Monday, 17 April 2017

வலியுல்லாஹ்வின் மகத்துவம்


வலி என்னும் பதம் 'வலா' என்னும் மூலத்திலிருந்து பிறந்தமையால் அப்பதத்திற்கு சமீபம் ,சாட்சியம் என்று பொருள்படும் .


'மனிதன் எனது இரகசியம் ,நான் அவனது இரகசியம் ' (அல் இன்ஸானு ஸிர்ரீ , வஅனஸிர்ருஹு )  என்று அல்லாஹ் கூறியதாக ஹதீது குத்ஸியில் வந்துள்ளது .

மானிடனை இறைவன் தனக்குப் பிரதிநிதியாக்கி உலகிலுள்ள எல்லாக் கருமங்கைகளையும் அவன் வசம் ஒப்படைத்து அவனைத் தனக்கும் தன்னுடைய சிருஷ்டிகளுக்கும்  இடையே நடுமையமாய் நிறுத்தி,சிருஷ்டிகள் ஆண்டவனுடைய தஜல்லியைக் கொண்டு கரிந்து போகாமல் காப்பாற்றக்கூடிய திரையாக ஆக்கியிருப்பதால் மானிடன் ஆண்டவனுடைய உலூஹிய்யத்துடைய தஜல்லியில் வெளியாகி விட்டான் . உலூஹிய்யத்துடைய தஜலல்லி ஒருவனில் வெளியானால் அவன் ஆண்டவனித்தில் சொந்தமான சில பதவிகளைப் பெறுவான் .அவ்விதம் பெற்றதும் அவன் உலகத்தார் சகலருக்கும் 'ரஹ்மத்' தாகி விடுவான் . ஆகவேதான் ,அவ்லியாக்கள் ஆண்டவனது பிரதிநிதிகளாக இருக்கின்றனர் .

எங்கனம்  நபியே கரீம் ﷺ அவர்கள் உலகத்தாருக்கு
அகில உலகங்களுக்கு அருட்பிளம்பு (ரஹ்மத்துல்லில் ஆலமீன்  ) ஆக இருக்கின்றார்களோ அங்கனம் அவ்லியாக்களை அல்லாஹ் ﷻ 
அகிலத்தாருக்கு கிருபையாளராகப் புவியின் கண் உண்டாக்கி இருக்கின்றான் . ஆகையால் ,அவர்களும் அவனுடைய பிரநிதிகளாகவே இருக்கின்றார்கள் .அவர்கள் சொல்வது அல்லாஹ்   ﷻ  சொல்லுவதுதான் . அது அல்லாஹ்வுடைய அடியாரின் நாவிலிருந்து வெளியானாலும் சரியே என்பதாக மஸ்னவி ஷரீபில் இமாம் முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி رحمة الله عليه அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள் . 

ஸஹீஹ் புஹாரியில் (எண் : 6137) அண்ணலெம் பெருமான்   அவர்கள் அறிவித்ததாக ஹழ்ரத் அபூஹுரைரா  
  رضي الله عنه அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீத் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது .    

إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ


ரஸூலுக்கு வழிப்படுவது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதென்றும் ,ரஸூலுடைய கரத்தை அல்லாஹ் ﷻ தன்னுடைய கரமென்றும் , நபிகள் நாயகம் அவர்கள் எறிந்த மண்ணை அல்லாஹ் தானே எறிந்ததாயும் குர்ஆன் ஷரீபில் காணப்படும் ஆயத்துகள் எல்லாம்  எம்பெருமானார் அவர்களுக்கு உரியதாயிருந்த போதிலும் ,குத்புமார்கள் ,ஆரிபீன்கள் ,காமிலீன்கள் அவ்லியாக்கள் ஸாலிஹீன்கள் ஆகியோரையும் சார்ந்தவையே . ஏனெனில் இவர்கள் அனைவரும் , " உலமாக்கள் அன்பியாக்களுடைய வாரிசுகள் " [திர்மிதி - எண்: 2682, அபூ தாவூத் - எண் : 3636,இப்னு மாஜா -எண் :223 , ஸஹீஹ் இப்னு ஹிப்பான் - எண் 88 , பத்ஹுல் பாரி ,பாகம் 1,பக்கம் 160   ] என்ற ஹதீதுப் பிரகாரம் , ரஸூலே கரீம்  அவர்களது உண்மை வாரிசுகளாவர் . 

"நான் அல்லாஹ்வுடைய ஒளியில் நின்றுமுள்ளவன் : சகல வஸ்துக்களும் என்னுடைய ஒளியில் நின்றுமுள்ளவை " (அன்மின்னுரில்லாஹி - வகுல்லுஷையின் மின்னூரீ  ) என்று நாயகம்   அவர்கள் கூறியிருப்பதை ஆராய்ந்துணர்ந்தோர் ஒருவாறு அறிவர் .

சிருஷ்டிகள் அனைத்தும் நபிகள் நாயகம்    அவர்களுடைய ஜோதியில் சம்பந்தப்பட்டதாயினும் ,அந்த ஜோதி ஆண்டவனைச் சார்ந்ததேயாம் . எந்த வஸ்துவுக்கும் கொடுக்கப்படாத விலைமதிக்கவொண்ணா மாணிக்கமாகிய பகுத்தறிவு ,படைப்புகளில் மேலான படைப்பாகிய இன்ஸான் எனும் மானிடனுக்கு மட்டிலுமே கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பது வெட்ட வெளிச்சமாக விளங்கிக் கிடக்கின்றது .அந்த பகுத்தறிவைக் கொண்டு மானிடன் ,நான் என்னும் அனானியத்தைப் போக்கிவிட்டால் தரிப்பட்டிருப்பது நபி    அவர்களின் நூர் என்னும் ஜோதிப் பிரகாசமே தான் .அங்கனமே அமல் செய்து அந்த நூரில்  தரிப்பட்டிருப்பது வலிமார்கள் ஆவார்கள் . நாயகம்    அவர்களின் பிரதிநிதிகளாவர் . 

நாயகம் அவர்களின் பிரதிநிதிகள் உள்ரங்கத்தில் (ஹகீகத்தில் ) அல்லாஹ்வுடைய பிரதிநிதிகளாவர் . இவர்களைப் பின்பற்றுதல் நேர்வழியாகும் .ஏனெனில் இவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய அஸ்மா ஸிபாத்து வெளியாகும் தானம் (மள்ஹரு ) ஆக இருப்பதால் இவர்கள் அவனது பிரதிநிதிகளாயிருந்து ஹூக்முகளை வெளிப்படுத்துகின்றார்கள் . இவர்களுடைய நாட்டம்,சொல் ,செயல்  அனைத்தும் அவனுடையதாயிருப்பதால் இன்னவர்களுக்கு வெளிப்படுதல் ஹகீகத்தில் அவனுக்கு வழிப்படுதலேயாகும் . இவர்களுக்கு மாற்றஞ் செய்தல் அவனுக்கே மாற்றம் செய்தலாகும் .

இறைவனும் திருமறை குர்ஆன் ஷரீபில் ,

مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ
"ரஸூலுக்கு வழிப்பட்டவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவராவர் " [4:80 ]

என்றும் ,

" எவனொருவன் அல்லாஹ்வுக்கும் றஸூலுக்கும் மாறு செய்வானோ அவன் நிச்சயமாக வெட்ட வெளிச்சமான வழிகேட்டிலானான் " 

என்றும் ,

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ

"ஓ ,ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள் . இன்னும் றஸூலுக்கும் உங்களில் நின்றுமுள்ள காரிய கர்த்தர்களுக்கும் (தீனைப் பரப்பக்கூடிய உலமாக்களும் ,அவ்லியாக்களுக்கும் ) வழிபடுங்கள் " [ 4:59] 

என்று கூறியுள்ளான் .
[தப்சீர் கபீர் - 3வது பாகம் ,243வைத்து பக்கம் , தப்சீர் ரூஹூல் பயான் ,1வைத்து பாகம் ,பக்கம் 624 ]  

'என்னுடைய அவ்லியாக்கள் எனது பரிவட்டத்திற்குள்ளிருப்பவர்கள்  .
என்னைத் தவிர வேறு யாரும் அவர்களை அறிய மாட்டார்கள்  ' 
என்ற ஹதீது குத்ஸி அவ்லியாக்களின் மகத்துவத்திற்கு நற்சாட்சியாக இருக்கின்றது .

மேலும் ,இமாம் ஜலாலுதீன் ரூமி  رحمة الله عليه அவர்களின் மஸ்னவி ஷரீப் முழங்குவதைப் பாருங்கள் :-

" அவ்லியாக்கள் ஆண்டவனுக்கு உகப்பானவர்கள் -

       அந்தரங்க,பகிரங்க விஷயங்களை அறிந்தவர்கள் -

முத்லக்கான  அல்லாஹ்வுக்கு அவ்லியாக்கள் கண்ணாடியாவார்கள்  -

அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சொந்தமான கண்ணாடியாக இருக்கின்றார்கள்  -

ஒவ்வொரு வலியும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் 

            உடைய கப்பல் என்று அறி 

இவர்களை நேசித்தால் நாசம் என்னும் வெள்ளத்தில் 

           நின்றும் தப்பித்துக் கொள்வாய் 

அல்லாஹ்வுடனிருக்கப் பிரியமுள்ளவர்கள் 

            அவ்லியாக்களுடைய சமூகத்தில் இருப்பார்களாக  -

அவ்லியாக்களுடைய சமூகத்தில் நின்றும் விலகி 

             இருப்பீர்களேயானால் , உள்ரங்கத்தில் 

அல்லாஹ்வை விட்டும் தான் 

              விலகி இருக்கின்றீர்கள்  " 

           
       ஷெய்கு  ஸஅதி சிராஜ் அவர்களின்   குலிஸ்தான் போதிக்கின்றதாவது :- 

 " அவ்லியாக்களுடைய முந்தானையைப் பற்றிப் பிடிப்பதில் பயம் வேண்டாம் . ஏனெனில் ,நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களோடிருக்கையில் வெள்ளத்தைப் பற்றிய அச்சம் எதற்கு ! "

ஆகவே இறைவன் அன்று அன்பையாக்களைக் கொண்டு நடத்தியவற்றை எல்லாம் இன்று அவ்லியாக்களைக் கொண்டு தான் நடத்துகின்றன . அவர்களை முன்னிட்டே உலகமும் நிலைபெற்றிருக்கின்றது . ஆகையால் "வலியை அறிவது அல்லாஹ்வை அறிவதைவிட மிகக் கடினம் " என்பதாக தப்சீர் ரூஹுல் பயான் பாகம் 9,பக்கம் 531,பாகம் 10 பக்கம் 9 கூறுகின்றன .  











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...