அஷ்ஷெய்கு வல்பைஅத்- குருவும் தீட்சையும்.
*தொடர்-2*
தொகுப்பாசிரியர்: அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்புர்ரஸுல் அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் S.M.H. முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரி காஹிரி قدس الله سره العزيز அவர்கள்.
பைஅத் செய்யும் போது சுன்னத்தான குத்பா ஓத வேண்டும். பின் ஈமானைப் பற்றி எடுத்துச் சொல்லி கொடுக்க வேண்டும். பின் ஷஹாதத் கலிமா சொல்லிக் கொடுக்க வேண்டும். பின்பு பைஅத் – உடன்படிக்கை செய்து கொண்டோம் என்று சொல்ல வேண்டும். பின் 5:35, 48:10 ஆகிய இரு திருவசனங்களை ஓத வேண்டும்' என்ற ஒழுங்கு முறையை நம் சங்கைமிகு ஷெய்குமார்களில் ஒருவரான மகான் ஷாஹ் வலியுல்லாஹ் قدس الله سره العزيز அவர்கள் எழுதியுள்ளார்கள்.
[ ஷிபாவுல் அலீல் பக்கம் 27]
ஸெய்யிதினா ஹத்தாது இப்னு அவ்ஸ் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நாங்கள் நாயகம் ﷺ அவர்கள் சமூகத்தில் இருந்தோம். வேதக்காரர்கள் (யூதர்கள்) அறிமுகமில்லாதவர்கள் உங்களுடன் இருக்கிறார்களா? என்று வினவினார்கள். நான் இல்லை என்று சொன்னேன். வாசலை மூடும்படியாக உத்தரவிட்டார்கள். பின்பு உங்கள் கைகளை உயர்த்துங்கள்
لَا اِلٰهَ اِلّا اللهலாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் என்றார்கள். பின் அல்ஹம்துலில்லாஹ் اَلْحَمْدُ لِلّٰهْ'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இறைவா! இந்தத் திருக் கலிமாவைக் கொண்டே அனுப்பினாய். இதைக் கொண்டே எனக்கு ஏவினாய். இதற்கு சுவர்க்கத்தை (தருவதாக) வாக்களித்தாய். நிச்சயமாக நீ (வாக்களித்தால்) வாக்கிற்கு மாறு செய்ய மாட்டாய்' என்று சொன்னார்கள். (சஹாபாக்களே!) அறிந்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னித்து விட்டான் என்ற சுப செய்தியை அறிவியுங்கள் என்று நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள்.
ஸெய்யிதினா யூசுப்புல் கூறானி رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
அல்லாஹ்வின் தூதரே! எப்படி நான் (அல்லாஹ்வை) திக்ரு-தியானம் செய்ய வேண்டும் என்று ஸெய்யிதினா அலி كرم الله وجهه அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள்:- உனது இரு கண்களையும் பொத்திக் கொள்! நான் மூன்று முறை சொல்வதை கேட்டுக் கொண்டிரு. பின் நீ மூன்று முறை சொல்! நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இரு கண்களை பொத்தி சப்தத்தை உயர்த்தி لَا اِلٰهَ اِلّا الله லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார்கள். அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்பு ஸெய்யிதினா அலி كرم الله وجهه அவர்கள் சொன்னார்கள் நாயகம் ﷺ அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதுவே அலி நாயகத்திற்குரிய தொடர்பாகும்.
[அறிவிப்பாளர்: அஹ்மது , தப்ரானி நூல் ஜாமிவுல் உஸூல்]
முதல் ஹதீது அறிவிப்பில் பலருக்கு மொத்தமாகவும் இரண்டாவது ஹதீது அறிவிப்பு தனி நபருக்கும் திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்து பைஅத்-தீட்சை கொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவு. இதுவே அடிப்படையான ஆதாரமாகும்.
ஆகவே காமிலான ஷெய்குமார்களிடம் பைஅத் பெறுவது வாழையடி வாழையாக நடைமுறையில் இருந்து வரும் வழிமுறையாகும்.
குருவின் கரம் பிடித்து கரை சேர்வோம். அகக்குருடர்களின் குருட்டு வழியை விட்டு விடுவோம். உண்மையான சீரான வழியில் சேர்ந்திடுவோம். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லுதவி புரிவானாக! ஆமீன்.
போலி ஷெய்கும், கராமத்தும், தண்டனையும் :
விலாயத் வலித்துவம் (தான் அவ்லியாக்களில் ஒருவனாக) இருப்பதாக வாதிப்பதற்கும், கராமத்து (அற்புதங்கள்) இருப்பதாக இட்டுக்கட்டி சொல்வதற்கும் தண்டனை ஸூவுல் காத்திமா -கெட்ட முடிவாகும். (ஈமான் இல்லாமல் சாவதாகும். அல்லாஹு தஆலா அதை விட்டும் காப்பாற்றுவானாக!)
[இஹ்யா உலுமித்தீன் பாகம் 1 பக்கம் 130]
காமிலான ஷெய்கின் உத்தரவின்றி ஷெய்கு என்று முன்னுக்கு வருவது முற்றிலும் அபாயகரமாகும். கெட்ட முடிவுக்கு காரணமாகும். இதை செய்தவன் தவ்பா-பாவமன்னிப்பு தேடாவிட்டால் காபிராகவே அன்றி மரணமாக மாட்டான். பொய்யாக விலாயத்தை -வலித்துவத்தை வாதிப்பது, உத்தரவின்றி ஷெய்கு என்று முன்னுக்கு வந்து அவ்ராதுகள் ஓதுவதற்கு அனுமதி கொடுப்பது இவைகளில் ஒன்றை செய்து விட்டு தவ்பா செய்யாவிட்டால் سُؤُالْخَاتِمَةஸூவுல் காத்திமா-கெட்ட முடிவிலேயே மரணிப்பான். அல்லாஹ் காப்பாற்றுவானாக! என்று கஷ்பு உள்ள -மனதில் உதிப்புள்ளவர் (நாதாக்)கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.
[ ரிமாஹு ஹிஸ்பில்லாஹ் பாகம் 1 பக்கம் 20]
عَنْ اَبِيْ مُوْسىٰ رَضِى الله عَنْهُ قَالَ دَخَلْتُ عَلى النَّبِىِّ صَلَّ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَاوَرَجُلَانِ مِنْ بَنِىْ عَمِّىْ فَقَالَ اَحَدُهُمَا يَارَسُوْلَ اللهِ اَمِّرْنَا
عَلىٰ بَعْضِ مَاوَلَّاكَ اللهُ وَ قَالَ الْآخَرُ مِثْلَ ذٰلِكَ فَقَالَ اِنَّا وَاللهِ لَانُوَلِّى عَلىٰ هَذَاالْعَمَلِ اَحَدًا سَأَلَهُ وَلَا اَحَدًا حَرَصَ عَلَيْهِ وَفِيْ رِوَايَةٍ قَالَ لَا نَسْتَعْمِلُ عَلىٰ عَمَلِنَا مَنْ اَرَادَهُ مُتُّفَقٌ عَلَيْهِ
ஸெய்யிதினா அபூ மூஸா رضي الله عنه அவர்கள் சொல்கிறார்கள்:-
நானும் தந்தை வழி பிள்ளைகளில் இருவர்களும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சமூகம் சென்றோம். யா ரஸூலல்லாஹ் – அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அதிகாரம் தந்திருக்கும் (எத்தனையோ) காரியங்களில் ஓன்றில் (மற்றவர்களை அதிகாரியாக்கிறது போல்) எங்களையும் அதிகாரியாக்குங்கள் என்று ஒருவர் கேட்டார். மற்றவரும் அதைப்போல் கேட்டார். நாயகம் ﷺ அவர்கள் (பதில்) சொன்னார்கள்:- அல்லாஹ்வின் ஆணையாக இந்த வேலையில் கேட்டவர் எவரையும் அல்லது அதன் மீது ஆசைப்பட்டவர் எவரையும் அதிகாரியாக்க மாட்டோம். நாடியவருக்கும் நமது வேலையில் அமர்த்த மாட்டோம்.
[புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பாகம் 2 பக்கம் 186, ஹதீது எண் 3681]
இதை அடிப்படையாக வைத்து நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி قدس الله سره العزيز அவர்களிடத்தில் கிலாபத் கேட்டவர்களுக்கும், மனதில் நாடியவர்களுக்கும் ஆசித்தவர்களுக்கும் இந்த ஹதீதை ஓதிக் காட்டி கிலாபத் கொடுக்க மறுத்து விட்டார்கள். இதனால் வெறுப்படைந்து வேறு ஷெய்குமார்களிடத்தில் சென்று கிலாபத் கேட்டு வாங்கி சீர் கெட்டு இழிவடைந்து போனார்கள். அல்லாஹு தஆலா நம்மை காப்பாற்றுவானாக!
அதையே மனதிற் கொண்டு நம் ஷெய்கு நாயகத்தின் மீதுள்ள சலாம் பைத்தில்
اٍنْ عَفَوْ تُّمْ هَا فَلاَحًا ، فِي الدُّنَا غَدَا نَجَاحًا
اِنْ طَرَدْتُّمْ وَافَضِيْحًا ، شَيْخَنَا سَلاَمْ عَلَيْكُمْ
நீங்கள் மன்னித்து விட்டால் துன்யாவிலும், மறுமையிலும் ஆஹா! வெற்றி! ஈடேற்றம்!! நீங்கள் விரட்டி விட்டீர்களேயானால் அந்தோ! கேவலம்!! எங்கள் ஷெய்கு நாயகமே சலாம் அலைக்கும் என்று அடியேன் பாடியுள்ளேன்.
இதைப்போல் நாயகம் ﷺ அவர்களது பரம்பரை வமிசா வழிமுறையில் வராதவர்கள் தங்களை நாயகத்தின் பரம்பரை வமிசவழியில் நானும் வந்த ஒருவன் என்றோ செய்யிதுமார்கள், தங்கள் மார்களில் ஒருவன் என்றோ சொல்வதும், இதைப் போல செய்யிதினா அபூபக்கர் சித்தீக் رضي الله عنه அவர்களின் பரம்பரை வழித்தோன்றல்களில் வராதவர்கள் தங்களை சித்தீகி-அபூபக்கர் சித்தீக் வழித்தோன்றல் என்றோ, செய்யிதுனா உமர் رضي الله عنه அவர்களின் பரம்பரை வழித்தோன்றல்களில் வராதவர்கள் தங்களை உமரி -உமர் வழி தோன்றல்கள் என்றோ சொல்வதும், அதைப்போல் தங்களது வமிசாவழி அல்லாத பிற வமிசாவழியில் தன்னை சேர்த்து சொல்வதும் பெரும் குற்றமாகும்.
وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ۚ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَاهِكُمْۖ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ ۚ
فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ ۚ
வேறு தந்தையர்களுக்கு பிறந்து உங்கள் பக்கம்(தங்கள் ஆண் பிள்ளைகள் என்று) இணைக்கப்பட்டவர்கள் உங்களது (உண்மையான) ஆண் மக்கள் அல்ல. இது உங்களது வாயால் மொழியப்பட்ட சொல்லாகும். அல்லாஹ் உண்மையை சொல்வான். அவன் நேர் வழியை காட்டுவான். அவர்களது (உண்மையான) தந்தயர்களின் பக்கம் (இணைத்து) கூப்பிடுங்கள். அதுவே அல்லாஹ் இடத்தில் நேர்மையாகும். அவர்களது தந்தை யார்? என்று நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களது மார்க்க சகோதரர்களும் தந்தை (ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்) வழி சகோதரர்களுமாகும்.
[அல்குர்ஆன் 33:5]
(நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஆண்மகன் என்று அழைக்கப்பட்டு வந்த)ஜைது இப்னு ஹாரிதா -ஹாரிதாவின் மகன் ஜெய்து (குர்ஆனில் தெளிவாக பெயர் சொல்லப்பட்ட சஹாபி) என்பவர்கள் ஷாம் நாட்டின் அடிமையாக கொண்டு வரப்பட்ட போது அன்னை கதீஜா நாயகி رضی الله عنها அவர்களின் சகோதரர் ஹிஸாமின் மகன் ஹகீம் அவர் விலை கொடுத்து வாங்கி அன்னை கதீஜா நாயகி رضی الله عنها அவர்களுக்கு அன்பளித்தார்கள்.
அன்னை கதீஜா நாயகி அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளித்தார்கள். அவர்களை உரிமையிட்டு தன் வளர்ப்பு மகனாக நாயகம் ﷺ அவர்கள் எடுத்து கொண்டார்கள். (நாயகத்தின் ஆண் மகன் என்று மக்கள் அழைக்கலானார்கள்) தங்களது மாமி மகள் ஜெய்னபு பின் ஜஹ்ஷ் நாயகிக்கு திருமணமும் செய்து வைத்தார்கள். பின் இவர்களுக்கு மத்தியில் விவாகரத்து நடந்ததும் ஜெய்னபு நாயகியை நாயகம் ﷺ அவர்கள் (அல்லாஹு தஆலாவே திருமணம் செய்து வைத்த படி) திருமணம் செய்து கொண்டார்கள். அதுபோது தன் மகனின் மனைவியை திருமணம் செய்யக் கூடாது என்று சொல்லிக் கொண்டே மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்டார்கள் என்று யூதர்களும், முனாபிக்குகளும் குறை கூறினார்கள்.
இதற்கு மறுப்பாகவே மேற்கூறிய திருவசனம் தனது சொந்த மகனின் மனைவியை தான் திருமணம் செய்யக் கூடாது. வளர்ப்பு மகனின் மனைவியை அல்ல என்றும், தத்தமது தந்தையின் பக்கமே இணைத்து சொல்ல வேண்டுமே தவிர அடுத்தவரின் தந்தையின் பக்கம் இணைத்து சொல்லக் கூடாது என்றும் தெளிவு படுத்துகிறது.
[தப்ஸீர் ஸாவி பாகம் 3, பக்கம் 268.]
ஸெய்யிதினா இப்னு உமர் رضي الله عنه அறிவிக்கிறார்கள்:- اُدْعُوْهُمْ لآِبَائِهِمْ
உத்வூஹும் லிஆபாயிஹிம் அவர்களது (உண்மையான) தந்தையர்களின் பக்கம் (இணைத்து) கூப்பிடுங்கள் (33:5) என்ற திருவசனம் இறங்குகிறவரை நாங்கள் ஜெய்து இப்னு முஹம்மத்- முஹம்மதுவின் மகன் ஜெய்து என்று தான் அழைத்து வந்தோம். (அதன் பின் ஜெய்துப்னு ஹாரிதா என்று சொல்லலானோம்)
[மிஷ்காத் பாகம் 3 பக்கம் 212, ஹதீது எண் 6132]
ஆகவே பெருமையை தேடியோ, சங்கைபடுத்த வேண்டுமென்று நாடியோ அல்லது உலகாதயத்திற்காகவோ தங்களை நாயகத்தின் வழித்தோன்றல், அல்லது சித்தீகி, உமரி என்று போலியாக சொல்லக் கூடாது.
بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ. وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ
நீ நாடியவர்களை மேன்மை படுத்துகிறாய். நீ நாடியவர்களை இழிவு படுத்துகிறாய். உன் கையில் நன்மை இருக்கிறது. நிச்சயமாக சர்வ பொருள்களின் மீது சக்தி பெற்றவனாக இருக்கிறாய்.
[அல் குர்ஆன் 3:26]
இவ்வசனத்தின்படி அல்லாஹு தஆலா எவரை மேன்மை படுத்துகிறானோ அவரை கீழ்படுத்த முடியாது. எவரை இழிவு படுத்துகிறானோ அவரை மேன்மை படுத்த முடியாது.
ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
அது அல்லாஹ்வின் வருசை-கிருபை அவன் நாடியவர்களுக்கு அதை கொடுப்பான். அல்லாஹ் (அதிக கிருபையால்) விசாலமானவன். (தகுதியுள்ளவர் யார்? என்பதை) மிக அறிந்தவன்.
[அல் குர்ஆன் 5:54]
وَاللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
அல்லாஹ் தனது ரஹ்மத்தை நாடியவர்களுக்கு சொந்தமாக்குவான். அல்லாஹ் மிகப்பெரிய கிருபை உடையன்.
[ அல் குர்ஆன் 2:105]
ஆகவே எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா அவன் ஆட்சி அதிகாரம், கருணை கிருபைக் கொண்டு நம்மனைவரையும் மேன்மைபடுத்தி, கீர்த்தி, கண்ணியம் பெற்ற நல்லோர்களுடன் இம்மையிலும் மறுமையிலும் சேர்ந்து வாழ நல்லருள் புரிவானாக ஆமீன்.
முஃஜிஸாத்தும் கராமத்தும்:
நபிமார்களுக்கு நடக்கும் அற்புதங்களுக்கு முஃஜிஸாத் என்றும், அவ்லியாக்களுக்கு நடக்கும் அற்புதங்களுக்கு கராமத்து என்றும் சொல்லப்படுகிறது. நபிமார்களுக்கு நடக்கும் முஃஜிஸாத் அனைத்தும் அவ்லியாக்களுக்கும் நடக்க முடியும். அவ்லியாக்கள் தன்னை நபி என்றோ, வலி என்றோ வாதிக்க மாட்டார்கள். இதுதான் நபிமார்களுக்கும், அவ்லியாக்களும் உள்ள வித்தியாசமாகும்.
كَرَامَاتُ الْاَوْلِيَاءِ حَقٌ கராமத்துல் அவ்லியாயி ஹக்குன்-அவ்லியாக்களின் கராமத்து உண்மையாகும், நடக்க சாத்தியமாகும்.
அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்கள் (நைல் நதிக்கு எழுதிய) கடிதத்தின் மூலம் நைல் நதி ஓடியதும், இன்னும் அவர்கள் மதீனா நன் நகரின் மிம்பரில் நின்றுக் கொண்டு நுஹவாந்தில் (வெகுதூரத்தில் இருக்கும் ஊரில்) தங்களது படையினர்களின் தளபதி ஸாரிய்யா رضي الله عنه அவர்களுக்கு 'யா ஸாரிய்யா அல்ஜபல், அல்ஜபல்' என்று எச்சரிக்கை செய்ததும், தளபதி ஸாரிய்யா அவர்கள் வெகுதூரத்தில் இருந்து கொண்டு மலையின் பின்புறம் (தாக்க) வந்த (விரோதி) படையினரை விரட்டி வெற்றி வாகை சூடி திரும்பி வந்ததும், காலித் இப்னு வலீத் رضي الله عنه அவர்கள் நஞ்சை குடித்தும் எவ்வித இடையூறும் ஏற்படாமல் (உயிர் வாழ்ந்து) இருந்ததும் இதை போன்று சஹாபாக்களுக்கும் மற்றவர்களுக்கும் நடந்த அற்புதங்கள் (பதிவு செய்யப்பட்டு) இருப்பதால் உண்மையாகும். முஃதஸிலாக்கள் எனும் பிரிவினர்களில் அனேக பேர்கள் இதை மறுக்கிறார்கள்.
[ஷரஹு ஜம்யில் ஜவாமிஃ பாகம் 2 பக்கம் 420]
خَرْقُ الْعَادَةْகர்குல் ஆதத் – வழமைக்கு மாற்றமாக நடக்கும் கருமங்களான அற்புதங்களை எட்டு வகைகளாக பகுத்திருக்கிறார்கள்.
1. اَلْاِرْهَاصُஅல் இர்ஹாஸ் -உறுதிப்படுத்துதல். இவ்வகை நபிமார்களுக்கு நுபுவ்வத்- நபித்துவத்திற்கு முன் நபித்துவத்தை உறுதிபடுத்துவதற்காகவும், முன்னறிவிப்பாகவும் நடைபெறும் அற்புதங்களாகும்.
உதாரணம்: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஜனனமாகும் போது புஸ்ரா கோட்டை இலங்குவதாக அன்னை ஆமீனா رضی الله عنها அவர்கள் பார்த்ததும் கிஸ்ரா கோட்டை உடைந்ததும் சாவா மாநதி வரண்டு போனதும், பாரிஸின் நெருப்புக் குண்டம் நூர்ந்து போனதும், விக்கிர சிலைகள் தலை கீழாக வீழ்ந்ததும், கற்கள் சலாம் சொன்னதும் இவைகளும் இவை போன்ற அற்புதங்களுமாகும்.
2. اَلْمُعْجِزَةُஅல் முஃஜிஸத் – உம்மத்தினர்கள் இது போன்று செய்ய முடியாமல் இயலாமையாக்குவது.
இவ்வகை நபிமார்களுக்கு நபித்துவத்திற்குப் பின் நான் நபி என்று ஒப்புக் கொள்ளுங்கள் என்று வாதிப்பதற்கு ஆதாரமாக நடைபெறும் அற்புதங்களாகும்.
உதாரணம்: நபிமார்களுக்கும், நமது நாயகத்திற்கும் நடந்த ஏராளமான அற்புதங்கள் குர்ஆனிலும் ஹதீதுகளிலும் காணக் கிடக்கின்றன.
3. اَلْكَرَامَةُஅல்கராமத் – சாலிஹான நல்லடியார்களான அவ்லியாக்களுக்கு நடக்கும் அற்புதங்களாகும்.
உதாரணம்:சங்கைமிகு அவ்லியாக்களின் ஜீவிய காலத்தில் நடந்தவைகளும், மறைவுக்குப் பின்னும் நடந்துக் கொண்டிருக்கும் ஏராளமான நிதர்சனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதங்களாகும்.
4. اَلْمَعُوْنَةُஅல்மவூனத் -உதவி பெறுதல்.
இவ்வகை சாதாரணமான பாமர மக்களுக்கு அவர்களின் இக்கட்டான கஷ்டமான நேரத்தில் நிவர்த்தியாவதற்கு நடக்கும் அற்புதங்களாகும்.
உதாரணம்:- கஷ்டமான ஆபத்துக்களை விட்டும், மிடுமைகள், சோதனைகளை விட்டும் காப்பாற்றப்படுவது போலாகும்.
5. اَلْاِسْتِدْرَاجُஅல் இஸ்த்தித்ராஜ்- விட்டு பிடிப்பது, நெடும் கயரில் விட்டு குறுங்கயரில் பிடித்திழுப்பது.
இவ்வகை ஏமாற்றுக் காரர்கள் சூழ்ச்சியாளர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களில் ஈடுபாடுள்ள பாவிகளின் கைகளில் நடக்கும் அற்புதங்களாகும். அவ்லியாக்களுக்கு நடப்பது போன்று இவைகள் நடப்பதைக் கண்டு பொதுமக்கள் ஏமாந்து மோசம் போய் விடுகிறார்கள். அப்படி ஏமாந்து விடாது கவனமாக அவர்களை விட்டும் தூரமாகி விட வேண்டும்.
6. اَلْاِهَنَةُஅல் இஹானத்-கேவலப்படுத்துவது.
இவ்வகை எவனுடைய கையில் நடக்கிறதோ அவனை கேவலப்படுத்துவதற்காக நடக்கும் அற்புதங்களாகும்.
உதாரணம்: முஸைலமத்துல் கத்தாப் தன்னை ஒரு நபி என்று வாதித்த பொய்கார முஸைலமாவுக்கு நடந்தது போல், அவனிடத்தில் முஹம்மது நபி குருடனின் கண்ணில் கை வைக்கிறார் பார்வை வந்து விடுகிறது. நீ நபியாக இருந்தால் இது போன்று செய்து காட்டு என்று சொல்லப்பட்ட பொழுது குருடனைக் கொண்டு வாருங்கள் என்று சொன்னான். அங்கு தேடியபோது ஒருக் கண் குருடன் கிடைத்தான். குருடான கண்ணில் கை வைத்தான். உடனே நல்ல கண்ணும் குருடாகி விட்டது.
கிணற்றில் தண்ணீர் அதிகமாக பெருகுவதற்கு துப்பினான். உள்ள தண்ணீரும் போய் வரண்டு விட்டது. கிணற்று தண்ணீர் இனிமையாவதற்கு கிணற்றில் துப்பினான். கடும் உப்பு நீராக மாறி விட்டது. இப்படி கேவலப்படுத்துவதற்காகவும், பொய்யன் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும் நடக்கும் அற்புதங்களாகும்.
7. اَسِّحْرُஅஸ்ஸிஹ்ரு -சூனியம் செய்வது.
இவ்வகை மந்திரங்களை ஜெபிப்பது கொண்டும், காரண காரியங்களை செய்வது கொண்டும் கெட்டவர்கள், பாவிகள், காபிர்களின் கைகளில் வெளியாகும் அற்புதங்களாகும்.
8. اَشَّعْوِدَةُஅஷ்ஷஃவிதா -தந்திர மந்திர கண் கட்டு வித்தைகள்.
இவ்வகை பாம்பாட்டுவது, அதை தன்மீது கொட்ட விட்டு நோவினை செய்யவில்லை என்று காட்டுவது, நெருப்பில் விளையாடி அது சுடவில்லை என்று காட்டுவது, ஹராமான மந்திரங்களை ஓதி அல்லது எழுதி வித்தைகளை காட்டுவது அல்லது ஜின்னு ஷெய்த்தான்களை வசப்படுத்தி அவைகள் மூலம் காட்டும் அற்புதங்களாகும். இவைகளையும் நம்பி மோசம் போய்விடக் கூடாது.
தபூஸ் -ஊசிகளை, கத்திகளை நெஞ்சில் குத்துவது, வெட்டுவது, கண்ணை தோண்டுவது, நெருப்பை (மிதிப்பது) சுமப்பது, சாப்பிடுவது இது போன்றவைகளை செய்து காட்டி இவைகளை மகான்களான ஸுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹமது கபீர் ரிபாயி நாயகம் رضي الله عنه, செய்யிது அஹ்மது இப்னு அல்வான் நாயகம் رضي الله عنه அவர்களின் கராமத்தால் செய்கிறோம் என்று சொல்பவர்கள் (எதார்த்தமாக) மார்க்கத்தில் பற்று உடையவர்களாகவும், விலக்கப்பட்டவைகளை தவிர்த்தும், ஏவல்களை எடுத்தும், பேணி நடப்பவர்களாகவும், கட்டாய கடமைகளை அறிந்து அதன்படி அமல் செய்பவர்களாகவும், இந்த அற்புதங்களை செய்வதற்கு காரண காரியங்களை எதையும் செய்யாதவர்களாகவும் இருந்தால், அவ்லியாக்களுக்கு நடக்கும் கராமத்து வகையை சேர்ந்ததாகும். இல்லையெனில் இவைகள் சிஹ்ரு-சூனிய வகைகளை (யும் தந்திர வகைகளையும்) சேர்ந்ததாகும்.
கராமத்துகள், பாவிகள், கெட்டவர்களிலிருந்து வெளியாகாது என்பது (இமாம்களினால்) ஏகோபித்த முடிவாகும். கராமத் என்பது எதையும் ஜெபிக்காமலும், மந்திரிக்காமலும், ஓதாமலும் எந்த ஒரு வேலையை செய்யாமலும் நல்லவர்களான அவ்லியாக்களை கண்ணியப்படுத்துவதற்காக தானாக வெளியாகும் அம்சமாகும்.
பாவிகள், கெட்டவர்களின் கைகளில் இருந்து வெளியாகும் ஸிஹ்ரு-சூனியத்தை படிப்பதும்,படிப்பிப்பதும், செய்விப்பதும் ஹராமாகும். அதை செய்பவர்களையும், வாதிப்பவர்களையும் கண்டிப்பது வாஜிப்-கடமையாகும். அதை கண்டு களிப்பதும் ஹராமாகும். ஹராமான காரியங்களுக்கு துணை போவதும் ஹராம்என்பது (ஷரீஅத் பொது) சட்டமாகும்.
[ ஜம்வுல் ஜவாமிஃ பாகம் 2 பக்கம் 416,420.பிஃயா பக்கம் 360, பைஜூரி ஷரஹு நனூசி பக்கம் 36 ஆகிய நூற்களின் சாராம்சம்]
ஆகவே சகோதரர்களே! மெய் எது? பொய் எது? என்பதை துருவி ஆராய்ந்து அலசிப்பார்த்து மெய் வழியில் நடக்க வேண்டும்.பொய்யை மெய் என்று நம்பி மோசம் போய்விடக் கூடாது. வெளி வேஷத்தைப் பார்த்து விட்டு தடீர் முடிவுக்கு வந்து விடாதீர்கள். உலமாக்கள், மெஞ்ஞானிகள், ஷெய்குமார்களின் ஆலோசனை பெற்று சீரான வழியில் நேராக போக முயற்சி செய்யுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்கட்கும் தவ்பீக்-நல்லுதவி செய்வானாக!
நிறைவடைந்தது.
No comments:
Post a Comment