இமாமுல் ஆரிஃபீன், ஸுல்தானுல் வாயிழீன், பஹ்ருல் ஹகாயிகி வத்தகாயிகி, ரயீஸுல் மஜாதீப் அஷ் ஷாஹ் அஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸுஃபி காதிரி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களது வரலாறு :
அஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸுஃபி காதிரி ஹைதராபாதி கத்தஸல்லாஹு
ஸிர்ரஹுல் அஸீஸ்
பிறப்பு:
ஹிஜ்ரி 1270 ஜூமாத்துல் ஆகிரா பிறை 19, 19-03-1854, ஞாயிற்றுக்கிழமை.
பிறந்த
இடம்: தற்போது கர்நாடகாவில் இருக்கும் பைதர் ஷரீப்.
இவர்களின் தகப்பனார் பெயர் ஹழ்ரத்
மீர் ஆலம் ஷாஹ் ஸுபி காதிரி நக்ஷ்பந்தி. அவர்களின் தகப்பனார் பெயர் அஹ்மது அப்தால். ஆப்கானிஸ்தான் காபூலில் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள்.
ஷெய்கு ஷாஹ் ஸஅதுல்லாஹ் நக்ஷபந்தி முஜத்திதி
ஹைதராபாத்தில் குத்புஸ்ஸமான் ஷாஹ் ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நடத்தி வந்த அரபிக்கல்லூரியின் பிரபல்யமும், அவர்களின் தரீகாவின் (முஜத்திதிய்யா.நக்ஷபந்தியா) பிரபல்யமும் காபூலில் நன்கு பரவியிருந்தது. எனவே அந்த அரபிக் கல்லூரியில் சேரவேண்டும் என்ற நோக்கத்துடனும், அவர்களின் சில்சிலாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்துடனும் காபூலிலிருந்து புறப்பட்டு டெல்லி வந்து பின்பு ஹைதராபாத் வந்து சேர்ந்தார்கள்
ஸுபி ஹஜ்ரத் அவர்களின் தகப்பனார் மீர் ஆலம் அவர்கள். சுமார் 4 வருடங்கள் இங்கு தங்கி கல்வி பயின்று இரவு வணக்கத்தில் ஈடுபட்டும், பகலில் கல்வி கற்றும் வந்து ஸனது பெற்றார்கள். ஸஅதுல்லாஹ் ஷாஹ் அவர்கள் அவர்களுக்கு பைஅத் கொடுத்து தங்கள் கலீபாவாகவும் ஆக்கி கொண்டார்கள்.
அஷ் ஷெய்கு மீர் ஆலம் நக்ஷபந்தி
ஹைதராபாத் சமஸ்தானத்தில் உள்ள ஜனவாடா தாலுக்காவிற்குப் பக்கத்தில் பீதர் ஷரீப் என்ற இடத்தில் மௌலவி ஹமீத்கான் ஜமீன்தார் என்ற நல்ல மனிதர் ஷாஹ் ஸஅதுல்லாஹ் அவர்களின் முரீது. நல்ல கொடையாளி. இவர்களின் மூதாதையர்களும் ஆப்கானிஸ்தானைச் சார்ந்தவர்களே! இவர்கள் தங்கள் மகளை மீர் ஆலம் அவர்களுக்கு மணமுடித்துப் கொடுக்க விருப்பப்பட்டு ஷெய்கு அவர்களிடம் சொன்னபோது ஷெய்கு அவர்களும் மீர் ஆலம் அவர்களிடம் ஒப்புதல் கேட்டு மணமுடித்து வைத்தார்கள். இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. முதல் பெண் குழந்தை இறந்துவிட்டது. இரண்டாவது ஆண் குழந்தை நமது ஷெய்கு
நாயகம் முஹம்மது அப்துல் காதிர் ஸுபி
அவர்கள்.
உருவ அமைப்பு
கல்வி
ஸுபி
நாயகமவர்களின் தாயார் நல்ல மார்க்க அறிஞராக இருந்தார்கள். நாயகமவர்களுக்கு நான்கு வயது நான்கு மாதமானவுடன் மத்ரஸாவில் சேர்த்தார்கள். மத்ரஸாவில் மூன்று,நான்கு வருடங்கள் ஓதினார்கள். இச்சமயத்தில் இவர்களின் பாட்டனாரும் அதைத் தொடர்ந்து இவர்களின் தாயாரும் மறைந்து விடவே இவர்களின் படிப்பு சில காலம் நின்றுவிட்டது. சில காலம் கழித்து மௌலவி முஹம்மது வஸீர் கிப்லா அவர்களிடம் கல்வி கற்கச் செய்தனர். ஹைதராபாத்திற்கு சென்று வரும் வழக்கமுடைய ஷெய்கு
நாயகமவர்களின் தகப்பனார் அவர்கள், தங்கள் பிள்ளையின் கல்வியில் அக்கறை கொண்டு பிள்ளையையும் ஹைதராபாத் அழைத்து வந்திருந்தனர்.
அச்சமயத்தில் ஷெய்கு ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகி கொஞ்ச காலம் ஆகியிருந்தது. அவர்கள் ஸ்தானத்தில் அவர்களின் மற்றொரு கலீபா ஷாஹ்
மீர் அஷ்ரப் அலி ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து மத்ரஸாவை நடத்திவந்தர்கள். அவர்களிடம் தங்கள் பிள்ளையை கல்விக்காக சேர்த்தார்கள். அவர்களிடம் பைஅத்தும் பெற்றார்கள். ஷெய்கு ஷாஹ்
மீர் அஷ்ரப் அலி ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லத்திலேயே தங்கி கல்வி பயின்று வந்தார்கள். சில வருடங்களிலேயே சகல கல்வியிலும் தேர்ச்சி பெற்றார்கள். சிறு வயதிலேயே பார்ஸி மொழியில் கவி பாடத் துவங்கினார்கள். இந் நிலையில் கல்வி கற்று முடியும் முன் ஷெய்கு அஷ்ரப் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திடீரென சுகக் குறைவு ஏற்பட்டு வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா ஷெய்கு ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ருஷரீபின் விலாப் புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் மத்ரஸா நடப்பது நின்றுவிட்டது. எனவே தங்கள் கல்வியை சிறந்த கல்விமானாக விளங்கிய முல்லா உபைதுல்லாஹ் கந்தாரி அவர்களிடம் கற்று முடித்து ஸனது அவர்களிடமே வாங்கினார்கள்.
கிலாபத்
ஹஜ்ரத் மீர் அஷ்ரப் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குடும்பத்தில் இருந்த பெரிய ஷெய்கு மௌலானா ஸுல்தானுத்தீன் ஸாஹிப் நக்ஷபந்தி, முஜத்திதீ அவர்களிடம் நுட்பமான, அகமியமான கல்விகளைக் கற்று இவர்களிடமே நக்ஷபந்தியா, முஜத்திதியா தரீகாவுடைய கிலாபத்தையும் பெற்றுக் கொண்டார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் மதீனாஷரீஃப் ஜன்னத்துல் பகீஃயில் அமைந்துள்ளது.
வியாபாரமும், திருமணமும்
ஸுபி
நாயகமவர்களின் தகப்பனார் 'நாராயண் கேடா' என்னும் ஊரில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். தகப்பனாருடன் சேர்ந்து மகனும் அத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். இச்சமயத்தில் அவர்களுக்கு வயது பதினெட்டு. பகல் முழுவதும் வியாபாரத்தை கவனிப்பதும், இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுமாக இருந்தார்கள்.
இருபத்தி ஐந்தாம் வயதில் ஒரு கண்ணியமான குடும்பத்தில் திருமணம் முடித்து வைத்தார்கள்.12 வருடம் வியாபாரம் நல்லவிதமாக நடந்துவந்தது. ஜவுளி வியாபாரம் கடன்பட்டதால் அதை மூடி விட்டு, பீதர்
ஷரீஃப் வந்துவிட்டார்கள்.
பீதர்
ஷரீஃபில் மத்ரஸா முஹம்மதிய்யா என்ற பெயரில் ஒரு மார்க்க பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்கள். இச் சமயத்தில் அவர்களின் மனைவிக்கு சுகக் குறைவு ஏற்பட்டதால், இவர்கள் பேகம் பீவி
என்ற மாதரசியை இரண்டாவதாக திருமணம் முடித்தார்கள்.இதற்கிடையில் முந்திய மனைவி வபாத்தாகிவிட்டார்கள். மத்ரஸா நிதி நெருக்கடியால் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. பிள்ளைக் குட்டிகளை பீதர்
ஷரீபில் விட்டுவிட்டு ஹைதராபாத் வந்து ஒவ்வொரு இடமாக சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்கள்.
மஹ்பூபு நகர் வந்து அங்கு மத்ரஸா ஆரம்பித்து அது சிறப்பாக நடந்து வந்தது. மத்ரஸாவுடன் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வந்தார்கள்.
ஹைதராபாத் ஸுபி நாயகம் மூன்று திருமணங்கள் முடித்திருந்தார்கள்.
1.
குல்தூம் பீவி
2.
பேகம் பீவி
3.
கமருன்னிஸா
குல்தூம் பீவி மனைவிக்கு பிறந்தவர்கள்:
1.அப்துல் மன்னான் (மர்ஹும்)
2.
அப்துல் ஹன்னான் (மர்ஹும்)
பேகம் பீவி அவர்களுக்கு பிறந்தவர்கள்:
1.ஹலீம் பீவி (மர்ஹும்)
2.அப்துஷ் ஷுக்குர் (மர்ஹும்)
3.
ஹுசைன் பீவி (மர்ஹுமா)
4.அப்துல் ஹன்னான்
5.மீர் ஆலம் ஷாஹ் (மர்ஹும்)
6.அப்துல் அலி
7.ஆண் குழந்தை (மர்ஹும்)
8.ஷஹ்ஜாதி பீவி (மர்ஹுமா)
9.முஹம்மது அப்துல்லாஹ்
கமருன்னிஸா அவர்களுக்கு பிறந்தவர்கள்:
1.ஷம்ஷுன்நிசா (மர்ஹுமா)
2.நஜ்முன்னிசா
3.இஸ்மாயில் பேகம் (மர்ஹுமா)
4.ராபியா பேகம்
5.பாத்திமா பேகம் (மர்ஹுமா)
6.சுபைதா பேகம்
7.முஹம்மது அஹ்மத் (மர்ஹும்)
8.ஜமீலுன்னிஸா (மர்ஹுமா)
மூன்று மனைவிகளுக்கு பிறந்த 9 ஆண்களும், 10 பெண்மக்களும் ஆக மொத்தம் 19 பிள்ளைகள்.
ஹைதராபாத் ஸுபி நாயகத்தின் காலத்தில் ஹயாத்தாக இருந்தவர்கள்,
பேகம் பீவி மனைவிக்குப் பிறந்தவர்கள்:
1.அப்துஷ் ஷுக்குர்
2.அப்துல் ஹன்னான்
3.அப்துல் அலி
4.முஹம்மது அப்துல்லாஹ்
கமருன்னிஸா மனைவிக்குப் பிறந்தவர்கள்:
1.நஜ்முன்னிஸா
2.ராபியா பேகம்
3.சுபைதா பேகம்
பிள்ளைகள் எவரும் ஹைதராபாத் ஸுபி நாயகத்தின் ஜீவிய காலத்தில் அவர்களது துறையில் ஈடுபடவில்லை.அவர்களது இராஜ உபசரிப்பிலேயே வாழ்க்கையை கடத்தி விட்டார்கள் .ஷெய்கு நாயகம் அவர்களும் ஆன்மீக துறையிலேயே மூழ்கிவிட்டார்கள்.
மகனார் ஹழ்ரத் அப்துஷ் ஷுக்குர் அவர்கள் மட்டும் ஷெய்குனாவுடன் வஃபாத்தாகும் வரை இருந்து பணிவிடை செய்து ,ஷெய்குனா ஹழ்ரத் அவர்களுக்கு மானியமாக கிடைக்கப் பெற்ற இடத்தில் குடியிருந்து ஜியாரத்தின் பணியை கவனித்து வந்தார்கள் .அவர்களுக்குப் பின் அவர்களது மகனார் ஹழ்ரத் அப்துர் ரஸ்ஸாக் ஸுபி,அவர்களது மனைவி ,மக்களும் கவனித்து வந்தார்கள்.பேரப்பிள்ளை அப்துர் ரஸ்ஸாக் ஸுபி அவர்கள் ஹிஜ்ரி 1434 ரஜப் பிறை 2, 13-05-2013 ல் வபாத்தாகி விட்டார்கள்.தற்போது அவர்களது மகனார் ஹழ்ரத் முஹம்மது அப்துல் காதிர் ஸுபி காதிரி அவர்கள் ஜியாரத்தின் பணிகளை கவனித்து வருகிறார்கள் .
ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களது ஜியாரத்தில், ஹைதராபாத் ஸுபி ஹழ்ரத் அவர்களது பேரனார் ஹழ்ரத் அப்துர் ரஸ்ஸாக் ஸுபி காதிரி அவர்களுடன் காயல் ஸுபி நாயகம் அவர்களது கலீபாக்கள் ஷெய்கனா ஸெய்யத் முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஆலிம் ஸுபி காதிரி அந்தரூத்தி, ஷெய்கனா முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸுபி காதிரி காஹிரி, ஷெய்கனா ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி
இமாமுல் ஆரிபீன், ஸுல்தானுல் வாயிழீன் அஷ் ஷாஹ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸுபி காதிரி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களது ஜியாரத் முகவரி:
ஸுபி மன்ஸில், மிஸ்ரிகன்ஜ்,
ஹைதராபாத் -500005
வருடா வருடம் ஷவ்வால் பிறை 9, 10, 11 ஆகிய தினங்களில் அவ்வூர் வழக்கப்படி உரூஸ் வைபவம் நடைபெறுகின்றது.
இமாமுல் ஹிந்த் ஷெய்கு ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் வழிப் பேரரும்,சிராஜுல் ஹிந்த் அஷ் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளை மணம் முடித்த மருமகனாரும் ,கலீஃபாவும் சிக்கந்தராபாதில் அடக்கமாகி ஜெகஜோதியாக இலங்கும் தாஜுல் ஆரிஃபீன் அஷ் ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் ஸுபி காதிரி
ரலியல்லாஹு அன்ஹு அவர்களது பிரதான கலீபாவான சுல்தானுல் மஜாதீப் முன்ஷி அஷ் ஷாஹ் அஸ்ஸெய்யித் இஸ்மாயீல் ஸுபி காதிரி அவர்களது முரீதாகவும் ,ஏக கலீபாவாகவும் ஆனார்கள்.
வக்கில் மௌலவி அப்துல் கையூம்கான் ஸாஹிப் அவர்களுடன் ஸுபி
நாயகம் அவர்கள் சாக்னேவாடி தெருவில் தங்கியிருந்த ஸெய்யிதுஸாதாத் இஸ்மாயில் ஸுபி
காதிரி மஜதூபுஸ்ஸாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்கச் சென்றார்கள். இவர்கள் போன சமயம் முன்ஷி ஹஜ்ரத் அவர்களுக்கு ஸுலூக் உடைய காலமாயிருந்தது. ஸுபி
நாயகமவர்கள் முன்ஷி ஹஜ்ரத் அவர்களிடம், 'நான் தங்களிடம் துஆவுக்காக வந்துள்ளேன்' என்று சொன்னதும், முன்ஷி ஹஜ்ரத் அவர்கள்
ஹைதராபாத் ஸுபி நாயகமவர்களின் கண்ணோடு தனது கண்ணை சேர்த்து பார்த்து, தலையை அசைத்து 'நல்லது,
நல்லது என்று சொன்னார்கள். நடந்தது இவ்வளவுதான்!
இதற்குப்பிறகு, ஹைதராபாத் ஸுபி
நாயகமவர்களுக்கு தங்கள் பிள்ளைக்குட்டி, குடும்ப கவலைகள், வியாபாரம்
சம்பந்தமான நினைப்போ இல்லை. இவ்வுலக மனுஷராக அவர்கள் இல்லை. ஜத்புடைய நிலையிலாகிவிட்டார்கள். சுமார் 2 வருடம் வரை இதே நிலைமை நீடித்தது. அதன்பின் ஸுலூக்குடைய படித்தரத்திற்கு திரும்பினார்கள். இச்சமயத்தில் கிடைத்த காண்ட்ராக்ட் வேலைகள் கை நழுவிப் போயின.
ஷெய்கு ஸெய்யிதுஸாதாத் இஸ்மாயில் மஜதூபுஸ்ஸாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் பற்றியும், அடைந்த பாக்கியங்கள் பற்றியும் அரபி, பார்ஸி, உருது பைத்களும் கொண்ட 'புகானே ராஸ்' என்ற புத்தகத்தில் தெளிவுபட கூறியுள்ளார்கள்.
ஜத்புடைய காலங்களுக்குப் பின் அவர்கள் உபதேசம் அதிகமதிகம் செய்தனர். அவர்களின் உபதேசத்திற்கு மக்கள் திரளாக வருகை தந்து நற் பயன் பெற்றனர். தங்களுடைய வபாத்திற்கு ஏழு, எட்டு வருடங்களுக்கு முன்பு பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்தவர்களுக்கு ஷம்ஷியாபாத்திலுள்ள தம் இல்லத்தில் தங்க வைத்து அவர்களுக்கு திக்ரு, முராகபா,
தியானம், முஷாஹதா முதலியவைகளில பயிற்சி கொடுத்து பலருக்கு கிலாபத்தும் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வந்தார்கள்.
தொடர்ச்சியாக உபதேசம் செய்ய ஆரம்பித்ததால் காண்ட்ராக்ட் வேலைகளை சரிவர கவனிக்க முடியாமல் நிறுத்தும்படி ஆகிவிட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.
கவ்துல் அஃலம் அவர்களது நன்மாராயம்
ஹைதராபாத் ஸுபி நாயகமவர்கள் சொல்லியிருக்கிறார்கள்: 'ஒரு நாள் நான் முராகபாவிலிருக்கும் போது பிரகாசமான மாளிகையைக் கண்டேன். அந்த மாளிகையிலிருந்து பிரகாசமான மனிதர்கள் வருவதும், போவதுமாக இருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்டேன், 'இங்கு என்ன விசேஷம்?' என்று. அதற்கவர்கள் இந்த மாளிகையில் மஹ்பூபு சுபுஹானி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகை தந்துள்ளார்கள் என்றார்கள். நான் ஆவல் ஏற்பட்டு அம் மாளிகைக்குள் சென்று பார்த்தேன். அங்கு நாயகமவர்கள் ஒரு அழகான நாற்காலியில் அமர்ந்திருந்தாhக்ள் அவர்கள் அங்கிருந்த மனிதர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்றுநேரத்தில் என்பக்கம் திரும்பி தங்களது முபாரக்கான விரலை சைக்கினை காட்டி சொன்னார்கள், 'சர்வமும் (மெயப் பொருள்) ஹக் அவனே!' என்று.
ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு
அவர்களிடம் பைஅத் பெறுதல்
ஒரு தடவை முராகபாவில் இருக்கும்போது, 'ஒரு மஜ்லிஸில் குத்புநாயகம் ஸெய்யிது ஸாதாத் இஸ்மாயில் ஸுபி அவர்களும், அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வீற்றிருக்கிறார்கள். இஸ்மாயில் ஸுபி நாயகம் அவர்கள் என் கையைப் பிடித்து அலி நாயகத்திடம் கொடுத்து நேரடியாக பைஅத் பெறும் பாக்கியத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.
பின்பு என் வாயில் அவர்களின் உமிழ் நீரை செலுத்தினார்கள்.அவர்களின் உமிழ்நீரை என் முகத்திலும் உமிழ்ந்தார்கள். பின்பு பேசுங்கள்! என்றார்கள். இதன்பின் எனது அறிவு விசாலமானதாகவிட்டது. என்னுடைய விரோதிகள் கூட அப்துல்காதிர் அவர்களை சீண்டவேண்டாம்! அவர்கள் உரை இல்லாத கூரிய வாளாயிருக்கும்! அதன்பக்கம் விரோதத்துடன் யார் சென்றாலும் அவர்கள்தான் வெட்டுப்பட்டு அழிந்து போவார்கள்' என்று சொல்கிறார்கள்.
ஹைதராபாத் சௌக்கி ஜும்ஆ பள்ளியில் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும் ஜும்ஆவிற்குப்பின் உபதேசம் ஆரம்பித்தர்கள். மக்கள் திரளாக கூட்டம்கூட்டமாக வந்து இவர்களின் உபதேசத்தைக் கேட்டவண்ணம் இருந்தனர். 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்' என்ற ஆயத்துக்கு மட்டும் சுமார் மூன்றரை வருடங்கள் வியாக்கியானம் செய்தார்கள். ஒருநாள் செய்த வியாக்கியத்தின் கருத்து அடுத்து வரும் நாட்களில் இருக்காது. அடுத்து 'அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்' என்ற ஆயத்துக்கு இரண்டு வருட காலமும், பிஸ்மில்லாஹ் ஆயத்துக்கு ஒன்றரை வருடமும், 'இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன் என்ற ஆயத்துக்கு மூன்றரை வருடமும் வியாக்கியானம் செய்தார்கள்.
ஸுபி
நாயகமவர்களின் மஜ்லிஸுகலில் மனிதர்கள் மட்டுமின்றி ஜின்களும், அவுலியாக்களும் வருகிறார்கள். அதை நாம் நன்கு அறிவோம் என்று குத்பு நாயகம் ஸெய்யிது இஸ்மாயில் ஸுபி
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் நல்லவிதமாக உபதேசம் செய்தார்கள் என்று யாராவது அவர்களிடம் சொன்னால், அவர்கள் எங்கு உபதேசம் செய்தார்கள்? நாமல்லவா உபதேசம் செய்தோம்' என்று சொல்வார்கள். இவ்வாறு பல்வேறு ஊர்களுக்கும் சென்று உபதேசம் செய்தார்கள். அடுத்து ஷம்ஷியாபாத்தில் சொந்தமாக வீடு ஒன்று கட்டினார்கள். இவர்களின்
புகழ் ,கீர்த்திகளைக் கண்ணுற்ற அன்றைய மன்னராக ஆட்சி புரிந்து வந்த ஆஸிப் ஜாஹ் அப்தம் என்பவர்,பார்ஸி மொழியில் அரசர் என்று பொருள்படும் ' அஷ் ஷாஹ்' என்ற பட்டமும் ,' ஸுல்தானுல் வாயிழீன்' - உபதேசிகளுக்கு மன்னர் என்ற பட்டமும் சூட்டி ,செளக் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்மாவிற்குப் பின் நீண்ட பயான் செய்வதற்கு நியமித்தார் .அதற்காக ஷெய்குனா அவர்களது ஜீவிய காலம் வரை மாதம் நூறு ரூபாய் மானியம் வழங்கவும் உத்தரவிட்டார் .
இதே ஷம்ஸியாபாத் ஆன்மீக மாளிகையில் தான் காயல் ஸுபி ஹழ்ரத் நாயகமும், அவர்களது ஆத்ம நண்பர் அட்டாளைச்சேனை அஹ்மது மீரான் ஸுபி ஹழ்ரத் நாயகமும் சென்று ஆறு மாத காலம் தங்கி பயிற்சி பெற்றும்,
தீட்சைப் பெற்றும்,கிலாபத்தும் பெற்று வந்தார்கள் .
ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களது கீர்த்தியும்,புகழும் நாலாபக்கமும் பரவியது .மெஞ்ஞானத்தில் தாகித்தவர்கள்,தேனீக்கள் மலர்களைத் தேடி வருவது போல வந்து குவிந்த வண்ணம் மெஞ்ஞான பேரமுதத்தை இன்பமுற சுவைத்துச் சென்றார்கள் .தங்களது ஊர்களுக்கு வருகை தரும்படி அழைப்பும் விடுத்தார்கள்.
சென்னை வருகை
சென்னை திருவல்லிக்கேணி மீலாது கமிட்டி (ஹைதராபாத் நிஜாமிடமிருந்து மானியமாக பணஉதவி பெற்றுக் கொண்டிருந்த) ஒன்று நிஜாம் அவர்களிடம் உபதேசம் பண்ண ஆள் அனுப்பும்படி கேட்டிருந்தது அதன்படி ஹைதராபாத் ஸுபி
நாயகமவர்களிடம் அனுமதி பெற்று அவர்களும் சென்னை பயணமானார்கள். அங்கு அவர்கள் நீண்டதொரு பயானை செய்து முடித்தார்கள். மக்களுக்கு அவர்களின் உபதேசம் நன்கு பிடித்திருந்தது. நாளையும் பயான் செய்ய வேண்டும், நாளையும் பயான் செய்ய வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் அதிகமாகி விட்டது .ஜனதிரளும் அதிகமாகி விட்டது. எனவே அதிக நாட்கள் (29 நாட்கள்) தங்கி மேலும்மேலும் பயான் பண்ணினார்கள். கேள்விப்படாத,
சொல்லப்படாத அரிய முத்துக்கள் போன்ற கருத்துக்களை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் .இச்சமயத்தில் அனேகர் அவர்களிடம் பைஅத் பெற்று பாக்கியம் பெற்றுக் கொண்டார்கள்.
ஜமால் முஹம்மது ஸாஹிப்
காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப்
அடுத்த வருடமும் இவர்களை பயானுக்கு மீலாது குழுவினரும், முரீதீன்களும், சென்னை மக்களும் அழைத்திருந்தனர். அவர்களும் வந்திருந்தனர். மேலும் பலபேர் முரீதீன்களாகவும்,
முஹிப்பீன்களாகவும் ஆனார்கள். இதன்படி சென்னை பெரம்பலூர் ஜமாலிய்யா அரபிக் கல்லூரிக்கும் விஜயம் செய்தார்கள்.கொடைவள்ளல் ஜனாப் ஜமால் முஹம்மது இராவுத்தர் அவர்களும்,
அவர்களது குடும்பத்தினரும்
முரீதீன்களாயினர்.அந்த வரிசையில் தான் ஜனாப் ஜமால் முஹம்மது இராவுத்தர் அவர்களது மகளை மணமுடித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களும் முரீதானார்கள்.
ஜனாப் ஜமால் முஹம்மது ஸாஹிப் அவர்களது பொருளுதவியால் 'ஜமாலிய்யா அரபிக் கல்லூரியை' ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களது முரீது கண்ணியத்திற்குரிய அல்லாமா மதார் சாஹிப் அவர்கள் ஸ்தாபித்தார்கள்.அதன் முதல்வராகவும் இருந்து பணியாற்றினார்கள் .இக்கால கட்டத்தில் தான் காயல் ஸுபி ஹழ்ரத் அவர்கள் அங்கு கல்வி கற்றார்கள்.
மகான் படேஷா ஹழ்ரத் அவர்களின் வரவேற்பும் சந்திப்பும்
அஷ்ஷெய்கு படேஷா ஹழ்ரத், செம்பியம்,சென்னை
ஒரு சமயம் சென்னைக்கு வந்திருந்த பொழுது "படேஷா ஹழ்ரத் "என்று பிரபலமான மகான் மஞ்சக்குப்பம் பத்ருத்தீன் ஹழ்ரத் அவர்கள் ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களை தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தபோது வீதியிலிருந்து வீடு வரை சிவப்புக் கம்பளம் விரித்து இராஜ உபசரிப்பு மரியாதையுடன் அழைத்துச் சென்று "ஆப்கோ கெளது பனாயா - தங்களை கெளதாக ஆகிவிட்டான் "என்று ஆரத்தழுவி வரவேற்றார்கள்.
பொதக்குடி,கூத்தாநல்லூர் ஊர்களுக்கு விஜயம்
சென்னை,கூத்தாநல்லூர்,பொதக்குடி,அத்திக்கடை ,பூதமங்கலம்,நாகூர் ஷரீப்,கொடிக்கால்பாளையம்,காரைக்கால் முதலிய ஊர்களுக்கு சென்று பயான் செய்து ஆன்மீக ஞானத்தை ஊட்டி தரீகத்தை வளர்த்தனர்.ஏராளாமான பேர்கள் முரீதானார்கள்.திருக்குரானின் ஒரு வசனத்தை ஓதியே அதன் விளக்கத்தை மாதக்கணக்கில் விளக்கம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதார் ஸாஹிபு ஹழ்ரத் அவர்கள் மரணம்
ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முதல்வர்,ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களின் முரீது - சங்கைக்குரிய மதார்ஷா ஹழ்ரத் அவர்கள் , ஹைதராபாத் ஸுபி ஹழ்ரத் நாயகம் அவர்களின் பயானில் லயித்து ஜத்பாகி ஹிஜ்ரி 1344 ரபீயுல் அவ்வல் பிறை 30 (18-10-1925) ஞாயிற்றுக்கிழமை
வஃபாத்தானார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி வ ராஜிஊன்.
பொதக்குடி மத்ரஸாவிற்கு வருகை
பெரம்பூர் ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மதார் ஹஜ்ரத் அவர்கள் வபாத்தின் போது
ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்கள் அமீர்பாஷா ஹஜ்ரத் அவர்கள் வீட்டில்தான் இருந்தார்கள். இந்த மறைவு செய்தி அறிந்ததும், பொதக்குடி மத்ரஸா அந்நூருல் முஹம்மதிய்யாவின் முதல்வர் அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்கள் அன்னாரை ஜியாரத் செய்வதற்காக சென்னை வந்தார்கள். அச் சமயம் அங்கிருந்த ஹைதராபாத் ஸுபி நாயகமவர்களை சந்தித்து மத்ரஸாவிற்கு வருகைதர அழைப்பு விடுத்தார்கள். அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டார்கள் ஹைதராபாத் ஸுபி நாயகமவர்கள்.
அதன்படி பொதக்குடி வந்த ஷெய்கு
நாயகமவர்களை அப்துல்கரீம் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றார்கள். தங்கள் மாணவர்களைப் பார்த்து, 'உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்குமோ அவ்வளவு நேரத்தை ஷெய்கு அவர்களிடம் செலவிட்டு அன்னாரிடம் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்கள். மேலும் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புஸூஸுல் ஹிகம் கிதாபை ஓதிக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து, முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களே வந்துள்ளர்கள்; அவர்களை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்கள்.
பொதக்குடி மத்ரஸாவிற்கு வருகை தந்த பொழுது மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, கண்ணியத்தோடு வரவேற்று மாணவர்களை ஒவ்வொருவராக முஸாபஹா செய்திட பணித்தார்கள்.
காயல் ஸுபி ஹழ்ரத்
ஆனால்,ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்கள் ,மாணவர்கள் வரிசையாக நிற்கட்டும் , நான் சென்று ஒவ்வொருவராக முஸாபஹா செய்கின்றேன் என்றார்கள்.காயல் ஸுபி ஹழ்ரத் அவர்களிடம் வந்த பொழுது ,முஸாபஹா செய்து உர்துவில் "ஹைதராபாத் ஆவோ - நீங்கள் ஹைதராபாத் வாருங்கள் " என்றார்கள்.காயல் ஸுபி ஹழ்ரத் அவர்கள் தமது மனதில் ஹைதராபாத் ஸுபி நாயகத்திடம் தனியாக பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இவ்வழைப்பு வந்ததும் ஆனந்தமடைந்தார்கள்.
இவர்களை அடுத்து நின்று கொண்டிருந்த இலங்கை அஹமது மீரான் ஸுபி ஹழ்ரத் அவர்களிடம்,முஸாபஹா செய்து விட்டு ,இவர்களுக்கு உருது தெரியாது என்பதை அகப்பார்வையில் கொண்டு அறிந்து , அரபியில் ' அதுரீது அன் தஜீஅ இலா ஹைதராபாத் ' - ' ஹைதராபாத் வருவதற்கு நீ நாடுகின்றாயா ? “என்று கேட்டார்கள் .அதற்கு அஹ்மது மீரான் ஸுபி நாயகம் ஆம் என்று பதிலளித்தார்கள்.
இதைப் பார்த்த மாணவர் அபூபக்கர் என்பவரும் நான் வரட்டுமா? என்று வினவியபொழுது, நீ வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் .இவர் பிற்காலத்தில் அவ்லியாக்களை நிந்தித்தவராக இருந்து,பைத்தியம் பிடித்து ,தன் கையினால் கண்ணை குத்தி இறந்து போனார் என்று காயல் ஸுபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள் .
இவர் அவ்லியாக்களை நிந்தித்து வருவார் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் வரவேண்டாமென்று ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் போலும்.இறைவனை அறிந்த மகான்களுக்கு இது தெரிய வருமென்பதும்,
இப்படிப்பட்ட மறுப்பாளர்களுக்கு தீய முடிவு ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காயல் ஸுபி ஹழ்ரத் அவர்களும், அஹ்மது மீரான் ஸுபி ஹழ்ரத் மதராஸாவில் ஓதி முடித்த பின்னர் ஹைதராபாத் செல்ல தயாரானார்கள்."நாங்கள் எப்போது தங்கள் சன்னிதானத்திற்கு வரவேண்டும்? “என்று அனுமதி கேட்டு ஹைதராபாத் ஸுபி நாயகத்திற்கு தபால் எழுதினார்கள்.”பாபுனா மப்தூஹுன் அபதன்" - நம் வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது என்று பதில் தபால் வந்தது.
காயல் ஸுபி ஹழ்ரத் அவர்களிடம் தபால் தொடர்பு கொள்ளும்போது "இலாமன் இஸ்முஹு இஸ்மி - என்பெயர் பெற்றவருக்கு” என்று ஹைதராபாத் ஸுபி நாயகம் எழுதுவார்கள்.
இதைப்பற்றி காயல் ஸுபி நாயகம், ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களைப் பற்றிய புகழ் பாமாலையில்
"எஜமானே! தாங்கள் உங்கள் இந்த அடிமையைப் பார்த்து, என் பெயர் விடப்பட்டவனே! என்று கிருபையாக அழைத்தீர்கள் .இந்த உங்கள் பையல் பெரும் பாவ தோஷங்கள் எல்லாம் செய்துவிட்டு கவலையில் ஆழ்ந்து கிடக்கிறான் .அவன்பால் இரக்கம் வையுங்கள்! உங்களுடைய ஒரு பார்வை என்னுடைய பாவங்கள் எல்லாம் அழித்து சுத்தமாக்க போதுமானது.அல்லாஹ்வின் கலீஃபா அப்துல் காதிர் ஸுபி நாயகமே! “என்று பாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மகான்கள் ஹைதராபாத் பயணம்
இணைபிரியா இரு தோழர்கள் ஹைதராபாத் புறப்பட்டு சென்றனர்.முன்பின் அறிமுகமில்லாத ஊரில் இருவரும் இரயிலை விட்டிறங்கி அங்கே நின்றுகொண்டிருந்த போலீஸ் ஒருவரிடம் ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களின் முகவரியைக் காட்டி போகும் வழியைக் கேட்டனர்." ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர்
அவர்களிடம்தானே போக வேண்டும்,வாருங்கள் .நான் அழைத்துச் செல்கின்றேன் " என்று சாமான்களை உடனெடுத்துக் கொண்டு அந்த போலீஸ் முன்னால் செல்ல ,இவர்கள் பின்னால் சென்றனர் .
ஸுபி நாயகத்தின் இல்லத்தில் அற்புதம்
காயல் ஸுபி ஹழ்ரத் அவர்களுக்கு பைஅத்தும்,கிலாஃபத்தும் வழங்கல்
ரியாழா - பயிற்சிகள் முடிந்ததும் ஹிஜ்ரி 1346 ரஜப் பிறை 5 (29-12-1927) ல் ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்கள், காயல் ஸுபி ஹழ்ரத் அவர்களுக்கு பைஅத்தும்,கிலாபத்தும் கொடுத்தனர்.கிலாஃபத் கொடுக்கும் போது காயல் ஸுபி நாயகம் அவர்கள் நினைக்கிறார்கள் , "இத்துறையில் நாம் ஈடுபட்டால் ஊர்மக்கள் இந்த பகீர் கோலம் இவருக்கு எதற்கு ? கம்பெனியார் வீட்டு பிள்ளை வியாபாரம் செய்யாது இப்படி போய் விட்டாரே? என்று ஊர்மக்கள் நகைப்பார்களே! இதனால் ஹலாலான வியாபாரம் செய்வதற்கும் அனுமதி கிடைத்தால் நல்லதாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
இதனை மனக்கண்ணால் அறிந்த ஞானமகான் ஹைதராபாத் ஸுபி நாயகம் உடனே "அத்துன்யா லிழ்லுன் ஸாயிலுன் " - நீங்கி போகும் நிழல் போன்ற துன்யாவை நாடுகிறார்களே " என்று சொல்லி எழுதுவதை நிறுத்தி விட்டு வாருங்கள், தொழுகைக்கு போவோம் என்றழைத்து தொழுகைக்கு போய் விடுகிறார்கள். தொழுகையை முடித்துவிட்டு வந்து தொடராக எழுதுகின்றார்கள்: அத்தியாவசியமான சொந்த செலவுகளுக்கும், உற்றார்,
உறவினர்கள், ஏழைகள்,
அனாதைகளுக்கும் செலவளிக்க வேண்டுமானால் ஹலாலான சம்பாத்தியம்,வியாபாரம் செய்து கொள்ளலாம் என்று எழுதி முடிக்கிறார்கள் .
காயல்பட்டணத்திற்கு ஹைதராபாத் ஸுபி நாயகம் வருகை
ஹிஜ்ரி 1349 ஜுமாத்துல் ஊளா பிறை 22 (15-10-1930) புதன்கிழமை அன்று காயல் ஸுபி நாயகம் அவர்கள் தோல்ஷாப் முஹம்மது அப்துல்லாஹ் நாச்சி என்ற பெண்ணரசியை மணமுடித்தார்கள். இம்மண விழா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க ஹைதராபாத் ஸுபி நாயகம் காயல்பட்டணம் வருகை தந்தார்கள் . மாலை சூடி மணவாளராக இருக்கும் தம் முரீதும், கலீஃபாவாகவும் இருக்கும் காயல் ஸுபி ஹழ்ரத் நாயகம் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்து துஆ செய்தார்கள். மேலும் "உங்களுக்கு இன்னொரு மாலை காத்திருக்கிறது” என்றும் முன்னறிவிப்பும் செய்தார்கள்.
1932-ல் இம்மனைவி இறந்துவிடவே, தம் குருநாதருடைய முன்னறிவிப்பின்படி இரண்டாவதாக தோல்ஷாப் மகுதூம் பாத்திமா என்ற மாதரசியை மணமுடித்தார்கள்.
வெளிநாடுகளுக்கு பயணம்
கொழும்பு,
இரங்கூன்,சிங்கப்பூர்,மலாயா,ஜாவா,சுமத்ரா, நாடுகளிலுள்ளவர்களும் இந்த தரீகாவின் தொடர்பை ஏற்படுத்தி பாக்கியம் பெற்றுக் கொண்டுள்ளனர். பர்மாவாசிகளின் அழைப்பை ஏற்று இருதடவை ரங்கூனுக்கும் போய் வந்துள்ளார்கள். ரங்கூனில் இருக்கும் போதுதான்
"அஸ் ஸுலூக் - இறைவழி
நடை மெஞ்ஞான அகமிய
விளக்கம் "என்னும் நூலை ஷெய்குமார்களின் எந்தக் கிரந்தங்களிலிருந்தும் உதவி பெறாமல் மனதில் உதித்தவற்றை,கையிலுள்ள பேனா முனையினால் எழுதுகின்றேன் "என்று எழுதி ஹிஜ்ரி 1349 ஷவ்வால் பிறை 13 , (13-03-1931) ல் முடித்தார்கள் .
அதில் எல்லா தரீக்காக்களின் வழிபாடுகள்,நடைமுறைகள் அனைத்தையும் கோடிட்டு காட்டி ,கடைசியாக அதன் அதன் சாராம்சங்களையும் அலசி ஆராய்ந்து எழுதி விட்டு,அவற்றிலுள்ள சாராம்சத்தை சுட்டிக் காட்டியபின் ,அவற்றிலுள்ள சத்தாக ,சாராக இருக்கும் "முராக்கபா" முறையை தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார்கள் . அவர்களுக்கும், அதை அழகு தமிழில் மொழிபெயர்த்து தந்த காயல் ஸுபி நாயகத்திற்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் உரித்தாகுக!
ஹைதராபாத் ஸுபி நாயகம் எழுதிய நூற்கள்
1.
புஙஆனேராஸ் - இரகசியத்தின் இறைகானம்
"ராஸ் - இரகசியம்” என்று தங்களுக்கு புனைபெயர் வைத்து பாடிய மெஞ்ஞான அரபி,பார்சி,உர்து பாடல்கள் அடங்கிய மெஞ்ஞான சுரங்கம். இந்நூலை அல்லூர் என்னும் ஊரின் ராஜா ராஜராஜேஸ்வர பாரத் சர்ஜெ சிங்க அவர்களின் பொருளுதவியால் ராஜாவின் போட்டொவுடனும்,
அரசாங்க முத்திரையுடனும்,
ஹைதராபாத் ஸுபி நாயகத்தின் நன்றியரையுடனும் ஹிஜ்ரி 1339 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
2. அஸ்ராருல்
குர்ஆனிய்யா
3. அத்தகாயிக்கு
4.
அல்ஹக்
5.
அல்ஹக் -1
6.
அஸ்ஸுலூக்
7.
அல்ஹகீகா
அத்தகாயிக்கு,
அல்ஹக், அல்ஹக் -1, அஸ்ஸுலூக் ஆகிய நூற்களை ஷெய்கனா காயல் ஸுபி ஹழ்ரத் நாயகம் அவர்களும், அல்ஹகீகா நூலினை காயல் ஸுபி ஹழ்ரத் நாயகம் அவர்களது கலீஃபா ஷெய்கனா ஸெய்யத் முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி ஸுபி காதிரி அந்தரூத்தி அவர்களும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். மற்ற நூற்கள் வெளியே தெரியாமலும், அச்சு ஏறாமலும் போய்விட்டன.
மெஞ்ஞானிகளான ஸுபியாக்களின் கருத்துக்கள் சங்கராச்சாரியாரின் கருத்துகளைப் போன்றே இருக்கின்றன என்று 'லிபரல் முஸல்மான்' என்ற புனைபெயரில் ஒருவன் ஸுபியாக்களை சாடி உருது பத்திரிக்கையில் எழுதியிருந்தான். அதை முரீதீன்களில் ஒருவர் ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களிடம் காட்டிய பொழுது உடனே அதற்கு மறுப்பாக “அல்
ஹக் " என்ற நூலை உர்துவில் எழுதினார்கள்.
வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கைக்குரிய அல்லாமா அப்துல் ஜப்பார் ஹழ்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் ஸுபியாக்களின் கருத்துக்கள் தவறானவை என்ற எண்ணத்தில் இருந்து வரும் சமயம் இந்த 'அல்ஹக்'
என்ற நூல் அவர்கள் பார்வையில் பட்டதும் அல்ஹக் -உண்மையை அறிந்து இப்படிப்பட்ட ஞானமகான் இக்காலத்தில் இருக்கிறார்களா? என்று வியந்து சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரிக்கு விரைந்து சென்று தெளிவடைந்து தீட்சை பெற்றார்கள். அதோடு,
தமிழகத்தின் மதரஸாக்களில் பெரும்பாலான உலமாக்கள் உர்து பாஷை தெரியாமல் இருப்பதால் இப்படிப்பட்ட அரியபெரிய மெஞ்ஞான கருத்துக்கள் நிரம்பிய அல்ஹக் நூலை படித்து உண்மையை உணர முடியாதே, இந்நூல் அரபி பாஷையில் இருந்தால் இவர்களும் பயன்பெறுவார்களே என்ற நன்னோக்கத்தில் அதை அப்படியே அரபி பாஷையில் மொழிபெயர்த்து ஷெய்கு நாயகத்தின் சன்னிதானத்தில் அர்ப்பணித்து இமாமுல் ஆரிபீன் ஹைதராபாத் ஸுபி நாயகத்தை அரபியில் புகழ்பாக்கள் படித்து ஆசீர்வாதம் பெற்றார்கள்.
அல்லாமா அப்துல் ஜப்பார் ஆலிமவர்கள் அன்னாரைப் போற்றிப் புகழ்ந்து 'அலா அய்யுஹ்ஷ் ஷெய்குல் வலீ………' என்று தொடங்கும் அரபு கஸீதா ஒன்றினை இயற்றினார்கள். அந்த கஸீதாவில் ஹைதராபாத் மெஞ்ஞானப் பெருவேந்தரைக் குறித்து –மேன்மைமிக்க ஷெய்கு வலியுல்லாஹ் அவர்களே! இக்கால மார்க்க அறிஞருள் நிகரற்ற சம்பூரண பிரகாசமுடைய சூரியனாகத் தாங்கள் இலங்குகின்றீர்கள். அகமியங்களுடைய ஞானப் பெருமான் தாங்கள். வலிமை நிறைந்த ரப்புடைய மழ்ஹர் தாங்கள்!
ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி அவர்களுடைய திருப்பெயர் தாங்கி இருக்கிறீர்கள். எந்த அரசனும் பெரிய மனிதனும் சீமானும் தர இயலாத மாபெரும் பேரின்பப் பாக்கியங்களை எங்களுக்கு வழங்கி உள்ளீர்கள். உங்களிடத்தில் அவ்லியாக்களுடைய ரூஹ்களெல்லாம் வருகின்றன! எனப் போற்றிப் பாடுகிறார்கள், அப்துல் ஜப்பார் ஹலரத்!
உர்து,
அரபி நூற்களான இவை இரண்டையும் வைத்து காயல் ஸுபி நாயகம் அவர்கள் அழகு தமிழில் மொழிபெயர்த்து "அல்
ஹக் " என்று காயல்பட்டணம்,ஹிஸ்புல்லாஹ் சபை, ஸுபி மன்ஸில் வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள் .
முன்னாள் வெளியிட்ட அல்ஹக் என்ற நூலுக்கும்,
இந்த அல்ஹக் நூலுக்கும், அல்ஹக் என்று பொதுவாக வெளியிட்டால் பிசகுதல் ஏற்பட்டு விடுமென்று காயல் ஸுபி நாயகம் அவர்கள் முதன்முதலாக ஹிஜ்ரி 1376 ரஜப் பிறை 27 (28 -02- 1957) ல் வெளியிட்டுள்ள அல்ஹக் என்ற நூலுக்கு எண்-1 ஒன்று என்றும்,
இந்த அல்ஹக் என்பதற்கு எண் இல்லாமல் இரண்டாம் பதிப்பு ஹிஜ்ரி 1414 ரஜப் பிறை 27 (10-01-1994) ல் நாங்கள் ஹிஸ்புல்லாஹ் சபை மூலம் வெளியிட்டுள்ளோம் .அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸுலூக் எனும் நூலை எவ்வித நூற்களின் உதவியின்றி உள்ளத்தில் உதித்த கருத்துக்களை பேனா வழியாக வெளியாக்கியிருக்கிறது போல் அவர்கள் உள்ளத்தில்,
ஊற்றில் நீர் கொப்பளிப்பது போன்று வரும் கருத்துக்களையே உதாரண உவமைகளை சுட்டிக் காட்டி எந்த நூற்களிலும் காண முடியாதவைகளையே பயான் செய்தும், எழுதியும் வெளியாக்கி இருக்கிறார்கள்.
கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மெஞ்ஞான இரகசியங்களைத் தெள்ளத் தெளிவாக பகிரங்கமாக சொன்னார்கள் .சங்கைமிகு ஷெய்குல் அக்பர் இமாம் இப்னு அரபி
ரலியல்லாஹு அன்ஹு,ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு போன்ற மகான்களை அன்றைய காலத்தார்கள் ஆட்சேபணை செய்தது போல் இவர்களை எவரும் ஆட்சேபணை செய்ய இயலாது வாய் அடைத்து போய்விட்டார்கள் . அந்த அளவுக்கு முழு சக்தி பெற்றவர்களுக்காக கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் இருந்தார்கள்.
அப்துல் காதிர் என்ற திருநாமம் பெற்ற ஹைதராபாத் ஸுபி நாயகம் வெட்ட வெளிச்சமாக மெஞ்ஞானத்தை வெளிப்படுத்தினார்கள். எவரும் ஆட்சேபணை செய்ய முடியாமல் போய்விட்டது.
கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களுக்குப் பிறகு இவ்வாறான சக்தி பெற்ற எந்த மகான்களும் இவர்களுக்கு நிகராக தோன்றவில்லை. இதையேதான் ஷெய்கனா காயல் ஸுபி நாயகம் அவர்கள் ஹைதராபாத் ஸுபி நாயகம் அவர்களுக்கு சாற்றிய ஸலாம் பைத்தில்,
நாயகமே! உங்களுக்கு நிகர் ஒருவரும் அல்ல. உங்கள் திருநாமம் அரசர் அப்துல் காதிர் ஆக இருக்கும் .ஆஹா! நல்லபெயர், ஆளுக்கு தகுந்த பெயர், எங்கள் ஷெய்கு நாயகமே! ஸலாம் அலைக்கும் என்று பாடியுள்ளார்கள்.
ஷம்ஷியாபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு புலம்பெயர்தல்
ஷம்ஷியாபாத்திலிருந்து, ஹைதராபாத்திற்கும் சுமார் 45 கி.மீட்டர் தொலை தூரமிருக்கின்றது. ஹைதராபாத் ஸுபி நாயகத்தின் அந்திபமான காலத்தில் ஹைதராபாத் முரீதீன்கள் சொன்னார்கள்: நாயகமே! அதிகமான முரீதீன்கள் ஹைதராபாத்தில் தான் இருந்து வருகிறார்கள். உங்களை சந்திக்க வந்து போவது மிக கஷ்டமாக இருக்கிறது .ஆகையினால் ஷம்ஷியாபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு வந்து விடுங்கள் .உங்களை கவனித்து ஊழியம் செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்றார்கள். இதை ஏற்று ஹைதராபாத்திற்கு மனைவி மக்களுடன் வந்து விட்டார்கள்.
அன்று அரசபீடத்திலிருந்த அரசன் ஆஸிப் ஜாஹ் ஹப்தம் அவர்கள் மிஸ்ரிக்கன்ஜ் என்னும் பகுதியில் ஸுபி நாயகம் அவர்கள் அடக்கமாயிருக்கும் இடத்தையும் அதன் சூழுள்ள நிலத்தையும் மானியமாக கொடுத்து தங்கவைத்தார்.
இதே மிஸ்ரிகன்ஜ் எனும் இடத்தில மனைவி மக்களுடன் கடைசி காலத்தில் வாழ்க்கை நடத்தி ஹிஜ்ரி 1356 ஷவ்வால் பிறை 10, (14-12-1937) செவ்வாய்கிழமை மறைந்து மங்கா பேரொளியாக இருக்கிறார்கள். வந்தோருக்கெல்லாம் அருள் மழை பொழிந்து நாட்ட,
தேட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எண்ணற்ற இறைநேசர்களுக்கும், ஞானவான்களுக்கும் ஷெய்காக திகழ்ந்த ஷெய்கு முஹம்மது அப்துல்காதிர் ஸுபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்
பைஅத்துப் பெற்று பாக்கியம் பெற்ற சிலகுறிபிடத்தக்கவர்கள்:
·
சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி மதார் சாகிபு ஆலிம் அவர்கள்
·
வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி அப்துல் ஜப்பார் ஆலிம் அவர்கள்
·
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல் சாகிப்
·
திண்டுக்கல் மௌலானா மௌலவி அமீர் பாட்சா ஆலிம் அவர்கள்
·
தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை ஸ்தாபகர் தென்காசிமேடை முதலாளி அப்துர் ரஹ்மான் சாகிப்
·
தஞ்சை மாவட்டம் கொடிக்கால்பாளையம் அ.த.அப்துல் மஜீது ஸுபி அவர்கள்
அஸ்ஸுலூக் என்னும் ஹைதராபாத் ஸுபி நாயகம் எழுதிய நூலின் கடைசியில் எழுதிய,
ஏற்றுக் கொள்ளப்பட்ட, துஆவை பரக்கத்தை நாடி அதை அப்படியே எழுதி அவர்களது வரலாற்று சுருக்கத்தை நிறைவு செய்கின்றேன் .குற்றம்,
குறைகள் இருந்தால் அவர்கள் மன்னிப்பார்களாக! நாம் அடிமைகள் தானே, எஜமான்கள் மன்னிப்பது அவர்களது நற்பண்புகள்தான். இந்த அடிமையை அவர்களது விஷேச அடிமைகளில் சேர்த்துக் கொள்வார்களாக! ஆமீன்.
" இந்த தரீக்காவில் சேர்ந்த தாலிபீன்களுக்கும்,அன்பர்களுக்கும் ,அவனுடைய கிருபை ,உபகாரம் ,அன்பு ,அருளைக் கொண்டு எக்காலமும் ,அழகான ஒளிமயமான,ஷரீயத்தின் பேரில் தரிப்படுத்தி வைப்பானாக ! எல்லா ஷெய்குமார்களுடைய பைளு,பரக்கத்து ஒளிகளைக் கொண்டு நம்முடைய அகத்தையும் ,புத்தியையும் ,ஆன்மாவையும் (கல்பையும் ,அக்லையும்,ருஹையும் ) மற்றும் சகல லதீபாக்களையும் பிரகாசமாக்கி வைப்பானாக ! மேலும் நாயனே! எங்களை எங்கள் தீனிலும், துன்யாவிலும் யாரளவிலும் தேவையானவர்களாக ஆக்காதிருப்பாயாக! எங்கள் அனைவர்களுடைய முடிவையும், அழகான முத்திரங்கமாய் ஆக்கி வைப்பாயாக! உன்னுடைய ஹபீப் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் இவற்றை கபூல் செய்வாயாக! “
ஸலவாத்தும்,
ஸலாமும் அவர்கள் பேரிலும், அவர்களது கிளைஞர்கள்,
தோழர்கள் அனைவர்கள் பேரிலும் உண்டாவதாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி
முதல்வர் அல்லாமா அப்துல் ஜப்பார் ஹழ்ரத் அவர்கள் இமாமுல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன்
அஷ் ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸுபி காதிரி ஹைதராபாதி அவர்கள் மீது இயற்றிய புகழ்
பா!
இது பல உயர் பதவிகளையும்,கீர்த்திகளையும்
பூண்டவர்களும் அனந்த புண்ணிய பாக்கியங்களைப் பெற்றவர்களுமான மவ்லானா மவ்லவி ஸூபி முஹம்மது
அப்துல் காதிர் அவர்களது திருச்சமுகத்தளவில் (அனுப்பப்பட்ட) காணிக்கையாகும் .
குருவே! வலியே! சக்தி வாய்ந்த ஆதாரமே!
உயர்த்தியான ரப்பு - போஷகன் உங்களுக்கு
ஞானத்தைக் குடிப்புக்குப்பின் குடிப்பாக, புகட்டி உங்கள் நெஞ்சை விசாலமாக்கினான்.
ஆகையினால் நீங்கள் அவனுடைய வரிசையினால்
ஞான சமுத்திரமாக ஆகிவிட்டீர்கள். உங்களின் ஞான சமுத்திரமானது ஆழிய சமுத்திரமாகும்
உங்கள் சந்நிதானத்தளவில்தான் (ஞானத்தைக்
கற்றுக் கொள்வதற்காக) வாகனங்கள் கட்டப்படும். உங்கள் வாயிலிலே அதிவேகமாகச் செல்லும்
ஒட்டகங்களைக் கால்மடிக்கச் செய்யப்படும்.
நீங்கள் இக்காலத்து அறிஞர்களுக்கு (ஞான)
சூரியனாகும். சூரியனுக்கு பிரகாசத்தில் நிகரானது உண்டோ?
ஞான இரகசியங்களெல்லாம் உங்களளவில் வந்து
மீள்கிறது. நீங்கள் இரகசிய ஞானங்களைக் கொண்டு பாக்கியம் பெற்றவர்களாகும்
நீங்கள் தத்துவமுள்ள போஷகனின் (அல்லாஹ்வின்
மழ்ஹராக - உதயஸ்தானமாயிருக்கும் நம்முடைய குருநாதர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி)
அவர்களின் பெயர் நாமம் சூட்டப்பட்டவர்களாயிருக்கும்.
நீங்கள் ஒரு அரசரோ அல்லது ஒரு பெரியவரோ
அல்லது ஒரு தன்வந்தரோ கொடுக்காத நாட்டங்களையெல்லாம்
எங்களுக்கு கொடுத்தீர்கள்.
பகைவன் பேரில் அல்ஹக்கு -சத்தியம் என்னும்
வாளைக் கொண்டு அடர்ந்தேறி, அழிச்சாட்டியக்காரன் செய்த ஆட்சேபனை அத்தனையையும் விரட்டி
முறியடித்தீர்கள்.
உங்களில் அவ்லியாக்களின் ஆன்மாக் (களின்
அருள்) களெல்லாம் இறங்கியிருக்கிறது.நீங்கள் (அகத்) தெளிவான ஸுபிய்யான இக்காலத்திய
ஜுனைது (ரலியல்லாஹு அன்ஹு) வாக இருக்கும்.
ஆகவே ஹக்கு சத்தியம் பகல் வெளியானது போல்
ஜொலித்துக் கொண்டு வந்தது. அசத்தியம் தலைகுப்புற விழுந்தது. மறைவாக இருந்து வெளியாகிவிட்டது.
எனவே நீங்கள் தர்க்க வாதத்தில் சிங்கமாகும்.'ஹக்கு
-சத்தியம் மிகைக்கவே செய்யும்.அது மிகைக்கப்பட மாட்டா '.இந்த வார்த்தையானது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது போல் உண்மையாகும்.
எப்படி? (மிகைக்காது) இஃது (அல்ஹக்கு என்னும்
நூல்) உங்களின் அழகான, அபூர்வமான கோர்வையாகும். பலமான சொல்லாகிறது பலசாலி சொன்னதுவேயாகும்.
எனவே (என்) ஆசை மேலீட்டினால் ' அல் ஹக்கு
' என்னும் நூலுக்கு அழகான அரபி பாஷை என்னும் உடையை அணிய வைத்தேன். (அரபியில் மொழி பெயர்த்தேன்)
அதை உங்களளவில் என் மனச் சந்தோஷத்தோடு காணியாகையாகச்
சமர்ப்பிக்கின்றேன்.
அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக்
கொள்ள நீங்கள் தகுதியானவர்கள்.
(ஏன்) நீங்கள் பக்கீரின் உடையில் கல்பு
- அகம் விசாலமான தனவந்தர். இப்படித்தான் நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இருந்தார்கள்.
பலவீனமான எறும்பு அனுப்பிய காணிக்கையைப்
போன்று நான் (இதை) காணிக்கையாக அனுப்புகிறேன். நபி (ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்
ஒப்புக் கொண்டது போல் நீங்களும் இதை ஒப்புக் கொள்ளுங்கள்.
எங்களின் போஷக (னான நாய) ன் உங்களுக்கு
கண்ணியம்,சிறப்புகளோடு பல நன்மைகளுடன் உங்களை எங்களில் நேமமாக நிலைத்திருக்கச் செய்வானாக
!
உங்களை கால விரோதங்களை விட்டும், தீமைகளை விட்டும் காப்பாற்றி உயர்த்தியான நாயன் உங்களை உங்கள் கால்மக்களைக் காண உயர்வாக்கி வைப்பானாக!