ஜியாரத்திற்காகச் செல்லும் ஆண் ,பெண் இருபாலரும் ஷரீயத்தைப் பேணி , ஒழுங்கு மரியாதையோடு , நாடிவந்த காரியத்தை முடித்துக் கொண்டு திரும்புதல் வேண்டும் . ஒழுங்கு தவறி நடப்பவர் பயனைப் பெறாது போவதுடன் , அம்மகான்களின் கோபப் பார்வைக்கும் ஆளாக நேரிடும் .
ஆண்களை விட பெண்கள் தான் அதிக கவனமாக இருத்தல் வேண்டும் . உத்தமர் ஒருவர் தான் பார்க்க பாத்யதையற்ற பெண்மணியின் முகத்தைக் கண்டு நாணமுறுவது போல ,முகம் திறந்து ஜியாரத்து செய்யும் பெண்மணிகளைக் கண்டு வலிமார்கள் வெட்கமடைகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .
உம்மஹாத்துல் மூஃமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها
அவர்கள் பெண்களுக்கோர் அழகிய முன்மாதிரியாக இருக்கின்றார்கள் . ஜீவியமுள்ள மனிதர் முன்பு நடந்து கொள்வது போன்றே வபாத்தாகிவிட்டவர்களது முன்பும் நடந்து காண்பித்து அன்னாரது உயர் நடவடிக்கைப் பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது .
அன்பியா ,அவ்லியாக்களை ஜியாரத்துச் செய்யும் பொழுது அவர்களை முன்னோக்காமல் , அவர்களது முகங்களின் பக்கம் தமது முதுகுப் பக்கம் இருக்கும்படியாக , கிபுலாவை முன்னோக்கியே துஆ ஓத வேண்டமென காலம் சென்ற நஜ்து அரசர் அப்துல் அஜீஸ் இப்னு சவூதின் நடத்தையை முன்மாதிரியாக கொண்டு சிலர் பேசுகின்றனர் . அவர்கள் ,மக்கா ,மதீனாவிலும் தற்போது இங்கனமே நடைபெற்று வருகின்றது என்பதாகவும் எடுத்துக்காட்டி பேசுகின்றனர் . இவை ,வஹ்ஹாபியத்தான செயல்களாகும் .
" ஜியாரத்துச் செய்யும் பொழுது கபூர் ஷரீஃபை முன்னோக்கியும் , கிபுலாவின் பக்கம் முதுகை திருப்பியும் அதபுடன் நிற்க வேண்டும் " என்பதுவே மத்ஹபுகளை ஏற்படுத்தி தந்துள்ள நான்கு இமாம்களின் வழிமுறையாகும் .
"கப்ருகளை ஜியாரத்துச் செய்யும் பொழுது கிபுலாவை முன்னோக்கியே செய்ய வேண்டும் என்று வரும் ரிவாயத்து றத்து செய்யப் பட்டதாகும் " என்பதாக 'பத்ஹுல் கதீர் ' ,2வது பாகம் , 336வது பக்கத்திலும் , 'ஸர்க்கானீ ' 8வது பாகம் , 305வது பக்கத்திலும் , 'ஷவாஹிதுள் ஹக் ' , 46வது பக்கத்திலும் , 'தூறுஸ்ஸனிய்யா -பீ -றத்தில் -வஹ்ஹாபிய்யா ' கிரந்தத்திலும் எடுத்துரைக்கப் பட்டுள்ளது .
" கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுடைய புனித ரவ்லாவில் கப்ரு ஷரீஃபை முன்னோக்கி நின்று ,கிப்லாவின் பக்கம் முதுகை திருப்பியவண்ணம் , ' அஸ்ஸலாமு அலைக்கும் அய்யுஹன்நபிய்யு - வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ' என்று மரியாதையுடன் ஸலாம் சொல்வது ஸுன்னத்தாகும் " என்பதாக இப்னு உமர் رضي الله عنه அவர்களைக் கொண்டு ரிவாயத்து வந்துள்ளது என்று இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா
رضي الله عنه அவர்கள் கூறியுள்ளார்கள் .இவ்விபரம் ' காயத்துல் அவ்தார் - தர்ஜுமா ரத்துல் முஹ்தார் ' நூலில் 624வது பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது .
"அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அவர்கள் ,நபி பெருமானார் முஹம்மது صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை ஜியாரத்துச் செய்யும் பொழுது , அவர்களது புனித கபூர் ஷரீஃபை முன்னோக்கி ,தொழுகையில் நிற்கின்ற நிலை போல் நின்று இடது கை மீது வலது கை வைத்து கை கட்டி அதபுடன் ஜியாரத்துச் செய்தார்கள் " என்ற வாசகம் 'ஷரஹுஷ் ஷிபா' 152வது பக்கத்திலும் , 'இஹ்யா உலூமித்தீன் ' 4வது பாகம் , 419வது பக்கத்திலும் காணப்படுகின்றது .
"இந்த அதபு ஒழுங்குபடி ஜியாரத்து செய்வது முஸ்தஹப்பாகும் " என்று நான்கு மத்ஹபுடைய இமாம்களும் சொல்லியுள்ளார்கள் என்பதாக 'சீரத்துன் நபவிய்யா ' , 'வபாவுல் வபா ' , 'ஜவ்ஹர் முன்ளம் ' ,' பதாவா ஆலம்கீர் ' , 'ஜதுபுல் குலூப்' , 'பஸ்லுல் கிதாப் ' , ' பத்ஹுல் ஹக் ' ஆகிய கிரந்தங்கள் கூறுகின்றன .
பகுதாது நகரில் ஆட்சி புரிந்த அப்பாஸிய்யா கலீஃபா அபூ ஜஃபர் ,மன்ஸுர் தானீ ஹஜ்ஜு செய்து விட்டு நபிகள் நாயகம்
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுடைய ஜியாரத்தை நாடி மதீனாவிற்கு சென்றார் .அவ்வமயம் இமாம் மாலிக் رضي الله عنه அவர்கள் மஸ்ஜிதுன் நபவிய்யில் வீற்றிருப்பதைக் கண்ட கலீஃபா ,'அல்லாஹ்வின் அடியாரே ! இவ்வமயம் நான் கிப்லாவை முன்னோக்கி வேண்டுதல் செய்ய வேண்டுமா ? அல்லது ரஸூலுல்லாஹி
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை முன்னோக்கி வேண்டுதல் செய்ய வேண்டுமா ? ' என்று வினவினார் .
அதற்கு இமாம் மாலிக் رضي الله عنه அவர்கள் , "உங்களின் முகத்தை அவர்களை விட்டும் திருப்பி விட வேண்டாம் . அவர்கள் ,உங்களுக்கும் பாவா ஆதம் عليه السلام அவர்களுக்கும் அல்லாஹுத்தஆலா அளவில் வஸீலாவாக ஆக்கப் பெற்றவர்கள் . எனவே அவர்களை முன்னோக்கி நின்றே வேண்டுதல் செய்து அவர்களைக் கொண்டு வஸீலாப் பிரார்த்தனைத் தேடுங்கள் " என்று விடை பகர்ந்தார்கள் .
இவ்விபரம் 'ஷவாஹிதுல் ஹக் ' 48வது பக்கத்திலும் , 'மஷாரிகுல் அன்வார் ' ,55வது பக்கத்திலும் வந்துள்ளது .
"ஜியாரத்துச் செல்கிறவர்கள் கபுராளிகளின் முகத்தை முன்னோக்கி தொழுகையில் கை கட்டுவது போல் கை கட்டி , ஒழுங்கு மரியாதையுடன் நின்று , ஸலாம் கூறி , குர்ஆனிலிருந்து அல்ஹம்து ,யாசீன் முதலான சூறாக்களை ஓதி கை ஏந்தி துஆ கேட்டு பின்னர் ஜியாரத்து செய்ய வேண்டும் " என்பதாக 'துர்ருல் முன்ளம் ' , இதன் ஷரஹு 'ஸுல்குல் முஅள்ளம்' , 'ஷரஹு மனாகில் பலாஹ்' , 'ரத்துள் முஹ்தார்' , 'குன்யத்துத் தாலிபீன் ', 'ஈலாஹில் மனாஸிக்கு', 'பத்ஹுல் கதீர் ' , ' ஷவாஹித்துல் ஹக்' , 'மஷாரிகுல் அன்வார் ' முதலிய நூற்கள் கூறுகின்றன .
" ரஸூலுல்லாஹி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுடைய மேன்மையான ரவ்ளா ஷரீபிற்கு ஆஜராவீர் ! தலைமாட்டு சுவற்றின் மூலையிலிருக்கும் தூணுக்கு மூன்று நான்கு மூழத் தூரத்திற்கு அப்பால் மரியாதையுடன் நிற்பீர் ! கிபுலாவின் பக்கம் முகத்தை திருப்பி , இடது புறம் சற்று சாய்வாக நிற்பீர் ! அப்போது அவர்களது திருமுகம் இருக்கும் பக்கம் நேராக முன்னோக்கியதாகும் .மரியாதையுடனும் , பரிபூரணமான பயபக்தியுடனும் நின்று கொள்வீர் ! மேன்மைமிக்க இத்தலம் மரியாதையும் ,பயபக்தியும் உள்ள இடம், ஆகையால் அதிகச் சமீபம் நெருங்காதீர் ! சுவற்றைத் தொடாதீர் ! கபூர் ஷரீஃபில் கிபுலாவின் பக்கம் தங்களது முகத்தை திருப்பி இருக்கும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது திருமுகத்தை ஞாபகப்படுத்தி , 'அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ் ' என்று கூறுவீர் ! " என்பதாக கபூரை முன்னோக்கி ஜியாரத்துச் செய்யக் கூடாது என்று வழக்கடிக்கும் (தேவ்பந்தி தப்லீக் )கூட்டத்தார்கள் தங்களது பெரிய இமாம் ,குத்பு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி என்பவர் , 'ஜிப்தத்துல் மனாஸிக் ' நூலில் 144வது பக்கத்தில் ஜியாரத்து செய்யும் முறை பற்றி பேசும் போது விளக்கியுள்ளார் .
மறுப்புகூறுபவர்கள் குருவுக்கும் மிஞ்சிய சீடர்கள் போலும் !
"மகான்களின் ஹயாத்தில் எவ்வாறு ஒழுங்கு மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறே அவர்களின் வபாத்திற்குப் பின்னும் , அவர்களை ஜியாரத்து செய்யும் போது அதபு ,ஒழுக்கம் ,மரியாதை பேணுவது கடமை வாஜிபாகும் " என்று 'அஷிஅத்துல் லம்ஆத்' ,1வது பாகம் , 636வது பக்கத்தில் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه அவர்கள் கூறியிருக்கின்றார்கள் .
ஆகவே ,ஜியாரத் செய்வது ஸுன்னதென்றும் ,ஒழுங்கு மரியாதை பேணுவது வாஜிபு என்றும் தெரிய வருகின்றது .
ஜியாரத்துச் செய்யும் போது அனுஷ்டிக்க வேண்டிய ஒழுங்குமுறை பற்றி 'பத்வா ஆலம்கிரியில்' சொல்லப்பட்டுள்ள விபரம் வருமாறு : -
" ஜியாரத்திற்குள்ள மேலான முறை :
முதன் முதலில் தமது வீட்டில் இரண்டு ரக்அத் நபில் தொழ வேண்டும் . ஒவ்வொரு ரக்அத்திலும் 'அல்ஹம்து' ஸுரத்தும் ,ஆயத்துல் குர்ஸியும் ஒவ்வொரு விடுத்தமும் , குல்ஹுவல்லாஹு அஹத் ஸுரத்து மூன்று விடுத்தமும் ஓதி இரண்டு ரக்அத்து தொழுது முடித்ததும் அதன் தவாஃபை கபுராளிக்கு அளித்துவிட வேண்டும் . இந்த அமலைக் கொண்டு அல்லாஹ் அந்த கபூரில் நூர் என்னும் பிரகாசத்தை உண்டு பண்ணுவதுடன் ,ஜியாரத்துச் செய்கின்றவர்களுக்கும் கிருபை செய்கின்றான் .
இதன் பின் ஜியாரத்தின் பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டும் . வழியில் ,அவசியமற்றதும் ,பிரயோஜனமற்றதுமான எந்த கருமத்தையும் செய்யக் கூடாது . உலக சம்பந்தமான எந்த சம்பாஷனையிலும் பராக்காக் கூடாது . மக்பராவுக்கு வெளியே பாதரட்சைகளை கழற்றி விட வேண்டும் . கபூரின் வலது பக்கத்தில் கிபுலாவின் பக்கம் முதுகை திருப்பி ,கபூராளியின் முகத்தை நோக்கி நின்று ஸலாம் கூறி 'பாத்திஹா' முதலியன ஓத வேண்டும் " என்பதாம் .
குர்ஆன்,பாத்திஹா ,ஸலவாத்து முதலியன ஓதி அவற்றின் தவாஃபை கபுராளிகளுக்கு சேர்த்து வைப்பதில் இரு வித கருத்துக்கள் உண்டு .
(1) அவாம்களாகிய மவுத்தாகளுக்கு அவை ஸதகா உடைய ஸ்தானத்தில் இருக்கிறது . அவற்றின் பொருட்டால் கபுராளிகளுக்கு அதாபு லேசாகின்றது . ஈடேற்றம் , ஸலாமத் உண்டாகின்றது .
குழந்தைகள் பெற்றோர்களையும் ,இயலாத்தன்மையுள்ள பெற்றோர்கள் வாலிப மக்களையும் எதிர்பார்ப்பதே போல நாம் அனுப்பும் இத்தகைய கத்தம் ,பாத்திஹா ,ஸதக்கா முதலானவற்றின் தவாபுகளை அந்த கபுராளிகள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் .
(2) அன்பியா ,அவ்லியாக்களுக்கு கத்தம் ,பாத்திஹா ,ஸதக்கா முதலானவைகளை ஓதி அவற்றின் தவாஃபை அவர்களுக்கு சேர்த்து வைத்தலானது 'துஹ்பா' என்னும் காணிக்கை செலுத்துவதாகும் . அவற்றின் பொருட்டால் அல்லாஹ் அருள் புரிகின்றான் . தேவைகளை நிறைவேற்றித் தருகின்றான் .
இத்தகைய துஹ்பா காணிக்கைகளை அவர்கள் எதிர்பார்ப்பவர்கள் அல்லர் . எனினும் அங்கணம் செய்வது அவர்களை கண்ணியப்படுத்துவதாகும் . ஆகவே அன்பியா ,அவ்லியாக்கள் பேரால் கொடுக்கப்படும் கத்தம் ,பாத்திஹா ,ஸதக்கா முதலியன ஓதுவது துஹ்பா காணிக்கையாகும் .
"கனிகள் நிறைந்த மரங்கொப்பு ,தாழ்மையாக தலை கவிழ்ந்து எங்கனம் , பூமியை நோக்கி வளைந்து நிற்கின்றதோ அங்கனமே அறிஞர்கள் தாழ்ச்சி கொண்டு நடப்பார்கள் " என்று ஷெய்கு முஸ்லிஹுத்தீன் ஸஃதீ சிராஜீ رضي الله عنه அவர்கள் "கரீமாவில்' உதாரணம் கூறி உள்ளார்கள் .
எனவே ஜியாரத்தின் போது தாழ்மையையும் , கீழ்ப்படிதலையும் அனுஷ்டிப்பவர்கள் அதற்குரிய சன்மானத்தை பெறுவார்கள் .
ஆகவே ,ஜியாரத்திற்கு செல்லக் கூடியவர்கள் தாங்கள் அனுஷ்டிக்க வேண்டிய அதபு ,ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும் .
No comments:
Post a Comment