Friday, 23 December 2022

பெரும்விரலை முத்தி கண்ணில் வைப்பது


" அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று பாங்கில் கேட்டதும் இரு பெரும் விரல்களை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹபு - விரும்பத்தக்கதாகும்.இம்மை ,மறுமை பயன்களை அளிக்கவல்லது.


முதல் "அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று கேட்கும் பொழுது - " ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூல்லல்லாஹ் " என்றும் இரண்டாவது " அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று கேட்கும் போது - " குற்றத்த ஐனிபிக யாரஸூல்லல்லாஹ் !" - உங்களைக் கொண்டே என் கண்களுக்கு குளிர்ச்சி என்று சொல்லி இருபெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும். பின்னர் , " அல்லாஹும்ம மத்தியினி பிஸ்ஸம்யி வல்பஸரி - கேள்வி,பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக ! " என்று சொல்ல வேண்டும். ஏனெனில் கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் அப்படி செய்தவனை சுவனத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.


📖 துர்ருல் முக்தார்,கன்ஜுல் இபாத்,பதாவா ஸூபிய்யா,கஹ்ஸதானி,பஹ்ருர்ரகாயிக்,ஷரஹு விகாயா


" பாங்கில் பூமான் நபி  ﷺ அவர்களது பெயர் கேட்கும் பொழுது இருபெரும் விரலை முத்துவதும்,இருகண்களில் வைப்பதும் ஆகும்.நமது ஷெய்குமார்கள் முஸ்தஹபு என்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள் ." 


📖 பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கீ


முஅத்தின் - பாங்கு சொல்பவர் " அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று சொல்வதை கேட்கும் போது - மர்ஹபன் பிஹபீபி வகுர்ரதுஐனி - சோபனம்,எனது நேசரைக் கொண்டு கண்குளிர்ச்சி - முஹம்மதிப்னு அப்துல்லாஹ்  ﷺ - என்று சொல்லி இருப்பெரும் விரலை முத்தி கண்ணில் வைப்பவானாகில் குருடாக மாட்டான்.கண்வலி எக்காலமும் வராது.


📖இஆனா,பாகம் 1,பக்கம் 243.


இருபெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான்,ஒருக்காலமும் கண்வலி வராது.


📖கியாதுத்தாலிப் ,மாலிக்கி மத்ஹபின் கிதாப்


📚 - திப்யானுல் ஹக் ,பாகம் 2

| அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர்ரஸூல்,அஷ் ஷெய்குல் காமில்,அஷ்ஷாஹ் முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பதில் பாகவி ஸூபி காதிரி காஹிரி قدس الله سره العزيز


கைநகம் கண்தொட்டு கனிகின்ற ஸலவாத்தில் கஸ்தூரி மணங்கமழும் எம்மான்  ! அவரைக் காணத் துடிக்கின்றேன் இந்நாள் ! صلى الله عليه وآله وصحبه وسلم

Friday, 16 December 2022

ஏந்தல் நபி ‎ﷺ ‏அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றுவது ‎

பூமான் நபி  ﷺ அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதில் நீங்கள் அலட்சியம் காட்டாதவரை நீங்கள் புறக்கணிக்கப்பட மாட்டீர்கள்; அண்ணல் நபி  ﷺஅவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீங்கள் அல்லாஹ்வின் பார்வையில் உயர்த்தப்படுவீர்கள். நபி  ﷺ அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றுவது வெளிரங்கத்திலும் உள்ரங்கத்திலும் உள்ளது.

 நபி  ﷺ அவர்களது  முன்மாதிரியை வெளிரங்கத்தில்  பின்பற்றுவது என்பது, தொழுகை, நோன்பு,ஹஜ், ஜிஹாத் போன்றவற்றில் ஈடுபடுவதாகும். அண்ணல் நபி  ﷺ அவர்களது முன்மாதிரியை உள்ரங்கத்தில் பின்பற்றுவது என்பது , உங்கள் வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வுடனான உங்கள் தொடர்பை உறுதிசெய்து, ஓதும்போது பிரதிபலித்தல் ஆகும்.

நீங்கள் வணக்கவழிபாடுகள்  அல்லது அவ்ராதுகளை ஓதுவது  போன்ற  செயல்களைச் செய்தும், நீங்கள் அதில் வலுவான தொடர்பையோ அல்லது பிரதிபலிப்பையோ உணரவில்லை என்றால், நீங்கள் மறைவான நோயால் - ஆணவம், பகட்டு அல்லது அதன் விருப்பங்களால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்  سبحانه و تعالى தனது அருள்மறையில் கூறுகின்றான் " நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம் " - அல் குர்ஆன் (7:146).இந்த விஷயத்தில், நீங்கள் நோயால் பாதிக்கப்பட்டவர் போல் இனிப்பைக்  கசப்பாகக் கண்டறிவீர்கள். இருப்பினும், கர்வமும் அகங்காரமும் உள்ள நிலையில் புரியும் ‘வணக்கத்தை’ விட, வெட்கமாகவும் அவமானமாகவும் உணரச் செய்திடும் பாவம் சிறந்தது.

அல்லாஹ்  سبحانه و تعالى ஸெய்யிதினா நூஹ் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் , " நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! " - அல் குர்ஆன் (11:45) என்று கூறிய பொழுது பதிலளித்தான் , " "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான்." - அல் குர்ஆன் (11:46) .

ஒருவரைப் பின்பற்றும் செயலானது, அந்த நபர் இரத்த பந்தமாக இல்லாவிட்டாலும், பின்தொடர்பவரைப் பின்தொடர்பவரின் ஒரு பகுதியாக ஆக்குகிறது; உதாரணமாக நாயகத் தோழர் ஸெய்யிதினா ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்கள் குறித்து எம்பெருமானார்  ﷺ " ஸல்மான் நம்மில் நின்றும் உள்ளவர் " என்று கூறியது போன்று. நாயகத் தோழர் ஸெய்யிதினா ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்கள் பாரசீகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்,எம்பெருமானார்  ﷺ அடிச்சுவட்டை அடியொற்றி பின்பற்றி நடந்ததன் காரணமாக ,தனது உம்மத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் இவ்வாறு நவின்றார்கள்.எவ்வாறு ஒருவரது அடிச்சுவட்டை பின்பற்றுவது தொடர்பை ஏற்படுத்துமோ ,அவ்வாறே அடிச்சுவட்டை மீறுவது தொடர்பை துண்டித்து பிரிவினைக்கு வழிவகுக்கின்றது .

அல்லாஹ்  سبحانه و تعالى நன்மைகள் அனைத்தையும் ஓர் வீட்டினுள் ஒன்றுகூட்டி ,அதன் திறவுகோலாக எம்பெருமானார்  ﷺ அவர்களை பின்பற்றுவதை ஆக்கினான்.எனவே அல்லாஹ் அருளியதை பொருந்திக் கொண்டிருப்பதிலும்,இவ்வுலகில் இருந்து எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துவதிலும்,சிக்கனமாக இருப்பதிலும் பூமான் நபி  ﷺ அவர்களை பின்பற்றுங்கள்.சொல்லாலும்,செயலாலும் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதவற்றை விட்டும் தவிர்ந்துக் கொள்வதில் அண்ணல் நபி  ﷺ அவர்களை பின்பற்றுங்கள். எவருக்கு பூமான் நபி  ﷺ அவர்களைப் பின்பற்றுதல் என்னும் கதவு திறக்கின்றதோ ,அது அல்லாஹ் அவரை நேசிப்பதற்கான அறிகுறி.அல்லாஹ் கூறுகின்றான் , "(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்." - அல் குர்ஆன் 3:31.

எனவே, நீங்கள் நன்மைகளை நாடிச்செல்வீர்களேயானால், " யா அல்லாஹ் ! நான் உன்னிடம் உனது ஹபீப்  ﷺ அவர்களை சொல்லிலும்,செயலிலும் பின்பற்றுவதற்குரிய திறனை உன்னிடம் கேட்கின்றேன் " என்று கேளுங்கள்.உண்மையாக,உளப்பூர்வமாக இதனை யாசிப்பவர், அல்லாஹ்வின் அடியார்களை அவர்களது மரியாதை பற்றும் பாரம்பரியத்தைக் கொண்டு ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்.மக்கள் ஒருவர் மற்றொருவருக்கு அநீதமிழைப்பதில் இருந்து  பாதுகாப்பாக இருந்தால், அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் விரைந்து செல்வார்கள்; ஆனால் அவர்கள் கடனாளி ,கடனை வசூலிப்பவரிடம் கட்டுபடுவது போல் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டள்ளனர்.

📚 இமாம் அல் முஹத்திஸ் அஷ் ஷெய்கு தாஜுத்தீன் அபுல் பழ்ல்  இப்னு அதாஅல்லாஹ் இஸ்கந்திரியி அல்மாலிகி அல்அஷ்அரி அஷ்ஷாதுலி قدس الله سره العزيز, தாஜுல் உரூஸ் அல் ஹாவி லீ தஹ்தீப் அல் நுபுஸ்,பக்கம் 3-4

🌹 صلى الله عليه وآله وصحبه وسلم 🌹

Thursday, 8 December 2022

தவஸ்ஸுல்

ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்களது தாயார் ஸெய்யிதா பாத்திமா பின்த் அஸத் رضی الله عنها அவர்கள் வஃபாத்தான பொழுது ,எம்பெருமானார் ஷபீயுல் முத்னிபீன்  ﷺ அவர்கள் பின்வரும் துஆவை அவர்களை புதைப்பதற்கு முன்னர் ஓதினார்கள் , 

" அல்லாஹ்வே உயிரளிப்பவன் ,அவனே உயிரை எடுக்கவும் செய்கின்றான்.அவன் என்றென்றும் நிலைத்திருப்பவன்.அவனுக்கு மரணமில்லை.எனது தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களை மன்னிப்பாயாக நாயனே .அவரது இருப்பிடத்தை விசாலப்படுத்துவாயாக ( மண்ணறையை) ,அவரது நபியின் பொருட்டாலும் ( பி ஹக்கி நபியிக்க) ,எனக்கு முன்னர் வந்த நபிமார்களது பொருட்டினாலும் ( வல் அன்பியா அல்லதீன மின் கப்லீ) .ஏனெனில் நீயே இரக்கமுள்ளவன் ." 


  • இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ,முஜம் அல்கபீர் (24:351) ,முஜம் அல் அவ்ஸத்,பாகம் 1,பக்கம் 67-68,ஹதீத் எண் - 189.

  • இமாம் அபூநுஐம் இஸ்பஹானி رَحِمَهُ ٱللَّٰهُ, ஹில்யதுல் அவ்லியா,3:121.

  • இந்த அறிவிப்பு ஸஹீஹ் என்று இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களும் இமாம் ஹாக்கிம் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களும் கூறுகின்றனர் ,ரவூப் அல்மனாரா,பக்கம் 147,மகாலத் அல்கவ்தாரி.

  • ஹாபிழ் இப்னு ஹஜர் ஹைத்தமி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிப்பாளர் தொடர் நன்று ( ஜய்யித் ஸனத்) என்கிறார்கள்.( இமாம் நவவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது அல்மனாஸிக் நூலின் ஒரக்குறிப்பில் பக்கம் 500) .

  • ஹாபிழ் இப்னு ஹஜர் ஹைத்தமி رَحِمَهُ ٱللَّٰهُ, மஜ்ம அஸ்ஸவாயித்,(9:256-257)

  • ஹாபிழ் இப்னு ஜவ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ,அல் முன்தனஹிய்யாஹ் ,1:268-9,எண் : 443.


உஸ்மானிய கிலாபத்தின் இறுதி ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஜாகித் அல் கவ்தாரி ஹனபி  رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ஹதீதைக் குறித்து எழுதுகின்றார்கள் , " உயிரோடிருப்பவர்கள் மற்று இறந்தவர்களை வஸீலாவாக்குவதற்கு எழுத்துபூர்வமான ஆதாரமாக இது இருக்கின்றது.இது நபிமார்களின் மூலம் வெளிப்படையாக தவஸ்ஸுல் கோருவதாகும்.ஸெய்யிதினா அபூ ஸயீத் அல் குத்ரி رضي الله عنه அவர்கள் அறிவிக்கும் ஹதீஸான " யா அல்லாஹ் ! நான் உன்னிடம் கேட்பவர்களின் உரிமையைக் கொண்டு நான் கேட்கின்றேன் " என்பது பொதுவான முஸ்லிமான எல்லோரிடத்திலும் ,உயிருடனிருப்பவர்,மறித்தவர் ஆகியோரைக் கொண்டு தவஸ்ஸுல் ஆகுமானது என்பதன் ஆதாரமாகும்.

📚  மகாலாத் ,பக்கம் 410.


 

Related Posts Plugin for WordPress, Blogger...