" ஒரு ஏகத்துவவாதியிடமிருந்து பருவம் பயிரை முளைக்க வைத்ததென்னும் சொல் வெளிப்படுமாயின் அதை மஜாஸி என்று சொல்லப்படும். ஏனெனில் ஏகத்துவவாதியின் நம்பிக்கையானது பயிரை முளைக்க வைத்தல் என்பது எதார்த்தத்தில் பருவத்துடைய பண்பு அல்ல
என்பதாகும்.
ஆனால் இதே வார்த்தையை அல்லாஹ்வை ஏற்காத ஒருவன் சொல்வானாயின் அதை ஹகீகத்தென்று என்று சொல்லப்படும்."
மேலும் அல்லாமா தஃப்தாஸானி அவர்கள் கூறுகின்றனர்,
“ இதில் காபிருடைய சொல்லானது அச்செயல் எதார்த்தத்தில் யாருடைய பண்பை சார்ந்ததோ அவரை நோக்கி சொல்லப்பட்டதல்ல. மாறாக அதற்கு அன்னியமான பொருளை நோக்கி சொல்லப்பட்டதாகும் ,ஆதலால் அதை மஜாசி என்று சொல்ல முடியாது. காரணம் அதை அவன் எதார்த்தம் என்று கருதுகின்றான். அதாவது மருத்துவர் நோயாளியை சுகப்படுத்தினார் என்று சொல்வதை போல.”
இதுகுறித்த விரிவான விளக்கமானது, மருத்துவர் நோயாளியை சுகப்படுத்தினார் என்னும் காபிருடைய சொல்லானது எதார்த்தத்தை கருதி சொல்லப்பட்டதாகும். ஏனெனில் அவன் அல்லாஹ்வுடைய செயலின் தாக்கத்தை ஒப்புக் கொண்டவன் அல்ல. இனி இதே வார்த்தையை ஓர் இறைநம்பிக்கையாளன் சொல்வானாயின் அதை மஜாஸி என்று சொல்லப்படும். ஏனெனில் அவன் இறைவனை விசுவாசத்தவன் என்பதுதான் அதற்குரிய காரணமாகும்.
இந்நிலையில் அவன் ஒரு நோயாளியின் சுகத்தை ஒரு மருத்துவருடன் இணைத்து செல்வதற்குரிய காரணமானது, மருத்துவர் நோயாளியின் சுகத்திற்கு ஒரு காரணமாக மட்டுமே இருக்கிறார் ,ஆதலால் காரணத்தைத் தான் அந்த இறை நம்பிக்கையாளன் சுட்டிக் காட்டுகின்றான். மற்றபடி யதார்த்தத்தில் சுகத்தைத் தருபவன் அல்லாஹ் என்பதே அவனுடைய அகீதாவாகும் .
ஆக இதுவரை நாம் சொல்லிக்காட்டிய விளக்கத்தை கொண்டு இஸ்த்திஆனத் என்பது என்னவென்பதை தெளிவாக விளங்கி இருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். ஏனெனில் நபிமார்களிடமும் , வலிமார்களிடமும் உதவி தேடுபவர் ஒரு முஃமினாக இருந்தால், அவன் முஃமின் தான் என்பதற்கு அவனுடைய பார்வையில், கேட்கப்படும் உதவியை நிறைவேற்றித் தருபவன் அல்லாஹ் தான் என்பது அவனுடைய நம்பிக்கையாகும். இந்நிலையில் அவன் நபிமார்களையும்,வலிமார்களையும் தனது உதவிக்கு ஒரு காரணமாகவும்,வஸீலாவாகவும் தான் நினைக்கிறான்.
அடுத்து சிராஜுல் ஹிந்த் அல்லாமா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رحمه الله அவர்கள் 'இய்யாக நஸ்த்தஈன' என்னும் வசனத்திற்கு உரிய விரிவுரையில் ....
“ இந்த இடத்தில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இறைவனல்லாத அவனது படைப்புகள் இடம் உதவி தேடுவோர் அவர்களை ஒருவர் வஸீலாவாகவோ அல்லது இறை வெளிப்பாட்டின் ஒரு துறையாகவோ கருதாமல் உதவி தேடுவராயின் அது ஹராமாகும்.
அவ்வாறின்றி உதவி தேடப்பட்ட வரை இறைவனுடைய வஸீலா என் அவனது வெளிப்பாட்டுக்குரிய மழ்ஹர் என்றோ எண்ணியவராக எதார்த்தத்தில் உதவுபவன் அல்லாஹ்தான் என்று நம்பி உதவி தேடுவானாயின் இது ஷரீயத்தில் அனுமதிக்கப்பட்டதும் இறைவனை அறிந்து கொள்வதற்கும் உரிய பாதையாகும். இவ்வாறான உதவியை நபிமார்களும், வலிமார்களும் இறைவனல்லாத படைப்புகளிடம் தேடியுள்ளனர்."
அடுத்து அஹ்லே ஹதீஸின் மிகப்பெரும் அறிஞரான நவாப் வஹீதுஸ்ஸமான் என்பார் எழுதுகிறார்,
“ எந்தெந்த காரியங்களை குறித்து நபிமார்கள் இடமும், ஸாலிஹீன்களிடமும் அவர்களின் ஜீவிய காலத்தில் கேட்கப்பட்டதோ உதாரணமாக பிரார்த்தனை ஷபாஅத் போன்றவைகளைக் குறிப்பிடலாம். அவைகளை அவர்களது மறைவுக்குப் பின்னரும் கேட்பது ஷிர்க் ஆகாது.
இனி எந்தெந்த காரியங்கள் இறைவனுக்கு மட்டும் சொந்தமானவைகளாக இருக்கின்றதோ, எவைகள் நபிமார் மற்றும் வலிமார்களின் ஜீவிய காலத்தில் அவர்களிடம் கேட்கப்படவில்லையோ அவைகளை அவர்களது மறைவுக்குப் பின் கேட்பதுதான் ஷிர்க் ஆகும் .
ஆம், எவை எவை அவர்களுடைய ஜீவிய காலத்தில் அவரிடம் கேட்பது ஷிர்க்காக இருந்ததோ அவைகள் ஆகும். மற்றபடிமஜாஸியான காரியங்களை அவர்களோடு சம்பந்தப்படுத்தலாம் . எவ்வாறெனில் ஹஜ்ரத் ஈஸா நபியவர்கள், நான் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று சொன்னதை போன்றதாகும். இதுபற்றி ஷைகுல் இஸ்லாம் (இப்னு தைமிய்யா ) தனது பல்வேறு பத்வாக்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.
[நூல் - ஹத்யத்துல் மஹ்தி , பக்கம் 18, 19]
மேலும் மஜாஸியான தொடர்பைப் பற்றி நவாப் வஹீதுஸ் ஸமான் விவரிக்கும்போது,
“ அல்லாஹ் தனது வேதத்தில் ' வஇத் தக்லுகு மினத்தீனி ' என்னும் வசனத்தில் படைப்பையும் சுகம் அளிப்பதையும்ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடுமஜாஸியாக இணைத்துப் பேசுகின்றான். இதைக் கொண்டு யாராவது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டு அவர்கள் இறந்து போனவரை உயிர் பெற்றுத் தரவேண்டும் என்று கேட்பாராயின் அது ஷிர்க் ஆகாது.
இதுபோன்றே யாராவது ஒருவர் உயிரோடு உள்ள வலியிடமோ அல்லது நபியிடமோ அல்லது அவர்களின் ஆன்மாக்கள்ளிடமோ அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு தனக்கொரு பிள்ளை தர வேண்டும் என்றோ அல்லது தனது நோயைத் தீர்க்க வேண்டும் என்றோ கேட்பாராயின் இதுவும் ஷிர்க் ஆகாது . "
[நூல் - ஹாஷியா ஹத்யத்துல் மஹ்தி ,பக்கம் 19]
தீர்ப்பு :
மேற்கண்ட விளக்கத்தை கொண்டு நபிமார்களிடமும்,வலிமார்களிடமும் நமது நாட்டங்களையும் தேவைகளையும் கேட்பது குப் ரோ அல்லது ஷிர்கோ ஆகாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் இன்று நம்மிடையே உள்ள வஹாபிகள் இதில் உள்ள நுணுக்கத்தை விளங்காது எடுத்ததற்கெல்லாம் குப்ரு என்றும்ஷிர்க் என்றும் பத்வா கொடுத்து வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
மேலும் எதார்த்தத்தில் ஒருவரது நாட்டத்தை நிறைவேற்றுபவன், ஒருவரின் துன்பத்தைப் போக்குபவன் அல்லாஹ் தான் என்பது வெள்ளிடைமலை. இந்நிலையில் அவனிடம் நபிமார்கள் மற்றும் வலிமார்களின் வஸீலாவைக் கொண்டு நமது தேவைகளையும் நாட்டங்களையும் கேட்பதுதான் அழகானதும் , விரும்பத்தக்கதுமாகும். இன்னும் நபிமார்களிடம்வலிமார்களிடமும் கேட்பது உண்மையில் அல்லாஹ்விடம் தான் கேட்டதாகும் .ஆதலால் இதைப் புரிந்து கொண்டால் இஸ்லாமியருக்கிடையே உள்ள பூசல்கள் வெகுவாக குறைந்துவிடும்.