வஸீலா மூன்று வகைப்படும் . உதாரணத்திற்காக அவ்வகைகளை அடியில் காண்க ,
" ஆண்டவா ! ஸெய்யிது அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنها அவர்கள் பொருட்டால் என் பிணியை நீயே நீக்குவாயாக " என்று எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி வேண்டுவது ஒரு வகை .
"யா முஹையத்தீன் ! முஹையத்தீன் ஆண்டகையவர்களே ! என் பிணி தீர நாயனிடம் பிரார்த்தனை புரிவீர்களாக ! " என்று விண்ணப்பித்துக் கொள்வது ஒரு வகை .
" யா முஹையத்தீன் ! யா கவ்துல் அஃலம் ! தாங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் ,அவனில் நின்றும் தத்துவத்தைப் பெற்றவர்களாகவும் இருக்கின்றீர்கள் . ஆனபடியால் , தங்களையன்றி எனக்கு வேறு கதியில்லை .என் பிணியை தாங்களே நிவர்த்திக்க வேண்டும் " என்று நேரடியாக வேண்டுதல் செய்வது மற்றோரு வகை .
இவ்வாறாக மூன்று விதமாகக் கேட்பதும் ஆகும் . இந்த மூன்றும் ஒன்று தான் , என்பதாக இமாம் ,முஜ்தஜித் தகியுத்தீன் ஸுப்கி ஷாபிய்யி رضي الله عنها அவர்கள் ஷிபாஉஸ்ஸிகாம் ,134வது பக்கத்தில் வரைத்துள்ளார்கள் .
ஷிபாஉஸ்ஸிகாம்-இமாம் ஸுப்கி |
இங்கனமிருக்க ,
" ஆண்டவனுக்கு பயப்படுவதையும் , அவனுக்கு வழிபடுவதையும் பற்றிப் பிடித்துக் கொள்வீர் !
அல்லாஹ்வைத் தவிர்த்து யாரிடமும் பயமோ , ஆதரவோ கொள்ளாதீர் ! சர்வதேவைகளையும் அல்லாஹ்வின் பால் ஒப்படைத்து , அவனிடமே எல்லா தேவைகளையும் கேட்பீராக ! அல்லாஹ் அல்லாதவற்றின் பால் ஆதரவு வைக்காமல் அவனிடமே நம்பிக்கை கொள்வீராக " என்பதாய் ஸெய்யிதினா அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنها அவர்கள் தங்களது மவுத்தின் பொது ஸெய்யிதினா அப்துல் வஹ்ஹாப் رضي الله عنها அவர்களுக்குச் செய்த வஸியத்தை எடுத்துக் காட்டி, அன்பியா ,அவ்லியாக்கள் பால் உதவி தேடுதல் கூடாது என்கின்றனர் .
இதற்கு 'இஸ்திஆனத் ஹகீகி' என்று பெயர் . குர்ஆன் ,ஹதீது கொண்டு 'இஸ்திஆனத் மஜாஸீ ' ஆகுமான காரியமென்று ஹழ்ரத் கவ்துல் அஃலம் رضي الله عنها அவர்கள் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள் . மக்கள் அவர்கள் பால் உதவி தேடியதையும் , தேடுவதையும் , மவுத்திற்குப் பிறகு தேடப் போவதையும் அவர்கள் தெரிந்தே இருக்கின்றார்கள் .ஆகையால் அவர்கள் இதை விலக்கவில்லை . எத்தகைய தேவைகளை மக்கள் அவர்கள் பால் தேடினார்கள் ,அவற்றை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றி கொடுத்தார்கள் எனும் விபரங்கள் அவர்களது சரித்திரங்களில் கூறப் பெற்றுருக்கின்றன .
அவர்கள் இரட்சிப்பதில் வலுப்பமானவர்கள் . ஆண்டவன் அவர்களுக்கு இரட்சித்து உதவி செய்யக் கூடிய தத்துவத்தை கொடுத்துள்ளான் .
ஷெய்குனா , குத்புல் அக்தாப் , கவ்துஸ் ஸமதானி , மஹபூப் ஸுப்ஹானி , முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنها அவர்கள் பின்வருமாறு கூறியிருப்பதையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கி பார்த்து உண்மையை உணருங்கள் !
(இஸ்மீ - க - இஸ்மில் அஃலம் )
"(நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வைப்பதில் ) எனது திருநாமம் வலுப்பமான ஆண்டவனது (இஸ்முள் அஃலம் ) தெய்வீக திருநாமம் போன்றுள்ளது " என்பது அவர்களுடைய பொன்மொழி . இவ்விபரம் , ஆதரமான ,பிரபல்யமிக்க 'மனாகிபு' கிரந்தங்களில் காணக்கிடக்கின்றது .
ஹைதராபாத்தின் முற்கால முப்தி மவ்லானா மவ்லவி முஹம்மது ஸயீது கான் சாஹிப் அவர்களும் இது சம்பந்தமாக கொடுத்துள்ள பத்வாவில் இதுபற்றி விளக்கப்படுத்தியுள்ளார்கள் .
மேலும் இமாம் அப்துல்லாஹ் யாபியீ ஏமனி رضي الله عنها அவர்களது 'குலாஸத்துல் மபாகிர் ' எனும் கிதாபில் ஸெய்யிதினா ஸுல்தானுல் அவ்லியா ஷெய்கு முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنها அவர்கள் சொல்ல நான் கேட்டேனென்று ஷெய்கு உமருல் பஸ்ஸார் رضي الله عنها அவர்களைத் தொட்டும் ரிவாயத்து அறிவிக்கப்பட்டுள்ளது . என்னவெனில் -
"எவனொருவன் ,முஸீபத்தில் சங்கடத்தில் அகப்பட்டுக் கிடக்கும் பொழுது அவன் என்னைக் கொண்டு இரட்சிப்பு தேடுவானாகின் அவனை விட்டும் அந்த முஸீபத்தை ,சங்கடத்தை நீக்கப்படும் .
இன்னும் யாராவது ஒரு நாட்டத்தை (ஹாஜத்தை ) நாடி அல்லாஹுத்தஆலா அளவில் என்னைக் கொண்டு வஸீலா சிபாரிசு தேடுவானாகில் அந்த ஹாஜத்தை அவனுக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்படும் .
மேலும் எவரொருவர் இரண்டு ரக்அத்து , ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹாவிற்குப் பின் ஸுரத்துல் இக்லாஸ் 11 விடுத்தும் ஓதி ஸலாம் கொடுத்த பின் நாயகம் ﷺ அவர்களை நினைவுகூர்ந்து ஸலாத்தும் ,ஸலாமும் சொல்லியதற்கப்பால் ,என்னுடைய நாமத்தை உச்சரித்த வண்ணம் ,தனது நாட்டத்தையும் நினைவு கொண்டவனாக ,ஈராக்கு தேசத்தளவில் 11 எட்டு எடுத்து வைத்தானாகில் அந்த ஹாஜத்தை நிறைவேற்றிக் கொடுக்கப்படும்" என்பதே .
நுஸ்ஹத்துல் காத்திருல் பாத்திர் |
இதற்கொப்ப ஹழ்ரத் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி
رضي الله عنها அவர்கள் 'ஜுப்ததுல் ஆதார் ' என்ற நூலிலும் , இமாம் முல்லா காரீ மக்கீ رضي الله عنها அவர்கள் 'நுஸ்ஹத்துல் காத்திருல் பாத்திர்' என்ற நூலிலும் எடுத்துரைத்துள்ளார்கள் .
இன்னமும் குத்புர் ரப்பானி கவ்துல் அஃலம் رضي الله عنها அவர்கள் தங்களது மக்களை நோக்கி சொல்லியிருப்பதைப் பாருங்கள் :
அவர்கள் , தங்கள் மக்களை நோக்கி , " என்னை விட்டு செல்லுங்கள் . வெளிரங்கத்தில் நான் உங்களுடன் இருக்கின்றேன் . உள்ரங்கத்தில் மற்றோருவனுடன் இருக்கின்றேன் . எனக்கும் , உங்களுக்கும் இதர சிருஷ்டிகளுக்கும் இடையே வானத்திற்கும் ,பூமிக்கும் உள்ள வித்தியாசமிருக்கின்றது . என்னை இதரர்களை போன்று யூகிக்க வேண்டாம் .
நான் உங்கள் யுக்திக்கு அப்பாற்பட்டவன் . என்னிலையை நீங்கள் யாரும் அறிய மாட்டீர்கள் . நான் உங்களை விட உயர்ந்த உச்ச நிலையிலிருக்கின்றேன் " என்று கூறியுள்ளார்கள் .
மேலும் தங்களது குமாரர் ஸெய்யிது அப்துல் ஜப்பார் رضي الله عنها அவர்களைக் கூப்பிட்டு , "நீர் உறங்குகின்றீரா ? விழித்திருக்கின்றீ ரா ? என்னில் நீர் பினாவாகிவிடும் .விழிப்படைவீர் ." என்று உரைத்திருக்கின்றார்கள் .
மேலும் கவ்துல் அஃலம் رضي الله عنها அவர்கள் , "ஆண்டவனால் எனக்கு அருளப்பெற்ற அகக் கண்ணைக் கொண்டு நான் இவ்வுலகை ஒரு கடுகைப் போல் காண்கின்றேன் " என்றும் கூறியுள்ளார்கள் .
அத்தகைய மஹபூபே ஸுப்ஹானி , மஹ்ஷுக்கே ரஹ்மானி கவ்துல் அஃலம் رضي الله عنها அவர்கள் உரைத்துள்ள பைத்துக்களைக் பாருங்கள் .
எவரொருவர் நம்மை உகந்து நமது இடத்திற்கு வருகிறாரோ அவர் நாயகத்தனம் பெற்ற நாதாக்களுடைய கோட்டைக்குள் புகுந்து நம்முடைய கார்மானத்திலாகி மிகுதியான சம்பத்தைப் பெற்றுக்கொள்வார் .
"என்னுடைய முரீதுக்கு எவ்விதமான பயங்கரமும் வந்தணுகாமல் , நான் அவனை அவனுடைய கருமங்களில் எவ்விதமான தீங்குகள் ,முஸீபத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்வேன் ."
"என்னுடைய முரீதே ! உனக்கு நல்மாராயம் உண்டாவதாக ! உன்னுடைய தேவைகள் அனைத்தையும் உமக்கு நிறைவேற்றித் தருவதன் பேரில் உனக்குச் சோபனம் ! யாதொரு கருமத்தைப் பற்றியாவது நீ வியாகூலமடைந்து துக்கித்தவனாக இருப்பாயானால் , அவ்வேளையில் நான் எனது ஹிம்மத் என்னும் துணிச்சல் கொண்டு உனக்கு உதவி செய்து நான் உன்னை
இரட்சிப்பேன் "
"என்னுடைய முரீதே ! என்னைப் பற்றிப் பிடித்துக் கொள் ! என்னை விசுவாசித்தவனாக இருந்து கொள் ! அப்படியானால் நான் உன்னை இவ்வுலகிலும் மறு உலகிலும் காப்பாற்றுவேன் .
"என்னுடைய முரீது அஞ்சி நடுங்கும் வேளையில் அவனது அச்சத்தை நீக்கி வைக்கும் பாதுகாவலனாக நான் இருக்கின்றேன் . எல்லா விதமான பித்னாச் சோதனைகளிலிருந்தும் , பொல்லாங்குகளிலிருந்தும் நான் அவனைப் பேணி பாதுகாத்துக் கொள்வேன் "
"என்னுடைய முரீது கிழக்கிலோ ,மேற்கிலோ உள்ள எந்த ஊரில் இருப்பினும் அவனது அழைப்பிற்கு நான் விரைந்து சென்று உடனே அவனை இரட்சிப்பேன் .
"எத்தகைய கஷ்டத்திலும் ,பயத்திலும் நீ என்னிடம் உதவி தேடு . எல்லாக் காரியங்களிலும் நான் உனக்கு உதவி புரிந்து இரட்சிக்க எனது ஹிம்மத்துடன் ஆஜராவேன் "
"யாருக்காவது யாதொரு வருத்தம் ,வியாக்கூலம் உண்டாயிருக்கமாயின் அவர்களை விட்டும் அந்த துன்பம் துயர் வியாக்கூலங்களை நான் நிவர்த்தி செய்து கொடுத்து அவர்களுக்கு இரட்சிப்புக் கொடுக்கும் உதவியாகவும் , கிருபையாகவும் அகி இருக்கின்றேன் . ஆதலால் ,எனது செங்கோலைக் குறித்து கட்டியம் கூறுதலெனும் சங்கநாதம் கிழக்கு ,மேற்கு எப்பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது ."
"என்னுடைய முரீது உதயகிரியிலோ அல்லது அஸ்திகிரியிலோ அல்லது ஆழிய சமுத்திரத்தின் அடிவாரத்திலிறங்கி நின்றோ , ஆகாயத்தின் உச்சியில் நின்றோ எந்நிலையில் என்னிடம் உதவி அபயம் தேடி அழைத்தாலும் உடனே நான் அவனைக் காத்து இரட்சிப்பேன் . என்னை எதிர்த்து வழக்காடும் அத்துணை பேர்களையும் சம்கரித்து தீர்ப்பு செய்யும் கூரிய வாளாக நான் இருக்கிறேன் "
"இப்போது சொன்ன சொற்களெல்லாம் பெருமையை நாடி நான் சொல்லவில்லை . ஆண்டவனிடமிருந்து அவ்வாறு சொல்லும்படி வந்த உத்தரவின் பிரகாரம் தான் நான் சொன்னேன் . ஏனெனில் ஜனங்கள் எனது ஹகீகத்தை அறிவதற்காகவே ".
"அவ்வாறான வார்த்தைகள் எதையும் ,இறைச் சமூகத்திலிருந்து நீர் சொல்லும் -அஞ்ச வேண்டாம் - விலாயத்தினுடைய உயர்ந்த தனிப் பெரும் அந்தஸ்த்தில் நீர் நம்முடைய வலியாக இருக்கின்றீர் என்ற உத்தரவு வந்தேயல்லாது நான் சொல்லவில்லை "
ஹழ்ரத் கவ்துல் அஃலம் رضي الله عنها அவர்கள் இவ்வாறு வாக்குறுதி செய்திருக்கின்றார்கள் . சொன்னதற் கொப்ப செயலிலும் செய்து காட்டியுள்ளார்கள் . செய்து கொண்டே இருக்கின்றார்கள் . மேன்மை மிக்க அவர்களது இந்தச் சத்திய வாக்குகள் 'புயூளாத்துர் ரப்பானியா ' போன்ற நூற்களிலும் காணப்படுகின்றன .
தனிப் பெரும் தகுதி படைத்த அண்ணல் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنها அவர்களை வியந்து புகழ்ந்து பாராட்டி புகழ்மாலையாக ,
" அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்
அடக்கி விளையாடவல்லீர் !
அகிலமோ ரேழினையும் ஆடுங்கறங்குபோல்
ஆட்டி விளையாட வல்லீர் !
மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே
வைத்து விளையாட வல்லீர் !
மண்ணகமும் விண்ணகமு மணுவைத் துளைத்ததின்
மாட்டி விளையாட வல்லீர் !
கண்டித்த கடுகில் எழுகடலைப் புகட்டிக்
கலக்கி விளையாட வல்லீர் !
கருத்தரிய சித்தெல்லாம் வல்லநீர் அடிமை என்
கண்முன் வருசித்தில்லையோ !
நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர்
நல்லடிக்காளாகியும் !
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹையத்தீனே ! "
என்றும் ,
" சொல்லான் முழக்கமிட்டோலமிடு வேதமுஞ்
சொன்னதுடனின்ன மின்னஞ்
சுருதி முதலாகம புராணகலை யோதிய
சுலோகங்லென் சொல்லுகேன் !
பல்லாயிரம் கொடியண்ட பகிரண்டமுன்
பாதபங்கயமல்லவோ !
பரிபூரானந்தமே யுனது முடியெனப்
பகர்வதும் பொய்யாகுமோ !
வல்லாநெனும் பெயர் உனக்குதள தல்லாது
மற்றவர் தமக்குமுளதோ !
வானவர் தினந்தினம் வாதுன்பதம் பணியும்
மகிமை சொல வாயுமுண்டோ !
நல்லோர் தமக்கலாதெல்லார் தமக்குமனை
நலிலுதற் கெளிதாகுமோ !
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹையத்தீனே ! "
என்றும் மெய்ஞான மேதை ,அல் ஆரிபுல் காமில் , குணங்குடி மஸ்தான் ஹழ்ரத் என்னும் ஸெய்யிது அப்துல் காதிர் ஆலிம் رضي الله عنها அவர்கள் உரைத்துள்ளார்கள் .
ஆகவே ,எவரெவர் திரிகரண சுத்தியுடன் , அபாய வேளையில் ,அபயந் தேடி
"எந்த வேளையும் யா முஹையத்தீனென்று இயம்பினோர்க்குகந்து அந்தந்த வேளை வந்துதவி செய்வேனென்றருள் செய்தீர் !
இந்த நல்வேளை இதுவேளை வேளையிது சமய் வந்தெனக் கருள்
புரிவீர் முஹையத்தீனாண்டகையே ! "
என்று அழைத்துக் கூப்பிட்டு உதவி தேடுகின்றனரோ அன்னவர்கள் கைகொடுத்துக் காப்பாற்றப்படுவார்கள் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை .
எல்லா குத்புமார்களுக்கும் சக்கரவர்த்தியான ஹழ்ரத் குத்புல் அக்தாப் ,கவ்துல் அஃலம் முஹையத்தீன் رضي الله عنها அவர்கள் நிலை பற்றி இதுகாறும் பேசி வந்தோம் . அவர்களது தொண்டர்களான ஏனைய குத்புமார்களும் கூட தங்களது அன்பர்களுக்கு உதவிபுரியும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் .
No comments:
Post a Comment