Tuesday, 19 March 2019

திப்யானுல் ஹக் - பகுதி 2

திப்யானுல் ஹக் (சத்திய விளக்கம் )


அல் ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்பிர்ரஸூல் ,அஷ் ஷெய்குல் காமில் ,அஷ் ஷாஹ்  முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸுபி காதிரி காஹிரி   قدس الله سره العزيز


வெளியீட்டு தேதி : முதல் பதிப்பு,ஹிஜ்ரி 1431,புனித ரமழான் பிறை 24
ஈஸவி 2010,செப்டம்பர் 4

வெளியீடு : ஹிஸ்புல்லாஹ் சபை,ஸூபி மன்ஸில்,காயல்பட்டணம்-628204. 


குழப்பங்கள் ,அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும் போது ஜியாரத் செய்வது ஆகுமா ? 


குழப்பங்கள் ,அனாச்சாரங்கள் நிறைந்திருந்தால் அவைகளை ஜியாரத் செய்ய செல்பவர்கள் முடிந்தால் கையால் தடுக்க வேண்டும் . இல்லாவிடின் நாவால் தடுக்க வேண்டும் , இதுவும் முடியா விட்டால் மனதால் வெறுக்க வேண்டும் .

இது அல்லாமல் ஜியாரத் ஆகாது என்று சொல்லுவது மடத்தனமாகும் . கெட்டவைகள் இருப்பதினால் நன்மையான ஸுன்னத்தை தடுக்கவோ , விடவோ முடியாது . சங்கைமிகு இமாம்களின் தீர்ப்பை பாருங்கள் .

அவ்லியாக்களின் கப்ருகளை அவர்களது பிறப்பு (இறப்பு - கந்தூரி ) தினங்களில் பெண்கள் ,ஆண்களுடன் கலந்திருப்பது போன்று மற்றுமுள்ள அதிகமான குழப்பங்கள் (அனாச்சாரங்கள்) அங்கு அதிகமாக நடக்கும் போது ஜியாரத் செய்வது ஆகும் . இல்லை ஸுன்னத்தாகும் . இமாம் ஷெய்கு இப்னு ஹஜர்  رضي الله عنه  அவர்களின் பத்வா குப்ரா வில் ( பாகம் 2, பக்கம் 24) சொன்னதன் குறிப்பு இதோ :-

கேள்வி : குறிப்பிட்ட காலத்தில் (கந்தூரி தினத்தில் ) அதற்கென்று பிரயாணம் செய்து ,அவ்லியாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்து , அங்கு பெண்கள் ,ஆண்களுடன் கலந்திருப்பது ,அதிகமான விளக்குகள் ஏற்றுவது போன்று அதிகமான குழப்பங்கள் சேர்ந்திருக்கும் போது ஆகுமா ?

பதில் : அவ்லியாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது விரும்பத்தக்க வழிபாடாகும் . அதற்காக பிரயாணம் செய்வதும் அப்படியே ( விரும்பத்தக்க வழிபாடாகும் ). பித்அத்துகள் , ஹராம்கள் இருப்பதற்காக நல் வழிபாடுகளை விட முடியாது . மனிதர்கள் அவைகளை செய்ய வேண்டும் . பித்அத்துகளை மறுக்க வேண்டும் . முடிந்தால் நீக்கவும் வேண்டும் . ஸுன்னத்தான தவாபு (கஃபத்துல்லாவை வலம் சுற்றுவது ) ,வாஜிபான தவாஃபை கூட புகஹாக்கள் - மார்க்க அறிஞர்கள் பெண்கள் இருக்கும் போதும் செய்ய வேண்டும் என்றே சொல்லி இருக்கிறார்கள் . எங்கிலும் பெண்களை விட்டும் தூரமாக செய்ய வேண்டுமென்றே சொல்லியிருக்கிறார்கள் . அதைப் போன்றே இதுவும் (ஜியாரத் செய்வதும் ) .

பெண்கள் கலந்திருக்கிறார்கள் என்ற பயத்தினால்  ஜியாரத்தை தடுக்க வேண்டுமென்றால் தவாபு செய்வது , ரமலு - தவாபு செய்யும் போது  குதித்து ,குதித்து செல்வது  ,அரஃபாவில் தங்குவது , முஸ்தலிபாவில் தங்குவது , கல் அடிப்பது போன்றவைகளை எல்லாம் தடுக்க வேண்டியது வரும் . இவைகளை எந்த இமாமும் தடுக்கவில்லை . பெண்கள் கலந்திருப்பதை மட்டுமே தடுத்திருக்கிறார்கள் . அதைப் போன்றே ஜியாரத்தை தடுக்க முடியாது .

இப்பயத்தால் தடுப்பவர்களின் எதிர்ப்பைக் கண்டு ஏமாந்து விடாதே . அவ்லியாக்களின் ஜியாரத்தை பித்அத் , முன்னோர்களின் காலத்தில் இல்லை என்ற கூற்று மறுக்கப்பட்டதாகும் .

பித்அத்துதான் என்று வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் ,எல்லா பித்அத்துகளும் தடுக்கப்படாதே . பித்அத்துகளில் ஸுன்னத்தான ,இல்லை வாஜிபான பித்அத்துகளும்    இருக்கின்றனவே .

ஆதாரம் - பதாவா கலீலி ,பக்கம் 351 .       


அவ்லியாக்களின் பெயரில் கொடியேற்றுவது :



கம்பத்தில் பறக்கவிடப்படும் கொடிக்கு அலம்  - ஜண்டா  -நிஷான்  என்று பல பெயர்கள் உண்டு .

நபிகள் நாயகம் ﷺ  அவர்கள் போர்முனைக் கொடிகளுடன் சென்றதாகவும் ,திருமக்கா முகர்ரமாவை வெற்றிக் கொண்டு நுழையும் போது கொடி பிடித்ததாகவும் கீழ்கண்ட ஹதீஸ்கள் அறிவிக்கின்றன . 

ஹழ்ரத் இப்னு அப்பாஸ்  رضي الله عنه  அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,
அண்ணல் நபி ﷺ  அவர்களின் பெரிய கொடி கருமையாகவும் ,சிறிய கொடி வெண்மையாகவும் இருந்தது .

நூல் : திர்மிதி - இப்னு மாஜா மற்றும் மிஷ்காத் பக்கம் 237 .

ஹழ்ரத் ஜாபிர் رضي الله عنه  அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,
நபி ﷺ  அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள் . அவர்களது கொடி வெண்மையாக இருந்தது .

நூல் : திர்மிதி - இப்னு மாஜா மற்றும் மிஷ்காத் பக்கம் 338 .

ஸுபியாக்களான ஞானவான்கள் , அன்பியாக்கள் ,அவ்லியாக்களை ஜியாரத் செய்வதற்காக போகும் பொழுது கொடிகள் பிடித்துக் கொண்டும் ,கொட்டு அடித்துக் கொண்டும் செல்வதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறார்கள் .இவைகள் கூடுமா ?

என்ற கேள்விக்கு அல்லாமா  ஷெய்கு முஹம்மது கலீலி ஷாபியீ رضي الله عنه  அவர்கள் இவைகள் ஆகுமானவைகள் . வேண்டப்படுபவைகள் . இவற்றை வழிகெட்ட வம்பர்கள் தான் மறுப்பார்கள் என்று பதில் அளித்துள்ளார்கள் .

ஆதாரம் : பதாவா கலீலி , பாகம் 2,பக்கம் 351 . 

மைய்யித்தின் (கப்றின் ) தலைமாட்டில்  கல் ,அல்லது மரக்கட்டை வைப்பது ஸுன்னத்தாகும் .

அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்கள் ஹழ்ரத் உஸ்மான் இப்னு மழ்வூன்   
رضي الله عنه  அவர்களின் தலைமாட்டில் ஒரு பாறைக்கல்லை வைத்தார்கள் .அதைக் கொண்டு எனது சகோதரரின் கப்ரு என்று தெரிந்து கொள்வேன் . எனது குடும்பத்தில் இறந்தவர்களையும் அங்கு அடக்கிக் கொள்வேன் என்று சொன்னார்கள் .

நூல் : ரஹுல் மஹல்லி , பாகம் 1 ,பக்கம் 351 .
            இஆனத்துத் தாலிபீன் , பாகம் 2,பக்கம் 119 .    

மறுமையில் நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் திருக்கரத்தில் 'லிவாவுல் ஹம்த் ' எனும் கொடி கொடுக்கப் படுகின்றது .

"எனது கரத்தில் 'லிவாவுல் ஹம்த்' எனும் கொடி இருக்கும் (இதனால் ) எனக்கு பெருமை இல்லை . ஆதமும் ,அவர்களல்லாத எந்த நபியும் என் கொடியின் கீழ் இருந்தே தவிர இல்லை " .இந்த ஹதீதை ஹழ்ரத் அபூஸயீத்   رضي الله عنه  அவர்கள் அறிவிக்கின்றார்கள் .

நூல் : திர்மிதி ,மிஷ்காத் பக்கம் 513 .  

"கியாமத் நாளில் 'லிவாவுல் ஹம்த்'  கொடியை நான் சுமப்பேன் . " அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்   رضي الله عنه  அவர்கள் .

நூல் : தாரமீ , திர்மிதி ,மிஷ்காத் பக்கம் 513 .

எனவே கொடி ஏற்றுவதன் மூலம் இது ஒரு மகானின் கப்ரு என்று அறிவிப்பதாலும் , ஒரு வலியை கண்ணியப்படுத்துதல் இருப்பதாலும் ,மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாலும் இது மார்க்கத்தில் ஆகுமான காரியம் ஆகும் . ஆகாது என்பதற்கு எந்தவித ஆதாரமுமில்லை .

ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தேசிய கொடி என்றும் , ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கட்சிக் கொடி என்றும் ஏற்படுத்தி அதற்கான கொடியேற்று விழா ,கொடி தினம் என்று கொண்டாடி வரும் இக்காலத்தில் அவ்லியாக்களுக்கு கொடி ஏற்றக் கூடாது என்று சொல்வது அறிவீனத்தையும் , அவ்லியாக்கள் மீதுள்ள பகைமையையும் காட்டுகின்றது . அல்லாஹ் அதை விட்டும் நம்மை காப்பாற்றுவனாக ! 


கப்ருகள் மீது பூக்கள் போடுவது :  



நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் இரு கப்ருகளின் அருகாமையில் செல்லும் போது இரு மைய்யித்துகளும்  அதாபு  - வேதனை செய்யப்படுகின்றார்கள் . ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது பேணுதலாக இல்லை . மற்றோருவர் கோள் சொல்பவராக இருந்தார் என்று கூறி ஈரமான (பேரீச்ச மரத்து ) மட்டை எடுத்து இரண்டாக பிளந்து ஒவ்வொரு கப்ருகளிலேயும் ஒரு மட்டையாக நட்டினார்கள் . யா ரஸூலல்லாஹ் ! ஏன் இப்படி செய்தீர்கள் ? என்று ஸஹாபாக்கள் கேட்ட பொழுது ,இவை (மட்டைகள் ) காய்ந்து விடாது இருக்கும் போதெல்லாம் இவர்களுக்கு வேதனை லேசாக்கப்படும் என்று சொன்னார்கள் .

நூல் : மிஷ்காத் பாபுல் கலா முதல் பிரிவு . 

கப்ரின்  மீது பசுமையான மட்டையை வைப்பது ஸுன்னத்தாகும் . ஏனெனில் ஹதீஸை பின்தொடர்வதற்கும் , இன்னும் அதன் தஸ்பீஹின் பரக்கத்தைக் கொண்டு வேதனை எளிதாக்கப் படுவதற்காகவும் , ஈரமான பூக்கள் போன்றவைகளை போடுவது வழக்கமாக ஆக்கப்பட்டுள்ளதும் ,ஸுன்னத்தாகும் . காய்ந்து போகாது இருக்கும் போது அதில் எதையும் எடுப்பது ஹராமாகும் .

நூல் : பத்ஹுல் முஈன் , இஆனா பாகம் 2,பக்கம் 119 .      

ஈரமான மட்டை , பூக்கள் போடுவது ஸுன்னத்தாகும் . அதற்கு உடமையானவனைத் (போட்டவனை) தவிர ஈரமாக இருக்கும் போது வேறு யாரும் எடுப்பது கூடாது . காய்ந்து விட்டால் வக்பு செய்யப்பட்டதாக இருந்தாலும் எவரும் எடுக்கலாம் . ஏனெனில் அது வழக்கமாகும் . ஈரமாக இருக்கும் காலமெல்லாம் வேதனை மைய்யித்திற்கு எளிதாக்கப்படுகிறது என்றும் அவை மைய்யித்திற்காக பிழை பொறுக்கத் தேடுகின்றது என்றும் வந்துள்ளது .

நூல் : கல்யூபி ,பாகம் 1,பக்கம் 351 .   

"ஹதீஸைப் பின் தொடர்ந்து கப்ருகளின் மீது ஈரமான மட்டையை வைப்பது ஸுன்னத்தாகும் . இந்த ஹதீஸின் தொடர் (சனது ) சரியானது ,இதன் தஸ்பீஹின் பரக்கத்தால்  வேதனை எளிதாக்கப்படுகின்றது . காய்ந்த மட்டை தஸ்பீஹ் செய்வதை விட  ஈரமான மட்டை தஸ்பீஹ் செய்வது பூரணத்துவமாகும் . இந்த ஹதீஸை ஒழுங்குபடுத்தி பூக்கள் அவை போன்றவைகளை போடுவது வழக்கமாக்கப்பட்டுள்ளது . "

நூல் : துஹ்பா ,பாகம் 3,பக்கம் 197 . 


ஈரமான மட்டையை கப்ரின் மீது வைப்பது ஸுன்னத்தாகும் . இவ்வாறே பூக்கள் இவை போன்றவைகளை வைப்பதும் (ஸுன்னத்தாகும் ). 

நூல் : முஃனி , பாகம் 1,பக்கம் 364 .   

ரோஜா பூக்கள் மற்றும் இதர பூக்களை கப்ரின் மீது வைப்பது அழகாகும் .

நூல் :பதாவா ஆலம்கீரி  

இந்த ஹதீஸைக் கொண்டு பூக்கள் , மட்டையை வைப்பது வழக்கமாக இருப்பதால் நம் தோழர்களில் பின்னோர்கள் ஸுன்னத்து என்று தீர்ப்பு அளித்துள்ளார்கள் .

நூல் : தஹ்தாவி , பக்கம் 364 . 



கப்ருகளின் மீது போர்வை போர்த்துவது : 

அவ்லியாக்கள் ,சாலிஹீன்களின் கப்ருகளின் மேல் போர்வை போர்த்துவது அவர்களை கண்ணியப்படுத்துவதற்காகவும் , அடையாளப் படுத்துவதற்காகவும் ஆகும் .  

ஷெய்கு அப்துல் கனி நாபிலிஸி   رضي الله عنه  அவர்கள் தங்களது கஷ்புன் நூர் அன் அஸ்ஹாபில் குபூர் எனும் நூலில் சொல்கிறார்கள் ஷரியத்திற்கு உட்பட்ட நல்ல பித்அத்துகளுக்கு ஸுன்னத் என்று பெயர் வைக்கப்படும் . (அதன் அடிப்படையில் ) உலமாக்கள் ,அவ்லியாக்கள் ,சாலிஹீன்களின் கப்ருகள் மீது குப்பாக்கள் கட்டுவது ,பொதுமக்களின் கண்களில் கப்ராளிகளின் கண்ணியத்தை வெளிப்படுத்துவதற்காகவும் ,அவமரியாதை செய்யாதிருப்பதற்காகவும்    நோக்கமானால் ஆகுமான காரியமாகும் .

நூல் : ரூஹுல் பயான் ,பாகம் 2,பக்கம் 487 .


அவ்லியாக்கள் ,ஸாலிஹீன்களின் கப்ருகளின் மீது போர்வைகள்  ,  தலைப்பாகைகள் ,ஆடைகளை வைப்பது மக்ரூஹ் என்று சில புகஹாக்கள் -மார்க்க அறிஞர்கள் சொல்லி இருக்குகிறார்கள் . எனினும் பொதுமக்களின் கண்களில் கண்ணியம் ,மரியாதை இருக்க வேண்டும் என்ற நோக்கம் ,அல்லது அந்த கப்ராளிகளை  அவமரியாதை செய்யாதிருக்க வேண்டும் என்ற நோக்கம் ,அல்லது பயபக்தியை ஒழுக்கத்தை ஜியாரத் செய்பவர்களிடம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்குமென்றால் இவை அனைத்தும் ஆகும் என்று நாங்கள் சொல்கிறோம் .

நூல் : ரத்துல் முஹ்தார் , பாகம் 5,பக்கம் 357 . 

சிறப்பிற்குரியவர்கள் , கண்ணியமிக்கவர்கள் என்று மற்ற கப்ருகளை விட பிரித்துக் காட்டுவதற்காகவே போர்வைகள் போர்த்தப் படுகின்றது . அது மனதில் பயத்தையும் ,உள்ளத்தில் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது . இதை அனுபவத்திலும் காண்கிறோம் .

அவ்லியாக்களுக்கு குளிர் அடிக்கின்றதா ? என்று வழிகேடர்கள் கேட்பது போல் அல்ல . அப்படியானால் கஃபதுல்லாஹ்விற்கு போர்வை போர்த்தியிருப்பது அல்லாஹ்வுக்கும் , இறை ஆலயத்திற்கும் குளிர் அடிக்கின்றதா ? இல்லை ,இல்லை  கண்ணியத்திற்காக மாறியதைக்காகத்தான்  தொன்று தொட்டு போர்த்தப் படுகின்றது . அதைப் போன்று அவ்லியாக்களின் கப்ருகளுக்கும் என்று அறிக !.

ஜியாரத்தின் போது கப்ராளிகளின் முகத்தை முன்னோக்குவதும் , கைகளை உயர்த்துவதும் : 

ஜியாரத்தின் போது கப்ராளிகளின் அருகாமையில் இருந்து சூராக்கள் ஓதும் போதும் , துஆக்கள் கேட்கும் போதும் கப்ராளிகளின் முகத்தை முன்னோக்குவதும் , (உட்காராமல் ) நிற்பதும் ,துஆக்களின் போது வானத்தளவில் கைகளை உயர்த்துவதும் ஸுன்னத்தாகும் .

நூல் :கல்யூபி , பாகம் 1,பக்கம் 351 . 

கப்ருகளின் அருகாமையில் நீண்ட நேரம் நிற்பதும் முஸ்தஹப்பாகும் .  

நூல் : முஃ னி ,ஜியாரத் பாடம் , பாகம் 1,பக்கம் 365 .  


மரணித்தவர்களுக்கும் ,அவர்களின் கப்ருகளுக்கும் மரியாதை செய்ய வேண்டும்: 

"ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் என்று நபிகள் நாயகம்
 صلى الله عليه و سلم அவர்கள்  சொன்னார்கள் " .

அறிவிப்பாளர் : இப்னு சயீது ,மிஷ்காத் ,பாகம் 1 ,பக்கம் 144 .

"கப்ருகளின் மேல் உட்காராதீர்கள் .அதனளவில் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் சொன்னார்கள் " .

அறிவிப்பாளர் : அபூமர்ததுல்  கன்வி, முஸ்லீம் ,பாகம் 1 ,பக்கம் 312.

ஜனங்கள் ஷுஹதாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்கிறார்கள் . அவைகளை மரியாதை செய்கிறார்கள் . இது ஷுஹதாக்கள் இப்போதும் ஹயாத்தாக இருக்கிறார்கள் என்று நாம் சொல்வதின் மீது அறிவிக்கின்றது என்று இமாம் றாஜி رضي الله عنه  அவர்கள் சொல்கிறார்கள் .

நூல் : தப்சீர் கபீர் ,பாகம் 4, பக்கம் 147 .

  கப்ரை ஜியாரத் செய்கிறவர் அவரது (கப்ராளியின் ) ஜீவிய காலத்தில் எப்படி அருகாமையில் நெருங்கி பழகுபவராக இருந்தாரோ அதே மாதிரி கண்ணியப்படுத்துபவராக அவரது கப்ருக்கு அருகாமையில் நெருங்குவது ஸுன்னத்தாகும் என்று இப்னு ஹஜர் رضي الله عنه  அவர்கள் சொன்னார்கள் .

நூல் : துஹ்பா , பாகம் 3 ,பக்கம் 175 .

முடிந்த மட்டிலும் ஜியாரத் செய்யும் போது மரணித்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் . அதிலும் குறிப்பாக ஸாலிஹீன்களுக்கு மிக வெட்கத்துடனும் ,மரியாதையுடனும் வெளிரங்கத்திலும் ,உள்ரங்கத்திலும் மரியாதை செய்ய வேண்டும் . நிச்சயமாக ஸாலிஹீன்களிலிருந்து வெளிப்படையான பல உதவிகள் ஜியாரத் செய்கிறவர்கள் அதபு - ஒழுக்கத்திற்கும் ,தன்மைகளுக்கும்  தக்கவாறு கிடைக்கின்றன . 

நூல் : லம்ஆத் ஷரஹு மிஷ்காத் ,பக்கம் 154 .

பித்அத்துக்காரர்கள் ,பாவிகள் பின்னால் தொழுவது :  

பித்அத்துக்காரன் , பாஸிக் (மார்க்கத்தில் விலக்கப்பட்ட பாவங்களைச் செய்தவன் ) பின்னால் தொழுவது மக்ரூஹ் (அப்படி தொழுதால் மக்ரூஹ் உடன் தொழுகை கூடி விடும் ) .  பித்அத்துக்காரன்  பின்னால் தொழுவது மக்ரூஹ் என்பதன் கருத்து அந்த பித்அத்தினால் அவனை நாம் காபிர் என்று சொல்லாமல் இருந்தால்தான் . அப்படி அந்த பித்அத்தினால் அவனை காபிர் ஆகிவிட்டான் என்று நாம் சொன்னால் அறவே அவன் பின்னால் தொழ கூடாது ,தொழுகை நிறைவேறாது .

நூல் : இஆனா ,    பாகம் 2 ,பக்கம் 47 .

 (ஐவேளை ) ஜமாத்திற்கும் கூறப்படும் தங்கடங்களை போன்று தான் ஜும்மா தொழுகைக்கும் பொருந்தும் .

நூல் : இஆனா , பாகம் 2,பக்கம்  51 .
    
 பித்அத்துக்காரர்கள் என்பதன் கருத்து ஸுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமாக இருப்பவர்களாவார்கள் .

நூல் : பதாவா ஹதீதிய்யா , பக்கம் 280 .

பர்மாவி இமாம் சொன்னதாக புஜைரமியில் இருப்பதாக ஷர்வானி அவர்கள் சொல்கிறார்கள் , பாஸிக் ,பித்அத்துக்காரர்கள்  பின்னால் கைர் - நன்மையும் , ஸலாஹ் -நேர்மை உடையவர்கள் தொழுவது ஹராமாகும் ( அப்படி அவர்கள் பின்னால் இவர்கள் தொழுதால் அந்த )   பாஸிக் ,பித்அத்துக்காரர்கள்  மீது நல்லெண்ணம் கொள்வதன் பேரில் மக்களை தூண்டுவதாகிவிடும் .

நூல் : ஷர்வானி ஹாஷியத்து துஹ்பா , பாகம் 2 ,பக்கம் 294 .

 ஆகவே இப்படிப்பட்ட பாஸிக் ,பித்அத்துக்காரர்கள் இமாமாக இருக்கும் ஜமாத்தில் ஸுன்னத் வல் ஜமாத்துக்காரர்கள் கலந்து தொழுவது கூடாது .


 பித்அத்துக்காரர்களுடன் கலந்துறவக் கூடாது :    


يٰۤاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَـكُمْ اَوْلِيَآءَ اِنِ اسْتَحَبُّوا الْـكُفْرَ عَلَى الْاِيْمَانِ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰۤٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏ 

ஈமான் கொண்டவர்களே ! உங்களது பெற்றோர்கள் , சகோதரர்கள் ஈமானை விட குப்ரை நேசிப்பார்களேயானால் அவர்களை அன்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள் . எவர்கள் உங்களில் நின்றும் அவர்களை அன்பர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ அவர்கள் அநீதக்காரர்களாவார்கள் .

அல் குர்ஆன் 9:23   

எவர் பித்அத்துக்காரர்களுக்கு மரியாதை செய்கிறாரோ அவர் இஸ்லாத்தை இடிப்பதற்கு உதவி செய்தவராவார் . 

அறிவிப்பாளர் : இப்ராஹீம் இப்னு மைஸரா , மிஷ்காத் 

அவர்கள் (பித்அத்துக்காரர்கள் ) வியாதியஸ்தர்களானால் நோய் விசாரிக்க போகாதீர்கள் . அவர்கள் மரணமானால் (மைய்யித்தில் ) ஆஜராகாதீர்கள் . அவர்களை சந்திப்பீர்களேயானால் ,அவர்களுக்கு ஸலாம் சொல்லாதீர்கள் . அவர்களோடு சேர்ந்து உட்காராதீர்கள் . அவர்களுடன் தண்ணீர் குடிக்காதீர்கள் . (உணவு ) உண்ணாதீர்கள் . அவர்களுடன் திருமணம் செய்யாதீர்கள் . அவர்களுக்கு  (மைய்யித்து ) தொழாதீர்கள் ,அவர்களுடன் தொழாதீர்கள் .

அறிவிப்பாளர் :ஹழ்ரத் அபூஹுரைரா رضي الله عنه  அவர்கள் ,முஸ்லிம் . 

பித்அத்துக்காரனுக்கு சலாம் சொல்வீர்களேயானால் , முகமலர்ச்சியுடன் அவனை சந்திப்பீர்களேயானால் ,அவனுக்கு சந்தோஷமானதைக் கொண்டு வரவேற்பீர்களேயானால் ,அல்லாஹ் இறக்கி வைத்த(வேதத் )தை லேசாக்கி விட்டான் ( மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டான் ) . 

நூல் : பதாவா ஹதீதிய்யா ,பக்கம் 280 .

ஈமான் சரியாகத் தரிப்பட்டிருக்கவும் , தவ்ஹீது கலப்பற்றதாக (இக்லாஸாக ) இருக்கவும் விரும்புகின்றவன் ( பித்அத்து )  கொள்கைக்காரர்களோடு மனம் மருவுதலாக இருக்கவோ ,அவர்களோடு நெருங்கி பழகி இருக்கவோ ,அவர்களோடு கூடி புசிக்கவோ , குடிக்கவோ மாட்டான் . அவர்களோடு தனது வெறுப்பைக் காட்டியே நடக்க வேண்டும் . எவனாகிலும் பித்அத்துக்காரர்களோடு இன்புறப் பேசி ஒப்பி நடப்பானேயானால் அல்லாஹுத்தஆலா அவனை விட்டும் ஈமானுடைய இன்பத்தை உரித்து விடுவான் . எவனாகிலும் பித்அத்துக்காரர்களை உகந்து நேசிப்பானேயானால் அவனுடைய இருதயத்தை (கல்பை ) விட்டும் ஈமானுடைய ஒளியைப் பிடுங்கப்படும் .

நூல் : ஹகாயிகுத் தன்ஸீல் , தப்ஸீர்  அஸீஸி . 

எவனாகிலும் பித்அத்துக்காரனை  உகந்து நேசித்தால் அல்லாஹுத்தஆலா அவனுடைய (நல்ல ) அமலை அழித்துவிடுவான் . அவனுடைய கல்பை விட்டும் ஈமானுடைய பிரகாசத்தை போக்கப்பட்டு விடும் . எவனாகிலும்  
பித்அத்துக்காரர்களோடு  கோபமாக இருக்கிறதாக அல்லாஹ் அறிந்தால் அவனுக்கு நல்ல அமல்கள் குறைவாக இருந்த போதிலும் அல்லாஹுத்தஆலா அவனுடைய பாவங்களை எல்லாம் பொறுத்து விடுவான் என்றே நான் ஆதரவு வைக்கின்றேன் . பித்அத்துக்காரனை  ஒரு பாதையில் போகக் காண்பாயேயானால் நீ வேறு பாதையில் போ .

சொன்னவர் : ஷெய்குல் மஷாயிக் ஹழ்ரத் புளைல் இப்னு இயாழ்  رضي الله عنه  அவர்கள் .
அறிவிப்பாளர் : கவ்துல் அஃளம் ஹழ்ரத் ஷெய்கு முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه  அவர்கள் .

நூல் : குன்யத்துத் தாலிபீன்    

சகோதரர்களே !

மேலே குறிப்பிட்ட போதனைகளையும் நன்கு சிந்தித்து உண்மையை சத்திய விளக்கத்தை உணர்ந்து இதயத்தில் பதிய வைத்து தீய கூட்டத்தினரின் உறவையும் ,பந்தத்தையும் அகற்றி நல்லோர்களான ஸுன்னத் வல் ஜமாத்தினர்களுடனேயே சகவாசம் பூண்டிருப்பீர்களாக . 

அல்லாஹ் سبحانه و تعالى நம் அனைவர்களையும் கெட்ட கொள்கைக்காரர்களுடைய தீங்கை விட்டும் காப்பாற்றுவானாக .ஆமீன் !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...