Tuesday, 15 June 2021

அஷ்ஷெய்கு வல் பைஅத்-1

அஷ்ஷெய்கு வல்பைஅத்- குருவும் தீட்சையும்.

*தொடர்-1*

اَشَّيْخُ وَالْبَيْعَةُ

தொகுப்பாசிரியர்:   அல் ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்புர்ரஸுல் அஷ்ஷெய்குல் காமில்  அஷ் ஷாஹ்   S.M.H. முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம்  ரஹ்மானி பாகவி ஸூபி காதிரி காஹிரி قدس الله سره العزيز அவர்கள்.

என்னுரை :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுதஆலாவின் திருநாமத்தால் துவக்கம்.

பாதிஹுல் உஜூதி  فَاتِحُ الْوُجُوْد – உஜூதுக்கு உலகிற்கு திறவு கோலாகவும்,لْوُஆரம்பமானவர்களாகவும் خَاتَمُ النَّبِيِّيْنَ காத்தமுன்னபிய்யீன்- நபிமார்களுக்கெல்லாம் முத்திராங்கமானவர்களாகவும்  قِبْلَةُ الْوَاجِدِ وَالْمَوْجُزْدِ கிப்லதுல்   வாஜிதி வல் மவ்ஜூத் -உளதான பரம்பொருளான அல்லாஹுத்தஆலாவிற்கும் படைப்புகளுக்கும் கிப்லாவாகவும் وَسِيْلَةْவஸீலாவாகவும் இருக்கக் கூடிய நபிகள் நாயகம்   ﷺ அவர்கள் மீதும், அவர்களது வழித்தோன்றல்களான கிளைஞர்கள், உத்தம ஸஹாபாக்கள், இறையன்பர்கள், மெஞ்ஞானிகளான ஷெய்குமார்கள் அனைவர்களின் மீதும் கருணையும் ஈடேற்றமும் உண்டாவதாக!

ஷரீஅத், தரீகத்-சரியை, கிரியை இவை இரண்டும் பின்னிப் பிணைந்த பிரிக்க முடியாத அம்சமாகும். ஷரீஅத் இல்லாமல் தரீகத் செல்ல முடியாது. தரீகத் இல்லாமல் ஷரீஅத் நிறைவடைய முடியாது.

தரீகத்தில் சென்று விட்டோம். மெஞ்ஞானத்தில் மூழ்கி முக்தி பெற்று விட்டோம் என்று சொல்லி இனிமேல் ஷரீஅத் எங்களுக்குத் தேவையில்லை என்று போலித்தனமாக சொல்லி மக்களை ஏமாற்றி மாயவலையில் சிக்க வைத்து தான் ஒரு மெஞ்ஞானி, ஷெய்கு-குரு என்றும் தன் வாயில் வருவதுதான் மெஞ்ஞானம் என்றும் தன்னையே பின்பற்ற வேண்டும் என்றும் உண்மையான ஷரீஅத், தரீகத்தை பேணி நடந்து வரும் ஸூபிய்யாக்கள், ஷெய்குமார்களை ஏளனமாக கீழ்த்தரமானவர்களாக சித்தரித்து உலவி வருவது ஒரு கூட்டம்.

இப்போலி வேஷதாரிகளைப் பார்த்துவிட்டு உண்மையான ஷெய்குமார்கள் இக்காலத்தில் இல்லை. ஷெய்கும், தரீகத்தும் தேவையில்லை. எங்களுக்கு ஷரீஅத் மட்டும் போதும். நபிகள் நாயகத்தின் பேரில் அதிகமாக ஸலவாத்து ஸலாம் சொல்லி வந்தால் போதும் என்று அப்பாவி மக்களின் உள்ளத்தில் பதித்து விட்டனர் மறு கூட்டத்தினர்.

உண்மையான ஷெய்குமார்களின் அவசியத்தைப் பற்றி தெளிவு படுத்த வேண்டும். போலி ஷெய்குமார்களின் பித்தலாட்டங்கள், அவர்கள் கராமத்து – அற்புதங்கள் என்ற பெயரில் விரித்திருக்கும் மாய மந்திர ஜாலங்கள, அதனால் அவர்களுக்கு கிடைக்கும் கொடூரமான தண்டனைகள் குறித்தும் போலியான தங்கள் மார்கள், போலியான சித்தீகீன்கள் பற்றியும், தன் அல்லாத மற்ற வமிசா வழியில் தன்னை இணைத்துக் கொண்டும், போலித்தனமாக கிலாபத்தை பெற்றுக் கொண்டும், தகுதியற்ற சிறுவர்களுக்கு பைஅத்து கொடுத்துக் கொண்டும், வஹ்ஹாபிகளின் வழியில் வந்த ஷெய்குமார்களின் ஸில்ஸிலாவை வைத்துக் கொண்டும் காதிரிய்யா, சிஷ்திய்யா, நக்ஷபந்தியா, சுஹரவர்திய்யா, ரிபாயிய்யா என்ற நல்ல தரீகாக்களின் பெயர்களைப் போர்த்திக் கொண்டும் வருகின்ற வேஷதாரிகளின் மாய வலையில் சிக்கிடாத முறையில் உண்மையான ஷெய்குமார்களின் கரம் பிடித்து கரைசேர தூண்டு கோலான ஒரு நூல் அவசியம் என்ற முறையில் 'அஷ்ஷெய்கு வல்பைஅத் – குருவும், தீட்சையும்' எ ன்ற நூல் உங்களது திருக்கரத்தில் தவழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ். அதில் ஆதாரப்பூர்வமாக சொல்லப்படும் உண்மையை உணர்ந்து உண்மையாகவே ஷரீஅத்தையும், தரீகத்தையும் கடைபிடித்து ஒழுகி நடந்து உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தின் ஷெய்குமாhத்களின் தொடரில் வருகின்ற ஸில்ஸிலாவில் இருக்கின்ற குரு ஒருவரின் கரம் பிடித்து, தீட்சை பெற்று ஜெயம் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாம் வல்ல கிருபையாளன் நம்மனைவர்களையும் அவனது அருள்மாரியைக் கொண்டு அவனது ஹபீப் அண்ணல் நபி  ﷺ    அவர்களின் வஸீலா கொண்டும் கரம் பிடித்து கரை சேர்ந்த ஜெயசீலர்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக! ஆமீன்.

இங்ஙனம்,

சமுதாய ஊழியன்,

S.M.H.முஹம்மது அலி சைபுத்தீன்.

****************************************************************************

அஷ்ஷெய்கு வல்பைஅத்-குருவும் தீட்சையும் : 


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை தக்வா – அஞ்சி கொள்ளுங்கள். அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத் -போர் புரியுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி-முக்தி பெறுவீர்கள்.

[அல்-குர்;ஆன் 5:35]

மனிதன் வெற்றி பெறுவதற்கும், முக்தி அடைவதற்கும் மிக முக்கியமான நான்கு அம்சங்ளை இவ்வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

1. ஈமான் கொள்ளுதல் 2. தக்வா செய்தல். 3. வஸீலா தேடுதல் 4. அவன் பாதையில் போர் புரிதல்.

இந் நான்கில் மூன்றாவதான வஸீலாவை பற்றி இவண் ஆராய்வோம். வஸீலா என்பதற்கு நற்கிரிகைகளை முற்படுத்துவதும், நற்செயல்களை செம்மைபடுத்துவதும் என்பது பொதுவான கருத்து. இறைவழி நடப்பவன் தனக்கென்று பூரணத்துவமடைந்த நேர்வழிக் காட்டுபவர்களில் ஒருவரை (முர்ஷத்-ஷெய்கை) தனது உற்ற தோழராக எடுத்துக் கொள்ளுதல் என்பது குறிப்பிடத்தக்கதான கருத்து என்று மாமேதை மகான் மஹ்மூது தீபி رضي الله عنه அவர்கள் நவின்றுள்ளார்கள்.

உண்மையில் இரண்டாம் கருத்துதான் இவ்விடம் வஸீலா என்பதற்கு தகும். ஏனெனில்,

இரண்டாம் அம்சமான தக்வா செய்வதென்பதில் நல்ல கிரிகைகளை முற்படுத்துவததும், நற்செயல்களை செம்மைபடுத்துவதும் அடங்கி விடும். ஏனெனில்,

தக்வா என்றால் பாவமான காரியங்களை தவிர்த்து நடப்பதும் நல்ல காரியங்களை செய்வதும்தானே. அதையே மூன்றாவது அம்சமாக திரும்பவும் கூறுவது பொருத்தமன்று.

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் – சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவனளவில் போக முடியம் என்பது ஆரிபீன்களான மெஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு.

எனவே இவ்வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஷெய்கு – குருவின் கரம் பிடிப்பதென்பது ஒன்றியமையாத கடமை.

இதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி قدس الله سره العزيز அவர்களும் சொன்னார்கள். அதை கவிநயமாக நமக்கு மாமேதை மகான் அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா رضي الله عنه அவர்கள்,

وَقُلْتَ مَنْ لَا لَهُ شَيْخٌ فَانِّيْ لَهُ  شَيْخٌ وَمُرْشِدُهُ حَتٰي كَاَنِّيْ لَهُ

جَلِيْسُهُ خَلْوَةً وَمِنْ لَّدُنِّيْ لَهُ  وَصْلٌ فَكُنْ هٰكَذَالِيْ مُحْيِيَ الدِّيْنِ

வகுல்த மன்லாலஹு ஷெய்குன் பஇன்னி லஹு

ஷைகுன் வமுர்ஷிதுஹு ஹத்தாக அன்னிலஹு

ஜலீஸுஹு கல்வத்தன் வமின் லதுன்னிலஹு

வஸ்லுன் பகுன் ஹாகதா லி முஹ்யித்தீன்

'எவர்களுக்கு  ஷெய்கு -குரு இல்லையோ அவருக்கு நிச்சயம் நான் ஷெய்காகவும், -குருவாகவும் முர்ஷிதாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறேன். அவரது கல்வத்திலும் -தனிமையிலும் அவரது உற்ற தோழனாகவும் இருக்கிறேன். என்னில் நின்றும் அவருக்கு தொடர்பு உண்டு என்று (கௌது நாயகமே!) நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்' என்று பாடியுள்ளார்கள்.

يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍ بِامَامِهِمْ

யவ்ம நத்வு குல்ல உனாஸின் பி இமாமிஹிம்

'அன்று (கியாமத் நாளில்) நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர் (களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம். (17-71) என்று இறைவன் கூறியுள்ளான். 

கருத்து: தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது:-

காதிரிய்யா தரீகாகாரர்களே! ஜிஷ்திய்யா தரீகாகாரர்களே! நக்ஷபந்தியா தரீகாகாரர்களே! ஷாதுலிய்யா தரீகாகாரர்களே! என்று அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது இவண் கவனிக்கத்தக்கது.

இறைவன் பக்கம் போய் சேருவதற்கு இறைத்தூதர்கள் அவசியமாக இருப்பது போல் இறைத்தூர்கள் பக்கம் போய் சேருவதற்கு ஷெய்குமார்கள் அவசியமாகும்.

உதாரணம்: அனுமதி வழங்கப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அவைகளின் கழுத்தில் அடையாளபட்டிகள் மாட்டியிருப்பது அவசியமாக இருப்பது போல் நம் கழுத்துக்களிலும் எந்த ஷெய்குமார்களின் படி;டியாவது கண்டிப்பாக மாட்டியிருப்பது அவசியம். ஏனெனில்,

நமது நப்ஸு – ஆத்மா நாய் போன்றதாகும். அதன் போக்கில் சுதந்திரமாக விட்டு வைக்கலாகாது. அதன் கழுத்தில் பட்டி போட்டு ஒரு ஷெய்கின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்ய வேண்டும்.

கழுத்துப் பட்டியில் கொழுகப்பட்டிருக்கும் சங்கிலியின் முதல் கொழுக்கு பட்டியிலும், மறுபக்கத்துக் கொழுக்கு எஜமானின் கரத்தில் இருப்பது போல், ஷெய்கின் கரம் நம் கழுத்திலும், ஷெய்கின் ஸில்ஸிலாவான -சங்கிலித் தொடர்பான மறுபக்கம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்திலும் இருக்க வேண்டும்.

நாம் இயங்குவது அந்த நாயகம்  ﷺ அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான். நமது ஷெய்கு அவர்கள் அதற்கு வஸீலாவாக – இடைப் பொருளாக – தொடர்பை உண்டாக்கித் தருபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான, எதார்த்தமான வஸீலாவாகும். இந்த வஸீலாவைத்  தேடும்படியாகத்தான் மேற்கண்ட (5:35) வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

வான் மழை பொழியும் போது அதை நாம் பெறாவிட்டாலும் அதைப் பெற்று சேகரித்து வைத்திருக்கும் குளம், குட்டையை நாம் நாடி பயன்பெறுவது போவ். நபிகள் நாயகம்  ﷺ அவர்கள் தங்களது ஜீவிய காலத்தில் அருள் மழை பொழியும்போது நாம் இல்லாவிட்டாலும் வாழையடி வாழையாக அவ்வருள் வெள்ளத்தை வாங்கி சேகரித்து வைத்திருக்கும் குளம், குட்டைகள் போன்ற ஷெய்குமார்களின் திருக்கரத்தை பிடித்தால்தானே வயல்கள் போன்ற ஈமான் உருப்படும். இல்லை என்றால் ஈமான் கருகி சருகாகி விடும் அல்லவா? அல்லாஹு தஆலா அந்நிலையை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக!

'நாயகம்   ﷺ அவர்களை தனக்கும், அல்லாஹு தஆலாவுக்குமிடையில் வஸீலா-துணைப் பொருளாக,  وَاسِطَة வாஸிதா-இடைப் பொருளாக எடுத்துக் கொள்ளாமல், அல்லாஹுத்தஆலாவின் பொருத்தத்தளவில் சேர்ந்து விட்டோமென ஒருவன் எண்ணினால் அவன் தனது முயற்சியில் வழி கெட்டு விட்டான்(தோல்வியடைந்து விட்டான்). அவனது யோசனை நஷ்டமாகி விட்டது.

وَاَنْتَ بَابُ اللّٰهِ اَىُّ اِمْرَئٍ ،  اَتَاهُ مِنْ غَيْرِكَ لَايَدْخُلُ

'(நாயகமே!) நீங்கள் அல்லாஹ்வின் வாசல். நீங்கள் இன்றி அதற்கு (அந்த வாசலுக்கு) எந்த மனிதனும் வந்தாலும் நுழைய மாட்டான்' என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்.

ஆகவே அவர்கள் அல்லாஹுதஆலாவின் மாபெரிய கண்ணியமான வாசல் அவனது கீர்த்தியான இரகசியம் அவர்களளவில் சேருவது அவனளவில் சேருவதாகும். இவ்விருவர்களின் சமூகம் ஒன்றாகும். (இதற்கு மத்தியில்) பிரிவினை உண்டாக்கினால் மெஞ்ஞானத்தின் ருசியை சுவைக்க மாட்டான்.' 
[ தப்ஸீர் ஸாவி பாகம் 2, பக்கம் 165 ]

இதை எங்களது குருநாதர் மகான் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் قدس الله سره العزيز    அவர்கள் கிழ்ரிய்யா பைத்தில்,

ضَلَّ مَنْ ظَنَّ لَعَلَّهُ يَقُوْزُبِنَفْسِهِ ، ضَاعَ عُمُرَهُ اَغِثُ يَارَبِّ بِالْخِضْرِ النَّبِيْ

ழல்ல மன் ளன்ன லஅல்லஹு யபூஸு பிநப்ஸிஹி

ழாஅ உம்ரஹு அகிஸ் யறப்பி பில்கிழ்றின்னபி

'(ஷெய்குமார்களின் துணை இன்றி) தானாகவே ஜெயம் பெறலாம் என்று எவன் எண்ணினானோ அவன் தனது வாழ்நாளை பாழ்படுத்தி விட்டான். கிழ்று நபியின் பொருட்டால் எனது இரட்சகனே! (வாழ்நான் பாழாகாது) என்னை இரட்சிப்பாயாக! என்று அழகாக வலியுறுத்தி பாடியுள்ளார்கள்.

இன்னும் அவர்கள் அதே கிழ்ரிய்யா பைத்தில்,

صُبْحَةُ الشَّيْخِ سَعَاَرَةٌ كُوْنُوْا مَعَ ، الصَّادِقِيْنَ اَمْرُ رَبِّ سَيِّدِيْ خِضْرِ النَّبِيْ

ஸுஹ்பத்துஷ் ஷெய்கி ஸஆததுன் வபி கூனூ மஅஸ்ஸாதிகீன அம்று ரப்பி செய்யிதி கிழ்றின்னபி

'ஷெய்குவின் சகவாசம் சீதேவிதனமாகும். கூனூ மஅஸ்ஸாதிகீன் -மெய் அன்பா(களின் சகவாசங்) களுடன் நீங்கள் இருந்து வாருங்கள் (9:119) என்ற திருவசனத்தில் என் ஆண்டகை கிழ்ரு நபி عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களின் ரப்பான இறைவனின் கட்டளையும் இருக்கிறது' என்றும் பாடியுள்ளார்கள்.

உலுல் அஸ்மிகளில்-பலமிக்க நபிமார்களில் ஒருவரான நபி மூஸா عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களுக்கும் கூட மெஞ்ஞான கடலான கிழ்று நபி عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களிடம் சென்று மெஞ்ஞான அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவன் இட்ட கட்டளையும், அவர்களுக்கு மத்தியில் நடந்த நீண்ட வரலாற்றையும் ஷெய்கு-குரு, முரீது-சீடர்களின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஸூரத்துல் கஃப் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதை கருவாக வைத்துதான் எங்களது குருநாதர் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் قدس الله سره العزيز அவர்கள் கிழ்ரிய்யா பைத்துகள் தொகுப்பை இயற்றி பாடியுள்ளார்கள்.

صُحْبَتِ صَالِحْتُرَاصَالِحْ كُنَدْ ، صُحْبَتِ طَالِحْ تُرَاطَالِحْ كُنَدْ

'நல்லவரின் சகவாசம் உன்னை நல்லவனாக மாற்றி விடும். தீயவரின் சகவாசம் உன்னை தீயவனாக மாற்றி விடும்.' என்றும்

يَكْ زَمَانَه صُحْبَتِ بَااَوْلِيَا ، بَهْتَرْ اَزْصَدْسَالَئ طَاعَتْ لبِ رِيَا

'சற்று நேரம் அவ்லியாக்களுடன் சகவாசத்தில் இருப்பது நூறு ஆண்டுகள் முகஸ்துதியின்றி வழிப்படுவதை காண மிகச் சிறந்தது' என்றும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி رضي الله عنه அவர்கள் பாடியுள்ளார்கள்.

اَلصَّحْبَةُ تُؤَثِّرُ

'சகவாசம் குணபாடு அளிக்கும்' என்றும் பெருமானார்    ﷺ அவர்களும் கூறியுள்ளார்கள்.

'பூவோடு சேர்ந்த நாறும் மணம்  பெறும்' என்ற தமிழ் முதுமொழியும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே இப்படிப்பட்ட ஷெய்குமார்களின் சகவாசத்தை பெற்று அவர்களின் திருக்கரம் பற்றிப்பிடித்து அவர்களின் தரீகத்தில் செல்லுவது மிக முக்கியமாகும்.

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

இவ்வழிதான் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்கள் சென்ற வழி. இதுதான் சிராத்துல் முஸ்தகீம் -நேரான வழி. இவ்வழியைத்தான் தொழுகையின் ஒவ்வொரு கியாம்-நிலையிலும்

أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ

('இறைவா!) நீ நேரான வழியில் எங்களை சேர்த்து வைப்பாயாக! (அவ்வழி) நீ உபகாரம் புரிந்தவர்களின் வழி' (1:5) என்று ஓதிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுமென்ற சட்டமும் வந்துள்ளது.

உபகாரம் பெற்றவர்கள் யார் என்பதை

'அல்லாஹுதஆலா உபகாரம் புரிந்தவர்கள், நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்கள் (4:69) என்று விபரித்துள்ளான்.

وَاتَّبِعُ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ

வத்தபிஃ ஸபீல மன் அனாப இலய்ய

என்னளவில் மீண்டவர்களின் பாதையை பின்பற்றுவீராக! (3:15) என்ற திருவசனமும் அல்லாஹுதஆலா அளவில் போய் சேர்ந்து அவனது திருக்காட்சியை கண்டுக் களித்து மீண்டவர்களான ஷெய்குமார்களின் கரம் பிடித்து பைஅத்து-தீட்சை பெற்று பின்பற்றியாக வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.

இது மட்டுமன்று, நமது இக்கட்டான வேளையிலும் அதிலும் நம் அந்திபமான ஸகராத் வேளையிலும் நம்மை காப்பாற்றுபவர்களும் அவர்கள்தான். எடுத்துக் காட்டாக,

ஸெய்யிதினா நபி யூசுப் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் மிஸ்ரு நாட்டில் ஜுலைஹா அம்மையாரின் அறையில் அடைப்பட்டிருக்கும் வேளையில் 'கன்ஆன்' எனும் சிற்றூரில் இருந்து கொண்டிருக்கும் தங்களது தந்தை நபி யஃகூபு عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களை (உதவிக்கு) அழைத்தார்கள். உடனே அவ்வறையில் காட்சி அளித்து ஜுலைஹா அம்மையாரின் மாய லீலையை விட்டும் காப்பாற்றினார்கள் என்பது திருமறை கற்பிக்கும் வரலாறு.

மகான் அல்லாமா இமாம் ராஸி رضي الله عنه அவர்களுக்கு மரண தருவாயில் கொடியோன் ஷெய்த்தானுடன் நடந்த (அல்லாஹ் ஒருவன் அல்ல இரண்டு என்ற) வாக்குவாதத்தின் போது அவர்களது ஷெய்கு – குருநாதர் மகான் நஜ்முத்தீன் வலியுல்லாஹ் رضي الله عنه அவர்கள் ஆஜராகி قُلْ   هُوَ الله اَحَدٌ குல் ஹுவல்லாஹு அஹது என்ற ஆயத்தை ஓத சொல்லி) ஈமானை காப்பாற்றினார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று.

நம் உடம்பின் நரம்புகள் நம் இருதயத்துடன் தொடர்புக் கொண்டு இயங்குவது போல், உலகிற்கு இருதயமாக முக்கிய அங்கமாக, மூலகருவாக இருந்து வரும் நபிகள் நாயகம்   ﷺ அவர்களோடு இக்குருமார்கள் தான் தொடர்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். அப்போதுதான் நாம் சரியாக இயங்க முடியும். நமது இலட்சியமும் நிறைவேறும்.

நகரங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களிலும் இளங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளுக்கு பவர் ஹவுஸில் இருந்து வயர் கம்பிகள் மூலம் மின்சக்தி வருவது போல், உலகிற்கு பவர் ஹவுஸாக இயங்கி வரும் அவ்வுத்தமர் நபியின் அருள் இயக்க சக்தி வர வேண்டுமானால் வயர் கம்பிகள் போன்று அமைந்திருக்கும் ஷெய்குமார்களின் ஸில்ஸிலா எனும் சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டும்.

சூரியக் கதிர்கள் துணியில் அல்லது மேனியில் படுகின்றபோது கரித்து விடுவதில்லை. ஆனால் பூதக் கண்ணாடியை சூரியக் கதிர்களுக்கும், துணிக்கும் மேனிக்கும் இடைப்பொருளாக வைத்தால் பூதக்கண்ணாடி சூரிய கதிர்களை ஒன்று கூட்டி துணியை மேனியை கரித்து விடும் இயக்கத்தை நாம் அறிவோம். இதைப்போல்,

நபிகள் நாயகம்   ﷺ அவர்களின் அருள் ஜோதி உலகத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அந்த அருள் ஜோதி நம் உள்ளத்தில் பட்டு குணப்பாடு அளிக்க வேண்டுமானால் அந்த அருள் ஜோதியை ஒன்று கூட்டித் தரும் பூதக் கண்ணாடி போன்ற குரு நாதர்களை நம் உள்ளத்திற்கும், பெருமானார்  ﷺ அவர்களின் அருள் ஜோதிக்கும் இடைப்படுத்தினால்தான் உள்ளத்தில் இஷ்க்-பேரானந்தம் என்னும் குணப்பாட்டை ஏற்படுத்த முடியும். பெருமானார்  ﷺ அவர்களின் பேரொளி, அருள் ஜோதி இன்றி எவரும் இறை சன்னிதானம் பிரவேசிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை.

நீண்ட நெடிய, குறுகிய உலகப் பயணத்திற்கே வழிகாட்டி, கைகாட்டிகள் தேவைப்படும்போது இறைவழி நடைக்கு வழிகாட்டியான உற்ற தோழர் குருநாதர் தேவையாகும். அனுபவ வேந்தர்களான ஷெய்குமார்களின் வஸீலா துணையின்றி இறையருள் பெறவோ, முக்தி அடையவோ முடையாது.

ஆகவே ஓர் காமிலான ஷெய்கை-குரு நாதரை தேர்ந்தெடுத்து அவர் கையைப் பற்றி பிடித்து அவர் செல்லும் வழியில் நம்மை முழுமையாக ஒப்படைத்து நல்லோர்களான மெஞ்ஞானிகளின் ஞானத்தை பெற்று முக்தி சித்தியடைய எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி செய்வானாக! ஆமீன்.

குருநாதர் இடம் பைஅத் -தீட்சை பெறுவதற்கான அத்தாட்சிகள் : 

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِ ۖ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

(நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கைகொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில் தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது. எவனொருவன் அ(ந்த பைஅத்)தை முறித்துக் கொண்டானேயானால் அவன் தன் மீதே (அவன் நஷ்டத்தை மீட்டி) முறித்துக் கொண்டான். எவனொருவன் எதன் மீது அல்லாஹு இடத்தில் உடன்படிக்கை செய்தானோ அதை நிறைவேற்றுவானேயானால் அல்லாஹ் அவனுக்கு மிகப் பெரிய கூலியைக் கொடுப்பான்.'  
[அல்குர்ஆன் 48:10]

'அசலில் பைஅத் என்பது ஓர் மனிதன் தன்மீது ஒரு இமாமுக்கு (தலைவருக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக சில உடன்படிக்கைகளை செய்து அதை நிறைவேற்றி வருவதாகும். இவ்வசனத்தில் சொல்லப்பட்டது 'ஹுதைபிய்யா' எனும் இடத்தில் நாயகம்  ﷺ அவர்களுடன் சஹாபாப் பெருமக்கள் செய்து கொண்ட பைஅத்து றிழ்வானாகும். நற்காரியங்களில் ஒரு தலைவருக்கு இணங்கி நடப்பதற்காக உடன்படிக்கை செய்வதையும் ஒரு முரீது ஒரு ஷெய்குக்கு (அவர் இடும் நிபந்தனைகள், ஒழுக்க நெறிகளுக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக உடன்படிக்கை -பைஅத் செய்வதையும் இவ்வசனம் பொருந்திக் கொள்ளும். (மெஞ்ஞானிகளான) ஷெய்குமார்களும் முரீதீன்களிடம் பைஅத்து எடுக்கும்போது இவ்வசனத்தை (ஓதியும்) புழங்குகிறார்கள். 
[தப்ஸீர் ஸாவி பாகம் 4, பக்கம் 97,98]

மேற்கண்ட திருவசனம் ஆண்கள், பெண்கள் இருபாலர்களுக்கும் பொதுவானதாகத்தான் வந்துள்ளது. ஆண்களுக்கு மட்டும்தான் என்று வைத்துக் கொண்டாலும் பெண்கள் பைஅத் எடுப்பதற்கு மிக தெளிவாக கீழ்காணும் திருவசனம் அறிவிக்கிறது.

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَىٰ أَن لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ ۙ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

'நபியே முஃமினான பெண்கள் அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தன் பிள்ளைகளை கொலை செய்வதில்லை என்றும், கைகளுக்கும் கால்களுக்கும் மத்தியில் பிறந்த பிள்ளைகள் என்று (அதாவது தத்தெடுத்து வளர்த்த பிள்ளைகளை தங்கள் கணவன்மார்களுக்கு பிறந்த பிள்ளை என்று) படுதூறு சொல்ல மாட்டோம் என்றும், நற்காரியங்களில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டோம் என்றும் பைஅத் – உடன்படிக்கை செய்வதற்கு உங்களிடம் வந்தால் அப்பெண்களுக்கு பைஅத்-உடன்படிக்கை செய்யுங்கள். அவர்களுக்காக பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், மிகக் கிருபையாளனாகவும் இருக்கிறான். 
[அல்குர்ஆன் 60:12]

நபிகள் நாயகம்   ﷺ அவர்கள் இத்திருவசனத்தின் படி பெண்களுக்கு சொல்வழியாக பைஅத் செய்தார்கள். கையினால் முஸாபஹா -கைலாக்கு மூலமாக பைஅத் செய்யவில்லை என்றும், நபி நாயகம்   ﷺ அவர்கள் தங்கள் கையிற்கும் பெண்கள் கையிற்குமிடையில் ஆடை இருக்க (முஸாபஹா மூலம்) பைஅத் செய்தார்கள் என்ற ஹதீது அறிவிப்பு வந்துள்ளதினால் திரைவுடன் முஸாபஹா செய்து பைஅத் கொடுத்தார்கள் என்றும் வந்துள்ளது.
 [தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 200]

உம்மு அதிய்யா  رضی الله عنها அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நாயகம்  ﷺ அவர்கள் மதீனா நகருக்கு வந்த பொழுது அன்ஸார் பெண்களை ஓர் வீட்டில் ஒன்று கூட்டினார்கள். பின்பு உமர் இப்னுல் கத்தாப்   رضي الله عنه அவர்களை எங்கள் பக்கம் (அவ்வீட்டின்) வாசல் அருகாமையில் அனுப்பினார்கள். எங்களுக்கு (உமர் இப்னுல் கத்தாப் அவர்கள்) சலாம் சொன்னார்கள். நாங்களும் பதில் சலாம் சொன்னோம். பின்பு, நான் உங்கள் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதராக வந்துள்ளேன் என்று மேற்கண்ட (61:12) திருவசனத்தை ஓதினார்கள். (அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து) ஆம் என்று சொன்னோம். பின்பு வாசலின் வெளிப்புறத்தில் இருந்து கொண்டு அவர்களது கையை நீட்டினார்கள். நாங்களும் வீட்டின் உட்பகுதியில் இருந்து கொண்டு கைகளை நீட்டினோம். (கைகளை நீட்டியது சம்மதத்தை தெரிவிக்கவும், பைஅத் நடந்ததை அறிவிக்கவும் ஆகும். கையை திரையின்றி தொட்டார்கள் என்பதை அறிவிக்காது.) பின்பு இறைவா! நீ சாட்சி என்று சொன்னார்கள்.'
[தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 200. இதே கருத்து விபரமாக பத்ஹுல் பாரி ஷரஹுல் புகாரி பாகம் 8 பக்கம் 505 யிலும் தப்ஸீர் குர்துபி பாகம் 9 பக்கம் 243 லும் வந்துள்ளது.]

திரையின்றி எந்த (அன்னியப்)பெண்ணையும் கையினால் தொடவில்லை என்பதுதான் உறுதியான அறிவிப்பாகும்.

அன்னை ஆயிஷா  رضی الله عنها அவர்கள் பெண்கள் பைஅத் செய்வதைப் பற்றி அறிவிக்கிறார்கள்:

மேற்கண்ட (61:12) திருவசனத்தைக் கொண்டு பெண்களை சோதிப்பார்கள். எப்பெண்கள் இந்த நிபந்தனைகளை ஒப்புக் கொள்கின்றனரோ அவர்களுக்கு 'நிச்சயமாக உங்களுக்கு பைஅத் எடுத்துக் கொண்டேன்' என்று சொல்வார்கள். அல்லாஹ்வின் ஆணையாக பைஅத் செய்யும் போது எந்தப் பெண்ணின் கைகளை நாயகத்தின் கை அறவே (திரையின்றி) தொடவில்லை.
[மிஷ்காத் ஹதீது எண் 4043. புகாரி ஹதீது எண் 4891]

இவ்வடிப்படையின் அமைப்பில் மெஞ்ஞானிகளான ஸூபிய்யாக்கள் ஆண்களுக்கு திரையில்லாமல் முஸாபஹா செய்வது போல் கைகளை கைகளோடு சேர்த்தும், பெண்களுக்கு திரை மறைவுடன் துணியில் ஒரு பக்கம் தன் கைகளிலும் மறுபக்கம் பெண்களின் கைகளிலும் பிடித்துக்கொண்டு பைஅத் செய்கிறார்கள். இதுதான் உண்மையான வழிமுறையாகும். அல்ஹம்துலில்லாஹ் ! 

( ...............தொடரும் ) 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...