகள்  அல்லது அவ்ராதுகளை ஓதுவது  போன்ற  செயல்களைச் செய்தும், நீங்கள் அதில் வலுவான தொடர்பையோ அல்லது பிரதிபலிப்பையோ உணரவில்லை என்றால், நீங்கள் மறைவான நோயால் - ஆணவம், பகட்டு அல்லது அதன் விருப்பங்களால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்  سبحانه و تعالى தனது அருள்மறையில் கூறுகின்றான் " நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம் " - அல் குர்ஆன் (7:146).இந்த விஷயத்தில், நீங்கள் நோயால் பாதிக்கப்பட்டவர் போல் இனிப்பைக்  கசப்பாகக் கண்டறிவீர்கள். இருப்பினும், கர்வமும் அகங்காரமும் உள்ள நிலையில் புரியும் ‘வணக்கத்தை’ விட, வெட்கமாகவும் அவமானமாகவும் உணரச் செய்திடும் பாவம் சிறந்தது.

அல்லாஹ்  سبحانه و تعالى ஸெய்யிதினா நூஹ் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் , " நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! " - அல் குர்ஆன் (11:45) என்று கூறிய பொழுது பதிலளித்தான் , " "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான்." - அல் குர்ஆன் (11:46) .

ஒருவரைப் பின்பற்றும் செயலானது, அந்த நபர் இரத்த பந்தமாக இல்லாவிட்டாலும், பின்தொடர்பவரைப் பின்தொடர்பவரின் ஒரு பகுதியாக ஆக்குகிறது; உதாரணமாக நாயகத் தோழர் ஸெய்யிதினா ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்கள் குறித்து எம்பெருமானார்  ﷺ " ஸல்மான் நம்மில் நின்றும் உள்ளவர் " என்று கூறியது போன்று. நாயகத் தோழர் ஸெய்யிதினா ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்கள் பாரசீகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்,எம்பெருமானார்  ﷺ அடிச்சுவட்டை அடியொற்றி பின்பற்றி நடந்ததன் காரணமாக ,தனது உம்மத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் இவ்வாறு நவின்றார்கள்.எவ்வாறு ஒருவரது அடிச்சுவட்டை பின்பற்றுவது தொடர்பை ஏற்படுத்துமோ ,அவ்வாறே அடிச்சுவட்டை மீறுவது தொடர்பை துண்டித்து பிரிவினைக்கு வழிவகுக்கின்றது .

அல்லாஹ்  سبحانه و تعالى நன்மைகள் அனைத்தையும் ஓர் வீட்டினுள் ஒன்றுகூட்டி ,அதன் திறவுகோலாக எம்பெருமானார்  ﷺ அவர்களை பின்பற்றுவதை ஆக்கினான்.எனவே அல்லாஹ் அருளியதை பொருந்திக் கொண்டிருப்பதிலும்,இவ்வுலகில் இருந்து எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துவதிலும்,சிக்கனமாக இருப்பதிலும் பூமான் நபி  ﷺ அவர்களை பின்பற்றுங்கள்.சொல்லாலும்,செயலாலும் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதவற்றை விட்டும் தவிர்ந்துக் கொள்வதில் அண்ணல் நபி  ﷺ அவர்களை பின்பற்றுங்கள். எவருக்கு பூமான் நபி  ﷺ அவர்களைப் பின்பற்றுதல் என்னும் கதவு திறக்கின்றதோ ,அது அல்லாஹ் அவரை நேசிப்பதற்கான அறிகுறி.அல்லாஹ் கூறுகின்றான் , "(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்." - அல் குர்ஆன் 3:31.

எனவே, நீங்கள் நன்மைகளை நாடிச்செல்வீர்களேயானால், " யா அல்லாஹ் ! நான் உன்னிடம் உனது ஹபீப்  ﷺ அவர்களை சொல்லிலும்,செயலிலும் பின்பற்றுவதற்குரிய திறனை உன்னிடம் கேட்கின்றேன் " என்று கேளுங்கள்.உண்மையாக,உளப்பூர்வமாக இதனை யாசிப்பவர், அல்லாஹ்வின் அடியார்களை அவர்களது மரியாதை பற்றும் பாரம்பரியத்தைக் கொண்டு ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்.மக்கள் ஒருவர் மற்றொருவருக்கு அநீதமிழைப்பதில் இருந்து  பாதுகாப்பாக இருந்தால், அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் விரைந்து செல்வார்கள்; ஆனால் அவர்கள் கடனாளி ,கடனை வசூலிப்பவரிடம் கட்டுபடுவது போல் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டள்ளனர்.

📚 இமாம் அல் முஹத்திஸ் அஷ் ஷெய்கு தாஜுத்தீன் அபுல் பழ்ல்  இப்னு அதாஅல்லாஹ் இஸ்கந்திரியி அல்மாலிகி அல்அஷ்அரி அஷ்ஷாதுலி قدس الله سره العزيز, தாஜுல் உரூஸ் அல் ஹாவி லீ தஹ்தீப் அல் நுபுஸ்,பக்கம் 3-4

🌹 صلى الله عليه وآله وصحبه وسلم 🌹

Thursday, 8 December 2022

தவஸ்ஸுல்

ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்களது தாயார் ஸெய்யிதா பாத்திமா பின்த் அஸத் رضی الله عنها அவர்கள் வஃபாத்தான பொழுது ,எம்பெருமானார் ஷபீயுல் முத்னிபீன்  ﷺ அவர்கள் பின்வரும் துஆவை அவர்களை புதைப்பதற்கு முன்னர் ஓதினார்கள் , 

" அல்லாஹ்வே உயிரளிப்பவன் ,அவனே உயிரை எடுக்கவும் செய்கின்றான்.அவன் என்றென்றும் நிலைத்திருப்பவன்.அவனுக்கு மரணமில்லை.எனது தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களை மன்னிப்பாயாக நாயனே .அவரது இருப்பிடத்தை விசாலப்படுத்துவாயாக ( மண்ணறையை) ,அவரது நபியின் பொருட்டாலும் ( பி ஹக்கி நபியிக்க) ,எனக்கு முன்னர் வந்த நபிமார்களது பொருட்டினாலும் ( வல் அன்பியா அல்லதீன மின் கப்லீ) .ஏனெனில் நீயே இரக்கமுள்ளவன் ." 


  • இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ,முஜம் அல்கபீர் (24:351) ,முஜம் அல் அவ்ஸத்,பாகம் 1,பக்கம் 67-68,ஹதீத் எண் - 189.

  • இமாம் அபூநுஐம் இஸ்பஹானி رَحِمَهُ ٱللَّٰهُ, ஹில்யதுல் அவ்லியா,3:121.

  • இந்த அறிவிப்பு ஸஹீஹ் என்று இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களும் இமாம் ஹாக்கிம் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களும் கூறுகின்றனர் ,ரவூப் அல்மனாரா,பக்கம் 147,மகாலத் அல்கவ்தாரி.

  • ஹாபிழ் இப்னு ஹஜர் ஹைத்தமி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிப்பாளர் தொடர் நன்று ( ஜய்யித் ஸனத்) என்கிறார்கள்.( இமாம் நவவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது அல்மனாஸிக் நூலின் ஒரக்குறிப்பில் பக்கம் 500) .

  • ஹாபிழ் இப்னு ஹஜர் ஹைத்தமி رَحِمَهُ ٱللَّٰهُ, மஜ்ம அஸ்ஸவாயித்,(9:256-257)

  • ஹாபிழ் இப்னு ஜவ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ,அல் முன்தனஹிய்யாஹ் ,1:268-9,எண் : 443.


உஸ்மானிய கிலாபத்தின் இறுதி ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஜாகித் அல் கவ்தாரி ஹனபி  رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ஹதீதைக் குறித்து எழுதுகின்றார்கள் , " உயிரோடிருப்பவர்கள் மற்று இறந்தவர்களை வஸீலாவாக்குவதற்கு எழுத்துபூர்வமான ஆதாரமாக இது இருக்கின்றது.இது நபிமார்களின் மூலம் வெளிப்படையாக தவஸ்ஸுல் கோருவதாகும்.ஸெய்யிதினா அபூ ஸயீத் அல் குத்ரி رضي الله عنه அவர்கள் அறிவிக்கும் ஹதீஸான " யா அல்லாஹ் ! நான் உன்னிடம் கேட்பவர்களின் உரிமையைக் கொண்டு நான் கேட்கின்றேன் " என்பது பொதுவான முஸ்லிமான எல்லோரிடத்திலும் ,உயிருடனிருப்பவர்,மறித்தவர் ஆகியோரைக் கொண்டு தவஸ்ஸுல் ஆகுமானது என்பதன் ஆதாரமாகும்.

📚  மகாலாத் ,பக்கம் 410.


 

Monday, 28 November 2022

பூமான் நபி ‎ﷺ ‏அவர்களிடத்தில் தவஸ்ஸுல் ‎: ‏


இமாம் இப்னு ஜவ்ஸி அல் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " இமாம் அபூ ஷெய்கு رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது நண்பர் ,இமாம் அபூபக்கர் இப்னு முக்ரி رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஒருமுறை ஏந்தல் நபி  ﷺ அவர்களது புனித ரவ்ழா ஷரீபிற்கு ஜியாரத்திற்கு சென்று ,அங்கேயே சில நாட்கள் கழித்தனர். அவர்களிடத்தில் உணவு இல்லை ,எனவே அவ்விருவரில் ஒருவர் ,' பெருமானார்  ﷺ அவர்களது ரவ்ழா ஷரீபிற்கு சென்று ," யா ரஸூல்லல்லாஹ் ! பசி ,பசி " என்றனர்.சிறிது நேரம் கழித்து அலவிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெருமகனார் ( அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபிதாலிப் رضي الله عنه அவர்களது பிச்சளத்தைச் சார்ந்தவர்)  ,பெருமானார்  ﷺ அவர்களிடம் கனவில் தோன்றி கூறியதற்கு இணங்க ,அவர்களிடம் உணவுடன் வருகை புரிந்தார்கள்.

ஹாபிழ் அபூபக்கர் இப்னு முக்ரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள் , " நான் ஹாபிழ் தப்ரானி அவர்களுடனும் ,ஹாபிழ் அபூ ஷெய்கு அவர்களுடனும் எம்மான் நபி  ﷺ அவர்களது மஸ்ஜிதுந்நபவியில் ,சிறிது கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன்.பசி எங்களை வாட்டியது. அன்றைய தினமும் ,அதற்கடுத்த தினமும் உணவில்லாமல் சிரமத்திற்கு உள்ளானோம்.இஷாவுடைய நேரம் வந்ததும் நான் தாஹா ரஸூல்  ﷺ அவர்களது ரவ்ழா ஷரீபை நெருங்கி , " யா ரஸூல்லல்லாஹ் ! நாங்கள் பசியில் இருக்கின்றோம் ! நாங்கள் பசியில் இருக்கின்றோம் ! " என்று கூறிவிட்டு ,அங்கிருந்து சென்றுவிட்டேன்.

ஹாபிழ் அபூ ஷெய்கு رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் என்னிடம் , " அமருங்கள். ஒன்று நமக்கு உணவு காத்திருக்கும் அல்லது மரணம் காத்திருக்கும் " என்று கூறினார்கள்.அலவிப்  பெருமகனார் ஒருவர் ( அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபிதாலிப் رضي الله عنه அவர்களது பிச்சளத்தைச் சார்ந்தவர்)  இரண்டு சிறுவர்களுடன் வந்து கதவை தட்டினார்.அவ்விரு சிறுவர்களும் தமது கைகளில் ஈச்ச மர கூடை நிறைய உணவுடன் வந்திருந்தனர்.நாங்கள் எழுந்து ,உணவருந்தினோம்.அச்சிறுவர்கள் மீதமிருந்த உணவுகூடையைத் தம்முடன் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் என்று எண்ணினோம்,ஆனால் அவர்களை அதனை அங்கேயே விட்டுவிட்டனர்.நாங்கள் உணவருந்தி முடித்தபின்னர் அலவிப் குடும்பத்தைச் சார்ந்த அப்பெருமகனார் , " மக்களே ! தாங்கள் ஏந்தல் நபி  ﷺ அவர்களிடம் ஏதேனும் கோரிக்கை வைத்திருந்தீர்களா ? நான் உறக்கத்தில் இருந்தேன்.எல்லாம் நபி  ﷺ எனது கனவில் தோன்றி ,நீங்கள் உண்பதற்கு ஏதேனும் கொண்டு செல்லுமாறு பணித்தார்கள் " என்றார்.

இவ்வரலாற்று நிகழ்வை இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது  " தத்கிரதுல் ஹுப்பாழ் - ( ஹதீதுக்கலை அறிஞர்களது வரலாறு) " நூலில் இமாம் அபூபக்கர் முக்ரி رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ஆகியோரது தர்ஜுமாவில் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ , 📚 ஸியார் அஃலா மின் நுபுலா -(16/400-401) |📚 தத்கிரதுல் ஹுப்பாழ் - ( 3:973-974) .

இமாம் இப்னு ஜவ்ஸி ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ ,📚 கிதாப் அல் வபா ,பக்கம் 818, எண்:1536.

மேலும் ஆதாரங்கள் : 

1) الوفا بتعريف فضائل المصطفى للإمام الحافظ جمال الدين أبي الفرج عبد الرحمن بن علي الجوزي الحنبلي(المتوفى :597هـ) ج1, ص 818, طبع دار المعرفة بيروت ـ لبنان .

2) تاريخ الإسلام للإمام الحافظ شمس الدين أبي عبد الله محمد بن أحمد بن عثمان بن قَايْماز الذهبي (المتوفى: 748هـ ) ج27, ص39, طبع دار الكتاب العربي، بيروت .

3) تذكرة الحفاظ الإسلام للإمام الحافظ شمس الدين أبي عبد الله محمد بن أحمد بن عثمان بن قَايْماز الذهبي (المتوفى: 748هـ ) ج3, ص121, طبع دار الكتب العلمية بيروت-لبنان .

4) سير أعلام النبلاء للإمام الحافظ شمس الدين أبي عبد الله محمد بن أحمد بن عثمان بن قَايْماز الذهبي (المتوفى: 748هـ ) ج12, ص 382, دار الحديث- القاهرة ـ مصر .

5) وفاء الوفاء بأخبار دار المصطفى للإمام المؤرخ نور الدين علي بن عبد الله السمهودي (المتوفى: 911هـ) ج4, ص200, طبع دار الكتب العلمية – بيروت .

6) المحاضرات والمحاورات للإمام الحافظ جلال الدين السيوطي (المتوفى : 911هـ) ج1, ص 427, طبع دار الغرب الإسلامي، بيروت .

7) صفحات من صبر العلماء للشيخ عبد الفتاح أبي الغدة (المتوفى: 1417هـ) ص73, طبع مكتب المطبوعات الإسلامية – حلب .

இவ்வரலாற்று நிகழ்வு மாபெரும் ஹதீத் கலை வல்லுநர்களான இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ,  இமாம் அபூ ஷெய்கு رَحِمَهُ ٱللَّٰهُ ஆகியோரது கொள்கையையும்,இந்நிகழ்வை அறிவிக்கும் இமாம் இப்னு ஜவ்ஸி ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது கொள்கையையும் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றது.மேலும் இந்நிகழ்வை எவ்வித விமர்சனமுமின்றி அறிவிப்பதன் மூலம் இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது கொள்கையையும் காட்டுகின்றது. ஜர்ஹ் வ தஃதீல் கலையில் மிகவும் கண்டிப்பானவர்களான இமாம் இப்னு ஜவ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது நூலின் ஆரம்பத்தில் தாம் ஸஹீஹான அறிவிப்பகளுடன் பலகீனமான அறிவிப்புகளை கலக்கவில்லை என்று கூறியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் மற்றொரு முஹத்தித் அறிஞரான இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது சுய அனுபவத்தை பதிவு செய்து எழுது கின்றார்கள் , " துஸ் நகரில் நான் இருக்கும் காலம்,எப்போதெல்லாம் என்னை சோதனை சூழ்கின்றதோ,நான் ஸெய்யிதினா இமாம் அலீ இப்னு மூஸா رضي الله عنه அவர்களது ஸியாரத்திற்குச் சென்று ,அல்லாஹ்விடம் என்னை அந்த சோதனையை விட்டும் காப்பாற்றிட துஆ செய்தவேன்.எனது துஆ ஒப்புக்கொள்ளப்பட்டு ,துன்பங்கள் என்னை விட்டும் விலகிடும்.இதனை நான் பலமுறை எனது அனுபவத்தில் செய்து,பலன் பெற்றுள்ளேன்" .

இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ,📚 கிதாப் அல் திகாத்,பாகம் 8,பக்கம் 456-457 .

அன்பியாக்கள் தமது மறைவிற்குப் பின்னர் ஹயாத்துடன் பர்ஜக்குடைய வாழ்வை வாழ்கின்றனர் என்பதும் ஸெய்யிதுல் அன்பியா கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் தம் சமூகத்தில் வைக்கப்படும் கோரிக்கைகளை கேட்டு ,உதவி தேடுபவர்களுக்கு உதவி அளிக்கின்றனர் என்பதும் இவ்வரலாற்று நிகழ்வின் படிப்பினைகளாகும்.

Wednesday, 19 October 2022

மவ்லிதுந்நபி பற்றி ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி ‎رَحِمَهُ ٱللَّٰهُ

ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்திய துணைகண்டத்தில் ஹதீஸ் கலையை பரப்பிய முன்னோடி ஆவார்.அன்னார் ஹிஜ்ரி 958ல் தில்லியில் 11 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.அவர்களது மறைவு ஹிஜ்ரி 1052 ஆம் ஆண்டு.

தமது தகப்பனார் ஷெய்கு ஸைபுத்தீன் துர்க் புகாரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் ஆரம்ப இஸ்லாமிய கல்வியை கற்றனர்.தமது 12 மற்றும் 13வது வயதில் "ஷரஹ் ஷம்ஷியாஹ்" ,"ஷரஹ் அகாயித்" ஆகிய நூற்களையும்,15 மற்றும் 16 வது வயதில் "முக்தஸர்" ,"முதவ்வல்" ஆகிய நூற்களை கற்றுத் தேர்ந்தார்கள்.

📚 அஷியதுல் லம்ஆத் ,பக்கம் 71.

ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ரிவாயத்,திராயத் மற்றும் ஜர்ஹ் வதஃதீல் கலைகளில் தலைசிறந்து விளங்கினர்.புனித மக்கா ஷரீபிற்கு 996 ஹிஜ்ரி ஹஜ் பயணம் மேற்கொண்டு அங்கு சில காலம் தங் கி கல்வி பயின்று,ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் முத்தகி முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் 'இர்ஷாத்' ,'ஸுலூக்' உடைய பாடங்களை கற்றனர்.

இஸ்லாமிய உலூம்களில் தலைசிறந்த விளங்கி ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள்,குறிப்பாக ஹதீதுக் கலையில் விற்பன்னராக விளங்கினார்கள். 116 நூற்களை எழதியுள்ள அன்னார்,ஹதீதுக் கலையில் 13 நூற்களை எழுதியுள்ளார்கள்.'மிஷ்காத் ஷரீபின்' அரபி விளக்கவுரை ,10 பாகங்களாக 'லம்ஆதுத் தன்கீஹ்' என்றும்,பார்ஸி மொழியில் 'அஷியத்துல் லம்ஆத்' , 4 பாகங்களாக எழுதியுள்ளார்கள். 

மீலாத் குறித்த அன்னாரது பதிவுகள் :
பெருமானார்  ﷺ அவர்களது ஸஹீஹான ஹதீஸ் தொகுப்பான " மா ஸபத மினஸ் ஸுன்னா" என்ற நூலில் , ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " ரபீயுல் அவ்வல் மாதம்தோறும் முஸ்லிம்கள் எப்பொழுதும் மீலாத் ஷரீப் கொண்டாடி உள்ளனர்.பகல்,இரவுகளில் ஸதகா செய்து பெரும் ஆர்வமுடன் , நன்றி செலுத்துவர்.முஸ்லிம்களின் பொதுவான பழக்கம் கண்மணி நாயகம்  ﷺ அவர்களது பிறப்பின் பொழுது நிகழ்ந்த விசேஷமான சம்பவங்களை அவர்கள் குறிப்பாக பிரசங்கம் செய்வர் " 

  📚மா ஸபத மினஸ் ஸுன்னா, பக்கம் 82,கைய்யூமி பதிப்பகம்,கான்பூர்.

ஷெய்கு அப்துல் ஹக் முஹத்தித் திஹல்வி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் வழிமுறை மவ்லித் ஷரீப் ஓதுவதும் , பெருமானாரின் பிறப்பு பற்றிய சம்பங்களின் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதும் ஆகும் .

அன்னார் கூறுகின்றார்கள் , " யா அல்லாஹ் ! உன்னுடைய மேலான திருச்சன்னிதானம் முன் சமர்ப்பிக்கும் அளவு என்னுடைய எந்த அமலுக்கும் மதிப்பில்லை . என்னுடைய எல்லா அமல்களிலும் ஏதோ சிறு குறைகள் ஏற்பட்டிருக்கும் ,மேலும் அந்த அமல்களில் என்னுடைய நிய்யத்தும் தொடர்புகொண்டிருக்கும் . எனினும் என்னுடைய ஒரு அமல் நன்மையானதும் ,கொளரவம் பொருந்தியதும் ஆகும் . அது என்னவெனில் மீலாது சபைகளில் நான் நின்று கொண்டு மிக்க பணிவுடனும்,மிகுந்த நேசத்துடனும் உன்னுடைய ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தும் ,ஸலாமும் கூறுகின்றேன் .  "
   📚 அக்பாருள் அக்யார் ,பக்கம் 264.

அன்னாரது காலம் முகலாய அரசர் ஷாஜகானின் காலமாகும். அன்னாரது கொள்கைகள் ,பல்வேறு நவீன கால இயக்கங்கள் ( தேவ்பந்தி தப்லீக் ஜமாத், அஹ்லே ஹதீஸ்,ஜமாத்தே இஸ்லாமி , ஸலபி வஹாபி )  தோன்றுவதற்கு முந்திய அக்கால முஸ்லிம் உம்மத்தின் நடைமுறைகளை தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றது. ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ தமது 94 வது ரபீயுல் அவ்வல் பிறை 21 அன்று ,ஹிஜ்ரி 1052 ல் வபாத்தானார்கள்.அன்னாரது மக்பரா மெஹ்ரவ்லி,தில்லியில் உள்ளது .

Tuesday, 6 September 2022

உஸ்தாத்- மாணவர்

🌹இஸ்லாம் கூறும் ஆசிரியர் - மாணவர் உறவு 🌹

மார்க்க கல்வி கற்கும் மாணவர் முதன்மையாக தனது நப்ஸைத்  தூய்மைப்படுத்துவதில் தொடங்க வேண்டும் மற்றும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஏனென்றால் இல்ம்  என்பது கல்பின் வணக்கமாகும். அறிவைத் தேடுவதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். முற்கால முஸ்லிம்கள் எதையும் விட இல்மிற்கு முன்னுரிமை அளித்து வந்தனர். உதாரணமாக, இமாம் அஹ்மத் பின் ஹன்பல்  رضي الله عنه நாற்பது  வயது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

கல்வி கற்கும் மாணவரிடம் , ஆசிரியர் ஒரு நோயாளியிடம்  மருத்துவர் எவ்வாறு நடந்து கொள்வாரோ அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் . மாணவர் தனக்கு இல்ம் கற்பிக்கும்  ஆசிரியருக்கு சேவை செய்திட வேண்டும். இப்னு அப்துல்-பார் رَحِمَهُ ٱللَّٰهُ,  தனது 📖ஜாமி’ பயான் அல்-’இல்ம் வா ஃபத்லிஹ் நூலில் கூறுகின்றார்கள் , " ஸெய்யிதினா ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள், ஸெய்யிதினா ஜைத் இப்னு தாபித் رضي الله عنه அவர்களின்  வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்தவாறு ஓடினார்கள். ஸெய்யிதினா ஜைத் இப்னு தாபித் رضي الله عنه அவர்கள் -அன்னாரிடம், "நபி ( ﷺ) அவர்களின் உறவினரே, வேண்டாம்!" என்று மறுத்தார்கள். அப்போது ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு அப்பாஸ் رضي الله عنه , “எங்களில் உள்ள கல்விமான்களை  இப்படித்தான் நடத்த வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது” என்று கூறுவர்.

மார்க்க கல்வி கற்கும் மாணவர் பெருமிதம் கொள்வதை விட்டும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அது அறிவீனர்களின் குறைபாடு. அவர் அனைத்து விஷயங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும் மற்றும் தனது சொந்த கருத்தை விட தனது உஸ்தாதின் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.📖 அல் ஜாமீ லி அஹ்லாக் அல் ராவி வ அதப் அஸ்ஸாம் நூலில், இமாம் கதீப் அல்-பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் , "பொதுமக்களுக்கு வாழ்த்து கூறுவது அறிஞரது உரிமையாகும். பொதுவாக மற்றும் குறிப்பாக வாழ்த்தப்பட வேண்டும். நீங்கள் மார்க்க அறிஞருக்கு முன்பாக உட்கார்ந்து,அதிகமான தேவையற்ற கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் அவருடைய இரகசியங்களை வெளியிடாதீர்கள், அவர் முன்னிலையில் மக்களைப் பற்றி புறம் பேசாதீர்கள், அவருடைய குறைபாடுகளைக் கண்டறியாதீர்கள்." என்று கூறுகின்றார்கள்.

இல்ம் கற்கும் மாணவர், அறிவைத் தேடும் தொடக்கத்தில், மனக்குழப்பங்களைத் தவிர்க்க வேண்டி ,அறிஞர்களது வேறுபாடுகளில்  தனது மனதை ஆக்கிரமிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறார்.

ஆசிரியரைப் பொறுத்தவரை, அவர் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்காக அறிவைக் கற்பிப்பதில் அவர் தனது முயற்சிகளை அர்ப்பணிக்க வேண்டும், மக்களிடமிருந்து வெகுமதிகளையோ நன்றியையோ தேடக்கூடாது. ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் மாணவர்களிடமிருந்து பரிசுகளை மறுத்தனர். ஆசிரியர் தனது மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் மற்றும் இந்த விஷயத்தில் சிறந்த நடத்தைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், ஆசிரியர் தனது மாணவருக்குப் புரியும் மற்றும் புரிந்துகொள்ளக்கூடியவற்றைக் கற்பிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக, மார்க்க அறிஞர் தன் இல்முக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல நாயனான அல்லாஹ்   سبحانه و تعالى கூறுகிறான்:

اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
நீங்கள்  வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
அல் குர்ஆன் 2:44

📚 இமாம் இப்னு குதாமா அல் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ , மின்ஹஜ் அல் காஸிதீன் ,பக்கம் 9-10

Friday, 19 August 2022

நபிமார்களின் மறைவான ஞானம்

🌹நபிமார்களின் மறைவான ஞானம் 🌹

 நபிமார்களின் மறைவான ஞானம் குறித்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையை விளக்கும் விதமாக மாபெரும் ஹதீஸ் கலைவல்லுநர், ஷெய்குல் இஸ்லாம் அல் ஹாஃபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி அஷ்அரீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் ,

" நிச்சயமாக நுபுவ்வத் என்ற பிரயோகம் நபிக்கு மட்டும் பிரத்யேகமானதும்,நபியை பிறரிடம் இருந்து பிரித்து காட்டுவதுமாகும்.நுபுவ்வத் ஏராளமான தனித்தன்மைகளால் தனித்துவம் பெற்றதாகும்.அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களின் எதார்த்தத்தை நபி அறிகிறார்கள்.அல்லாஹ்வுடைய ஸிஃபத் ( குணங்கள்) சம்பந்தப்பட்ட விஷயங்களின் எதார்த்தத்தையும் ( ஹகீகத்தை)  நபி அறிகின்றார்கள். மலக்குகள் மற்றும் மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தையும் நபிமார்கள் அறிவார்கள்.

இந்த அறிவு மனிதர்களின் அறிவைப் போன்றதல்ல.நபிமார்களிடம் இவை குறித்த அதிகளவிலான அறிவு உண்டு.சாதாரணமானவர்களுக்கு இல்லாத உறுதி அவர்களுக்கு உண்டு.சாதாரணமானவர்களுக்கு அவர்களுடைய விஷயங்களை கையாளுவதற்கான தன்மை உள்ளது போல,அசாதாரணமான விஷயங்களை கையாளும் தன்மை நபிமார்களுக்கு உண்டு.

இந்த விசேஷ தன்மையால் மலக்குகளைக் காண்பதற்கும்,மலக்கூத்தியான உலகை நேரில் பார்ப்பதற்கும் நபிமார்களுக்கு இயலும்.இந்த தனித்தன்மை பார்வையற்றவனையும்,பார்வையுள்ளவரையும் வேறுபடுத்துவது போன்றதாகும்.

மறைவான காரியங்களை அறிவதற்கும்,லவ்ஹுல் மஹ்ஃபூழில் பதிவு செய்யப்பட்ட விஷயங்களை பார்வையிடுவதற்கும் இத்தன்மை மூலம் நபிமார்களுக்கு சாத்தியமாகும்.இது அறிவுள்ளவரையும்,அறிவற்றவனையும் வேறுபடுத்துவது போன்ற தன்மையாகும்.இவை அனைத்தும் நபிமார்களின் பூரணத்துவத்தை ( கமாலியத்தை) உறுதிபடுத்தும் தன்மைகளாகும்.

📚 பத்ஹுல் பாரி ஷரஹ் புஹாரி 

அல்குர்ஆன் ஷரீபை மனனம் செய்தவர்களை ஹாஃபிழுல் குர்ஆன் என்றழைப்பது போன்று , ஹதீதுக் கலை வல்லுநர்களில் ஒரு இலட்சம் ஹதீதுகளை அதன் சொற்றொடர் ( மத்ன்) மற்றும் அறிவிப்பாளர் தொடர் ( இஸ்னத்) ஆகியவற்றை மனனம் செய்தவர்களையே ஹாஃபிழ் என்று அழைக்கப்படும்.அத்தகைய மார்க்க அறிஞர் அறிவிப்பாளர் குறித்த விமர்சனம் மற்றும் சரிபார்த்தல் துறையில் ( ஜர்ஹ் வ தஃதீல்) வல்லுநராக இருக்க வேண்டும்.இன்னும் அறிவிப்பாளர்கள் மறைந்த ஆண்டையும் அறிந்து வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

பிந்தைய கால மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டு எழுதாமல் ,ஹாஃபிழ் என பொதுப்படையாக தமது நூற்களில் மேற்கோள் இட்டவர்கள் ஷெய்குல் இஸ்லாம் ஹாஃபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தாம்.அல்லாஹ்  سبحانه و تعالى அன்னவர்களின் அந்தஸ்தை மேன்மேலும் உயர்த்துவானாக !   

Friday, 15 July 2022

ஜியாரத்தை நோக்கி பயணம்

அண்ணல் நபி  ﷺ அவர்களது ஜியாரத் : 

மதீனத்து வேந்தர்,ஈருலக இரட்சகர்,ஷபீயுல் முத்னிபீன் முஹம்மது முஸ்தபா  ﷺ அவர்கள் இப்பூவுலகை விட்டும் மறைந்த பின்னர், 'ஆஷிகீன்கின் நாயகம்' நாயகத் தோழர் ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்கள் தன் ஹபீப் முஸ்தபா  ﷺ ஆற்றொன்னா பிரிவால் ஏங்கி  மதீனாவின் ஒவ்வொரு பகுதியும் அண்ணல் நபி  ﷺ அவர்களை நினைவூட்டுவதால், மதீனத்துல் முனவ்வராவை விட்டு ,ஷாம் தேசம் சென்று விடுகின்றார்கள்.

ஒருபொழுது ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்கள் ஷாம் தேசத்தில் இருக்கும் வேலையில்,அருமை நபி நாயகம்  ﷺ அவர்கள் தமது தோழரின் கனவில் தோன்றினார்கள். பின்னர் நாயகம்  ﷺ அவர்கள் ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்களிடம் , " பிலால் , இது எவ்வாறான அநீதம் ? எவ்வாறான சங்கடம் ? என்னை விட்டும் விலகிச் சென்று விட்டீரே ? " 

என்னை வந்து சந்திப்பதற்கான நேரம் வரவில்லையா ? " என்று வினவினார்கள்.

தமது நாயகத்தின் கேள்விதனைக் கேட்ட ஸெய்யிதினா பிலால் رضي الله عنه துக்கம் மேலிட விழித்தெழுந்தார்கள். மதீனத்து வேந்தர்  ﷺ அவர்களது மாட்சிமைமிகு தர்பார் நோக்கி விரைந்து பயணப்படலானார்கள்.

மதீனா முனவ்வரா வந்தடைந்து ,மன்னர் மஹ்மூதர்  ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழாவிற்குச் சென்று ஆரத்தழுவி ,தேம்பி தேம்பி அழுதார்கள்.இன்னும் தமது முகத்தை புனிதமிகும் ரவ்ழா ஷரீபில் தேய்த்து அழுதார்கள். 


  • இமாம் தகீயுத்தீன் ஸுப்கி رَحِمَهُ ٱللَّٰهُ, ஷிபாஉஸ் ஸிகாம் பீ ஸியாரத்தி ஹைரில் அனாம் ,பக்கம் 185

இந்த ஹதீதை அநேக முஹத்திஸீன்கள் தமது நால்களில் எழுதியுள்ளனர்.இதனை ' ஹஸன்' என்றும் கூறியுள்ளனர்.


  • இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ,தாரீக் திமிஷ்க்,பாகம் 7,பக்கம் 137.இமாம் இப்னு அஸாகிர் இந்த ரிவாயத்தின் ஸனதும் நன்று என்று கூறியுள்ளார்கள்.

  • இமாம் இப்னு அதீர் رَحِمَهُ ٱللَّٰهُ, உஸுதுல் காபா,பாகம் 1,பக்கம் 308.

  • இமாம் நவவி رَحِمَهُ ٱللَّٰهُ,தஹ்தீப் அல் அஸ்மா ,பாகம் 1,பக்கம் 136.

  • இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,தாரீக்குல் இஸ்லாம்,பாகம் 17,பக்கம் 66.

  • இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,ஸியார் அஃலம் அந்நுபலா,பாகம் 1,பக்கம் 358.

  • ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ,மதாரிஜுந் நுபுவ்வா,பாகம் 2,பக்கம் 583.

  • காழீ ஷவ்கானி,நைல் அல் அவ்தார்,பாகம் 4,பக்கம் 180.இதில் காழீ ஷவ்கானி இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ரிவாயத்தை ஸஹீஹான ஸனதுடன் நகல் எடுத்துள்ளார்கள் என்று கூறுகின்றார்.


Thursday, 30 June 2022

அத்தஸவ்வுப் - 3

 தொகுப்பு - அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர்ரஸூல்,அஷ் ஷெய்குல் காமில்,அஷ் ஷாஹ் ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாழில்  பாகவி ஸூஃபி காதிரி காஹிரி قدس الله سره العزيز


வெளியீடு : ஹிஸ்புல்லாஹ் சபை,ஸூஃபி மன்ஸில்,காயல்பட்டணம்-628204.

வெளியீட்டு தேதி : ஹிஜ்ரி 1432,ரபீயுல் அவ்வல் பிறை 12 .
ஈஸவி 2011,பிப்ரவரி 16.

*** اَلتَّصَوُّب  | அத்தஸவ்வுப்-ஸூபிஸம் ***


மற்தபாக்கள் – படித்தரங்கள். مرتبة

 " رفيعالدّرخات-  ரபீவுத்தரஜாத-  படித்தரங்கள் உயர்த்தியானவன் " என்று திருக்குர்ஆனில் 40:15       சொன்னதுபோல் அவனது உஜூது வெளியாவதை தேடிய கமாலாத்து  –பூரணத்துவமான மற்தபாக்களில் இறங்குகிற புறத்தில் அனேகமான மற்தபாக்கள் அவனது உஜூதுக்கு உண்டு.

மெஞ்ஞானிகளான ஸூபியாக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் காட்டியுள்ளார்கள். சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜியலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது 'அல்கஹ்பு வற்றஹீம். الكهف والرّقيم – எனும் நூலில் நாற்பது படித்தரங்களை எண்ணிக் காட்டியுள்ளார்கள். எங்களது ஷெய்கு  நாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அத்துஹ்பத்துல் முற்ஸலாவின் மொழிப் பெயர்ப்பு நூலை காண்க!)

அத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலாசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு மற்தபாக்களாக – படித்தரங்களாக சுருக்கி எழுதியுள்ளார்கள். அதனை மிக சுருக்கமாக கீழே தருகிறோம்.  

1. அல் அஹதிய்யத்-  الاحديّة தனித்தன்மையானது. அல்லாதஅய்யுனு –குறிப்பில்லாதது அல்இத்லாகு-குறிப்பை விட்டும் பொதுப்படையானது. அத்தாதுல் பஹ்து-கலப்பற்ற தத்சொரூபம். ஜம்வுல்ஜம்வு-சேகரத்தின் சேகரம். ஹகீகத்துல் ஹகாயிகி-எதார்த்தங்களின் எதார்த்தம். அல்அமா-விபரமில்லாதது. அத்தாத்துல் ஸாதஜ்-கலப்பற்ற தாத்து. அல்மஸ்கூத்து அன்ஹு-அதைத் தொட்டும் வாய் பொத்தப்பட்டது. இதற்கு மேலால் வேறொரு மர்த்த்தபா இல்லை. சகல மர்தபாக்களும் இதற்கு கீழே உள்ளதாகும்.  

2. அல் வஹ்தத்-தனியாக இருப்பது. அத்தஅய்யனுல் அவ்வல்-முதலாவது குறிப்பு. அல்ஹகீகத்துல் முஹம்மதிய்யா-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம். மகாமு அவ்அத்னா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சொந்தமான, அரி, பெரிய பாக்கியமான மிஃராஜில் இங்கு வரை ஏற்றம் கிடைத்ததினால் 'அதை விட இன்னும் மிக நெருக்கமான இடம்' என்று சொல்லப்பட்டது. அல்பற்ஸகுல் குப்றா-மிக பெரிய மத்திபமானது.  

3. அல்வாஹிதிய்யத்-ஒன்றாக இருப்பது. அத்தஅய்யுனத்தானி-இரண்டாவது குறிப்பு அல்ஹகீகத்துல் இன்ஸானிய்யா-மானுஷீகத்தின் எதார்த்தம். காப கௌஸைனி-இரு வில்லின் நாண். மற்தபத்துல் அஸ்மா-பெயர்களின் படித்தரம். இம் மூன்று படித்தரங்களும் பூர்வீகமானதாகும். துவக்கமில்லாததாகும். முந்தியது பிந்தியது என்று ஆனது புத்தியினாலாகும். காலத்தினால் அல்ல. காலமும், ஸ்தலமும் இல்லாத போது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான்.  

4. ஆலமுல் அர்வாஹ்-ரூஹுகளின் உலகம். ஆலமுல் ஜபரூத் -பொருந்தும் உலகம். ஆலமுல் கியாலுல் முத்லக்-கட்டுப்பாடாகாத கற்பனை உலகம்.  

5.ஆலமுல் மிதால்-மாதிரி உலகம் (சூட்சும உலகம்) ஆலமுல் கியாலில் முகய்யத்-கட்டுப்பாடான கற்பனை உலகம்.  

6. ஆலமுல் அஜ்ஸாம்- சடங்கள் உலகம். ஆலமுஷ்ஷஹாதத்-சாக்கிர உலகம். ஆலமுல் முல்க்- ஆட்சி அதிகார உலகம்.  

7. அல்இன்ஸான் -மனிதன். இதுதான் கடைசியான தஜல்லி-தோற்றமும் உடையுமாகும். ஒவ்வொரு படித்தரங்களின் பெயர்களுக்குரிய காரணங்கள், குணங்கள் பற்றி தக்க விளக்கமாக 'அத்துஹ்பத்துல் முற்ஸலா' எனும் நூல் போன்றவைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசையுள்ளவர்கள் அவைகளில் காண்க!  

ஒரு மற்தபாவில்-படித்தரத்தில் இருந்து வேறொரு படித்தரத்திற்கு வருவதற்கு தஜல்லி- தோற்றம், தனஸ்ஸுல்-இறக்கம் என்று சொல்வார்கள்.  

உதாரணமாக:- பாலாக இருக்கும் தன்மையிலிருந்து தயிரின் தன்மைக்கு வந்தால் அப்போது பால், தயிரின் கோலத்தில் தஜல்லியானது-தோன்றியது, வெளியானது, அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். மெழுகு வர்த்தியின் எண்ணெய் உறைந்து மெழுகின் தன்மையில் வந்தால் அப்போது மெழுகுவர்த்தியின் எண்ணெய் மெழுகின் கோலத்தில் தஜல்லியானது- தோன்றியது, வெளியானது அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். முதல் தன்மைக்கு நிலைமைக்கு திரும்பினால் உறூஜ்-ஏறுவது என்று சொல்வார்கள்.  

மேற்கூறப்பட்ட 'அஹதிய்யத்' என்ற முதல் படித்தரம் அல்லாத ஏனை படித்தரங்களில் ஏறி, கூறப்பட்ட படித்தரங்களில் இருப்பது அனைத்தும் மனிதனில் வெளியானால் அவனுக்கு 'அல் இன்ஸானுல் காமில்' –சம்பூரண மனிதன் என்று சொல்லப்படும்.  

இவ்வகையான ஏற்றம் சம்பூரணமாக நமது நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில்தான் ஆனது. இதனாலேயே 'அக்மலுல் காமிலீன்-பூரணமானவர்களில் மிக சம்பூரணமானவர்'களாக ஆனார்கள்.  

'பாத்திஹுல் உஜூத்'-உஜூதுக்கு (உலகிற்கு) திறவு கோலாக, ஆரம்பமானவர்களாக இருப்பது போல், 'காத்தமுன் னபிய்யீன்'-நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக, முத்திரங்கமானவர்களாக ஆனார்கள்.  

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம்.  


*************** ( தொடரும் ) *************


Monday, 7 February 2022

இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ‎رَحِمَهُ ٱللَّٰهُ

மாதிஹுஸ் ஸிப்தைன்  இமாமுல் அரூஸ் அஷ் ஷெய்கு ஸெய்யது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் رَحِمَهُ ٱللَّٰهُ :

Monday, 31 January 2022

அத்தஸவ்வுப் - 2

 தொகுப்பு - அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர்ரஸூல்,அஷ் ஷெய்குல் காமில்,அஷ் ஷாஹ் ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாழில்  பாகவி ஸூஃபி காதிரி காஹிரி قدس الله سره العزيز

Tuesday, 25 January 2022

அத்தஸவ்வுப் - 1

தொகுப்பு - அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர்ரஸூல்,அஷ் ஷெய்குல் காமில்,அஷ் ஷாஹ் ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாழில்  பாகவி ஸூஃபி காதிரி காஹிரி قدس الله سره العزيز
Related Posts Plugin for WordPress, Blogger...