உம்முல் முஃமினீன் அன்னை கதீஜத்துல் குப்ரா "رضي الله عنها :
Thursday, 22 April 2021
Friday, 16 April 2021
ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضی الله عنها
🌹 சுவனத்து பெண்களின் தலைவி மாதர்க்கரசி அன்னை பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها 🌹
ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்கள் அருமை நாயகம் ﷺ மற்றும் உம்முல் முஃமினீன் அன்னை கதீஜா நாயகியார் رضي الله عنها ஆகியோரது நான்காவது மகளார் ஆவார்கள்.ஸஹ்ரா( ஒளிரும் வதனத்தை உடையவர்) ,பதூல் (உலக இன்பங்களிலிருந்து விலகியிருப்பவர்) ,தாஹிரா (தூய்மையும்,பணிவும் மிக்கவர்) என்பன அன்னை பாத்திமா நாயகியாரது சிறப்பு பெயர்கள்.
பால்ய காலம் முதலே அன்னை பாத்திமா ஸஹ்ராرضي الله عنها அவர்கள் எம்பெருமானார் ﷺ அவர்கள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு ஐந்து வயது எட்டிய பொழுது தாஹா ரஸூல் ﷺ அவர்கள் தங்களது நுபுவத்தை வெளிப்படுத்தினர்.அன்னையார் அன்னை கதீஜா நாயகியார் رضي الله عنهاஅவர்கள் ஸெய்யிதா பாத்திமா رضي الله عنها அவர்களுக்கு எம்பெருமானார் அவர்களது இறைத்தூதருக்குரிய பண்புகளை விளக்கினர்.ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنهاஅவர்கள் அதுமுதல் எம்பெருமானார் ﷺ அவர்கள் மீது அளவில்லா நேசம் கொண்டனர்.அவர்கள் நாயகம் ﷺ அவர்களோடு இணைந்து மக்கா முகர்ராமாவின் குறுகிய சந்துகளில் நடந்து கஃபதுல்லாஹ்விற்கு செல்லவோ அல்லது இஸ்லாத்தின் முன்னோடிகள் இரகசியமாக கூடும் இடங்களுக்கு செல்வார்கள்.
ஒரு முறை பால்யத்தில் ஸெய்யிதா பாத்திமா رضي الله عنها அவர்கள் மஸ்ஜிதுல் ஹரமிற்கு நாயகம் ﷺ அவர்களோடு இணைந்து சென்றார்கள்.நாயகம் ﷺ அவர்கள் கஃபாவின் முன் நின்று தொழுதார்கள்.குரைஷிகளில் சிலர் எம்பெருமானார் ﷺ அவர்களைச் சூழ்ந்தனர்.உக்பா பின் அபீ முஅய்த் என்ற வஞ்சகன் வெட்டப்பட்ட மிருகத்தின் கழிவுகளை கொண்டு வந்து உயர்நபி ﷺ அவர்களது தோளின் மீது வீசினார்.ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்கள் அதனை நாயகம் ﷺ அவர்கள் மீதிருந்து அப்பறப்படுத்தினர்.பின்னர் உறுதியான மற்றும் கோபமான குரலில் அபூ ஜஹ்ல் மற்றும் அவனது கூட்டாளிகளை எச்சரித்தனர்.திடுக்குற்ற அவர்கள் மறுவார்த்தையே பேசவில்லை.
உம்முல் முஃமினீன் அன்னை கதீஜா நாயகியார்رضي الله عنها அவர்களது மறைவிற்குப் பின்னர் ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்கள் எம்பெருமானார் ﷺ அவர்களது தேவைகளை கவனித்து அதிகமாக ஆதரவளித்தனர்.ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்கள் எம்பெருமானார் ﷺ அவர்களை கவனித்துக் கொள்ளும் பாங்கு கண்டு மக்கள் அவர்களை 'உம்மு அபீஹா' (தந்தையின் அன்னை) என்றழைத்தனர்.
ஹழ்ரத் ஸெய்யிதினா மிஸ்வார் பின் மக்ரமா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் நவின்றார்கள் :
فاطمة بضعة منى ، فمن أغضبها أغضبنى
' பாத்திமா என்னில் ஒரு பகுதியாகும்.அவருக்கு தொந்தரவு அளித்தவர் என்னை தொந்தரவுபடுத்தினார் மற்றும் அவரை புண்படுத்தியவர் என்னை புண்படுத்தினார்' .
[ 📖ஸஹீஹ் புஹாரி, ஹதீஸ் எண்:3767 ]
கண்மணி நாயகம் ﷺ அவர்கள் நவின்றார்கள் :
حسبك من نساء العالمين أربع مريم بنت عمران و آسية امرأة فرعون و خديجة بنت خويلد و فاطمة بنت محمد
' இவ்வுலகில் தலை சிறந்த பெண்மணிகள் நால்வர் : இம்ரானுடைய மகளார் அன்னை மர்யம் ,பிர்அவ்னுடைய துணைவியார் அன்னை ஆசியா ,உம்முல் முஃமினீன் அன்னை கதீஜா நாயகியார் மற்றும் முஹம்மது ﷺ அவர்களது மகளார் ஸெய்யிதா பாத்திமா '.
[ 📖 முஸ்தத்ரக் அல் ஹாக்கீம்,பாகம் 4,பக்கம் 262,ஹதீஸ் எண்: 4745]
உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீகாرضي الله عنها அவர்கள் கூறினார்கள் :
أقبلت فاطمة تمشي كأن مشيتها مشي النبي صلى الله عليه وسلم، فقال: “مرحباً بابنتي”. ثم أجلسها عن يمينه، أو عن شماله
' நான் அல்லாஹ்வின் படைப்புகளில் கண்மணி நாயகம் ﷺ அவர்களை உள்ளபடியே அவர்களது பேச்சில் ,உரையாடலில் ,அமர்தலில் ஒத்திருப்பதாக ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்களைத் தவிர வேறு எவரையும் கண்டதில்லை.நாயகம் ﷺ அவர்கள் ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ராرضي الله عنها அவர்கள் வருவதைக் கண்டால் அவர்களை வரவேற்று ,எழுந்து நின்று ,முத்தமிட்டு,அவர்களது கையைப் பிடித்து தாம் அமர்ந்திருந்த இடத்தில் அமரச் செய்வார்கள்.'
[ 📖 இமாம் புஹாரி ,அல் அதப் அல் முப்ரத் ,பக்கம் 406,ஹதீஸ் எண்: 421]
எம்பெருமானார் ﷺ அவர்களது அடிச்சுவற்றை அடியோட்டிய தமது வாழ்வை அமைத்தனர் மாதர்க்கரசி ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா்رضي الله عنها .எளியோரிடம் அன்பு பாராட்டினர்.பலமுறை தாம் பசித்திருந்து ஏழைகளுக்கு உணவளித்தனர்.உலக வாழ்வின் இன்பங்களின் மீது பற்றற்றிருந்தனர்.
ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنهاஅவர்களுக்கும்,அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலி இப்னு அபிதாலிப் كرم الله وجهه அவர்களுக்கும் திருமணம் நிகழ்வுற்றது.அது போது ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنهاஅவர்களுக்கு 19 வயதும்,அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலி இப்னு அபிதாலிப் كرم الله وجهه அவர்களுக்கு 21 வயதும் பூர்த்தியாயிருந்தது.எம்பெருமானார் ﷺ அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தினர்.
ஒர் நாள் ஸெய்யிதினா அலி இப்னு அபிதாலிப் كرم الله وجهه அவர்கள் ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنهاஅவர்களை நாயகம் ﷺ அவர்களிடம் சென்று வீட்டு வேலைக்காக பணிப்பெண்ணை தர வேண்டினார்கள்.ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنهاஅவர்கள் கண்மணி நாயகம் ﷺ அவர்களிடம் கேட்ட பொழுது,ஏந்தல் நபி ﷺ நவின்றனர் :
ألا أخبرك ما هو خير لك منه ، تسبحين الله عند منامك ثلاثا وثلاثين ، وتحمدين الله ثلاثا وثلاثين ، وتكبرين الله أربعا وثلاثين
' நீவிர் கேட்டதை விட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு தரட்டுமா ? ஹழ்ரத் ஜிப்ரீல் என்னிடம் உரைத்ததை உங்களிடம் கூறுகின்றேன்.நீங்கள் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும்,அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும்,அல்லாஹு அக்பர் 34 முறையும் ஓதுங்கள் ' .
[📖ஸஹீஹ் புஹாரி ,ஹதீஸ் எண்: 5362]
இதுவே ' தஸ்பீஹ் பாத்திமா' என்றழைக்கபடுகின்றது.இதனை வழமையாக ஓதுபவர் மீது அருள் இறக்கப்படுகின்றது.
திருமண பந்தந்தின் விளைவாக ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنهاஅவர்கள் ஸெய்யிதினா இமாம் ஹஸன் رضي الله عنه மற்றும் ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் رضي الله عنه ,ஸெய்யிதினா முஹ்சின் رضي الله عنه(இவர்கள் குழந்தையாக இருக்கும் போதே மரணம் எய்தினர்)மற்றும் ஸெய்யிதா ஜைனப்رضي الله عنها ,ஸெய்யிதா உம்மு குல்ஸும் رضي الله عنها ஆகிய பெருமக்களை ஈன்றெடுத்தனர்.எம்பெருமானார் ﷺ அவர்கள் தமது பேரப் பிள்ளைகளான இமாம் ஹஸன் رضي الله عنه மற்றும் இமாம் ஹுஸைன் رضي الله عنه ஆகியோர் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தனர். அவர்கள் சுவனத்து இளைஞர்களின் தலைவர்கள் என்று நன்மாராயம் நல்கினர்.
|| அஹ்லுல் கிஸ்ஸா ||
عن صفية بنت شيبة، قالت: قالت عائشة رضي الله عنها: خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل
من شعر أسود. فجاء الحسن بن علي فأدخله، ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة رضي الله عنها فأدخلها، ثم
جاء علي فأدخله، ثم قال: (إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
ஸபிய்யா பின் ஷைபா அவர்கள் அன்னை ஆயிஷா ஸித்தீகா رضي الله عنهاஅவர்கள் அறிவித்ததாக அறிவிக்கின்றார்கள் , ' ஒரு நாள் எம்பெருமானார் ﷺ அவர்கள் போர்வையை போர்த்திவாறு வந்தார்கள்.அந்த போர்வையில் குதிரையின் கடிவாளம் கறுப்பு கம்பளியால் தைக்கபட்டிருந்தது.அப்போது ஹழ்ரத் ஹஸன் பின் அலி رضي الله عنه வந்தார்கள்,நாயகம் ﷺ அவர்கள் அவரை போர்வையில் அணைத்துக் கொண்டார்கள் . பின்னர் ஹழ்ரத் ஹூஸைன் பின் அலி رضي الله عنه வந்து ,அந்த போர்வையில் இணைந்தார்கள்.பின்னர் ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்கள் வந்தார்கள்,நாயகம் ﷺ அவர்கள் அவர்களை போர்வையில் இணைத்துக் கொண்டனர்.பின்னர் ஸெய்யிதினா அலி இப்னு அபிதாலிப் كرم الله وجهه வந்தார்கள் ,அவர்களகையும் நாயகம் ﷺ அவர்கள் போர்வையில் இணைத்துக் கொண்டனர்.பின்னர் குர்ஆனின் ' (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான்.' வசனத்தை ஓதினார்கள்.'
[📚 ஸஹீஹ் முஸ்லிம் (4:1883#2424) ,முஸன்னப் அபீ ஷைபா (6:370#36102) ,முஸ்தத்ரக் ஹாக்கீம் (3:159#4705),ஸுனன் பைஹகீ (2:149) ]
|| பழாயில் ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها ||
عن مسروق: حدثتني عائشة أم المؤمنين رضي الله عنها، قالت: قال رسول الله صلى الله عليه وسلم: يا فاطمة! ألا ترضين أن تكوني سيدة نساء المؤمنين، أو سيدة نساء هذه الأمة
அன்னை ஆயிஷா ஸித்தீகா رضي الله عنها அவர்களிடமிருந்து ஹழ்ரத் மர்ஸூக் அறிவிக்கின்றார்கள் , நாயகம் ﷺ அவர்கள் நவின்றார்கள் " பாத்திமா ! நம்பிக்கைக் கொண்ட பெண்களின் தலைவி/ இந்த உம்மத்தின் பெண்களின் தலைவி என்பதைக் கொண்டு உமக்கு சந்தோஷம் தானே " .
[ 📚ஸஹீஹ் புஹாரி (5:2317#5928),ஸஹீஹ் முஸ்லிம் (4:1905#2450),இமாம் நஸாயீ رَحِمَهُ ٱللَّٰهُ - பழாயிலுஸ் ஸஹாபா (பக்கம்.77#263),இமாம் ஹன்பல் رَحِمَهُ ٱللَّٰهُ - பழாயிலுஸ் ஸஹாபா (2:762#1342) ]
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن ملكا من السماء لم يكن زارني، فاستأذن الله في زيارتي، فبشرني أو أخبرني: أن فاطمة سيدة نساء أمتي
ஹழ்ரத் அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,நாயகம் ﷺ அவர்கள் நவின்றார்கள் " என்னை இதுவரை சந்தித்திராத வானவர் அல்லாஹ்விடம் என்னை சந்திக்க அனுமதி்கேட்டு சந்தித்தார்.அவர் என்னிடம் பாத்திமா என் உம்மத்தில் அனைத்து பெண்களுக்கும் தலைவியாவார் என்ற நற்செய்தியை என்னிடம் கூறினார்."
[📚 தாரீக்குல் கபீர் (1:232#728),அல் முஜ்ம உல்கபீர் (22:403#1006),ஸியார் அலா அந்நுபுலா (2:127) ]
عن حذيفة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن هذا ملك لم ينزل الأرض قط قبل هذه الليلة استأذن ربه أن يسلم عليّ و يبشّرني بأن فاطمة سيدة نساء أهل الجنة، وأن الحسن والحسين سيدا شباب أهل الجنة
ஹழ்ரத் ஹுதைபா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் நாயகம் ﷺ அவர்கள் நவின்றார்கள் , " இன்றிரவிற்கு முன்னர் இவ்வுலகிற்கு வருகையே தராத வானவர் ஒருவர் அல்லாஹ்விடம் எனக்கு ஸலாம் உரைத்து ,நன்மாராயம் கூற அனுமதி கேட்டார்.ஸெய்யிதா பாத்திமா சுவனத்துப் பெண்மணிகளின் தலைவி என்றும் ஹஸன் ,ஹுஸைன் சுவனத்து இளைஞர்களின் தலைவர்கள் என்றும் நன்மாராயம் கூறினார். "
[ 📚திர்மிதி (5:660#3781),ஸுனன் நஸயீ (5:80,95#8298,8365),முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல் (5:391),முஸ்தத்ரக் ஹாக்கீம் (3:164#4721,4722) , அல் முஜ்ம உல் கபீர் (22:402#1005) ]
திங்களெம் கோமான் நாயகம் ﷺ அவர்கள் இப்பூவுலகை விட்டும் மறையவிருக்கும் இறுதி நாட்களில் தம் ஆரூயிர் தகப்பனார் அல்லாஹ்வின் தூதர் அவர்களை காண சென்ற ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்களிடம் உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா நாயகியார் நாயகம் ﷺ ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنهاஅவர்களிடம் ரகசியமாக பேசியதும் அழுததும் பின்னர் சிரித்ததன் காரணம் வினவினர் :
ألا أخبرك ما هو خير لك منه ، تسبحين الله عند منامك ثلاثا وثلاثين ، وتحمدين الله ثلاثا وثلاثين ، وتكبرين الله أربعا وثلاثين
" நாயகம் ﷺ தமது இறப்பை குறித்து என்னிடம் கூறினர்.எனவே நான் அழுதேன்.அதன் பின்னர் நாயகம் ﷺ அவர்களது குடும்பத்தாரில் நானே அவர்களை முதலாவது பின் தொடர்வேன் என்றனர்.எனவே நான் சிரித்தேன் " என்றார்கள்.
[📖 ஸஹீஹ் புஹாரி ,ஹதீஸ் எண்: 3427,ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 2450]
ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்கள் நாயகம் ﷺ அவர்களது மறைவிற்குப் பின்னர் 6 மாதங்களில் இப்பூவுலகை விட்டும் மறைந்தார்கள்.அவர்கள் திங்கட்கிழமை ரமழான் பிறை 3 ல் ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு உயிர் நீத்தார்கள்.அவர்களது வபாத்தின் போது அவர்களது வயது 28/29.அவர்களது பூவுடல் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்கள் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் மீது காண டிருந்த ஒப்பிலா நேசம் என்பது அவர்களது இளமைகாலம் முதல் மரணம் அண்மிக்கும் நேரம் வரை ஒவ்வொரு நொடியும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.
மாதர்க்கரசி ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா رضي الله عنها அவர்களது மக்களான இமாம் ஹஸன் رضي الله عنه ,இமாம் ஹுஸைன் رضي الله عنه ஆகியொரைக் கொண்டே இன்றளவும் நாயகம் ﷺ அவர்களது வம்சாவழி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களே முஸ்லிம்களுக்கு அபயம் அளிக்கும் நூஹ் நபியின் கப்பல்.அஹ்லே பைத்தினரை நேசிப்பது நம் மீது கடமையாகும்.' ஸாதாத்துமார்களின் நடைமுறைகள் நமது நடைமுறைக்கு முன்மாதிரி ' என்று நமது முன்னோடிகள் கூறியுள்ளனர்.
[📖 முக்தஸருல் மஆனி,பக்-455,அந் நபாயிஸ்,பக்-81] .
யா அல்லாஹ் ! உன் ஹபீப் முஸ்தபா ﷺ அவர்களது ஈரல்குலையான ஸெய்யிதா பாத்திமா ஸஹ்ரா அவர்கள் ,ஏந்தல் நபி ﷺ அவர்களை உயிரினும் மேலாக நேசித்தது போல் நாங்களும் நேசம் கொள்ள அருள் புரிவாயாக ! எம் பெருமானார் ﷺ அவர்கள் கூறியது போல் அவர்களது அஹ்லே பைத்தினரை நாங்கள் நேசிக்கவும் ,எங்களது அபயக் கப்பலாக ஸாதாத்துமார்கள் இருந்து எங்களை வழிகாட்டவும் நற்பாக்கியத்தை அருள்வாயாக !
آمین بجاہ سیّد المرسلین صلّی اللّہ علیہ وسلّم
Subscribe to:
Posts (Atom)