உலகில் ஏக காலத்தில் பல எண்ணிக்கையுள்ள ,பலவகை படித்தரங்கள் உடைய அவ்லியாக்கள் -குதுபுமார்கள் - அப்தால்கள் -
அவுத்தாதுக்கள் - நுகபாக்கள் - நுஜபாக்கள் என்ற பதவி உடையவர்கள் ,உலக முடிவு நாள் வரையில் இருந்தே வருவார்கள் என்றும் ,ஹகீகத்தில் ஈருலகையும் கண்காணிப்பவர்கள் அவர்கள் தானென்றும் ,அவர்களை முன்னிட்டே பலாய் ,முஸீபத்துகள் விலக்கப்படுவதாயும் ஹதீதுகள் பல காணப்படுகின்றன ,அன்னார் அனைவருக்கும் குத்பே அதிபராவார் . அன்னாரை கெளது என்றும் சொல்லப்படும் .இது பற்றிய ஆதாரங்கள் பல இருப்பினும் சிலவற்றை மட்டிலும் இங்குக் குறிப்பிடுவது போதுமெனக் கருதுகின்றோம் .
" ஆண்டவா ! என் மீது நபிமார்கள் நடந்து திரிந்தார்கள் . அவர்களுக்குப் பிறகு நபிகள் பெருமான் அவர்களைச் சுமந்திருந்தேன் . தற்போது அவர்களும் சென்று விட்டார்களே ,நான் தனித்துவிட்டேனே ,என் மீது எந்த நபியும் இல்லையே " என்பதாய் பூமி பிரலாபித்து இறைவனிடம் முறையிட்டுக் கொண்டது .
' நான் சில அவ்லியாக்களை அனுப்புவேன் .அவர்களது இருதயங்கள் நபிமார்களது இருதயங்களைப் போலிருக்கும் .அவர்கள் யுகமுடிவு வரை உன் மீது சஞ்சரிப்பார்கள் ' என்று ஆண்டவன் பூமிக்கு அறிவித்தான் என்ற இவ்விஷயத்தை ஸாலிஹான இறையருள் நேசரான பெரியார் ஒருவர் தமது உலக யாத்திரையின் போது , நித்திய ஜீவனுடைய ஹழ்ரத் கிழ்று அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்திந்த சமயம் அன்னாரைக் கேட்டு தெரிந்து கொண்டதாக , 'மவாஹிபுல் மஜீது பி மனாகிபி ஷாஹுல் ஹமீது' என்னும் கிரந்தத்தில் காணப்படுகின்றது .
' அந்த அவ்லியாக்கள் ஏக்கத்தில் 440 பேர்கள் .அவர்களுள் நுஜபாக்கள் 300,நுகபாக்கள் 70, அப்தால்கள் 40,அகியார்கள் 10,உறபாக்கள் 7, அன்வார்கள் 5,அவுத்தாதுகள் 4,முக்த்தார்கள் 3, குத்பு ஒருவர் . குத்பே அனைவருக்கும் அதிபராவார் . இன்னாரை கெளது என்றும் சொல்லப்படும் . இவர்களுள் யாரும் மரணமாவார்களாயின் அவர்களுக்கடுத்த படித்தரத்தில் இருப்பவர்கள் அந்த ஸ்தானத்திற்கு மாற்றப்படுவார்கள் . அங்ஙனம் பதவியில் உயர்த்தப்படும் போது ,கீழ்ப் படித்தரத்தில் உள்ள நுஜபாக்கள் காலியாகுமிடத்தில் ஸாலிஹீன்களான முஸ்லீம்களில் ஒருவர் அந்த ஸ்தானத்தில் அமர்த்தப்படுவார் . ' என்று ஹழ்ரத் கிழ்று அலைஹிஸ்ஸலாம் கூறியதாக 'மனாகிபுகுத்பில் மஜீதிஸ்ஸையிது ஷாஹுல் ஹமீதில் மாணிக்கப்பூரயில் மவுலிதிந் நாகூரிய்யில் மர்கதி' என்ற கிடாபில் மாதிஹுர் ரஸூல் அல்லாமதுஷ் ஷைகு சதகதுல்லாஹில் காஹிரிய்யில்
ஸித்தீக்கி رضي الله عنه அவர்களது சீடர் அல்லாமா ஆரிபுபில்லாஹ் மஹ்மூது தீபி رضي الله عنه அவர்களும் , 'மவாஹிபுல் மஜீது பி மனாகிபி ஷாஹுல் ஹமீது' எனும் கிதாபில் காயல்பட்டணத்தில் பிறந்து கீழக்கரையில் அடங்கி இருக்கும் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்ற அல்லாமதுல் பாளில் ஸையிது முஹம்மது ஆரிபுபில்லாஹி رضي الله عنه அவர்களும் கூறுகின்றார்கள் .
இவை போன்று பல அபூர்வ விளக்கங்களை 'மஜ்மூ அத்துர் ரஸாயில்' 2வது பாகம் 264வது பக்கத்தில் 'ரத்துல் முஹ்தார்' இயற்றிய அல்லாமா இப்னு ஆபிதீன் رضي الله عنه அவர்கள் விபரமாக வரைந்துள்ளார்கள் .
மேலும் இமாம் ஷஃரானி رضي الله عنه அவர்கள் 'அல்யவாக்கீது வல் ஜவாஹிர் ' என்னும் கிரந்தத்தில் குத்புமார்களின் தரஜா,பதவிகளை விவரமாக எழுதியுள்ளார்கள். இன்னும் இமாம் இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه அவர்கள் தங்கள் 'பதாவா ஹதீதிய்யாவிலும்' விவரமாக குறிப்பிட்டுள்ளார்கள் .
மேலும் என்னுடைய உம்மத்துகளில் நாற்பது நபர்கள் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இருதயத்தை உடையவர்களாய் என்றும் இருந்தே வருவர். அல்லாஹுத்தஆலா அந்த நபர்களைக் கொண்டு பூலோகத்தில் வாழுபர்களை விட்டும் பிணிகளைப் போக்குவிப்பான் . அவர்களுக்காக மழையைப் பொழியச் செய்வான் . அன்னவர்களைக் கொண்டு தான் பூலோகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும் என்பதாய் எம்பெருமானார் ﷺ அவர்கள் திருவாய் மலர்ந்து அருளிய ஹதீது தபறானீயில் காணக் கிடைக்கின்றது .
குத்புக்கே கெளது என்று பெயர் .அவர் ஒருவருக்குப் பின் ஒருவராக வருவார் .படைப்புகளை எல்லாக் கருமங்களிலும் அன்னார் இரட்சிக்கக் கூடியவராக இருப்பதனால் கெளது என்று பெயர் .அன்னவருக்கு வலம் ,இடம் , இருபக்கங்களிலும் அரசர்களுக்கு இருப்பது போல் இரு அமைச்சர்கள் உள்ளனர் .கெளது உடைய உத்தரவு கொண்டு வலது பக்கமிருப்பவர் மறைவுலகங்களான ஆலமுல் கைபு,ஆலமுல் மலக்கூத்தை நிருவகித்து வருகின்றார் .இடது பக்கமிருதுப்பவர் வெளி உலகமான ஆலமுஷ் ஷஹாதத்தை கண்காணித்து வருகின்றார் என்ற விபரத்தை வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிகாத் ஸ்தாபகர், ஹஜ்ரத் ,அல்லாமா ஷைகு அப்துல் வஹ்ஹாப் ஸாஹிபு رضي الله عنه அவர்களது ஆத்மீக ஆசிரியர் ஹஜ்ரத் ஆரிபுபில்லாஹ் ,அல்லாமா ஷைகு ஷாஹ் முஹ்யித்தீன் ஸாஹிபு வேலூரி رضي الله عنه அவர்கள் 'ஜவாஹிருஸ்ஸுலுக்கு' என்னும் கிரந்தத்தில் 114வது பக்கத்தில் வரைத்துள்ளார்கள் .
மேலும் இது போன்ற விபரங்கள் தப்சீர் ரூஹுல் பயான் பாகம் 2,பக்கம் 363லும் , ஷைகுல் அக்பர் இப்னு அரபி رضي الله عنه
அவர்களைக் கொண்டும் விபரமாகச் சொல்வதை அறிவிக்கப்படுகிறது .
மேலும் விபரமாகத் தெரிய முஜ்தஹிது,ஹாபிளு அஹா தீதெ நபவிய்யா ,இமாம் ஷைகு ஜலாலுதீன் ஸுயூத்தி رضي الله عنه அவர்கள் இயற்றிய 'ரிஸாலா அல் கப்ருதால்லு அலாவுஜூதின் நுகபா வல் அக்த்காபி வல் அவ்த்தாதி வல் அப்தால்' என்ற நூலையும் அல்லாமா பாகீஹ் இப்னு ஆபிதீன் رضي الله عنه அவர்கள் இயற்றிய 'மஜ்முஅத்துர் ரஸாயில்' நூலையும் நோட்டமிடுக .
அவ்லியாக்களுள் இரு வகுப்பார் உண்டு.ஒரு வகுப்பார் ஆண்டவனுடைய பாதையில் கஷ்டப்பட்டு தெண்டித்து அவனளவில் தன்னை அளித்து பனாவாகியவர்கள் . இவர்களுக்கு கஸ்பீ என்று சொல்லப்படும் .மற்ற வகுப்பார் ஆலம் அர்வாஹ் எனும் ஆன்ம லோகத்திலேயே ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் . இவர்களுக்கு அத்தாயீ என்று கூறப்படும் . குத்பு ,கெளது ஆகியோர் அத்தாயீ வகுப்பைச் சேர்ந்தவர்களே .
[நூல் - ஜவாஹிருஸ் ஸுலூக் ,பக்கம் 114 ]
குத்பு என்ற பதத்திற்கு 'முளை' 'துருவம் ' என்றும் ,கெளது என்ற பதத்திற்கு 'இரட்சிப்பவர் - நாயன் நோட்டமிடும் ஸ்தானம்' என்றும் பொருளைப் பயக்கி நிற்பினும் ,அவற்றின் அந்தரங்கம் பல அரும்பெரும் இரகசியப் புதையல்களைத் தன்னுள் அடக்கியதாய் அமைத்து கிடக்கின்றன. இன்னவர்கள் மூலமாகத் தான் முதலவன் தன்னிருக்கையை அறிக்கை செய்ய வேண்டியதிருக்கிறது . அன்றேல் , இருள்படர்ந்து மூடி அகிலம் அந்தகார்த்துள்ளாழ்ந்து பாழ்பட்டு போகும் .
இறைவன் தன்னடியார்களுக்கு அளித்துள்ள கைம்மாறிளக்க வொண்ணாப் பெரும் பேறு அத்தனையையும் ஒரு தட்டிலும் , குத்பை அனுப்பித் தந்த அருட்பெருங்கொடையை மற்றோரு தட்டிலும் வைத்து சீர்தூக்கி பார்ப்போமாயின் ,குத்பால் பெற்ற கிருபையளவே கனத்து முறுகி நிற்கக் காண்போம் .இன்னாரைப் பற்றி இறைவன் குர்ஆன் ஷரீபில்
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ
" நிச்சயமாக அல்லாஹ் உடைய அவ்லியாக்களுக்கு பயமென்பதுமில்லை கவலையென்பதுமில்லை "
என்பதாய் (10:62 )அருளியுள்ளான் .
No comments:
Post a Comment