Sunday, 26 February 2023

இமாமுல் அஃலம்

🌹இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه 🌹 

இமாமுல் அஃலம் என்றழைக்கப்படும் ஸெய்யிதினா நுஃமான் பின் ஸாபித் رضي الله عنه அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தனித்துவமான இடம்பெற்றவர்கள்.இஸ்லாமிய பிக்ஹ் சட்டங்களில் மேதமை பெற்றவர்கள்.பிக்ஹ் சட்டங்களில் அவர்களது அதிகாரம்,சட்ட நிபுணத்துவம் மற்றும் அறிவாற்றல் இஸ்லாமிய உலகில் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகும்.

ஷெய்குல் இஸ்லாம் இப்னு ஹஜர் ஹைத்தமி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகின்றார்கள் , " சொல்லகராதியில் 'நுஃமான்' என்றால் முழு உடற்கூறுகளையும் பராமரிக்கும் மற்றும் உடல் இயங்கியலிற்கு காரணமான இரத்தத்தை குறிக்கும் ; இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் என்னும் ஆளுமை இஸ்லாமிய பிக்ஹ் கலையின் மையமாகவும் ,உந்து சக்தியாகவும் இருக்கின்றார்கள் ".

📚 அல்கைராத்துல் ஹிசான்,பக்கம் 31

அல்லாஹ்  سبحانه و تعالى , பூமான் நபி  ﷺ அவர்களது வழிமுறையை பின்பற்றிய இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களுக்கு அருளிய குறிப்பிடத்தக்க சிறப்புகள் :

* ஸலபுல் ஸாலிஹீன்களில் இரண்டாம் தலைமுறையான தாபஈ ஆவார்கள்.அன்னார் தமது வாழ்நாளில் நான்கு ஸஹாபா பெருமக்களை சந்தித்துள்ளனர்.ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه ; ஸெய்யிதினா அப்துல்லாஹ் பின் அப்வா رضی الله عنه; ஸெய்யிதினா ஸஹ்ல் பின் ஸாத் رضي الله عنه ; ஸெய்யிதினா அபூதுபைல் ஆமிர் பின் வஸீலா رضي الله عنه .
📚 மிர்காத் அல் மபாதிஹ்,முகத்தமதுல் முஅல்லிப்,பாகம் 1,பக்கம் 75

* அன்னார் நான்காயிரம் உஸ்தாதுகளையும்,எண்ணூறு மாணவர்களையும் பெற்றிருந்தார்கள்;இது பிற பிக்ஹ் இமாம்களை விட அதிகம்.

📚 கைராத் அல்ஹிசான்,பக்கம் 37;அல் மனாகிப் லில் கர்தாரி,பாகம் 1,பக்கம் 15

* சத்திய சீலர்களான ஸஹாபா பெருமக்களுக்கு அடுத்து பல்வேறு காலகட்டங்களையும் கடந்து , அதிகளவில் பின்பற்றபட்ட முஜ்தஹித் இமாம் ,இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களே. அவர்கள் நிர்மாணித்த பிக்ஹ் கலையின் அணுகுமுறையும்,தொகுப்பும் அவர்களை தொடர்ந்து வந்த பிக்ஹின் இமாம்களாலும்,ஹதீஸ் கலை வல்லுநர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது,இமாம் மாலிக் رضي الله عنه அவர்கள் தமது ஹதீஸ் தொகுப்பான 'முவத்தா' வும் அவ்வாறு அமைந்ததே.

📚 தப்யீஸுஸ் சஹிபா,பக்கம் 138; மிராதுல் மனாஜிஹ்;முகத்தமா,பாகம் 1,பக்கம் 15

* இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களுக்கப் பின்னர் வந்த அனைத்து புகஹாக்களும் ,அன்னாரது 'இஸ்தித்லால்' மற்றும் 'இஸ்தின்பாத்' கான இமாம் அவர்களது அணுகுமுறையையே பின்பற்றினர்.இதனை இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்களது புகழ்பெற்ற சொல்லான " ‘مَنْ اَرَادَ اَنْ يَتَبَحَّرَ فِی الْفِقْهِ فَهُوَ عِيَالٌ عَلَى اَبِی حَنِيفَةَ’
 - பிக்ஹ் உடைய கலையில் தேர்ச்சி பெற விரும்பும் அனைவரும் இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களை சார்ந்து உள்ளனர் "  விளக்குகின்றது.இன்னும் சிலர் இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் பிக்ஹ் கலையின் தோட்டம் என்றும்,புகஹாக்களும் ,பாமர மனிதர்களுக்கும் இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களது தேவை இருக்கின்றது என்கின்றனர்.

📚ரத்துல் முக்தார் ;  முகத்தமா,பாகம் 1,பக்கம் 151

* அல்லாஹ்  سبحانه و تعالى இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களது மத்ஹபிற்கு தனிச்சிறப்பான அங்கீகாரத்தை வழங்கினான்.இமாம் முல்லா அலீ காரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகின்றார்கள் ' முஸ்லிம் உம்மத்தின் மூன்றில் இருபங்கு இமாம் அவர்களது மத்ஹபை பின்பற்றுபவர்களாகும ' என்று.

📚 மிர்காத் அல் மபாதிஹ்; முகத்தமதுல் முஅல்லிப்,பாகம் 1,பக்கம் 74

* இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் இல்முடன் ,தஸவ்வுபின் கலங்கரை விளக்காகவும்,தக்வா,அமல்கள் மற்றும் ஆன்மீகத்திலும் ஒருசேர உயர்வுபெற்று விளங்கினார்கள்.இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர்கள் அரிதாகவே இருப்பர்.அவர்கள் மறைந்துவிட்ட பகுதியில் ஏழாயிரம் முறை குர்ஆனை ஒதி முடித்தார்கள்.

📚 ரஸாயில் அபுல் ஹசனாத்,பக்கம் 37 ; மிர்காத் உல் மபாதிஹ் ; முகத்தமா,பாகம் 1,பக்கம் 77

* எல்லா புகஹாக்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களின் ஸனதும் இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களைச் சென்றடையும்.இதன்மூலம் அவர்கள் அனைவரும் அன்னாரது நேரடியான அல்லது மறைமுகமான மாணவர்கள் ஆகின்றனர்.

📚மிராத் உல் மனாஜிஹ்; முகத்தமா,பாகம் 1,பக்கம் 15

*  இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்களது மத்ஹப் வேறு மத்ஹப் சென்று பரவாத அளவிற்கு பரந்து,விரிந்து பரவி இஸ்லாமிய தீன்நெறியை வளர்த்தது.உதாரணமாக இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,பைசாந்தியம்,துருக்கி போன்ற பகுதிகளில்.

📚மஜ்மஉ ரஸாயில் அபுல் ஹஸனாத்,பக்கம் 37 

அல்லாஹ்  سبحانه و تعالى எம்பெருமானார்  ﷺ அவர்களது அடிச்சுவட்டையும்,ஸஹாபா பெருமக்கள்,அஹ்லு பைத்துகள்,தாபஈன்கள் அவர்களதும் அடிச்சுவட்டை பின்பற்றிய இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்களது அந்தஸ்தை மென்மேலும் உயர்த்துவானாக ! آمین بجاہ سیّد المرسلین صلّی اللّہ علیہ وسلّم !


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...