ஸஹீஹுல் புஹாரிக்கு ஷரஹ் எழுதியிருக்கும் இமாம் ஷஹாபுத்தீன் கஸ்த்தலானீ رضي الله عنها அவர்களது உஸ்தாது ,ஞானாசிரியர் ,இமாம் ஷெய்கு அஹ்மது அபுல் அப்பாஸில் முர்சி ஜர்ரூக் மக்ரீபி رضي الله عنها அவர்கள் கூறுகின்றார்கள் :
"என்னுடைய முரீதுக்கு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டு அவன் தட்டழிந்து திகைத்து இருக்கும் சமயம் அவனை பாதுகாத்து ஆறுதல் அளிப்பேன் ."
"இன்னும் இயலாமை ,கஷ்டம் , பயங்கரம் உண்டான போது எனது முரீது 'யா ஜர்ரூக் !' என்று என் பெயரைச் சொல்லி அழைப்பானேயானால் நான் விரைந்து வந்து பாதுகாப்பேன் "
இமாம் ஜர்ரூக் அவர்களின் சங்கைமிகு ஜியாரத் |
رضي الله عنها அவர்களது 'புஸ்த்தானுள் முஹத்திதீனில்' குறிப்பிட்டுள்ளார்கள் என 'அன்வாருல் இன்திபாஹ் பீ ஹல்லி நிதாயியா ரஸூல்லல்லாஹ்' என்ற நூலின் 29வது பக்கத்தில் இமாம் முப்தி அஹ்மது ரிழா கான் காதிரி பரேலி
رضي الله عنها அவர்கள் வரைத்துள்ளார்கள் .
அன்வாருல் இன்திபாஹ் |
எம்பெருமானார் ,ஷபீயுல் முத்னிபீன் , ரஹ்மத்துல் ஆலமீன் , நபிகள் திலகம் ,ஸெய்யிதினா , முஹம்மது ரஸூலுல்லாஹி ﷺ அவர்களை ஹழ்ரத் கவ்துல் அஃலம்
رضي الله عنها அவர்கள் அழைத்துக் கூப்பிட்டு
"ஆண்டவனுடைய தோழரான ஹபீபுல்லா அவர்களே !
எனது கையை பிடித்து காப்பாற்றி அருள்வீராக !
எனது இயலாத் தன்மைக்கு தங்களை அன்றி கார்மானம் யாரும் இல்லையே ! "
என்று கூறி பெருமானார் ﷺ அவர்களிடம் வஸீலா தேடியுள்ளார்கள் .
"சிருஷ்டிகளிள் எல்லாம் மாபெரும் சிரேஷ்டமானவர்களே !
பேராபத்து , இடர்கள் வந்துற்றபோது அபயந் தேடி ஒதுங்குவதற்கு
தங்களையன்றி வேறு யாரும் எனக்கு இல்லையே ! "
என்று ஆஷிக்கே ரஸூல் இமாம் முஹம்மது பூஸரி رضي الله عنها அவர்கள் 'கஸீதத்துல் பூர்தாவில் ' உதவி தேடியுள்ளார்கள் .
"என்னை இரட்சித்து காப்பாற்றக் கூடிய நாயகமே ! என்னுடைய நாவிலுண்டான முடிச்சின் வருத்தங்களை என்னை விட்டும் அவிழ்த்து விடுங்கள் !
பறுலான அமல்களில் என்னுடைய கழுத்தில் ஏறிக் கொண்டிருக்கும் கடன்களை என் கழுத்தை விட்டும் நீக்குங்கள் !
மேலும் துன்பங்கள் துயரங்கள் என்னை வந்து மோதும் போது அவற்றைத் தட்டி விலக்க தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் !
எனக்காக மன்றாடி கரை சேர்க்கும் கருணை வள்ளலே ! நான் பற்றிப் பிடிக்கும் ஆதரவுப் பொருளே ! தங்களை தரிசிப்பது தான் எனது நாட்டமும் , தேட்டமும் . இது மட்டுமா ? இறுதி தீர்ப்பு நாளன்று ,மஹ்ஷர் மைதானத்தில் தங்களிடம் கேட்க ஹாஜத்துகள் எத்துணை எத்துணையோ உண்டு !"
என்பதாக மாதிஹூர் ரஸூல் ஷெய்கு சதகதுல்லாஹில் காதிரி காஹிரிய்யி رضي الله عنها அவர்கள் நாயகம் ﷺ அவர்களிடம் இரட்சிப்பு வஸீலா தேடிய சான்று 'வித்ரிய்யா கஸீதாவில் ' காணப்படுகின்றது .
" சிருஷ்டிகளிலெல்லாம் சிரேஷ்டமானவர்களே !
ஆதரவு வைப்பதற்கு மேலாம்பரமானவர்களே !
அல்லாஹுத்தஆலா தங்கள் மீது கிருபை செய்வானாக !
மேலாம்பரமான கொடை அளிக்கும் கொடை வள்ளலே !
கஷ்டங்களை எல்லாம் விலக்கி வைத்து உதவி செய்வதற்கு உத்தமமானவர்களே !
மழை பொழியும் கார்முகிலை விட தங்களது உயர் கொடை தான்
மேலாம்பரமாகி மிகைத்துவிட்டது ! "
என்று கண்ணியமிக்க இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்கள் தங்களது 'அத்யப் அல் நகம் ' கஸீதாவில் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ﷺ அவர்களிடம் அபயம் தேடி உள்ளார்கள் .
"அல்லாஹ்வுடைய திருத்தூதரான ரசூலவர்களே ! தங்களின் திருமுகத்தை விட்டும் திரையை சற்று நீக்கி தங்களின் தரிசனத்தை எனக்கருளுங்கள் !
தங்களுடைய திருமுகத்தை ஜோதி கொண்டு என்னுடைய நேத்திரங்களுக்கு பிரகாசத்தை அளியுங்கள் ! வேற்றுமையின் இருளை விட்டும்என்னைக் காப்பாற்றுங்கள் !
நான் நல்லவனோ ,கெட்டவனோ எப்படியிருப்பினும் தங்களுடையவன் ஆகிவிட்டேனே ! அதுவே போதும் ! இப்போது வேண்டுமானால் ஆதரியுங்கள் அல்லது வெருட்டுங்கள் ! (நான் தங்களை விட்டும் அசைய மாட்டேன் )
கப்பலோட்டி நடுக்கடலில் வழிதவறித் திகைத்தாற் போல் நான் வாழ்க்கை புயலில் நிலை தவறி தத்தளிக்கின்றேன் ! என்னைக் கரை சேருங்கள் !
நான் தகுதியற்றவனாயினும் தங்களின் கிருபையின் பேரில் எனக்கு ஆதரவு உண்டு ! என்னை மதீனாவுக்கு அழைத்துக் கொள்ளுங்கள் !
இயலாமையுள்ள இந்த இம்தாத் என்பவனைத் தங்களுடைய காதல் வலையில் அகப்படச் செய்யுங்கள் ! இத்தருணம் ஈருலகிலும் இவனை விடுதலை பெற்று ஈடேற்றம் அடையச் செய்யுங்கள் ! "
மேற்சொன்ன விதமாக , தேவ்பந்திகள் அனைவருடைய பீரே முர்ஷித் ஆரிபுபில்லாஹ் ஹாஜி ஹாபிஸ் ஷாஹ் முஹம்மது இம்தாதுல்லாஹ் ஸாஹிப் , முஹாஜிர் மக்கி அவர்கள் முறையீடு செய்கிறார்கள் .இவ்விதம் நாயகம் ﷺ அவர்களிடம் உதவி தேடி இயற்றிய கஸீதாக்களை இம்தாத் உல் முஸ்தாக் , நாலா ஏ இம்தாத் போன்ற நூற்களில் காணலாம் .
அஹ்மதுல்லாஹல் வலீ பைத் அரபி |
குத்புஸ்ஸமான் தைக்கா ஸாஹிபு காஹிரி காதிரி رضي الله عنها அவர்கள் , தங்களது 'அஹ்மதுல்லாஹல் வலீ ' என்ற பைத்தில் நாயகம் ﷺ அவர்களை
'யா கைரன் நபீ - யா கைரன் நபீ ' (நபிமார்களில் எல்லாம் சிரேஷ்டமான நன்னபியே ) என்று அழைத்து , இவ்வுலக சம்பந்தமான ,மறு உலக சம்பந்தமான அத்தனை கோரிக்கைகளையும் நாயகம் ﷺ அவர்களிடமே நேருக்கு நேர் வேண்டுதல் செய்து இறைஞ்சுகின்றார்கள் .
வலிகள் திலகம் ,கவ்துல் அஃலம், ஸெய்யிதினா முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنها அவர்களை ,ஷரஹுப் புலி , இமாம் சதக்கத்துல்லாஹ் காதிரி காஹிரி رضي الله عنها அவர்கள் நேருக்கு நேர் அழைத்து ,
யா ஸையதீ சனதீ கவ்தீ வ யா மததீ !
" எனது தலைவரவர்களே ! எனது ஆதாரமே !
எனது இரட்சகரே ! எனது உதவியாளரே !
பகைவர்களின் தீங்கு ஏதும் என்னை வந்தணுகாமல் என்னை காப்பாற்றி ,பாவத்தில் நான் சிக்கி மோசம் போய் விடாமல் என்னைக் கைப்பிடித்து பாதுகாத்து உதவி புரிவீர்களாக !
அல்லாஹ்வுடைய கலீபாவெனும் பிரதிநிதியாக எங்கள் பால் வந்துதித்த முஹையத்தீன் ஆண்டகையவர்களே ! "
என்று முனாஜாத்து செய்துள்ளார்கள் .
ஞானக்களஞ்சியம் , குணங்குடி மஸ்தான் சாஹிபு வலி رضي الله عنها அவர்கள் ,இரட்சிப்புத் தேடி இருப்பதை பாருங்கள்
" மன்னிய தவத்தினர்க் கருள் தந்த குருவும் நீ
மாதா பிதாவும் நீயே !
மட்டறு பவக்கடல்தொலைக்கு மொரு கவிழா
மரக்கலமும் நீயல்லவோ !
அன்னியமாதான பிரபஞ்சமாம் பெருநெருப்
படக்குமட பெரும் பாலமாய்
அன்புடன் எனைப் பெற்ற அப்பனே அருள் தந்த
ஆண்டவனும் நீயல்லவோ !
என்னை உனையன்றி இனி யாள்வரெவ ரையனே
எந்தையே எம்பிரானே !
இகபர மிரண்டிலுஞ் சுக துக்க மற்றுயான்
ஈடேற அருள் புரிவையே !
நன்னிலையமாக வென் முன்னிலையில் வந்து எந்
நாளும் ரட்சித் தருள்வையே !
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹையத்தீனே ! "
குத்புல் அக்தாப் , பர்துல் அஹ்பாபு , ஸையிது அப்துல் காதிர் மீரான் ஸாஹிபு ,ஷாஹுல் ஹமீது நாகூரி رضي الله عنها அவர்களை அழைத்து ,
யா ஸாஹிபன் னாகூரி குன்லீ நாஸிரீ
"நாகூர் வாழ் எஜமானே ! எனது கேள்விப் புலனும் , பார்வைக்குப் புலனும் உறுப்புகளும் ஸலாமத்தாக இருக்க எனக்கு நல்லருள் செய்வீர்களாக !
இன்னும் நான் குறைந்த அற்பாயுள் வயதுடைவானாக இல்லாமல் நீடித்த வாணாள் உடையவனாக இருக்க நீங்கள் நல்லுதவி செய்வீர்களாக !
எல்லாவித நன்மைகளும் ஒருங்கே சேகரமாய் பொதிந்து அமைந்த அப்துல் காதிர் வொலி அவர்களே ! "
என்று காயல்பதியில் பிறந்து கீழக்கரையில் அடங்கி ஜோதி கொண்டியங்கும் , கல்விக் கடல் ஷைகு சதக்கத்துல்லாஹ் காதிரி رضي الله عنها அவர்கள் உதவி தேடியுள்ளார்கள் .
நாகூர் பாதுஷா நாயகம் رضي الله عنها அவர்களை நோக்கி குணங்குடி மஸ்தான் ஸாஹிப் رضي الله عنها அவர்கள் ,
" திக்குத் திகந்தமுங் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி !
சிங்காசனாதிபர்கள் நாதரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி !
ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாக நிற்பர் கோடி !
அஞ்ஞான வேரறுத்திட்ட மெஞ்ஞானிகள்
அணைந்தருகு நிற்பர் கோடி !
மக்க நகராளு முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி !
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும்
மகிமைசொல வாயுமுண்டோ !
தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே !
தயை வந்தெனையாள் சற்குணங் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீத் அரசரே ! "
என்று வேண்டுதல் செய்கின்றார்கள் .
ஹழ்ரத் அபுல் ஹசன் அலி ஷாதுலி رضي الله عنها அவர்களை அழைத்து நோக்கி , அல்லாமா ஷெய்கு நூஹ் ஸாஹிப் காஹிரி رضي الله عنها அவர்கள் 'யா ஸெய்யிதீ செய்யிதஸ் ஸாதாத்தீ யா சனதீ ' என்று கூறியிருக்கும் முனாஜாத்தில் ,
"எங்கள் தலைவரவர்களே ! தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அனவர்களே ! எனது ஆதாரப் பொருளே ! எனக்கும் எனது சகோதரருக்கும் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தந்திட நீங்கள் உதவியாக இருங்கள் .
என்னை கைவிட்டு விடாதீர்கள் ! எனது நாட்ட தேட்டம் நிறைவேறு மட்டும் ,எனது உதவியாளரே ! என்னைக் கைப்பிடித்து உதவவேண்டும் அபுல் ஹசன் (ஷாதுலி ) அவர்களே ! "
என்பதாகக் கூறியுள்ளார்கள் .
அஹ்லு பைத்தினர்களாகிய நாயகம் ﷺ அவர்களின் குடும்பத்தார்களின் மீது ஆதரவு வைத்தவர்களாக , ஷைகு ஸஃதீ ஷீராஸி رضي الله عنها அவர்கள் ,
" இறைவா ! பாத்திமா நாயகி رضي الله عنها அவர்களின் பிச்சளங்களின் பொருட்டால் எனது முடிவை ஈமான் ஸலாமத்துடன் ஆக்கி வைப்பாயாக !
நீ எனது பிரார்த்தனையை ஏற்றாலும் சரி,நிராகரித்தலும் சரி நான் நாயகம் ﷺ அவர்களின் குடும்பத்தார்களின் முந்தானையை பற்றிப் பிடித்தவனாக இருக்கின்றேன் "
என்று உரைத்தார்கள் .
சுருதி, யுக்தி ஆதாரங்களைக் கொண்டு ஓரளவு மேலே காண்பித்துள்ளோம் . இவ்வாறு மாபெரும் மகாத்மாக்களும் ,மகான்களும் , ஷரஹைப் பேணி நடந்த நாதாக்களும் , தவ்ஹீதைப் பற்றிப் பிடித்த முவஹ்ஹிதீன்களும் , கவ்துல் அஃலம் رضي الله عنها அவர்களையும் , நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் رضي الله عنها அவர்களையும் .மற்றும் குத்புமார்கள் ,வலிமார்களையும் அழைத்து ,கூப்பிட்டு அன்னவர்களிடம் இரட்சிப்பு- உதவி வஸீலா தேடி இருக்கின்றார்கள் . மேற்சொன்ன மாகானுபவர்களை விட ,வஸீலா தேடலாகாது , உதவி ,இரட்சிப்பு கேட்கலாகாது - யா ரஸூலல்லாஹ் ,யா முஹையத்தீன் ,யா கவ்து என்றெல்லாம் சொல்லக்கூடாது என்று கூறி அலையும் கூட்டத்தினர் எந்த வகையில் விஷேசமானவர்கள் என்று தான் விளங்கவில்லை .
எனவே , நிச்சயமாக அன்பியாக்கள் ,அவ்லியாக்கள் பால் இரட்சிப்பு , உதவி ,உபகாரம் ,வஸீலா எக்காலமும் தேடலாம் என்பதே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்களின் ஏகோபித்த தீர்ப்பாகும் . இதை மறுப்பவன் வஹாபி ,முஃதஸிலா , காதியானி கூட்டத்தைச் சார்ந்தவன் என்பதில் ஐயமில்லை . மேலும் இவன் சத்தியத்திற்கு மாறுபாடாக நடந்தவனுமாவான் .
No comments:
Post a Comment